 |
ஞாநி
கனவு காணுங்கள்!
இது 108வது ‘ஓ’ கட்டுரை.
சமய சம்பிரதாயங்களில் 108 என்ற எண் ஏன் புனிதமானதாகக் கருதப்படுகிறது என்று துருவத் தொடங்கியதில், சோதித்துப் பார்க்க முடியாத பல தகவல்கள் உட்பட, நிறைய விசித்திரமான தகவல்கள் கிடைத்தன.
உபநிஷதங்களின் எண்ணிக்கை 108; கிருஷ்ணனின் சிநேகிதிகளான கோபிகைகள் 108 பேர்; நடராஜரின் நடனத்தில் கரணங்கள் 108; திபெத் பெளத்த சமய நம்பிக்கைப்படி மொத்த பாவங்கள் 108; ஜப்பானில் 108 முறை மணி அடித்து, பழைய வருடத்துக்கு விடை தரப்படுகிறது: நிர்வாண முக்தி நிலை அடைவதற்குக் கடக்க வேண்டிய உலகாயத சபலங்களின் எண்ணிக்கை 108; போர்க் கலைகளில் மர்ம அடிகளுக்கான ஸ்தானங்கள் 108; கராத்தேயில் ‘சூப்பரின்பெய்’ என்று குறிக்கப்படுவது சீன மொழியில் 108ன் உச்சரிப்பு; ‘தாஓ’ தத்துவத்தில், புனித நட்சத்திரங்கள் 108;
ஹோமரின் ‘ஒடிசி’ காவியத்தில், ஒடிசஸின் மனைவி பெனிலோப்பைத் திருமணம் செய்ய விரும்புகிறவர்கள் 108 பேர்; பேஸ்பால் விளையாட்டின் பந்தில் இருக்கும் தையல்கள் 108; முதல்முறையாக விண்வெளிக்குப் பயணம் செய்த சோவியத் வீரர் யூரி காக்ரின், விண்கலத்தில் உலகைச் சுற்றிய நேரம் 108 நிமிடங்கள்; கணிதத்தில் 108 ஒரு சிறப்பு எண். 1 x 1 x 2 x 2 x 3 x 3 x 3=108. சம்ஸ்கிருத மொழியில் மொத்தம் 54 எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஆண், பெண் என்ற அடிப்படையில் 54 x 2 = 108. மனித வாழ்க்கையின் உணர்ச்சிகள் கடந்த காலத்தில் 36, நிகழ்காலத்தில் 36, எதிர்காலத்தில் 36 என மொத்தமாக 108ஆம்!
ஜோசியத்தில் 12 வீடுகள் X 9 கிரகங்கள் = 108. (1 என்பது இறுதி உண்மைக்கான குறியீடு. 0 சூன்யம். 8 என்பது அளவற்ற நிரந்தரத்தின் குறியீடு.) சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல 108 மடங்கு. நாம் தினசரி 200x108 முறை மூச்சு விடுகிறோம்!
மூச்சு விட்டுக்கொண்டே இருக்கும் காலம்வரை, கனவுகள் காண்பது மனித இயல்பு. சொல்வதற்கு 108 கனவுகள் உண்டென்றாலும், என் இந்த வார கனவுகள் ஒரு சில:
கனவு-1:
ஜெயலலிதா ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் காலை வாக்கிங்போய்க்கொண்டு இருக்கிறார். சென்னையில் அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சியின் பொதுக் குழு நடக்கிறது. எல்லாரும் சேர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். வாக்கிங் முடித்துவிட்டுத் திரும்பிய ஜெயலலிதா, ஃபேக்ஸ் செய்தியைப் பார்க்கிறார். உடனே, தான் இதை அங்கீகரிப் பதாகவும், இதற்குக் காரணம் ஜூனியர் விகடன் தொடர்ந்து கருணாநிதியின் குடும்பச் செய்திகளை மட்டுமே வெளியிடுவதுதான் என்றும், தங்கள் கட்சிச் செய்திகள் வராததனால் வருத்தம் அடைந்த கட்சியினர் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கிறார். கருணாநிதி உட்பட உலகமே அதிர்ச்சியடைகிறது!
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்த பிறகும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் திடீரென ஓட்டுப் போட்டது ஏன் என்பதற்கு ஜெயலலிதா தெரிவித்த காரணம் உண்மையென்றால், மேற்கண்ட கனவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. தேர்தலைப் புறக்கணிப்பது பற்றியும், குடியரசுத் தலைவர் தேர்தலுக்குக் கட்சிக் கொறடா உத்தரவு பொருந்தாது என்பது பற்றியும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையால் தன் கட்சி எம்.எல்.ஏக்கள் குழப்பம் அடைந்ததாகவும், அதனால் தாங்களாகவே ஓட்டுப் போட முடிவு செய்து சென்றதாகவும், தன் வழிகாட்டுதலைப் பெற/தர முடியாமல் போய்விட்டதாகவும் ‘ஜெ’ சொல்லியிருப்பது, இம்சை அரசன் 23ம் புலிகேசி ஸ்டைல். என்ன கொடுமை மேடம் இது?
