Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. குதர்க்கமும் நானே, குழப்பமும் நானே!

2. 1...2..3...ஷாக்! (அத்தியாயம்-1)

3. 1...2...3...ஷாக்! (அத்தியாயம்-2)

4. “நல்ல வேளை... என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை!”

5. அறுபது கொண்டாடுகிறது இந்தியா!

6. கனவு காணுங்கள்!

7. அறிந்தும் அறியாமலும்..! (16)

8. அறிந்தும் அறியாமலும்..! (17)

9. அறிந்தும் அறியாமலும்..! (18)

10. அறிந்தும் அறியாமலும்..! (19)

11. அறிந்தும் அறியாமலும்..! (20)

12. அறிந்தும் அறியாமலும்..! (21)

13. அறிந்தும் அறியாமலும்..! (22)

***********

தொலைந்து போனவன்: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஜூன் 07 இதழ்

ஜூலை 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

1...2..3...ஷாக்!

இந்தியப் பொருளாதாரத்தின் அடுத்த பாய்ச்சலுக்கு முக்கியமான தேவை, மின்சாரம். அதைப் பெருக்க அணு மின்சாரம் தேவை. அதற்கான தொழில்நுட்பம், உலைகள் எல்லாம் தடங்கலின்றி இறக்குமதி செய்ய மன்மோகன் - புஷ் ஒப்பந்தம்தான் ஒரே வழி என்பது ஒரு வாதம். இது சரியா என்று பார்ப்போம்.

இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகாவாட். இதில், நிலக்கரி மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 சதவிகிதம். அணைகள் மூலம் பெறும் புனல் மின்சாரம் 26 சதவிகிதம். சூரிய சக்தி, காற்றாலை போன்ற சூழல் மாசாகாத தூய வழிகளில் பெறுவது சுமார் 5 சதவிகிதம். அணு உலைகள் மூலம் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே!

அடுத்த 20 வருடங்களில் அணு மின்சார அளவை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும்சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். இப்போது சூரிய சக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான்.

நமது மின்சாரத் தேவைகளுக்கு, சூழல் கெடுக்காத மாற்று வழிகளைத் தான் நாம் அதிகரிக்க வேண்டும். அணு உலைகளுக்கு ஒதுக்கும் தொகையை மாற்றி, இவற்றுக்குத்தான் ஒதுக்க வேண்டும். உலகத்திலேயே காற்றுவழி மின் உற்பத்திக்கான இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில், நாம் முன்னணியில் இருக்கிறோம். உலகிலேயே நான்காவது இடம். வட கிழக்கு மாநிலத்தில், புனல் மின்சாரத்துக்குப் பெரும் வாய்ப்பு இருக்கிறது. சுமார் 24 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கலாம். ஆந்திராவில் இயற்கை வாயு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நம்முடைய இந்த பலத்தை எல்லாம் அதிகரிக்காமல், அணுசக்தி பக்கம் பணத்தைத்திருப் புவது நிச்சயம் புத்திசாலித்தனமானதே அல்ல!

ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பம் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழில்நுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக் குப் பின்பற்றும் வழிகள் மிகப்பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன.

அமெரிக்காவில், ‘மூன்று மைல் தீவு’ என்னும் இடத்தில் இருந்த அணு உலையில், 1979ல் ஏற்பட்ட விபத்தையடுத்து, அந்த உலையை மூடுவதற்கு இதுவரை சுமார் 200 கோடி டாலர்கள் செலவு செய்தும், சுமார் 30 வருடமாகியும் அது பத்திரமாக இல்லை. ஆயிரக்கணக்கான டன் கான்க்ரீட் கலவை கொட்டியும் இன்னும் கதிரியக்கம் தலை காட்டுகிறது. பழைய சோவியத் யூனியனில் செர்னோபில் உலையில் 1985ல் ஏற்பட்ட விபத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது. கதிரியக்கத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர் களின் வாரிசுகளுக்குத் தொடர்ந்து 2030 வரை மரபணு பாதிப்பு தொடரும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

