|
ஞாநி
இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?!
திருமணங்களுக்கு யாரை அழைப்பது, யாரை விடுவது என்பது பல திருமணங்களில் இன்றும் ஒரு சிக்கலான பிரச்னை தான். உறவின் தன்மை முதற்கொண்டு, பொருளாதார நிலை வரை இதைத் தீர்மானிக்கின்றன.
பெரும்பாலான வீடுகளில் கல்யாணத்துக்கு அழையாத விருந்தாளியாக யாராவது வந்துவிட்டால்கூட, அவரை அவமதிக்காமல் உபசரித்து அனுப்புவது நல்ல மரபுகளில் ஒன்று. ஆனால், அமிதாப் பச்சன் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்த சில அழையா விருந்தாளிகள் அடித்து உதைத்துத் துரத்தப்பட்டார்கள். அவர்கள் வேறு யாருமல்ல... டி.வி, பத்திரிகை நிருபர்களும் கேமராக்காரர்களும்தான்! அவர்கள் அமிதாப்பின் நண்பர் அமர்சிங்கின் கமாண்டோ படையால் உதைத்துத் துரத்தப்பட்டார்கள்.
ஆரம்பத்திலிருந்தே அமிதாப் சொல்லிக்கொண்டேதான் இருந்தார்... தன் மகன் அபிஷேக் திருமணம் என்பது தங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம்; அதில் மீடியா தயவுசெய்து மூக்கை நுழைக்க வேண்டாம் என்று! அதை மீடியா பொருட்படுத்தவில்லை. ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வாய் தோஷம் என்ற செய்தியில் ஆரம்பித்து, இப்போது ஐஸ்வர்யா பிறந்து வளர்ந்த குடியிருப்பின் நெருக்கமான பக்கத்து வீட்டுக்காரர்களைத் திருமணத்துக்கு அழைக்கவில்லை என்பது வரை, பத்திரிகைகளும் டி.விக்களும் நமக்குத் தெரிவித்திருக்கும் தகவல்களைத் தொகுத்தால் பத்து தொகுப்புகளும், 72 மணி நேரம் ஓடும் படமும் தயாரிக்கலாம்.
அபிஷேக் - ஐஸ் திருமண விவரங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் இந்த மாபெரும் சமூகப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவை இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஒளி பரப்பாகும் ஆஜ்தக், என்.டி.டி.வி, சி.என்.என், ஐ.பி.என், ஸ்டார் நியூஸ் முதலான பத்துப் பன்னிரண்டு சேனல்கள். இவை பொதுவாக, தரமாகவும் ஆழமாகவும் விரிவாகவும் அரசியல் செய்திகளை விமர்சனம் செய்பவை என்று பெயரெடுத்தவைதான். அபிஷேக் - ஐஸ் திருமண கவரேஜின் உச்சகட்டமாக, இவை திருமண தினத்தன்று சில மணி நேரம் நேரடி ஒளிபரப்பே நடத்தின.
ஆனால், எதை நேரடியாக ஒளி பரப்புவது? அழைப்பிதழ் பெற்ற சுமார் 50 பேரைத் தவிர வேறு யாரையும் திருமண நிகழ்ச்சியில் அனுமதிக்கப் போவதில்லை என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது. வீட்டு வாசலில் வந்து கூடும் ரசிகர்கள் வெயிலில் வாடவேண்டாம் என்று பந்தல் போட்டுத் தருவதைத் தவிர, வேறு எதுவும் தான் செய்வதற்கில்லை என்றும் அமிதாப் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். மீடியா நிருபர்கள் இந்தப் பந்தலில் இருந்தார்கள். தெருவில் வந்து நிற்கும் கார்களிலிருந்து இறங்கும் வி.ஐ.பி க்களிடம் ஓடிப்போய் மைக்கை நீட்டித் திருமணம் பற்றிக் கருத்து கேட்பதுதான், இந்த சேனல்களில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அன்று செய்த வேலை. கூடவே, நிலையத்தில் உட்கார்ந்துகொண்டு அமிதாப் வீட்டு வாசலில் நடப்பவை பற்றிக் கருத்து தெரிவிக்க சில ‘நிபுணர்கள்’ அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நேரடி ஒளிபரப்பில், புகுந்த வீட்டில் மருமகளாக முதல் முறை நுழையும் சடங்குக்காக ஐஸ்வர்யா ராய் வரும் அரிய காட்சியைத் தவறவிட முடியுமா? அதற்காக முண்டியடித்த நிருபர்களை, கேமராக்காரர்களைத்தான் அமர்சிங்கின் காவல்படை காலால் எட்டி உதைத்தது. இந்த கமாண்டோ படை அமர் சிங்கின் காவலுக்கு வந்ததா, ஐஸ்வர்யா ராயின் காவலுக்கு வந்ததா என்பது இன்னொரு அரசியல் பிரச்னை. மாநிலம் விட்டு மாநிலம் வரும்போது உள்ளூர் போலீஸ் தலைமையகத்துக்குக் கமாண்டோக்கள் தகவல் தெரிவித்தாக வேண்டும் என்ற விதியை இவர்கள் பின்பற்றவில்லை என்று மும்பை போலீஸ் அதிகாரிகள் வேறு முணுமுணுத் தனர்.
