KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. குதர்க்கமும் நானே, குழப்பமும் நானே!

2. 1...2..3...ஷாக்! (அத்தியாயம்-1)

3. 1...2...3...ஷாக்! (அத்தியாயம்-2)

4. “நல்ல வேளை... என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை!”

5. அறுபது கொண்டாடுகிறது இந்தியா!

6. கனவு காணுங்கள்!

7. அறிந்தும் அறியாமலும்..! (16)

8. அறிந்தும் அறியாமலும்..! (17)

9. அறிந்தும் அறியாமலும்..! (18)

10. அறிந்தும் அறியாமலும்..! (19)

11. அறிந்தும் அறியாமலும்..! (20)

12. அறிந்தும் அறியாமலும்..! (21)

13. அறிந்தும் அறியாமலும்..! (22)

***********

தொலைந்து போனவன்: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஜூன் 07 இதழ்

ஜூலை 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

“நல்ல வேளை... என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை!”

ஆஸ்திரேலியாவில் பணியாற்றிய இந்திய டாக்டர் முகமது ஹனீஃப், பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் ஆஸ்திரேலிய போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஒரு மாத விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். அவர் பெங்களூரு திரும்பி வந்து மனைவி, குழந்தையைச் சந்தித்தபின் குடும்பம் முழுவதுமாக கடவுளுக்கு நன்றி தெரிவித்திருப்பார்கள். அவர் நிச்சயம் சொல்லவேண்டிய நன்றி ஒன்று உண்டு... “நல்லவேளை, என்னை இந்திய அரசாங்கம் கைது செய்யவில்லை; ஆஸ்திரேலிய அரசு கைது செய்ததால், ஒரு மாதத்தில் விடுவிக்கப்பட்டேன்!”

இந்தக் கட்டுரையின் கடைசி பகுதிகளை யாரேனும் ஹனீஃபுக்குப் படித்துக் காட்டினால், நிச்சயமாக இதற்காகவும் அவர் நன்றி சொல்வார் என்பதில் சந்தேகமில்லை.

முதலில், ஹனீஃப் கைது விவகாரத்தில் எழும் கேள்விகளை அலசிவிட்டு அதற்குப் போவோம். பிரிட்டனின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் வெடி குண்டுகளுடன் ஜீப்பை ஓட்டிவந்து தாக்க முயன்று தீக்காயங்களுடன் சாவின் விளிம்பில் கிடக்கும் கஃபீல் அகமதின் ஒன்றுவிட்ட சகோதரர் டாக்டர் ஹனீஃப் என்பதாலும், இவருடைய சிம் கார்டும் மொபைலும் கஃபீலிடம் இருந்ததாலும், ஹனீஃப் மீது சந்தேகம் எழுந்தது. தாக்குதல் நிகழ்ச்சிக்கு அடுத்த இரு தினங்களில், தன் புத்தம் புது குழந்தையைப் பார்ப்பதற்காக பெங்களூரு செல்ல ஹனீஃப் விமான டிக்கட் வாங்கியிருந்தது, அவர் தப்பி ஓட முயற்சிப்பதாக சந்தேகத்தை அதிகரித்தது.

நான்கு வார விசாரணைக்குப் பின், ஹனீஃப் மீது எந்தக்குற்றச் சாட்டையும் வைக்க இயலவில்லை என்ற நிலையில் அவரை ஆஸ்திரேலிய போலீஸார் விடுவித்தார்கள். இதற்கு நான்கு வாரம் தேவையா என்பது முதல் கேள்வி. நவீன தொழில்நுட்பத் தகவல் தொடர்பு வசதிகள் வைத்திருக்கும் ஆஸ்திரேலியா போன்ற நாட்டுக்கு, ஹனீஃப் பற்றி அறிந்துகொள்ள அதிகபட்சம் நான்கு நாட்கள் போதாதா என்ன?

ஒரு குடும்பத்தில் ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள் ஒருவரோடொருவர் பரிச்சயத்தோடு இருந்தாலும், ஒருவருக்கு மற்றவரை எந்த அளவுக்குத் தெரியும் என்பது இன்றைய வாழ்க்கை முறையில் சந்தேகம்தான். எனவே ஒரு குற்றத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒருவரின் உறவினர்கள் அனைவரையும் சந்தேகிப்பது என்பதே அர்த்தமற்றது.

