|
ஞாநி
திரைப்படம்... திட்டம்... தீர்ப்பு..!
கேள்வி1: ‘பெரியார்’ படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கலாமா, கூடாதா?
இதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள், படத்தின் இயக்குநரும் சம்பந்தப்பட்ட நடிகையும்தான். படம் வெளியான பிறகுதான், பார்வையா ளர்கள் தீர்ப்பு வழங்க முடியும். ஆனால், நம் சினிமாவில் கிரியேட்டிவ்வான முடிவுகளை வர்த்தகர்களும்,வணிக முடிவுகளை நடிகர்களும் எடுத்துக் குழப்புவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்தக் குட்டைக் குழப்புதலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் கள், தம்மைத் தாமே தமிழ்க் காவல்காரர்களாக நியமித்துக்கொண்டு இருக்கும் சில அரசியல்வாதிகள். அவர்கள்தான் மணியம்மையாக குஷ்பு நடிக்கக் கூடாது என்பார்கள்.
ஒரு சக படைப்பாளியாக என் ஆலோசனை(யைக் கேட்டால்)... குஷ்பு மட்டுமல்ல; திறமையான நடிகராகஇருந்த போதிலும்கூட சத்யராஜ் பெரியாராக நடிக்கக் கூடாது என்பதுதான். ஞான ராஜசேகரனின் ‘பாரதி’, நம் மனதில் பளிச்சென்று இடம் பிடிக்க ஒரு முக்கியக் காரணம், அந்தப் பாத்திரத்தில் நடித்த சாயாஜி ஷிண்டேவை அதற்கு முன் பொழுது போக்கு அம்சம் மேலோங் கிய தமிழ் சினிமா பாத் திரங்களில் கண்டதில்லை என்பதுதான். கமல், ரஜினி, சத்யராஜ், குஷ்பு போன்றோர் எவ்வளவு திறமையான நடிகர்களாக இருந்தபோதும், அவர்களு டைய ஸ்டார் இமேஜ், அவர்கள் ஏற்கின்ற பாத்திரத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிடக் கூடியது. அந்தக் கண்ணோட்டத்தில், பெரியார் போன்ற மிகச் சமீப கால வரலாற்றுப் பாத்திரங்கள் உள்ள படத்தில் எல்லா முக்கியப் பாத்திரங் களுக்குமே, தமிழ் சினிமாவால் நையப் புடைக்கப்படாத முகங்களைப் பயன்படுத்தினால் படத்தின் நோக்கம் இன்னும் சிறப்பாக நிறைவேறும். மற்றபடி ஒரு படத்தில் யார் நடிக்கலாம், யார் நடிக்கக் கூடாது என்பதை நிர்ணயிக்கக்கூடிய தகுதி, அவருக்கு எந்த அளவுக்கு நடிக்கத் தெரியும் என்பதைப் பொறுத்தே அமையும். பிறப்போ, மொழியோ, சாதியோ, இனமோ இருக்க முடியாது.
கேள்வி 2: சென்னைக்குத் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை திடீரென முதலமைச்சர் கருணாநிதி கைவிட்டது சரியா?
‘எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு’ என்ற அடிப்படையில் பார்த்தால், திட்டத்தை அறிவிக்கும் முன்பாகவே சாதக பாதகங்களை இன்னும் துல்லியமாக யோசித்திருக்க வேண்டும். எண்ணாமல் துணிந்த கருமத்தைக் கைவிட்டதே சரி! ரியல் எஸ்டேட் முதலைகளுக்குத் துணை நகரம் அமைந்தால் அதிக லாபமா, கைவிட்டதால் லாபமா என்பது பெரும் ஆராய்ச்சிக்குரிய சப்ஜெக்ட்!
சென்னை நகரத்தில் நெரிசல், போக்குவரத்து போன்ற இதர பிரச்னைகளுக்குத் தீர்வு, செயற்கையாகத் துணை நகரங்களை உருவாக்குவது அல்ல! இதற்கு முன்பு இதே போன்ற காரணங்களுக்காக அறிவிக்கப்பட்டு 80&களில் உருவாக்கப்பட்ட மறைமலை நகர், 90&களின் கடைசி வரை வளர்ச்சி பெறாமலே இருந்தது ஏன் என்று ஆராய வேண்டும். சென்னைக்கும் மறைமலை நகருக்கும் இடையே புற நகர் மின் ரயில், ரயில் போக்குவரத்து, இரட்டை ரயில் பாதை போட்ட பின்புதான் சுலபமாயிற்று. மின் ரயில் போக்குவரத்து வசதி வந்தவுடன், அரசின் வேறு எந்த முதலீடும் தலையீடும் இல்லாமலே, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை நடுத்தர வகுப்புக் குடியிருப்புகள் பெருகின. இதே போலத்தான் 60&களில் சைதாப்பேட்டை முதல் தாம்பரம் வரை வளர்ச்சி ஏற்பட்டது. எனவே, பெருநகரத்தின் நெரிசலைக் குறைக்க, சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ரயில், பஸ் போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ, கல்வி வசதிகளைப் பெருக்குவதில் மட்டும் அரசு முதலீடு செய்தாலே போதுமானது.
