|
ஞாநி
அறிந்தும் அறியாமலும்..! (21)
“அம்மா, நான் யாரும்மா?”
ஐந்து வயதுக் குழந்தை கேட்கும்போது என்ன பதில் சொல்கிறோம்?
“நீ என் செல்லக் கன்னுக்குட்டி!”
குழந்தை செல்லமாகச் சிணுங்குகிறது.
“போம்மா, நான் என்ன மாடா?”
குழந்தைக்கு தான் விலங்கு அல்ல என்பது தெரியும்; அது அம்மாவுக்கும் தெரியும் என்பதும் தெரியும்; அம்மா தன்னைக் கொஞ்சுகிறார் என்பதும் தெரியும்; அந்தக் கொஞ்சல் தனக்குப் பிடித்திருக்கிறது என்பதும் தெரியும்.
இந்த அன்றாட உரையாடலில் குழந்தை தன்னைப் பற்றி உணர்ந்திருப்பது என்ன? தன்னைச் சுற்றியுள்ள செடி, கொடி, புல் பூண்டு, ஆடு, மாடு, இவற்றிலிருந்து தான் வேறுபட்ட ஒரு மனித உயிர் என்பதை உணர்ந்திருக்கிறது. தன்னைக் கவனித்துக் கொள்ள, தன்னிடம் அன்பு காட்ட, தன்னைப் போன்ற இன்னும் பல மனித உயிர்கள் தன்னைச் சுற்றி இருப்பதை உணர்ந்திருக்கிறது.
இப்படிப் பலப்பல உரையாடல்கள், நிகழ்ச்சிகள் ஒரு குழந்தையைச் சுற்றி அன்றாடம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் குழந்தைக்கு தான் யார் என்று உணரச் செய்துகொண்டே இருக்கின்றன.
இன்னொருவிதமாகச் சொல்வதானால், நீ யார் என்று நம்மைச் சுற்றி உள்ள மற்றவர்கள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது, நான் யார் என்று அவர்கள் கணிப்பதை, என் மீது அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
குழந்தை வளர வளர, தான் யார் என்று தான் நினைப்பதும், உணர்வதும், தான் யார் என்று மற்றவர்கள் தனக்கு உணர்த்தியதும், ஒன்றா, வெவ்வேறா என்பதைச் சிந்திக்கும் ஆற்றலை அடைகிறது. இந்தச் சிந்திக்கும் ஆற்றல்தான், ஒருவருடைய ஆளுமை என்று சொல்லும் ‘பர்சனாலிட்டி’யை வடிவமைத்துக் கொள்ள உதவுகிறது.
நான் யார் என்று தன்னைத்தானே உணர்வது, ஒவ்வொரு மனிதருக்கும் தேவை. அது முற்றும் துறந்த ஞானிகளுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் மட்டுமான விஷயம் அல்ல. ‘நான் யார்’ என்று நம்மை நாமே புரிந்துகொண்டால்தான் நம்மால் உணர்ச்சிகளைக் கையாள முடியும்; மன அழுத்தங்களுக்கு ஈடு கொடுக்கவும் முடியும்.
செக்ஸ், நம் வாழ்க்கையில் உணர்ச்சிகளுடனும் மன அழுத்தத்துடனும் மிகவும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. செக்ஸ் தேவைகள் உணர்ச்சி சார்ந்தவை. அவை பூர்த்தி செய்யப்படாத நிலைமை, மன அழுத்தத்தை அதிகரித்தே தீரும். ‘செக்ஸ்’ என்ற இடத்தில் அன்பு, பணம் என்று இன்னும் வேறு சில சொற்களைப் பொருத்திப் பார்த்தாலும், அவையும் பொருந்தும்.
தான் யார், தன் தேவைகள் என்ன என்பதை, குழந்தை ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறது. பேசக் கற்பதற்கு முன்னால் இதை அழுகையில் தெரிவிக்கிறது குழந்தை. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பது மரபான சொலவடை. அழாத பிள்ளை, தன் பசியைப் பிறருக்கு உணர்த்தியிருக்க முடியாது.
பசியை உணர்ந்ததும், பெரியவர்களிடம் போய் தனக்குப் பசிக்கிறது என்று தெரிவிக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தையால்தான் பசியைத் தணித்துக் கொள்ள முடியும். வளர்ந்த பருவத்தில் ஏற்படும் இன்னொரு தேவையான செக்ஸ் உறவைப் பூர்த்தி செய்துகொள்ள, சரியான துணையைத் தேடி ‘ஐ லவ் யூ’ சொல்வதும், அதேபோன்ற வெளிப்பாடு தான்!
