|
ஞாநி
‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’!
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவியாக பிரதீபா பாட்டீல் அடுத்த மாதம் பதவியேற்க இருப்பது நிச்சயம் ஒரு ‘ஓ’ போடுவதற்கான விஷயம்!
ஒரு பெண்ணைக் குடியரசுத் தலைவராக்க வேண்டுமென்று 13.12.2006 இதழில் ‘ஓ’ பரிந்துரைத்தோம். மறுபடியும் 25.4.2007 இதழில், சோனியாவுக்கு இது பற்றி நான் அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்தியிருந்தோம். சோனியா அந்தக் கடிதத்தைப் படித்தாரோ இல்லையோ, பிரதீபா பாட்டீலைத் தங்கள் அணியின் வேட்பாளராக அறிவித்து விட்டார். இதற்காக எனக்கு இலவசமாக வந்து குவியும் பாராட்டுகளுக்கு நன்றி!
பிரதீபா பாட்டீல் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குக் காங்கிரஸ்- இடதுசாரிக் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விதம்தான் வருத்தம் தருகிறது. இந்த முறை ஒரு பெண்ணைக் குடியரசுத் தலைவராக்குவோம் என்று தீர்க்கமாகத் தொடங்காமல், பல ஆண் வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரித்து சுற்றுக்கு விட்டு, ஒருத்தரும் தேறாமல் போனதால், பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
கரண்சிங்கை சோனியாவுக்குப் பிடிக்கவில்லை; அர்ஜுன் சிங்கை பிரணாபுக்குப் பிடிக்கவில்லை; பிரணாபை ஜனாதிபதியாக்குவது மன்மோகனுக்குப் பிடிக்கவில்லை; சிவராஜ் பாட்டீலுக்கு சாயிபாபாவும் ஜெயலலிதாவும் பிடிக்கும் என்பதால் அவரை இடதுசாரிகளுக்கும் கருணாநிதிக்கும் பிடிக்கவில்லை; சுஷீல்குமார் ஷிண்டேவை சக தலித் மாயாவதிக்குப் பிடிக்கவில்லை... என்று நடந்த பிடிவாத அரசியலில் போனால் போகட்டும் என்று ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இருந்தாலும், அதை நாம் வரவேற்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த உச்சமான பதவிக்கு ஒரு பெண் வருவதற்கு, கனிமொழிக்கு 70 வயது ஆகும் வரை நாம் காத்திருக்கிற மாதிரி ஆகிவிடலாம்.
தமிழகத்திலும் டெல்லியிலும் அதிகாரத்தில் இருந்துகொண்டு தனக்குத் தொல்லை கொடுக்கும் வல்லமை உடைய தி.மு.க-வின் கெடுபிடியிலிருந்து தாற்காலிகமாகத் தப்பிப்பதற்காக ஜெயலலிதா உருவாக்கியிருக்கும் மூன்றாவது அணி, அப்துல் கலாமுக்கு இன்னொரு வாய்ப்பு தர வேண்டும் என்று விசித்திர கோரிக்கை எழுப்பி இருக்கிறது. வேண்டுமானால் மூன்றாவது அணியின் சார்பில் அரசியல் பல்கலைக்கழகம் (எல்.கே.ஜி முதல் பி.ஹெச்டி வரை ஒரே கூரையின்கீழ்) ஒன்றைத் தொடங்கி, அதில் கலாமை துணைவேந்தர் ஆக்க அவர்கள் முயற்சிக்கலாம். அவரும் மாணவர்கள் மத்தியில் உட்கார்ந்துகொண்டு 2020 வரை தினசரி கனவுகள் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தால், அவருடைய நூற்றாண்டு விழா வந்துவிடும். இன்னொரு முறை ஜனாதிபதியாக விரும்பாத அவர் பெயரைத் தங்கள் அரசியலுக்காக மூன்றாவது அணி பயன்படுத்துவதே ஒரு மோசமான அரசியல்தான்!
‘பிரதீபா பாட்டீலை சோனியா அறிவித்திருப்பது ஒரு ஜோக்... தேசத்தைக் கிண்டல் செய்யும் வேலை’ என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். பிரதீபா பாட்டீல் ஒரு மகா ஸ்வேதா தேவி, ஒரு மேதா பட்கர், ஒரு ருக்மணி தேவி, ஒரு மதர் தெரசா போன்றவர்கள் அந்தஸ்தில் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், பிரதீபாவை ஒப்பிடுவதாக இருந்தால் இன்னொரு அரசியல்வாதியுடன், குறிப்பாக ஒரு பெண் அரசியல்வாதியுடன் ஒப்பிடுவதுதான் நியாயம்!
ஆறு முறை எம்.எல்.ஏ-வாகவும் இரு முறை எம்.பி-யாகவும், பல முறை மராட்டிய மாநில அமைச்சராகவும், மாநிலங்களவை துணைத்தலைவராகவும் இருந்த பிரதீபா பெண்கள் நலன், பார்வையற்றோர் நலன், பழங்குடியினர் கல்வி ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் இயங்கியவர். ஜலகாவ்ன் தொகுதியில் பார்வையற்றவர்களுக்குத் தொழில் கற்பதற்கான பள்ளி, பழங்குடி குழந்தைகளுக்கான பள்ளி, மும்பையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்குவதற்கான மகளிர் மையம் ஆகியவை பிரதீபாவின் சாதனைகள்.
