 |
ஞாநி
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
காதலுக்காக ஒரு தினம் கொண்டாடப்படுவதை நான் எதிர்க்கிறேன். மருத்துவர் மாலடிமை (டாக்டர் ராமதாஸ்) சொல்லும் காரணங்களுக்காக அல்ல. காதல் என்பது தினமும் கொண்டாடப்படவேண்டியது. அதை ஒரு தினம் மட்டும் கொண்டாடி விட்டுவிடுவது எனக்கு உடன்பாடில்லை.
காதலர் தின எதிர்ப்பாளர்கள் சொல்லும் காரணங்கள் இரண்டுதான். அந்தக் கொண்டாட்டம் வணிகமயமாகிவிட்டது என்பது ஒரு காரணம். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை வரை எல்லாமே இந்த நுகர்வோர் சமூக அமைப்பில் வணிகமயமாக்கப்பட்ட கொண்டாட்டங்கள்தான். அவற்றை விமர்சிக்காமல் காதலர் தினத்தை மட்டும்
ஏன் விமர்சிக்க வேண்டும் ?
அவையெல்லாம் பண்பாடு. இதுவோ பண்பாட்டுச் சீரழிவு என்பது இரண்டாம் காரணம். காதலைக் கொண்டாடும் சங்க இலக்கியமும் அப்படியானால் பண்பாட்டுச் சீரழிவின் அடையாளம்தானா ? டாக்டர் ராமதாஸ் நிறுவிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அச்சிட்டு வெளியிடும் தினசரி ஏடான தமிழ் ஓசையில் டாக்டர் சொல்கிறார்: (அன்றைய நாளில்) ‘‘பொது இடங்களில் கொட்டமடித்துப் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தனி நபர் உரிமை என்றெல்லாம் சொல்லுவார்கள். அதைப் பொருட்படுத்தக் கூடாது. வீட்டில் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் பொது இடங்களில் கொட்டமடிக்க அனுமதிக்கக் கூடாது.’’
பொது இடங்களில் கொட்டமடிப்பது தவறு என்பதில் நமக்கு மாறுபட்ட கருத்தே இல்லை. ஆனால் அப்படிக் கொட்டமடிப்பதை யார் எப்போது எந்த தினத்தில் செய்தாலும் தவறு என்று சொல்லலாமே தவிர காதலர் தினத்தைத் தனிமைப்படுத்திச் சொல்ல எந்த நியாயமும் இல்லை.
அப்படி காதலர் தினத்தன்று என்ன கொட்டம் பொது இடத்தில் நடக்கிறது ? இளைஞர்கள் தங்களுக்கிடையே வாழ்த்து அட்டைகளை, ரோஜா மலர்களை, சாக்லெட்டுகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தங்களைப் பரிமாறிக் கொள்கிறவர்கள் யாரும் பொது இடத்தில் செய்வதில்லை. செய்தாலும் அது கொட்டம் ஆகாது என்பது என் தனிப்பட்ட கருத்து.
பூங்காக்களில், துரித உணவகங்களில், சாலியோரங்களில், வளாகங்களில் இளைஞர்கள் கூடி உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள். சந்தோஷமாக சளசளவென்று பேசிக் கொண்டும் வாய் ( ப்ளஸ் மனம்) விட்டு சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எல்லாருமே காதலர்கள் அல்ல. காதலர்களாக இருக்க ஆசைப்படுபவர்கள் . அவ்வளவுதான். ராமதாஸ் வயதில் இருக்கக்கூடிய ஒரு தாத்தா இதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சியடைவதுதான் நியாயம். சமூக நீதி.
