|
ஞாநி
தமிழுக்கு வெட்டு!
இந்தப் பகுதியில் கலைஞர் கருணாநிதிக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்ற சங்கப் பாடலை மேற்கோள் காட்டியிருந்தேன். அதை எழுதியவர் கணியன் பூங்குன்றன் என்று சொன்னது தவறு என்பதைப் பல வாசகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
நூறாவது இதழ் காணும் ‘ஓ...பக்க’த்தின் முக்கியமான வலிமை, வாசகர்களின் பங்கேற்பு! எதிர்பாராத மனிதர்கள் பலர் எதிர்பாராத தருணங்களில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ‘ஓ...பக்க’ விஷயத்தை மணிக்கணக்கில் விவாதிக்கும் ஆயத்தத்துடன் பேசத்தொடங்குகிறார்கள். தாங்கள் நினைத்தாலும் வெளியே சொல்லமுடியாமல் போகிற பல செய்திகளைத் தங்கள் சார்பாக ஒருத்தன் எழுதுகிறான் என்ற நம்பிக்கையில் பேசுகிறார்கள்.
சமயங்களில், ஓ... பக்கத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டால், அது ஏதோ அரசாணை போல உடனே நடைமுறைக்கு வந்துவிடக் கூடியது என்று நம்பி, சிலவற்றை எழுதியே ஆக வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். சிலர், ‘நீ எழுதி என்ன பயன்..? ஒன்றும் நடக்கவில்லையே!’ என்றும் துக்கம் விசாரிக்கிறார்கள்.
என்னவானாலும், அயர்வடையச் செய்யும் அரசியல் குளறுபடிகள் பற்றி ‘ஓ’ எழுதும் அலுப்பிலிருந்து வாசகர்களின் எதிர்வினைகள்தான் என்னைக் காப்பாற்றுகின்றன. வாசகர்களின் கடிதங்களும் உரையாடல்களும் இன்னும் புதுப் புது விஷயங்களைக் கற்க உதவுகின்றன.
அந்தக் குறிப்பிட்ட சங்கப் பாடலை எழுதியவர் கணியன் பூங்குன்றன் அல்ல; நரி வெரூஉத் தலையார்! நரியே பார்த்து பயப்படும் தலையுடன் இருந்த அவருடைய தலை அலங்காரம் எப்படி இருந்திருக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை! அந்தப் பெயரே வேறு விதமான காரணப் பெயராக இருந்திருக்கலாம். நரி என்பது சூழ்ச்சியான, தந்திரசாலி மனிதர்களைக் குறிக்கும். அவர்கள் கண்டு அஞ்சும் அறிவுடன் (தலையுடன்) மேற்படி புலவர் விளங்கியிருக்கலாம்.
புலவர் பெயர் திருத்தம் தெரிவித்த நண்பர், வானொலி முன்னாள் இயக்குநர் விஜய திருவேங்கடம், மேற்கோள் வரிகள் இடம்பெற்ற அந்தப் ‘பல்சான்றீரே’ பாடலை முழுவதுமாகத் தொலைபேசியிலேயே ஒப்பித்தார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. சங்கப் பாடல்களில், தமிழ் இலக்கியங்களில், சொல் ஆராய்ச்சியில் இப்படி வேர் வரை போய் ஆராய்ந்து ரசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
வெகு விரைவில் அருகி வரும் ஆபத்தில் உள்ள இனமாக தமிழ் அறிந்த தமிழர்கள் அறிவிக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தை, நமது தமிழகப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன.
ஏற்கெனவே பள்ளிக்கூடங்களில் தமிழ்வழிக் கல்வி, சவலைக் குழந்தையாக இருக்கிறது. ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகள் தமிழை மொழிப்பாடமாகக்கூட எடுக்காமல் படிப்பை முடிக்கும் ஆபத்து இருக்கிறது. இந்நிலையில் தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரியில் தமிழ் மொழிப்பாடத்துக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. தமிழுக்கான நேரத்தை வெட்டத் தொடங்கியுள்ளன.
கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல் இரு வருடங்கள்தான் தமிழ்ப் பாடம். அதுவும் ஒரு பருவத்தில் 90 வேலை நாட்கள் என்றால், தினம் ஒரு மணி நேரம் வீதம் 90 மணி நேரம்தான் தமிழ் வகுப்பு. இரண்டு வருடங்களில் இருக்கும் நான்கு பருவங்களில், மொத்தமாக 360 மணி நேரம் மட்டும்தான் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இதையும் வெட்டும், குறைக்கும் வேலை தொடங்கியிருக்கிறது! பி.காம்., படிப்பவர்களுக்கு இரு வருடங்களுக்கு தமிழ் தேவை இல்லை என்று சொல்லி, ஒரே வருடத்தில் வணிகத் தமிழ் மட்டும் சொல்லிக் கொடுப்போம் என்கிறது ஒரு பல்கலைக்கழகம். தமிழ் இலக்கியம், இலக்கணம் எதுவும் இவர்களுக்குத் தேவையில்லையாமா?!
அஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிப்போருக்கும் ஒரு வருடம் தமிழ் போதும் என்பது இன்னொரு முடிவு. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் (தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய சுந்தரனார்தான்!) பல்கலைக்கழகத்தில் முழு நேரம் பி.காம்., பிஎஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்போருக்கு ஒரு வருடம் மட்டும் தமிழ் போதும் என்று முடிவு கட்டிவிட்டார்கள். பெரியார் பல்கலைக்கழகத்திலும் இதே போக்கு! தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் பல இதே அணுகுமுறையில் தமிழை வெட்ட ஆரம்பித்திருக்கின்றன.
ஏற்கெனவே 360 மணி நேரம் தமிழ் வகுப்பு இருந்தபோதே, கல்லூரி மாணவர்கள் பலருக்குத் தமிழில் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. பட்டப்படிப்பில் தரப்படும் கிரேடிங்கில் ஃபர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ் என்பதை முடிவு செய்ய, மொழிப்பாட மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. எனவே, கிரேடுக்கு உதவாத தமிழை எப்படிப் படித்தால் என்ன, பாஸ் மார்க் வாங்கித் தொலைத்தால் சரி என்ற மனநிலைக்குதான் மாணவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
அண்மையில், மும்பையில் கீழ்மட்ட நீதிமன்றத்தில் நண்பர் ஒருவருக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகையைப் பார்த்தேன். ஒரு வரிகூட ஆங்கிலத்தில் இல்லை. முதல் தகவல் அறிக்கை முதல், குற்றப்பத்திரிகை வரை முழுக்க முழுக்க மராத்தி மொழியில் இருந்தது. அச்சிடப்பட்ட பகுதி மட்டும் அல்ல; கையால் எழுதிய நீண்ட குறிப்புகள் எல்லாமே மராத்தியில்தான்! ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி முறையில், பட்டப்படிப்பு முடித்து ஆய்வாளராக (இன்ஸ்பெக்டர்) வருபவரால் பிழையின்றித் தமிழில் எழுதவே முடியாது என்பதுதான் நிலை.
நாம் மட்டும்தான் நம்மிடம் இருக்கும் செல்வத்தைக் குப்பையில் கொட்டிக்கொண்டு இருக்கிறோம். தமிழைப் பிழையின்றி எழுதவும் படிக்கவும் ரசிக்கவும் தெரியாத எவரும் தமிழ்நாட்டில் எந்த வேலையிலும் இருக்கலாகாது என்பது என் கனவுச் சட்டம்.
ஒரு மொழியைச் செம்மொழி என்று சொன்னால், அது வழக்கில் இல்லாமல் ஆவணக் காப்பகத்தில் மட்டும் இருக்கும் மொழி என்று நம் பல்கலைக்கழகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அந்த நிலையைத் தமிழுக்கு ஏற்படுத்த இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றன போலும்!
தமிழுக்கு எதிராக தமிழகப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தொடங்கியிருக்கும் இந்த நேரத் தணிக்கையை உடனே கைவிடச் செய்ய தமிழக அரசு தலையிட வேண்டும்.
கடைசியாக ஒரு மகிழ்ச்சிச் செய்தி... பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழுக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த ஆபத்தை என் கவனத்துக்குக் கொண்டு வந்த பேராசிரியர் தமிழ் ஆசிரியரல்ல; ஆங்கிலப் பேராசிரியர்! ஏதோ தமிழாசிரியர்கள் மட்டும்தான் தமிழ் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்ற தவறான புரிதலைத் தகர்க்கும் நல்ல அடையாளம் அல்லவா இது!
நன்றி: ஆனந்த விகடன்
|