|
ஞாநி
வேண்டாம் சாதனை வெறி!
காலம்காலமாக முறுக்கால் புகழ்பெற்ற மணப்பாறை இப்போது ஒரு டாக்டரின் கிறுக்கால், செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது.
தன் 15 வயது மகன் திலீப் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தான் என்று டாக்டர் முருகேசன் என்பவர் சொல்லி, அந்த ஆபரேஷனின் சி.டி-யையும் சக டாக்டர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டியதில் தொடங்கிய சர்ச்சை நீடிக்கிறது. சிக்கலிலிருந்து மீள்வதற்காகத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக டாக்டர் சொல்லிவரும் கருத்துக்கள், அவரை மேலும் சிக்கலில் ஆழ்த்தியிருக்கின்றன. கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் அணிந்த தோற்றத்துடன் சிறுவன் திலீப்பின் புகைப்படமும் வெளியானது.
ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத்துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல, மானுட அற நெறிகளுக்கும் விரோதமானது. டாக்டர் முருகேசன் என்னதான் செய்தார் என்பது பற்றி மருத்துவத் துறை அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் நியாயமான விசாரணை நடத்தி உண்மைகளைத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
முருகேசன் முதலில் அளித்த பேட்டிகளில், தன் மகன் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவதற்காக அவர் இப்படிச் செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. கின்னஸ§க்காக எத்தனையோ கிறுக்கர்கள் என்னென்னவோ விதமான விசித்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். விஷப் பாம்புகளுடன் கூண்டில் இருப்பது, பின்னாலேயே நடப்பது, நூறு இட்லிகள் சாப்பிடுவது என்று வகை வகையாக இப்படிப்பட்ட விசித்திரங்கள் உள்ளன. பொதுவாக, அவை யாவுமே தன்னைத்தானே வருத்திக்கொள்வதாக அமைந்திருப்பவையே தவிர, இன்னொரு மனித உயிருடனோ, வாழ்க்கையுடனோ விளையாடுவதாக இருப்பதில்லை. சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பது என்பது இன்னொருவர் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடுவதாகும்!
இதே காலகட்டத்தில், ஒரிஸ்ஸாவில் புதியா என்ற ஐந்து வயது சிறுவன், புவனேஸ்வரிலிருந்து கொல்கத்தா வரை 500 கி.மீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் ஓடுவதாக இருந்தது, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. புதியா இப்படிப்பட்ட ஓட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே கோர்ட் தடை விதித்திருக்கிறது.
சென்ற வருடம், மே மாதம் தன் நான்காம் வயதில் புதியா 40 மைல் தூரத்தை 7 மணி நேரம் 2 நிமிடங்களில் ஓடிக் கடந்தது ரெக்கார்டாகக் கருதப்படுகிறது.
ஓட்ட முடிவில் புதியா களைத்து மயங்கி விழுந்தான். அவனைச் சோதனை செய்த மருத்துவர்கள், அவனுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும், மன அழுத்தமும் இருப்பதாகத் தெரிவித்தனர். ஐந்து வயதுகூட நிரம்பாத புதியாவை அவன் பெற்றோரும், பயிற்சியாளரும் பண ஆசையில் இப்படி ஓட்டப் பந்தயங்களில் ஈடுபடுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் கோர்ட் முன்பு உள்ளன.
ஐந்து வயதுக் குழந்தையானாலும் சரி, 15 வயதுச் சிறுவனானாலும் சரி... அந்தந்த வயதில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், பெரியவர்கள் செய்யும் செயல்களைச் செய்து ‘சாதனை’ படைக்க வேண்டிய அவசியம் என்ன?
அது அவர்களுடைய நோக்கம் அல்லவே அல்ல! அந்தந்த வயதுக்குரிய படிப்பிலும் விளையாட்டிலும் பொழுதுபோக்குகளிலும் அவர்கள் ஈடுபடுவதே நியாயமானது. அவர்களைச் சாதனை இயந்திரங்களாக ஆக்குபவர்கள் அவர்களுடைய பெற்றோர்கள்தான்.
புதியா, திலீப்புக்கு வாய்த்த மாதிரி பெற்றோர்கள் நம் சமூகத்தில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். வீட்டுக்கு அங்கிள், ஆன்ட்டி என யாராவது வந்தால், அவர்கள் முன் குரங்காட்டி போல தங்கள் குழந்தைகளை ஆட்டிவைத்து வேடிக்கை காட்டி(தங்களுக்கு)ப் பாராட்டு பெற்று மகிழ்வதில் பெருவிருப்பம் கொண்டவர்கள் இவர்கள்.
