|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 5
‘தொட்டால் பூ மலரும்’ என்கிறான் கவிஞன். கவிதைக்கு சரி... இன்றைக்கோ அது ஒரு ‘பேட் டச்’. தொடாமல் இயற்கையாக மலர வேண்டிய பூவைத் தொட்டு மலரவைக்க முயற்சித்தால், அது வாடியும் கருகியும்தான் போகும்.
குழந்தைகளும் அப்படித்தான்! பாலியல் உணர்வுகள் அவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகின்றன. அவை ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற பரிமாணத்தில் வளர்ச்சி பெற வேண்டியவை. ஆனால், அவை வயது வந்தவர்களின் பாலுணர்வுகள் போன்றவை அல்ல. குழந்தைகளின் பாலுணர்வை பெரியவர்களின் பாலுணர்வுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.
ஐந்து வயது ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் காட்டி, ‘அறியாத வயசு... புரியாத மனசு... ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்’ என்று வர்ணித்தால், அது தவறானது! அது காதல் அல்ல, நட்பு! வயது வந்தவர்களின் பாலுணர்வைக் குழந்தைகள் மீது ஏற்றிச் சொல்வதாகும்.
குழந்தைகளுக்கு நல்ல ஸ்பரிசம், மோசமான ஸ்பரிசம், பாலியல் நோக்கத்துடனான ஸ்பரிசம் போன்றவற்றை எப்போது, எப்படி சொல்லித் தருவது என்பது எல்லா பெற்றோருக்கும் ஒரு குழப்பமான விஷயமாகும். இதைக் கற்றுக்கொள்வது சுலபம்தான். அதற்கு, நாம் ஏற்கெனவே நம் மனதில் நிரம்பி யிருக்கும் மரபுச் சுமைகள், கற்பிதங்கள், தவறான சில நம்பிக்கைகள் எல்லாவற்றையும் முதலில் காலி செய்ய வேண்டும்.
செக்ஸைப் பற்றிக் குழந்தைக்கு எப்போது சொல்லலாம் என்ற கேள்வி எழுந்ததுமே நம் மனதில் ஒரு நெருடலும், பயமும் தயக்கமும் தோன்றுவதற்கு என்ன காரணம்? செக்ஸ் என்பதற்கு நம் மனதில் வைத்திருக்கும் தவறான அர்த்தம்தான்! செக்ஸ் என்றதும், ஆண் பெண் உடல் உறவுகொள்ளும் பிம்பம்தான் நம் மனதில் தோன்றுகிறது.
ஆனால், செக்ஸ் என்பது பால் அடையாளம். தான் யார் என்பதை ஒவ்வொரு மனிதரும் உணரச் செய்யும் அம்சங்களில் ஒன்று.
நான் ஆணாகப் பிறந்திருக்கிறேன்; அல்லது, பெண்ணாகப் பிறந்திருக்கிறேன்; என் உடல் ஆண் உடல்; என் உடல் பெண் உடல்; என் உடல் இன்ன உடலாக இருப்பதால் அது இப்படிப்பட்ட அமைப்பில் இருக்கிறது. இன்ன அமைப்பில் இருப்பதால், அதை இப்படி அழைக்கிறோம். இன்ன உடலாக இருப்பதால், அதன் உணர்ச்சிகள், தேவைகள், பயன்கள் இத்தகையவை..! இப்படி ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே உணரும் பயணத்தின்போது, ஒரு கட்டத்தில் வந்து போகும் ஓர் அம்சம் மட்டுமே உடல் உறவு.
உடல் உறவு என்பதை நம் இளைஞர்கள் புரிந்துகொள்ள, முதலில் அவர்கள் உடல் என்பது என்ன என்று சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்; உறவு என்பது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். இரண்டையும் குழந்தைப் பருவத்திலிருந்தே தனித்தனியே புரிந்து கொள்ளத் தொடங்கினால்தான், வளர்ந்த பின் உடல் உறவை வாழ்க்கையின் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஏற்று அதன் மகிழ்ச்சிகளைக் குற்ற உணர்ச்சி இல்லாமல் அனுபவிக்கவும், அதன் விளைவு களுக்குத் தெளிவுடன் பொறுப்பேற்கவும் அவர்களால் முடியும்.