‘மூன்றாவது அணி ஒன்றும் தேறாது என்று தெரிந்துவிட்ட நிலையில், இனி பி.ஜே.பியுடன்தான் கூட்டு வைத்தாக வேண்டும் என்ற யதார்த்த நிலையை உணர்ந்து, ஷெகாவத்துக்கு ஓட்டுப் போட எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை நான்தான் அனுப்பினேன்’ என்று வெளிப்படையாகச் சொல்ல விடாமல் உங்களைத் தடுத்தது எது? வழக்கமான ஈகோதானே? ஈகோவை விட்டுக் கொடுப் பதைவிட, ஜோக் ராணியாக இருப்பதே பெட்டர் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
கனவு-2:
குடியரசுத் தலைவர் தென்னிந்தியர் இல்லை என்றான நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் பதவி இங்கே வரும் வாய்ப்பு இருப்பதாகக் கருதி, அதற்குப் பொருத்தமானவர் யார் என்று யோசித்தேன். ஒருவரல்ல, இரண்டு பச்சைத் தமிழர்கள் தகுதியுடன் இருப்பதாகப்பட்டது. ஒருவர் இரா.செழியன். தி.மு.க. உருவாகக் காரணமான தலைவர்களில் ஒருவர். அவசர நிலையின்போது தி.மு.க-காரராக ‘மிசா’வில் சிறைக்குப் போய், வெளியே வரும்போது ஜனதா கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக வந்தவர். எம்.பிக்களுக்குத் தொகுதி நிதி ஒதுக்கீட்டில் கோளாறுகள் இருப்பதைப் பற்றி உரக்கச் சத்தம் எழுப்பி, நாட்டின் கவனத்தை ஈர்த்தவர். மாநிலங்களவைத் தலைவராக அவையை நடத்துவதற்கு ஏற்ற ஆற்றலும் அறிவும் உடைய சிறந்த பார்லிமென்ட்டேரியன். ஊழல், முறைகேடு குற்றச்சாட்டு-களுக்கு ஆளாகாதவர்.
மற்றவர், இன்னொரு அருமையான மனிதர். கம்யூனிஸ்ட் தலைவர் இரா.நல்லகண்ணு. எளிமை, அர்ப்பணிப்பு என்று சொல்லிக்கொண்டே 750 ரூபாய்க்கு முடிவெட்டிக்கொள்ளும் ‘ஐகான்’களுக்கு நடுவே, நிஜமாகவே எளிமையான வாழ்க்கை வாழ்பவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தலைமுறையின் கடைசிப் பிரதிநிதி.
இவர்கள் எல்லாம் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்பதே கனவுதான். இம்முறை குடியரசுத் தலைவர் பதவி மேற்கு இந்தியாவுக்குச் சென்றதால், துணைப் பதவி கிழக் கிந்தியாவுக்குச் செல்ல இருக்கிறது. (காங்கிரஸின் அன்சாரி வங்காள முஸ்லிம்.) வடக்கு, தெற்கு மட்டும் இந்தியா அல்ல; மேற்கும் கிழக்கும்கூட இந்தியாதான் என்ற பார்வையை வரவேற்கலாம்.
எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில், காங்கிரஸை விட்டு பி.ஜே.பி-க்கு ஓடாமல் இருந் திருந்தால், நஜ்மா ஹெப்துல்லாவை காங்கிரஸே முதல் குடியரசுத் தலைவி யாக்கியிருக்கும் வாய்ப்பு ஒரு காலத் தில் இருந்தது. இப்போது அவரை துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தும் பி.ஜே.பி., ஏன் அவரையே பிரதீபாவுக்கு எதிராக மாற்றுப் பெண் வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்கே நிறுத்த முன்வரவில்லை? ஷெகாவத்துக்கு எதிராக ஷெகாவத் என்பது மாதிரி, காங்கிரஸின் முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராகத் தங்கள் தரப்பிலும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படைதான் காரணமா?
துணைக் குடியரசுத் தலைவர் என்ற பதவியே தேவையற்றது. குடியரசுத் தலைவர் இல்லாத, செயலிழந்த தருணத்தில், மாநிலங்களவைத் தலைவரோ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியோ தற்காலிகமாக அந்தப் பொறுப்பைக் கவனிப்பார் என்று ஆக்கிவிடலாம். வைஸ்ராய் மாளிகையை ஜனாதிபதி மாளிகையாக்காமல், பொது மருத்துவமனையாக ஆக்க வேண்டும் என்ற காந்தியின் கனவு மாதிரியே இதுவும் ஒரு கனவு!
