(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி II, 1945, மார்ச் 12, 1945, பக்கங்கள் 1383-85)

            திரு.கே.சி.நியோகி: ஐயா, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்:

            “மண்ணியல் ஆய்வு” என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் மானியக் கோரிக்கை 100 ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும்.”

           ambedkar 292 எனது வெட்டுத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியாவின் கனிம வளங்கள் சம்பந்தமான அரசாங்கத்தின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனினும் நேரத்தைப் பொறுத்தவரையில், என்னுடைய மாண்புமிகு நண்பர் இது சம்பந்தமாக போதிய விவரங்கள் அளிப்பதற்கு கூடிய மட்டும் அதிகப்பட்ச நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்; இந்த விவரங்களைத் தான் நாங்கள் எல்லோரும் எதிர்பார்க்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உரையாற்றியிருந்தால் பல்வேறு விஷயங்களைச் சுட்டிக் காட்டியிருப்பேன். ஆனால் என் உரையை விடவும் அவரது அறிக்கையைத் தான் நாங்கள் முக்கியமானதாக கருதுவதால், என்னுடைய மாண்புமிகு நண்பர் முக்கிய தகவல்களும் விவரங்களும் பொருட் செறிவும் நிறைந்த அறிக்கையை தருவாரேயானால் நான் பெரிதும் பாராட்டுவேன்.

            திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): பின்கண்ட வெட்டுத் தீர்மானம் முன்மொழியப்படுகிறது:

            “மண்ணியல் ஆய்வு என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் மானியக் கோரிக்கை 100 ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும்.”

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): திரு.துணைத் தலைவர் அவர்களே, இத்தகைய ஒரு வெட்டுத் தீர்மானத்தை திரு.நியோகி கொண்டு வந்தமைக்காக உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கை போதிய அளவு மக்களுக்குத் தெரியாத நிலையில், அரசாங்கம் தனது கனிமவளக் கொள்கையை விளக்கிக் கூறுவதற்கு இந்த வெட்டுத் தீர்மானம் வாய்ப்பளிக்கிறது. இந்த விஷயம் குறித்துப் பெருமளவுக்கு அறியாமை நிலவுகிறது; அது பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில், அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கை போன்ற ஒரு முக்கியமான விஷயத்தை இந்த அவையில் முழு அளவுக்கு விளக்கிக் கூறுவது அனைவருக்கும் பயனுள்ளதாகவும் உகந்ததாகவும் இருக்கும். போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் தாம் சொல்ல விரும்பிய விஷயங்களை எடுத்துரைப்பதற்கு திரு.நியாகிக்கு வாய்ப்பு இல்லாது போனதற்காக வருந்துகிறேன்; அவையின் ஏனைய உறுப்பினர்களும் எனது இந்த உணர்வைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர் தமது உரையைச் சுருக்கிக் கொண்டு, நான் விரிவாகப் பேசுவதற்காக தமது நேரத்தையும் எனக்கு ஒதுக்கித் தந்தமையைப் பாராட்டுகிறேன்; இதற்காக அவருக்கு நான் பெரிதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

            ஐயா, எதையும் மூடி மறைக்காமல் பட்டவர்த்தனமாகப் பேச வேண்டிய விஷயம் இது: உண்மையில் கனிமவளக் கொள்கை என்ற ஒரு கொள்கை இதுவரை இந்திய அரசாங்கத்துக்கு இருந்ததில்லை என்றே கூறுவேன். இது விஷயத்தில் குறைகூறுவதற்கு போதிய ஆதாரம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. கனிமவளக் கொள்கை வகுக்கப்படாமல் போனதற்கு இந்திய மண்ணியல் ஆய்வுத் துறையினர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சில வட்டாரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இது தவறான குற்றச்சாட்டு என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. இத்தகைய தவறான கருத்து களையப்பட வேண்டும் என்று முதலில் விரும்புகிறேன். இதன் பொருட்டு என் உரையில் ஒரு சில நிமிடங்களை இதற்காக ஒதுக்குகிறேன்.

