|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 1
ஒரு சிறுவனின் அடிப்படைக் கடமை என்ன? படிக்கும் பருவத்தில் படிப்பது. அதைவிட முக்கியமானதாக ஒரு கின்னஸ் சாதனையை அவன் கருதத் தூண்டியது எது? துவளச் செய்தது எது? கின்னஸ்க்காக உயிர் விடத் துணிந்த அவனுக்கு, படிப்பதற்காக உயிர் வாழ்வது அவசியம் என்று தோன்றாதது எதனால்?
எங்கோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால், அந்தச் சிக்கல் என்ன என்றும், அதன் சரியான உருவம் இன்னதென்றும் தெளிவாகப் பிடிபடவில்லை. யானை பார்த்த குருடர்கள் போல சிக்கலை விதவிதமாகவும் துண்டுதுண்டாகவும் புரிந்துகொள்கிறோம். சிக்கல், யானை சைஸில் பிரமாண்டமாக இருப்பது மட்டும் நிஜம். மற்றபடி, அதை அறிந்தும் அறியாமலுமே வாழ்கிறோம்.
உதாரணத்துக்கு எடுத்துக்கொண்ட மேற்படி மூன்று நிகழ்ச்சிகளிலும் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது.அது என்ன?
குடும்பம்!
அப்பா - அம்மா - மகன் - மகள் அதன் பிறகுதான் கிரிக்கெட், சினிமா, கின்னஸ் இத்யாதிகள் எல்லாம்! சொல்லப்போனால், வெளி உலகத்தைப் புரிந்துகொள்ள நம்மை முதலில் தயார்செய்வதே நம் குடும்பம் தான். அது செய்யத் தவறியதையும், செய்யமுடியாததையும் அடுத்தபடியாக கல்விக்கூடங்களில் பெறமுயற்சிக்கிறோம். அவையும் தராதவற்றை வெளி உலக அனுபவங்களிலிருந்து பெற முயற்சிக்கிறோம். இந்த வெளி உலகத்தில் மீடியாவும் நண்பர்களும் அடக்கம்.
குடும்பம், பள்ளி, நண்பர்கள், மீடியா என்ற நான்கும் நம்மை ஒரே திசையில் அழைத்துச் செல்வதில்லை என்பதுதான் நடைமுறை நிஜம். சில நேரங்களில் ஒன்றுபடுகின்றன; பல நேரங்களில் மாறுபடுகின்றன. நடுவில் நாம்!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் காதில் ஒலிக்கும் வாசகங்களில் இந்த முரண்பாடுகளைத் தரிசிக்கலாம். ‘அவன் சகவாசமே சரியில்ல!’, ‘வீட்டுக்குப் போகவே பிடிக்கலே!’, ‘த்ரிஷாவைப் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருக்கலாம் போலிருக்கு!’
முரண்பாடுகள் முற்றும்போதெல்லாம் ஒரு பதில் வழக்கமாக நமக்குச் சொல்லப்படுகிறது... ‘என்ன ஆனாலும் குடும்பம்தான் முக்கியம். குடும்பத்தை மீறி எதுவும் செய்யாதே! எதுவும் சிந்திக்காதே!’
குடும்பம் என்பது என்ன? அப்பா, அம்மா, குழந்தைகள், ரத்த உறவுகள். அவ்வளவுதானா? இல்லை. குடும்பத்தில் இரு வகைகள் இருக்கின்றன.
ஒன்று, இயற்கையில் நமக்கு அமைந்த குடும்பம். இரண்டாவது நாம் நமக்கென்று தேர்ந்தெடுக்கும் குடும்பம்.
முதல் குடும்பத்தை நாம் தேர்ந்தெடுக்கவில்லை என்பது கசப்பான, ஆனால் மறுக்கமுடியாத உண்மை. எந்த சாதி, எந்த மதம், எந்த மொழி, எந்த நாடு, ஏழையா, பணக்காரரா, நடுத்தரமா என்ற எதையும் நாமாகத் தேர்ந்தெடுத்துப் பிறப்பதில்லை. பிறப்பு என்பது ஒரு விபத்து. பிறக்கும்போதே நம் மீது சாதி, மதம், மொழி, தேசம், வசதி/ வசதியின்மை எல்லாமே சுமத்தப் பட்டுவிட்டன.
இந்தச் சூழ்நிலையில் நாம் தேர்வு செய்ய மிஞ்சியிருப்பது என்ன?
எப்படி வாழப்போகிறோம் என்பது தான். ‘இன்றைய என் குடும்பத்தின் நிறைகுறைகளிலிருந்து என்ன கற்றுக் கொள்ளப்போகிறேன்’ என்பதுதான். ‘நாளை என் குடும்பத்தை நான் உருவாக்கும்போது, அதை எப்படி வடிவமைக்கப் போகிறேன்’ என்பது தான். எனக்கான நண்பர்கள் யார், எனக்கான மீடியா எது, எனக்கான அரசியல் எது, எனக்கான பண்பாடு எது... என இவை எல்லாமே என் தேர்வுக்கு மிஞ்சி இருப்பவைதான்.
