Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. வேண்டாம் சாதனை வெறி!

2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’!

3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..!

4. வேண்டும் இன்னொரு அண்ணா!

5. தமிழுக்கு வெட்டு!

6. எரிகிறது பஞ்சாப்!

7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்!

8. 'கோரம்’ இல்லாத கோரம்!

9. ஏன் தமிழா, ஏன்?

10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?!

11. அறிந்தும் அறியாமலும் - 1

12. அறிந்தும் அறியாமலும் - 2

13. அறிந்தும் அறியாமலும் - 3

14. அறிந்தும் அறியாமலும் - 4

15. அறிந்தும் அறியாமலும் - 5

16. அறிந்தும் அறியாமலும் - 6

17. அறிந்தும் அறியாமலும் - 7

18. அறிந்தும் அறியாமலும் - 8

19. அறிந்தும் அறியாமலும் - 9

20. அறிந்தும் அறியாமலும் - 10

21. அறிந்தும் அறியாமலும் - 11

22. அறிந்தும் அறியாமலும் - 12

***********

ஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி

ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: [email protected]
hotmail.com
உள்ளே வெளியே: கட்டுரைத் தொடர்
பாஸ்கர் சக்தி

ஓணான்களும் ராம பக்தர்களும்

படிப்பு, விளையாட்டு தவிர சிறு வயதில் வேட்டையும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது. ‘வேட்டை” என்பது சற்றே பொருந்தாத வார்த்தைதான். ஏனெனில் ‘வேட்டை' எனும் சொல் பெரியவர்களுக்கானது. அவர்கள் ‘ஏர்கன்' என்கிற துப்பாக்கியைக் கொண்டு காட்டுப் புறா, சிட்டுக் குருவி போன்றவற்றை சுட்டு வேட்டையாடுவார்கள். ஊரையொட்டிய மலையடிவாரத்தில் காட்டுப் பன்றிகள் பயிர்களை அழிக்க களமிறங்கும் காலங்களில், ‘விறைப்பான இளந்தாரிகளும், அனுபவஸ்த வயோதிகர்களும்' கூட்டுச் சேர்ந்து பன்றி வேட்டைக்குப் போவார்கள். இரை வீழ்த்தப்பட்டதும் கறியைப் பகிர்ந்து ஊரின் பல வீடுகளில் ஏக காலத்தில் பன்றி தின்று பசியாறுவார்கள். கொன்ற பாவம் அன்றே போகும்.

இது தவிர ஒரு கோஷ்டி அவ்வப்போது பவுர்ணமி இரவுகளில் முயல் வேட்டைக்கு என்று வேல் கம்புகளும், வேட்டை நாய்களுமாகச் செல்வார்கள். வேட்டைக்குப் போவதென்பது வீரத்தின் சின்னமாகத் தெரிந்தது. ஒன்றை உருவாக்குகையில் ஏற்படுவது நிறைவு எனில், ஒன்றை அழிப்பதில் விளைவது ஆணவம். என்னால் இதுவும் முடியுமென்கிற திமிர்.

வேட்டை முடித்து முயல்களுடனோ, ஏதேனும் ஒரு இறைச்சியுடனோ வீட்டுக்கு வந்து... “இதை குழம்பு வச்சுரு, கொஞ்சத்தை வறுத்துட்டு, மீதியை உப்புக் கண்டம் போட்டு வை'' என்று சொல்வார்கள். குழம்பும், வறுவலும் அன்றைய தேவைக்கு. உப்புக் கண்டம் நெடுங்காலத் தேவைக்கு. இறைச்சியில் உப்புத் தடவி சணல் கயிற்றில் கோர்த்து காய விட்டு விடுவார்கள். (உப்புக் கண்டம் போடுவது என்பது இறைச்சியைப் பதப்படுத்தும் கிராமத்து தொழில்நுட்பம்) அப்படி இறைச்சியைக் கொண்டு வந்து பெருமிதத்துடன் தருகின்றபோது மின்னுகிற கண்களில் கற்கால மனிதன் தென்பட்டான்.

இவ்வாறான பெரியவர்களின் வேட்டையில் நேரடியான பலன் உண்டு. அது, இணைக்கு உணவு கொணர்ந்து தந்த ஆதி மனிதனின் எஞ்சி நின்ற பெருமிதம்... உடனடிப் பலனை வயிறு அனுபவிக்க... ‘கொன்னாப் பாவம் தின்னாப் போச்சு' எனும் பழமொழியின் வாயிலாக குற்ற உணர்வைப் போக்கிக் கொள்வார்கள்.

