|
ஞாநி
அசுத்தமானவளா பெண்?!
சினிமா + மதம்! எவ்வளவு ஆபத்தான காம்பினேஷன்!
இந்திய சமூகத்தைப் பொறுத்தமட்டில் சினிமாவும் மதமும்தான் முதன்மையான இரண்டு போதைகள். அரசியல் போதைகூட இங்கே மூன்றாவது இடத்துக்கே உரியது. தேர்தல் நேரங்களில் மட்டுமே அது கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது.
18 வருடங்களுக்கு முன், மரபை மீறி கன்னட நடிகை ஜெயமாலா, ஐயப்பன் சந்நிதிக்குள் நுழைந்தாரா இல்லையா என்பது ஒரு விறுவிறுப்பான துப்பறியும் கதைக்கு நிகரான சுவாரஸ்யத்துடன் விவாதிக்கப்படுகிறது. “அவர் மட்டுமா, நானும்தான்” என்று இன்னொரு நடிகை சுதா சந்திரன் சொல்கிறார். இதுபோல் இன்னும் சிலரும் வருவார்களோ, என்னவோ!
மீரா ஜாஸ்மின், தான் வழிபட நுழைந்ததால் தீட்டுப்பட்டுவிட்ட வேறொரு கேரளக் கோயிலுக்குத் தோஷம் கழிக்க ஆகும் செலவைக் கொடுக்க முன் வந்திருக்கிறார். ஜெயமாலாவும் அதற்குத் தயார். ஆனால், இருவருமே தாங்கள் விரும்பும் கடவுளை, கோயிலுக்குச் சென்று கும்பிடத் தங்களுக்கு உரிமை உண்டு என்று ஏன் போராட விரும்பவில்லை?
இருவருக்குமே கோயிலின் விதிமுறைகள் தெரிந்திருந்தும், அதை மீறும் அளவுக்குப் பக்தி இருந்திருக்கிறது. ஆனால், விதிகளைப் பெண்களுக்கும் ஆதரவாக மாற்றுங்கள் என்று சொல்லவில்லை. இப்படியொரு உரிமைப் போராட்டம் நடத்த அவர்கள் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒரு பெண் என்ற அடிப்படையில் இரண்டாம் தரப் பக்தராகக் கருதப்படுவது முதல் காரணம். சினிமாவில் நடிக்கும் பெண்களை மற்ற பெண்களைவிட இழிவாகவே நமது சமூகம் இன்னமும் கருதுகிறது என்கிற கசப்பான உண்மை மற்றொரு காரணம்.
நமது சமூகத்தின் எண்ணற்ற போலித்தனங்களில் இதுவும் ஒன்று. நமக்கு டி.வி&யில் 24 மணி நேரமும் சினிமா காட்டினால்கூடப் போதவில்லை. பள்ளிக்கூட ஆண்டு விழா முதல் ஃபேன்ஸி ஸ்டோர் திறப்பு விழா வரை எல்லாவற்றுக்கும் சினிமா நடிகைகள் நமக்கு வேண்டும். ஆனால், அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வீடு வாடகைக்குத் தருவது முதல் திருமண சம்பந்தம் செய்வது வரை எல்லாவற்றிலும் சிக்கல்கள் செய்வோம்.
கேரளா, இந்தியாவில் மிகவும் முற்போக்கான மாநிலம் என்கிறார்கள். நூறு சதவிகித எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலம். குழந்தை இறப்பு விகிதம் முதல் ஆண் & பெண் விகிதாசாரம் வரை வளர்ச்சி அளவு கோல்களில் எல்லாம் முன்னேறிய மாநிலம். அங்கே பெண் பக்தர்களின் நிலை ஏன் இப்படி இரண்டாம் இடத்தில் இருக்கிறது? தொடர்ந்து கம்யூனிஸ்ட்களை ஆட்சியில் அமர்த்தும் மாநிலம், ஏன் மத விவகாரங்களில் 17-&ம் நூற்றாண்டிலேயே இருக்கிறது?
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் நடக்கும் ஆராதனை அபிஷேக கட்&அவுட் கலாசாரம் கேரளத்தில் இல்லை. ஆனால், எந்த வயதிலும், எந்த உடல்நிலையிலும் பெண்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையை தமிழகத்தின் மேல்மருவத்தூர்தான் சாதித்திருக்கிறது. உலக அளவில் பக்தர்களைத் திரட்டி வைத்திருக்கும் ஒரே பெண் சாமியார் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பெண் பக்தர்களின் நிலை ஏன் கேரளத்தில் இப்படி இருக்கிறது?
