|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 7
‘முளைச்சு மூணு இலைகூட விடல... அதுக்குள்ள என்ன ஆட்டம்!’ என்று சிறிசுகளைப் பெரிசுகள் கடிந்துகொள்வது உண்டு.
அதென்ன மூணு இலை கணக்கு? ஒரு விதை முளைத்ததும், இனி செடி நிச்சயம் பிழைத்துவிடும் என்ற நிலைதான் அது! மூணாவது இலை விட்ட பிறகு, பராமரிப்பு ஒழுங்காக இருந்தால், மிகவும் எதிர்பாராத பேரிடர்கள் வந்தாலொழிய, செடி பிழைத்து நன்றாகவே வளரும்.
மனிதக் குழந்தையும் செடி போலத்தான்... முற்றிலும் எதிர்பாராத பேரிடர்கள் வந்தாலொழிய, தாய்ப்பால் முதல் அடிப்படைப் பராமரிப்புகள் யாவும் முதல் மூன்று வருடங்களில் ஒழுங்காக இருக்கும் எந்தக் குழந்தையும் தொடர்ந்து சீராக வளர்ந்து, ஆளாக முடியும்.
நான்கு வயதில் குழந்தைகளின் வெளி உடல் வளர்ச்சியைவிட உள் உறுப்புகள் எல்லாம் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. பெரியவன்(ள்) ஆகும்போது இருக்கக்கூடிய உயரத்தில் சரிபாதி இப்போது வந்துவிடும். பெரிய வயது எடையில் கால் பாகம் இப்போது இருக்கும்.
குழந்தையின் துறுதுறுப்பு அதிகரிக்கும் வயது இது. படிக்கட்டுகளில் வேகமாக ஏறி இறங்கும். ஸ்கிப்பிங் போன்று தாண்டிக் குதிக்க முடியும்.
விரல்களைப் பயன்படுத்தி சற்று நுட்பமான வேலைகளைச் செய்யப் பழகிவிடும். பார்த்தால் புரியும் அளவுக்கு மரம், காக்கா என்று சின்னச் சின்னப் படங்கள் வரைய இப்போது அந்தக் குழந்தையால் முடியும்.
ஷூ லேஸைத் தானே முடிச்சுப் போட்டுக் கட்டவும், அவிழ்க்கவும் தெரிந்துகொள்ளும். சட்டை பட்டன்களைச் சரியாக மாட்டும். கத்திரிக்கோலில் விரல் நுழைத்துப் பிடித்து, வெட்டக் கற்றுக்கொண்டுவிடும்.
இவையெல்லாம் உடல் வளர்ச்சி, ஆற்றல் தொடர்பானவை. மன வளர்ச்சி, பாலியல் உணர்ச்சி பற்றிப் பார்க்கும் முன்பு ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
நான்கு வயதுக்கு முந்தைய நிகழ்ச்சிகள் பற்றிய ஞாபகங்கள் எதுவும் நம் மனதில் இல்லை என்று அறிவியல் ஆய்வுகள் சொல்லுகின்றன அல்லவா? அதன் இன்னொரு அர்த்தம் என்ன?
நான்கு வயது முதல் நடைபெறும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் எல்லாமே ஆயுள் முழுக்க நினைவில் நிற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதானே? இதுதான் நாம் அக்கறை செலுத்தவேண்டிய மறுபக்க உண்மை.
நான்கு வயது முதல் அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் குழந்தையின் மனதில் பதியும் ஒவ்வொரு விஷயமும் ஆயுள் முழுக்க உடன்வரக் கூடியவை. சில ஆக்கபூர்வமாக வரும்; சில ஆபத்தாகவும் வரும். எனவே, இந்த வயதிலிருந்து குழந்தையின் பாலியல் அடையாளம், அதன் பர்சனாலிட்டி எனப்படும் தனி மனித ஆளுமையில் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கப்போகிறது.
ஆம்பளைன்னா இப்படி இருக்கணும், பொம்பளைன்னா இப்படி இருக்கணும் என்ற கருத்துக்கள் குழந்தை மனதில் சுரீரென்று தைக்கத் தொடங்கும் வயது இது.
இதை (வி)தைப்பவர்கள் யார்?