            எந்த ஓர் அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கையும் அந்த அரசாங்கத்தின் தொழில் கொள்கையையே அடிப்படையில் சார்ந்திருக்கும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியில் கனிம வளங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன; இந்நிலையில் அந்நாட்டுக்குத் தொழில் கொள்கை என்று ஒன்று இல்லை என்றால் கனிமவளக் கொள்கையும் இருக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு. யுத்தப் பிற்காலத்தில் இந்த நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வாழ்க்கையை மறுசீரமைக்கும் பணியை தனது குறிக்கோளாக இலட்சியமாகக் கொள்வதென இந்திய அரசாங்கம் தீர்மானிக்கும் வரை இந்த நாட்டு அரசாங்கம் நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகச் சிறிய பங்கையே ஆற்றி வந்திருக்கிறது என்பதை அவை நன்கறியும்.

          டாக்டர் பி.என்.பானர்ஜி: எவ்வளவு பரிதாபகரமானது!

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த விஷயம் பரிதாபத்துக்குரியதானாலும் சீற்றத்துக்குரியதானாலும் இப்போது அது எனக்கு முக்கியமானதல்ல. இதுவரை ஒரு கனிமவளக் கொள்கை இல்லாதிருக்கிறது என்றால் அது இந்திய மண்ணியல் ஆய்வுத் துறையின் தவறல்ல என்பதை எடுத்துக்காட்ட இங்கு விரும்புகிறேன். இந்தத் தவறு அன்றைய அரசாங்கத்தின் தவறாகும்; சட்டமன்றத்திற்கும், நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வாழ்க்கையில் அக்கறை கொண்ட ஏனைய அமைப்புகளுக்கும் இதில் பங்குண்டு.

உலகின் இதர பகுதிகளில் மண்ணியல் ஆய்வுத்துறையினர் ஆற்றிவரும் பங்கை இங்கு மண்ணியல் ஆய்வுத்துறை ஆற்றாததற்கு எப்போதுமே போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாத இலாகாக்களில் ஒன்றாக இது இருந்து வருவதே பிரதானமாக இரண்டாவது காரணமாகும். இந்திய மண்ணியல் ஆய்வுத்துறையின் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பந்தமான ஒரு வரலாற்றை இங்கு கூறுவது உசிதமாக இருக்கும். மண்ணியல் ஆய்வுத்துறையின் உயர் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு 1920 ஆம் ஆண்டில் அனுமதி பெறப்பட்டது ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது; இதனால் தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை நிரப்புவதற்கு ஏறத்தாழ ஒன்பது ஆண்டுக் காலம் பிடித்தது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த எண்ணிக்கை நிரப்பப்பட்டதும் 1931ல் சட்டமன்றம் பொருளாதாரத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றிற்று. பயிற்சி பெற்ற இந்த ஊழியர்கள் அனைவரையும் இதன் காரணமாக வீட்டிற்கு அனுப்ப வேண்டியதாயிற்று. எனவே, இந்திய அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கையில் மண்ணியல் ஆய்வுத்துறை தனக்குரிய பங்கை ஆற்றவில்லை என்றால் இதில் சட்டமன்றத்திற்கும் ஓரளவு பொறுப்பு உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறுகிய அவகாசத்தில் கடந்த காலத்தைப் பற்றி மேலும் விவரித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. எதிர்காலத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். ஒரு திட்டவட்டமான கனிமவளக் கொள்கை இருக்க வேண்டிய அவசியத்தை இந்திய அரசாங்கம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது என்பதைக் கூற மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் முடிவு செய்திருப்பதே இதற்கு பிரதான காரணம். இந்திய அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடுதல் குறித்த இரண்டாவது அறிக்கையின் 14 ஆவது பிரிவில் வகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த 14அவது பிரிவை இங்கு வாசித்து காட்டுவதற்கோ அல்லது பத்தியின் சுருக்கத்தையேனும் இங்கு தருவதற்கோ கூட எனக்கு நேரமில்லை. இந்த விஷயத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த 14ஆவது பிரிவைப் படித்து, அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கை என்ன என்பதைத் துல்லியமாக, தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இரத்தின சுருக்கமாகக் கூறுவதானால், இந்திய அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கையும், அந்தக் கொள்கையைச் செயல்படுத்த அது மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கையும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவதாக அரசாங்கத்தின் கொள்கையைச் செயல்படுத்துவதற்காக இந்திய மண்ணியல் ஆய்வுத் துறையை முன்னிலும் ஆற்றல்மிக்க சாதனமாக மாற்றுவதற்கு அதனை மறுசீரமைக்க உத்தேசித்துள்ளோம். இதன்படி, ஆய்வை விரிவுபடுத்த பரந்த அளவிலான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு, நிர்வாக ரீதியில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது நாங்கள் அமைக்க உத்தேசித்திருக்கும் மண்ணியல் ஆய்வின் புதிய கிளைகள் பொறியியல் சார்ந்த மண்ணியல், கனிம வளங்களைத் தொழில் துறைகளுக்குப் பயன்படுத்துதல், மத்திய கனிமவள வளர்ச்சி, இயற்பியல் பணி, எண்ணெய் அபிவிருத்தி போன்றவற்றில் கவனம் செலுத்தும். இவ்வகையில் என்ன செய்யப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் அறியும் பொருட்டு ஓர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தையும், தகவல் நிறுவனத்தையும் அமைப்பதும் இதில் அடங்கும்.

