|
ஞாநி
வாக்குறுதிகளை நம்ப முடியுமா?
‘சொன்னபடி கலர் டி.வி நிச்சயமா குடுத்துடுவாங்களா?’ என்று எங்கள் வீட்டுப் பணியாளரம்மா கேட்டார்.
’நீங்க எத்தனை வருஷமா தேர்தல்ல ஓட்டு போடறீங்க?’ என்று கேட்டேன். நாற்பது வருடங்களுக்கு முன்னால் தான் சிறுமியாக இருந்தபோது பார்த்த தேர்தல் நினைவுகளிலிருந்து அவர் தொடங்கினார். ஒரு படி அரிசி ஒரு ரூபாய் வாக்குறுதியில் ஆரம்பித்து, ஒவ்வொரு தேர்தலிலும், வெவ்வேறு கட்சிகள், தலைவர்கள் சொன்ன வாக்குறுதிகளையெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே வந்தோம். சொன்னதில் செய்தவற்றை விட செய்யாதவையே அதிகம்.
’ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் முடிக்கணும்கறாப்பலதான் ஆயிரம் பொய் சொல்லியாவது நம்ம ஓட்டை வாங்கிடணும்னு எல்லாரும் பாக்கறாங்க’ என்று முத்தாய்ப்பு வைத்தார் பணியாளரம்மா. கல்யாணம், அரசியல் இரண்டுமே முறிந்து போவது எப்படியாவது ஆசை நிறைவேறவேன்டுமென்ற பொய்களால்தான்.
தேர்தல் அறிக்கை என்பது ஒவ்வொரு கட்சியும் தன் கொள்கைளையும், செயல் திட்டங்களையும் அறிவிப்பதற்காக உருவானவை. ஆனால் காலப்போக்கில், அவற்றில் கொள்கை அம்சம் குறைந்து கொண்டே வந்து, செயல் திட்டம் மட்டுமே ஆக்ரமிக்கிறது. அதுவும் நாய்க்குட்டிக்கு பந்தை கவ்விக் எடுத்துக் கொன்டு வந்து தந்தால் தரப்போகும் பிஸ்கட்டை கண்ணில் காட்டி பந்தை கொன்டு வரச் செய்வது போல, குறுகிய கால கவர்ச்சி வாக்குறுதி பிஸ்கட்டுகளாகவே காட்டப்படுகின்றன. பந்தை எடுத்து வந்து தந்ததும் பிஸ்கட்டை தராவிட்டால் அடுத்த முறை பந்தை எடுக்க நாய் கூடப் போகாது.
உடனடி லாபங்களை மட்டுமே கண் முன்பு காட்டி வாக்காளர்களை மயக்கும் வேலையை இப்போது எல்லா அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். அவற்றில் ஒன்றிரண்டை செய்துவிட்டால், அப்படி செய்தவர் போட்டியாளரை விட அரசியல் நேர்மையுடையவர் என்ற பாவனை வேறு.
ஆனால் அடிப்படை விஷயங்கள், தொலை நோக்கில் வாழ்வாதாரமான பிரச்சினைகள் இவற்றில் எல்லாம் தங்கள் கொள்கை என்ன, திட்டம் என்ன என்பதை மக்களிடம் விரிவாகவும் ஆழமாகவும் பேசும் வழக்கமே நம் அரசியல் கட்சிகளிடம் இல்லை. உதாரணமாக எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் 49 ஓவை ஓட்டு இயந்திரத்திலேயே பட்டனில் சேர்ப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று பேச அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு நம் தேர்தல் முறையை மாற்றுவதைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் என்ன கருதுகிற என்று பேசத் தயாராக இல்லை. சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு பெரு முதலாளிகள் வந்தால் வேலை வாய்ப்பு பெருகுமா, குறையுமா என்பதை விவாதிக்கத் தயாராக இல்லை. இந்த மாதிரி விஷயங்களைப் பேசத் தெரிந்த இடதுசாரிகள் கூட, கூட்டணி தர்மத்துக்காக, இலவச டி.வி அளிப்பது பற்றிய பட்டிமன்றத்தில் போய் சிக்கிக் கொண்டார்கள்.