யாரிடம் போய் தன் பசியைத் தெரிவிக்க வேண்டும் என்று வீட்டில் இருக்கும் குழந்தை புரிந்துவைத்திருப்பது போல, வளர்ந்த இளைஞரும் தன் செக்ஸ் தேவையை யாரிடம், எப்படித் தெரிவிப்பது, யார் யாரிடம் தெரிவிக்கக் கூடாது என்ற பக்குவமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இந்த அறிவு ஒரு நாளில் வருவது அல்ல!
நான் யார் என்பதைப் படிப்படியாகப் புரிந்துகொண்டதிலிருந்து தான் வரவேண்டும். நம் உடலைப் புரிந்துகொள்வது, உள்ளத்தைப் புரிந்துகொள்வது என இதன் இரு அம்சங்களையும் பார்ப்போம்.
நான் யார் என்று உணர்வது என்பது, முதலில் நான் என்னவாக இருக்கிறேனோ அதை ஏற்றுக்கொள்வதில் தொடங்குகிறது.
கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தால், எப்படி இருக்கிறேன்?
பிரமாண்டமாக அகன்று விரிந்து, முகத்தையே ஆதிக்கம் செலுத்தியபடி இருக்கிறது என் மூக்கு. சிறிதாக, கூராக, ரோமானியர்களைப் போல இருந்தால்தான் அழகான மூக்கு என்கிறார்களே, அந்த ‘அழகான’ மூக்கு இல்லை என்னுடையது. அப்படியானால் நான் அழகாக இல்லையா?
அப்படி இல்லை. என் மூக்கு அழகாக இல்லை என்று வேறு யாரோதான் நினைக்கிறார்கள். நான் எப்படி இருந்தால், நன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கும் நினைப்பு அது.
அது என் நினைப்பு இல்லை.
எல்லோர் மூக்கும் ரோமானிய மூக்குபோல இருந்தால், எப்படி இருக்கும்? இப்படி இருந்தால்தான் அழகான உதடு; இப்படி இருந்தால் தான் அழகான கண்... இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் அழகு இலக்கணம் பிறர் வைத்திருக்கலாம். அந்த இலக்கணப்படியே அத்தனை முகங்களும் இருந்தால், எப்படி இருக்கும்?
அலுப்பாக இருக்கும் என்பதுதான் உண்மை! எல்லா மனிதர்களும் ஜெராக்ஸ் பிரதிகளாக இருந்தால், நமக்கு ஒருவரையருவர் பார்த்துப் பேசவே வெறுப்பாகிவிடக் கூடும். வகைவகையாக முகங்கள் இருப்பது தான், நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது.
எனவே, எனக்கு என் மூக்கு, என் முகம் அழகாகத்தான் இருக்கிறது. அதுபோலவே என் மூக்கிலிருந்து, என் முகத்திலிருந்து வேறுபட்ட பிற விதவிதமான முகங்கள் எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன.
கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கிறேன். சோகமாக வைத்துக் கொள்கிறேன். அழுதபடி பார்க்கிறேன். அந்த முகம் எனக்குப் பிடிக்கவில்லை. சட்டென்று மாறிச் சிரிக்கிறேன். இந்த முகம் பிடித்திருக்கிறது. என் முகம் மட்டுமல்ல, எந்த முகமும் அழும்போது பிடிக்கவில்லை. அழுகையின் பின்னே இருக்கும் வலி உறைப்பதுதான் காரணம்.
நான் யார்? என் வலி, மற்றவர் வலி பிடிக்காத ஒரு மனிதன்.
குழந்தைகளைக் கவனியுங்கள். தங்களுக்கு வலிக்கும்போது மட்டும் அவர்கள் அழுவதில்லை. இன்னொரு குழந்தை அழுவதைப் பார்க்கும் குழந்தையும் சங்கடமாக உணர்கிறது. அதில்தான் ‘எம்ப்பதி’ எனப்படும், தன்னைப் போல் பிறரை நினைக்கும் உணர்ச்சியின் விதை இருக்கிறது.
எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் தன்னைப் போல் பிறரை எண்ணிப் பார்க்கிறோமா?
இந்த வார ஹோம் வொர்க்:
1. என் உடலில் எனக்குப் பிடித்த பகுதி எது? ஏன்?
2. எனக்குப் பிடிக்காத பகுதி எது? ஏன்?
3. கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறது?
4. என் உடலில்/முகத்தில் மற்றவர்களுக்குப் பிடித்த, அழகான அம்சம் எது?
5. என் உடலில்/முகத்தில் மற்றவர்கள் விமர்சிக்கும் அம்சம் எது?
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல; உங்களுக்கானவை... உங்களுடையவை!
|