கனவு-3:
ஏழு மாதங்கள் நீங்கள் ஒரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக வேலை பார்க்கிறீர்கள். உங்களுக்கென ஒரு வாடகை வீடு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேலையை விட்டு இன்னும் பெரிய வேலைக்கு வெளியூர் போய் விடுகிறீர்கள். அதில் ஐந்தாண்டுகள் இருந்த பிறகு, திரும்ப வருகிறீர்கள். உங்கள் பொருட்களுடன் ஐந்து வருடமாகப் பூட்டி வைத்திருந்த வீட்டை, மீண்டும் உங்களுக்காக இப்போது தயார் செய்கிறார்கள்.
இந்தச் சலுகையை எந்தப் பேராசிரியராவது, எந்த அரசு ஊழியராவது எதிர்பார்க்க முடியுமா? கனவில் வேண்டுமானால் நடக்கலாம். நனவில் நடக்க வேண்டுமானால், உங்கள் பெயர் அப்துல் கலாம் என்று இருக்க வேண்டும். ஊழல், முறைகேடு என்பது பணம் வாங்குவது, சுருட்டுவது என்பது மட்டுமல்ல; ஒரு பொதுச் சொத்தைப் பிறர் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் ஐந்தாண்டுகள் பூட்டி வைத்திருப்பதற்கு உடந்தையாகவோ, காரணமாகவோ இருப்பதும்கூட முறைகேடுதான்.
கனவு-4:
ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் ஜெய்ப்பூரில் இருக்கிறது. அதன் வாயிலில் மனுஸ்-மிருதியை அருளிய மனுவுக்கு ஒரு சிலை 1989ல் வைக்கப்பட்டது. அப்போதிலிருந்தே அதை நீக்க வேண்டும் என்று 18 வருடங்களாக அங்கே தலித் இயக்கங்கள் போராடிக்கொண்டு இருக்கின்றன. ‘வர்ணாசிரம முறையை, சாதி அடுக்கு முறையை ஏற்படுத்திய மனுவின் சிலை வைத்துள்ள இடத்தில், நாங்கள் எப்படி நீதியை எதிர்பார்க்க -முடியும்?’ என்பது அவர்களுடைய நியாயமான கேள்வி.
அச்சரப்பாக்கம் அருகே, முருங்கை கிராம ஊராட்சித் தலைவரின் பெயர் அண்ணாதுரை.
அந்தப் பதவியில் ஒருநாள்கூட நாற்காலியில் தான் உட்கார்ந்ததில்லை என்று அவர் அண்மையில் தலித் உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். அதாவது மேல் சாதியினர் எதிரில் அவர் அந்த நாற்காலியில் உட்கார அனுமதி இல்லை! கை கட்டிக்கொண்டு நின்றபடி ஊராட்சிக் கூட்டத்தை அவர் நடத்த வேண்டுமாம். ஊராட்சித் தலைவருக்கே நீதி இல்லாத கூட்டத்தில் இதர தலித்துகள் எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்?
முருங்கை அண்ணாதுரை போல பல தலித் தலைவர்கள் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பாப்பாப்பட்டி, ஒரு கீரிப்பட்டி அல்ல... அப்படிப்பட்ட பல பட்டிகள் இன்னமும் தமிழகம் முழுவதும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. ‘என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார்’ என்கிற வெற்று அறிக்கைகள் எதையும் சாதிக்காது. எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித், முதலமைச்சர் ஆக்கப்படுகிறார் என்ற அறிக்கை வரும் நாளைக் கனவு காண்போம். ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம் வழுதிக்கும் உண்டுதானே?
கனவு-5:
பூஜா செளஹானின் நிர்வாண எதிர்ப்பு போன்ற செய்திகளை எழுதும்போது, அதற்கான படத்தை ஒரு முறை வைத்தால் போதும் என்றாலும், மூன்று முறை வைத்து ‘மகிழும்’ சகாக்கள் கனவில் பூஜா வந்து பேஸ்பால் மட்டையால் அடிப்பது போன்ற கனவுகள் அன்றாடம் வர வேண்டும் என்பது என் கனவு.
கனவு-6:
(வாசகர் கனவு) ‘மங்களகரமான 108-ம் எண்ணுடன் ஓ பக்கங்கள் தொடரை நிறுத்திவிடலாமே?’ என்று கனவு காணும் சில வாசகர்கள் கவனத்துக்கு... கிழக்குப் பக்கம் தலை வைத்துப்படுத்து குறட்டை விடாமல் தூங்கும்போது இந்தக் கனவு வந்தால், பலித்துவிடும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கிறேன்!
(ஓ...போடுவோம்!)
நன்றி: ஆனந்த விகடன்
|