|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 9
எல்லாச் சிறுவர்களுக்கும் இருப்பதுபோல, தனக்கு இரண்டு விரைக் கொட்டைகள் இருப்பதற்குப் பதிலாக மூன்று உள்ளதாகப் பயிலரங்கில் தெரிவித்த சிறுவனிடம், ‘இப்படி ஒரு பிரச்னை இருப்பது, உன் பெற்றோருக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன். ‘தெரியாது. இதுவரை சொல்லவில்லை’ என்றான். முதலில் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டுப் பிறகு மருத்துவரிடம் ஆலோசிக்கும்படி சொன்னேன். இதுவரை அவன் பெற்றோருக்கு இது பற்றி ஏன் தெரியாமலே இருந்தது என்று யோசித்தேன். எல்லாருமே யோசிக்க வேண்டும்.
வகுப்புத் தோழனிடம் இதைச் சொன்ன சிறுவன், ஏன் தன் பெற்றோரிடம் சொல்லவில்லை? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதல் காரணம், இப்படிப்பட்ட விஷயங்களை அப்பாவிடமோ, அம்மாவிடமோ பேசத் தயங்கும் சூழ்நிலை வீட்டுக்குள் இருப்பதுதான். செக்ஸ், பிறப்பு உறுப்புகள் தொடர்பான எந்த விஷயத்தைப் பற்றியும் லேசாக ஏதாவது பேசினாலே, அம்மாவும் அப்பாவும் எரிச்சல் அடைகிறார்கள்; அல்லது தர்மசங்கடமாக நெளிகிறார்கள்; பேச்சை மாற்றுகிறார்கள்; தவிர்க்கிறார்கள் என்பதையெல்லாம் எட்டு வயதுச் சிறுவனும் சிறுமியும் கூர்மையாகக் கவனிக்கிறார்கள். எனவே, அதையொட்டி தாங்களும் இவை தொடர்பான சின்னச் சின்னப் பிரச்னை களைக்கூட அப்பா, அம்மா மற்றும் வீட்டுப் பெரியவர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். வகுப்புத்தோழன், தோழிகளிடம்தான் அடுத்து இதைப் பற்றி சங்கடமில்லாமல் பேச முடியும் என்று உணர்கிறார்கள்.
எட்டு வயதை அடையும்போது ஒரு சிறுவனும் சிறுமியும் முன்போல தங்கள் பெற்றோர் தங்களை முத்தம் கொடுத்துக் கொஞ்சுவது, அணைப்பது போன்றவற்றைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள். அதிலும் பிறர் எதிரில் இப்படிக் கொஞ்சுவது, அவர்களை கூச்சப்படுத்துகிறது. இதற்கெல்லாம் காரணம், தங்கள் உடலைப் பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு அதிகரித்து வருவதுதான்.
கூடவே, இன்னொரு ஆற்றலும் இப்போது அவர்களுக்கு வந்துவிடுகிறது. அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம் என எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தவும், மறைக்கவும் கற்றுக் கொள்கிறார்கள்.
எட்டு வயதில் தனக்கென்று ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு கருத்து சிறுவனுக்கும் சிறுமிக்கும் உருவாக ஆரம்பித்துவிடுகிறது. அது சரியா, தவறா என்பது முக்கியமல்ல. ஆனால், எதைப் பற்றியும் தன் கருத்து என்ற ஒன்றை உருவாக்கிக்கொள்ளும்போதுதான் ஒவ்வொருவருக்கும் அவருடைய தனிப்பட்ட பர்சனாலிட்டி எனப்படும் ஆளுமை உருவாக ஆரம்பிக்கும்.
அந்தப் பருவத்தில் தான் எட்டு வயதுச் சிறுவனும் சிறுமியும் இருக்கிறார்கள். படிப்பு, விளையாட்டு, எதிர்காலத்தில் டாக்டர் ஆவதா, தலைவர் ஆவதா, ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா, அசின் ரசிகனா, த்ரிஷா ரசிகனா, ஜெட்டெக்ஸா, போகோவா என்பதைப் பற்றியெல்லாம் கருத்து இருப்பது போல, செக்ஸ் எனப்படும் பாலியல் தொடர்பான விஷயங்கள் பற்றியும் அவர்களுடைய கருத்துக்கள் இப்போது உருவாகத் தொடங்குகின்றன.
எட்டு வயது முதல் சிறுவன்-சிறுமி மனதில் உருவாகும் செக்ஸ் பற்றிய கருத்துக்கள் எப்படி உருவா கின்றன என்பதைக் குடும்பமும், நண்பர்களும், மீடியாவும், அறிந்தும் அறியாமலும்(!) மிகப் பெரும் அளவில் முடிவு செய்கின்றன.
குடும்பம், செக்ஸ் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து சிறுவர்களை அந்நியப்படுத்துகிறது. மீடியாவோ அதைப் பற்றிக் கவர்ச்சியாகப் பேசி, சிறுவர்களுடன் நெருக்கமாகி விடுகிறது. நண்பர்கள் தங்களுடைய முழுக் குழப்பங்களையும், அரை அறிவுகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். எங்கிருந்தும் சரியான, முறையான தகவல்கள் கிட்டாதவர்களாகவே நம் சிறுவர்கள் வளர்கிறார்கள்.
