Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. குதர்க்கமும் நானே, குழப்பமும் நானே!

2. 1...2..3...ஷாக்! (அத்தியாயம்-1)

3. 1...2...3...ஷாக்! (அத்தியாயம்-2)

4. “நல்ல வேளை... என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை!”

5. அறுபது கொண்டாடுகிறது இந்தியா!

6. கனவு காணுங்கள்!

7. அறிந்தும் அறியாமலும்..! (16)

8. அறிந்தும் அறியாமலும்..! (17)

9. அறிந்தும் அறியாமலும்..! (18)

10. அறிந்தும் அறியாமலும்..! (19)

11. அறிந்தும் அறியாமலும்..! (20)

12. அறிந்தும் அறியாமலும்..! (21)

13. அறிந்தும் அறியாமலும்..! (22)

***********

தொலைந்து போனவன்: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஜூன் 07 இதழ்

ஜூலை 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: dheemtharikida@
hotmail.com
உள்ளே வெளியே: கட்டுரைத் தொடர்
பாஸ்கர் சக்தி

தொலைந்து போனவன்

‘செக்யூரிட்டி பீலிங்' என்கிற பதத்தை அடிக்கடி பலரும் உபயோகிக்கக் கேட்டதுண்டு. பல வார்த்தைகள் அதன் முழுமையான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளாமலும், உணராமலும்தானே உபயோகிக்கிறோம்? நானும் அதே போன்றே மேற்படி வார்த்தையை சில, பல முறைகள் உபயோகித்திருக்கிறேன். அது ஒரு ஸ்டைலான ஆங்கில வார்த்தை. உரையாடலின் போது பலதும் அறிந்த ஒரு தோரணையை உருவாக்கிக் கொள்ள இம்மாதிரி வார்த்தைகள் மிகப் பொருத்தமானவை. இம்மாதிரியான தோரணை வார்த்தைகளை தேர்ந்த சமையல்காரர்கள் போல பக்குவமாக உபயோகிப்பதன் மூலம் ஒருவர் தனக்கான புத்திசாலி ‘கட் அவுட்'களை எளிதில் தயார் செய்ய இயலும். அது வேறு விஷயம்...

இங்கு நான் பகிர்ந்து கொள்ள முற்படுவது செக்யூரிட்டி ஃபீலிங் (பத்திர உணர்வு) எனும் வார்த்தையின் பொருளை நான் தெள்ளத் தெளிவாக உணர்ந்த ஒரு தருணத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரிலிருக்கும் சகோதரி வீட்டிற்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்த சமயம். தங்கையின் வீடு கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் அருகில் இருந்தது. போரடிக்கிற மாலை வேளைகளில் அங்கிருந்து அல்சூர், சிவாஜி நகர் போய் பராக்குப் பார்த்து விட்டு தமிழ் பத்திரிக்கைகளை வாங்கிக் கொண்டு திரும்புவது வழக்கமாயிருந்தது.

டவுனுக்குள் சென்று விட்டு நாலைந்து முறை திரும்பிய அனுபவம் சில தினங்களில் வந்து விட்டது. அல்சூரிலிருந்து திரும்ப வருகையில் ஓல்ட் மெட்ராஸ் ரோடில் ‘பயப்பனஹள்ளி' என்னும் இடத்தைத் தாண்டி இடது பக்கம் திரும்பினால் ஒரு லெவல் கிராஸிங் இருக்கிறது. அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் தங்கை வீட்டை அடைந்து விடலாம். சிக்கலேதுமில்லை. ஆனால் நான் இந்த ரூட்டில் ஒரு முறை கூட டவுனிலிருந்து தங்கை வீட்டுக்குச் செல்லவில்லை. மாறாக வீட்டிலிருந்து டவுனுக்குச் செல்கையில் இந்த ரூட்டிலும், டவுனிலிருந்து வீடு திரும்புகையில் நேராக கிருஷ்ணராஜபுரம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்து அங்கிருந்து வீடு செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். நாளது வரையில் கிளம்பிச் செல்லும் பாதை ஒன்று, திரும்பி வரும் பாதை வேறு ஒன்று என்று இருந்ததில் சிக்கல்கள் எழுவில்லை. ஒரே ஒரு நாள் கிளம்பிச் சென்ற பாதையின் வழியிலேயே திரும்பி வருவதில் என்ன சிக்கலிருக்க முடியும்? எனத் தீர்மானித்து சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.

