KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. வேண்டாம் சாதனை வெறி!

2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’!

3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..!

4. வேண்டும் இன்னொரு அண்ணா!

5. தமிழுக்கு வெட்டு!

6. எரிகிறது பஞ்சாப்!

7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்!

8. 'கோரம்’ இல்லாத கோரம்!

9. ஏன் தமிழா, ஏன்?

10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?!

11. அறிந்தும் அறியாமலும் - 1

12. அறிந்தும் அறியாமலும் - 2

13. அறிந்தும் அறியாமலும் - 3

14. அறிந்தும் அறியாமலும் - 4

15. அறிந்தும் அறியாமலும் - 5

16. அறிந்தும் அறியாமலும் - 6

17. அறிந்தும் அறியாமலும் - 7

18. அறிந்தும் அறியாமலும் - 8

19. அறிந்தும் அறியாமலும் - 9

20. அறிந்தும் அறியாமலும் - 10

21. அறிந்தும் அறியாமலும் - 11

22. அறிந்தும் அறியாமலும் - 12

***********

ஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி

ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்!

அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் அளவற்ற அன்புக்குரிய மகன்களும், பேரன்களும் இன்று உங்கள் குடும்ப விஷயங்களைப் பொது விவாதத்துக்குரிய விஷயமாக மாற்றிவிட்டதால் உங்களுக்கு உண்டான தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, எனக்கு ஒரே நேரத்தில் இரண்டு உணர்ச்சிகள் தோன்றுகின்றன.

ஒன்று, பரிதாப உணர்ச்சி!

இரண்டாம் குழந்தைப் பருவம் என்றுசொல்லக் கூடிய 84 வயது முதிர்ந்த பிராயத்தில் இருக்கிறீர்கள். சராசரி மனிதர்கள் ஓய்வெடுக்கும் வயதில், அசாதாரணமான மனிதரான நீங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டு இருப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கலாம். ஆனால், உங்கள் வயதில் இருக்கும் யாருக்குமே தேவையானது, உற்றாரும் உறவினரும் ஒரு குழந்தையை எப்படிக் கொஞ்சி சீராட்டுவார்களோ... அதே போன்ற ஒரு சீராட்டுதல்தான்.

உங்கள் உற்றாரும் உறவினரும் உங்களைச் சீராட்டுகிறார்களோ இல்லையோ... சிலர் உங்கள் மனதையும் வயதையும் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுதான் என் பரிதாப உணர்ச்சியைத் தூண்டுகிறது. ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்று கணியன் பூங்குன்றன் சொன்னது தானே, எந்த முதியவருக்கும் சுற்றியிருப்போரிடம் பிரார்த்தனையாக இருக்க முடியும்!

சினிமாக்காரர்களோ, கவிஞர்களோ... புகழுரைகளைக் கொட்டிக் குவிக்கும் விழாக்களுக்குப் போய் நீங்கள் இளைப்பாறுவதுகூட, குடும்பத்தில் சிலரால் ஏற்படும் மன உளைச்சல்களுக்குத் தற்காலிக மருந்து தேடத்தானோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. மதுரையில் உங்கள் குடும்பத்தின் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் வன்முறையில் மூன்று அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட சமயத்தில், சென்னை நகரத் தெருவெல்லாம் வாழை மரம் கட்டி வண்ண ஜாலங்கள் செய்து கொண்டாடப்பட்ட சட்டமன்றப் பொன்விழாவில் நீங்கள் கலந்துகொண்டீர்கள். ஒன்றல்ல, வரிசையாக மூன்று பாராட்டு நிகழ்ச்சிகள் உங்கள் மன வலியைக் குறைக்க உதவி யிருக்குமோ என்னவோ!

உங்கள் இன்றைய நிலையைக் கண்டு எனக்குக் கூடவே எழுகிற இன்னொரு உணர்ச்சி, கோபம்! மிகுந்த அறிவுக் கூர்மையும் கடுமையான உழைப்பும் உடைய உங்களுக்கு இந்த நிலை ஏற்படு வதற்குக் காரணம் வேறு யாருமே அல்ல... நீங்களே தான் என்பதால் ஏற்படும் உணர்ச்சி அது.

