|
ஞாநி
அறிந்தும் அறியாமலும்..! (16)
சுமார் 9 முதல் 12 வயது காலகட்டத்தில் தங்கள் வீட்டுச் சிறுவனும் சிறுமியும் ஹார்மோன்களின் சுரப்பால் உடல் மாற்றங்களுக்கும், குடும்ப சமூகச் சூழலினால் உள மாற்றங்-களுக்கும் ஆளாகத் தொடங்குவதைப் பெரியவர்கள் உணர வேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொள்ளா விட்டால், அடுத்த கட்டத்தில் 13 முதல் 17 வயதுக்குள்ளேயே டீன்-ஏஜ் பருவத்தில் குழந்தைகள் ஏதோ வேற்றுக் கிரக மனிதர்கள் போலத்தான் தோன்ற ஆரம்பிப்பார்கள்.
நம் மரபிலே ஓர் அற்புதமான சொலவடை இருக்கிறது... ‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்’!
அப்பா-அம்மாவின் தோளைத் தாண்டி குழந்தைகள் உயரமாகிற வயது 10ல் இருந்து 14 வரைதான்! அந்தக் கட்டத்தில் அப்பாவும் அம்மாவும் குழந்தையின் நண்பராகிவிட வேண்டும். சிறந்த நண்பராக மனம்விட்டுக் குழந்தையுடன் அதன் சந்தோஷங்களையும் வருத்தங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஓட்டப் பந்தயத்தில் தோற்றது, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது முட்டியில் அடிபட்டது, ஓவியப் போட்டியில் பரிசு வாங்கியது போன்றவற்றைப் பெற்றோருடன் பகிர்வது போலவே தன் பாலியல் குழப்பங்களையும் பகிர முடியும் என்ற நம்பிக்கை குழந்தைக்கு எப்போது ஏற்படும்? அவர்கள் தன் மேல் அதிகாரம் செலுத்துபவர்களாக இல்லாமல், நண்பர்களாக இருப்பதாகக் குழந்தை உணரும் போதுதான்!
ஒரே வயதினர் நண்பர்களாக இருப்பதைவிட, பெரிய வயதினரும் சிறிய வயதினரும் நட்பு கொள்வது சற்றுக் கடினமானது. ஆனால், அப்படி ஒரு நட்பை ஏற்படுத்திவிட்டால், அதில் இருவரும் பெறும் பயன்கள் ஏராளம். இந்த நட்பை ஏற்படவிடாமல் தடுப்பது வயதின் அதிகாரமும், அதற்கான எதிர்ப்பும்தான்!
‘உன் வயதைத் தாண்டித்தான் நான் வந்திருக்கிறேன். எனக்குத் தெரியாதா?’ என்று மூத்தவர் சொல்லும் போது, அங்கே வயதின் அதிகாரம் தலைதூக்கிவிடுகிறது.
‘உங்களுக்கு வயசாயிடுச்சு. இதெல்லாம் புரியாது’ என்று இளைய குரல் ஒலிக்கும்-போது, அது உண்மையில் தலைமுறை இடை வெளியின் குரல் அல்ல; கருத்துப் பரிமாற்றத் தோல்வியின் குரல்தான்.
சிறுவர்களை, இளைஞர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் தோழர்களாக மாறவும் பெற்றோர் செய்ய வேண்டிய முயற்சிகளில் முதன்மையானது, ஒவ்வொரு வயதிலும் சிறுவர்களின் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக அறிவதாகும்.
3ல் இருந்து 12 வயது வரை ஏற்படும் மாற்றங்களை முன்பே அலசினோம். இப்போது 13 முதல் 17 வரை என்னென்ன நிகழ்கின்றன என்று பார்ப்போம். சிறுமிகள், பெரியவர்கள் ஆக இருக்கும்போது இருக்கப்போகும் உயரத்தை இப்போது அடைந்து முடித்திருப்பார்கள். சிறுவர் கள் உயரம் மட்டும் அவர்கள் இருபதுகளைத் தொடும்வரை வளர்ந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து வெளிவந்து இளைஞர்களாகியிருப்பார்கள்.
இப்போது ஒரு விஷயத்தின் வெவ்வேறு தன்மைகளை யோசித்து, எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பதற்குத் தேவையான அலசல் திறன் வந்துவிட்டு இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். சம வயதுக்கார முன்னோடிகளைப் பின்பற்றுவது தொடரும். ஆனால், வளர் இளம் பருவத்தில் இருந்த அளவு இந்தத் தாக்கம் இப்போது இராது. மீடியாக்களின் பாதிப்பு அதிகரித்திருக்கும். அதேசமயம், மீடியா சொல்லும் தகவல்களை அலசும் அறிவும் வந்தி ருக்கும். நண்பர்களுடனும் குடும்பத் தினருடனும் இருக்கும் உறவுகளில் முன்பைவிட முதிர்ச்சி காணப்படும்.