சிவாஜி நகரிலிருந்து திரும்பும் போதே பொழுது இறங்கத் துவங்கியாயிற்று. பயப்பனஹள்ளி தாண்டியாயிற்று நேராக ரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கி வழக்கம் போல் வீடு சென்றிருக்கலாம். ஆனால் ஏதோ டிராஃபிக் ஆகி பஸ் நின்று கொண்டிருக்க பொறுமை இழந்து இடது புறம் பார்த்தேன். சாலை ஒன்று பிரிந்து சென்றது. சற்றுத் தள்ளி ஒரு லெவல் கிராஸிங் ‘அட! இது வழக்கமாக நாம் வீட்டிலிருந்து கிளம்பி வரும் ரூட் தானே' என்று மூளையில் ஒரு (தப்பான) சிக்னல் தோன்றி பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்கத் துவங்கிவிட்டேன். நடக்கத் தொடங்கிய போது மாலை வெளிச்சம் அதன் இறுதி நிமிடங்களில் இருந்தது. இது போன்ற ஒரு தருணத்தில்தான் நரசிம்மாவதாரம் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் சென்று சேர்கிற இடம்பற்றிய சந்தேகங்களின்றி... வழக்கம் போல குருட்டு யோசனைகளுடன் நடக்கத் துவங்கி விட்டேன்.

சற்று நேரம் கழித்துத்தான் நான் தனியே நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். நன்கு இருட்டி விட்டது. திரும்பிப் பார்த்தேன் விளக்குகள் வெகு பின்னாலிருந்தன... லேசான சந்தேகம் எழுந்தபோது சற்றுத் தள்ளி ஒரு ரயிலின் கூவல் கேட்டது. உடனே சமாதானமாகி விட்டேன். இது சரியான பாதைதான்... சற்றுத் தொலைவு நடந்ததும். நமது வீடு இருக்கும் ஏரியா வந்து விடும் என எண்ணி மேலும் நடந்தேன். சற்று நேரம் ஆனது. பாதை நீண்டு கொண்டே சென்றது. காற்றில் பெங்களூர் குளிர் படரத் துவங்கி விட்டது. இப்போது மனதில் ஒரு சிறிய குழப்பம், தயக்கம் எழ ஆரம்பித்திருந்தது. குருட்டு யோசனைகள் எங்கோ ஓடி விட்டிருந்தன. எனது நடையில் சற்று வேகம் அதிகரித்தது. சீக்கிரம் வீட்டை அடைந்து விட்டால் தேவலை. விரைந்து நடந்தேன். அந்தச் சாலையில் சுத்தமாக எவ்வித நடமாட்டமில்லாமலிருப்பது லேட்டாக உறைத்தது.

அந்த சாலை வெகு நேர்த்தியாகவும் புதிதாயும் இருப்பதை உணர்ந்தேன். முதல் சந்தேகம் தோன்றிய இடத்திலிருந்து அனேகமாக மேலும் ஒரு பர்லாங் வந்தாயிற்று. இப்போது மையிருட்டு. சாலையின் இரு பக்கம் வரிசையாக யூகலிப்டஸ் மரங்கள் இருப்பதையும், அவை காற்றில் அலைக்கழிவதையும் கண்டபோது முதல் முதலில் அடிவயிற்றில் ஒரு பீதி திரண்டது. ஆஹா! இந்த சாலை எங்கோ அல்லவா போய்க் கொண்டிருக்கிறது. சற்று நேரம் சற்றுக் குழம்பி அப்படி இப்படி நடந்து கண்ணை மூடி யோசித்து விட்டு, பிறகு கண் விழித்தேன். வந்த வழியே திரும்பி விடலாம் என்று நினைத்தபோது தான் மற்றொரு விபரீமுதம் புரிந்தது.

