 |
ஞாநி
அறிந்தும் அறியாமலும்..! (19)
நம் குழந்தைகளை நிஜமாகவே நமக்குத் தெரியுமா?
தெரியும் என்று நம்புகிறோம். நன்றாகவே தெரியும் என்று நம்ப விரும்புகிறோம். ஆனால், நிஜமாகவே தெரியுமா என்ற சந்தேகம், நம் மனதுக்குள் பதுங்கிப் பதுங்கிக் கூடவே வந்துகொண்டு இருக்கிறது.
இளம் குற்றவாளிகளைக் கைது செய்யும் பல சமயங்களில், அந்தச் சிறுவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகள் இப்படிப்பட்ட குற்றத்தைச் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்வதைப் பார்க்கிறோம். கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... பெண் சீண்டல், போதைப் பொருள் பயன்படுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோர் களால் தங்கள் குழந்தைகள் இப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்று நம்ப முடியாமல், அதிர்ச்சி அடைகிறார்கள்.
இன்றைய சமூகத்தில் ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டுமே நிச்சயமாகத் தங்கள் குழந்தைகள் எப்படிப் பட்டவர்கள் என்பது தெரியும். இன்னும் பலருக்கு எதுவும் தெரியாது. எந்தத் தப்புத் தண்டாவும் செய்ய மாட்டார்கள் என்று நம்பிக்கையில் மட்டுமே இருப் பார்கள். வேறு சிலருக்கு சின்னச் சின்ன தவறுகள் என்ற அளவில் தெரிந்தாலும், காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி இருப்பார்கள்.
நம் குழந்தைகளின் நண்பர்களுக்குப் புரிந் ததைவிட, நமக்கு அதிகம் புரியும் என்று குடும்பம் நினைத்துக்கொள்கிறது. அது பெரும்பாலும் வெறும் நினைப்புதான். நமக்குத் தெரியாதவை எல்லாம் நண்பர்களுக்குத்தான் தெரிந்திருக்கின்றன.
அதே போலத்தான், நம் குழந்தைகளுக்கும் நம்மை நிஜமாகவே தெரியுமா?
தெரியும் என்பது இப்போதும் ஒரு நம்பிக்கை தான். ‘என்னை யாருமே சரியா புரிஞ்சுக்கறது இல்ல’ என்று சொல்லிக்கொள்வது நம் எல்லாருக் கும் ஏதோ ஒரு சமயத்தில் பிடித்தமானதாக இருக்கிறது.
ஒருவரையருவர் புரிந்துகொள்வதும் தெரிந்துகொள்வதும் பெற்றோர்-குழந்தை உறவுக்கு மட்டுமல்ல, எல்லா மனித உறவு களுக்குமே அடிப்படையான ஒரு தேவை! அந்தத் தேவை தானாகப் பூர்த்தியடைந்து விடாது; அதற்கான முயற்சிகள் தேவை.
அப்படிப்பட்ட புரிதல் இருக்கும் பெற்றோரால் தான் தங்கள் குழந்தைகளுக்கு இதர அறிவை எல்லாம் தருவது போல, பாலியல் தொடர்பான அறிவையும் வயதுக்கேற்ப அளிக்க முடியும்.
நம் குழந்தைகளை நாம் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற கேள்வித்தாளுக்கு அம்மாவும் அப்பாவும் விடைகள் எழுதிச் சரிபார்ப்பது போல, நம்மை எந்த அளவுக்குக் குழந்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்வது அவசியம். அவர்களும் பதில் எழுத ஒரு கேள்வித்தாள் உண்டு. அதை இப்போது பார்ப்போமா?
உங்கள் குழந்தைகளுக்கான கேள்விகள் இதோ:
1. அப்பா - அம்மா கல்யாணம் எப்படி நடந்தது? எங்கே நடந்தது? எப்போது நடந்தது?
2. அம்மா/அப்பாவுக்குப் பிடித்த (அவருடைய) டிரஸ் எது?
3.அம்மாவின்/அப்பாவின் நெருக்கமான நண்பர்கள் யார், யார்?
4. என்னைப் பற்றி அப்பாவுக்கு எந்த விஷயத்தில் பெருமை?
அம்மாவுக்கு எதில் பெருமை?
5. சென்ற தேர்தலில் அம்மா/அப்பா யாருக்கு ஓட்டு போட்டிருப்பார்கள்?
6.அம்மாவிடம் அப்பாவுக்கும், அப்பாவிடம் அம்மாவுக்கும் பிடிக்காத விஷயங்கள் என்ன?
7. டி.வி. நிகழ்ச்சிகளில் அம்மாவுக்குப் பிடிக்காத நிகழ்ச்சி எது?
8. அப்பாவுக்குப் பிடிக்காத சினிமாப் பாட்டு எது?
9. உறவினர்களில் அப்பாவுக்குப் பிடித்த அம்மா பக்க உறவினர் யார்?
10. நான் என்ன ஆக வேண்டுமென்று அப்பா ஆசைப்படுகிறார்? அம்மா ஆசைப்படுகிறார்?
11. எனக்கு ஒரு மணி நேரம் ஃப்ரீ டயம் கிடைத்தால், அப்போது நான் என்ன செய்தால் அப்பாவுக்குப் பிடிக்கும்? அம்மாவுக்குப் பிடிக்கும்?
