|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 6
‘செக்ஸ்னா என்ன?’ என்ற கேள்வியைத் தன்னிடம் குழந்தை கேட்டு விடக் கூடாதே என்ற பதற்றம் பெரும்பாலான அம்மா, அப்பாக்களுக்கு இருக்கிறது.
பதற்றத்துக்குக் காரணங்கள் பல. குழந்தையின் கவனம் செக்ஸ் விஷயங்கள் பக்கம் போய்விடக் கூடாது என்ற பயம் ஒரு காரணம். கேட்டால், என்ன பதில் சொல்வது, எப்படிச் சொல்வது என்ற அறியாமை இன்னொரு காரணம். தன்னிடம் கேட்கும் முன்பாகவே குழந்தை அது பற்றி என்ன தெரிந்துவைத்திருக்கிறதோ, எவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறதோ என்ற கவலை மற்றொரு காரணம்.
முதல் குழந்தைக்கு மூன்று வயதாகிறபோது, அடுத்துக் கருவுற்றிருக்கும் அம்மா சந்தித்தே தீர வேண்டிய கேள்வி ‘எப்பிடி உன் வயித்துக்குள்ள பாப்பா வந்துது?’
கேள்வி கேட்ட ஒரு பத்து வயதுக் குழந்தையிடம் அம்மா சொன்னாள்... ‘ராத்திரி சாமி வந்து வெச்சுட்டுப் போய்ட்டார்.’
அடுத்த கேள்வி ‘என்னைக்கூட சாமிதான் உன் வயித்துல வந்து வெச்சுட்டுப் போனாரா?’
அம்மா அதற்கும் ‘ஆமாம்’ என்றுதான் சொல்லியாக வேண்டும். அடுத்தடுத்த கேள்விகள்...
‘அப்பாகூட அப்படித்தான் பொறந்தாரா?’, ‘எதிர் வீட்டுப் பாப்பா?’, ‘எங்க டீச்சர்..?’
எல்லாவற்றுக்கும் அம்மாவின் பதில் ‘ஆமாம்’தான்!
குழந்தை கடைசியாகக் கேட்ட கேள்வியில் அம்மா மயக்கம் போட்டு விழுந்தாள். அப்படி என்ன கேட்டது குழந்தை? ‘எல்லாரையுமே சாமிதான் வந்து வயித்துல வெச்சுட்டுப் போனார்னா, ‘செக்ஸ்Õன’ சொல்றாங்களே.... அது என்ன? நம்ம நாட்டுல யாரும் செக்ஸே வெச்சுக்கறதில்லையா?’
இந்தக் கதைக் குழந்தை தந்த அதிர்ச்சியை எந்த அம்மா, அப்பாவும் சந்திக்க விரும்ப மாட்டார்கள்தான். இன்னொரு ஐந்து வயதுக் குழந்தை, ‘செக்ஸ்னா என்னம்மா?’ என்று கேட்டது. அம்மா உடனே, வண்டு, மகரந்தப் பொடி, பூ என்று தொடங்கிக் கடைசியில் ஆண் உடல், பெண் உடல் படங்களை வரைந்து காட்டி, இதுதான் செக்ஸ் என்று கஷ்டப்பட்டு விளக்கி முடித்ததும், குழந்தை கேட்டது... ‘எப்படிம்மா இத்தனையையும் இந்த ஒரு லைன்ல எழுதறது?’ குழந்தை காட்டிய பள்ளிக்கூட டயரியில் பெயர், வயது, செக்ஸ் (ஆணா - பெண்ணா?) என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு வரிதானே கொடுக்கப்பட்டு இருக்கிறது?!
எந்த வயதில் கேட்கிறார்கள், எந்தச் சூழலில் கேட்கிறார்கள் என்பதையெல்லாம் உணராமல் பதில் சொன்னால் அசடு வழிவதும், அதிர்ச்சி அடைவதும்தான் நிகழும்.
மூன்று வயதிலேயே உடல், மன உணர்ச்சி வளர்ச்சிகளுடன் பாலியல் வளர்ச்சியும் குழந்தைக்கு நிகழ்கிறது என்று பார்த்தோம். இந்தக் கட்டத்தில், குழந்தையின் பாலியல் வளர்ச்சியைக் குடும்பம் எப்படிக் கையாள வேண்டும்?
குழந்தை தன் உடலைப் பற்றி அருவருப்பாகவோ, அவமானமாகவோ கருதாமல், தன் உடலைத் தானே நேசிக்கவும், அதைப்பற்றி சந்தோஷப்படவும் உதவ வேண்டும். உடலின் எல்லா பாகங்களின் பெயர்களையும் இப்போது கற்றுத்தந்துவிட முடியும்.
ஆண் குழந்தையின் உடல் ஒரு மாதிரியாகவும், பெண் குழந்தையின் உடல் வேறு விதமாகவும் இருப்பதை இப்போது குழந்தை கவனித்திருக்கும். எதனால் அப்படி அமைந் திருக்கிறது என்று குழந்தைக்கு இப்போது புரியவைக்க முடியும். வெவ்வேறுவிதமாக இருப்பதால் ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி என்பதில்லை; இருவரும் சமம்தான் என்பதைச் சொல்லித்தரவும் இதுவே சரியான தருணம்.