கண்ணை மூடியது, சாலையின் விளிம்புக்கு வந்தது, சுற்றுமுற்றும் பார்த்தது, நடந்தது ஆகிய குழப்பமான செய்கைகளில் நான் வந்தது எந்த திசையிலிருந்து அதாவது எந்த சைடிலிருந்து வந்து கொண்டிருந்தேன் என்பதே குழம்பி விட்டது. காரணம் முழுமையான இருட்டு... பக்கவாட்டில் மரங்கள், மனதில் குழப்பம் சூழ்ந்தது. வெளிச்சத்தில் இடம், இருப்பு குறித்து இருக்கிற தெளிவை இருட்டு துடைத்து விட்டது.

மனித நடமாட்டமே அற்ற வெறுமையான இருளில் நான் மட்டும் தனியே!

அனைத்து ஏக்கங்களும், யோசனைகளும் கழன்று விட்டன. பீதியும், குழப்பமும் மட்டுமே எஞ்சி நிற்க வானத்தைப் பார்த்தேன். ஊரிலிருக்கையில் தினமும் பார்க்கும் ‘வட்ட' வடிவிலான நட்சத்திரங்கள் சப்தரிஷி மண்டலம் எல்லாம் இங்கும் தெரிந்தன. மிகவும் அற்பச் சிறு புள்ளியாய் என்னை உணர்ந்தேன். எங்காவது விளக்குகள் தென்படுகின்றனவா எனத் தேடியதில் கண்கள் களைப்படைந்தன. நகரத்தின் வெளிச்சச் சிதறல்கள்தான் தெரிந்தனவே தவிர நம்பிக்கை ஒளி ஏதும் புலப்படவில்லை. கடிகாரத்தில் மணி பார்க்க முயன்றேன். ஒன்றும் தெரியாத இருட்டு கடைசியில் காலம் என்னிடமிருந்து விலகிச் சென்று விட்ட உணர்வு. எச்சில் விழுங்கிக் கொண்டு நடக்கத் துவங்கினேன். இப்போது நான் நடந்து கொண்டிருப்பது வந்த வழியாகவும் இருக்கலாம், அல்லது எதிர்த்திசையாகவும் இருக்கலாம். ஒரு வேளை நான் பெங்களூரை திரும்பி அடையக் கூடும். அல்லது இந்தப் பாதை என்னை ஏதோ ஒரு மர்மக் குகைக்கும் இட்டுச் செல்லக் கூடும்.

எஞ்சியிருக்கும் இந்த இரவு எப்படி இருக்கப் போகிறது? என்பதை தீர்மானிக்க முடியாத திகில் அடிவயிற்றைச் சுருட்டி இழுத்தது. நான் பத்திரமாக இல்லை என்ற நினைவே மிகவும் அச்சுறுத்தியது.

ஆனால் என்ன செய்ய... செய்ய முடிந்தது நடப்பது மாத்திரமே. நடப்பதைத் தவிர வேறெந்த மார்க்கமும் தோன்றாது நடந்தபடியே இருந்தேன்! எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்கிறேன்! என்கிற தத்துவ விசாரத்தின் ஒரு புள்ளி வெகு அபத்தமாக நிகழ்ந்த நேரம். எந்த இடம்? என்ன நேரம்? எவ்வளவு? கடக்க வேண்டியது எத்தனை?... போன்ற பிரம்மாண்டக் கேள்விகளை ஒரு அற்பக் குழப்பத்தின் வழியே நான் அடைந்தது வேடிக்கைதான்.

