Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. வேண்டாம் சாதனை வெறி!

2. ‘குடியரசுத் தலைவி’க்கு ஒரு ‘ஓ’!

3. ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..!

4. வேண்டும் இன்னொரு அண்ணா!

5. தமிழுக்கு வெட்டு!

6. எரிகிறது பஞ்சாப்!

7. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்!

8. 'கோரம்’ இல்லாத கோரம்!

9. ஏன் தமிழா, ஏன்?

10. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?!

11. அறிந்தும் அறியாமலும் - 1

12. அறிந்தும் அறியாமலும் - 2

13. அறிந்தும் அறியாமலும் - 3

14. அறிந்தும் அறியாமலும் - 4

15. அறிந்தும் அறியாமலும் - 5

16. அறிந்தும் அறியாமலும் - 6

17. அறிந்தும் அறியாமலும் - 7

18. அறிந்தும் அறியாமலும் - 8

19. அறிந்தும் அறியாமலும் - 9

20. அறிந்தும் அறியாமலும் - 10

21. அறிந்தும் அறியாமலும் - 11

22. அறிந்தும் அறியாமலும் - 12

***********

ஓணான்களும் ராம பக்தர்களும்: பாஸ்கர் சக்தி

ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்: அ.ராமசாமி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

அறிந்தும் அறியாமலும் - 3

ஒவ்வொருவரையும் தங்கள் அழுகை அனுபவங்களை நினைத்துப் பார்க்கச் சொன்னபோது, யாருடைய அழுகை நம்மை மிகவும் பயப்படுத்துகிறது என்று ஒரு கேள்வியை முன்வைத்தேன். இதற்கான பதில் ஆளுக்கு ஆள் நிச்சயம் வேறுபடும். ஆனால், பொதுவாக நம் எல்லோரையுமே பயப் படுத்தும் அழுகை, குழந்தைகளுடையதுதான். ஏனென்றால், அந்த மொழி நமக்கு எளிதில் புரிவதில்லை.

மொழி பேசக் கற்றுக்கொள்வதற்கு முன், குழந்தையின் மொழியாக சிரிப்பும் அழுகையும் மட்டுமே இருக்கின்றன. பசியால் அழுகிறது, வலியால் அழுகிறது, தூக்கம் போதாமல் அழுகிறது, பரிச்சயமானவர்களின் தொடுதலின் மகிழ்ச்சியில் சிரிக்கிறது என்கிற அளவில் குழந்தையின் அழுகையையும் சிரிப்பையும் எளிமைப்படுத்திப் புரிந்துவைத்திருக்கிறோம்.

ஆனால் பசி இல்லை, வலி இல்லை, தூக்கமின்மையின் எரிச்சல் இல்லை என்ற சூழலில் ஒரு குழந்தை அழுதால், பயப்படவேண்டி இருக்கிறது. ஏன் அழுகிறது என்பது புரியாததால் ஏற்படுகிற பயம் அது.

பயங்கள் எல்லாமே, ஒன்றைப் புரிந்துகொள்ளாததால் ஏற்படுபவைதான். ஒரு விஷயம் புரிந்துவிட்டால், அதைப் பற்றிய பயங்களும் விலகிவிடும். இது எல்லா நேரமும் பொருந்தும் என்றாலும், விதிவிலக்கும் உண்டு. அதாவது, புரிந்ததாலேயே பயம் வருவதும் உண்டு!

எடுத்துக்காட்டாக, ஓர் உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அதில் நச்சுப் பொருள் கலந்திருந்தது தெரியவந்தால், அப்போதுதான் பயம் ஆரம்பிக்கும். ஒருவரைப் பற்றிக் கடுமையாக இன்னொரு வரிடம் பேசி முடித்த பிறகு, இவருக்கு அவர் மிகவும் வேண்டியவர் என்று தெரியவந்தால், இனி என்ன ஆகப் போகிறதோ என்ற பயம் தொடங்குகிறது அல்லவா?