கஃபீல், ஹனீஃப் கைது செய்திகள் வந்த உடனே இரண்டு கருத்துக்கள் பெரிதாக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன. இருவரும் இந்திய முஸ்லிம்கள். இருவரும் பொறியியல், மருத்துவம் போன்ற பெரிய படிப்புகளில் திறமைசாலிகள். உலக பயங்கரவாதத்தில் இந்திய முஸ்லிம்களும் இணைந்துவிட்டார்களா என்று ஒரு விவாதம் ஆரம்பித்தது. கூடவே, “இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் பெரும் வறுமை, படிப்பறிவின்மை, வேலையின்மை பிரச்னைகளால்தான்முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதத்துக்கு ஆட்படு வதாகச் சொல்லுவது தவறு. இதோ பாருங்கள்... மெத்தப் படித்த முஸ்லிம் இளைஞர்கள் சிக்கியிருக்கிறார்கள். இஸ்லாமே தீவிரவாதத்துக்கு இட்டுப் போகிற ஒரு மதம்தான்” என்றும் ஒரு குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

‘படித்தவர்களும், நல்ல வசதி வேலை இருப்பவர்களும் பயங்கரவாதி ஆவதில்லை. படிப்பும் வேலையும் இல்லாத ஏழைகள்தான் பயங்கரவாதி ஆகிறார்கள்’ என்ற அடிப்படைக் கருத்தே தவறானது. பயங்கரவாதத்தின் அடிப்படையே, ஒரு கருத்தின் மீது இருக்கும் வெறிதான்.

மத அடிப்படையில் சைவர்களும் சமணர்களும் மோதிக்கொண்டபோது, பாமரர்களா மோதினார்கள்? மெத்தப் படித்து, சாஸ்திரங்-களைக் கரைத்துக் குடித்தவர்கள்தான் அரசனின் ஆதரவுடன் ஆயிரக்கணக்கான சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார்கள். உலகத்தின் ஒவ்வொரு யுத்தத்திலும் செத்துப்போகிற சிப்பாய்கள் வேண்டுமானால் மெத்தப் படிக்காதவர்களாக இருக்கலாம். ஆனால், யுத்தத்துக்குத் திட்டமிட்டு, வியூகம் வகுத்து நிறைவேற்றும் அரசியல், ராணுவத் தலைமைகள் எல்லாமே நல்ல படிப்பறிவு உடையவை தான்.

மதம், இனம், பணம் என்ற மூன்றும்தான் உலகில் எந்த பயங்கரவாதச் செயலுக்கும் பின்னால் இருப்பவை. இவற்றின் அடிப்படையில் வெறியை ஊட்டி விடுபவர்கள் எப்போதுமே படித்த வர்க்கம்தான். செயல்படுத்தும் காலாட் படையில்தான் பாமரர்கள் அதிகம் இருப்பார்கள்.

மும்பை குண்டு வெடிப்புகள், மதவெறியர்களான சில இஸ்லாமியர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருப்பதாக வழக்கு விசாரணையில் சொல்லப்பட்டது. ஆனால், அதற்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தைக் கடத்தி வர உடந்தையாக இருந்த சுங்க அதிகாரி இஸ்லாமியர் அல்லர்; இந்து! இப்போது அவர் புற்றுநோயில் கிடப்பதால், மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. வெடிமருந்துகள் இந்தியாவுக்குள் வர அவர் அனுமதிக்கக் காரணம் என்ன? பணவெறிதான்.

எல்லா மனிதர்களுக்கும் சமமான கல்வி, சமமான வாய்ப்புகள், சமமான சமூக அரசியல் களம் இல்லாத சமூகத்தில்... மதம், சாதி, இனம், பணம் என்ற அடிப்படையில் மனிதர்களுக்கிடையே வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்வரை, பயங்கரவாதத்தின் கிளைகளை மட்டுமே நாம் வெட்டிக்கொண்டுஇருப் போம்; வேர்கள் உயிரோடே இருக்கும்.