இந்தத் தேர்வைச் செய்யும்போது மறுபடியும் முரண்பாடுகள் வரத்தான் செய்கின்றன. வளர்ப்பால் என்னைத் தன் போலவே ஆக்க முயற்சிக்கும் (பிறப்பால் எனக்கு அமைந்த) குடும்பத்துக்கும், என் தேர்வுகளுக்கும் இடையே முரண்பாடுகள் வரத்தான் செய்யும்.
இந்த முரண்பாடுகள்தான் சமூகத்தில் தனி மனித வன்முறை யாகவும், கூட்டு வன்முறையாகவும் வெடிக்கின்றன. இன்னும் வெடிக்காத குண்டுகள்தான், ‘எங்கம்மா பெரிய டார்ச்சர்!’, ‘பெத்த மனம் பித்து! அவன் நன்மைக்குதானே சொல்றேன். புரிஞ்சுக்க மாட்டேங்கறானே!’ என்ற முணுமுணுப்புகளாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கின்றன.
இவற்றைப் பற்றித்தான் இந்தத் தொடர்.
யாருக்காக?
குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்காகவும்தான். அப்பா, அம்மா, மகள், மகன், மாமா, சித்தப்பா, சித்தி அத்தனை பேருக்காகவும்தான்! அன்பு, காதல், காமம் வரை எல்லாவற்றையும் அறிந்தும் அறியாமலும் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் எல்லாருக்காகவும்தான்!
அறிந்தும் அறியாமலும்... அ...அ!
தமிழுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டில் நாம் பயன்படுத்தும் பல சொற்களுக்கும் முதல் எழுத்து ‘அ’. அம்மா, அப்பா, அன்பு, அதிகாரம், அலட்சியம், அக்கறை, அகந்தை, அடக்கம், அல்லல், அறிவு, அலசல், அனுமதி, அவசியம், அர்த்தம், அபத்தம், அமைதி... பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஒரு கணம் யோசியுங்கள். இந்த ‘அ’ வரிசைச் சொற்கள் அத்தனையின் பொருளுமே நாம் அறிந்தும் அறியாமல் இருப்பவைதான் அல்லவா!
‘இல்லையில்லை. எல்லாமே எனக்குத் தெரியும். எவ்ரிதிங் இஸ் ஃபைன் வித் திஸ் வேர்ல்ட்!’ என்று நினைப்பவர்கள் இந்தத் தொடரிலிருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டேன். நெருப்புக் கோழிபோல மணலில் தலை புதைத்து யாரும் வாழ முடியாது.
17 வயதுப் பெண்ணுக்கு முகமெல்லாம் பரு. ‘காரணம், அவளுக்கு ஏதோ ஆண் சக வாசம் இருப்பதுதான். எனவே கல்லூரிப் படிப்பே தேவையில்லை’ என்று தன் மகளைக் கல்லூரியிலிருந்து நிறுத்திய அப்பாவை உங்களுக்குத் தெரியுமா? தெரியாது இல்லையா?
சொந்த மகளைத் தன் இச்சைக்கு இணங்கக் கட்டாயப்படுத்தும் அப்பாவிடம் இருந்து மகளைக் காப்பாற்றப் போராடிக்கொண்டு இருக்கும் அம்மாவை உங்களுக்குத் தெரியுமா? தெரியாது இல்லையா?
அவர்களை நீங்களும் தெரிந்துகொள்வது அவசியம்.
அப்படிப்பட்ட ஒரு பெண் மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அறிவுக்கூர்மையும் அபிலாஷைகளும் நிரம்பிய கல்லூரி மாணவி. வயது 19. அவளுடைய பிரச்னை என்ன? கேரியர் கைடன்ஸுக்காக அவள் சந்தித்த ஓர் 50 வயது உயர் அதிகாரியுடன் ஏற்பட்ட நட்பை, அவர் படுக்கையில் கொண்டு போய் முடித்தார். ஏற்கெனவே திருமணமான அந்த அதிகாரிக்கு இப்போது மாயா அலுத்துவிட்டது. கேரியர் கைடன்ஸ் தேடும் இன்னொரு பெண் அவருக்குக் கிடைத்துவிட்டாள். ஆனால், மாயாவால் அவரை மறக்கவும் பிரியவும் முடியவில்லை.
மாயாவுக்கு இது ஏன் நடந்தது? அவளுக்கான தீர்வுதான் என்ன?
இதுபோல், இன்னொரு வீட்டில் இப்போது துள்ளித் திரிகிற 5 வயது சாயாவுக்கு நாளை மாயாவின் நிலை வராமல் இருக்கவும், நம் வீட்டு 20 வயது அழகேசன் நாளை அந்த உயர் அதிகாரி போல் ஆகாமல் இருக்கவும் தடுப்பு மருந்து ஏதும் உண்டா?
உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள். அவற்றில் தகுந்தவற்றை இந்தத் தொடர் மூலமாகவே நம் எல்லோருடனும் பகிர்ந்துகொள்வேன்.
தொடர்ந்து, நம்மை நாமே இந்தத் தொடரில் சந்தித்து உரையாடுவோம்.
நன்றி: ஆனந்த விகடன்
|