புரியாமல் வரும் பயம், புரிந்த பின் வரும் பயம், இந்த இரண்டு பயங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முதல் பயம், உணர்ச்சி சார்ந்தது. இரண்டாவது பயம், அறிவு சார்ந்தது. முதலாவது, அறியாமையால் வந்தது. அடுத்தது, அறிந்ததால் வந்தது. ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்றாரே வள்ளுவர், அந்த அச்சம் அறிந்ததால் வருகிற, வர வேண்டிய அச்சம். அறியாமையால் பயம் வருவது போலவே, அறியாமையால் பயம் இல்லாத நிலைமைகளும் உண்டு.

ஒரு நகைச்சுவைக் காட்சியில், புடலங்காய் என்று நினைத்து பாம்பைக் கையில் பிடித்துக்கொண்டு வீர நடை நடப்பார் ஜனகராஜ். அத்தகைய பயமற்ற நிலைகள் தற்காலிகமானவைதான். அறிந்தபின் பயப்படாமல் இருப்பது பேதமையாகி விடும்.

சிறியவர்களிடம் சொல்ல, பெரியவர்களுக்குப் பிடித்தமான அறிவுரை வாக்கியங்களில் ஒன்று... ‘‘எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ இப்ப இருக்கியே, அந்த வயசுல இருந்துட்டுதான் நாங்கள் லாமும் இப்பிடி வந்திருக்கோம். நாங்க தாண்டி வந்த ரூட்டுதான் அது!’’

உண்மையில் நமக்கு நம்முடைய குழந்தைப் பருவத்தைப் பற்றித் தெரியுமா? என்னதான் மூளையைக் கசக்கினாலும், நான்கு வயதுக்கு முன் நடந்தது எதுவும் நினைவுக்கு வருவதில்லை. வராது என்பதுதான் அறிவியலாளர் கருத்து.

முதல் நான்கு வருடங்கள் நாம் எப்படி இருந்தோம் என்பது நமக்குத் தெரியாது. அதனால்தான் புத்தம் புதுசாகப் பிறந்த குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் நாம் ஆவலோடு பார்க்கிறோம். அது வளரும் ஒவ்வொரு கட்டத்தையும் பார்த்துப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், அப்போது நாம் நம் குழந்தைப் பருவத்தை இன்னொரு முறை பார்வையால் வாழ்ந்து பார்க்கிறோம்.

பிறந்தது முதல் அடுத்த பத்து ஆண்டுகள் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அனுபவங்கள்தான், வாழ்நாள் முழுவதும் அந்த நபரின் இயல்பைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. எப்படிப்பட்ட அனுபவங்களை நாம் குழந்தைகளாகப் பெற்றோம்? எப்படிப்பட்ட அனுபவங்களை நம் குழந்தைகளுக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கி றோம்? இந்த இரண்டு பெரிய கேள்விகளுக்கும் ஏராளமான பதில்கள் நம்மிடம் உள்ளன. அவற்றை நமக்குள் நாமே அசை போட்டுப் பார்ப்பது அவசியம்.

குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது நம் வழக்கம். அது குழந்தைகளுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்... சிலர், கன்னத்தில் முத்தமிடுவார்கள்; சிலர், நெற்றியில் முத்தமிடுவார்கள்; சிலர், உதட்டில் முத்தமிடுவார்கள். அப்படிச் செய்யாத பெற்றோரும் உண்டு. பெரும்பாலான பெற்றோர் களுக்குத் தங்களைத் தவிர வேறு எவரும் தங்கள் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தமிடுவது பிடிக்காது. குழந்தைக்கு உதட்டில் முத்தம் தருவதால் கிருமிகள் தொற்றும் ஆபத்தைப் பற்றிய பயம் ஒரு காரணம்.

இன்னொரு காரணம், முத்தத்தைப் பற்றிய கலாசாரக் கருத்துக்கள். உதட்டில் முத்தம் தருவதைக் காதலுடனும், அதைவிட அதிகமாகக் காமத்துடனும் மட்டுமே நாம் இணைத்துப் பார்க்கிறோம். ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் வழியனுப்பும் வேளையில் ஒருவருக்கொருவர் கன்னத்தில் முத்தமிட்டால் அதைப் பார்த்து ஏற்றுக்கொள்கிறவர்கள்கூட, அப்போது உதட்டில் முத்தமிட்டால் சமூகத்தின் கற்பு பறிபோய்விட்டதாகப் பதறுவார்கள்.

