|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 12
சிறுமிகளின் வாழ்க்கையில் 9 வயது முதல் 12 வயதுக்குள் ஏதோ ஒரு நாள், அவள் பூப்பெய்தியதை அவளுக்கும் உலகத்துக்கும் அறிவிக்கும் நாளாக அமைந்துவிடுகிறது. பெண்ணின் உடற்கூறு அமைப்பே இதற்குக் காரணம்.
ஆனால், ஒரு சிறுவன் வயதுக்கு வந்த நாளாக எதைக்கொள்வது? தன் உடலுக்குள் நிகழும் புதிய மாற்றங்களை அவன் உணர்ந்துகொண்ட நாளாகத்தான் அது இருக்க முடியும். அது எந்த நாள்? குரல் தடிப்பதையும் பிறப்பு உறுப்புகளைச் சுற்றிலும், தோள் குழியிலும், முகத்திலும் முடி முளைப்பதையும் அவன் கண்டுகொண்ட நாளா? அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு படுப்பதற்குக் கூச்சமாக உணர்ந்த நாளா? தன் பிறப்பு உறுப்புகளைக் கையால் தடவிப் பார்க்கும்போது சுகமாக இருப்பதாக அறிந்த நாளா? அறிந்தோ அறியாமலோ தன் உடலில் இருந்து விந்து எனப்படும் ஆண் உயிர் திரவம் வெளிப்பட்டதை சிறுவன் அறியும் நாளா?
சிறுமி வயதுக்கு வந்ததை அவள் உடல் உணர்த்தியதும், அதை அம்மாவிடம் சொல்லி, அம்மாவும் அப்பாவுக்குச் சொல்லி, அதைக் கலாசாரச் சடங்காகக் கொண்டாடுவது போல, சிறுவன் தனக்கு விந்து வெளிப்பட்டதை அப்பாவிடம் சொல்லி, அது கொண்டாட்டச் சடங்காக ஆக்கப்படும் வாய்ப்பேது? ஒரு விபரீதக் கற்பனையாகவே கருதப்படும்.
தனக்கு விந்து வெளிப்பட்டதை யாரிடமும் போய்ச் சொல்ல ஒரு சிறுவன் கூச்சப்படும், வெட்கப்படும் நிலையில், அது ஏன் நடக்கிறது என்று சரியாக, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வழியில்லாமல் இருக்கிறது. ஒரு சிறுவனுக்குத் தன் உடல் பற்றி ஏற்படும் எண்ணற்ற சந்தேகங்களில் ஒன்று ஏன் தன்னைப் போன்ற ‘ஆம்பளை’களுக்கு மட்டும் சிறுநீர் கழிப்பதற்கான உறுப்பு உடலுக்கு வெளியில் தொங்குகிறது? இரு புறமும் இருக்கும் விரைப் பைகள் எதற்காக? அவற்றில்தான் சிறுநீர் உற்பத்தியாகி வெளிவருவதாகக் கருதும் சிறுவர்களும் உண்டு!
இனப் பெருக்க உறுப்புகள் குழந்தை கருவில் இருக்கும்போதே உருவாகிவிடுகின்றன. ஆண் குழந்தை, தாயின் கருப்பைக்குள் இருக்கும்போது அதன் விதை(ர)க் கொட்டைகள் முதலில் உடலுக்குள்ளேயே இருக்கின்றன. கரு வளரும் கடைசி இரண்டு மாதங்களில்தான் அவை வெளிப்புறம் உள்ள விதை(ர)ப் பைக்குள் பொருந்திக்கொள்கின்றன.
விதைப் பைகள் வெளிப்புறம் இருப்பதற்குக் காரணம், அவற்றில் இருக்கும் விதைகள்தான் உயிரணுத் திரவமான விந்துவைத் தயாரிக்கின்றன. இதற்குத் தேவைப்படும் வெப்ப நிலை, உடலின் வெப்பத்தைவிடக் குறைவாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.
வெப்ப நிலையைச் சீராக வைத்திருப்பதற்காக, இந்த விதைப்பைகள், வெளி வெப்பம் அதிகமானால் விரிவடையும். வெளியில் குளிரானால் சுருங்கிக்கொள்ளும். இந்த மாற்றங்களை நம்மால் உணரக்கூட முடியாது. ஆனால், இவை தொடர்ந்து நடக்கின்றன.