தங்கள் வாழ்க்கையில் தாங்கள் செய்ய விரும்பி, முடியாமல் போனதை எல்லாம் தங்கள் குழந்தைகளைக் கொண்டு செய்து பார்த்துவிடும் வெறிதான் இத்தகைய பெற்றோரை இயக்குகிறது. இதற்கு குழந்தைகள் பலியாகிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஒரு சிறுவனைத் தொலைக்காட்சி பேட்டிக்காகச் சந்திக்கச் சென்றேன். “பெரியவனான பிறகு என்னவாக விரும்புகிறாய்? நடிகனாவாயா?” என்று கேட்டேன். “இல்லை. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட் சாம்பியனாக விரும்புகிறேன்” என்றான் அந்தச் சிறுவன். நாங்கள் பேட்டி எடுத்துக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய அப்பா வந்துவிட்டார். “சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்கிறதுதான் சார் அவனோட லட்சியம்” என்று சொன்ன அவர், படத்தில் அவன் பேசிய ஒரு நீண்ட டயலாக்கை எங்களிடம் பேசிக் காட்டச் சொல்லி அவனை வற்புறுத்தினார்.
அவனோ தன் வயதில் இருந்த அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமியுடன் பந்து விளையாடுவதில் ஆர்வமாக இருந்தான். அப்பா வலுக்கட்டாயமாக டயலாக் பேச வைத்ததும், அவனுக்குப் பாதி டயலாக் மறந்து போய்விட்டது. அவர் சட்டென்று அவன் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார். அது அவருடைய வழக்கம் என்று பிறகு தெரிந்தது. நாங்கள் பதறிப்போய் அவரைத் தடுத்தோம். அவரோ பெரும் ஆத்திரத்துடன் இருந்தார். பேட்டி எடுத்தவரை போதும் என்று நாங்கள் கிளம்பிவிட்டோம். அவன் அடி வாங்கிய அந்தச் சமயத்தில், அதைப் பார்த்துக்கொண்டு இருந்த அவனுடைய விளையாட்டுத் தோழியின் முகத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.
குழந்தைகளின் உரிமைகளில் அத்து மீறுவோர் யாராயிருந்தாலும் சரி பெற்றோரேயானாலும் தண்டனைக்குரியவர்கள்தான். இது பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தை இந்தியாவும் ஏற்றுக்கொண்டு இருக்கிறது.
நடைமுறையில், குழந்தைகளின் வயதுக்குப் பொருந்தாத விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவதை நம் சமூகத்தில் அமைதியாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். ரசிக்கிறோம். ஊக்குவிக்கிறோம். போலீசுக்குத் தெரியாமல் கொலை செய்ய வரும் கதாநாயகனுக்கு உதவியாக, தான் ஒளித்து வைத்திருக்கும் கத்தியை எடுத்துத் தருவது ஒரு சிறுவன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தியேட்டரில் கை தட்டுகிறோம். பள்ளிக்கூடம் போய்ப் படிக்காமல், விளையாடாமல் பெற்றோர் மூளைச் சலவை செய்து தலையில் ஏற்றிய ஆன்மிகத் தகவல்களை ஒப்பித்துவிட்டு, பெரியவர்களை இமிடேட் செய்து அதிகப் பிரசங்கித் தனமாகப் பேசும் சிறுவன் காலில் விழுந்து, “சாமி! ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கெஞ்சுகிறோம்.
எது சாதனை என்பதே நமக்கு இன்னும் புரியவில்லை. ரஷ்யாவிலும் பல வெளிநாடுகளிலும் குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்தே நீச்சல் பழக்கம் ஏற்படுத்துவது கல்விமுறையின் ஒரு பகுதி. இங்கேயோ அதை சாதனை என்று குழப்பிக்கொள்கிறோம். குழந்தைகள் நிலத்திலும் நீரிலும் விளையாடுவது இயல்பு!
மருத்துவத் துறையில் இன்று எது சாதனையாக இருக்க முடியும்? பணம் சம்பாதிப்பதே பிரதான நோக்கமாக ஆக்கப்பட்டுவிட்ட வணிகச் சூழலில், ஒரு மருத்துவர் குறைந்த செலவில் தரமான சிகிச்சையைச் சாதாரண மக்களுக்கு அளித்தால், அதுதான் சாதனை. ‘என் மகன் முறையாகப் படித்து, அப்படிப்பட்ட ஒரு சிறந்த மருத்துவராக வருவான்’ என்ற லட்சியக் கனவை ஒரு டாக்டர் கொண்டிருந்தால் பாராட்டலாம். ‘எல்லா டாக்டர் வீட்டுப் பையன்களும் (எப்படியோ) டாக்டர் ஆயிடறாங்க. அதனால், என் மகன் சிறுவனா இருக்கும்போதே டாக்டராயிடணும்’ என்று ஆசைப்பட்டால், அது சமூகத்துக்கும் குழந்தை உரிமைக்கும் எதிரான செயல்.
இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் அடிப்படை என்ன? நம் குழந்தைகளை நாம் நம்முடைய சொத்தாகப் பார்ப்பதுதான். குழந்தைகள் நம் மூலம் இந்த உலகத்துக்கு வருகிறார்களே தவிர, அவர்கள் நம் தனிச் சொத்து அல்ல! அவர்கள் இந்தச் சமூகத்தின் சொத்து. உரிய பருவம் வரை அவர்களை ஒழுங்காகப் பராமரித்து வளர்த்து, சமூகத்திடம் ஒப்படைப்பது நம் கடமை.
இந்தப் பார்வை ஏற்பட்டால், நாம் நம் குழந்தைகள் அவரவர் வயதுக்கேற்ற சந்தோஷங்களை அடைய வழி வகுப்போம். விளையாட்டிலும் படிப்பிலும் அந்தச் சந்தோஷங்களை அவர்கள் அடைவதைப் பார்ப்பதே ஒரு பெரும் மகிழ்ச்சியை நமக்குத் தரும். ஒவ்வொரு முறை குழந்தைகளுடன் நாடகப் பயிலரங்குகளில் ஈடுபடும்போதும், அவர்கள் அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தாங்களும் அடைந்து, எனக்கும் தருகிறார்கள்.
இந்த வாரம் முத்ரா கலாசார அமைப்பு ஏற்பாட்டில், நானும் சக நாடகக்காரர் ஜெயச்சந்திரனும் பத்து வயதுக் குழந்தைகளுக்கு ஜாலியாக நாடகம் கற்பித்தோம். நடிப்பு என்றால் என்ன என்று விளக்குவதற்காக ஒரு சிறுமியிடம் சின்னதாக ஒரு விளையாட்டு விளையாடினேன். அவள் யார் என்று சொல்லச் சொன்னேன். பெயர் சொல்லிவிட்டு, தான் பள்ளிக்கூடத்தில் இத்தனாவது படிப்பவள், தனக்கு ஒரு தம்பி உண்டு என்றெல்லாம் சொன்னாள். “இல்லை. நீ பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினீயராக வேலை பார்க்கிறாய். உன் பெயர் இது; உன் வேலை இது. இப்போது உன் ஆபீஸில் நீ இருக்கிறாய். என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்று செய்து காண்பி!” என்றேன்.
அவள் உடனே ஒரு கீபோர்டை பாவனை செய்துகொண்டு, அதில் டைப் அடிப்பது போல செய்தாள். “இதுதான் நடிப்பு. நீ என்னவாக இல்லையோ அப்படிப்பட்ட, வேறொரு பாத்திரத்தை நீ செய்து காட்டுவதுதான் நடிப்பு” என்று சொன்னேன். அடுத்து உட்கார்ந்திருந்த சிறுவனிடம், “உன் பெயர் என்ன? நீ யார் என்று சொல்லு” என்றேன். அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “நான் ஒரு பெண். அமெரிக்க நாசாவில் வேலை செய்கிறேன்” என்று சூப்பராக அளக்க ஆரம்பித்தான். “இப்போது என்ன செய்கிறாய்?” என்றேன். “நாசா ஆபீஸில், பாத்ரூமில் இருக்கிறேன்” என்றான்! “அங்கே என்ன செய்கிறாய் என்று இப்போது செய்துகாட்டு!” என்றேன்.
வாஷ்பேசின் அருகே ஒரு கண்ணாடி முன் நிற்பதாக பாவனை செய்தான். கைப்பையிலிருந்து லிப்ஸ்டிக் எடுத்து உதட்டில் தடவிக் கொண்டான். முகத்தை ஒற்றிச் சரி செய்துகொண்டான். எல்லாம் பாவனைதான். எல்லாக் குழந்தைகளும் கை தட்டினார்கள்.
இதுதான் குழந்தைகள் உலகம். கற்பனை செய்து மகிழவும், கற்பனை செய்யக் கற்றுக்கொள்ளவும் விரும்பும் உலகம். இந்த ஆற்றல்தான் அவர்களுடைய இதர ஆற்றல்களைக் கூர்மைப்படுத்தி வளர்க்கும். பெரியவர்களானதும் எந்தத் துறைக்குச் சென்றாலும், அதில் பிரகாசிக்கச் செய்யும்.
தயவுசெய்து குழந்தைகளை டாக்டராக நடிக்க விடுங்கள். அசல் டாக்டர் என்று நம்பவிட்டுவிடாதீர்கள். அவர்களுக்கும் கஷ்டம்; நமக்கும் கஷ்டம்!
(நன்றி: ஆனந்த விகடன்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|