காரணம், உதட்டு முத்தம் இங்கே காமத்தின் அடையாளமாக மட்டுமே கருதப்படுவதுதான். வாழ்க்கைக் கல்வி வகுப்புகள் நடத்தும் என் நண்பர்களிடம், பல பள்ளிகளில் டீன் ஏஜ் வயதில் இருக்கும் பல சிறுமிகளும் சிறுவர்களும், ‘உதட்டில் முத்தம் கொடுத்தால் கர்ப்பம் ஏற்பட்டுவிடுமா?’ என்று பயம் கலந்த கேள்வியாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்கள் இருக்கட்டும்... கல்லூரி மாணவி ஒருவர் மிகுந்த கவலையுடன் கேட்ட கேள்வி இது... ‘‘இதற்கு முன்பு நான் காதலித்த இளைஞன் என்னை ஒரே ஒரு முறை முத்தமிட்டான். இருவருக்கும் பொருந்தி வராது என்று உணர்ந்து நாங்கள் பிரிந்துவிட்டோம். இப்போது நான் கல்யாணம் செய்ய இருப்பவரிடம், பழைய முத்த விஷயத்தைச் சொல்லலாமா, கூடாதா?’’

எத்தனை விசித்திரமான பயம்! குழந்தைப் பருவ முத்தங்களுக்கு மீண்டும் வருவோம். எனக்கு என் முதல் முத்தங்கள் எதுவும் நினைவில் இல்லை. ஆனால், ஒரு முத்தம் இன்னும் மறக்க முடியாமல் இருக்கிறது. 41 வருடங்களுக்கு முன், நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்த போது, தினமும் எங்கள் வகுப்புக்குச் சீக்கிரமே போய்விடுவது என் வழக்கம்.அப்படிச் சீக்கிரம் சென்ற ஒரு நாள், பத்தாவது படிக்கும் ஒரு சீனியர் மாணவன் என்னை மறித்து, நான் அலற அலற என் உதட்டில் ஓர் அழுத்தமான முத்தம் கொடுத்தான். அது எனக்குப் பிடிக்காத அனுபவம் என்பதால், அந்த சீனியர் பெயர்கூட இன்னும் நினைவில் தங்கியிருக்கிறது.

ஒரே ஒரு நாள்தான் அது நடந்தது. ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்கு அது என்னைப் பாதித்தது. மறுநாள் சீக்கிரமாகப் பள்ளிக்குச் செல்லப் பயம். அவன் மறுபடியும் வந்தால்..? ஆனால், அந்த சீனியர் மறுபடியும் என்னிடம் வரவில்லை.

இது போல, குழந்தைகளிடம் அத்துமீறும் பெரியவர்கள் எப்போதும் சூழ்ந்திருக்கிறார்கள். அண்மையில் மத்திய அரசின் மகளிர் குழந்தை நலத்துறை ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் மொத்தக் குழந்தைகளில் 53 சதவிகிதம் பேர், அதாவது பாதிக்கு மேற்பட்டவர்கள் இப்படிப்பட்ட அதிர்ச்சிகளுக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கிறார்கள். இதை நீங்கள் படிக்கும் நேரத்தில்கூட, எங்கோ ஒரு குழந்தையிடம் அத்து மீறல் நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த அத்துமீறல்களைச் செய்பவர்களில் மிகப் பெரும்பாலோர், குழந்தையின் நெருக்கமான சுற்றுப் புறத்தில் இருப்பவர்கள்தான் என்கிறது ஆய்வு. பக்கத்து வீட்டு நபர், பள்ளி ஆசிரியர், வாகன ஓட்டுநர், மாமா, சித்தப்பா, அத்தை, சித்தி, அண்ணன், அக்கா, அம்மா, அப்பா என்று பட்டியல் நீள்கிறது.

