|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 4
டச்!
இந்த ஆங்கிலச் சொல் இன்று தமிழ்ச் சமூகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சினிமா பார்த்துவிட்டு வரும்போது, ‘படத்தில் ஒரு சில காட்சிகள் டச்சிங் ஆக இருந்தன’ என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பாணியை ‘அதுதான் இயக்குநரின் டச்’ என்கிறார்கள்.
உடலில் எங்கே இருக்கிறது என்று தெரியாத ஒன்று, மனம். அதை டச் பண்ணிவிட்டதாகப் பேசுகிறோம். தொட முடியாததையே தொட்டுவிட்டால் சாதனைதானே!
‘தொடு’ என்ற அருமையான தமிழ்வினைச் சொல்லுக்கு இரு முக்கியமான அர்த்தங்கள் உள்ளன. தொடுதல், தொடுத்தல் ஆகிய இரு செயல்களுக்குமான கட்டளைச் சொல் அது. ஒருவரைத் தொடும்போது, அவரோடு நாம் நம்மைத் தொடுத்துக்கொள்கிறோம். திருமணம் மீறிய ஆண் பெண் உறவில் இருவருக்கிடையே நெருக்கமான உறவாக அது ஆகிவிட்டதைத் ‘தொடுப்பு’ என்றே சொல் கிறார்கள்.
மௌனம் என்ற மகத்தான மொழியின் முக்கியமான வார்த்தைகளில் ஒன்று தொடுதல். வாய் பேசாமலே, பல விஷயங்களைத் தொடுதல் மூலம் பேசிவிட முடியும். நெருக்கமான ஒருவரை மரணத்தால் இழந்து வருத்தப்படும் நண்பரைச் சந்திக்கும்போது, அவர் தோளில் கை வைத்துத் தொட்ட ஒரு நொடியில் நம் பகிர்தலை உணர்த்தி விடுகிறோம். கைகளைப் பற்றிக்கொண்டதுமே வார்த்தைகள் மேற்கொண்டு தேவையற்றுப் போய்விடுகின்றன.
ஆண்களைவிட அதிகமாகப் பெண்கள் ஒருவரையருவர் தொட்டுக்கொள்கிறார்கள். இரு ஆண்கள் சந்தித்ததும் கைகளைப் பற்றிக்கொள்ளும் பழக்கம் அபூர்வமானது. சிறுவர்கள் ஒருவர் தோளில் மற்றவர் கை போட்டுக்கொண்டு நடப்பது வயதாக வயதாகக் குறைந்துவிடுகிறது. ஆனால் சிறுமிகளும், இளம் பெண்களும், முதிய பெண்களும்கூட தத்தம் சிநேகிதிகளுடன் கை கோத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
நம்முடைய ஆண் பெண் பாலின அடையாள வளர்ப்பு முறையில் குழந்தைப்பருவம் முதலே ஆண் அதிகாரமுடையவனாகவும் பெண் அதிகாரத்துக்குக் கட்டுப்படுபவளாகவுமே பெரும்பாலும் வார்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் விளைவாகத் தான் ஆண் தன் உடலை அதிகாரத்தின் அடையாளமாகப் பார்க்கிறான்; பெண்ணின் உடலைத் தன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்ட உடலாகப் பார்க்கிறான்.
அதிகாரத்தின் சின்னமான தன் உடலைத் தன் அனுமதியின்றி பிறர் தொட்டு அத்துமீறுவதை, ஆணின் அதிகார மனம் எளிதில் அனுமதிப்பது இல்லை. அதிகாரமற்றவளாகத் தன்னைக் கருதும் பெண் மனதுக்கு இன்னொரு பெண்ணைத் தொட்டுப் பேசுவது எளிதாக இருக்கிறது. பெண்ணின் உடல் சுய அதிகாரமற்றதாகவும் பகிர்வதற்காகவே உருவாக்கப்பட்ட தாகவும் ஒரு பொதுக் கருத்து எல்லா மனங்களுக்குள்ளும் விதைக்கப்பட்டு இருக்கிறது.