நீண்ட காலம் நீடித்திருக்கக்கூடிய நட்பை, உறவை இப்போது உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் ஏற்பட்டு இருக்கும். பரஸ்பர நம்பிக்கை, அன்பைப் புரிந்துகொள்ளுதல் போன்ற குணங்கள் இதற்குள் உருவாகியிருந்தால், ஆரோக்கியமான நட்பை, உறவை ஏற்படுத்திக் கொள்வதும் சாத்தியப்படும்.
தங்கள் உணர்ச்சிகளைத் தாங்களே அலசி ஆராய்ந்து புரிந்துகொள்வதற்கான முயற்சியும் திறமையும் இந்த வயதில் ஏற்பட்டு இருக்கும். ஏன் இது எனக்குப் பிடிக்கிறது, ஏன் இது எனக்குப் பிடிக்கவில்லை, ஏன் எனக்குக் கோபம் வந்தது, ஏன் எனக்கு அழுகை வந்தது என்றெல்லாம் யோசித்துப் பார்க்கும் ஆற்றல் இது.
டீன்-ஏஜ் தொடக்க காலத்தில் இளைஞர்களுக்குத் தங்கள் தோற்றம் பற்றிய அதீத அக்கறை இருக்கும். உடை பற்றி ரொம்ப அலட்டிக்கொள்வார்கள். ஆனால், டீன்- ஏஜ் முடியும் வயதில் இந்த அக்கறை குறைய ஆரம்பித்துவிடும். தோற்றத்தைவிட தன் ஆளுமை (பர்சனாலிட்டி) இப்படிப்பட்டது என்று காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.
அதாவது ஆளுமை என்பது வேறு; அதன் பல அம்சங்களில் தோற்றப் பொலிவு என்பதும் ஒன்று எனப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பார்கள்.
செக்ஸ் பற்றிய விருப்பங்கள் தங்களுக்கு ஏற்படுவதை இப்போது அவர்களே உணரத் தொடங்கியிருப்பார்கள். அதை எதிர்பாலாரிடம் தெரிவித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் புரிந்துகொள்ளும் அறிவும் இப்போது இருக்கும். செக்ஸ் சார்ந்த உறவுகளில் சரியானது எது, ஆபத்தானது எது என்றெல்லாம் ஓரளவு இப்போது தெரியும். செக்ஸ் பற்றிய கருத்துக்களைத் தன் மனதில் ஏற்படுத்துவதில் மீடியாவின் பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவும் இப்போது ஏற்பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் டீன் ஏஜ் இளைஞர்களுடன் செக்ஸ் பற்றி பெற்றோர்கள் என்ன பேசலாம், எப்படிப் பேசலாம் என்பதை அலசுவோமா?
நம் சமூகத்தில் பெற்றோருக்கு இருக்கும் முதல் மனத் தடை, இதைப் பற்றியெல்லாம் எப்படி நாம் நம் குழந்தையிடம் போய்ப் பேசுவது என்பதுதான். இது ஓரளவு நியாயமான மனத் தடையும்கூட. ஆனால், இதை 13 வயதுக்குமேல் தொடங்க முடியாது. அதற்குள் அப்பா என்றால் இப்படி, அம்மா என்றால் இப்படி என்று இருவர் பற்றியும் திட்டவட்டமான மனச் சித்திரம் குழந்தைக்கு ஏற்பட்டுவிடும். பிறகு, அதை மாற்ற முயல்வது கடினம்.
எனவே, குழந்தையுடன் கருத்துப் பரிமாற்றங்களை அதற்குப் பேசத் தெரிந்த உடனே மிக சிறு வயதிலேயே தொடங்கிவிடுவது நல்லது. வளர வளர... சினிமா, அரசியல், பணம், படிப்பு, வேலை, கடவுள், சாதி, மதம், செக்ஸ் என எந்த விஷயத்தைப் பற்றியும் பெற்றோரிடம் விவாதிக்கலாம் என்ற நம்பிக்கை குழந்தைக்கு ஏற்பட வேண்டும்.
செக்ஸ் தொடர்பான ஒரு விஷயத்தைப் பற்றிக் குழந்தை கேள்வி கேட்கிறது என்றால், அதற்கான சரியான பதில்களையும் சரியான சொற்களையும் தெரிந்து கொள்ளும் வயதில் இருப்பதாகத்தான் அர்த்தம். குழந்தை என்ன கேட்கிறது என்பதை முதலில் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முறைக்கு இரு முறை அது என்ன சொல்கிறது என்பதை நாம் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டு பதில் சொல்வதுதான் சரி.