சென்ற மாதம், ஜப்பானின் மிகப் பெரிய அணு உலை, காஷிவசாகியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இப்போது அதை மூடுவதற்கு, செயலிழக்க வைப்பதற்கு ஆகும் செலவு, அதைக் கட்ட ஆன செலவைவிடப் பல மடங்கு அதிகமாகும்என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

‘இயற்கை வளமான நிலக்கரி இருப்பு அதிக காலம் வராது. தவிர, அதை எரித்து மின்சாரம் தயாரிப்பதால், பூமி சூடாகி ஓசோன் படலம் பாதிக்கப்படும். பருவ காலங்கள் மாறி அதிக வெள்ளமும் வறட்சியும் ஏற்படும், என்ற காரணங்களைக் காட்டித்தான் அணுசக்தியை ஆதரிப் பவர்கள் எப்போதும் வாதாடுகிறார்கள். அணுக்கழிவுகளின் கதிரியக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்குத் தீர்க்க முடியாமல் தொடரும் பிரச்னை. உலகம் சூடா வதைவிடப் பெரிய பிரச்னை.

உலகிலேயே மிக அதிகமாக அணுமின் சாரத்தைத் தயாரித்துப் பயன்படுத்தும் நாடு பிரான்ஸ். மொத்தம் 56 உலைகள் அந்த நாட்டின் மின் தேவையில் 76 சதவிகிதத்தை உற்பத்தி செய்கின்றன.

இப்போது அங்கே இரு பிரச்னைகள் வந்துவிட்டன. அணு உலை கட்ட இடம் அளித்த கிராமங்கள் அணுக்கழிவைப் புதைக்க இடம் தர மறுக்கின்றன. எனவே, அணுக் கழிவுகளை என்ன செய்வது என்பது பெரும் சிக்கலாகி வருகிறது. தவிர, அணு உலைகளிலிருந்து கூலன்ட் வாட்டர் எனப்படும் உலையைக் குளிர்வித்த சூடான நீரை ஆறுகளில் விடுவதால், ஆறுகள் சூடாகி மீன் வகைகள் சாவதும், சூழல் கெடுவதும் அதிகரித்துவிட்டன. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சூடான நீரை ஆற்றில் விட்டால், ஆறு வறண்டுகெட்டுப் போகிறது. அப்படிச் செய்யாவிட்டால், அணுமின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்தச் சிக்க லில் இப்போது பிரான்ஸ் இருக்கிறது.

இப்போது பிரான்ஸ் அரசு, தேசம் முழுவதும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதுதான் தீர்வு என்று பேச ஆரம்பித்தி ருக்கிறது. குறைந்தபட்சம் 15 சதவிகித அளவுக்கு மின் உபயோகத்தைக் குறைக்க வழிகள் தேடுகிறது.

‘இப்போது இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இல்லை. அதை இறக்குமதி செய்தாக வேண்டும். இந்தியா அணுகுண்டு வெடித்த பிறகு, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தன் உலைகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்த மறுத்து வந்ததால், உலக நாடுகள் யுரேனியம் தர மறுத்துவிட்டன. இப்போது அமெரிக்காவுடன் போடும் ஒப்பந்தத்தால் இந்த நிலை மாறும்’ என்பது மன்மோகன் தரப்பு வாதம்.

இதுவரை இந்தியா எந்தெந்த உலைகளிலிருந்து குண்டு தயாரிக்க மூலப்பொருள் எடுக்கிறது என்பதைத் தெரிவிக்காத நிலை இருந்தது. இந்த ஒப்பந்தத்தால் தெரிவிக்கும் கட்டாயம் வந்துவிட்டது. இதற்கு முன் மொத்த புளூட்டோனியத்தில் 35 சதவிகிதத்தைக் குண்டு தயாரிக்க இந்தியா பயன்படுத்தியது. ஒப்பந்தத்துக்குப் பின் பத்து சதவிகிதம்தான் எடுக்க முடியும்.