மதுரையில் உங்கள் பேரனுக்குச் சொந்தமான பத்திரிகை, டி.வி. அலுவலகத்தை எரிக்கத் தூண்டி யவர் என்று அவர்களால் குற்றம் சாட்டப்படும் உங்கள் மகன் அழகிரி சொல்கிறார் அவருக்கும் தி.மு.க வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று! அவர் அடிப்படை உறுப்பினரா இல்லையா என்பதேகூட மர்மமாக இருக்கிறது.

உங்களால் வானுயரத்துக்குத் தூக்கிவைக்கப்பட்ட பேரன் தயாநிதி மாறன் சொல்கிறார் அவருக்கும் தினகரன் இதழ், சன் டி.வி. எதற்கும் சம்பந்தம் இல்லை என்று! தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்துக்காக அவர்கள் மோதநேர்வதும், அதனால் அப்பாவி உயிர்கள் பலியாவதும் எதனால்?

திராவிட இயக்க வரலாற்றிலேயே, எந்தத் தலைவருக்குப் பின் யார் என்பது இப்படிப்பட்ட வன்முறைப் போராட்டமாக இதற்கு முன்பு வெடித்தது இல்லை. ‘பெரியாருக்குப் பின் யார்? நானா, மணியம்மையா?’ என்ற கேள்வியை அண்ணா எழுப்பவில்லை. தனிக்கட்சி கண்டார். அண்ணாவுக்குப் பின் நீங்களா, நாவலர் நெடுஞ்செழியனா என்று சர்ச்சைகள் ஏற்பட்டாலும், அது வன் முறையாக மாறவில்லை.

பெரியார் தனக்குப் பின் தன் தமையன் ஈ.வெ.கிருஷ்ணசாமி, அல்லது அவர் மகன் ஈ.வி.கே.சம்பத் என்றெல்லாம் குடும்பத்திலிருந்து யாரையும் அடையாளம் காட்டவில்லை. அண்ணா தனக்குப் பின் ராணி அம்மையாரையோ, பரிமளத்தையோ அரசியல் வாரிசாக வளர்க்கவில்லை.

குடும்பத்திலிருந்து ஒருவரைக் கொண்டு வருவதை நீங்கள்தான் எழுபதுகளின் தொடக்கத்தில் தொடங்கி வைத்தீர்கள். அன்று தொடங்கி, இன்று வரை உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை அதிகார மையமாக ஆக்கியதும் நீங்கள்தான். அதன் விளைவுதான் இன்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள்!

கட்சி உறுப்பினராகக்கூட இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத அழகிரி, மதுரையில் அதிகார சாம்ராஜ்யம் நடத்துகிறார் என்று பத்திரிகைகள் பல செய்திகள் வெளியிட்டு வந்திருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் உங்கள் கட்சி அமைச்சர்கள் மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளையெல்லாம் விலக்கியபோதும், அப்போது உங்கள் கட்சிப் பிரமுகர் தா.கிருட்டிணன் கொலையில் அழகிரி மீது போடப்பட்ட வழக்கு மட்டும் உங்களால் இன்னும் விலக்க முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது.

பத்திரிகை, டி.வி என்று தன் தொழிலைப் பார்த்துக்கொண்டு இருந்த தயாநிதியை நீங்கள் தானே திடீரென்று எம்.பி. ஆக்கி, அடுத்த நாளே மத்திய அமைச்சரும் ஆக்கினீர்கள்? கழகத்தில் வேறு தகுதி உள்ள இளைஞர்கள் இல்லையா என்று கேட்டபோது, ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும். குழந்தையாக இருந்தபோதே தயாநிதியின் திறமையைக் கண்டிருக்கிறேன்’ என்றீர்கள். ‘கட்சி விரோத’ வேலைகளில் ஈடுபடக்கூடிய குழந்தை அது என்பது முளையிலேயே உங்களுக்குத் தெரியவில்லையா?

அழகிரியாகட்டும், தயாநிதியாகட்டும்... உங்கள் கண்ணசைப்பு இல்லாமல் கட்சியிலும் ஆட்சியி லும் எந்தச் செல்வாக்கையும் யாரும் பெற்றிருக்க முடியாது என்பது தமிழ்நாட்டின் சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். அப்படி வளர்ந்த அவர்களுடைய மோதல் ரத்தக்களறியாகும்போது வேதனைக்குள்ளாவது நீங்கள் மட்டும் அல்ல; சம்பந்தமே இல்லாத நாங்களும்தான்!