குழந்தை கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் சில சமயம் தர்மசங்கடமான சூழலாக இருக்கலாம். அப்போது உடன் இருக்கும் வேறு பெரியவர்கள் முன் இப்படிக் கேட்கிறதே என்று எரிச்சல்கூட வரலாம். ஆனால், அந்த விஷயம் பற்றிச் சரியான பதிலை குழந்தைக்கு தெரிவிக்கும் வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். ‘நல்ல கேள்வி கேட்டிருக்கே! ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டே பேசுவோம்’ என்று வேறு இடத்துக்கு இருவருமாகப் போய் மனம்விட்டுப் பேசலாம்.
குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, அவர்களுக்குப் புரியும் அளவுக்குச் சற்று அதிகமாகவே பதில் சொல்லலாம். நாம் நினைத்ததைவிடவே கூடுதலாகப் புரிந்துகொள்ளும் நிலையில் குழந்தை ஒருவேளை இருக்கக்கூடும். தவிர, அப்போதுதான் மேலும் கேள்விகள் கேட்கக் குழந்தைக்குத் தூண்டுதலாக இருக்கும். எப்போதுமே, குழந்தைக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயத்திலிருந்து தொடங்கி தெரியாத விஷயத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். எல்லா கற்பித்தலும் கற்றலும் அப்போதுதான் சாத்தியம்!
‘பையனுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?’ என்று சிறு குழந்தை கேட்கும்போது சினைப்பை, கருப்பை, விந்து சேகரப்பைகளின் வரைபடங்களைக் காட்டி விளக்கத் தேவையில்லை. அதற்கு குழந்தை இன்னும் வளர வேண்டும். ஆனால், மூத்திரம் கழிப்பதற்கு இருவருக்கும் வெவ்வேறு உறுப்புகள் பையனுக்கு குஞ்சும், பெண்ணுக்கு யோனியும் இருக்கின்றன என்று சொன்னால் போதும். குஞ்சு, யோனி போன்ற சொற்களைச் சொல்லக் கூச்சப்படத் தேவையில்லை. இவையே சரியான, பொருத்தமான சொற்கள்.
இவற்றைக் குழந்தைக்குச் சொல்லித் தராவிட்டால், அது வெளியில் இதே உறுப்புகளுக்கான ‘கெட்ட’ வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு வரும். ஆங்கிலத்தில் ‘யூரின்’ என்று சொல்லத் தயங்காத நாம் தமிழில் மட்டும் மூத்திரம் என்று கூறத் தயங்குவதைக் கைவிடவேண்டும். மூத்திரத்தை மூத்திரம் என்று சொல்லாமல் ‘உச்சா’, ‘சுசு’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தால், மூத்திரம் என்பது கெட்ட வார்த்தையாக மாறிவிடுகிறது. இப்படித்தான் பிறப்பு உறுப்புகள் தொடர்பான எல்லா சரியான வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளாகிவிட்டன.
குழந்தைக்குத் தன் உடலை அறியக் கற்பிப்பதில் முக்கியமான பங்கு வகிப்பது, முகம் பார்க்கும் கண்ணாடி. நம் இன்னொரு முகத்தைப் பார்க்கவும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.
இந்த வார ஹோம்வொர்க்:
1. உங்கள் பெற்றோர் எந்த வயதில் உங்கள் நண்பர்களாக ஆனார்கள்? (அல்லது, ஆகவே இல்லையா?)
2. நீங்கள் உங்கள் குழந்தையின் நண்பராக எந்த வயதில் ஆனீர்கள்? (அல்லது, ஆகவே இல்லையா?)
3. அப்பாவின் நண்பர்/அம்மாவின் சிநேகிதி/ மாமா, அத்தை போன்ற நெருங்கிய உறவினர் யாரேனும் உங்கள் நண்பராக இருந்ததுண்டா?
4. நீங்கள் உங்கள் மகன்/மகள் ஆகியோரின் நண்பர்களுக்கு அப்படிப்பட்ட நண்பராக இருக்க முயற்சித்தது உண்டா?
5. உங்கள் வீட்டில் வெளிப்படையாக விவாதிக்கும் விஷயங்களின் பட்டியலைப் போடுங்கள். குடும்ப வருமானம்/வேலை வாய்ப்புகள்/அரசியல்/சினிமா/பத்திரிகைச் செய்திகள்/சாதி/மதம்/கடவுள்/ சடங்குகள்/செக்ஸ்...
பதில்கள் மற்றவர்களுக்காக அல்ல. உங்களுக்கானவை... உங்களுடையவை!
|