|
ஞாநி
குதர்க்கமும் நானே, குழப்பமும் நானே!
அடிக்கடி ‘கேள்வியும் நானே - பதிலும் நானே’ பாணியில், பொதுப் பிரச்னைகளைப் பற்றி அறிக்கை வெளியிடுவது முதலமைச்சர் கருணாநிதியின் ஸ்டைல். உலகத்தையே குலுக்கும் 123 ஒப்பந்தம் பற்றி, தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து அணு உலைகளும், கன நீர் ஆலையும்உள்ள நிலையில், ஏதாவது விரிவாகத் தன் கருத்தை எழுதுவார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்!
லேட்டஸ்ட் அறிக்கையிலிருந்து ஒரு கேள்வி - பதில்:
கேள்வி: மானை வேட்டையாடினார் என்பதற்காக இந்தி நடிகர் ஒருவர் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுகிறாரே?
பதில்: என்ன செய்வது? அந்த நடிகர் ராமனாகப் பிறக்கவில்லை. பிறந்திருந்தால், மாரீசன் என்ற மானை அந்த ராமன் கொன்றதைவிட, இது என்ன மாபெரும் குற்றமா என்று கேட்டிருப்பார்.
இந்த பதிலுக்குள் எத்தனை தவறுகள் பொதிந்திருக்கின்றன என்று பார்ப்போம். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்படுவதாக ஒரு முதலமைச்சர் சொல்வது, நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். அடுத்தபடியாக... நடிகர் சல்மான்கான் குற்றம் சாட்டப்பட்டிருப்பது, தடை செய்யப்பட்ட வனப் பகுதியில் அபூர்வ மான்களை வேட்டையாடியதற்காக! அதுவும், ஒரே வருடத்தில் மூன்று முறை வெவ்வேறு நிகழ்ச்சிகள்! வனத்தையும் விலங்குகளையும் பாதுகாப்பதைத் தங்கள் குலதர்மமாகக் கருதும் பிஷ்னாய் பழங்குடியினர், பணபலத்துக்குப் பயப்படாமல் சாட்சி சொல்ல வந்ததால்தான் இந்த வழக்குகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.
ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்று கருணாநிதியே ராமர் பாலம் பற்றிய தன் அடுத்த கேள்வி - பதிலில் சுட்டிக் காட்டியிருக்கிறார்... கற்பனையான மாரீச மானை, சல்மான்கான் அசலாக வேட்டையாடிய மானுடன் ஒப்பிட்டு, ராமன் செய்த குற்றத்தைவிட சல்மான்கான் குற்றம்பெரி யதா என்று எழுதுவது எவ்வளவு அபத்தம்!
ஒரு முதலமைச்சர் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்கு பற்றிப் பொறுப்பில்லாமல் ஜோக் அடிப்பதாக நினைத்தால், அதன் விளைவுகள் என்ன? இவர் பொறுப்பில் இருக்கும் தமிழக வனங்களில் சட்டத்தை மீறி வேட்டை யாடிவிட்டு, வழக்கு போட்டால், முதலில் ராமர் மீது மாரீச மான் வேட்டைக்கு வழக்கு போட்டு விட்டு, அப்புறம் என் மீது போடுங்கள் என்று நாமும் சொல்ல முடியுமா?
இதே மேம்போக்கான மனநிலைதான் சென்னையில் அரசு குப்பை கொட்டிய, அள்ளிய விவகாரத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும் பிரதிபலிக்கிறது. குப்பை அள்ளுவதில் ஈடுபட்ட காவல் துறையினரைப் புகழோ புகழ் என்று புகழ்கிறார் கருணாநிதி.
புயல், வெள்ளம், நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது நெருக்கடியான நிலையில் ராணுவத்தையும் போலீஸாரையும் ஈடுபடுத்துவது உண்டு. ஆனால் சென்னையை நாறடித்த குப்பை நெருக்கடி, இயற்கை ஏற்படுத்தியதில்லை. செயற்கையாக கருணாநிதியின் அரசு, தனக்குத்தானே உரு வாக்கிக்கொண்ட பிரச்னை.
இந்தப் பிரச்னையில் சில அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலோ, நடவடிக்கையோஇது வரை இல்லை. அவற்றைப் பார்ப்போம்.
1.குப்பை அகற்றும் வேலையை ஒரு நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றும்போது, ‘ஹேண்டிங் ஓவர் புரொசீஜர்’ என்பதை ஏன் திட்டமிடவில்லை? அதுவரை இருந்து வந்த நடைமுறை தொடர்வதற்கோ, மாற்றப்படுவதற்கோ போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டாயிற்றா என்று முன்கூட்டியே கவனிக்காதது ஏன்? அதற்கு எந்தெந்த அதிகாரி கள், அமைச்சர்கள் பொறுப்பு?
2.இதுவரை தெருக்களில் இருந்த குப்பைத்தொட் டிகளில் இருந்து அள்ளிய முறைக்குப் பதிலாக, இனி வீடு வீடாக மட்டும் எடுக்கலாம் என்று புது நிறுவனம் திட்டமிட்டிருந்ததால், தெருக்களில் குப்பைத் தொட்டி வைக்கத் தவறிவிட்டது என்று அமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தாரே... குப்பை எடுக்கும் முறை இன்ன தேதியிலிருந்து மாற்றப்படுகிறது என்று மக்களுக்கு முன்கூட்டி அறிவிக்க வேண்டாமா? அதைச் செய்யத் தவறியதற்கு யாரெல்லாம் பொறுப்பு?