இன்று மக்களும் அந்த மாதிரி ‘சீரியசான‘ விஷயங்களை அரசியலில் எதிர்பார்க்கும் மனநிலை இல்லாதவர்களாக மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள். இரன்டு ஜதை ரோஷமான குத்துச் சண்டையை சந்தோஷமாகப் பார்த்துவிட்டுக் கலையும் மன நிலைக்கே மக்களை மீடியாவும் தயாரித்து வருகிறது. இந்தத் தேர்தலிலேயே ஏதேனும் ஒரு நாள் வைகோவும் தயாநிதி மாறனும் மாறி மாறி சவால் விடாவிட்டால், ‘இன்னிக்கு நியூஸ் கொஞ்சம் டல்லடிக்குது‘ என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் தேர்தல் சமயங்களிலும் சரி, தேர்தல் இல்லாத சமயங்களிலும் சரி வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் காரியம் பலித்தால் சரி. அப்போதைக்கு விஷயத்தை சமாளித்தால் போதும் என்பதே அணுகுமுறை.
இந்த மோசமான அணுகுமுறைக்கு வாழும் சாட்சிகளாக இரண்டு பெண்களின் உண்ணாவிரதங்கள் இருக்கின்றன.
ஒருவர் மேதா பட்கர். லட்சக்கணக்கான ஆதிவாசிகளின் நிலங்களை அணைக்கட்டு, வளர்ச்சி என்ற பெயரால் பறித்து, அநாதைகளாக்குவதற்கு எதிராக சுமார் 20 வருடங்களாக நடக்கும் போராட்டத்தின் அடையாளம் மேதா. குஜராத்தில் 19 கிராமங்கள், மகாராஷ்டிரத்தில் 33, மத்தியப்பிரதேசத்தில் 193 அணியில் மூழ்குகின்றன. இரண்டரை லட்சம் பேர் வீடு வாசல், நிலம் எல்லாம் இழந்திருக்கிறார்கள் என்று அரசே சொல்கிறது.
அணை நீரில் இவர்களுடைய கிராமங்கள் மூழ்குவதற்கு ஆறு மாதம் முன்பே மாற்று இடம் நிலம் வீட்டு எல்லாம் கொடுத்து முடித்துவிட வேன்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் இன்னமும் மறுவாழ்வு அரைகுறையாகத்தான் நடந்திருக்கிறது. இப்போது அணையின் உயரத்தை மேலும் 11 மீட்டர் உயர்த்த அரசு உத்தரவு. இதை எதிர்த்து எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மேதாவை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்து குளூகோஸ் ஏற்றிக் கொன்டிருக்கிறது அரசு.
மேதாவை மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் என்று பல பிரமுகர்கள் சென்று பார்த்தும் அவர் உண்ணாவிரதத்தை நிறுத்த மறுத்துவிட்டார். சொந்த மண்ணிலேயே புலம் பெயர்க்கப்பட்டு அகதிகளாவோரின் மறுவாழ்வு பிரச்சினை பக்ரா நங்கல் தொடங்கி நெய்வேலி, நர்மதா வரை இன்னும் தொடர்கிறது. மறுவாழ்வு வாக்குறுதிகள் தரப்பட்டு நிறைவேறாததன் நினைவூட்டலே மேதாவின் பட்டினிப் போராட்டம்.
மேதாவை மூன்று நாட்கள் பத்திரிகை, ஆங்கில டி.வி சேனல்கள் எல்லாம் ‘ கொண்டாடின‘. மேதா சிறை வைக்கப்பட்ட பிறகு டி.வி கவனம் பேஷன் ஷோவில் ( �ொரு பெண் ஐந்து வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். எந்த டி.வியிலும் அவரைப் பார்க்க முடியாது. மணிப்பூரின் கவிஞர் ஐரம் ஷர்மிளாவை அமைச்சர்களோ முன்னாள் பிரதமர்களோ கூட சென்று பார்ப்பதில்லை. காரணம் நர்மதா ஆதிவாசிகள், கிராமவாசிகளின் ஒட்டுக்கள் பற்றி இருக்கும் கவலை கூட டெல்லியின் அரசியல் பிரமுகர்களுக்கு மணிப்பூர் மக்கள் பற்றி இல்லை. மணிப்பூர் போன்ற வட கிழக்கு பகுதிகளை ராணுவத்தைக் கொண்டே ஆளலாம் என்றே எல்லா டெல்லிக் கட்சிகளும் கருதுகின்றன.