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வீடு, நிலம், கார், நகை இவற்றுக்காகச் சண்டை போட்டுக்கொண்டால், அது உங்கள் தனிப்பிரச்னை. ஆனால், அவர்கள் இடையே நடக்கும் சண்டை எதற்காக?

‘கருத்துக் கணிப்பினால்’ என்று பதில் சொல்லி, அசல் பிரச்னையை மூடி மறைத்து விட முடியாது. ‘கருத்துக் கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று நீங்கள் அறிக்கைகள் விடுவதே வேடிக்கை தான். தேர்தலில் தி.மு.க தான் அமோக வெற்றி பெறும் என்று கணிப்புகள் வெளியானபோதெல்லாம், அதைப் பெரிய எழுத்தில் போட்டு ‘முரசொலி’ அங்கீகரித்திருத்திருக்கிறது.

உங்கள் அரசியல் வாரிசு யார் என்பது பற்றித்தான் கருத்துக் கணிப்பு. உங்கள் அரசியல் வாரிசு யார் என்பதில்தான் இப்போது மோதல்.

எந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் தங்கள் கைக்கு வரவேண்டுமென்று உங்கள் குடும்ப வாரிசுகள் துடிக்கிறார்களோ, அந்தத் தி.மு.க. யாருடைய குடும்பச் சொத்தும் அல்ல; அது தமிழக மக்களின் பொதுச் சொத்து.

தி.மு.க வும் திராவிடர் இயக்கமும் கடுமையாக எதிர்த்த, ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தின் மறுபதிப்பு தான் வாரிசு அரசியல்! அப்பாவின் தொழிலை மகன் பள்ளிக்கூடத்தில் செய்து பழகட்டும் என்றார் ராஜாஜி. கட்சியில் அதைச் செய்து பழகட்டும் என்று ஆக்கியது நீங்கள்!

ஐம்பதாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரலாற்றுச் சாதனை படைத்த உங்களுடைய பெரும் பிழை வாரிசு அரசியல். அதன் விளைவே, இப்போது உங்களுக்கும் பொதுமக்களாகிய எங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் வேதனைகள்.

இந்தப் பிழையை நீங்களே சரிசெய்ய முடியும். தன் தவற்றைத் தானே திருத்திய சாதனையும் வரலாற்றில் உங்களுடையதாகவே இருக்கட்டும்.

மூன்றாண்டு காலமாக நீங்கள் பாசத்தைப் பொழிந்து அரசியலில் வளர்த்துவிட்ட தயாநிதியை ஒரே நாளில் இப்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது போல, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் பதவிகளிலிருந்தும் கட்சிப் பணிகளிலிருந்தும் விலகச் செய்யுங்கள். உங்கள் காலத்துக்குப் பிறகு தங்கள் சொந்த முயற்சியில் அவர்கள் அரசியலிலோ பொது வாழ்விலோ ஈடுபட்டுக்கொள்ளட்டும்.

நீங்கள் இதைச் செய்தால், உங்களைப் பின்பற்றித் தங்கள் குடும்பத்தினரையும் தி.மு.கழகத்தில் செல்வாக்கான இடங்களில் அமரவைத்திருக்கும் இதர அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் இதே போல அவர்களையும் விலகச் செய்யவேண்டி வரும். திராவிட முன்னேற்றக் கழகம் மறுபடியும் அண்ணா காலத்தில் இருந்தது போல, கொள்கைப் பிடிப்புள்ள மனிதர்கள் குடும்பத்துக்கப்பால் இணைந்து இயங்கிய லட்சிய வேட்கை நிரம்பிய கட்சியாக மீண்டும் மலரும்.

ஜனநாயகம் தழைக்க தி.மு.க. காப்பாற்றப்பட வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி... அது தன் பணியை சரியாகச் செய்ய உண்மையான ஜன நாயக அமைப்பாகத் திகழ வேண்டும். உடையாமல் வலிமையுடன் விளங்க வேண்டும்.

குடும்பத்தைக் காப்பாற்ற அவர்களுக்குப் போதுமான ‘நிதி’ இருக்கிறது. நீங்கள், தி.மு.க வையும் தமிழகத்தையும் காப்பாற்றக் ‘கருணை’ காட்டுங்கள். அதுவே நீங்கள் எங்களுக்குத் தரும் பிறந்த நாள் பரிசாக அமையும்.

உங்கள் வேதனையில் பங்கேற்கும்,
ஒரு முன்னாள் சகா.

நன்றி: ஆனந்த விகடன்