செக்ஸ் பற்றிய குடும்பத்தின் தயக்கத்துக்கும் மீடியாவின் கவர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது அருவருப்பு, ஆசை என்ற இரு உணர்ச்சிகள்தான். இயற்கையில் செக்ஸ் உறுப்புகள் மனித உடலில் கழிவு உறுப்புகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே சிறுநீர், மலம் ஆகிய கழிவுப் பொருட்களுக்கு நிகராகவே, இனப்பெருக்கம் தொடர்பான உடல் சுரப்புகளான ஆணின் விந்து, பெண்ணின் சினைமுட்டை வெளியேற்றமான மாத விலக்கு ஆகியவை இழிவான கழிவுகளாகத் தவறாகக் கருதப் படுகின்றன. ஆனால், இனப்பெருக்கம் என்பதும், உடல் உறவின் சுகம் என்பதும் மனித இனத்தின் தேவைகள். எனவே, கழிவு உறுப்புடன் தொடர்புபடுத்திய அருவருப்பு மனநிலையைக் கடந்து வர, மிகைப்படுத்தப்பட்ட கவர்ச்சி, செக்ஸுக்கு ஏற்றப்படுகிறது.
மனித வரலாற்றில், நாகரிக வளர்ச்சியில் முக்கிய பாத்திரம் வகிக்கும் மதங்கள் அனைத்துமே, செக்ஸைத் தவிர்க்க இயலாத பாவமாகவே கருதுகின்றன. அது கெட்ட விஷயம்; தப்புக் காரியம். ஆனால், மனித இனம் அழியாமல் இருக்க, வேறு வழியில்லாமல் அதைப் பின்பற்றியாக வேண்டி யிருக்கிறது என்ற அணுகுமுறையையே மதங்கள் முன்வைத்திருக்கின்றன.
குடும்பம், இந்த மன நிலையை சிறுவர்கள் மனதில் விதைக்கிறது. படிக்கிற வயதில் பையனும் பெண்ணும் ‘தீய’ சிந்தனைகள் வராமல் படிப்பில் கவனம் செலுத்துவது எப்படி என்ற பெற்றோரின் மனத் தவிப்புக்குப் பின்னால், ஆட்சி செலுத்தும் கோட்பாடு, செக்ஸ் ‘தீயது’ என்பதுதான். ஆனால் வயது வந்தபின், செக்ஸ் தரும் சுகத் துக்கான ஆசையும், நமது வம்சம் தழைக்க வேண்டும் என்ற விருப்ப மும் அருவருப்பு - பாவக் கருத்தி லிருந்து செக்ஸை மீட்க முயற்சிக் கின்றன. அங்கேதான் மீடியாவின் கவர்ச்சிப் பூச்சு உவந்து ஏற்கப் படுகிறது. இந்த இரு நிலைகளுக்கும் இடையே நமது சிறுவர்கள் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள், நாம் நமது சின்ன வயதில் சிக்கியிருந்தது போல!
இன்று உண்மையில் இது டீன் ஏஜ் சிக்கல் அல்ல! டீன் ஏஜ் எனப்படும் 13 வயது தொடங்கும் முன்பே, 9 வயதிலிருந்தே உடலில் ரசாயன மாற்றங்கள் ஆரம்பித்துவிடுகின்றன. பல்வேறு சமூக, சுகாதார காரணங்களால், இன்று சிறுமிகள் பூப்பெய்தும் வயது 10, 9 எனக் குறைந்து வருகிறது.
9 வயதில் முதல் மனச் சிக்கல் - சுய இன்பம் எனப்படும் ‘மாஸ்ட்ரு பேஷன்’ பற்றியதுதான். ‘ஐயையே, எங்க பசங்க அதெல்லாம் செய்ய மாட்டாங்க’ என்று நம்பிக்கொண்டு இருக்கும் பெற்றோர் கவனிக்கவும் - நம் வீட்டு சிறுமியும், சிறுவனும் கோடியில் ஒருவராக இருந்தால்தான் அது சாத்தியம்!
சுய இன்பம் அனுபவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் மகிழ்ச்சி அடைந்து, மீண்டும் மீண்டும் அந்த அனுபவத்துக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு சிறுமியும் சிறுவனும் கூடவே கடுமையான மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்கள்.
‘இது சரியா? தப்பா?’ என்பது ஒழுக்கம் சம்பந்தப்பட்ட மன உளைச்சல்.
‘இது ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?’ என்பது பயத்தின் அடிப்படையில் எழும் மன உளைச்சல்.
யாரைக் கேட்பார்கள் நம் சிறுவர்கள்?
1. பள்ளிக்கூடம் செல்லும்போது முத்தம் கொடுத்து அனுப்புவதை உங்கள் அம்மா நிறுத்தியது எந்த வயதில்?
2. அம்மா, அப்பா முத்தம் கொடுப்பதை நீங்கள் கூச்சமாக உணரத் தொடங்கியது எந்த வயதில்?
3. செக்ஸ் என்றால், அது ஏதோ தப்பான விஷயம் என்று முதன்முதலில் எந்த வயதில் உங்களுக்குத் தோன்றியது?
4. அது ஒன்றும் தப்பான விஷயம் அல்ல என்று எந்த வயதில் நினைக்கத் தொடங்கினீர்கள்?
5. சுய இன்பம் அடைய முயற்சித்தது உண்டா? ஆமெனில் எந்த வயதில்?
6. அது குறித்து பயம் இருந்ததா? அந்தப் பயம் எந்த வயதில் போயிற்று?
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல, உங்களுக்கானவை... உங்களுடையவை!
நன்றி: ஆனந்த விகடன்
|