எங்கள் கனிமவளக் கொள்கையின் இரண்டாவது பகுதியில் கனிம வளங்கள் மீது கட்டுப்பாடு செலுத்தும் நோக்கத்தோடு இந்திய அரசாங்கம் இயற்ற உத்தேசித்திருக்கும் சட்டங்கள் இடம் பெறும். கனிமவளங்கள் மீது சட்டரீதியான கட்டுப்பாட்டின் வரையறைகளை நிர்ணயிப்பதில் பின்கண்ட அம்சங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்: ஒன்று, அகில இந்திய கனிமவளத்தின் முக்கியத்துவம்; இரண்டு, கனிமவளத்தின் தொழில்நுட்ப இயல்பு; மூன்று, கனிமவளம் பயன்படுத்தப்படும் நோக்கம்; நான்கு, கனிமவளத்தின் அல்லது கனிம வளத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களின் மதிப்பு. எங்கள் சட்ட விதிகள் இரண்டு பிரிவுகளில் அடங்கும் அல்லது கனிமவளங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும்; இவற்றில் ஒரு வகை கனிமவளங்கள் பொதுக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படும்; இந்தப் பொதுக்கட்டுப்பாட்டின்படி, கனிம வளங்களைக் கண்டுபிடித்தலும், அவற்றைத் தோண்டியெடுத்தலும் சில விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டுக் குத்தகைக்கு விடப்படும். மற்றவகை கனிமவளங்கள் விரிவான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். இவ்வாறு விரிவான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கனிமவளங்களின் எண்ணிக்கை சுமார் 28 ஆகும். இவற்றின் முழுப்பட்டியலையும் இங்கு வெளியிடும் உத்தேசம் ஏதும் எனக்கு இல்லை. விரிவான கட்டுப்பாடு என்பதில் உரிமங்கள் வழங்கும் அதிகாரம், கனிம வளங்களை ஆய்வு செய்தல், வெட்டியெடுத்தல், வகை பிரித்தல், தரப்படுத்துதல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும் முறையைக் கண்காணிக்கும் அதிகாரம், இத்தகைய முறையை மேம்படுத்தும் படி வலியுறுத்தும் அதிகாரம், கனிம வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் படிக் கூறும் அதிகாரம் முதலியனவும் அடங்கும்.

கனிம வளங்கள் சம்பந்தமாக இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கவிருக்கும் கொள்கை குறித்து எனக்குத் தரப்பட்டிருக்கும் அவகாசத்திற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கமாக கூறியுள்ளேன்.

