|
ஞாநி
அறிந்தும் அறியாமலும்..! (18)
பிள்ளைகளுடன் செக்ஸ் பற்றி எப்படிப் பேசுவது என்ற தயக்கமும் கவலையும் எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், செக்ஸ் பற்றித் தங்கள் பிள்ளைகள் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமே என்ற அக்கறையும் கூடவே இருக்கிறது.
குறிப்பாக, டீன் ஏஜ் பெற்றோர்களின் முதல் கவலை, தேவையற்ற கர்ப்பத்தில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடிய உறவு எதிலும் தங்கள் பிள்ளைகள் சிக்கிவிடக் கூடாது என்பது தான். பாலியல் வன்முறை போன்ற பயங்கரம் தம் குழந்தைகளுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பது இன்னொரு கவலை. விவரம் தெரியாமல் உறவுகளில் ஈடுபட்டு ஏதேனும் பால்வினை நோய்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மற்றொரு கவலை. இவையெல்லாம் நியாயமான கவலைகள்தான்.
எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் செக்ஸ் பற்றித் தெரியாதவர்களாகவே வளர வேண்டும் என்று நிச்சயம் நினைக்கமாட்டார்கள். அவர்கள் விரும்புவது எல்லாம்... குழந்தைகளுக்குத் தங்கள் உடலைப் பற்றிய தெளிவும் பொறுப்பும் ஏற்பட வேண்டும்; அன்பு, நெருக்கம் இவற்றை முறை-யான வழிகளில் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்; உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்! ஆனால், இதற்குத் தங்கள் குழந்தைகளைத் தயார்படுத்துவது எப்படி என்பதில்தான் அவர்களுக்குச் சிக்கல்.
இதற்கு முதல் காரணம், அவர்களுடைய பெற்றோர் அவர்களை அப்படித் தயார்படுத்தவில்லை. அதனால், தங்கள் குழந்தைகளும் தாங்களாகவே தயாராகிவிடுவார்கள் என்று சிலர் நம்புகிறார்கள். இன்னும் சிலருக்கு, தாங்களே எவ்வளவு விவரம் தெரியாதவர்களாக 60 வயதைக் கடந்துவிட்டோம் என்று வருத்தமும் ஆச்சர்யமும் இருக்கிறது. இந்தத் தொடருக்கு வரும் கடிதங்களில் பல அப்படிப்பட்டவை.
‘எனக்கு மாதவிலக்கு நின்று பத்து வருடமாகிறது. ஆனால், மாதவிலக்கு என்பது என்ன, அது ஏன் நிகழ்கிறது என்பதே இத்தனை வருடமாக எனக்குத் தெரியாது. இந்தத் தொடர் மூலம் தெரிந்துகொன்டு ஆச்சர்யப்பட்டேன்’ என்று ஒரு வாசகி எழுதுகிறார். ‘60 வருடங்களுக்கு முன், நான் டீன் ஏஜில் இருந்தபோது, சுய இன்பத்தைப் பற்றிக் கண்டபடி சொல்லி, என்னை மிரட்டி வைத்திருந்தார்கள். இப்போதுதான் உண்மைகள் புரிகின்றன’ என்று 75 வயது வாசகர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இன்றைய இளம், நடு வயதுப் பெற்றோர்கள், செக்ஸ் பற்றிய ஆரோக்கியமான புரிதலை தாங்களே குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர என்ன வழி என்பதில் மிகவும் அக்கறையோடு இருக்கிறார்கள். இவர்களை, பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெற்றோர், பருவம் எய்திய வயதில் இருக்கும் டீன் ஏஜ் விடலைகளின் பெற்றோர் என இரு வகையாகப் பிரிக்கலாம்.
செக்ஸ் சம்பந்தப்பட்ட ஒழுக்கப் பிரச்னைகளைப் பற்றிப் பெரியவர்களான பெற்றோருக்கே குழப்பங்கள் இருக்கின்றன. செக்ஸ் பற்றிய விவரங்களைச் சிறுவர்களிடம் சொன்னால், அவர்கள் உடனே அதில் ஈடுபடத் தூண்டப்பட்டு விடுவார்களோ என்ற தேவையற்ற பயமும் பலருக்கு இருக்கிறது. தூண்டுதலுக்கு இது காரணமாக முடியாது. அதேசமயம் செக்ஸ் பற்றிய புரிதலே இல்லாமல், பல புறக் காரணங்களால் தூண்டப்பட்டு, அதில் ஈடுபடுவதால் நேரக்கூடிய சிக்கல்களுக்கே வாய்ப்பு அதிகம்!