இதில் குழந்தையின் மனதில் ஏற்படும் பாதிப்பு என்ன? தொலை நோக்கில் நீடிக்கக்கூடிய பாதிப்பு என்ன? ஏதோ ஒரு முறை நிகழும் சம்பவத்தின் பாதிப்பிலிருந்து குழந்தை உடனடியாக வெளிவந்துவிடும். தனக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் தரக்கூடியவர்கள் உடன் இருப்பதாக அது உணர்ந்தால், இது சுலபம். நீண்ட காலப் பாதிப்புகளும் இராது. ஆனால், அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும் சரி, ஒரேயடியாக தனக்குப் பாதுகாப்பற்ற சூழல்தான் இருப்பதாக குழந்தை வருந்தத் தொடங்கினாலும் சரி, அது தொடர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

குழந்தையின் உதட்டில் வலுக்கட்டாயமாக முத்தமிடுவது மட்டுமல்ல அத்துமீறல். ஒரு போட்டியில் அது தோற்றுப்போய் மனம் உடைந்து தன் வருத்தத்துக்கு வடிகால் தேடுகிற காட்சியைப் பலர் அறியக் காட்டுவதும் அத்துமீறல்தான். இதைச் செய்யும் டி.வி. சேனல்கள் மட்டுமல்ல, இதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அனுமதிக்கும் பெற்றோர்களும்கூட குழந்தையின் உரிமையில் அத்துமீறுவதாகவே கருதப்பட வேண்டும். ஏனென் றால், தான் அழுவதை டி.வி யில் காட்டும்போது, அதைப் பார்க்கும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. தன்னைப் பற்றிய அவமான உணர்ச்சிக்கு அது வித்திடுகிறது.

தான் அழுவதை டி.வி யில் பார்த்துவிட்டு தன் சக வயதுக் குழந்தைகள் கேலி செய்வார்களோ என்று மன உளைச்சல் அடைந்தாலும், அதுவும் குழந்தையின் சுயமரியாதையைத் தொலைநோக்கில் பாதிக்கும் என்பது நிபுணர்கள் கருத்து.

ஒரு குழந்தைக்குத் தன் மீதான அத்துமீறலை உணரவும், தடுத்துக் கொள்ளவும் ஆற்றல் தேவைப்படுகிறது. அதைத் தருவது, குழந்தைகள் மீது அன்புள்ள எல்லோரின் கடமை!

எது ‘குட் டச்’, எது ‘பேட் டச்’ என்று குழந்தைக்குப் புரிந்து விட்டால், யாருடைய ‘டச்’சானாலும், அதைத் தானே கையாள அந்தக் குழந்தை கற்றுக் கொள்ளும். கற்றுத் தருவோமா..?


1. உங்கள் பயம் எதைப் பற்றி?
2. எதற்குப் பயப்படுகிறீர்களோ அதைப் பற்றித் தெரியாததால் பயப்படுகிறீர்களா? தெரிந்துவிட்டதால் பயப்படுகிறீர்களா?
3. பயத்திலிருந்து வெளியே வர முடியாமல் உங்களைத் தடுப்பது எது?
4. உங்கள் முதல் முத்தம் எது?
5. அது இனிப்பான நினைவா? கசப்பான நினைவா?
6. அதன் தாக்கம் இப்போதும் உங்கள் வாழ்க்கையில் இருப்பதாகத் தோன்றுகிறதா?
7. குழந்தையாக இருந்தபோது, உங்களிடம் யாரேனும் அத்துமீறல் செய்தார்களா? யார்?
8. எந்தக் குழந்தையாவது உங்களிடம் தன்னிடம் ஒருவர் செய்த அத்துமீறலைச் சொல்லியதுண்டா?
9. சொன்னால், அந்தக் குழந்தைக்கு எப்படி நம்பிக்கை தருவீர்கள்?
10. எந்தக் குழந்தையிடமேனும் அத்துமீறும் உணர்ச்சி உங்களுக்கு வந்து, உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொண்டது உண்டா?

பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல; உங்களுக்கானவை... உங்களுடையவை!

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்


நன்றி: ஆனந்த விகடன்
Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com