திரு.நியோகி எழுப்பியிருக்கும் சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு இப்போது வருகிறேன். அவர் குறிப்பிட்டிருக்கும் முதல் விஷயம் கனிமப் பொருள்கள் ஏற்றுமதி பற்றியதாகும். நாங்கள் இயற்ற உத்தேசித்திருக்கும் சட்டங்களில் இந்தியாவுக்கு வெளியே கனிமப் பொருள்கள் ஏற்றுமதி சம்பந்தமான விதிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் என்று அவைக்கு உறுதிகூற விரும்புகிறேன். உண்மையில், நமது கனிமப் பொருள்களின் ஏற்றுமதியை நம்மால் முற்றிலுமாக நிறுத்த முடியுமா என்பதே இங்கு எழும் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் மற்றொரு கேள்வியைப் பொறுத்தே அமைந்துள்ளது. அந்தக் கேள்வி இதுதான்: நமது சொந்த கனிமப் பொருள்களின் ஏற்றுமதியை அறவே நிறுத்தினால், நமக்குப் பற்றாக்குறையாக உள்ள கனிமங்களை நம்மால் இறக்குமதி செய்வது சாத்தியமா? எண்ணெய், தாமிரம், ஈயம், துத்தநாகம், வெள்ளீயம், கந்தகம் போன்ற முக்கிய கனிமங்களில் இந்தியா பற்றாக்குறை நாடாகவே இருந்து வருகிறது. எனவே, நமது தாதுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் விஷயத்தை நமக்குப் பற்றாக்குறையாக இருக்கும் தாதுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு நமக்குள்ள வாய்ப்பு வசதிகளைக் கருத்திற் கொண்டுதான் பரிசீலிக்க வேண்டும்.

இந்த நிலைமையில், முதலாவதாக, நமக்குப் பற்றாக்குறை நிலவுகின்ற, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற கனிமப் பொருள்களின் ஏற்றுமதியை நாம் முறைப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, நமது கனிமங்கள் மூலப் பொருள்களாக ஏற்றுமதி செய்யப்படாதபடியும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்னர் அவை நமது தொழிற்சாலைகளில் பதனம் செய்யப்படும்படியாகவும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே இந்திய அரசாங்கத்துக்குப் பாதுகாப்பான மார்க்கமாக இருக்குமெனத் தோன்றுகிறது. திரு.நியோகி என் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கும் மற்றொரு விஷயம் எண்ணெய்ச் சலுகைகள் சம்பந்தப்பட்டது. எண்ணெய்ச் சலுகைகள் விஷயத்தில் தற்போது ஓர் இடைக்காலத் தடை இருந்து வருவது திரு.நியோகிக்குத் தெரியும்; அவையின் மற்ற உறுப்பினர்களுக்கும் இது தெரியும் என்று நம்புகிறேன். எண்ணெய்க் கிணறுகள் துறப்பணமிடப்படுவதற்கும் எண்ணெய் உற்பத்திக்கும் உரிமைகள் வழங்கும் விஷயத்தில் இந்த இடைக்கால தடை இருந்து வருகிறது. இந்த நாட்டில் தொழில்நுட்ப நிபுணர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறார்கள்; அப்படியிருக்கும்போது பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் இவர்களது உழைப்பை வீணடிக்கவும் அல்லது தமது சொந்த கனிமவள ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் முயன்று வருகின்றனர்; இதனைத் தடுப்பதற்காகவே இந்திய அரசாங்கம் இந்த இடைக்காலத் தடையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. யுத்தம் முடியும் வரையிலும் அதற்குப் பின்னர் சிறிது காலம் வரையிலும் இந்தத் தடை நீடிக்கும்.