3.பழைய ஒப்பந்தக்காரரைப் புதுப்பிக்காமல் புதிய நிறுவனத்துக்கு வாய்ப்பு தந்ததன் அடிப்படைகள் என்ன? ரேட் பிரச்னை என்றால், இப்போது புதிய ஒப்பந்தக்காரரின் குளறுபடியால் பழைய வரையே செய்யச் சொல்லியிருக்கும்போது, என்ன அடிப்படையில் ரேட் நிர்ணயிக்கப்படுகிறது? இதனால் அரசுக்கு ஏற்படும் பண இழப்புக்கு யார் பொறுப்பு? அதை அதிகாரிகள், அமைச்சர்களிடமிருந்து வசூலிக்க வழி உண்டா?
4.கருணாநிதி, ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடந்தால், சுற்றி 2 கி.மீ. வட்டாரத்துக்கு வாழை மரங்களும், தோரணங்களும், ஃப்ளெக்ஸ் படங்களும் எட்டு மணி நேரத்துக்குள் கட்டி முடிக்கும் திறமைசாலிகளான கழகக் கண்மணிகளைக் குப்பை அள்ள அனுப்பாமல், போலீஸை அனுப்பியது ஏன்?
குப்பை விவகாரத்தைக் கிளறக் கிளற மேலும் சில கேள்விகள் எழுகின்றன. மாநகராட்சியால் குப்பை வாரமுடியாமல் அதைத் தனியாரிடம் கொடுக்கும் அரசு, கேபிள் டி.வி-யை மட்டும் ஏன் தனியாரிடமே விட்டுவைக்காமல், தானே கம்பெனி ஆரம்பிக்கிறது? மக்களின் அத்தியாவசியத் தேவை - குப்பை நீக்கத்தை விட கேபிள்தான் என்று அரசு கருதுகிறதா?
டைட்டானியம் ஆலையை அரசே நடத்தட்டுமே என்று கோரிக்கை வந்தபோது, அது பெரும் மூலதனம் தேவைப்படும் தொழில் என்று சொல்லப்பட்டது. மது வியாபாரம், மணல் வியாபாரம், கேபிள் வியாபாரம் போன்றவற்றை அரசு நடத்துமென்றும், குப்பை, டைட்டானியம் எல்லாம் தனியார் வசம் தரப்படும் என்றும் சொல்வதன் லாஜிக் அல்லது பாலிஸி பார்வைதான் என்ன?
இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து மக்கள௮், காலடியில் மண்டியிட்டுக் கையேந்தும் நட்சத்திரப் பட்டாளத்துக்குக் கலைமாமணி சுண்டல் விநியோகம் செய்வதும்தான் நிர்வாகப் பணிகளா?
‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ அறிக்கையில், கருணாநிதி தானே கேட்டு தானே பதில் சொல்லியிருக்கும் இன்னொரு முத்து இதோ:
கேள்வி: ‘இன்னும் தீராத கொடுமை இந்தியாவிலா’ என்று பெருமூச்சுவிடும் நிலை இருக்கிறதா, இப்போதும்?
இதற்கு நீண்ட பதிலாக, பீஹார் மாநிலத்தில் ஜமீன் தார் செய்யும் பாலியல் கொடு மையை எதிர்க்க முடியாத கூலித் தொழிலாளி பற்றிய செய்தியையும், மகாராஷ்டிரா வில் மாந்திரீகம் கற்பதற்காக மகளையே ஒருவர் நரபலி கொடுத்ததை, தகவலறிந்தும் போலீஸ் தடுக்கத் தவறிய செய்தியையும் கருணாநிதி விவரித்திருக்கிறார்.
பீஹார் கொடுமைகள் கிடக்கட்டும். தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிராக இன்னமும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இரட்டைக் குவளை டீக்கடைகள், சுடுகாடுகள், சலூன்கள் கிராமந்தோறும் இருக்கின்றன. அவற்றைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் கிராமம்வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். ‘ஐய்யோ, இன்னும் இந்தக் கொடுமையா!’ என்று கொதித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களை முடுக்கிவிடவேண்டிய இடத்தில் இருப்பவர், பீஹார் பற்றிப் பெருமூச்சுவிட்டால்... என்ன கொடுமை சார் இது?
ஆட்சியாளர்கள் நிலைதான் இப்படி என்றால், இதை விமர்சிக்க வேண்டிய எதிர்க் கட்சிகள், அசல் பிரச்னைகளை விட்டுவிட்டு ராமர் பாலம் பற்றிப் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொருத்தர் எதிர்க் கட்சியா, கூட்டணிக் கட்சியா என்று தானும் குழம்பி, நம்மையும் குழப்புகிறார். இடதுசாரிகளோ, ‘நரி வலம் போனா என்ன, இடம் போனா என்ன, நம்ம மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி!’ என்று கமுக்கமாக செட்டிலாகிவிட்டார்கள்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டையும் தரும்படி கேட்டு எங்கே விண்ணப்பிப்பது என்று யாராவது தயவுசெய்து தெரிவியுங்கள்!
(ஓ... போடுவோம்!)
நன்றி: ஆனந்த விகடன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|