|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 11
அண்மையில், இணையத்தில் ஓர் ஆங்கிலக் கவிதை படித்தேன். சென்னைத் தொலைக்காட்சிக்காக நான் இயக்கிய, எழுத்தாளர் சுஜாதாவின் ‘பூக்குட்டி’ டி.வி. படத்தில், விம்முவாக நடித்த ஆறு வயதுக் குழந்தை சம்யுக்தா, இப்போது 18 வயதுப் பெண். அவர் எழுதியிருந்த கவிதைதான் அது.
பல வருடங்களுக்குப் பின், அவரை இணையத்தின் வலைப்பூக்களில் இப்படிப் படிக்க நேர்ந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய கவிதை பூப்பெய்தியதைப் பற்றியது. இதோ என் சுமாரான மொழிபெயர்ப்பில்...
‘நவம்பர் காலை
ஒரு பெண்ணின் தலைவிதி
என்னைத் தாக்கியது.
நான்
ஆம்பளைத்தனமான அராத்துமல்ல
அழுமூஞ்சி உம்மணாமூஞ்சியுமல்ல
நான் நான்தான்.
நான் நிஜமாகவே புன்னகைத்தேன்.
ரொம்பவும் உற்சாகமாக இருந்தது.
நான் வளர்ந்துவிட்டேன்
கழிவறையிலிருந்து
சிரிப்பும் ஓட்டமுமாகப் போய்
என் சகோதரியிடம் சொன்னேன்
அவளும் அப்பாவும்
உதவிகள் செய்தார்கள்
குடும்பமே மகிழ்ச்சியில்.
அதிர்ஷ்டமோ இல்லையோ
எனக்கு முன்பே தெரியும்
அது ஏன் நிகழ்கிறது
எப்படி நிகழ்கிறது என்பதெல்லாம்.
ஒரு மகிழ்ச்சியான தினம்
கடும் வலிகளும்
குழப்பங்களும் இல்லை.
நான் ஓர் அதிர்ஷ்டசாலி என்று
நான் அறிந்துகொண்ட நாள்!’
இந்தக் கவிதையைப் படித்தவுடன், எனக்கு எழுத்தாளர் அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதை மனதில் எழுந்தது. முதல் மாதாந்திர ரத்தப்போக்கு ஏற்பட்டதும், இயல்பாக தாயிடம் ஆதரவு தேடுவாள் ஒரு சிறுமி. தகவல் கேட்டதும், தாய் வெளிப்படுத்திய அங்கலாய்ப்பில் சிறுமியின் மனம் சுருங்குவது பற்றிய அற்புதமான கதை. அந்தக் கதை வெளியாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மூன்று தலைமுறைகளுக்குப் பின் வந்த சம்யுக்தாவின் கவிதை நேர் எதிரான இன்னொரு மன நிலையைக் காட்டுகிறது.
சம்யுக்தாவின் கவிதையில் சொல்லப்படும் ‘அதிர்ஷ்டம்’தான் என்ன? தனக்கு என்ன நேர்கிறது என்பதை உணர்ந்திருக்கும், அறிந்திருக்கும் அதிர்ஷ்டம்தான். இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் சிறுமி பூப்பெய்துவது சடங்காக, விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சாதிக்கும் வசதிக்கும் ஏற்ப விழாவின் தன்மை இருக்கிறது.
9 லிருந்து 12 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்துவது இயற்கையானது. நமது மரபான சடங்குகளும், நவீனமான சினிமாவும் இந்த இயற்கையான நிகழ்ச்சியைப் பெண்ணுக்குச் சிக்கலானதாக ஆக்கிவைத்திருக்கின்றன. ஏதோ ஒரு ஆணுக்காக வேண்டியே இந்தச் சிறுமி சமைந்து, சடங்காகி, ‘ஆளாகி’த் தயாராக இருப்பதாக ஒரு கருத்தாக்கம் பலமாகத் தலைக்குள் ஏற்றப்படுகிறது.
ஆங்கிலத்தில் மென்ஸ்ட்ருவேஷன் எனப்படும் இந்த நிகழ்வுக்குத் தமிழில் இன்று சகஜமாகப் புழங்கும் சொற்களான ‘மாதவிலக்கு’, ‘தூரம்’, ‘தீட்டு’ என்பவை எதுவுமே சரியான சொற்கள் அல்ல. எல்லாமே மரபான பார்வையிலிருந்து வருபவை. அந்த நாட்களில் பெண் வீட்டிலிருந்து விலக்கிவைக்கப்பட வேண்டியவள், விலகி நிற்க வேண்டியவள் என்ற சடங்கு சார்ந்த கருத்தாக்கத்திலிருந்தே அந்தச் சொற்கள் வருகின்றன. மாதாந்திர ரத்தப்போக்கு அல்லது மாதக் கசிவு போன்ற சொற்களே ஓரளவு சரியானவை. இன்னும் பொருத்தமான சொற்கள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், முதல் மாதக் கசிவு ஏற்பட்ட சிறுமியைச் சுற்றிச் சடங்குகளும் விழாக்களும் நடக்கின்றனவே தவிர, அவள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை அவளுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வது மட்டும் நம் குடும்பங்களில் நடப்பது இல்லை. சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்று சிறுமிக்குச் சொல்லப்படுவதைத் தவிர, சடங்குகளில் அவளுக்குப் பயனுள்ள தகவல் அறிவு எதுவும் புகட்டப்படுவது இல்லை. தங்கள் பெண் திருமணத்துக்குத் தயார் என்று உறவுக்கும் ஊருக்கும் அறிவிக்கும் தேவை இருந்த அன்றைய காலச் சூழலில், சமூகச் சூழலில் உருவாக்கிக்கொள்ளப்பட்ட மஞ்சள் நீராட்டு விழா சடங்குகள், இன்றைய சிறுமிக்கு அதிக குழப்பத்தையும் சங்கடங்களையுமே ஏற்படுத்துகின்றன.