ஹனீஃப் மட்டும் இந்தியாவில் நடந்த ஏதோ ஒரு பயங்கரவாத குற்றம் தொடர்பாகக் கைதாகி இருந்தால், நான்கு வாரத்தில் விடுதலையாகி -இருப்பாரா என்ற கேள்வியை அவரும் நாமும் யோசிக்கவேண்டும். ஆதிவாசிகள் மத்தியில் மருத்துவ சேவை செய்து வந்த டாக்டர் விநாயக் சென், ஜார்கண்ட் சிறையில் இன்னும் இருக்கிறார். வேலூர் சி.எம்.சி. மருத்துவர்கள் முதல், உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி வரை விநாயக்சென்னுக்காகக் குரல் கொடுத்தும், மன்மோகன்சிங் அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்தியச் சிறைகளில் இந்த நொடியில் இருக்கும் சிறைவாசிகளில் 74 சதவிகிதம் பேர் இன்னமும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாதவர்களே! அவர்கள் வெறும் விசாரணைக் கைதிகள்! தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சின்ன பெருமை. இங்கே 100க்கு 31 பேர்தான் விசாரணைக் கைதிகளாம்! அதுவே மொத்தக் கணக்கில் ஆயிரக்கணக்கில் போகும். இந்தியச் சிறைகளில் மொத்தம் 3,04,893 பேர் உள்ளனர். இவர்களில் 2,25,817 பேர் விசாரணைக் கைதிகள். பெரும் பாலானவர்கள் ஏழைகள்; படிப்பறிவு அற்றவர்கள்.

வருடக் கணக்கில் விசாரணை நடந்துகொண்டே இருக்கிறது. குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டால், சட்டப்படி எத்தனை வருடம் சிறைத் தண்டனையோ, அதைவிட அதிக வருடங்களை சிறையில் விசாரணைக் கைதிகளாகவே கழித்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். பீகாரில் போக்கா தாக்குர், ரூடல் ஷா என்று இருவர், 25 வருடங்களுக்கு மேலாக விசாரணைக் கைதிகளாக இருந்தார்கள். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால், ஒன்று மரண தண்டனையில் எப்போதோ செத்திருக்கலாம்; அல்லது, ஆயுள் தண்டனை 14 வருடத்தை முடித்துவிட்டு வெளியே வந்திருக்கலாம். இரண்டும் நடக்கவில்லை. ஃபைசா பாதில் ஜகஜீவன் ராம் யாதவ் 38 வருடமாக விசாரணைக் கைதி!

இப்படிப்பட்ட ஒரு வழக்கைமனித உரிமை அமைப்புகள் உச்சநீதிமன்றத்துக்குக் கொணடுபோனதில் ஒரு தீர்ப்பு வந்தது. எந்த விசாரணைக் கைதியையும் 6 மாதத்துக்கு மேல் சிறையில் வைத்திருக்கக் கூடாது என்றது நீதிமன்றம்.

ஆனால், அரசு இந்தியன் பீனல் கோடு 436-ஏ திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, குற்றம் நிரூபிக்கப் பட்டால் எத்தனைக் காலம் தண்டனையோ, அதில் பாதிக்கு மேல் விசாரணைக் கைதியாக இருந்தால் மட்டுமே விடுவிக்கலாம் என்றாக்கப்பட்டது. அதாவது, ஐந்து வருட தண்டனைக்குரிய குற்றம் என்றால், இரண்டரை வருடம் வரை விசார ணைக் கைதியாகவே சிறையில் வைத்திருக்கலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அர்த்தமற்றதாகிவிட்டது.

உடனடியாக வழக்கை முடிக்காத வக்கீல்கள், நீதிபதிகள், காவல் அதிகாரிகள், இந்தப் பிரச்னையைக் கவனிக்காத அமைச்சர்கள் வரை எல்லாருமே படித்தவர்கள்தான். இவர்கள் யார் மீதாவது வழக்கு என்றால், நடு இரவில் வீட்டிலேயே சில நீதிபதிகள் விசாரித்து உடனே ஜாமீன் கொடுத்து விடுவார்கள்.

எது பயங்கரவாதம் என்பது நம் சமூகத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

ஆகவே, டாக்டர் ஹனீஃப்..! இந்தியாவில் கைதாகாமல், ஆஸ்திரேலியாவில் கைதானதற்குக் கட்டாயம் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்ளுங்கள்!

(ஓ...போடுவோம்!)

நன்றி: ஆனந்த விகடன்