காதலில் எங்கே சமூக நீதி வந்தது என்று வியப்படைய வேண்டாம். நம்முடைய சமூகத்தை ஆட்டிப்படைக்கும் சாதி அமைப்பை இறுதியாக தகர்க்கும் வலிமை காதலுக்கு மட்டுமே உண்டு. இட ஒதுக்கீட்டின் மூலம், சாதி சமத்துவத்தை நிச்சயம் எட்டிப் பிடிப்போம். அதற்கும் அடுத்த பரிமாணம் சாதிகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவது. அது சாதிகளிடையிலான கலப்பு மணங்களின் மூலம்தான் சாத்தியம். சாதிகளுக்குள்ளேயே திருமணம் செய்யும் அகமண முறை இருக்கும் வரை சாதியை ஒழிக்க முடியாது என்று சரியாகவே சுட்டிக் காட்டியவர்கள் அம்பேத்கரும் பெரியாரும்.
எனவே காதலைக் கண்டு சாதிய அரசியல்வாதிகள் மிரள்வதில் ஆச்சரியமில்லை. சாதி அடிப்படையில் ஓட்டுகளைத் திரட்டமுடியாத சிக்கலை காதலும் கலப்பு மணமும் ஏற்படுத்திவிடும் என்பதால்தான் இந்த மிரட்சி.
கொட்டத்தை வேண்டுமானால் வீட்டில் வைத்துக் கொள்ளட்டும் என்று ராமதாஸ் சொல்லுகிறார். இது நம் அரசியலுக்கே உரிய இரட்டை வாழ்க்கை முறையின் அடையாளம். வீட்டில் மனைவியை அடிக்கலாம். வெளியே அவளுடன் கண்ணியமாக வலம் வரலாமா ?
நம் வீட்டுப் பேரக் குழந்தைகளை ஆங்கில
மீடிய பள்ளிக்கு அனுப்பலாம். வெளியே மேடைகளில் மட்டும் மற்ற வீட்டுக் குழதைகள் தமிழிலேயே படிக்க வேண்டும் என்று உபதேசிப்பது போன்ற போலித்தனம்தான் நம் அரசியல்வாதிகளுக்குப் பிடித்தமான வாழ்க்கை முறை.
ராமதாசின் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் கடலூரில் இரு கிராமங்களுக்கிடையே இந்த வாரம் மோதல் சூழல் ஏற்பட்டது. காரணம் ஒரு வீட்டுக்குள் நடந்ததுதான். திருமண முதலிரவில் கணவன் தன்னை ஆபாசப் படம் எடுக்க முயன்றதாகச் சொல்லி, மனைவி பிறந்த வீட்டுக்குத் திரும்பியதால், கணவனின் கிராமத்தினருக்கும் மனைவியின் கிராமத்தினருக்கும் மோதல். இந்த மோதலுக்குக் காரணம் காதலா, காமமா ?
உண்மையில் பொது இடங்களில் கொட்டம் அடிப்பது அரசியல் கட்சிகள்தான். ஒவ்வொரு மாநாட்டின்போதும் பேரணியின்போதும், வேன், லாரிகளில் கும்பல் கும்பலாக வந்து சாதாரண பொது மக்களின் அன்றாட சகஜ வாழ்க்கையை நிலைகுலையச் செய்வது அவர்கள்தான்.
காதலர்களால் சமூக அமைதி சீர்குலைவதில்லை. பஸ் நிறுத்தங்களில் ஈவ்.டீசிங் எனப்படும் பெண் சீண்டலில் ஈடுபடுபவர்கள் பொறுக்கிகள்தான். காதலர்கள் அல்ல. அவர்கள் பஸ் நிறுத்தத்துக்கு பத்தடி தள்ளி தனியே தங்கள் தனி உலகின் உரையாடலில் ஆழ்ந்திருப்பார்கள்.
காதல் என்பது உன்னதமான மன நிலை. காமம் என்பது வெறும் உடல்தேவை. அதில் காதல் இல்லை. காதலில் காமம் உண்டு. ஆனால் காதல் என்பது காமத்தை உடல் தாண்டி மனம் சார்ந்ததாக மாற்றும் ரசவாதம். உடல்கள் தளர்ந்தபின்னும் உயிர்த்திருக்கக்கூடியது காதல். மனித மனதைப் பக்குவமாக்கும் உணர்ச்சி காதல்.