எப்போதிலிருந்து சிறுவனின் உடலில் விந்து தயாராகத் தொடங்குகிறது? சுமாராகப் பத்து வயதுக்கு மேல்தான். சிறுமிகளுக்கு இனப்பெருக்க ஆயத்தங்கள் உடலுக்குள் தொடங்கும் வயதைவிட, சிறுவன்களுக்குச் சற்று தாமதமாகவே ஆரம்பிக்கும். இருவருக்கும் இதற்கான உத்தரவு வருவது மூளையில் ஹைப்போதலாமஸின் கீழ்ப் பகுதியில் பதுங்கியிருக்கும் வேர்க்கடலை அளவிலான பிட்யூட்டரி சுரப்பியிடமிருந்துதான்.
பிட்யூட்டரியிலிருந்து வரும் சுரப்புகள், விதைக் கொட்டைகளுக்கும் வந்து அவற்றை ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டிரானைச் சுரக்கச் செய்கின்றன. இந்தச் சுரப்புதான் சிறுவன் உடலில் பல வளர்ச்சி மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படுத்துகிறது.
முதல் கட்டத்தில் விதைப்பையும் விதைகளும் பெரிதாகின்றன. ஒவ்வொரு விதையும் முட்டை வடிவில் 5 செ.மீ. நீளமும் 3 செ.மீ. சுற்றளவும் உடையவை. எபிடிடிமிஸ் எனப்படும் சுருள் விந்துக் குழாய்கள் ஒவ்வொரு விதையின் பக்கவாட்டிலும் உள்ளன. இவை சுருள் சுருளாக இருக்கும்.
அவை வாஸ் டெஃபெரென்ஸ் எனப்படும் விந்துக் கடத்தி நாளங்களுடன் இணைந்திருக்கின்றன. இந்தத் தசை நாளங்கள் உடலின் கீழே தொங்கும் விதையிலிருந்து, உடலுக்குள் சிறுநீர்ப்பை எனப்படும் யூரினரி ப்ளாடரின் பக்கவாட்டில் இருக்கும் ப்ராஸ்டேட் சுரப்பி, விந்துச் சேகரப் பைகள் இரண்டுடனும் சென்று சேர்கின்றன. விதையில் உருவாகும் விந்து திரவத்தை இந்த நாளங்கள் கொண்டுவரும்போது ப்ராஸ்டேட் சுரப்பியும், விந்து சேகரப் பையும் மேலும் சில திரவங்களைச் சேர்த்து அனுப்புகின்றன.
இப்போது விந்து, சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றி எடுத்துச் செல்லும் யுரீத்ரா எனப்படும் சிறுநீர்ப் பாதை வழியாகவேதான் ஆண் குறிக்குச் சென்று வெளியேற்றப்படும். சிறுநீரை அனுப்புவது ப்ளாடர். விந்துவை அனுப்புவது விதைப்பையும் அதன் துணைச் சுரப்பிகளும். இரண்டையும் வெளியேற்றுவது ஆண் குறி.
ஆண் குறி என்று நவீன மொழியிலும், லிங்கம் என்று மரபு மொழியிலும் சொல்லப்படும் வெளியேற்றுக் குழாயின் நுனிப் பகுதி சற்றே விரிந்து காணப்படும். க்ளான்ஸ் எனப்படும் இந்தப் பகுதியை மூடியிருக்கும் மேல் தோல் சுருளக்கூடியதாக இருக்கும். இந்த மேல் தோலை அறுவை சிகிச்சை செய்து நீக்குவதைத்தான் சுன்னத் (கல்யாணம்) செய்வது என்று இஸ்லாமிய மதச் சடங்காகக் குறிப்பிடுகிறோம். இப்படி ஆண் குறியின் மேல் தோலை நீக்கும் பழக்கம் உலகில் பல பகுதிகளில் பல்வேறு இனக் குழுக்களில் உண்டு.