சென்னையில் நெரிசலைக் குறைக்க தொலைநோக்குத் தீர்வு, கிராமப்புற வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதும், அரசு அதிகாரங்களைச் சென்னை, கோட்டையில் குவித்துவைக்காமல், தாலூகா மட்டத்துக்குப் பரவலாக்குவதும்தான்.
துணை நகர சர்ச்சை, நமது அரசியலின் விசித்திரமான போக்குகளை மறுபடியும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் துணை நகரத்தை ஆதரிக்கிறது. தி.மு.கவுடன் கூட்டணியில் உள்ள பா.ம.க. எதிர்க்கிறது. சோனியாவின் கருத்து தெரியாத காரணத்தால், மாநில காங்கிரஸ் அடக்கி வாசிக்கிறது. இடதுசாரிகள் இதுபற்றி ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் நடத்திய அறிக்கைப் போரில், மிகவும் தரம் தாழ்ந்து அமைந்திருந்தது ஜெயலலிதாவின் அறிக்கை. கருணாநிதியின் மனைவி, துணைவி, இருவரின் உற்றார், உறவினர்கள் எல்லாரும் கோபாலபுரத்தைக் காலி செய்தால் சென்னையின் நெரிசல் குறைந்துவிடும் என்று ‘கிண்டலடித்த’ ஜெயலலிதாவின் அறிக்கையின் தொனி... அவரது எதிரி கருணாநிதி அல்ல, அவரேதான் என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது.
கேள்வி 3: ‘மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், சொந்த மாநிலத்தில் இருந்துதான் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சரியா?
உச்ச நீதிமன்றம் அத்துடன் நிற்கவில்லை. ராஜ்யசபை தேர்தலில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டளிக்கும்போது, அது ரகசிய வாக்காக இருக்கவும் தேவையில்லை என்று விசித்திரமாகத் தீர்ப்பளித்திருக்கிறது. இரண்டு முடிவுகளுமே சட்டப்படி சரியானாலும், தார்மிக அடிப்படையில் ஏற்க முடியாதவை. ராஜ்யசபை என்பதே ‘கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்றுதான் அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. மாநிலங்களின் அவைக்குப் பிரதிநிதிகள், அவரவர் மாநிலங்களிலிருந்து அமைவதுதானே இயற்கை நீதி? எந்த மாநிலத்துகித்துவம் குறைந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
பணம் வாங்கிக்கொண்டு எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி ஓட்டுப் போடுவதைத் தடுக்க, பகிரங்க வாக்கெடுப்பு தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. தவிர, அரசியல் சட்டத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறதாம். ‘ரகசிய வாக்கெடுப்பு’ என்று சொல்லாததால், அது ஒன்றும் அரசியல் சட்டப்படியான உரிமையோ, தேவையோ இல்லையாம்!
இந்த வார புதிர்:
சந்த்ராஜ் மௌரியா என்பவர் பெயர் இந்த வாரம் செய்திகளில் அடிபட்டது. யார் இவர்?
1. இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வாங்கித் தந்த முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர்.
2. டெல்லியில் பேப்பர் பொறுக்குபவர்.
3. உஜ்ஜயினி மாணவர் சங்க போட்டி வன்முறையில் பாதிக்கப்பட்ட பேராசிரியர்.
சரியான விடை:
டெல்லியில் பேப்பர் பொறுக்குபவர் சந்த்ராஜ். இதர பேப்பர் பொறுக்கும் தொழிலாளர்கள் மத்தியில் சந்த்ராஜ் செய்து வந்த முக்கியமான சமூகப் பணிக்காக, அவரை பிரேசில் நாட்டில் நடக்கும் ‘உலக பேப்பர் பொறுக்குவோர் மாநாட்’டில் கலந்துகொள்ள அனுப்ப முன்வந்தது ஒரு தொண்டு நிறுவனம். விசா எல்லாம் கிடைத்து விமானம் ஏறச் சென்றபோது, சந்த்ராஜை அலிடாலியா விமான நிறுவன ஊழியர் Ôசெக் இன்Õ செய்ய மறுத்துவிட்டார். சந்த்ராஜிடம் தொண்டு நிறுவனம் வாங்கிக் கொடுத்த பிசினஸ் க்ளாஸ் டிக்கெட் இருந்தது. ஆனால், அவரைப் பார்த்தால் பிசினஸ்மேன் மாதிரி இல்லை என்று கூறி, அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனந்தவிகடன் – 17/9/2006
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|