அரசியல் பிரச்னைகளைப் பயமும் தயக்கமும் தாட்சண்யமும் இல்லாமல் துணிச்சலுடன் விமர்சிக்கும் இந்த நியூஸ் சேனல்கள் ஏன் அபிஷேக் - ஐஸ் திருமணத்தையும் அதே முக்கியத் துவத்துடன் ஒளிபரப்பத் துடிக்கின்றன? இந்தத் திருமணம் எந்த விதத்திலாவது பொது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் தன்மையில் இருந்தால், அதைப் பற்றி ஒளிபரப்புவதைக் கூட நியாயம் என்றுசொல்லலாம். உதாரணமாக, திருமணத்தையட்டி மும்பையின் நெரிசலான ஜுஹு பகுதியில் அன்று போக்குவரத்து திசை திருப்பிவிடப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளானதை விமர்சிக்கலாம்.
ஆனால், சேனல்கள் இப்படிப்பட்ட அம்சங்களைப் பிரதானப்படுத்துவதைவிட, ஐஸ்வர்யா ராயின் திருமணப்புடவை, அபிஷேக்கின் ரிசப்ஷன் உடை, அவற்றைத் தைத்த டெய்லருடன் பேட்டி, ஐஸ்வர்யாவுக்குக் கையில் மெஹந்தி வரைந்த ஓவியர் பேட்டி போன்றவற்றில்தான் திருமணத் துக்கு ஒரு வாரம் முன்பிருந்தே கவனம் செலுத்தி வந்திருக்கின்றன.
ஏன் இப்படி என்று கேட்டால், ஒரே பதில்தான்... ‘பார்வையாளர்கள்தான் காரணம். அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைத் தான் விரும்புகிறார்கள்!’. பொது சேனல்களின் சீரியல்கள், டாக் ஷோக்கள், கேம் ஷோக்கள் இவற்றுக்கெல்லாம் சொல்லப்படும் இந்தக் காரணம், இப்போது செய்தி சேனல்களிலும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே விளம்பர வருமானத்தைப் பொறுத்தமட்டில் செய்தி சேனல்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. இதைப் போக்க ஒரே வழி, செய்தியையும் இதர டி.வி. நிகழ்ச்சிகளைப் போல என்டர் டெயின்மென்ட்டாக ஆக்குவதுதான் என்ற முடிவுக்கு அவை வந்துவிட்டன. பிரணாய் ராய், அர்னாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர் தேசாய் போன்று தரமான செய்தி விமர்சகர்கள் எனப் பெயரெடுத்தவர்கள் தலைமையேற்று நடத்தும் சேனல்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன.
அபிஷேக் ஐஸ்வர்யா திருமணம் நிகழ்ந்த அதே காலகட்டத்தில் இன்னும் இரண்டு திருமணங்கள் பற்றியும் டி.வி. சேனல்கள் செய்தி ஒளிபரப்பின.
