Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. குதர்க்கமும் நானே, குழப்பமும் நானே!

2. 1...2..3...ஷாக்! (அத்தியாயம்-1)

3. 1...2...3...ஷாக்! (அத்தியாயம்-2)

4. “நல்ல வேளை... என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை!”

5. அறுபது கொண்டாடுகிறது இந்தியா!

6. கனவு காணுங்கள்!

7. அறிந்தும் அறியாமலும்..! (16)

8. அறிந்தும் அறியாமலும்..! (17)

9. அறிந்தும் அறியாமலும்..! (18)

10. அறிந்தும் அறியாமலும்..! (19)

11. அறிந்தும் அறியாமலும்..! (20)

12. அறிந்தும் அறியாமலும்..! (21)

13. அறிந்தும் அறியாமலும்..! (22)

***********

தொலைந்து போனவன்: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஜூன் 07 இதழ்

ஜூலை 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: dheemtharikida@
hotmail.com
கட்டுரை
ஞாநி

அறுபது கொண்டாடுகிறது இந்தியா!

இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்திய அளவில் மிகப் பெரிய மக்கள் தலைவராக இருந்தவர் காந்திஜி. தமிழக அளவில் அதே நிலையில் இருந்தவர் பெரியார்.

இருவரும் ஆகஸ்ட் 15ஐக் கொண்டாட விரும்பவில்லை. அதை ‘துக்க நாள்’ என்றார் பெரியார். காந்திஜி, பி.பி.சிக்கு சுதந்திர தினச் செய்தி தர மறுத்துவிட்டு, அன்று முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

என்ன காரணங்களுக்காக அவர்கள் அப்படிச் செய்தார்கள்? 60 வருடங்களுக்குப் பிறகு, அந்தக் காரணங்கள் என்ன ஆயின?

சுதந்திர இந்தியா 1952ல் தன் முதல் பொதுத் தேர்தலை, வயது வந்த ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு ஓட்டு என்ற அடிப்படையில் நிகழ்த்தியது ஓர் உலக சாதனை. அந்தச் சமயத்தில், உலகின் பல நாடுகளில் அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற இந்த நடைமுறை இருக்கவில்லை.

இந்தச் சாதனையை இந்தியாவில் சாதிக்கக் காரணமாக இருந்த இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய சட்ட நிர்ணய சபையின் உறுப்பினர்களே, அப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர்கள் அல்ல!

பிரிட்டிஷ் காலத்து மாநிலச் சட்டமன்றங்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 229 பேர். அந்தப் பிரதிநிதிகளும் எல்லாப் பொதுமக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர். சொத்தின் அடிப்படையிலும் கல்வியின் அடிப்படையிலும்தான் ஓட்டுரிமை அதுவரை தரப்பட்டிருந்தது. பல மாநிலங்களுக்குப் பிரதிநிதிகள் இல்லை. பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்த மகாராஜாக்களின் சமஸ்தானங்களின் சார்பில் அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு 70 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டார்கள்.

சட்ட வரைவைத் தயாரிக்க டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் நியமிக்கப்பட்ட எழுவர் குழுவில் ஒருவர் இறந்தபின், மாற்று நபர் நியமிக்கப்படவில்லை. ஒருவர் அமெரிக்கா போய்விட்டார். ஒருவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். இருவரால் அடிக்கடி டெல்லிக்கு வரமுடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், அம்பேத்கரும் எஞ்சியிருந்தவர்களுமாக வரைவைத் தயாரித்திருக்கிறார்கள். பிரிட்டன், அயர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, சோவியத் யூனியன், ஜெர்மனி நாட்டுச் சட்டங்களிலிருந்தும் இந்தியாவுக்குப் பொருத்த மானவை என்று கருதப்பட்ட அம்சங்கள் எடுத்துக்கொள்ளப் பட்டன. அதன் அடிப்படையில் தான் எல்லாப் பிரஜைகளுக்குமான ஓட்டுரிமை இன்று வரை இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் தனிப்பெரும் சிறப்பு என்று இதைச் சொல்ல வேண்டும்.