தொழில்நுட்பம், அணு உலைக்கான எரிபொருள், தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிப்பதற்கான சுதந்திரம் இவற்றுக்காக அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் போட்டாக வேண்டியிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டும் நம்மிடமே உள்ளன. அமெரிக்காவிடம் கையேந்தத் தேவை இல்லை என்பதுதான் உண்மை. தாராப்பூரில் கனடா நாட்டுத் தொழில்நுட்பத்துடன், அறுபதுகளில் தொடங்கிய அணு உலைக்கு முதல் பொக்ரான் குண்டு வெடிப்புக்குப் பின் அமெரிக்கா யுரேனியம் எரிபொருளைத் தராமல் கழுத்தறுத்த பின், அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் அணு சக்தித் தொழில்நுட்பத்தில் முழு தன்னிறைவை அடைந்து சாதனை செய்திருக்கிறார்கள். இதன் உச்சமான வளர்ச்சிதான் நாம் உருவாக்கியிருக்கக்கூடிய அதிவேக ஈனுலை.

இங்கே, யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பதே தவறு. அடுத்த 40 ஆண்டுகளில் அணு மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் (சுமார் 2,228 குண்டுகள்!) தேவைப்படும் யுரேனியம் அளவு சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன். நம்மிடம் இருப்பதோ 78 ஆயிரம் டன்கள். இதை வெளியில் எடுத்து பதப்படுத்திப் பயன்படுத்தத் தேவைப்படுவதெல்லாம், மக்கள் ஆதரவுடன் நில ஆர்ஜிதம் மட்டும்தான்!

யுரேனியத்தைவிட அதிகமாக நம்மிடம் தோரியம் இருக்கிறது. உலகிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடி நம்மிடம்தான் தோரியம் உள்ளது. சுமார் 3 லட்சம் டன்கள். இதைக் கொண்டு 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவிலேயே உருவாக்கியாயிற்று. இதை அடுத்த 40 வருடங்களில் முழுமையாகச் செயல் படுத்துவதுதான் நமது அணுசக்தித் துறை வைத்திருந்த திட்டம்.

தோரியத்தைப் பயன்படுத்த சிறு அளவு புளூட்டோனியம் தேவை. இதை மறு சுத்திகரிப்பு செய்யும் திட்டத்தை 123 ஒப்பந்தம் மூலம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது அமெரிக்கா. தோரியம் திட்டத்தை முடக்குவதே அதன் உள்நோக்கமாக இருக்கலாம். அதனால்தான் 123 ஒப்பந்தத்தையும் 40 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகப் போட மன்மோகன் சிங்கை வற்புறுத்துகிறதோ, என்னவோ?!

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்த லாபமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. நொடித்துப் போயிருக்கும் அமெரிக்க அணு உலை வியாபாரத்துக்குப் புத்துயிர் கிடைக்கும். நாம் இங்கேயே தயாரிக்கக்கூடிய உலைகளை இறக்குமதி செய்வதால், தோரியம் உலை போன்ற அடுத்த கட்ட முயற்சிக்கு ஒதுக்க வேண்டிய பணம் திசை மாறும்.

தடங்கல் இல்லாமல் எரிபொருள் தருவோம், புளூட்டோனியம் தயாரிப்பதற்கான மறு சுத்திகரிப்பு தொழில் நுட்பம் தருவோம் என்றெல்லாம் 123 ஒப்பந்தத்தில் அமெரிக்கா சொன்னா லும், எல்லாமே முன்னதாக அமெரிக்க செனட்டில் போட்ட ஹைட் சட்டத் துக்கு உட்பட்டவை என்றும் சொல்லியிருக்கிறது. ஹைட் சட்டமோ, இந்தியா இன்னொரு அணு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்து என்கிறது. ஆனால், தான் அடுத்த அணு ஆயுத சோதனை நடத்தத் தயார் செய்து கொண்டு இருக்கிறது!