உழைக்கும் பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டுவதற்காக மராட்டிய அரசின் சலுகைகள், கடன் உதவித் திட்டம் வர முப்பதாண்டுகளுக்கு முன்பே காரணமாக இருந்தவர் அவர். முதுகலைப் பட்டமும் வக்கீல் படிப்பும் படித்தவர். கல்லூரியில் டேபிள் டென்னிஸ் சாம்பியன். கல்லூரி ராணிப் பட்டம் வாங்கியவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக பிரதீபா மீது எந்தப் பெரிய ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அவர் அமைச்சராகவும் ஆளுநராகவும் இருந்த சமயங்களில் தன் கணவரையோ, துணைவரையோ, மகன், மகள், மாமன், மருமகன் களையோ, பேரன்- பேத்திகளையோ, உடன்பிறந்த, உடன்பிறவாத சகோதர சகோதரிகளையோ, நண்பர்களையோ அரசு விஷயங்களில் தலையிட அனுமதித்தது இல்லை என்று அவருடன் பணியாற்றிய அரசு ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதுவே இன்றைய அரசியல் சூழலில் அபூர்வமான நல்ல தகுதியாகும்.
உண்மையில், முதல்முறை ஒரு பெண் குடியரசுத் தலைவியாகும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா முதல் அ.தி.மு.க. வரை எல்லாக் கட்சிகளும் அவர் போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்வது எல்லாக் கட்சிகளுக்கும் மகளிர் மேம்பாட்டில் ஏதோ கொஞ்சம் அக்கறை இருக்கிறது என்று காட்டும் அடையாளமாக மட்டும் அல்ல, அரசியல்ரீதியிலும் லாபமாகவே இருந்திருக்கும்.
இன்னும் இரண்டாண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரும் சமயத்தில், முடிவுகள் இழுபறியானால், குடியரசுத் தலைவர் யார் பக்கம் என்ற கவலையுடன் எல்லா அரசியல் கட்சிகளும் இப்போது காய் நகர்த்தி வருகின்றன. பிரதீபாவை முதல் பெண் பிரஸிடென்ட் என்று எல்லாருமாகச் சேர்ந்து தேர்ந்தெடுத்தால், 2009ல் அவர் ஒரு கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருக்க வேண்டிய தர்மசங்கடம் இல்லாமல், எல்லாருக்கும் நன்றிக்கடன் உடையவராக ஆகிவிடுவார் அல்லவா!
பிரதீபா குடியரசுத் தலைவியாக மட்டும் ஆகப்போவதில்லை; அவரே தான் முப்படைகளுக்கும் தலைவருமாக இருப்பார். தற்போது இந்தியப் படையில் பெண்கள் நிரந்தர வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்களைக் காலாட் படையிலும் கவச வண்டிப் படைகளிலும் சேர்க்கத் தடையுள்ளது. ராணுவத்தில் சரக்கு விமானம் ஓட்டலாம். போர் விமானம் ஓட்ட அனுமதியில்லை. இவையெல்லாம், பிரதீபா முப்படைத் தலைவி ஆனதும் மாறுமா? மாறாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. பெண்கள் ராணுவத்தில் இருப்பதைவிட, மக்களவையில் 33 சதவிகிதமேனும் இருப்பதே அதிமுக்கியமானது. அதற்கு பிரதீபா உதவினால் போதும்!
பிரதீபா வேட்பாளராக அறிவிக் கப்பட்டது முதல், பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது சிவசேனைதான். அவர் மகாராஷ்டிர மண்ணின் மகள் என்று சிவசேனை முதலில் வரவேற்றது. பிறகு மண்ணின் மகளா, மருமகளா என்று குழம்பிவிட்டது. ஏனென்றால், பிரதீபா குஜராத்தைச் சேர்ந்த சோலங்கி வகுப்பைச் சேர்ந்தவர். நூறு வருடங்களுக்கு முன்னால் மராட்டிய ஜலகாவ்ன் பகுதியில் பிரதீபாவின் முன்னோர்கள் வந்தேறினார்கள். பிரதீபாவின் கணவர் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த ஷெகாவத் சாதியினர். பிரதீபா அரசியலில் இயங்கியது முழுக்க முழுக்க மராட்டியத்தில்.
முதல் பெண் பிரஸிடென்ட் அமையவிருப்பது, ராஷ்டிரபதிபவன் அதிகாரிகளையும் இந்தி மொழி பண்டிட்டுகளையும் இப்போது மூளையைக் கசக்க வைத்திருக்கிறது. பிரதீபாவை எப்படி ராஷ்டிர’பதி’ - தேசத்தின் கணவர் என்று அழைக்க முடியும்? ராஷ்டிரபத்தினி என்று சொல்வதா? ராஷ்டிர நேத்தா என்பதா? ‘பதி’ என்பதற்கு வெறுமே உரிமையுடையவர், அதிபர் என்று பொருள் இருந்தாலும், இந்தி மொழி இலக்கணப்படி அது ஆண்பால் சொல்!
பெண்கள் மேலும் மேலும் பொது வாழ்க்கையில் முக்கிய இடங்களுக்கு வரும்போதுதான், நம் மொழிகளும் ஆண் மொழிகளிலிருந்து மனித மொழிகளாக மாறும்!
கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை போன்ற சிக்கல்கள் தமிழுக்கும் உண்டு. எனினும் தற்போதைய பிரச்னையில் தமிழில் சிக்கல் இல்லை. ஆணாக இருந்தால், குடியரசுத் தலைவன். பெண்ணானால், குடியரசுத் தலைவி. மரியாதையாக இருவருக்கும் பொதுவான குடியரசுத் தலைவர்.
வாழ்க தமிழ்!
நன்றி: ஆனந்த விகடன்
|