முதலில் நமது அரசியல்வாதிகள் காதலிக்கக் கற்றுக் கொள்ள �ள வேண்டும். அப்படிக் குழப்பும் அரசியலும், சினிமாவும் ஊடகங்களும்தான் நம் இளைஞர்களையும் காதல் பற்றிக் குழப்பி வைத்திருக்கின்றன. இந்தக் குழப்பத்திலிருந்து வெளியே வந்து இளைஞர்களும் காதலிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று நம் சமூகத்தின் இளைஞர்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள். 25 வயதுக்குள் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது ஒரு பிரிவு. இதற்குக் காதல் சாத்தியப் படவில்லை. காரணம் காதலுக்குத் தேவை நேரம். பல காதல்கள் நேரம் ஒதுக்கப்படாமையினால் மொட்டிலேயே கருகிவிடுகின்றன.
இன்னொரு பிரிவு மாதம் 3000 ரூபாய் சம்பளத்தை 30 வயதுக்குள்ளேனும் அடைவோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிற பிரிவு. இதற்கும் காதல் சாத்தியப்படவில்லை. காரணம் இன்று காதலுக்குத் தேவை நேரம் மட்டுமல்ல, ஓரளவேனும் பணமும் கூட.
இந்த வினோத சிக்கல்களினால் இரு பிரிவு இளைஞர்களும் காதலை விட காமத்தை எளிதில் அடையக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சில மாதங்கள் நெருங்கிப் பழகி உடல் உறவுக்குப் பின் பிரிந்துவிடுவது காதலை விட எளிதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் வலிகள் ஏராளம். வலி அதிகரிக்க அதிகரிக்க காமம் வலி நிவாரணி போல தோன்றுகிறது. ஆனால் அது மேலும் வலியைத்தான் ஏற்படுத்துகிறது.
இந்த வலிகளையெல்லாம் நேரமின்மையும், வேலைப் பளுவும், பணமும், இதர வாழ்க்கைச் சுமைகளும் மறக்கடிக்கின்றன. இப்படிக் காமத்தைத் தீர்க்க முடியாதவர்கள் மேலும் மன வலிகளுடன் திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் வழியே இவர்கள் எல்லாருக்குமே கிட்டுவது காமரசம்தானே ஒழிய காதல் பாடம் அல்ல.
இதற்கு விதிவிலக்காக மெய்யாகவே காதலிக்கும் காதலர்களுக்கு ஏராளமான எதிரிகள். ஜாதிவித்யாசம், அந்தஸ்து வேறுபாடு, போதிய வருவாய்க்கான வேலை வாய்ப்பு போன்ற எதிர்கால சிக்கல்களை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு காதலர் தினத்தன்றேனும் கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்க விரும்பினால், பால் தாக்கரேவின் தமிழ்க் குளோன்கள் மிரட்டுகிறார்கள். காலந் தோறும் மிரட்டல்களைத் தாண்டி காதல் தழைத்ததன் அடையாளம்தான் காதலர் தினம். காதலர்களுக்கு உதவிய புனிதர் வேலண்டைன் பெயர்தான் சரித்திரத்தில் நிற்கிறது. அவர்களை மிரட்டியவர்கள் பெயர்கள் காணாமல் போய்விட்டது !
இந்த வாரப் பூச்செண்டு:
எல்லா காதலர்களுக்கும்.
இந்த வாரக் குட்டுகள் :
1. கர்நாடகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவதை மத அடிப்படையில் எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சிக்கும் மடாதிபதிகளுக்கும் இ.வா.குட்டு.
2. கூடன்குளத்தில் மேலும் புதிய அணு உலைகள் ஆரம்பிப்பதற்கு ரஷ்ய அதிபர் புதினும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அணு உலை பற்றிய ஆட்சேபங்களைத் தெரிவிக்கும்படி பொது மக்கள் விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பு செய்யும் மத்திய அரசுக்கு இ.வா. குட்டு.
3. நீதிபதிகளை மிரட்டும் தொனியில் அறிக்கை விடுத்திருக்கும் தி.மு.க அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும் அவர் பூனைக்கு மணி கட்டியதைக் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இ.வா.குட்டு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|