விவரிக்க இயலாத சிறு காலம் தாண்டி எதிரே ஒரு வாகனம் வந்தது. இரு சக்கர வாகனம். விளக்கொளி பெரிதாகி வர, அதில் இருவர் கன்னடத்தில் உரக்கப் பேசியபடி வருவது தூரத்தில் கேட்டது. நியாயமாக நான் சற்று மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால் அப்படி இல்லை. பயத்துடன் சாலையின் ஓரம் ஒதுங்கி நின்றேன். அவர்கள் என்னை ஒரு வேளை கன்னடத்தில் விசாரித்தால் என்ன பேசுவது? எதையேனும் தப்பாகப் புரிந்து கொண்டு விபரீதமாகி விட்டால்? இப்போது நான் மொழியும் அற்றவன் அது மட்டுமல்ல, அவர்கள் திருடர்களாகவோ, ரவுடிகளாகவோ கூட இருக்கலாம்.

அவர்கள் குடித்திருப்பது உரத்த பேச்சில் தெரிந்தது. உரத்த பேச்சு என்னைக் கடக்கையில் தணிந்தது. ஒற்றை மனிதனாய் அந்த அத்துவானத்தில் நடந்து வரும் என்னைப் புறக்கணிக்க விரும்பியது போல் குரலைத் தழைத்தனர். ஒரு வேளை என்னைக் கண்டு அவர்களுக்கும் பயமாக இருந்திருக்கக் கூடும். இத்தனை இருட்டில் தனியே நடந்து வரும் ஒருவன், அஞ்சி நடுங்குபவன் மட்டுமல்ல, அச்சுறுத்துபவனும் கூட என்று நான் உணர்ந்து கொண்டேன். என்னைக் கடக்கையில் மெதுவாகப் பேசிய அவர்களது குரல் கடந்ததும் உயர்ந்தது. பின் தூரத்தில் தேய்ந்து மறைந்தது. சிவப்புப் புள்ளி இருளில் காணாமல் போய் விட்டது. இப்போது எனக்கு அவர்கள் சென்று விட்டது குறித்து ஆசுவாசமாக இருந்தது. அதே சமயத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றமாகவுமிருந்தது.

மேற்கொண்டும் நடந்தேன். குளிர் அதிகரித்திருந்தது. நல்ல வேளையாக எனக்கு பேய் பிசாசுகள் குறித்த பயமில்லை. அந்த இருளில், இரு புறமும் மரங்களிருக்க பாம்புகள் செல்லக் கூடும் என்கிற பயத்துடன் கால்களைத் தேய்த்துத் தேய்த்து நடந்தேன். ஒரு வேளை பாம்புகளிருந்தால் விலகி விடட்டும் என்கிற உத்தேசத்துடன். (மனிதன் எந்த ஒரு ஸ்திதியிலும் உயிரை துச்சமாய் நினைப்பதில்லை)

‘சர்ரட் சர்ரட்' எனும் எனது நடையோசை மட்டும் கேட்டுக் கொண்டிருக்க, நடுநடுவே ரயிலின் கூவல் ஒலி... நான் இன்னும் நம்பிக்கை பிரதேசத்தில்தான் இருக்கிறேன் என்று எனக்குச் சொல்லியது.

மெதுவாக என் கண்களில் நாலைந்து ஒளிப்புள்ளிகள் புலனாகின. அவை சாலையை விட்டு விலகி இருந்தன. நான் அவற்றை நோக்கிச் சென்றேன். இரண்டு, மூன்று வீடுகள். அது அப்போது தான் உருவாகத் துவங்கி இருக்கும் புறநகர்ப் பகுதியாக இருக்க வேண்டும். ஒரு வீட்டின் வாசலில் ஒரு பெண்ணைக் கண்டதும்தான் எனது பயம் முற்றிலுமாக விலகியது.

