|
ஞாநி
அறிந்தும் அறியாமலும்..! (22)
‘தன்னைப் போல் பிறரை நினை!’ என்று சொல்வது எளிதானது; ஆனால், பின்பற்றுவதற்குச் சற்றுக் கடினமானது!
ஏனென்றால், நான் யார் என்று நம்மை நாமே உணரும் முயற்சியில், நமக்கு முதலில் புரிவதெல்லாம் நம்முடைய தேவைகள்தான்; நம்முடைய உணர்ச்சிகள்தான். ‘எனக்கு இது வேண்டும். எனக்கு இது பிடித்திருக்கிறது. எனக்கு இது வேண்டாம். எனக்கு இது பிடிக்கவில்லை’ என்பவைதான், நம்மை நாம் உணர்ந்ததன் அடையாளமாக, முதலில் நமக்கே சொல்லிக்கொள்ளும் விஷயங்கள்.
இந்த உணர்வு மட்டும்தான் நாம் என்று இருப்போமேயானால், நாம் முற்றிலும் சுயநலம் மட்டுமே உள்ள மனிதர்களாக ஆகிவிடுவோம். அப்படி ஆகிவிடுவதற்கான ஆபத்தின் அறிகுறிகளை, அன்றாட உரையாடல்களில் காண முடியும்.
“ரமேஷ் தினமும் ஸ்கூலுக்கு ஃபோர்ட் எண்டீவர் கார்ல வரான். இன்னும் என்னை ஓல்டு மாடல் மாருதில கொண்டு போய் விடறீங்க!”
“ஐஸ்வர்யாகிட்ட வீடியோ, டிஜிட்டல் செல்போன் இருக்கு. என்கிட்ட இன்னும் 1100 மாடல்தான்!”
இப்படிப்பட்ட உரையாடல்களைப் பணக்கார வீட்டுச் சிறுவர்கள் முதல் ஏழை வீட்டுக் குழந்தைகள் வரை பல தரப்பினரிடமும், அவரவர் வாழ்க்கை நிலைக்கேற்ப கேட்க முடியும்.
இவையெல்லாம் பிறரைப் போல் தன்னை நினைக்க விரும்புவதால் வருபவை. தன்னைப் போல் பிறரை கருதத் தொடங்கினால் மட்டுமே மாறக்கூடியவை. அதற்காக, ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று மாற்றம் நாடாத மனநிலைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.
மனித வாழ்க்கையில், எந்த ஒரு தனி மனிதரும் சுயச்சார்புடன் மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. ஒவ்வொருவரும் மற்றவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். அப்படித் தான் வாழ்கிறோம். நாம் நம் தேவைகளுக்காகப் பலரைச் சார்ந்திருப்பதைப் போலவே, தங்கள் தேவைகளுக்காகப் பலர் நம்மைச் சார்ந்து இருக்கிறார்கள். இதையும் நாம் உணர வேண்டும். தன்னைத் தானே உணர்வதில், இதுவும் ஒரு முக்கியமான பகுதி. நம் மீது நமக்கே மதிப்பும் மரியாதையும் ஏற்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
எப்படியெல்லாம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை நம் குழந்தைகளுக்கு தினமும் சொல்லித்தர ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. தட்டில் வந்து விழும் சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்பதை நாம் சொல்லுவதில்லை. காசு கொடுத்தால், கடையில் அரிசி கிடைக்கும். காசு கொடுத்தால், கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும். காசு கொடுத்தால் காய், பழங்கள் நம் கூடையில் நிரம்பும். காசு கொடுத்தால், தனக்குப் பிடித்தமான உடை கிடைக்கும். இதை எல்லாக் குழந்தைகளும் நாம் எடுத்துச் சொல்லத் தேவையின்றி, தங்கள் அனுபவத்திலேயே நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.
காசு கொடுத்தால் நம்முடைய தேவைகள் பூர்த்தியாகிவிடும் என்று மட்டும் புரிந்துவைத்திருப்பது ஆபத்தானது. காசு கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளின் உற்பத்தியிலும் காசு கொடுத்துப் பெறும் ஒவ்வொரு சேவையின் பின்னாலும், எத்தனை எத்தனை மனிதர்களின் அறிவும் உழைப்பும் இருந்தாக வேண்டியிருக்கிறது என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.
‘பருப்புப் பாயசம் இன்னும் ஒரு டம்ளர் வேணும்!’
‘நல்லா இருக்கா?’
‘ம்..’
‘அதுல வெல்லம் போட்டிருக்கு. தெரிஞ்சுதா?’
‘சர்க்கரை போடலியா?’
‘இல்லே. ஆனா சர்க்கரை, வெல்லம் ரெண்டையும் கரும்பு லேர்ந்துதான் தயாரிக்கறாங்க, தெரியுமா?’
‘பின்னே எப்பிடி ரெண்டும் வேற வேறயா இருக்கு?’
‘முதல்ல கரும்பு எப்பிடி வெளையுதுனு உனக்குத் தெரியுமா?’