ஆண் குறியில் தொற்றுக்கள் ஏற்படாமல் காப்பாற்ற, நுனிப் பகுதியில் மேல் தோலின் அடியில் அழுக்கு சேராமல், குளிக்கும்போது தூய்மைப்படுத்த வேண்டும் என்பதை பல அம்மாக்களும் அப்பாக்களும் சிறுவர்களும் அறியாமலே இருக்கிறார்கள் என்பதை அண்மையில் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
ஒரு பயிலரங்கில் குளிக்கும் முறை பற்றிக் கேட்டபோது, பல பத்து வயதுச் சிறுவர்கள் தங்கள் ஜட்டியைக் கழட்டாமலேதான் குளிப்போம் என்று சொன்னார்கள். கடைசியாக துவட்டிக்கொள்ளும்போது டவலைச் சுற்றிக்கொண்டு ஜட்டியைக் கழற்றி எறிவோம் என்றார்கள். அதாவது தங்கள் பிறப்புறுப்புப் பகுதியை தாங்கள் பார்ப்பதைக்கூட அவர்கள் விரும்பவில்லை. ஷேம் ஷேம் பப்பி ஷேமின் உச்சம் இது!
ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தங்கள் உடலை ஐயம் திரிபற அறிய வேண்டும். உடல் நமது கருவி. கருவி மட்டுமல்ல... அதுதான் நாம்! உடல் இல்லாமல் உள்ளம் இல்லை.
ஒரு சிறுமியின் உடலில் சினைப் பைகள் முட்டை தயாரிப்பதும், அதைக் கருப்பைக்கு அனுப்பிவைப்பதும், ஆண் உயிரணு வந்து அதை சந்தித்துக் கருத்தரித்தால், கருவை வளர்க்கத் தயார் நிலையில் கருப்பை இருப்பதும் அப்படி எதுவும் நிகழாவிட்டால், உதிரப்போக்காக எல்லாம் வெளியேற்றப்படுவதும், மாதம் தோறும் நடக்கிறது என்று பார்த்தோம்.
இதே போல, ஒரு சிறுவனின் உடலில் விந்து தயாராவதும் அது ஒரு பெண் உடலில் புகுந்து கருத்தரிப்புக்குச் செல்லாவிட்டால், சுய இன்பம் மூலமாகவோ தன்னிச்சையாக இரவுக் கனவுகளினாலோ வெளியேற்றப்படுவதும் எத்தனை நாளைக்கு ஒரு முறை நிகழ்கிறது? இதற்கும் காலக் கணக்கு உண்டா?
பெண்களுக்கு:
1. பூப்பெய்தியதும் அதை யாரிடம் சொன்னீர்கள்?
2. அவர்களுடைய பதில் வினைகள் உங்களுக்கு எந்த உணர்வை ஏற்படுத்தின?
3. இது தொடர்பாக வீட்டில் செய்யப்பட்ட சடங்குகள், கொண்டாட்டங்களின்போது உங்கள் மன நிலை என்னவாக இருந்தது?
4. ஏன் ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதற்கான முழு விளக்கத்தை எப்போது, எந்த வயதில், யாரிடமிருந்து தெரிந்துகொண்டீர்கள்?
5. ஆண்களின் இனப் பெருக்க உறுப்புகளைப் பற்றி முதலில் எப்போது தெரிந்துகொண்டீர்கள்? அந்த அனுபவம் அருவருப்பாக இருந்ததா? அறிவுபூர்வமாக இருந்ததா?
ஆண்களுக்கு:
1. பள்ளிப் பருவத்தில், உங்களுக்குத் தெரிந்த சிறுமி பூப்பெய்திய தகவல் கேட்டதும் அது பற்றி அப்போது என்ன உணர்வு ஏற்பட்டது?
2. பூப்புச் சடங்குகளில் கலந்துகொள்ளும்போது உங்கள் மன உணர்வுகள் என்ன?
3. உங்கள் வீட்டில் சகோதரி/அம்மா/மனைவி ஆகியோரின் மாதப்போக்கின்போது உங்கள் உதவிகள் என்ன?
4. ஏன் பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதற்கான முழு விளக்கத்தை எப்போது, எந்த வயதில், யாரிடமிருந்து தெரிந்துகொண்டீர்கள்?
5. முதன் முதலில் உங்கள் உடலிலிருந்து விந்து வெளியேறியது எப்போது, எப்படி என்பது நினைவிருக்கிறதா? அன்றைய மன நிலை என்ன? அது பற்றி இன்றைய மன நிலை என்ன?
நன்றி: ஆனந்த விகடன்
|