இந்தச் சிறப்பைப் பற்றிப் பேசும்போதே, அம்பேத்கர் சில ஆழமான கேள்விகளை எழுப்பினார்... “முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையில், இந்தியக் குடியரசு இப்போது நுழை கிறது. அரசியலில் சமத்துவம் இருக்கும்; சமூக, பொருளாதார வாழ்க்கையில் இருக்காது. அரசியலில் ‘ஒரு மனிதனுக்கு ஒரு ஓட்டு; ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரே மதிப்பு’ என்ற கோட்பாட்டை நாம் அங்கீகரிக்கிறோம்; ஆனால், நம் சமூக, பொருளாதார அமைப்புகளின் தன்மையினால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மதிப்பு என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுக்கப்போகிறோம். எத்தனை காலம் இந்த முரண்பாடான வாழ்க்கையை வாழப்போகிறோம்? தொடர்ந்து நீண்ட காலம் மறுப்போமேயானால், நமது அரசியல் ஜனநாயகத்தை அது அழிவுக்குதான் அழைத்துச் செல்லும்!”

அம்பேத்கர் சொன்னது போல, தீர்க்கப்படாத சமூக ஏற்றத் தாழ்வுகளால் அரசியல் ஜனநாயகம் அழியுமா? அல்லது, அதுதான் சமூகத்தை மேலும் ஏற்றத்தாழ்வுகளுடன் அழித்துக் கொண்டு இருக்கிறதா?

இன்று படித்த, நடுத்தர வகுப்பு மக்களைக் கேட்டால், அரசியல் ஜனநாயகம் தான் சமூகத்தை அழிப்பதாகச் சொல்லக் கூடும். அவர்களிடம் இன்று அரசியலைப் பற்றி பரவலாக அதிருப்தி, வெறுப்பு, எரிச்சல், விரக்தி எல்லாம் அதிகரித்துள்ளன. தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் இந்த மனநிலை அதிகரித்து வந்திருக்கிறது, படித்தவர்கள் மத்தியில்!

ஆனால் படிப்பறிவற்ற மக்களும் ஏழைகளும், அரசியலில் வேறு எந்த அம்சத்தின் மீது நம்பிக்கை போய்விட்டாலும், தேர்தலின் மீது மட்டும் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 1952ல் 46 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு இப்போது 65 சதவிகிதமாக இருக்கிறது. அண்மைக் காலமாக தேர்தல்களில் தலித்துகள், பழங்குடியினர் வாக்களிக்கும் சதவிகிதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆனால், படித்த, வசதியானவர்கள் வாக்களிக்கும் சதவிகிதம் குறைந்து வருகிறது.

இந்தியாவில் எந்த வெகுஜன இயக்கமாக இருந்தாலும், அதில் படித்த இளம் தலை முறையின் பங்கு, தலைமை ஏற்பதிலும் வழிகாட்டுவதிலும் கணிசமாக இருந்து வந்திருக்கிறது - எண்பதுகளுக்கு முன்பு வரை!

நாற்பதுகளின் இறுதியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை இயக்கங்களிலும், ஐம்பதுகளின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், படித்த இளைஞர்களின் தலைமைப் பங்கு பளிச்சென்று தெரியக்கூடியது தான். அறுபதுகள், எழுபதுகளில் மாணவர் இயக்கங்களிலும் இது தொடர்ந்தது. எண்பதுகளுக்குப் பின் இது மாறத் தொடங்கியது. ஏன்?

கடந்த 60 ஆண்டுகளின் அரசியல் தலைவர் களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார் யார் என்று ஒரு கறாரான பட்டியல் போட்டோமானால், இந்த மாற்றத்தின் வேர்களை ஒருவேளை புரிந்துகொள்ள முடியலாம்.

அனைத்திந்திய அளவில் பிரதமர் பொறுப்பில் இருந்தவர்களை எடுத்துக் கொண்டால், என் பட்டியலில் நேரு, இந்திரா, நரசிம்மராவ் ஆகிய மூவர் மட்டுமே சில முக்கியமான போக்குகளின் பிரதிநிதிகளாகத் தோன்றுகிறார்கள். இதர பிரதமர்கள் எல்லாரும், இந்தப் போக்குகளின் தொடர்ச்சி அல்லது பாதிப்புகளுக்கு உட்பட்டவர்களாகவே படுகிறார்கள்.

