Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. வேண்டாம் சாதனை வெறி!

2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’!

3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..!

4. வேண்டும் இன்னொரு அண்ணா!

5. தமிழுக்கு வெட்டு!

6. எரிகிறது பஞ்சாப்!

7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்!

8. 'கோரம்’ இல்லாத கோரம்!

9. ஏன் தமிழா, ஏன்?

10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?!

11. அறிந்தும் அறியாமலும் - 1

12. அறிந்தும் அறியாமலும் - 2

13. அறிந்தும் அறியாமலும் - 3

14. அறிந்தும் அறியாமலும் - 4

15. அறிந்தும் அறியாமலும் - 5

16. அறிந்தும் அறியாமலும் - 6

17. அறிந்தும் அறியாமலும் - 7

18. அறிந்தும் அறியாமலும் - 8

19. அறிந்தும் அறியாமலும் - 9

20. அறிந்தும் அறியாமலும் - 10

21. அறிந்தும் அறியாமலும் - 11

22. அறிந்தும் அறியாமலும் - 12

***********

ஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி

ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

அறிந்தும் அறியாமலும் - 10

செக்ஸ் என்றால் என்ன என்று அதன் முழுப் பொருளையும் தெரிந்துகொள்ளும் வயதும் அறிவும் அனுபவங்களும் வாய்க்கும் முன்பே, பிறப்பு உறுப்புகளைத் தானே தொட்டு சுய இன்பம் அனுபவிக்க முடியும் என்பது மட்டும் ஒன்பது வயதிலிருந்தே தெரிய ஆரம்பித்துவிடுகிறது!

அறிந்தும் அறியாமலும் அனுபவிக்கும் இந்த இன்பம், சரியா தப்பா, உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் இளம் மனங்களை வாட்டுகின்றன. இது பற்றி யாரைப் போய் கேட்பார்கள் நம் சிறுவர்கள்?

தொலைக்காட்சியைத் திருப்பினால், வைத்தியர்கள் சிலர் ஓயாமல் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்கால இந்தியாவின் தூண்கள் எல்லாமே சுய இன்பத்தால் உளுத்துப் போய் இற்று விழுந்துகொண்டு இருக்கின்றன... அதைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதே தங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்கிறார்கள்.

அவர்கள் சொல்வது சரியா தவறா என்று யாரிடம் சென்று கேட்பது? குடும்பமாக உட்கார்ந்து ‘தீப்பிடிக்க... தீப்பிடிக்க’ பார்க்கும் ‘பக்குவம்’ மட்டும்தான் நமக்கு வாய்த்திருக்கிறதே தவிர, சுய இன்பம் பற்றிக் கூடி விவாதிக்கும் சூழல் வரவில்லை. பள்ளி சகாக்களிடம் கேட்டால், இன்னும் குழப்புகிறார்கள். ஆசிரியர்களிடம் கேட்கலாமா?

ஆசிரியர்களின் இன்னொரு முகம் பெற்றோர் என்பதுதானே! எனவே, பெற்றோர்களுக்கு இது குறித்து இருக்கும் தயக்கம், பயம், எரிச்சல், எல்லாம் அவர்களுக்கும் உண்டு. விதிவிலக்கான மிகச் சில ஆசிரியர்கள் மட்டுமே சிறுவன் சிறுமிகளின் முக ஓட்டத்திலிருந்தே மனக் கிலேசத்தை அடையாளம் கண்டு, தனியே அழைத்து ஆறுதலாகப் பேசி, தெளிவுபடுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், மிகப் பெரும்பான்மையான ஆசிரியர்கள் செக்ஸ் தொடர்பான சிறுவர்களின் ஐயங்களைக் களையும் பொறுப்பு தங்களுடையது அல்ல என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சுய இன்பம் பற்றிய ஒன்பது வயதுச் சிறுவர்களின் கவலைகளை யார் தீர்ப்பது?

ஆசை வெட்கமறியாது என்பார்கள். அறிவும் வெட்கமறியாது என்று ஆக வேண்டும். எதையும் அறிந்து கொள்ள வேண்டுமானால், வெட்கமும் கூச்சமும் உதவாது. அதேபோல எதையும் சரியாகக் கற்பிக்கவும், வெட்கமும் கூச்சமும் கூடாது.

