|
ஞாநி
அறிந்தும் அறியாமலும் - 2
வாய்விட்டு அழுதால், நோய் விட்டுப் போகும்!
அ - தமிழ் மொழியின் முதலெழுத்து.
தமிழ் கற்பதற்கு முன்பே நாம் கற்ற முதல் மொழி - அழுகை!
வாழ்க்கையின் தொடக்கமும் அழுகை. அங்கே தொடங்கும் நம் வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது. ‘பிறக்கும்போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய்... ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே’ என்று வருந்தி அழுகிறான் கவிஞன்.
குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சைச் செயல். அறியாமலே அழுதோம். முதல் அழுகை, மூச்சு விடுவதற்கு நுரையீரல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள! அடுத்தடுத்த அழுகைகள் பசியை அறிவிக்க!
வளரும்போதும், வளர்ந்த பிறகும் அழுவதை, அறிந்து அழுகிறோமா? எப்போது அழலாம், எப்படி அழலாம், எங்கே அழலாம் என்பதையெல்லாம் எப்படித் தீர்மானிக்கிறோம்? நாமே தீர்மானிக்கிறோமா, அல்லது மற்றவர்கள் நமக்காகத் தீர்மானிக்கிறார்களா?
யோசித்துப் பாருங்கள்... பொது வாழ்க்கையில் இருக்கும் பிரமுகர்கள் யாரையாவது அழுகிற தோற்றத்தில் நாம் பார்த்திருக்கிறோமா? கருணாநிதியோ ஜெயலலிதாவோ மன்மோகன்சிங்கோ சோனியாவோ வாழ்க்கையில் அழுததே இல்லையா என்ன? ஆனால், அழுகிற பிம்பம் அவர்களைப் பற்றி மக்கள் மனதில் என்ன கருத்தை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையோடு அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. அதனால்தான், அபூர்வமாக வைகோவோ கபில்தேவோ மேடையிலோ, டி.வி. நிகழ்ச்சியிலோ பலர் அறிய அழுகிறபோது, அதுவே ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகி விடுகிறது.
நம் குடும்பங்களில், வீட்டுக்குள் யார் எப்போது அழுதோம் என்று யோசித்துப் பாருங்கள். அப்பா அழுதது நினைவிருக்கிறதா? அம்மா? அக்கா? தம்பி? நீங்கள்..?
பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். ஆண்கள் எதற்கும் அழமாட்டார்கள்... அழக் கூடாது! இது நம் புத்தியில் பதிக்கப்பட்டு இருக்கிற கற்பிதம். ஏன் அப்படி? அழுகை என்பது பலவீனம் என்ற கருத்துதான் இதற்கெல்லாம் அடிப்படை. அதையொட்டி பெண் பலவீனமானவள்; ஆண் வலிமையானவன். பலவீனமானவள் அழலாம், வலியவன் அழக் கூடாது என்று கற்பிதங்கள் நீளுகின்றன.
இதன் விளைவு... பெண்களின் அழுகை அவர்களுடைய பலவீனமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் அது வருத்தமும் அல்ல, பலவீனமும் அல்ல; கோபத்தின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள எனக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்’ என்று வள்ளுவன் சொல்வது, கோபத்தின் வெளிப் பாட்டைத்தான்! கோபம் வந்தால் அதை வெளிப்படுத்த ஆண் போல் வன்முறையில் இறங்கத் தயங்குவதால், ஆற்றாமையில் அழுகிறாள் பெண்.
அழுகைக்கு நாம் வைத்திருக்கும் இன்னொரு அ(ன)ர்த்தம் தோல்வி. தோற்றால் அழுவதும், ஜெயித்தால் எக்களிப்பதும் இயல்பென்று நாம் நம்புகிறோம். ஆழ்ந்து யோசித்தால்... எல்லா வருத்தங்களுக்கும் அழ வேண்டும் என்று அவசியமில்லை; எல்லா மகிழ்ச்சிகளுக்கும் எம்பிக் குதிக்கவும் தேவையில்லை!
எப்போது அழலாம், எதற்கெல்லாம் அழலாம் என்பதைப் பிறர் தீர்மானிக்கத் தேவையில்லை. நமக்காக நாம் தான் தீர்மானிக்க வேண்டும். நடைமுறையில் இதைத் தப்புத் தப்பாகத் தீர்மானிப் பதில்தான் அதிகச் சங்கடங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.
அதே சமயம், நம் அழுகையை மற்றவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அடுத்தவர் அழுகையை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவுகளும் நமக்குத் தேவைப்படுகின்றன.