கோயிலுக்குள் பெண்கள் நுழைந்த பிரச்னையிலான சர்ச்சைகளை ஒதுக்கிவிட்டு, அடிப்படையான சில கேள்விகளைப் பரிசீலிப்போம்.
கேள்வி 1: பெண்கள் நுழையக் கூடாதவை என்று சில கோயில்கள் இப்போதும் இருப்பது சரிதானா?
இதைச் சரியென்று ஏற்றுக்கொண்டால், சாதி அடிப்படையில் சிலர் நுழையக் கூடாத கோயில்-கள் என்று இருப்பதும் சரியென்றாகிவிடும். ஒன்றை நீக்கிய பிறகு இன்னொன்றையும் நீக்குவதுதான் நியாயமானது. மாற்றாமல் வைத்திருப்பது, பெண்களை இழிவானவர்களாக மத அமைப்புகள் கருதுகின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்குச் சமமாகும்.
பழைய நம்பிக்கை என்பதால், ஒன்றைக் காலங்காலமாக நீடிக்க அனுமதிப்பது சரியல்ல. ஒரு காலத்தில் நரபலிகூட மத நம்பிக்கைதான். இன்று அதை ஏற்பதில்லை அல்லவா? எனவே, எந்த நம்பிக்கையும் இன்னொரு உயிருக்கு வலியோ, தீங்கோ, இழிவோ தராத வரையில் மட்டுமே அதை அனுமதிக்க முடியும்.
கேள்வி 2: பெண்கள் உடற்கூறு அடிப்படையில் ஆண்களிலிருந்து வித்தியாசப்படுவதால், அவர்களை மாதவிலக்குக் காலங்களில் புனிதமான இடங்களிலிருந்து விலக்கிவைப்பது நியாய மானது என்ற வாதம் சரியா?
சரியல்ல. விவசாயத்தை மனிதர்கள் கண்டுபிடித்து மேற்கொண்ட ஆரம்ப காலம் வரை, சமூக அமைப்பும் குடும்ப அமைப்பும் பெண்ணை முன்னிறுத்தியே, பெண்ணின் தலைமையிலேயே இருந்து வந்தன என்பது வரலாற்று உண்மை. அந்தச் சமூகத்தில் பெண் தெய்வங்கள் முதன்மையாக இருந்த வரையில், பெண் அசுத்தமானவளாகவோ, விலக்கி வைக்கப்படவேண்டியவளாகவோ கருதப்படவில்லை. தனி உடைமைச் சமுதாயம் வளர்ந்து, ஆண் கைக்கு அதிகாரம் மாறிய பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டது. எனவே, மறுபடியும் ஆண்&பெண் சமத்துவத்துக்காகப் போராடும் 21&ம் நூற்றாண்டில், பழைய ஆணாதிக்க விதிகளின்படி பெண்ணை அசுத்தமானவளாகப் பார்க்கும் அணுகுமுறையே இழிவானது; தவறானது.
கேள்வி 3: இந்தப் பிரச்னைகளில் அரசாங்கம் தலையிட வேண்டுமா? அல்லது, மத அமைப்புகளே தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கிவிட வேண்டுமா?
நிச்சயம் அரசாங்கம் தலையிடத்தான் வேண்டும். ஏனென்றால், இது மனித சமத்துவம், மனித உரிமை தொடர்பான பிரச்னை. ஆனால், நமது அரசாங்கங்கள் மதவாதிகளின் தவறுகளுக்கு எதிராகத் தலையிடுவது இல்லை. அவற்றுக்கு ஆதரவாகத் தலையிடுவதே வழக்கம். அண்மையில், இமயமலையில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கம் தொடர்பான சர்ச்சை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
அமர்�இயற்கையாக நடக்கும் நிகழ்ச்சி. இதற்கு stalagmite என்று பெயர். இந்த ஆண்டு, இமயமலை உச்சியில் மழையும், பனிப்பொழிவும் மிகவும் குறைந்ததால், குகையில் (லிங்க வடிவிலான) பனி வழக்கம் போலக் குவிந்து உறையவில்லை. இதில் அரசு தலையிடத் தேவையே இல்லை. எந்த அளவு லிங்கம் இருக்கிறதோ, அந்த அளவிலேயே அதை பக்தர்கள் வழிபட்டுவிட்டுச் செல்லட்டும் என்று இராமல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர், பஞ்சாபிலிருந்து உலர் பனியை வர வழைத்து, வழக்கமான லிங்கம் அளவுக்கு அமர்நாத் லிங்கத்தை செயற்கையாக உருவாக்க ஏற்பாடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இமயமலை, சபரிமலை இவற்றின் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, காடுகள் அழிந்து, மழை குறைந்து வரும் பிரச்னை-யில் முதலில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும். பக்தர்களானாலும், யாரானாலும், சாதி, ஆண், பெண் அடிப்படையில் வேறுபடுத்தப்படும் மனித உரிமைப் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதும் அரசின் கடமை.