நாம் எல்லாரும்தான். நான்கு, ஐந்து வயதுக் குழந்தைகள் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா என்று மிக நெருக்கமான உறவினர்கள் தவிர, இதர மனிதர்களுடனும் மெள்ள மெள்ள அதிகம் உறவாடத் தொடங்குகின்றன. ஒருவிதத்தில் 4-5 வயதுக் குழந்தை தன்னைப் பராமரிப்பவர்கள் கூட இல்லாமல், ஓரளவு சுதந்திரமாக இருப்பதையும்கூட அனுபவிக்கக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறது.
குழந்தை யாருடன் அதிக நேரம் செலவிடுகிறதோ, அவர்களுடைய ஆண், பெண் கருத்துக்கள், அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் எல்லாமே மனதில் பதியத் தொடங்கும் வேளை இது. அப்பாவோ ஆயாவோ கோபத்தில் யாரிடமாவது ‘ராஸ்கல்’, ‘கசுமாலம்’ என்றால், குழந்தையும் கூட தன் கோபமான தருணத்தில் அந்தச் சொற்களைச் சொல்லப் பழகிவிடும்.
பொருட்களை, நபர்களை, செயல்களை உற்று நோக்கிப் பார்த்துப் புரிந்து கொள்ள குழந்தை இப்போது முயற்சி செய்கிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை அறிகிறது. ஆனால்... இது ஏன் நல்லது, அது ஏன் கெட்டது என்ற காரணங்களைப் புரிந்துகொள்ள இப்போது குழந்தைக்கு இயலாது.
இந்த வயதில் குழந்தை, தன் சம வயதுக் குழந்தைகளிலும் ஓரிரு வயது மூத்த குழந்தைகளிலும் தன் முன்னோடியாகச் சிலரைப் பின்பற்றத் தொடங்குவது இப்போது நிகழும். ஒருவிதத்தில் ஒவ்வொரு குழந்தையுமே இன்னொரு குழந்தைக்கு முன்னோடிதான்.
நான்கு, ஐந்து வயதுச் சிறுவர்களும் சிறுமிகளும் இப்போது நிறையவே சேர்ந்து விளையாடுவார்கள். தொட்டுப் பேசி, அடித்து உதைத்து, கட்டிப் புரண்டு விளையாடுவார்கள். இப்படிப்பட்ட சாதாரண உறவாடல்களைத் தடுக்க ஆரம்பிக்கும்போது பெரியவர்களாகிய நாம் குழந்தைகளுக்கு ஆண்பெண் வித்தியாசம் பற்றிய ஆரோக்கியமில்லாத பார்வையைக் குழந்தைகளுக்கும் புகட்டத் தொடங்கிவிடுகிறோம்.
அப்படியானால் சிறுவனும் சிறுமியும் கட்டிப் புரண்டு விளையாடுவதை எந்த வயதில் கைவிடச் செய்வது என்று கேட்கிறீர்களா? அவசரப்பட வேண்டாம். அதை இந்தத் தொடரில் பின்னால் பார்க்கப்போகிறோம். ஐந்து வயதில் இருவரும் தொட்டு விளையாடினால், எந்தக் கூரையும் இடிந்து விழுந்துவிடாது. விளையாடட்டும்.
இப்போது குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் பெரியவர்களாகிய நமது பார்வைகள் கலந்து பிரதிபலிக்கத் தொடங்குவதைப் பார்க்கலாம். உதாரணமாக, குழந்தைகள் டாக்டர் நோயாளி விளையாட்டை விளையாடுவார்கள். ஒரு குழந்தை ஸ்டெதாஸ்கோப் மாட்டிய டாக்டர் போலத் தன்னை பாவித்துக்கொண்டு இன்னொரு குழந்தையைப் பரிசோதிக்கும். ‘ஊசி போட்டால் சரியாகிவிடும்’ என்று அது சொல்வதுகூட நம் பார்வைதான். பெரும்பாலும் டாக்டராக ஆண் குழந்தையும், ஊசி போடும் நர்ஸாக பெண் குழந்தையும் நடிக்கும். இது நேர் மாறாக இருக்கும் வாய்ப்பு இல்லை. காரணம், நம்மிடமிருந்து தொற்றிக்கொண்ட பார்வைதான். எந்தெந்த வேலைகள் பெண்களுக்கு ஏற்றவை, எவையெல்லாம் ஆண்களுக்கு ஏற்றவை என்று சுற்றியிருக்கும் சமூகம் விதித்து வைத்திருப்பதை, தான் கற்றுக்கொண்டதை விளையாட்டின் மூலம் நமக்கு உணர்த்துகிறது குழந்தை.
