|
ஞாநி
எரிகிறது பஞ்சாப்!
பஞ்சாப் மூன்றாவது முறையாக எரிகிறது!
முதல் முறை, இந்திய விடுதலையை ஒட்டி நிகழ்ந்த பிரிவினை மதக் கலவரங்களில் எரிந்தது. இரண்டாவது முறை, எண்பதுகளில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கான தீவிரவாதத்தில் எரிந்தது. இப்போது, டேரா சச்சா சவுதா என்கிற ஆன்மிக அமைப்பின் தலைவரான பாபா குர்மித் ராம் ரஹீம் சிங்குக்கும், சீக்கிய மதத்தின் தலைமைப் பீடமான பாபர் கல்சா மத குருக்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் எரிகிறது.
ஒவ்வொரு முறை பஞ்சாப் எரியும்போதும் அதற்கு எண்ணெய் ஊற்றுவது, பின்னணியில் இருக்கும் அரசியல், மதம், சாதி, சமூக அமைப்பு ஆகிய அம்சங்கள்தான். இப்போதும் அப்படியே!
‘டேரா சச்சா சவுதா’ என்பது சீக்கிய அமைப்பு என்றும், சீக்கியர்களில் இரு பிரிவினருக்கிடையே தற்போதைய மோதல் நிகழ்கிறது என்றும் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் தோன்றும். ஆனால், அது முழு உண்மை அல்ல. டேரா என்பதை ஆசிரமம், மடம், இயக்கம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
இன்று பஞ்சாபில் சுமார் 9,000 டேராக்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் டேரா சச்சா சவுதா. இந்த டேராக்கள் எல்லாம் மத அமைப்புக்கு வெளியில் இருப்பவை. ஆனால், மதத்தின் அம்சங்களைப் பயன்படுத்துபவை. ஆதிபராசக்தி சக்தி பீடம், மெய்வழிச்சாலை, ஹரே கிருஷ்ணா இயக்கம் போல என்று வைத்துக்கொள்ளலாம்.
பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதம் 90 களின் இறுதியில் ஓய்ந்து, மீண்டும் தேர்தல் அரசியலுக்கு பெருவாரியான மக்கள் பேராதரவு கொடுத்தபோது, மத அடிப்படையில் சில மறு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிர வாதிகள் ராணுவ மோதல்களில் பஞ்சாப் நெடுகச் சிதைக்கப்பட்ட குருத்வாராக்களை மறுபடியும் கட்டுவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்வது போன்ற இந்த வேலைகளை உள்ளூரில் மக்களின் ஆன்மிக வழிகாட்டிகளாக இருந்த பலர் முன்னெடுத்துச் செய்தார்கள். இவர்களிடம் மக்களும் வந்து குவிந்தார்கள். நன்கொடை நிதியும் குவிந்தது. அடுத்த பத்தாண்டுகளில் இந்த உள்ளூர் பாபாக்கள், மாநில அளவிலான சீக்கிய மதத் தலைமைக்குச் சவால்விடும் அளவுக்குச் செல்வாக்குடன் வளர்ந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒரு டேராவின் தலைவர்தான் குர்மித் ராம் ரஹீம் சிங். அவர் சீக்கிய மத ஸ்தாபகரான குரு கோவிந்த் சிங்கைப் போலவே உடை உடுத்தி, அவரைப் போலவே அமிர்தகலசத்தைக் கடையும் போஸில் படமெடுத்து விளம்பரம் செய்ததுதான் தற்போதைய கலவரத்துக்கு வித்திட்டது.
கலவரத்துக்கும் மோதலுக்கும் உடனடி காரணம்தான் இந்தப் படம். ஆனால், கொஞ்ச காலமாகவே டேரா சச்சா சவுதாவையும் இதர டேராக்களையும் ஒழித்துக்கட்ட, சீக்கிய மதத் தலைமை சரியான தருணம் தேடிக் காத்திருந்தது. பஞ்சாப் முழுவதும் சச்சா சவுதாவுக்கு இருக்கும் எல்லா ஆசிரமங்களையும் மூட வேண்டும்; அவற்றின் சொத்துக்களை அரசு கைப்பற்ற வேண்டும் என்பதெல்லாம் இப்போது வைக்கப்படும் கோரிக்கைகள்.
டேராக்களுக்கும் பாபர் கல்சாவுக்கும் இடையில் இருக்கும் சண்டையில் ஒரு அம்சம், பணம்! அண்மைக்காலமாக, அதிகமான மக்கள் டேராக்களுக்கு நன்கொடைகளைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை பாபர் கல்சாவுக்கு வந்துகொண்டு இருந்த பக்தர்கள், டேராக்களுக்குச் செல்வதால், வசூல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
சச்சா சவுதாவின் தலைமையகம் பஞ்சாப் - ஹரியானா எல்லையருகே, ஹரியானாவில் சிர்ஸாவில் உள்ளது. 400 ஆண் சாமியார்களும், 100 பெண் சாமியார்களும் வசிக்கும் இந்த 800 ஏக்கர் ஆசிரமம், உண்மையில் பெட் ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட், சுழலும் ஓட்டல் போன்ற எல்லா நவீன வசதிகளும் உள்ள ஒரு குட்டி நகரம். சச்சா சவுதா, வட மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறது. சச்சா சவுதாவின் ரத்ததான முகாம்கள் பிரபலமானவை.
