|
ஞாநி
ஒரு டாக்டர்... ஒரு ‘விவசாயி’... ஒரு தேசம்..!
ஒரு டாக்டர்!
உலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. எனப்படும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில், 41 வருடங்களுக்கு முன் படித்தவர், வங்காளியான டாக்டர் விநாயக் சென். இப்போது வயது 59. குழந்தை மருத்துவத்தில் நிபுணரான விநாயக் நினைத்திருந்தால், சென்னையிலும் கொல்கத்தாவிலும் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் கட்டி, கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு ஜாலியாக இருந்திருக்கலாம்.
அப்படிச் செய்ய விரும்பாமல் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகளுக்கு மாதம் 600 ரூபாய் சம்பளத்தில் மருத்துவம் பார்த்ததால், இப்போது ஜெயிலில் இருக்கிறார். விநாயக் செய்த ‘குற்றம்’ என்ன?
மார்ச் 31-ம் தேதி சந்தோஷ்பூர் என்ற ஆதிவாசி கிராமத்துக்குள் நுழைந்து, ‘மோதல்’ என்ற பெயரில் 12 ஆதிவாசிகளை ராணுவத்தினர் வெட்டிக் கொன்றனர். அவர்கள் எல்லாரும் மாவோ தீவிரவாதிகள், நக்சல் பாரிகள் என்பது ராணுவத்தின் குற்றச்சாட்டு!
இந்தக் கொடூர கொலைகளை வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியதுதான் டாக்டர் விநாயக் செய்த குற்றம். மக்கள் சிவில் உரிமை அமைப்பின் செயலாளராக இருக்கும் டாக்டர் விநாயக், தொடர்ந்து ஆதிவாசிகளுக்கெதிரான மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வருபவர். ஆனால், அது அவருடைய முழு நேரத் தொழில் அல்ல!
குழந்தை மருத்துவராக பீஹார் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியிலும், சட்டீஸ்கர் ஆதிவாசிகள் மத்தியிலும் பணியாற்றி வருபவர். அவரது முயற்சியால் தொழிலாளர்களே நடத்தும் பெரிய மருத்துவமனை, சுரங்கப் பகுதியில் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. 10 கி.மீ. தூரம் காடுகளுக்குள் நடந்துசென்று, அங்கிருக்கும் ஆதிவாசிகளுக்காக வாராந்தர க்ளினிக்கை விநாயக்கும் அவர் மனைவி டாக்டர் இலினாவும் நடத்தி வருகிறார்கள்.
கொல்கத்தாவில் இருக்கும் தன் வயதான அம்மாவைப் பார்த்துவிட்டு வருவதற்கு விநாயக் சென்றிருந்த சமயம், அவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்கள் சட்டீஸ்கர் போலீஸார். இது தெரிந்ததும், அவர் உடனே தான் தலைமறைவாகவில்லை என்றும், எந்த ரயிலில் என்றைக்கு சட்டீஸ்கர் திரும்பிவர ரிசர்வ் செய்திருக்கிறார் என்ற விவரங்களையும் போலீசுக்குத் தெரிவித்தார். ஜூன் 14 அன்று, வந்ததும் தானே காவல் நிலையம் சென்றார்.
தன்னைக் கைது செய்வதாக இருந்தால் அன்றைய தினம் ஆதிவாசி க்ளினிக்குக்குச் சென்று வந்த பின் கைது செய்யும்படி கோரினார். காரணம், க்ளினிக்குக்கு வருவதற்கு ஆதிவாசிகளும் பல கி.மீ. தூரம் மலையில் நடந்து வர வேண்டும். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, உடனே கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாகியும் அவர் ஏன் கைது செய்யப்பட்டார், அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டு என்ன என்ற முதல் தகவல் அறிக்கைப் பிரதியை போலீஸ் தரவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் வேலூர் சி.எம்.சி-யின் உச்ச விருதான ஹேரிசன் விருது விநாயக்குக்கு, அவருடைய சமூகப் பணிக்காக வழங்கப்பட்டது. சட்டீஸ்கர் மாநிலம் முழுவதும் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை தருவதற்காகச் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டத் துக்குக்கூட விநாயக்தான் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்.
விநாயக்கை விடுவிக்கச் சொல்லி எழுத்தாளர் அருந்ததி ராய் முதல் பல பிரபலங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியும், ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் ஊர்வலம் நடத்தியும் சட்டீஸ்கர் போலீஸ் மசியவில்லை. இலினாவையும் கைது செய்வோம் என்று அறிவித்தது. இலினா இப்போது முன் ஜாமீன் பெற்றிருக்கிறார்.