முதலில் 9-லிருந்து 12 வயதுக்குள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வோம். அப்போதுதான், இந்த வயதில் தொடங்கும் சுய இன்பப் பழக்கம் பற்றியும் புரிந்துகொள்ள முடியும்.

‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சொல்லிக் கவனிக்க வேண்டிய தேவையில்லாமல், கண்ணை உறுத்தும் வேகத்தில் இப்போது வளர்ச்சி நிகழ்கிறது. சிறுமிகளுக்கு முதலிலேயே தொடங்கி விடும்.சிறுவன்களுக்கு உடல் வளர்ச்சி அதிக வருடங்கள் நீடிக்கும். உடலில் இருக்கும் பிட்யூட்டரி எனப்படும் சுரப்பியிலிருந்து பையன்களுக்கு டெஸ்டோஸ்ட்ரோன் சுரக்கும். சிறுமிகளுக்கு ஈஸ்ட்ரோஜென்/ப்ரோஜெஸ்ட்ரோன் சுரப்புகள் ஆரம்பிக்கும். இந்தச் சுரப்புகள் பொதுவாகச் சிறுமிகளுக்கு 9 வயதிலும், பையன்களுக்கு 11 வயதிலும் தொடங்கும்.

பருவக் கோளாறு என்று தப்பாக இன்றும் சொல்லப்படும் பருக்கோளாறு ஆரம்பிப்பது இப்போது தான். முகத்தில் பருக்கள் உண்டானதும், ‘யார் மனசுல யாரு?’ என்ற அசட்டு ஆராய்ச்சிகள் வகுப்பறையிலும் வீட்டிலும் தொடங்கும். பருவுக்கும் மனசுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. செக்ஸ் ஹார்மோன் சுரப்புகளால் தோலில் எண்ணெய்ப் பசை அதிகரிப்பதுதான் பருவுக்கான காரணம். ஆளுக்கு ஆள் இது வேறுபடும். வாழ்க்கையில் பருவே வராத பெரும் காமுகர்களும் உண்டு.

வேர்வை அதிகமாகும். நம் உடலுக்கென்று ஒரு வாசனை அல்லது நாற்றம் அமையத் தொடங்குவதும் இந்த வயதில் தான். மீசை அரும்பும். அக்குளிலும் தொடை இடுக்கிலும் பிறப்புறுப்புகளைச் சுற்றிலும் முடி முளைக்கும். உடலின் கன பரிமாணங்கள் மாறும். பையன் களுக்குத் தோள் அகலமாகும். சிறுமிகளுக்கு இடுப்பு அகலமாகும். மார்பகங்கள் சற்றே பெரிதாகத் தொடங்கும். முலைக்காம்பைச் சுற்றிய வட்டம் கறுக்கும். இரு பாலாருக்கும் பிறப்பு உறுப்பைச் சுற்றிய பகுதி கறுக்கும்.

உடல் வளர்ச்சி வேகமாக இருப்பதால், சிறுவர்களுக்கு மூட்டு வலிகள் ஏற்படும். அடிக்கடி உடல் வலிக்கிறது. காலைப் பிடித்து விடு, கையைப் பிடித்து விடு என்று ‘குழந்தைகள்’ அம்மாவிடம் சொல்வார்கள். இந்த வயதில் ஏன் இவனு/ளுக்கு உடம்பு வலி என்று அம்மா மனம் பதறும்.

குளிக்கப் போனால் சீக்கிரம் வெளியே வருவதில்லை. பாத்ரூமிலிருந்து பாட்டு உற்சாகமாகக் கேட்கும். பாட்டு நின்ற பிறகும் கதவு திறப்பதில்லை. குளியலறையில் சுய இன்பத்தில் குழந்தைகள் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் அம்மாவுக்கு வலுக்கும். இப்படிக் ‘கெட்ட’ காரியங்கள் செய்வதால்தான் உடல் வலிக்கிறது என்ற முடிவுக்கு வரத் தோன்றும்.

இந்த வயதில் சிறுவர்கள் மேலும் சுதந்திரமாக இருக்க, சிந்திக்க, முடிவெடுக்க விரும்புவார்கள். விளையாட்டிலிருந்து படிப்பு பற்றிய அக்கறை அதிகமாகும். எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறோம் என்பது பற்றியெல்லாம் யோசிக்கவும் பேசவும் தொடங்குவார்கள். குடும்பத்தினரை விட நண்பர் வட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பிப்பார்கள். மற்ற ஆண்களைப் போல தானும் இருக்க வேண்டுமென்ற விருப்பம் சிறுவனுக்கும், இதர பெண்களைப் போல தானும் இருக்கும் ஆசை சிறுமிக்கும் அதிகரிக்கும். சமூகம் சார்ந்த பல நுட்பமான விஷயங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இப்போது தொடங்கிவிடும்.