அதிகமானவர்கள் டேராக்களை நோக்கிச் செல்கிறார்கள் என்பதற்கு, சாதி ஒரு முக்கியமான காரணம். அம்மனை தானே பூஜை செய்து வழிபட பெண்களுக்கு எந்தத் தீட்டுத் தடையும் இல்லை என்று பங்காரு அடிகள் ஏற்படுத்திய நடைமுறை எப்படி ஏராளமான பெண்களை அங்கே ஈர்த்ததோ, அதே போல டேராக்கள், சீக்கியர்கள் மத்தியில் நிலவும் மேல் சாதி -கீழ் சாதி வேறு பாடுகளை உடைத்தன. தலித்துகளுக்கென்று தனியான சீக்கியக் குருத்வாராக்கள் கட்டப்பட்டு, சாதி வேறுபாடு நீட்டிக்கப்பட்டு வந்த பஞ்சாப் சமூகத்தில், எல்லாரும் சமம் என்ற டேரா அணுகுமுறை, குக்கிராமங்களில் இருக்கும் படிப்பறிவற்ற ஏழைகளைப் பெருமளவு ஈர்த்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், டேராக்கள் சீக்கிய மதத்தின் சங்கடமான சில விதிமுறைகளைத் தளர்த்திவிட்டன. முடி வளர்த்து தலைப்பாகை கட்டத் தேவையில்லை என்பது டேராக்களின் கருத்து. இன்று பஞ்சாப் சீக்கியர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் முடி வளர்க்கும் சமய விதியைக் கைவிட்டுவிட்டனர். (இதுபற்றி 8-11-2006 ‘ஓ... பக்கங்க’ளில் எழுதியது நினைவிருக்கலாம்.)
சச்சா சவுதா தன்னைச் சீக்கிய அமைப்பு என்றே சொல்லிக்கொள்வதில்லை. அதன் கொள்கைப் பிரகடனத்தின்படி ஒருவர் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம் என எந்த மதத்தைப் பின்பற்றினாலும், டேராவின் ஆதரவாளராகவும் இருக்கலாம். கடவுள் ஒருவரே! அவரை அடையத் தியானம் செய்வது போதுமானது. தியான முறையை டேராவில் கற்றுக்கொள்ளலாம்.
இன்று பஞ்சாபில் மதமும் அரசியலும் இரண்டறக் கலந்திருக்கின்றன. பிரபந்த கமிட்டியும் பாபர் கல்சாவும் அகாலி தளத்தை ஆதரிப்பவை. பெரும்பாலான டேராக்கள் காங்கிரஸை ஆதரிக் கின்றன. குறிப்பாக, பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அகாலி தளம் ஆட்சியைப் பிடித்தபோதும், அது வழக்கமாகத் தனக்கு செல்வாக்குள்ள மால்டா பகுதியில் தோற்றது. அங்கே காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்றது. காரணம், டேரா சச்சா சவுதா பகிரங்கமாக காங்கிரஸ்க்கு ஆதரவளித்ததுதான்!
இப்போது சீக்கியத் தலைமைக்கும் டேரா சச்சா சவுதாவுக்கும் நடக்கும் மோதலை, அகாலி தள ஆட்சி தன்னைப் பழிவாங்கப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது டேரா. தனக்கு ஆதரவாகப் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் கோரியிருக்கிறது. சீக்கியரான பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் விசுவாச அடிப்படையில் டேராவைக் காப்பாற்றுவாரா, மத விசுவாச அடிப்படையில் பாபர் கல்சா பக்கம் சாய்வாரா என்பது அவருடைய சிக்கலாக இருந்தது. தண்ணீரைவிட ரத்தம் அடர்த்தியானது என்பதை நிரூபிப்பது போல, டேராவை மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருக்கிறார் மன்மோகன் சிங்.
சச்சா சவுதா மீது ஏற்கெனவே சி.பி.ஐ விசாரணை நான்காண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. சச்சா சவுதாவின் பெண் சாமியார் ஒருவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், தலைவர் ராம் ரஹீம் மீதான பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து டேராவுக்கு எதிராகக் கட்டுரைகளை வெளியிட்டு வந்த ‘பூரா சச்சா’ (முழு உண்மை) என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராம் சந்திர சத்ரபதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பஞ்சாப் முழுவதும் பத்திரிகையாளர்கள் டேரா மீது நடவடிக்கையும் விசாரணையும் கோரி போராட்டம் நடத்தினார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு வழியாக டேரா சச்சா சவுதா தலைவர் ராம் ரஹீம் சிங்கை விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை வழியிலேயே தடுத்துத் திருப்பி அனுப்பி னார்கள் டேராவின் பக்தர்களான சுமார் ஒரு லட்சம் பேர். மறியலுக்கு வராத பக்தர்கள் ஒரு கோடி பேர் என்று மதிப்பிடப்படுகிறது. அதில் முதலமைச்சர்கள் பிரகாஷ் சிங் பாதல், ஓம்பிரகாஷ் சவுதாலா போல பல பிரபலங்களும் அடக்கம்.
சாதி, மதம், அரசியல், ஆன்மிகம் இவற்றைக் கலந்தால், அது சமூகத்துக்கு மிக ஆபத்தான வெடிகுண்டு என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை பஞ்சாபில்! நாம்தான் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை!
நன்றி: ஆனந்த விகடன்
|