ஆனால்... சிறு வயதில் எங்களின் பொழுதுபோக்கான வேட்டை? ... விடுமுறை நாட்களில் பொழுது போக்கவென பயல்கள் ஒன்று சேருவோம். விளையாட்டு, நீச்சல் போன்ற பலவற்றின் நடுவில்... வேட்டையும் ஒன்று. ‘ஒணான் வேட்டை.’

வேட்டைக்கென ஒன்று சேர்ந்ததும் இதற்கான திட்டங்கள் துவங்கும். ஆயுதத்தை முதலில் தேர்ந்தெடுப்போம். வேட்டைக்கான ஆயுதங்களை இரைகளே தீர்மானிக்கின்றன. எங்கள் ஆயுதங்களில் சோளத் தட்டைகளே பிரதானமானவை. சோளத் தட்டைகளின் முனையில் கருவேல முள் சொருகப்படும். அதன் வாயிலாக ஒரு துளை குறுக்குவாக்காக உருவாக்கப்படும். அதன் பின்னர் கிளம்பி மாடுகளைத் தேடிப் போவோம் லாடங்கட்டிய மாடுகள் மரநிழலில் தூங்கிக் கொண்டிருக்கும். அவற்றின் வால் ரோமத்தை தைரியமான சிலர் பிடுங்கி சேகப்பார்கள்.

ஐந்தாறு ரோமங்கள் சேர்ந்ததும் அவை தொடையில் வைத்து திரிக்கப்படும். திரிக்கப்பட்டு தேவையான தடிமனுக்கு வந்ததும் அதனை ஒரு வளையமாக, சுருக்காக மாற்றுவோம். அதற்கு "உருவாஞ்சுருக்கு' என்று பெயர்.

"உருவாஞ்சுருக்கு' சோளத் தட்டையின் முனையில் இணைக்கப்படும். இப்போது வேட்டைக்கான ஆயுதம் தயார். தற்போது இதனை மீன் பிடிக்கும் தூண்டிலோடு ஒப்பிடலாம். தூண்டிலில் முள், சோளத் தட்டையில் "உருவாஞ்சுருக்கு' எனும் கண்ணி.

அடுத்ததாக ஒழிக்கப்பட வேண்டியவைகள் இருக்கும் இடங்கள் பற்றிய அலசல். ஓணான்கள் எந்தப் பிரதேசத்தில் அதிகம் என்கிற ஆலோசனை துவங்கும். அவை அதிகமாயிருக்கும் கரட்டுப் பகுதிக்குச் செல்வோம். பத்துப் பேர் சென்றோமானால் இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்து வேட்டையைத் துவங்குவோம். பிரிந்து செல்வதின் மூலம், அதிக வேட்டை சாத்தியம். ஆனாலும் எங்கள் இடையே ஒருங்கிணைப்பும் இருக்கும். எங்கள் கூட்டத் தலைவனது ஆலோசனைப்படியே நாங்கள் இயங்குவோம்.

ஓணான்கள் ஜாக்கிரதையற்ற பிராணிகள். அவை வேலியோரங்களில் இதற்கென்றே காத்திருப்பது போல் அசைவற்று இருக்கும். அவை தப்ப முயல்வது சற்று அபூர்வமே... சுலபத்தில் மாட்டிக் கொள்கின்ற ஜீவன்களாகவே இயல்பில் அவை இருந்து வந்து இருக்கின்றன. வெறி கொண்ட மனிதர்களிடம் மாட்டிக் கொள்வதைத் தவிர அவற்றால் வேறு என்ன செய்ய இயலும்?

ஆயுதங்களில் எங்களது ‘கண்ணி' பெரிய ஓனான்களுக்கானது... ஆனால் வேட்டைக்குச் செல்கையில் அதை மட்டும் நாங்கள் கொண்டு செல்வதில்லை. மானாவாரிக் காடுகள், கரட்டுக்காடுகளில் கற்களைப் பொறுக்கி வேலியோரம் குவித்திருப்பார்கள். அந்தக் கற்களை எடுத்து சட்டைப் பைக்குள் திணித்துக் கொள்வோம். இந்தக் கற்கள் எதற்கெனில் சிறிய ஓணான்களை வேட்டையாட. ஓணானை நாங்கள் ‘ஓணான்' எனும் அவற்றின் சரியான பெயரைச் சொல்லி மரியாதையாக அழைப்பது இல்லை. அவற்றை ‘கரட்டாண்டி' எனும் கொச்சையான பெயர் கொண்டே அழைத்தோம்.