ஷர்மிளாவின் எதிர்ப்பே இதைப் பற்றித்தான். காலம் காலமாக மணிப்பூர் ‘கலவரப்‘ பகுதியாக அறிவிக்கப்பட்டு, 1958ம் வருட ராணுவ விசேட அதிகாரச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன்படி எந்தக் கட்சியின் ஆட்சியில் சட்டசபை இருந்தாலும் ராணுவம் சொல்வதுதான் சட்டம்.
நவம்பர் 2, 2000 அன்று அசாம் ரைபிள்ஸ் என்ற ராணுவப் படை ஒரு மலை கிராமம் வழியே சென்ற போது அதன் மீது (தீவிரவாதிகளால்) குண்டு வீசப்பட்டது. உடனே அருகிலிருந்த கிராம மக்களை நோக்கி ராணுவம் சுட்டது. 62 வயது கிழவி உட்பட, பத்து பேர் செத்தார்கள். 42 பேருக்கு படுகாயம். அன்றுதான் 29 வயது ஷர்மிளா உண்ணா விரதத்தை தொடங்கினார். ராணுவ சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற ஒரே கோரிக்கை. மக்களின் எழுச்சியினால், ராணுவத்தின் துப்பாக்கி சூடு பற்றி நீதி விசாரணைக்கு மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டது. உடனடியாக ராணுவம் அதற்கு நீதி மன்றத்தில் இடைக் காலத் தடை வாங்கிவிட்டது. ஐந்தாண்டுகளாக தடை தொடர்கிறது. ஷர்மிளாவின் உண்ணாவிரதமும். சிறையில் மூக்கு வழியே அவருக்கு குளூகோஸ் ஏற்றப்படுகிறது.
2004ல் டெல்லியில் ஆட்சி மாறியபோது ராணுவச் சட்டத்தை மறு பரிசீலனை செய்வதாக வாக்குறுதி தரப்பட்டது. இந்த வாக்குறுதி கூட ராணுவம் மனோரமா என்ற பெண்ணை வீடு புகுந்து கடத்திப் போய் சித்ரவதை செய்து சுட்டுக் கொன்று தெருவில் எறிந்துவிட்டுப் போனதற்கு எதிர்ப்பாக, கிழவி முதல் குழந்தை வரை நிர்வாணமாக ராணுவ அலுவலகத்தை முற்றுகையிட்டதால்தான். ஆனால் இரு வருடங்களாகியும் வாக்குறுதி ஏட்டிலேயே இருக்கிறது. ஷர்மிளா இன்னும் உயிருக்கும் கோரிக்கைக்கும் போராடுகிறார்.
டெல்லி முதல் கன்யாகுமரி வரை இருக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு புதுப் புதுக் கற்பனைகள் வாக்குறுதிகள் வழங்குவதில் உதிக்கின்றன. நான் ஊழல் செய்தால் என்னை சவுக்கால் அடியுங்கள். என் குடும்பமோ என் நண்பர்களோ பதவிக்கு வந்தால், என்னை தெருவில் நிறுத்தி அடியுங்கள் என்பது முதல் இலவச ஜட்டி, கோவணம் தருவது வரை எத்தனை எத்தனை வாக்குறுதிகள்.
வாக்குறுதி தவறிய அரசியல்வாதி தானே தெருவில் வந்து நின்று சவுக்கைக் கொடுத்து தன்னை அடிக்கச் சொல்லும் நேரடி ஒளிபரப்பை ‘இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதல்முறையாக‘ ஒளிபரப்பும் நாளில், அதைப் பார்ப்பதற்கு, மக்கள் அண்டா, குண்டா அத்தனையும் அடகு வைத்தாவது சொந்த காசில் டி.வி வாங்கிப் பார்ப்பார்கள்.
(ஓ! பக்கங்கள் - ஆனந்த விகடன் - மே 2006)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|