போபாலைச் சேர்ந்த பிரியங்கா என்ற இந்துப் பெண் முகமது உமர் என்ற முஸ்லிம் இளைஞனுடன் ஊரை விட்டு வந்து மும்பையில் திருமணம் செய்துகொண்டது ஒரு நிகழ்ச்சி. உமர் இந்துவாக மதம் மாறி உமேஷ் ஆகி பிரியங்காவைத் திருமணம் செய்து கொண்டதை முஸ்லிம் மத அடிப்படை வாதிகளும் ஏற்கவில்லை; இந்து மதவாத அமைப்புகளும் ஏற்கவில்லை. வன்முறையில் ஈடுபட்டனர். மும்பை நீதிமன்ற உத்தரவின்படி, இளம் தம்பதிக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.
இன்னொரு திருமணம், சூரத்தைச் சேர்ந்த குஷி அகர்வால்(ருக்கி) என்ற 16 வயது மைனர் இந்துப் பெண், அப்துல் காதிர் என்ற 23 வயது முஸ்லிம் இளைஞனுடன் மும்பைக்கு வந்து திருமணம் செய்ய முயற்சித்த நிகழ்ச்சி. இதிலும் இரு மதங்களின் தீவிர அமைப்புகள் கடும் பிரச்னைகளை எழுப்பின. நீதிமன்றத்தில் ருக்கி தன் பெற்றோருடன் திரும்பிச் செல்ல விரும்புவதாகச் சொன்னாள். அது நிர்ப்பந்தத்தில் சொல்லப்படுகிறது என்றது எதிர்த்தரப்பு. இந்த விவகாரத்தில், ஸ்டார் டி.வியின் மும்பை அலுவலகம், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் அடித்து நொறுக்கப்பட்டது.
பார்வையாளர்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்தார்கள் என்ற டி.ஆர்.பி. ரேட்டிங் கணக்கில், அபிஷேக் - ஐஸ் திருமணம் முதல் இடத்திலும், மற்றவை மிகவும் பின்தங்கியும் இருக்கின்றன. டி.வி. சேனல்கள் ஒளிபரப்பிய திருமணங்களில், உண்மையில் சமூகத்துக்கு அக்கறையும் அவசிய மும் உள்ளவை பின்னிரண்டு திருமணங்கள்தான். மத வேறுபாடு, மதம் கடந்த காதல், மைனர் வயதில் காதல், காதல் என்பதில் உள்ள மன முதிர்ச்சி அல்லது முதிர்ச்சியின்மை, நீதிமன்றங்களின் பங்கு, மீடியாவின் பங்கு என நம் சமூகத்தின்அக்கறைக்கும் விவாதத்துக்கும் உரிய பல அம்சங்கள் இந்த இரு திருமண நிகழ்வுகளில் உள்ளன.
ஆனால், அவற்றை நம் பார்வையாளர்கள் அதிகம் பேர் பார்க்காமல், அபிஷேக் -ஐஸ் திருமண ஒளிபரப்பையே அதிகம் விரும்பிப் பார்ப்பதால், யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
நிச்சயம் லாபம், அமிதாப் குடும்பத்துக்கு மட்டும்தான்! அபிஷேக் -ஐஸ் தம்பதியாக இனி விளம்பரங்களில் தோன்றுவதற்கு அவர்களை ஒப்பந்தம் செய்ய விளம்பர கம்பெனிகள் போட்டி போடுகின்றன. சேனல்களுக்கும் லாபம்தான்!
அசல் பிரச்னைகளை விவாதிக்கும், அலசும் வாய்ப்பு வந்தாலும், அதை ஒதுக்கி விட்டு டைம்பாஸ் மன நிலையில் மேலும் மேலும் ஆழ்ந்து போவதால், நஷ்டம் நமக்குதான்!
சக மீடியாக்காரன் என்ற முறையில், அமிதாப் வீட்டில் மீடியா வாங்கிய அடிஉதையை, அவமானச் சின்னமாகவும், மும்பை ஸ்டார் டி.வி. அலுவலகம் சந்தித்த வன்முறையை விழுப்புண்ணாகவும் உணர்கிறேன்!
நன்றி: ஆனந்த விகடன்
|