தொடுவது என்பது இன்னொரு உடலுடனும் அதன் வழியே மனதுடனும் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் செயல். ஒருவரைத் தொடும்போதே அது எப்படிப்பட்ட உறவின் அடிப் படையிலான தொடுதல் என்பது தொடப்பட்டவருக்குப் புரிந்துவிடும். புரிந்துவிட வேண்டும்.
துக்கத்தைப் பகிர்ந்துகொள்பவரின் தொடுதல் வேறு. சண்டைக்கு இழுக்க விரும்புபவரின் தொடுதல் வேறு. அன்பைக் காட்டும் தொடுதல் வேறு. காமத்தின் ஆரம்பமாக வரும் தொடுதல் வேறு.
அன்புக்கும் காமத்துக்குமான இடைவெளி எப்போதுமே மெலிதாகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்பரிசம் இது அன்பா, காமமா என்பதை உணர்த்திவிடும். இந்த வேறுபாடுகளை வயதுவந்தவர்கள் எளிதாக அறிய முடியும்.
அலுவலகத்தில் மேல் அதிகாரி பெண் ஊழியரிடம் ஒரு கோப்பைக் கொடுக்கும்போதோ, வாங்கும்போதோ கைகள் உரசுவது தற்செயலா, உள் நோக்கத்துடனா என்பது தொடுதலிலேயே புரிந்து விடுகிறது. ஐம்பது வயது ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கேரியர் கைடன்ஸுக்காகச் சென்ற 18 வயதுக் கல்லூரி மாணவி மாயாவை அவர் கட்டில் துணையாக ஆக்கிக்கொண்ட வரலாற்றின் தொடக்கப் புள்ளி ஒரு தொடுதல் மட்டுமே!
அந்தத் தொடுதலின் தொனியை மாயா புரிந்துகொள்ளவில்லையா? புரிந்துகொண்டு இருந்தால் ஏன் அவருடைய அடுத்த தொடுதலைத் தவிர்க்க முயற்சிக்கவில்லை? ஒரு தொடுதல் அவளுக்குள்ளும் இருந்த வேட்கையைத் தூண்டிவிட்டு விட்டதா? அந்த வேட்கைக்கான வடிகால் தரவேண்டிய மனிதர் தன் அப்பா வயதில் இருக்கும் இவர் அல்ல என்று மாயா உணரத் தவறியது ஏன்? தொடுதல் ஏற்படுத்தும் பரவசங்கள், அறிவைத் தற்காலிகமாகவேனும் மழுங்கடிக்கக்கூடியவை என்பதுதான் காரணமா?
18 வயது மாயாவை... ஓரளவு சிந்திக்கும் வயதில் இருக்கும் மாயாவை ஒரு தொடுதல் எங்கெங்கோ அழைத்துச் சென்றுவிடும் என்றால், சிறு குழந்தைகளின் நிலை என்ன? தங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதே தெரியாமலும் புரியாமலும் இருக்கும் குழந்தைகள், எப்போதும் ஆபத்தால் சூழப்பட்டே இருக்கிறார்கள்.
நன்கு அறிமுகமானவர்கள், நெருக்கமானவர்களிடமிருந்துதான் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று உலகம் முழுவதும் நடக்கும் ஒவ்வொரு ஆய்விலும் தெரிய வந்து கொண்டே இருக்கிறது. பெண் குழந்தைகளிடம் கூடுதலாக நிகழ்கிறது என்று மட்டுமே சொல்லலாமென்றாலும், அத்துமீறல்கள் ஆண் குழந்தை, பெண் குழந்தை என இருவருக்குமே நிகழ்கின்றன.
எது ‘குட் டச்’, எது ‘பேட் டச்’ என்று சொல்லித் தர வேண்டிய ஒரு அம்மாவே, தன்னை அறியாமல் குழந்தைக்கு ‘பேட் டச்’சை அளிக்க முடியும். ஆண் குழந்தை என்றால் அதிகமாகக் கொண்டாடும் மன நிலையில் இன்னும் இருக்கும் நம் சமூகத்தில், பல தாய்மார்கள் தங்கள் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பைத் தட்டி விளையாடிக் கொஞ்சும் காட்சியைப் பார்க்கலாம். குழந்தை கூச்சமும் மகிழ்ச்சியுமாகச் சிரிக்கச் சிரிக்க, தாயின் (விபரீத) விளையாட்டு அதிகமாகிறது.