நேருவின் ஆட்சிக் காலம் தான் இந்தியாவை நவீனப் படுத்தியது. கனரகத் தொழில்கள் முதல் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் வரை இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இருக்கும் கட்டுமான அமைப்புகள் எல்லாமே நேரு காலத்தில் உருவாக்கப்பட்டவைதான்.

நேரு பதவியேற்ற சமயத்தில், ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டம், இன்னொரு பக்கம் ஹிந்து மகா சபா - ஆர்.எஸ்.எஸ்ஸின் மதரீதியான கலாசார நட வடிக்கைகள், பழைமையான மதவாதச் சட்டங்களைத் திருத்துவதற்கு எதிர்ப்பு என்று இருந்த சூழலில், அவருடைய காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இரு போக்கு ஆதரவாளர்களும் இருந்தனர். இரு தரப்பையும் சமாளித்து நேரு எடுத்த நடுநிலை யதார்த்தப் போக்கு தான் இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தையும், மதச் சார்பற்ற அரசியலையும் வலுப்படுத்தியது.

நிலப் பிரபுத்துவ அமைப்பில் ஊறிக்கிடந்த இந்திய சமூகத்தை, அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி நவீன வாழ்க்கையை நோக்கி இழுத்து வந்தது நேருவின் ஆட்சி என்றே சொல்லலாம். சுயநலமும் ஊழலும் இல்லாத விடுதலைப் போராட்டத் தலைமுறையின் பிரதிநிதியாக நேருவைப் பார்க்கலாம்.

எழுபதுகளில் வந்த இந்திரா காந்தி, முந்தைய ஆரோக்கியமான போக்குக்கும் அடுத்து வந்த ஆபத்தான போக்குக்குமான கலப்பட இணைப்புச் சக்தியாக இருந்தார். ஒரு பக்கம் சமூகத்தின் அடித்தள மக்கள் நலனைக் கணக்கிலெடுக்கும் நடவடிக்கைகள், மறுபக்கம் கட்சி நிதி, குடும்ப நிதிக்கான ஊழல்கள், வாரிசு அரசியல் என எதிரெதிரான இரு போக்குகளையும் இந்திரா கையாண்டார்.

தொண்ணூறுகளில் வந்த நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில், சாதாரண மக்கள் நிலையை மேம்படுத்துவது அரசின் பிரதான கடமை என்ற நேரு - இந்திரா கால அணுகுமுறை அடியோடு மாறியது. எல்லாவற்றையும் மார்க்கெட் தீர்மானிக்கும்; மார்க்கெட் வளர்ச்சியின் பயன் ஏழைகளையும் மேம்படுத்தும்; மார்க்கெட்டுக்கு உதவிகரமாக தனியார் முதலாளிகளுக்கு உதவி செய்வதே அரசின் ஒரே கடமை என்ற அணுகுமுறை வந்துவிட்டது. கூடவே, ஆட்சியில் நீடிப்பதற்கு என்ன தகிடுதத்தம் செய்தாலும் தவறு இல்லை என்பதை மெத்தப் படித்த பன்மொழி அறிஞர் நரசிம்மராவின் ஆட்சி, அரசியலின் அடிப்படைக் கொள்கையாகவே ஆக்கிவிட்டது.

புதிய அணுகுமுறையால் பாதிக்கப்படும் அடித்தள மக்களை எப்படிச் சமாளிப்பது? இரும்புக் கரம், கரும்புக் கரம் என இருவித அணுகுமுறைகளும் நடை முறைக்கு வந்துவிட்டன. போலீஸ், ராணுவப் படைகளைக் கொண்டு ஒடுக்குவதும், இலவசங்களை அள்ளி வீசுவதும் இந்த வெளிப்பாடுகள்தான்!