‘ஆண் குழந்தைக்கு இருப்பது போன்ற உறுப்பு சிறுநீர் கழிக்கத் தனக்கு இல்லை’ என்ற பொறாமை உணர்ச்சி பெண் குழந்தைக்கு ஏற்படுகிறது என்று ஒரு காலத்தில் உளவியல் அறிஞர்கள் சொன்ன கருத்துக்கள் காலாவதியாகிவிட்டன. இதே போல தனக்குப் பெரிய மார்பகம் இல்லையே என்ற பொறாமை உணர்ச்சி ஆணுக்கும் ஏற்படும் வாய்ப்பு உண்டா என்ற எதிர்க் கேள்வி, பழைய முடிவுகளை மறு பரிசீலனை செய்யவைத்தது.
இப்படிப்பட்ட பரஸ்பர பொறாமை உணர்ச்சிகள் இயல்பில் இல்லாதவை. ஒன்றை உயர்ந்த தாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் கருதும் சமூகப் பார்வை தான் பொறாமை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உடலால் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், சமமானவர்களே என்ற பார்வையை குழந்தைப்பருவத்தி லேயே பெற்றுவிட்டால், பல ‘வயசுக் கோளாறுகள்’ உருவாகவே வழி இல்லாமல் போய்விடும்.
மூன்று வயதில் குழந்தைக்குப் பேசவும், நாம் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் தெரிந்தது முதலே, ‘குட் டச்’, ‘பேட் டச்’சின் ஆரம்பப் பாடத்தை நாம் சொல்லிக் கொடுத்துவிட முடியும். முதல் பாடம் - ‘‘யாராவது உன்னைத் தொடுவது பிடிக்கவில்லை என்றால், உடனே ‘என்னைத் தொடாதீங்க; அது எனக்குப் பிடிக்கலை’ என்று அவரிடம் சொல்லிவிடு’’ என்று கற்றுத் தருவதாகும்.
‘என் உடல் என்னுடையது’ என்ற உணர்ச்சியின் இன்னொரு பக்கம்தான், ‘இன்னொருவர் உடல் என் சொத்து அல்ல; என் உடல் இன்னொருவருக்காகத் தயார் செய்யப்பட்டு வைத்திருப்பது அல்ல’ என்ற தெளிவுகளையும் பின்னாளில் ஏற்படுத்த முடியும். கதாநாயகனுக்காகவென்றே ‘ஆளாகி’, ‘சமைஞ்சு’ காத்திருப்பவளாக கதாநாயகியைச் சித்திரிக்கும் அத்தனைப் பாடல்களும், காட்சிகளும், பெண் உடல் தன் சொத்து என்ற கருத்தை ஆண் மனதிலும், தன் உடல் தன்னுடையதல்ல; இன்னொருவனுக்கானது என்ற கருத்தை பெண் மனதிலும் ஓயாமல் விதைத்துக்கொண்டே இருக்கின்றன.
இப்படிப்பட்ட தவறான கருத்துப் பரப்பலால்தான், ‘தொட்டால் கற்பு போய்விட்டதாகுமா?’, ‘முத்தமிட்டால் கற்பு போனதாகச் சொல்லலாமா?’ அல்லது, ‘உடல் புணர்ச்சி மட்டுமே கற்பைத் தீர் மானிக்குமா?’ போன்ற விசித்திரப் பட்டிமன்ற விவாதங்கள், பல விடலை மனங்களில் பேயாட்டம் ஆடுகின்றன.
இளைஞர்கள் மனதில் செக்ஸ் தொடர்பாக ஏற்படும் பல குழப்பங்களின் அஸ்திவாரம், சிறு வயதில் உடல் பற்றிய தவறான பார்வையிலேயே போடப்பட்டுவிடுகிறது. அதனால்தான் மிகச் சிறு வயதிலேயே உடல் பற்றிய இயல்பான புரிதல் என்ன, வளர்ச்சியின் தன்மை என்ன, வழி காட்டுதல் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் பாலியல் வளர்ச்சி எப்படிப்பட்டது என்று நாம் அறிய வேண்டும். நான்காம் வயது, ஐந்தாம் வயது இரண்டும் ஒரு கட்டம். இந்தக் கட்டத்தில்தான் ஆம்பளைன்னா இப்படி இருக்கணும்; பொம்பளைன்னா இப்படி இருக்கணும் என்ற பார்வை உருப்பெறத் தொடங்கிவிடுகிறது!
1. ‘செக்ஸ்னா என்ன?’ என்று யாரிடமாவது நீங்கள் கேட்ட / உங்களிடம் யாராவது கேட்ட முதல் நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?
2. என்ன பதில் தரப்பட்டது?
3. உங்கள் உடலைப் பற்றியோ / உடலின் ஏதேனும் ஒரு பாகத்தைப் பற்றியோ அருவருப்பாக எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா? எப்போது? ஏன்?
4. உங்கள் உடலின் எல்லா பாகங்களின் பெயர்களும் உங்களுக்குத் தெரியுமா? சரியாகப் பெயர் தெரியாத பாகங்கள் உண்டா? எவை?
5. தொடுதல்/ அணைத்தல்/ முத்தமிடுதல்/ புணர்ச்சி - இதில் எப்போது கற்பு ‘இழக்கப்படுவதாக’ நினைக்கிறீர்கள்?
நன்றி: ஆனந்த விகடன்
|