இன்னொரு நாள் அதே குழந்தையிடம் வேறொருவர் அது பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் முதல் ஆசிரியர் வரை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அதே போல நடந்து கொண்டால், குழந்தை அதை மகிழ்ச்சியான அனு பவமாக உணரத் தொடங்கினால், விளைவுகள் என்ன?
அத்துமீறல்களை அது அனுமதிக்கிறது என்று உணரும் அத்துமீறுவோர் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வார்கள். குழந்தையை மகிழ்விக்க சாக்லெட்டில் தொடங்கி அதன் வயதுக்கேற்ப பரிசுகள் கொடுப்பார்கள். ஸ்பரிசத்துக்காக இல்லாவிட்டாலும் பரிசுகளுக்காக குழந்தை அவர்களை அனுமதிக்கத் தொடங்கும்.
எனக்குத் தெரிந்த ஒரு சிறுமி அவளிடம் இப்படி அத்துமீறியவர்களை (பதிலுக்கு) சுரண்டத் தொடங்கினாள். தன்னிடம் அத்து மீறும் அங்கிள்களிடம், தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கித் தரும்படி நச்சரிக்கத் தொடங்கினாள். தான் செய்வது வணிகரீதியிலான பாலியல் ஈர்ப்பு என்று உணராமலே, அதை நோக்கி அந்தச் சிறுமி நகர்த்தப்பட்டாள். காலமும் சூழல் மாற்றமும் மட்டுமே அவளைக் காப்பாற்றின.
எது ‘குட் டச்’, எது ‘பேட் டச்’ என்பதைக் கற்றுக்கொள்ளாத குழந்தைகள் அதை அறிகிறபோது பெரிய விலை தர வேண்டி வந்து விடலாம். சரி, இதைக் குழந்தை எந்த வயதில் கற்றுக்கொள்ள முடியும்? கற்றுத்தர வேண்டியது யார்?
எல்லாக் கல்வியும் குடும்பத்தில் தான் தொடங்குகிறது. தொடங்கப்பட வேண்டும். அதே சமயம், எல்லாக் கல்வியையும் குடும்பம் மட்டுமே கொடுத்துவிட முடியாது. ஆனால், அதற்குக் குழந்தையைத் தயார்படுத்தும் பொறுப்பு குடும்பத் துடையது!
1. யாரையாவது சந்தித்தால் உடனே கையைப் பற்றிக்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு உண்டா?
2. சிலரிடம் மட்டும் என்றால், யார் அந்த சிலர்?
3. யார் உங்கள் கையைப் பற்றுவதோ, உங்களைத் தொடுவதோ உங்களுக்குப் பிடிக்காது? ஏன்?
4. ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்ததும் கையைப் பற்றிக்கொண்டால், அதைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?
5. யார் உங்களைத் தொட்டால் உங்களுக்குப் பரவசம் ஏற்படுகிறது?
6. யார் உங்களைத் தொட்டால் உங்களுக்குக் கலவரம் ஏற்படுகிறது?
7. உங்கள் வீட்டுக் குழந்தைகள் விளையாடும்போது ஒருவரையருவர் தொட்டு விளையாடுவதைக் கவனித்திருக்கிறீர்களா?
8. தொட்டு விளையாடாதே என்று யாரைக் கண்டித்திருக்கிறீர்கள்? ஏன்?
9. அன்றாடம் காலை முதல் மாலைவரை எத்தனை முறை யார் யாரையெல்லாம் தொடுகிறீர்கள்?
10. அதில் தவிர்க்க முடியாதவை, தவிர்த்திருக்க வேண்டியவை, எந்தச் சலனமும் ஏற்படுத்தாதவை என்று வகைப்படுத்த முடியுமா?
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல; உங்களுக்கானவை... உங்களுடையவை!
நன்றி: ஆனந்த விகடன்
|