தமிழகச் சூழலில் நேரு உருவகித்த போக்கின் பிரதிநிதியாக காமராஜரையும், இந்திரா - நரசிம்மராவ் போக்குகளின் பிரதிநிதியாக கருணாநிதியையும் கணிக்கலாம். சாஸ்திரி முதல் மன்மோகன்சிங் வரை, ஓமந்தூரார் முதல் ஜெயலலிதா வரை இதரர்கள் எல்லாருமே இந்தப் போக்குகளில் எதன் நகலாக வருவார்கள் என்று கணித்துக் கொள்ளலாம்.

படித்த இளைஞர்கள் மத்தியில்கூட இன்று ‘நான், என் குடும்பம் என்று மட்டும் பார்த்துக்கொண்டு போனால் போதும்; அதற்குத் தடையாக இருப்பவற்றை தகிடுதத்தங்களால் சமாளித்துக்கொள்ளலாம்; எப்போதாவது மனசாட்சி உறுத்தினால், முதியோர் இல்லம் முதல் ரத்த தானம் வரை இருக்கிறதே, அது போதும்’ என்று பரவலாக உருவாகியிருக்கும் மன நிலை, அரசியலில் நரசிம்மராவ் பின் பற்றிய போக்கின் கார்பன் காப்பிதான்!

இதனால்தான், மக்கள் நல அரசியல் இயக்கங்களில் படித்த வர்களின் பங்கு குறைந்து வரு கிறது; எல்லா அரசியலும் மோசம் என்று சொல்லித் தப்பிப்பது எளிதாக இருக்கிறது; அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘ஐகான்’களை ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சிருஷ்டித்துக் கொள்வது ஆறுதலாக இருக்கிறது.

எத்தனை காலம் இந்த நிலை நீடிக்க முடியும்?

முடியாதுதான்! அதற்கான அடையாளங்கள் இந்திய சமூகத்தில் தோன்ற ஆரம்பித்து விட்டன.

நேரு காலத்தில் பாசனத்துக்காக பிரமாண்டமான அணைகள் கட்டப்பட்டு, உணவு உற்பத்தி பெருக்கப்பட்டு, பட்டினிச் சாவுகள் ஒழிக்கப்பட்டபோது, கூடவே சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், விவசாயிகள் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படவே இல்லை.

இப்போது ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வந்திருக்கிறது. உணவு உற்பத்தியில் ஒருபக்கம் தன்னிறைவு; இன்னொரு பக்கம் சில உணவுப் பொருட்களின் ஏற்றுமதி; கூடவே, வேறு சில உணவுப் பொருட்கள் இறக்குமதி என்று குழப்பத்தின் பிடியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது விவசாயம்.

சமூகத்தின் ஒரு நெருக்கடியின் அடையாளம் இது என்றால், இன்னொரு நெருக்கடியின் அடையாளம், தேர்தல் அரசி யலில் பெருகி வரும் சாதிய ஆதிக்கம்!

ஒவ்வொரு சாதியும் தனக்குரிய பங்கு அதிகாரத்தில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத் துடன், கட்சி அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

நேரு காலத்திலோ, காமராஜர் காலத்திலோ, ஏன்... எம்.ஜி.ஆர். காலத்தில்கூட சாதியை மீறி ஒரு வேட்பாளர் வெல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி, இன்று சாதி அடையாளம் இல்லாமல் அரசியல் பண்ண முடியாது என்றாகி வருகிறது.

இந்தத் தருணத்தில்தான் நாம் மீண்டும் முதல் பாராவை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஏன் பெரியாரும் காந்தியும் ஆகஸ்ட் 15ஐக் கொண்டாட வில்லை?

சமூகத்தில் ‘பார்ப்பன - பனியா ஆதிக்கத்தை’ ஒழிக்காமல் பிரிட்டிஷ் வெளியேறினால், சுதந்திர இந்தியாவின் அதிகாரம் அவர்கள் கைக்குத்தான் போகும் என்பது பெரியாரின் காரணம். பார்ப்பன ஆதிக்கம் என்பது சாதி அடுக்கு அடிப்படையிலான மேலாண்மையையும், பனியா ஆதிக்கம் என்பது மார்க்கெட் சக்திகள் வசம் மக்களை விட்டுவிடும் ஆபத்தையும் குறிப்பதாகக் கொள்வோம்.