விநாயக்கை கைது செய்ததைக் கண்டித்து பேரணி தொடங்கும் முன்பாக, சட்டீஸ்கர் சிவில் உரிமைக் கழகத் தலைவர் செயில் கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டு என்ன தெரியுமா? பத்து வருடங்களுக்கு முன், ஒரு நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்துப் பேசியிருந்தாராம்.
சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய தொழிற்சங்கத் தலைவர் ‘சாகர் குஹா நியோகி’. அவரைக் கொலை செய்த ஆறு பேரை 1998ல் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தபோது, செயில் அதைக் குறை கூறினார். அதற்காக உயர் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றம் அதை 6 நாள் தண்டனையாகக் குறைத்தது. அந்த கேஸில் அவர் இன்னும் சிறைக்குப் போகாமல் இருக்கிறார். அதற்காகவே இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்!
டாக்டர் விநாயக் சென் மாவோயிஸ்ட் அல்ல. ஏழை மக்களுக்குக் குறைந்த செலவில் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக உழைத்து வரும் டாக்டர். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது எதிர்ப்புக் குரல் கொடுப்பவர். வன்முறை தீர்வாகாது என்பதே அவர் கருத்து. வன்முறையில் ஈடுபடும் அரசுத் தரப்பும் மாவோயிஸ்ட் தரப்பும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற கருத்தை அவர் பலமுறை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், தங்கள் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பவர் நக்சல்பாரிகளின் ஆள் என்பதே சட்டீஸ்கர் போலீஸாரின் பார்வையாக இருக்கிறது.
சுமார் ஒரு மாதம் கழித்து, நீதிமன்றத்தில் அவர்கள் விநாயக்குக்கு எதிராக வைத்திருக்கும் ஆதாரம் - சிறையில் உள்ள மாவோயிஸ்ட் கைதிகளை அவர் அதிகாரபூர்வமாக வந்து பார்த்த விவரங்களும், அவர்கள் அவருக்குச் சிறை அதிகாரி ஒப்புதலுடன் தங்கள் உடல் நிலைபற்றி எழுதி இருக்கும் கடிதங்களும்தான்.
ஒரு ‘விவசாயி’!
இந்த விவசாயியின் பெயர் அமிதாப் பச்சன். பல கிராமத்துப் பெண்கள் சினிமா மோகத்தில் தங்கள் குழந்தைக்கு ஹீரோ பெயரான திலீப் குமார், தர்மேந்திரா, அமிதாப் என்றெல்லாம் சூட்டுகிற மாதிரி பெயர் சூட்டப்பட்ட யாரோ ஒரு கிராமத்து ஆள் அல்ல இவர். அசல் அமிதாப் பச்சன்தான்! தான் ஒரு விவசாயி என்பதை நிரூபிக்கப் படாதபாடுபட்டுக் கொண்டு இருக்கிறார் இவர்.
காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஒரு சட்ட விதிதான். அதன்படி மகாராஷ்டிரத்தில் விவசாய நிலத்தை யார் வாங்க விரும்பினாலும், அவரும் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும்.
மும்பைக்கு அருகே இருக்கும் பிரபல சுற்றுலா மலைப் பகுதியான லோனா வாலா, சினிமாக் காரர்களுக்குப் பிடித்தமான வட்டாரமாகும். அங்கே 24 ஏக்கர் விவசாய நிலத்தை அமிதாப் பச்சன் வாங்கினார். அதைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதும், 2005ல், அமிதாப் ஒரு விவசாயிதானா என்று விசாரிக்கச் சொன்னார் புனே மாவட்ட கலெக்டர்.
‘உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாரபங்கி அருகே தௌலத்பூர் கிராமத்தில் ஏற்கெனவே நிலம் வைத்திருக்கும் விவசாயி நான்’ என்று தெரிவித்தார் அமிதாப் பச்சன். அதற்கான ஆவணங்களைக் காட்டச் சொன்னார்கள். பாரபங்கி கலெக்டருக்கு விண்ணப்பம் அனுப்பினார் அமிதாப். அதை ஆய்வு செய்த அந்த மாவட்ட கலெக்டர் கோயல், தனக்கு விண்ணப்பம் வந்த சமயத்திலேயே 2006 மார்ச் 10-லிருந்து 22-க்குள் நில ரெக்கார்டுகளில் (அமிதாபுக்குச் சாதகமாக) ஃபோர்ஜரி செய்யப் பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.