குழந்தைகளுக்கு நாம் வாங்கித் தரும் பொம்மைகளும் அவர்களுக்கு ஆண்-பெண்பாலியல் பாத்திரம் முதல் ஆண்-பெண் உறவு விதிகள் வரை நம்முடைய அணுகுமுறையைக் கற்பிக்கின்றன. கார் பொம்மை சிறுவனுக்கு; சமையல் சொப்பு சிறுமிக்கு. கிரிக்கெட் பேட் சிறுவனுக்கு; பல்லாங்குழி சிறுமிக்கு. செஸ் போர்டு சிறுவனுக்கு; தாயக்கட்டம் சிறுமிக்கு!
சொப்பு வைத்து சமையல் செய்துகொண்டு இருக்கும் ஐந்து வயதுச் சிறுமியிடம், விர்ரென்று பைக்கில் வந்து வீட்டு வாசலில் இறங்குவதாக பாவனை செய்யும் சிறுவன், ‘இன்னுமா சமையல் ரெடி பண்ணலே?’ என்று கேட்கும் கேள்வி, இருவரையும் எதிர்காலத்தில் நம்மைப் போலவே ஆக்குவதற்குத் தயார் பண்ணிவிடுகிறது.
ஒரு பக்கம் இப்படிக் குழந்தைகளின் பாலினப் பாத்திரங்களை நாம் நம் வார்ப்பில் நம்மை அறியாமலே உருவாக்கத் தொடங்கியிருக்கும் அந்த ஐந்து வயதில், இன்னொரு பக்கம் குழந்தைகளின் மனதில் தன் உடல் பற்றி, தன் பிறப்பு உறுப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் முயற்சியும் ஆரம்பிக்கிறது.
இந்த வயதில்தான், ‘எங்கிருந்து குழந்தை வந்தது? அது எப்படி அம்மா தொப்பைக்குள் போயிற்று? எப்படி வெளியில் வரும்?’ என்ற அவர்களின் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்போம்.
எப்படிப் பதில் சொல்வது?
தினமும் காலையில் பல் தேய்க்கவும், சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கைகளைக் கழுவவும் கற்றுக் கொடுத்திருப்போம் அல்லவா? அதுபோலவே மலம் கழித்த பின், தானே கழுவிக்கொள்ளக் குழந்தைக்குக் கற்றுத் தருவோம். அதைக் கற்றுத் தரும்போதே மேற்கண்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லித் தர முடியும். எப்படி?
1. நீங்கள்/உங்கள் குழந்தை, தானாகவே ஷூ லேஸைக் கட்டக் கற்றுக் கொண்டது எப்போது?
2. நீங்கள் குழந்தையாக இருந்தபோது கேட்ட முதல் கெட்ட வார்த்தை எது? சொன்னவர் யார்?
3. நீங்கள் குழந்தைகள் முன்னால் பயன்படுத்தும் கெட்ட, தடித்த வார்த்தைகள் எவை எவை? அவர்கள் இல்லாதபோது பயன்படுத்துபவை எவை எவை?
4. உங்களுக்கு முதலில் வாங்கித் தரப்பட்ட விளையாட்டு பொம்மைகள் என்ன? உங்கள் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் நீங்கள் வாங்கித் தந்த பொம்மைகள் என்னென்ன?
5. ‘எங்கிருந்து குழந்தை வந்தது? அது எப்படி அம்மா தொப்பைக்குள் போயிற்று? எப்படி வெளியில் வரும்?’ என்ற மூன்று கேள்விகளுக்கும் என்ன பதில் சொல்லியிருக்கிறீர்கள்?
6. காலைக் கடன்களைக் கழித்ததும் எந்த வயதில் சுயமாகக் கழுவிக் கொள்ளக் கற்றுக்கொண்டீர்கள்? குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்?
நன்றி: ஆனந்த விகடன்
|