|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 8
ஐந்து வயதுக் குழந்தை, “எங்கிருந்து குழந்தை வந்தது? அது எப்படி அம்மா தொப்பைக்குள் போயிற்று? எப்படி வெளியில் வரும்?” என்ற மூன்று கேள்விகளையும் கேட்க ஆரம்பிக்கும்போது, அதற்குச் சரியாக பதில் சொல்ல வேண்டுமானால், பதில் சொல்கிறவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசங்கள் பற்றிச் சரியாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். எல்லாருமே சிறு வயதிலேயே இதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவது நல்லது.
ஆனால், என்ன வித்தியாசம் என்பது தெரியாததாலும், அரைகுறையாகவும் தப்புத் தப்பாகவும் தெரிந்துகொள்வதாலும் குழப்பமடைகிறார்கள். பெரியவர்களான பின்னரும் இந்தக் குழப்பம் நீடிக்கிறது. அடுத்தபடியாக தங்கள் குழந்தைகளுக்கும் பரம்பரைச் சொத்தாக அந்தக் குழப்பத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறோம். இதன் விளைவாக, விடலைப்பருவத்தில்கூட தன் உடலைப் பற்றிய புரிதல் இல்லாமல், நம் அடுத்த தலைமுறை மனக் குழப்பத்தில் சிக்கிக்கொள்கிறது.
அண்மையில், மகளிர் கல்லூரி ஒன்றில் வாழ்க்கைக் கல்வி வகுப்பு நடத்திய என் சிநேகிதி, ஒரு சாதாரண அன்றாட விஷயத்தைப் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் ஏராளமான 18 வயதுப் பெண்கள் விழித்தார்கள். கேள்வி என்ன தெரியுமா? மலம் கழித்த பின், ஆசனவாய்ப் பகுதியைக் கழுவும்போது பெண்கள் எப்படிக் கழுவிக்கொள்ள வேண்டும்? முன்புறத்திலிருந்து பின்புறம் நோக்கிக் கழுவ வேண்டுமா?
‘எப்படிக் கழுவினால் என்ன?’ என்பதுதான் பரவலான பதிலாக இருந்தது. அப்படியல்ல..! உடலின் உறுப்புகள் அமைந்துள்ள விதத்துக்கும் கழுவும் முறைக்கும் தொடர்பு இருக்கிறது.
பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக சிறுநீர் தடத்தில் தொற்று ஏற்படும் பிரச்னைகள் அதிகம். இதற்கான காரணங்களில் ஒன்று, மலம் கழித்தபின் கழுவும் முறை.
பெண் உடலில் முதலில் இருப்பது சிறுநீர் வெளியேறுவதற்கான துளை. அடுத்து அமைந்திருப்பது, உடலுக்குள் இருக்கும் கருப்பையை நோக்கிச் செல்லும் யோனிக்குழாயின் நுழை வாயில். மூன்றாவதாக பின்புறத்தில் அமைந்திருப்பதுதான் ஆசனவாய்.
கழுவிக்கொள்ளும் போது பின்பக்கத்திலிருந்து முன்பக்கம் நோக்கிக் கையை வீசித் துடைத்தால், அசுத்த நீர், யோனிக் குழாய்க்குள்ளும் சிறுநீர்ப் பாதைக்குள்ளும் சென்று தொற்று ஏற்படுத்தும் ஆபத்து உண்டாகும். எனவே, கை முன்புறம் வராமல், பின்புறம் நோக்கியே செல்லும்விதமாகக் கழுவ வேண்டும்.
இந்தப் பிரச்னை ஆண் உடலுக்கு இல்லை. சிறுநீர், விந்து வெளியேறும் துளைகள் திறந்த அமைப்பில் இல்லாமல் குழாய் வடிவத்தில் இருப்பதால், தொற்று ஏற்படும் வாய்ப்பு இல்லை.
ஐந்து வயதுப் பெண் குழந்தைக்கு டாய்லெட் ஹேபிட்டுகளை ஏற்படுத்தும்போதே இந்த அடிப்படை ஆரோக்கிய வழிமுறையைச் சொல்லித் தர வேண்டும்.
தொடர்ந்து வேறு கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள்.
‘அப்பா வயித்துல ஏன் குழந்தை இல்லே?’
‘அப்பாவும் உன் தம்பிப் பாப்பா மாதிரியே ஆம்பளை இல்லியா? அதனால, குழந்தை வெளில வர்றதுக்கு ஹோல் கிடையாது. அதனாலதான் அப்பா வயித்துல குழந்தை இருக்காது’ என்று பதில் சொல்லலாம்.