நாம் குண்டு சோதனை நடத்தா விட்டாலும்கூட மறு சுத்திகரிப்பு, கனநீர் தொழில்நுட்பம் முதலியவை தரப் பட மாட்டாது என்றும் ஹைட் சட்டம் சொல்கிறது. இரான் உள்ளிட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையோடு இந்தியா இயைந்து போனால் தான் ஒத்துழைப்பு என்கிறது ஹைட் சட்டம். இது 123ல் இல்லை. ஆனால், 123, ஹைட் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது! இரானுக்கு அணுசக்தி திட்டத்தில் உதவி செய்ததாகச் சொல்லி, இரு இந்திய விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கா 2004ல் தடைவிதித்தது. நான்கு இந்திய கம்பெனிகள் இரானுக்குப் பொருள் சப்ளை செய்ததற்காக, 2006ல் அமெரிக் காவால் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டன. இதை எல்லாம் இனி செய்ய மாட்டோம் என்று 123ல் எந்த ஒப்பந்தமும் கிடையாது.

இரான் - இந்திய உறவு இந்தியாவுக்கு மிக முக்கியமானது. ஏனென்றால், இரானிலிருந்து இயற்கை எரிவாயுவைக் குழாய் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் இந்தியாவின் எரிபொருள் தேவையின் முக்கிய அங்கம். இரானுக்கு எதிராக அமெரிக் காவுடன் சேர்ந்தால், பாதிப்பு அமெரிக்காவுக்கு இல்லை... இந்தியா வுக்குதான்! இந்தியா மேலும் மேலும் எரி பொருள் தேவைக்கு தன்னைச் சார்ந்து இருக்கும் நிலை அமெரிக்காவுக்கு தான் சாதகமானது!

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையோடு பின்னிப் பிணைந்ததே! இன்று உடல் உழைப்புக்குச் சீனாவையும், மூளை உழைப்புக்கு இந்தியாவையும், மார்க்கெட் வர்த்தகத்துக்கு இரு நாடுகளையும் சார்ந்திருக்கிறது அமெரிக்கா. ஆசியாவின் இரு பெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஒன்று சேர்ந்தால், அமெரிக்காவுக்கு தான் சிக்கல்!

தன் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடுத்தகட்டமாக, 60 வருடங்களுக்கு முன்பு இந்தியாவைத் துண்டாடிவிட்டு விடைபெற்ற பிரிட்டனின் சூழ்ச்சிக்கு நிகரானது, அமெரிக்காவின் இப்போதைய முயற்சி எனலாம். சீனாவும் இந்தியாவும் நெருக்கமாக விடாமல் தடுப்பது அதன் தேவை. நம் தேவை அல்ல! மன்மோகன் - புஷ் ஒப்பந்தத்தை எதிர்க்கும் பி.ஜே.பியை எனக்குப் பிடிக்கும்/பிடிக்காது; இடது சாரிகளை எனக்குப் பிடிக்கும்/பிடிக்காது; சீனாவை எனக்குப் பிடிக்கும்/பிடிக்காது; மன்மோகனைப் பிடிக்கும்/பிடிக்காது; அமெரிக்காவைப் பிடிக்கும்/பிடிக்காது; அணு மின்சாரத்தைப் பிடிக்கும்/பிடிக்காது என்பன போன்ற விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, 123 ஒப்பந்தத்தைத் திறந்த மனதுடன் அலசி ஆராய்வது, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும். அப்படி அலசும்போது, நிச்சயம் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பது ஒரு தேச விரோதச் செயல் என்ற முடிவுக்கே என்னால் வர வேண்டியிருக்கிறது.

லஞ்சம், ஊழல், முறைகேடு போன்ற குற்றச் சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக மன்மோகன் சிங் இருப்பது மட்டுமே போதாது. நல்லவர்கள் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்; இல்லாவிடில், பொல்லாதவர்களின் சூழ்ச்சிக்குப் போலி கௌரவத்தினால் பலியானவராகவே அவரைச் சரித்திரம் குறித்து வைக்கும்!

(ஓ... போடுவோம்!)

நன்றி: ஆனந்த விகடன்




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com