எவை மீது தாக்குதல், அவை வசிக்கும் இடங்கள் எவை எவை என்பதை எல்லாம் திட்டமிட்டு தேவையான ஆயுதங்களை சேகரித்ததும் எங்களது வேட்டை துவங்கும். சிறிய கரட்டாண்டிகளை கற்களைக் கொண்டு சூழ்ந்து நின்று வீசிக் கொல்வோம். அவை சிதறி ஓடும். ஆனால் நேர்த்தியாகத் திட்டமிட்டு சூழ்ந்து விரட்டும் எங்கள் தாக்குதலை அவற்றால் சமாளிக்க முடியாது. சிதறி வீழ்ந்து சாகும்.

இறந்த கரட்டாண்டிகளை, கும்பலில் சிறியவர்களான பையன்கள் வாலைப் பிடித்து தூக்கிச் சென்று ஓடத்தில் போடுவார்கள். சிறிய வெண்டைக்காய்களின் நீளத்தில் உடல்கள் சிற்சில இடங்களில் சிதைந்து அவை கிடக்கும். இவ்விதமான, வேட்டை முடிந்ததும்... அடுத்துத் துவங்குவது பெரிய ஓணான்களுக்கான வேட்டை. சற்றே பருமனான, சமயங்களில், சிறிது நிற வேறுபாடுகளையும் வினோதமான தோற்றங்களையும் உடைய ஓணான்கள் தென்படும். பார்த்தவுடனே அவற்றை வேட்டையாடச் சொல்லும் மஞ்சள் நிற, செந்நிற ஓணான்கள். ஒரு ‘அன்னிய ஜந்து' போல் காட்சி தரும் அவற்றைப் பார்த்ததுமே பயல்கள் வெறி தலைக்கேற ஆனந்தக் கூத்தாடியபடி கண்ணியுடன் நெருங்குவார்கள். அதிகம் சிரமமின்றி அவை கண்ணியில் மாட்டிக் கொள்ளும். கண்ணியில் மாட்டாது ஒரு வேளை அவை தப்பி ஓடினால் கற்களுடன் துரத்திக் கொல்ல... மதம் கொண்ட சிறுவர் கூட்டம் ஒன்று தயாராகவே இருக்கும்.

பெரிய ஓணான்கள் ‘கண்ணி'யில் மாட்டியதும் உடனே அவற்றைக் கொல்வது எங்களுக்கு சம்மதமாயிருந்ததில்லை. கண்ணியோடு அதனை பொட்டல் தரையில் வைத்து சுற்றி அமர்ந்து கொள்வோம். மூக்குப் பொடியை எடுத்து ஓணான்களின் மூக்கிலும், வாயிலும் ஏற்றி விடுவோம். ஏற்கனவே வினோதமான தோற்றம் கொண்ட அவை கிறுகிறுத்து ஆடுவது வெகு வினோதமாக இருக்கும். வெறி கொண்ட கூச்சல்களுடன் அதனை ரசிப்போம். பிறகு அவற்றைக் கொன்றொழித்து ஏற்கனவே கிடக்கும் கரட்டாண்டிகளின் உடல்களோடு சேர்த்து விடுவோம்.

இந்த வழக்கமான சித்திரவதைகள் அலுத்தப் போனது போல் ஒருமுறை எங்கள் கும்பலில் ஒருவன் வேறு ஒரு புது ஏற்பாட்டையும் கண்டுபிடித்தான். இரண்டு முழ நீளமுள்ள கயிற்றின் இரு முனைகளிலும் இரண்டு ஓணான்களை உயிருடன் பிணைத்து கரண்ட்டு கம்பி மேல் தூக்கி எறிந்தான். கயிறு... மின் கம்பியின் மேல் கச்சிதமாக விழுந்து ஓணான்கள் இருபுறம் தராசு போல அந்தரத்தில் ஊசலாடியபடியே இருந்தன. இரண்டு நாட்கள் கழித்து அவை துர்நாற்றத்துடன் காய்ந்து கருவாடாகிக் கிடந்தன.

இப்போது நினைத்தாலும் கூசுகிற சில கேவலமான காரியங்களும் கூட அப்பாவி ஓணான்களின் மீது அந்த சிறிய வயதில் எங்களால் நிகழ்த்தப்பட்டது. செய்வது மிகவும் கொடுஞ்செயல் என்பதை உணராமலேயே பல அநியாயங்களும் செய்தோம். காரணம் மிக எளிமையானது. எங்களையடுத்த பெரிய பசங்கள் செய்வதை கவனித்து, நாங்களும் அதில் பங்கேற்றோம். கேள்விகள் ஏதுமின்றி முன் ஏர் சென்ற வழி செல்கிற பின் ஏர் போல...