ஆறு வயது தொடங்கி எட்டு வயதாவதற்குள் குழந்தைகளுக்குப் பாலியலின் அடிப்படைகள் கொஞ்சம் புரியத் தொடங்கிவிடும். இப்போது இவர் களைக் குழந்தைகள் என்று வர்ணிப்பதே தவறான சொற்பிரயோகம்தான். சிறுவன், சிறுமி என்றே அழைக்கப்படவேண்டிய இவர்களுக்கு இப்போது ஆண்-பெண்வேறுபாடுகள் நன்றாகவே தெரியும்.
இருவருமே இப்போது தங்கள் பாலினரோடே அதிகம் பழகுவார்கள். எதிர் பாலினரைத் தவிர்ப்பார்கள். ஆம்பளைத்தனம் இல்லாத ஆணையும் பொம்பளைத்தனம் இல்லாத பெண்ணையும் கேலி செய்வதுகூட நடக்கும். எது ஆம்பளைத் தனம், எது பொம்பளைத் தனம் என்பதற்கான வரையறைகளை இவர்கள் உருவாக்கிக்கொண்டது எப்படி? சுற்றிலும் இருக்கும் பெரியவர்களான நம்மிடமிருந்துதான்!
செக்ஸ் பற்றி தங்களுக்கு நெருக்கமான பெரியவர்களிடம் சின்னச் சின்னதாகக் கேள்விகள் கேட்பார்கள் சிறுவர்கள். அவற்றைப் பெரியவர்களான நாம் இரண்டு விதமாக எதிர்கொள்கிறோம். கேள்வியே காதில் விழாதது போல நழுவிவிடுவோம். அல்லது, இந்த மாதிரி கெட்ட கெட்ட கேள்வியெல்லாம் கேட்காதே என்று கடிந்துகொள்வோம்.
தங்கள் கேள்விகள் எந்தெந்தப் பெரியவர்களுக்கெல்லாம் சங்கடமாக இருக்கிறது என்பது சிறுவர்களுக்குப் புரிந்துவிடும். அதன்பின், அந்தப் பெரிவர்களிடம் அந்தக் கேள்வி களை மறுபடி கேட்கவே மாட்டார் கள். அதிலிருந்துதான் ஆபத்து ஆரம்பிக்கும்!
ஏனென்றால், எட்டு வயதில் ஒரு சிறுவனுக்கும் சரி, சிறுமிக்கும் சரி... ஆணும் பெண்ணும் சேர்ந்து ‘ஏதோ’ ஒரு செயலால்தான் குழந்தை பிறக்கிறது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த ‘ஏதோ’ என்ன என்பது பற்றித்தான் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அந்த ‘ஏதோ’வை தூண்டிவிடக்கூடிய ஹார்மோன்கள், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அந்தச் சிறுவர்களின் உடலில் வேகமாக வேலை செய்யத் தொடங்கிவிடும்.
ஆணும் பெண்ணும் செய்யும் அந்த ‘ஏதோ’ என்ன என்பதைப் பற்றிய மனக் குறுகுறுப்புக்குப் பதில்களை வீட்டுக்கு வெளியில் தேடத்தொடங்குவது இந்த வயதில்தான். பள்ளிக்கூட வகுப்புத் தோழர்கள் முதல் மீடியா வரை ஏராளமான செக்ஸ் டீச்சர்கள்(?) பெற்றோரின் உதவி இல்லாமலே அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறார்கள்.
எட்டாம் வகுப்பு சிறுவன் ஒருவன் அண்மையில், வாழ்க்கைக் கல்விப் பயிலரங்கம் ஒன்றில் என்னிடம் சொன்னான்... ‘‘சார், இவனுக்கு மூணு விரைக்கொட்டை இருக்கு சார்!’’
சுட்டிக்காட்டப்பட்ட சிறுவன் வெட்கத்துடன் “ஆம்” என்று தலையாட்டினான். இன்னொருவன் கேட்டான்... ‘‘எங்களுக்கும் அப்படி முளைக்குமா சார்?’’
1. பெண் குழந்தைக்கு ஆசனவாயைக் கழுவிவிடும் முறை பற்றி உங்களுக்கு எப்போது முதன்முதல் தெரியவந்தது?
2. குழந்தை வெளிவரும் பாதையும் சிறுநீர்ப் பாதையும் வெவ்வேறானவை என்பதை எந்த வயதில் தெரிந்துகொண்டீர்கள்?
3. ‘அப்பா வயித்துல ஏன் குழந்தை இல்லே?’ என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருக்கிறீர்கள்?
4. ஆணும் பெண்ணும் சேர்ந்து ‘ஏதோ’ செய்வதால்தான் குழந்தை பிறக்கிறது என்பது முதலில் எப்போது உங்களுக்குத் தெரியவந்தது?
5. அந்த ‘ஏதோ’ என்பது என்ன என்று தெளிவாகத் தெரிந்துகொண்டது எப்போது?
நன்றி: ஆனந்த விகடன்
|