(ஆண்கள் மட்டுமிருந்தால் எனது பயம் அப்போதும் நீடித்துத் தானிருக்கும்)

அவர்களிடம் போய் தமிழிலேயே பேசினேன். அவர்கள் கன்னடம் தான் பேசினார்கள் என்றாலும் எங்களுக்கிடையே பரிமாற்றம் சாத்தியமானது. அவர்கள் அட்ரஸ் கேட்ட போதுதான் எனக்குத் தெரிந்தது. நான் விலாசமற்றவனும் கூட... இடம் தெரியும், முகவரி தெரியாது.

கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் போக வேண்டும் என்று சொன்னேன். அங்கிருந்து வீடு செல்வது எளிது. அங்கிருந்த ஒருவர் என்னை கூட்டிப்போனார். இப்போது எல்லாமே மிக எளிதாக நிகழ்ந்தது. நாலைந்து கடைகளிருக்கும் பகுதிக்குப் போய் ஒரு ஆட்டோவை அழைத்து விபரம் சொல்லி ஏற்றி விட்டார். ஆட்டோ பிரதேசங்களின் மர்மங்களை சிடுக்கெடுத்தபடி சென்றது. சாலையின் விளக்குகள் நம்பிக்கையுடன் பிரகாசித்த மார்க்கங்களின் வாயிலாக ரயில் நிலையத்தை அடைந்தது. நான் மகிழ்வின் உச்சத்தில் கொடுத்த மேலதிக பத்து ரூபாயை வேண்டாம் எனத் திருப்பிக் கொடுத்து, கன்னடத்தில் ‘இனி ஒழுங்காக வீடு போய் விடுவீர்கள்தானே' என்று கேட்ட ஆட்டோ டிரைவரிடம் வெட்கத்தில் கூசி, மனம் கனிந்து நன்றி சொல்லி வீடு போய்ச் சேர்ந்தேன். விசாரித்த தங்கையிடம் நடந்தவற்றை எளிமையாக்கிச் சொல்லிவிட்டு படுத்தேன். குளிருக்கு இதமான போர்வை. சில மணி நேரங்களில் நான் முற்றாகத் தொலைத்திருந்த ‘செக்யூரிட்டி ஃபீலிங்' திரும்ப வந்து விட்டதை உணர முடிந்தது. இருந்தாலும் கூட வெகு நேரம் தூக்கமே வரவில்லை. எப்படி நான் தொலைந்து போனேன்?

அடுத்த நாள் பகலில் தாளமாட்டாத ஆர்வத்துடன் அந்த இடத்தை தேடிப் போனேன். என்னை தவறாக வழி நடத்திய அந்த லெவல் கிராசிங்கை கண்டு பிடித்தேன். நான் மனதுக்குள் எண்ணியிருந்த லெவல் கிராசிங்கிற்கு முன்னாலேயே இருந்த மற்றொரு லெவல் கிராசிங் அது. அவசரத்தில் முன் கூட்டியே இறங்கி நடந்திருக்கிறேன். அந்தப் பாதையில் நடந்தேன். பகலிலும் ஆட்கள், வாகனங்கள் அதிகம் நடமாடாத பாதை.

நகரின் விரிவாக்கத்திற்காக புதிதாகப் போடப்பட்டிருந்த ஒரு பாதை, நான் முன்னிரவு தொலைந்து போன பாதை... வெயிலில் நிதானமாக நடந்து சென்று அந்த யூகலிப்டஸ் மரங்களைப் பார்த்தபடி நின்றேன். வாழ்வின் விடுவிக்க இயலாத ரகசியங்களைக் கண்டறிந்தது போன்ற ஒரு அற்பப் பெருமிதம் எனக்குள்.

நேற்றிரவு நட்சத்திரங்கள் பிரகாசித்த வானில் இன்று சூரியன். “எல்லாம் இருக்கிறபடிதான் இருக்கிறது. சிக்கல் பண்ணிக் கொள்கிறதெல்லாம் நீங்கள்தானடா அற்ப மானிடர்களே'' என்றது அது.

- பாஸ்கர் சக்தி ([email protected])Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com