இந்த வயதில் சின்னஞ்சிறு வீட்டுப் பொறுப்புகளையெல்லாம் கையில் ஒப்படைத்தால், சிறுவர்கள் கச்சிதமாகச் செய்து முடிப்பார்கள். ‘எல்லாம் எவ்வளவு பொறுப்பா செய்யுது பிள்ளை! ஆனா, எப்பப் பார்த்தாலும் ஃப்ரெண்ட்ஸோடவே சுத்தினா எப்படி?’ என்று அங்கலாய்க்க வைப்பார்கள்.

உண்மையில் இந்த வயதில் சிறுவர்களின் உடல் மட்டுமல்ல, மனமும் வேகமாக வளர்ச்சி அடை கிறது. சுயேச்சையான பெரிய மனிதர்களாக சீக்கிரம் ஆகிவிட வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சட்டென்று எந்த உணர்ச்சிக்கும் ஆளாவார்கள். வெடிச் சிரிப்பு, திடீர்க் கோபம் இரண்டும் எங்கிருந்து வந்ததென்று வியக்கிற மாதிரி வரும். வீட்டில் எந்த அளவுக்கு தனக்குச் சுதந்திரம் இருக்கிறது என்பதைச் சின்னச் சின்னதாக சோதித்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.

திடீரென மாதவிலக்கு ஏற்பட்டு தன் உடலில் எதிர்பாராத இடத்தில் ரத்தத்தைச் சந்திக்கும் சிறுமியின் மன அதிர்ச்சியும், இரவு தூங்கி காலையில் விழிக்கையில் ஜட்டியும் பெட்ஷீட்டும் நனைந்திருப்பதை அம்மா கவனித்ததும், சிறுவனுக்கு ஏற்படும் பயம் கலந்த வெட்கமும் சாதாரணமானவை அல்ல. ஆனால், இவையெல்லாம் இயற்கையானவை; இயல்பானவை.

அவர்கள் ஆரோக் கியமாக இருக்கிறார்கள் என்பதன் அடையாளங்கள்தான் என்று அவர்கள் உணர்ந்துகொள்ளும் வரை மனக் குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

தாமாகவே உணர்வார்களா? அதற்கு எத்தனை காலம் பிடிக்கும்? அதுவரை எப்படிப்பட்ட குழப் பங்கள் எல்லாம் ஏற்படும்? நாம் உணர்த்துவது எப்படி? எப்போது?

1. டி.வி யில் செக்ஸ் பிரச்னைகளுக்கு மருந்துகள் சொல்லும் வைத்தியர்களிடம் எப்போதேனும் நீங்களோ, உங்களுக்குத் தெரிந்தவர்களோ சென்ற அனுபவம் உண்டா?
2. செக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்களையும், அந்த வைத்தியர்களின் கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது உண்டா?
3. பள்ளிக்கூடத்தில் எந்த ஆசிரியராவது செக்ஸ் விஷயங்களைப் பற்றி உங்களிடம் பேசியது உண்டா?
4. ‘அந்த மாதிரி’ விஷயங்களை உங்களுடன் முதன்முதலில் பேசிய மூத்த மனிதர் யார்? அந்தப் பேச்சு உங்களுக்கு எப்படி இருந்தது?
5. முகப் பருவுக்கும், செக்ஸ் உணர்ச்சிக்கும், காதலுக்கும் சம்பந்தம் இருப்பதாக எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா?
6. குளியலறையை செக்ஸ் சிந்தனை/செயல்களுக்கான இடமாக சிறுவராக இருந்தபோது பயன்படுத்தியிருக்கிறீர்களா? ஒருவேளை, அப்படிப் பயன்படுத்தியிருந்தால், அந்த அனுபவங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தன என்று இப்போது நினைக்கிறீர்கள்?

பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல. உங்களுக்கானவை... உங்களுடையவை!

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்


நன்றி: ஆனந்த விகடன்
Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com