உதாரணமாக, தியேட்டரில் ஒரு படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது உணர்ச்சி பூர்வமான ஒரு காட்சி நம்மை நெகிழவைக்கிறது. என்ன செய்கிறோம்..? வீட்டில் டி.வி. தொடர் பார்க்கும்போதுகூட சிலர் நெகிழ்ந்து அழுகிறார்கள். அதில் பெண்களே அதிகம். அதே காட்சியைப் பார்த்து தானும் நெகிழ்ச்சி அடையும் ஆண்கள், பெண்ணைப் போல பகிரங்கமாக அழுவதில்லை. கண்ணில் நீர் துளிர்க்கும் முன்பே, வேறு ஏதோ வேலை இருப்பது போல சட்டென்று எழுந்து போய்விடுகிறார்கள்.
இருட்டு நிரம்பிய தியேட்டரில் எழுந்து போக வழியில்லை. கலங்கிய கண்களை, முகம் துடைப்பது போன்ற பாவனையில் ஆண் துடைத்துக்கொள்கிறான். பெண் இரு இடங்களிலும் பகிரங்கமாக அழுதுவிடும் வாய்ப்பே அதிகம்.
மற்றவர்கள் முன் அழாமல் இருந்தால்தான், தான் ஆண்மையுள்ளவன் என்று ஆண் நிஜமாகவே நம்ப ஆரம்பித்துவிடுகிறான். அதனால், அவன் அழ வேண்டிய சந்தர்ப்பங்களில்கூட அழாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உள்ளுக்குள்ளேயே அந்த வலியைப் புதைத்துவைக்கிறான். அசலாக அந்த வலி புதைக்கப்படுவதில்லை; தேவையற்ற மன அழுத்தமாக விதைக்கப்படுகிறது.
அழுகை என்பதும் சிறுநீர் கழிப்பது போலத்தான்! சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால் எப்படி உடல் பாதிக்கப்படுமோ, அதே போலத்தான் அழுகையை அடக்கி வைத்திருப்பதும் மனதைப் பாதிக்கும். மகன் இறந்ததற்கு வாய் விட்டு அழாத ஆண் பேராசிரியர் பாத்திரம் மன அழுத்தத்தால் புத்தி பேதலித்துப் போயி ருப்பதை ‘மொழி’ படத்தில் சித்திரித்திருந்தார்கள்.
வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில், ‘இந்தத் தருணத்தில் நான் அழுதிருக்கக் கூடாது; கோபம் தான் கொண்டிருக்க வேண்டும் என்று உணராமல் அழும் பெண், கோபப்பட்டு இருந்தால் தனக்குக் கிடைத்திருக்கக்கூடிய உரிமைகளைக் கூட, அழுததால் பெற்ற சலுகைகளாக நம்பத் தொடங்குகிறாள்.
இந்தச் சூழ்நிலையிலிருந்து பெண்ணுக்கும் விடுதலை வேண்டும்; ஆணுக்கும் வேண்டும். வாய் விட்டு அழும் உரிமை, இப்படி அழுதால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லாத தெளிவு இரண்டுமே வேண்டும்.
உண்மையில் அழுகை என்பது என்ன? ஒரு வெளிப்பாடு. மகிழ்ச்சி போல வருத்தம் என்பதும் ஓர் உணர்ச்சி. மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் பல வழிகள் இருப்பது போல, வருத்தத்தை வெளிக் காட்டப் பல வெளிப்பாடு கள் உள்ளன. அவற்றில் ஒன்று அழுகை. அவ்வளவு தான்!
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடி ஜெயிக்க முயற்சித்து, தேர்வாகாமல் ‘தோற்று’ப்போகும் குழந்தைகள் அழுவதையும் அப்படியே காட்டுவது இப்போதைய ஃபேஷனாகியிருக்கிறது.
அந்தக் காட்சியைப் பார்க்கும் நாம் அது பற்றி என்ன நினைக்கிறோம்? அந்தக் குழந்தையைப் பற்றி என்ன நினைக்கிறோம்? எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் குழந்தை அதைப் பற்றி என்ன நினைக்கிறது? அதே வயதுடைய இதர குழந்தைகள், அழும் குழந்தையின் வகுப்பு நண்பர்கள் அந்த அழுகையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
குழந்தையின் மன வளர்ச்சியில் அழுகையின் பங்கு என்ன என்று தொடர்ந்து விவாதிப்போம். அதைத் தொடரும் முன்னால், சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?
2. அப்போது எதற்காக அழுதேன்?
3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?
4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?
5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?
6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?
7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?
8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?
9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?
10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?
நன்றி: ஆனந்த விகடன்
|