ஆனால் வேட்டைக்குப் பழகிய ஆரம்ப நாட்களில் எங்களில் ஒருவன் குற்ற உணர்வும், வேதனையும் பொங்க கேட்டான். கழிவிரக்கம் நிரம்பிய குரலில்,

“ஏண்டா... பாவமில்லையா கரட்டாண்டி! அதைப் போய் இப்படிக் கொன்னுக்கிட்டு.''

எங்கள் சீனியர்களில் ஒருவன் நாங்கள் செய்கிற காரியத்தின் அவசியத்தைக் கூறி... அதற்கான தர்ம, நியாயங்களையும் விளக்கினான்.

“ஏய்... உங்களுக்கெல்லாம் தெரியாதுடா... முன்னாடி என்ன தெரியுமா நடந்துச்சு? இலங்கைக்கு பாலம் கட்டறதுக்காக எல்லாரும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அப்ப ராமருக்கு ரொம்ப தாகம் எடுத்துச்சு... தண்ணி வேணும்னு நினைச்சு யார்கிட்டடா கேக்கலாம்னு பாத்தாரு. அப்ப அணிலும், கரட்டாண்டியும் அங்க வந்துச்சு, "ராமர் எனக்குத் தண்ணி வேணும்'னு அதுக்கிட்ட கேட்டாரா? அணில் என்ன பண்ணுச்சு? ஓடிப் போயி எளனி கொண்டாந்து குடுத்துச்சு. அதைக் குடிச்சுட்டு அணில் முதுகுல தடவிக் குடுத்தாரு. அதனால அணில் முதுகுல மூணு கோடு, ராமம் (நாமம்) விழுந்துச்சு''. அனைவரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.

“ஆனால்..இந்த மப்புப் பிடிச்ச கரட்டாண்டி என்னா பண்ணுச்சு தெரியுமா? மூத்திரத்தைப் பேஞ்சுட்டு வந்து தண்ணின்னு சொல்லிக் குடுத்திருச்சு, இதை சும்மா விடலாமாடா? கண்ட எடத்தில் அடிச்சுக் கொல்ல வேணாமா? அதான் கொல்றோம்.''

அந்தக் கதையைக் கேட்டதும் எங்களது குற்ற உணர்வு முற்றிலும் மறைந்து போக எங்களது செய்கைகளுக்கு ஒர் நியாயம் கிடைத்து விட்டது. அதன்பிறகு எந்த சங்கடமின்றி ‘ஓணான் வேட்டை'யில் ஈடுபட்டோம். எங்கள் பால்யத்தின் பல தினங்கள் இந்த படுபாதகச் செயலில் கழிந்தன. வயதும், பக்குவம் வந்த பின்பு நினைத்துப் பார்க்கையில் மிகவும் சங்கடமாக இருந்தது. எந்தவித உறுத்தலும் இன்றி அந்த உயிர்களைக் கொன்றதற்கு... பாவ புண்ணியத்தில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் எங்களுக்குக் கிட்ட வேண்டியது நிச்சயம் நரகம்தான். அந்தப் பாவத்தை எந்தக் கடவுளும் மன்னிக்காது. அதன்பின் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓணான்களைப் பார்க்கும்போதும், நாங்கள் வேட்டை ஆடிய ‘களங்'களின் பக்கம் எப்போதாவது செல்லும் போதும் அந்த நினைவுகள் வரும். சங்கடம் தோன்றும்.

“சரி... சரி... அதெல்லாம் சின்னப் புள்ளைகள்ல விவரந் தெரியாமல் பண்ணது'' என்று சமாதானப்படுத்திக் கொண்டு... நாளடைவில் எல்லாம் தேய்ந்து மழுங்கி விட்டது.

சமீபத்தில் டி.வி.யில் சென்ற ஆண்டில் சில சம்பவங்களை நினைவுகூர்ந்து, அதில் குஜராத் படுகொலைகள் பற்றியும் சிலர் அலசிக் கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டே இருந்தபோது ஏதோ நிரடியது. சட்டென்று எனது மனதில் ஒரு அதிர்வு.

எங்களது ‘ஓணான் வேட்டை' நினைவுக்கு வந்தது. இதற்கும் அதற்கும்தான் எத்தனை ஒற்றுமைகள்! ஹே ராம்!

- பாஸ்கர் சக்தி ([email protected])Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com