12. என் நண்பர்களில் யாரை அப்பா/அம்மாவுக்குப் பிடிக்காது? ஏன்?
13. அப்பா பார்த்த முதல் வேலை எது? என்ன சம்பளம்?
14. அப்பா/அம்மாவுக்குப் பிடித்த எழுத்தாளர்/இயக்குநர் யார்?
15. எந்த ஊருக்குப் போக அப்பா/அம்மாவுக்குப் பிடிக்கும்?
குழந்தைகளைப் பற்றி அப்பா - அம்மாவும், அவர்களைப் பற்றிக் குழந்தைகளும் இந்தக் கேள்வித்தாள்களின் மூலம் தெரிவிக்கும் பதில்கள், நாம் ஒருவரையருவர் எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறோம் என்பதை உணர்த்திவிடுபவை. 15 கேள்விகளில் பத்துக்காவது சரியான பதில்கள் நம்மிடம் இருந்தால், நிச்சயம் சந்தோஷப்படலாம்!
குழந்தைகளுடன் பாலியல் உள்ளிட்ட வாழ்க்கை அம்சங்கள் எல்லாவற் றைப் பற்றியும் அந்தந்த வயதில் பெற்றோர்கள் பேச வேண்டும் என்றால், முதலில் அப்படிப்பட்ட கருத்துப் பரி மாற்றம் பெற்றோருக்கிடையே இருக்க வேண்டும். இருக்கிறதா?
அரசியல் கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் இல்லாதது போலவே, நம் குடும்பங்களிலும் வீட்டு ஜனநாயகம் என்பது இல்லை. வீட்டுப் பிரச்னைகள் உட்பட எந்த விஷயத்தையும் கணவனும் மனைவியும் பேசி விவாதிக்கும் சூழ்நிலை, பெரும்பாலான வீடுகளில் இல்லை. யாரோ ஒருவர் - பெரும் பாலும் கணவர், சில சமயங்களில் மனைவி - முடிவு செய்கிறார். மற்றவர்கள் அதைச் சிலசமயம் உளமாற ஏற்றுக்கொண்டோ, பல சமயம் முணுமுணுப்புடன் சகித் துக்கொண்டோ பின்பற்றும் மரபில் தான் நாம் வாழ்கிறோம்.
குழந்தைகளுடன் செக்ஸ் பற்றி ஆரோக்கியமாக விவாதித்து, அவர்களைப் பக்குவமாக வழி நடத்தும் பணியைப் பெற்றோர் செய்ய வேண்டும் என்றால், அது குடும்பத்தின் இதர சூழலுக்குச் சம்பந்தமில்லாமல் செய்து முடித்து விடக்கூடிய ஒரு வேலை அல்ல. ஒட்டு மொத்தமான குடும்பச் சூழலே ஆரோக்கியமானதாக மாற்றப்பட்டால்தான் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பும் சாத்தியப்படும்.
தவிர, குழந்தைகளுக்கு குடும்பத்துக்குள் செக்ஸ் எஜுகேஷன் என்பது பிறப்பு உறுப்புகளைப் பற்றிப் பாடம் நடத்துவது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சூழலே இங்கே இப்போது இருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம், ‘செக்ஸ்’ என்ற சொல்லே இங்கே எப்போதும் தவறாக புணர்ச்சி என்ற அர்த்தத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படு வதுதான்.
செக்ஸ் என்பது ஒருவரின் அடையாளம். நான் ஓர் ஆண்; நான் ஒரு பெண்; நான் ஓர் அரவாணி; நான் ஆண் உடலில் சிக்கிய ஒரு பெண்; நான் பெண் உடலில் சிக்கிய ஓர் ஆண்; செக்ஸ் என்பது என் உடல் - என் உள்ளம் இரண்டின் கூட்டு அடையாளம். இந்தப் புரிதல் ஏற்பட்டால்தான் எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வழி நடத்த முடியும்.
இந்தப் புரிதல் ஏற்பட்டுவிட்டால், செக்ஸ் என்பது உடல், உறவு இரண்டும் என்பதை இன்னொருத்தருக்கும் புரியவைக்க முடியும். உடலைப் புரிந்துகொள்ள அதன் உறுப்புகளைப் புரிந்துகொள்கிறோம். உறவுகளைப் புரிந்துகொள்ள, அவற்றால் ஏற்படும் மகிழ்ச்சிகளையும் வலிகளையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தப் புரிதலை குழந்தை பேசத் தொடங்கிய நாள் முதல் படிப்படியாக பகிர்ந்துகொள்ள முடியும். அந்தப் பகிர்வில்தான் ஒரு குழந்தை இளைஞராகும் வரை இருக்கும் சுமார் 15 வருடங்களுக்குள், வாழ்க்கைக் கல்வியின் ஆதாரமான பத்துக் கட்டளை களையும் அது கற்றுக்கொள்ளும்.
செக்ஸ் முதல் விண்வெளிப் பயணம் வரை, வாழ்க்கையில் எதையும் ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் கையாள ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான அந்தப் பத்துக் கட்டளைகள் என்ன?
|