கேள்வி 4: சபரிமலைப் பிரச்னை, பருவமெய்திய பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது பற்றியது. ஆனால், மீரா ஜாஸ்மின் பிரச்னை வேற்று மதத்தினர் இந்து ஆலயத்தில் நுழைவது பற்றியது அல்லவா?
ஆம். கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, வழிபாட்டுத் தலங்களில் வேற்றுமதத்தினர் நுழைவதற்கு எந்தத் தடையும் இல்லை. தமிழ் நாட்டிலேயே நாகூருக்கும் வேளாங்கண்ணிக்கும் ஏராளமான இந்து பக்தர்கள் தடையின்றிச் சென்றுவருகிறார்கள். இந்து ஆலயங்களில் மட்டும் பிற மதத்தினருக்கு உள்வட்டத்தில் நுழையத் தடை இருக்கிறது. எந்த ஆகமத்தில், எந்த வாக்கியத்தில் இதற்கான தடை இருக்கிறது என்று எந்தக் கோயில் அதிகாரியாலும் விளக்க முடியவில்லை. சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவரையும், இன்னும் சில சாதிகளையும் கோயிலுக்குள் நுழையாமல் தடுத்து வைத்தபோது, மிலேச்சரான வெளிநாட்டவரையும் அவர்களுக்கு நிகராகக் கருதி ஒதுக்கிவைத்தனர் என்பதுதான் நடைமுறை உண்மை. இப்போது எந்த சாதியினரும் அர்ச்சகராகவே ஆகலாம் என்ற சட்டம் வரும் சூழலில், வெளிநாட்டவரையும் வேற்று மதத்தினரையும் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது மனித உரிமைக்கு விரோதமானதாகும்.
என்னைப் போன்ற நாத்திகன், இந்துவாகப் பிறந்த காரணத்தால் எந்தக் கோயிலுக்குள்ளும் நுழையத் தடை இல்லை. ஆனால், ஏதோ ஒரு கடவுளை நம்புகிற ஒரு வேற்று மதத்து பக்தர் நுழைய மட்டும் தடை! மத அமைப்புகளின் விசித்திரமான அதிகாரப்போக்கின்படி, கடவுள் இல்லையென்று உறுதியாக மறுத்த பெரியார் கோயிலுக்குள் வர முடியும். ரமணரையும் காஞ்சி சந்திரசேகரேந்திரரையும் தெய்வமாகத் தொழுத வெளிநாட்டுக்காரர் பால் பிரண்ட்டன் நுழைய முடியாது!
கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு என்பது தனி மனிதரின் உரிமை. அதை மதவாதிகளிடம் ஒப்படைத்தால், இப்படித்தான் மனித உரிமை மீறல்கள் நடைபெறும். மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் மீரா ஜாஸ்மினும், ஜெய மாலாவும், சுதா சந்திரனும் அல்ல. இப்படிப்பட்ட காலத்துக்குப் பொருந்தாத விதிகளைப் பின்பற்றியே தீருவோம் என்று பிடிவாதம் செய்பவர்களும், இதைக் கண்டுகொள்ளாமல் உடன் போகிற அரசாங்கங்களும்தான்!
------------------------------
வீடு
நிலம் விற்பனைப் பத்திரங்களில் ஒருவருக்குத் தெரியாமலே அவர் பெயரில் யாரோ பதிவுசெய்யும் ஆபத்தான வழிமுறை இருப்பது ‘ஓ’ பக்கங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதையடுத்து, பத்திரப்பதிவுகளில் விற்பவர், வாங்குபவர் இருவரும் புகைப்படத்துடன் கைரேகையுடன் பதிவுசெய்தாக வேண்டுமென்ற விதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சபாஷ்!
ஆனந்தவிகடன் 16-7-2006
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|