கரும்பு விவசாயம் முதல் சர்க்கரை ஆலைகளின் தொழில்நுட்பம் வரை, உழவர்கள் வேலை முதல் ஆலைத் தொழிலாளர் வேலை வரை, வேளாண் விஞ்ஞானி முதல் மெக்கானிக்கல் இன்ஜினீயர் வரை எப்படிப் பல விதமான மனிதர்களின் உழைப்பு பருப்புப் பாயசத்துக்குப் பின்னால் சம்பந்தப்பட்டு இருக்கிறது என்பதை எளிமையாக, அதே சமயம் சுவையான கதை போல் குழந்தையிடம் சொல்லிக் கொண்டே போக முடியும்.
பல மனிதர்கள் நம் தேவைகளுக்காகத் தங்கள் அறிவையும் உழைப்பையும் தருகிறார்கள். அந்த விவரங்களை அறிந்தால்தான், நாமும் அதுபோல அவர்களுடைய தேவைகளுக்காக நம் உழைப்பையும் அறிவையும் தர வேண்டும் என்ற உணர்ச்சி குழந்தை களுக்கு ஏற்படும்.
அதே சமயம், எல்லாமே உலகத்தில் காசுக்காக மட்டுமே நடப்பதில்லை. காசு வாங்கிக்கொள்ளாமல் நமக்காக எத்தனையோ பேர் உழைக்கிறார்களே, ஏன்? நம் மீது இருக்கும் அன்பினால்தான் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். அன்பின் நிமித்தம் சக மனிதருக்குத் தேவையானதைத் தானும் செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியைக் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.
‘எம்ப்பதி’ எனப்படும் தன்னைப் போல் பிறரைக் கருதும் உணர்ச்சியைப் பழக, முதலில் வீட்டிலிருந்து தொடங்கலாம். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில், நண்பர்கள் வட்டாரத்தில், அடுத்தடுத்து எல்லா சக மனிதர்களிடமுமாக இதை விரிவுபடுத்தலாம்.
‘எம்ப்பதி’யின் தொடக்கப் புள்ளி, ‘என்னை நான் உணர்வதுபோல, அடுத்தவரை நான் புரிந்துகொள்ள முற்படுவது’தான்!
12 வயது பார்த்திபனுக்கு புது ரீபாக் ஷு வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. டூப்ளிகேட் உட்லண்ட்ஸ் வாங்குவதாயிருந்தால்கூட சுமார் 800 ரூபாய் தேவை. அப்பா இப்போது பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
எரிச்சலாக இருக்கிறது. ‘நான் என்ன மாதாமாதமா ஷூ கேட்கிறேன்? இந்த வாரம் மேட்ச்சுக்கு வரும்போது புது ஷூவுடன் வருவேன் என்று குரூப்பில் சொல்லி வைத்தது எல்லாம் வேஸ்ட்! நான் எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பேன்!’
கடுப்பில் சரியாகத் தூக்கம்கூட வரவில்லை. நடு ராத்திரியில் சட்டென்று விழிப்பு வருகிறது. யாரோ இருமும் சத்தம். யார்? அப்பாதான். வாஷ்பேஸினில் துப்பிக்கொண்டே இருமுகிறார்.
‘என்னப்பா ஆச்சு?’
‘ஒண்ணும் இல்லை. நீ போய்ப் படு!’
அடுத்த நாள்... அடுத்த வாரம்... இரவில் அப்பாவின் இருமல் தொடர்கிறது.
‘டாக்டரைப் போய்ப் பார்க்கலாம், வாங்களேன்!’ - அழைக்கிறாள் அம்மா.
‘போகலாம், போகலாம்!’ ஆனால், போகவில்லை.
‘ஏம்மா, அப்பா டாக்டர்கிட்டே போக மாட்டேங்கறார்?’
‘போனா, எக்ஸ்ரே எடுக்கச் சொல்லுவார். ஏராளமா மருந்து எழுதிக் கொடுப்பார். 600, 700 ரூபாய் செலவாகும். அதான் இப்ப வேணாம், அடுத்த மாசம் அரியர் பணம் வந்ததும் போறேங்கறார்!’
பார்த்திபனுக்கு ரீபாக் ஷூ ஒரு நொடி மனதில் தோன்றி மறைகிறது. அப்பா தன் ஷூவை மட்டும் மறுக்கவில்லை; தனக்கான மருத்துவத்தையும் மறுத்துக் கொண்டு இருக்கிறார். மகன் அப்பாவைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் முதல் புள்ளி இது!
இந்த வார ஹோம் வொர்க்:
1. என் தேவை என்ன என்பதை எப்படித் தீர்மானிக்கிறேன்? மற்றவர்களிடம் இருப்பதை வைத்தா? எனக்குத் தேவை என்ற அடிப்படையிலா?
2. என் அன்றாடத் தேவைகளுக்கு நான் யார் யாரைச் சார்ந்திருக்கிறேன்?
3. தினமும் என்னைச் (என் பணியை) சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் யார் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியுமா?
4. ஊதியம் பெறாமல் அன்பினால் என் தேவைகளை அளித்து வருபவர்கள் யார் யார்?
5. ஊதியம் வாங்காமல் அன்பின் காரணமாக நான் யார் யாருக்கு உதவிகரமாக இருக்கிறேன்?
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல; உங்களுக்கானவை... உங்களுடையவை!
(அறிவோம்)
|