அதற்குப் பொறுப்பான ஊழியரை சஸ்பெண்ட் செய்தார். உடனே அந்த கலெக்டரை வேறு ஊருக்குத் தூக்கி அடித்தது அப்போது நடந்துகொண்டு இருந்த அமிதாப்பின் நண்பர்களான முலாயம் சிங் யாதவ்-அமர்சிங் அரசு. ஏப்ரல் 26-ம் தேதியன்று, அமிதாப்புக்கு நிலப் பத்திரத்தைத் தரும்படி உத்தர விட்டார் புது கலெக்டர். ஒரு மாதம் கழித்து, அதே கிராமத்தில் இன்னும் இரண்டு நிலங்களை வாங்கினார் அமிதாப்.
முலாயம் ஆட்சி கவிழ்ந்து மாயாவதி ஆட்சி ஏற்பட்டதும், சென்ற மாதம் இந்த கேஸ் திரும்ப எடுக்கப்பட்டது. ஃபைசாபாத் நீதிமன்றத்தில் பழைய கலெக்டர் கோயலின் முடிவு தான் சரி என்று தீர்ப்பாயிற்று. தௌலத்பூர் நிலம் அமிதாப்புடையதே அல்ல; அமிதாப் விவசாயியும் அல்ல என்பது தீர்ப்பு.
தௌலத்பூரில் அமிதாப்புக்கு முலாயம் அரசு தாரை வார்க்க முற்பட்ட சர்வே எண் 502 நிலம், அங்கேயே பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் 12 குடும்பங்களுடையது. எப்படியும் இந்த நிலம் சிக்கலானதுதான் என்று தெரிந்ததும் மே 2006ல் அதே ஊரில் இன்னும் இரண்டு நிலங்களை முறைப்படி அமிதாப் வாங்கிப் போட்டார் இல்லையா? அதுவும் அவருக்குச் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அவருக்கு என்பதைவிட, அவர் மனைவி ஜெயா பச்சனுக்கு என்று சொல்ல வேண்டும்.
ஏனென்றால், ராஜ்ய சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது, ஜெயாபச்சன் தன் கணவரின் சொத்து விவரத்தில் இந்த இரண்டு நிலங்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இது பற்றிய புகாரைத் தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டு கேட்டபோது, மனு தாக்கல் சமயத்தில் நிலப் பத்திரம் பதிவு ஆகவில்லை என்றார் ஜெயா. ஆனால், அதற்கு முன்பே பத்திரப் பதிவு நடந்து முடிந்துவிட்டு இருந்தது. எல்லா ஜெயாக்களுக்குமே வேட்பு மனு, சொத்துக் கணக்கு இன்னும் கைவராத கலைதான் போலிருக் கிறது!
சில நடிகர்களுக்கு சினிமாவில் எல்லாவிதமான பாத்திரங்களிலும் நடிப்பது கடினம். ஆனால், அமிதாப் எவ்வளவு வித்தியாசமான பாத்திரமாக இருந்தாலும் அநாயாசமாக நடித்து அசத்திவிடுவார். ஆனால், சினிமா திறமை வாழ்க்கைக்கு உதவாதே! ஆக, அசல் வாழ்க்கையில் அசல் விவசாயியாக நடிக்க, ஒரு நடிகர் ரொம்பவே திணறிக்கொண்டு இருக்கிறார்.
ஒரு தேசம்!
‘டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல்’ என்ற தன்னார்வ அமைப்பு செய்த ஆய்வின்படி, சென்ற வருடம் மட்டும் இந்தியாவில் நீதித் துறையில் உயர்நீதிமன்றத்துக்குக் கீழே இருக்கும் கீழ் நிலை நீதிமன்றங்களில், சுமார் 2,630 கோடி ரூபாய் லஞ்சமாகப் புழங்கியிருக்கிறது. அதாவது, இந்தப் பணம், தீர்ப்புகளை வளைக்க லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட பணம் என்பது இந்த அமைப்பின் மதிப்பீடு. இந்தியாவில், வருடத்தில் சுமார் 32 ஆயிரம் கொலைகள் பதிவாகின்றன. இன்னொரு 22 ஆயிரம் கொலை முயற்சிகள் பதிவாகின்றன. நீதிமன்றத்தில் வரும் கொலை வழக்குகளில் வெறும் 6.5 சதவிகிதத்தில் மட்டுமே கொலையாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
நீதிக்குத் தலை வணங்கவே சராசரி மக்கள் எல்லாரும் விரும்புகிறோம். ஆனால், நீதியே நிதிக்கு முன் தலை வணங்கினால், எந்த நீதிக்கு நாம் தலை வணங்குவது?
நன்றி: ஆனந்த விகடன்
|