ஒரு குழந்தைக்கு அதன் உடலைப் பற்றி எப்படி சொல்லிக் கொடுப்பது? எப்போது சொல்லிக் கொடுப்பது? அதைத் தீர்மானிக்க முதலில் எந்தெந்த வயதில் குழந்தைக்கு என்னென்ன தெரியும்/ புரியும் என்று பார்ப்போம்.
மூன்று வயதுக்குள் குழந்தையின் வளர்ச்சி என்னவெல்லாம் ஆகிறது தெரியுமா? பிறந்தபோது இருந்த உயரத்தைப் போல இரு மடங்கு உயரமாகிவிடும். எடை மூன்று மடங்காகியிருக்கும். கெட்டியான உணவுகளைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கி யிருக்கும். தவழ்தல் முடிந்து நடக்க ஆரம்பித்திருக்கும். ஓடும்; குதிக்கும்; படி ஏறும்; தானே உடை மாட்டவும், கழற்றவும் ஆரம்பிக்கும். கழிவறையைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டிருக்கும்; ங்கா, ம்மா போன்ற ஒற்றைச் சொற்களைத் தவிர்த்து, முழு வாக்கியமாகவே பேசத் தொடங்கியிருக்கும். தானாகவே எதையாவது கற்பனை செய்யும் திறமைகூட மூன்று வயதுக் குழந்தைக்கு வந்து விடும்.
கையைக் காலாக்கி நீங்கள் நடந்தால் ‘ஆனை’ என்று அது சொல்வது கூட, அதன் கற்பனைத் திறனில் ஏற்படுகிற முன்னேற்றம் தான். ஐந்து புலன்களையும் பயன்படுத்தி விஷயங்களைப் புரிந்து கொள்ளும்.
பெண் குழந்தையானால், அம்மாவைப் போலவே பாவனைகள் செய்யும். ஆண் குழந்தை அப்பாவைக் காப்பி அடிக்கும். ஆண் பெண் வித்தியாசங்கள் வீட்டில் எப்படிப் பின்பற்றப் படுகிறதோ, அதைத் தானும் பின்பற்றக் கற்றுக்கொள்ளும்.
கவிஞர் வெண்ணிலா சொன்னது போல, காலையில் வாசலில் விழும் பேப்பரை அப்பாவிடமும், பால் கவரை அம்மாவிடமும் கொடுக்க அது (காப்பியடித்துக்) கற்றுக்கொண்டு இருக்கும். தன்னிடம் பழகும் பெரியவர்களில் தனக்கு நம்பிக்கையானவர்கள் எல்லாரையும் மூன்று வயதுக் குழந்தை காப்பியடிக்கும். தன் தேவைகளைக் கவனிக்கும் பெரியவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கும்.
மூன்று வயதுக் குழந்தை உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் தொடங்கி விடும். அன்பைக் காட்ட முத்தமிடும். எரிச்சலைக் காட்ட, கை வீசி அடிக்கும்.
பாலியல் வளர்ச்சியும் மூன்று வயதுக் குழந்தைக்கு உண்டு. அதன் அடையாளங்கள் என்ன? தன் உடலைப் பற்றியும் மற்றவர் உடல்களைப் பற்றியும் அறியும் ஆவல் அதற்கு இப்போது ஏற்படுகிறது. அது மட்டுமல்ல... தன் பிறப்புறுப்புகளைத் தொட்டால் சுகமாக இருப்பதை உணரத் தொடங்கும். அடிக்கடி தொட்டுப் பார்க்கும். அப்போது ஆண் குழந்தைக்கு குறி விறைப்பும், பெண் குழந்தைக்கு யோனிக் குழாய் ஈரமும் ஏற்படும் அனுபவங்களும் நிகழும்.
இதில் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடைய ஏதுமில்லை. குழந்தை தாயிடம் பால் குடிக்கும்போது அதற்கு ஏற்படும் சுக அனுபவங்களில் பாலியல் அனுபவமும் கலந்தே இருக்கிறது என்பது உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டின் ஆய்வு முடிவு. இரு உடல்களின் அணைப்பின் கதகதப்பு குழந்தைக்கு சுக அனுபவம் மட்டுமல்ல, பாதுகாப்பு உணர்ச்சி தருவதாகவும் அமைகிறது.