மூளையின் கீழ்ப் பகுதியில் வேர்க்கடலை சைஸில் பதுங்கியிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி, மாதாந்திர ரத்தப்போக்கு தொடங்குவதற்குச் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிடுகிறது. மூளையில் இருக்கும் ஹைப்போதாலமஸின் உத்தரவின்படிதான் பிட்யூட்டரி செக்ஸ் ஹார்மோன்களைச் சுரக்க ஆரம்பிக்கிறது.
முதல் உத்தரவு, சிறுமியின் உடலில் இருக்கும் சினைப்பைகளுக்கு! ‘நீ முட்டைகளைத் தயாரிக்க ஆரம்பி’ என்ற உத்தரவு சுரந்ததும், சினைப் பைகள் அதைச் செய்யத் தொடங்குகின்றன. இதன் தொடர் விளைவாக உருவாகும் இன்னொரு ஹார்மோன்தான், ஈஸ்ட்ரோஜன். ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகமானதும், அதன் தூண்டுதலில், இன்னொரு ஹார்மோனைச் சுரக்கும்படி பிட்யூட்டரிக்கு உத்தரவிடுகிறது ஹைப்போதாலமஸ். அதுதான் எல்.ஹெச் எனப்படும் லூட்டினைசிங் ஹார்மோன்.
சிறுமியின் சினைப்பையில் உருவாக்கப்பட்ட முட்டைகளைப் பத்திரமாகக் கருப்பைக்கு அனுப்பிவைப்பது எல்.ஹெச்சின் பொறுப்பு. எல்.ஹெச் சினைப்பைக்குப் போய், முட்டை பொதிந்திருக்கும் ஃபாலிக்கிள் எனப்படும் மெல்லிய உறையை உடைத்து, முட்டையைக் கருப்பை நோக்கிய பயணத்துக்கு அனுப்புகிறது.
உடைந்த ஃபாலிக்கிள் தன் கடமைப்படி இன்னொரு திரவத்தைச் சுரக்கிறது. அதுதான் ப்ரோஜெஸ்ட்ரான். கருப்பைக்குச் சென்று, அதன் உள் சுவரைப் பூசி மெழுகி வைப்பது இதன் வேலை. இளநீரில் வழுக்கை எப்படி உட்புறம் நெடுக ஒட்டியிருக்கிறதோ, அது போல உள்வரி சவ்வாக கருப்பையின் சுவரில் ஒட்டியிருக்கும் இந்த மெழுகல்! ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் இந்த உட்புற சவ்வு மெதுவாக உப்பி தடிமனாகிக்கொண்டு இருக்கும்.
எதற்காக இந்த மெழுகும் வேலை தெரியுமா? ஆணின் உடலில் இருந்து பெண்ணின் உடலுக்குள் (உடல் உறவின்போது) செலுத்தப்படும் விந்தில் இருக்கும் உயிர் அணுக்களில் ஏதோ ஓர் உயிரணு ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் முட்டையைக் கருப்பையில் சந்தித்துவிட்டால், அந்த முட்டை ப்ளஸ் உயிரணு, கருவாக மாறும் அல்லவா? அந்தக் கருவைப் பத்திரமாக வைத்திருக்கத்தான் கருப்பையின் உட்சுவர் ‘ப்ரொ’வால் மெழுகித் தயாராக வைக்கப்படுகிறது.
உடல் உறவு இல்லை; விந்தின் வருகை இல்லை; உயிரணுவும் பெண் முட்டையும் சந்திக்கும் வாய்ப்பே இல்லை; எனவே, கருத்தரிக்கும் வாய்ப்பும் இல்லை என்கிற நிலையில், இந்த உட்புற சவ்வு கலையத் தொடங்குகிறது. அது கலைகையில், அதன் ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது.
இந்த ரத்தமும், கலைந்த உள்வரி சவ்வின் பகுதிகளும்தான் பெண்ணின் யோனிக் குழாய் வழியே வெளியேறுகின்றன. மாதந்தோறும் நிகழும் இந்த ரத்தப்போக்குதான் மென்ஸ்ட்ருவேஷன்.
தன் உடலுக்குள் இவையெல்லாம் நடப்பதை ஒரு சிறுமிக்கு சொல்லித் தருவதற்குப் பதில், அவளை அலங்கரித்து காட்சிப் பொருளாக உட்கார வைத்து, பணத்தை மொய்யாக எழுதி, பொய்களை சினிமாப் பாட்டாக எழுதி... லூட்டினைசிங் ஹார்மோன் பற்றிப் பேசாமல் வேறு ஏதோ லூட்டி அடித்துக்கொண்டு இருக்கிறோம் நாம்.
சாப்பிட்ட உணவு வயிறு, இரைப்பை, குடல்கள் வழியே பயணித்து, சக்தியை உடலுக்கு அளித்துவிட்டு, எஞ்சிய மலத்தை வெளியே அனுப்பி வைக்கும் ஜீரணப் பாதையின் செயல்வரிசையை விரிவாகப் படிப்பது போல, இனப்பெருக்க உறுப்புகளில் நிகழும் நிகழ்ச்சி நிரலைக் கற்பிக்க வேண்டாமா?
சிறுமியின் உடலில் இத்தனை மாற்றங்கள் மாதந்தோறும் நிகழ்வது போல சிறுவனின் உடலில் என்ன நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது?
நன்றி: ஆனந்த விகடன்
|