காந்தியின் உண்ணாவிரதத்துக்குக் காரணம், கொல்கத்தாவில் அன்று நடந்து கொண்டு இருந்த மதக் கலவரம். மதவெறி அரசியல் இருக்கும் வரை உண்மையான சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்க முடியாது என்பதுதான் காந்தியின் நிலை.

ஆகஸ்ட் 15 கொண்டாட்டங்களிலிருந்து மட்டும் காந்தி ஒதுங்கியிருக்கவில்லை. அரசியல் சட்ட உருவாக்கத்திலும்கூட அவருக்குப் பங்கு இருக்கவில்லை. என்ன நடக்கிறது என்றே தனக்குத் தெரியாது என்றார் அவர்.

காந்தி விரும்பிய அரசியல் சட்டத்தில் கிராமங்களுக்கு சுயாட்சி... கிராமப் பஞ்சாயத்துக்கே அதிக அதிகாரம் தரப்பட வேண்டும். சாதி ஆதிக்கம் இருக்கும் சமூகத்தில் இது சாத்தியமில்லை என்பதே நேருவும் அம்பேத்கரும் எடுத்த நிலை. உண்மைதான். ஆனால், குளிப்பாட்டிய தண்ணீரோடு சேர்த்துக் குழந்தையையும் வீசிக் கொட்டியது போல, அதிகார அமைப்பிலிருந்து சாதியை விலக்குவதற்காக எடுத்த முடிவுகள், கிராமத்தையே அதிகாரமற்றவை ஆக்கி, விவ சாயத்தை மக்களின் தொழிலாக இல்லாமல், தலைநகரில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் செய்யும் வித்தையாக மாற்றிச் சீரழித்துவிட்டன.

இதுதான் நம் அறுபது வருடக் கதை. இன்னும் பலப் பல அத்தியாயங்களும், பரிமாணங்களும் உண்டுதான். இப்போதைக்கு இது போதும்.

ஒரு தேசத்தின் வரலாற்றில் 60 வருடம் என்பது ஒன்றுமே இல்லை - நாம் 200 ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்தோம் என்பதைப் பார்க்கும்போது!

அந்த 200 ஆண்டுகளில் இருந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நம் 60 வருடச் சாதனைகள் பிரமாண்டமானவை. அதைச் சாதிக்க உதவிய முக்கியமான கருவி, எல்லா குடிமக்களையும் சமமாகத்தான் பார்த்தாக வேண்டும் என்று சத்தம் போட்டுச் சொன்னது நம் அரசியல் அமைப்புச் சட்டம்!

ஆனால், அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறாமல் இன்னமும் நம்மைத் தடுப்பது, கல்வியில் சமத்துவத்தை நாம் ஏற்படுத்தாமல் இருப்பதுதான். கடந்த 60 வருடச் சாதனைகள் பலவும் நாம் கல்வியால் சாதித்தவைதான். 1951-ல் கல்வியறிவு இருந்தவர்கள் - இந்திய ஆண்களில் 27 சதவிகிதமும், பெண்களில் வெறும் 9 சதவிகிதமும்தான்!

இன்னும் சாதிக்க, இன்னும் கல்வி தேவை. சீனாவில் ஆண்களில் 96 சதவிகிதமும், பெண்களில் 75 சதவிகிதமும் கல்வி பெற்றுவிட்டார்கள். இலங்கையில் ஆண்கள் 94 சதவிகிதம்; பெண்கள் 89 சதவிகிதம். இங்கே இன்ன மும் நாம் 76 - 54ஐத் தாண்டவில்லை.

எல்லாருக்கும் கல்வி. எல்லாருக்கும் சமமான கல்வி..! இதுவே நம் அடுத்த 40 வருட பிரதான இலக்காக இருக்க வேண்டும்; கனவாக மட்டுமே அல்ல!

(ஓ... போடுவோம்!)

நன்றி: ஆனந்த விகடன்
Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com