திடீரென்று குழந்தைகள் சில தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டால் எப்படிப் பதில் சொல்வது என்ற அச்சமும் பலருக்கு இருக்கிறது. “அம்மா, உடல் உறவுன்னா என்ன?” என்று ஆறு வயதுச் சிறுமி நாலு பேர் முன் கேட்டு வைத்தால், “நல்லா இருக்கு நீ குழந்தையை வளர்த்திருக்கற லட்சணம்!” என்று நினைப்பார்களோ என்ற நினைப்பே பயப்படுத்தும். இன்னும் சிலருக்கோ, தனக்குச் சரிசமமாக இல்லாவிட்டாலும், அந்தத் தோரணையில் பேசக்கூடிய டீன் ஏஜ் மகனிடமோ மகளிடமோ செக்ஸ் பற்றி பேசத் தொடங்கினால், தன் சொந்த செக்ஸ் வாழ்க்கையைப் பற்றியும் பேசியாக வேண்டிய கட்டாயம் வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது.
“’ஃப்ரெண்ட்ஸ’க்குள்ள தொட்டுப் பேசுங்க, பரவாயில்ல! ஆனா, கண்ட இடத்துல கைபடுது பார். உன் மனசுல ஒண்ணும் தப்பா இருக்காது. ஆனா, பார்க்கிறவங்க என்ன நினைச்சுக்கு வாங்க!” என்றெல்லாம் பேசினால், உடனே “நீங்க படிக்கும்போது க்ளாஸ்மேட்ஸை தொட்டுப் பேச மாட்டீங்களா?” என்று பதில் கேள்வி வந்தால்?
எட்டாங் கிளாஸில் மல்லிகாவின் கையைத் தொட, தான் துடித்துக்கொண்டு இருந்த கதையை எல்லாம் இப்போது மகனி/ளிடம் பகிர்ந்துகொள்வது சரியா, தப்பா, நல்லதா, விபரீதமானதா என்ற பயமும் குழப்பமும் வந்துவிடும்.
எத்தனை பயம் இருந்தாலும், எத்தனை தயக்கம் இருந்தாலும் நம் குழந்தைகளிடம் பாலியல் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும். பள்ளிக்கூடத்தில் பாலியல் - வாழ்க்கைக் கல்வி நிச்சயம் தேவை. அதேசமயம், இன்றைய நிலையில் பள்ளிக்கூடத்தைவிட, வீடும் குடும்பமும்தான் குழந்தையின் வாழ்க்கைக்கான எதிர்கால மதிப்பீடுகளை உருவாக்க உதவும் சரியான அமைப்புகள்.
குழந்தைகளிடம் செக்ஸ் பற்றிப் பேச நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை நமக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கறாராக யோசித்துப் பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் குழந்தைகளிடம் என்ன பேசலாம், எப்படிப் பேசலாம், எப்போது பேசலாம் என்பதைத் தீர்மானிக்க முடியும்.
அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு தாளை எடுத்துக்கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குத் தனித்தனியே பதில் எழுத முயற்சியுங்கள். நேர்மையாக எழுதுங்கள். எழுதி முடித்த பின் ஒருவர் பதிலை மற்றவர் பதிலுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இருவரின் பதிலும் சரியா என்று குழந்தையிடம் தாள்களைக் கொடுத்துச் சரிபாருங்கள்.
கேள்விகள் இதோ:
1. உங்கள் மகன்/ள் உயரம் என்ன? எடை என்ன?
2. அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு என்ன?
3. அவர்களுக்குப் பிடித்த டி.வி. நிகழ்ச்சி என்ன?
4. பிடித்த சினிமா நடிகர்/நடிகை யார்?
5. பிடித்த பள்ளி/கல்லூரி ஆசிரியர் யார்?
6. பிடித்த நிறம் எது?
7. பிடித்த உணவு எது?
8. கடைசியாகப் பார்த்த சினிமா எது?
9. பிடித்தமான பாட்டு எது?
10.பள்ளி/கல்லூரி முடித்து வந்ததும், உடனே அவர்கள் செய்ய விரும்புவது என்ன?
11. நெருக்கமான நண்பர் யார்?
12.நண்பர்கள் வட்டாரத்தில் செல்லப் பெயர் என்ன?
13. உங்களிடம் பெற விரும்பும் பிடித்தமான பிறந்த நாள் பரிசு என்ன?
14. தங்களைப் பற்றிப் பெருமையாக ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டு மானால், எதைப் பற்றிப் பெருமைப் படுவார் உங்கள் மகன்/ள்?
15. உங்கள் உதவி கேட்டு ஒரு பிரச்னையுடன் அணுகியது கடைசியாக எப்போது? என்ன பிரச்னை?
|