மூன்று வயதிலிருந்தே குழந்தைகளைப் பெருமளவு சுயேச்சையாக தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளக் கூடியவர்களாக வளர்க்க வேண்டும். தனக்கென்று தனி டம்ளர், தனி தட்டு போல தனி பாய், தனி மெத்தை, தனி கட்டில், முடியுமானால் தனி அறை என்ற சில்லறைப் பெருமைகளைக் கொண்டு அவர்களை மடைமாற்றும் முயற்சிகளைப் பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.
மூன்று வயதுக் குழந்தைகளுக்கு, தங்கள் உடல் உறுப்புகளை அடையாளம் காட்டிப் பெயர் சொல்லும் ஆற்றல் வந்துவிட்டு இருக்கும். காது எங்கே, மூக்கு எங்கே என்றெல்லாம் கேட்டால், தொட்டுக் காட்டி பதில் சொல்லும். ஆனால், பிறப்புறுப்புகளை மட்டும் பெயர் சொல்லவோ அடையாளம் காட்டவோ நம்மில் பலர் தயங்குகிறோம்.
சொல்லித் தராதது மட்டுமல்ல; இடக்கரடக்கலாக வேறு பெயர்கள் வைத்து சொல்லித் தருகிறோம். சுசூ, மூச்சா என்று விதவிதமான வேற்று மொழிப் பெயர்கள் போல் ஒலிக்கும் பெயர்களையெல்லாம் சூட்டுகிறோம். இதன் விளைவாக, நம் தாய் மொழியில் இந்த உறுப்பு களுக்கு இருக்கும் பெயர்கள் ‘கெட்ட வார்த்தை’களாக மாற்றப்பட்டு விட்டன.
செக்ஸ் பற்றிய குற்ற உணர்ச்சி, அருவருப்பு உணர்ச்சி, கவர்ச்சி எல்லாமே இப்போதுதான் விதைக்கப்படுகின்றன. ஜட்டி போடாமல் இருக்கும் குழந்தையிடம் நாம் சொல்வது என்ன... ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்.’
நம் உடலைப் பற்றி வெட்கப்படவோ, அவமானப்படவோ எதுவும் இல்லை. நம் செய்கைகளில் தான் அவமானமோ பெருமையோ இருக்க முடியும். செயலில் இருக்க வேண்டிய அவமான உணர்ச்சியை உடல் உறுப்பின் மீதே ஏற்றிவைத்து விட்டோம். அதனால்தான் அப்பா லஞ்சம் வாங்குவது அம்மாவுக்கு அவமானமாக இல்லை; குழந்தை ஜட்டி போடாதது அவமானமாக இருக்கிறது!
அப்படியானால் மூன்று வயதுக் குழந்தையின் இனம் தெரியாத பாலுணர்வை அதற்கு எப்படிக் கையாளக் கற்றுத் தருவது ? ‘அம்மா, செக்ஸ்னா என்னம்மா?’ என்று உங்கள் குழந்தை கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?
1. எந்த வயதில் ஏற்படுவது காதல்?
2. எத்தனை வயது வரை நீங்கள் தாய்ப் பால் குடித்தீர்கள் என்று தெரியுமா?
3. எந்த வயது வரை அம்மாவையோ அப்பாவையோ கட்டிக்கொண்டுதான் படுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தீர்கள்?
4. ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ போன்ற வாசகங்களை முதன்முதலில் எப்போது கேட்டீர்கள்/சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா?
5. பிறப்பு உறுப்புகளின் சரியான பெயர்களை நீங்கள் முதலில் கேள்விப்பட்டது எப்போது? எந்த வயதில்? யாரிடமிருந்து? உங்களால் அந்தச் சொற் களைக் கூச்சமின்றி இப்போது சொல்ல முடியுமா?
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல. உங்களுக்கானவை... உங்களுடையவை!
நன்றி: ஆனந்த விகடன்
|