உரிமங்கள் வழங்கும் பிரச்சினையைப் பொறுத்தவரையில், இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, இந்த விஷயம் மாகாண அரசாங்கங்களின் பொறுப்பில் இருந்து வருகிறது; எனினும் 1919 ஆம் வருடச் சட்டத்தின்படி இந்திய அரசாங்கம் வகுத்துத் தந்த விதிமுறைகளையே மாகாண அரசாங்கங்கள் இன்றுவரை பின்பற்றி வருகின்றன; பிரிட்டிஷ் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு எதிராகக் “கதவை மூடும்” கொள்கையை இந்த விதிமுறைகள் வலியுறுத்துகின்றன. எந்த ஒரு நிறுவனமும் எண்ணெய் உற்பத்திக்கு உரிமம் பெறுவதற்கு முன்னர் அந்த நிறுவனம் இந்திய ஊழியர்களைக் கொண்டிருப்பதாகவோ அல்லது அதன் குழுமத்திலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் பிரிட்டிஷ் குடிமக்கள் என்றோ நிரூபித்தாக வேண்டும் என்று இவ்விதிமுறைகள் கூறுகின்றன. இந்தியக் குடிமக்களுக்கும் பிரிட்டிஷ் குடிமக்களுக்குமுள்ள வேறுபாட்டுப் பிரச்சினையை திரு.நியோகி தம் மனதில் கொண்டிருக்கிறாரோ என்னவோ நான் அறியேன். இதைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எனக்கு நேரம் இல்லை. இப்போது நான் சொல்லக்கூடியதெல்லாம் இந்த விஷயம் மற்றொரு முக்கிய விஷயத்துடன் அதாவது இந்திய அரசாங்கச் சட்டம் 118-ன் III ஆவது பிரிவில் அடங்கியுள்ள விதிமுறைகளுடன் நெருங்கிய சம்பந்தமுடையது என்பதேயாகும்; ஒரு தனித் தீர்மானத்தின் பேரில் இதுபற்றி அவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. நிலக்கரியைப் பொறுத்தவரையில் எங்களது புதிய சட்டத்தில் அதுவும் இடம் பெற்றிருக்கும். இது ஒரு கடினமான பிரச்சினை என்பதை என் நண்பர் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். நிலக்கரியை வெட்டியெடுத்தல், தரம் பிரித்தல், விற்பனை செய்தல், தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. நமது சட்டம் பயனளிக்க வேண்டுமென்றால் நிலக்கரிச் சுரங்கங்களின் உரிமையாளர்களுக்கும் நிலக்கரி வாணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இடையே பெருமளவுக்கு ஒத்துழைப்பு நிலவுவது அவசியம். இந்த விஷயத்தை எங்களது யுத்தப் பிற்காலக் கொள்கையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள நாங்கள் எண்ணியுள்ளோம் என்பதை அவைக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

இந்திய அரசாங்கத்தின் கொள்கை என்னவென்பதை பேசுவதற்கு எனக்குக் கிடைத்த குறுகிய காலத்தில் பொதுப்படையான முறையில் எடுத்துரைத்தேன். முடிவாக நான் கூறக்கூடியதெல்லாம் இதுதான்: அனைத்தையும் உள்ளடக்கியதும் இயக்காற்றல் மிக்கதுமான கனிமவள கொள்கை மூன்று சூழ்நிலைகளைச் சார்ந்திருக்கும். நாட்டின் தொழில் வளர்ச்சியை அது சார்ந்திருக்கும். தொழில்கள் வளர்ச்சியுற வேண்டுமானால், கடந்த காலத்தைவிட அதிக உத்வேகமிக்க கனிம வளக் கொள்கையை இந்த நாடு பின்பற்ற வேண்டும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. நமது கனிமவளக் கொள்கை வெற்றிபெறுமா, மிகப் பலரின் நலனுக்காக, நன்மைக்காக அது பயன்படுத்தப்படுமா என்பது இரண்டு அம்சங்களை அதாவது அரசியல் சட்ட நிலையையும், மாகாணங்களும் மத்திய அரசும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதையும், இது விஷயத்தில் அரசு ஆற்ற அனுமதிக்கப்படும் பங்கையும் பொறுத்திருக்கும். இந்த நாட்டின் கனிம வளக் கொள்கை சம்பந்தமாக இந்திய அரசு என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதை அவைக்குப் போதிய அளவு விளக்கிவிட்டதாகக் கருதுகிறேன்.

மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: தீர்மானத்தை அவையின் முடிவுக்கு முன்வைக்கலாம் என்று முன்மொழிகிறேன்.

திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): தீர்மானம் இப்போது அவையின் முடிவுக்கு முன்வைக்கப்படுகிறது.

(பல உறுப்பினர்கள்: இல்லை, வேண்டாம், வேண்டாம்)

இந்த தீர்மானத்தை அவையின் முடிவுக்கு முன்வைக்கக் கூடாது என்பது அவையின் பொதுவான கருத்தாக இருப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.

திரு.எச்..சத்தார் எச்.எஸ்ஸாக் சேட் (மேற்குக் கடற்கரை மற்றும் நீலகிரி: முகமதியர்): ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. இது ஒரு கண்டிப்பான நடைமுறையாகும். இப்போது, அடுத்த கட்சி தனது அபிப்பிராயத்தைக் கூற முன்வரலாம். இது குறித்து அவை தனது முடிவை தற்போது தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): இந்த வெட்டுத் தீர்மானத்தை அவையின் முன்வைக்க முடியாது என்பதே இப்போதுள்ள நிலை.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 5, 1945,, பக்கங்கள் 235-41)

            யுத்தம் முடிவடைந்ததும் கூடிய விரைவில் இந்தியாவுக்குத் தேவையான கனரக மின்விசை எந்திர சாதனங்களைப் பெறுவதற்கான ஒரு கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று அவசியமான மின்விசை உற்பத்தி ஆற்றலை இந்தியா ஈட்டுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூறினார். “பொதுப்பணித்துறை மற்றும் மின்விசை உற்பத்தித் துறை” குறித்த கொள்கைக் குழுவின் இரண்டாவது கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி புதுடில்லியில் நடைபெற்றபோது அதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

            டாக்டர் அம்பேத்கர் உரையின் முழு வாசகத்தை கீழே தந்திருக்கிறோம்:

ambedkar 286            இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் பழைய பிரதிநிதிகள், புதிய பிரதிநிதிகள் ஆகிய எல்லாப் பிரதிநிதிகளுக்கும் எனது மிகவும் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொண்டு எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன். நமது குழு சென்ற முறை கூடியபோது அதில் அப்போது உறுப்பினர்களாக இல்லாதவர்கள் இப்போது உறுப்பினர்களாக இடம் பெற்றிருக்கின்றனர்; எனவேதான் பழைய உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டேன். புதிய உறுப்பினர்கள் இந்தியாவிலுள்ள மின்விசைத் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சம்மேளனத்தினாலும் இந்தியத் தொழிற்சங்க காங்கிரசாலும் நியமிக்கப்பட்டவர்கள் மின்விசைத் தொழில் நிலையங்களும் ஸ்தாபன ரீதியாக ஒருங்கு திரண்டுள்ள தொழிற்சங்க அமைப்புகளும் இந்தியாவின் எதிர்கால மின்விசைத்துறை வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டிருப்பவை.

            எனவே, இவற்றின் பிரதிநிதிகள் தெரிவிக்கும் கருத்துகளை உரிய முறையில் கணக்கிலெடுத்துக் கொண்டு நாம் எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டும். சென்றமுறை இந்தப் புதிய உறுப்பினர்கள் பங்குகொள்ள முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பும் கோருகிறேன். ஏனென்றால் அவர்கள் விடுப்பட்டுப் போனது ஒரு பெரிய தவறாகும். இன்று அவர்கள் நம்முடன் இருப்பதற்காக நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் நம்முன்னுள்ள விஷயம் குறித்து நடைபெறவிருக்கும் விவாதத்தில் அவர்கள் உரிய முறையில் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

மின்விசைப் பொறியாளர்களின் மாநாடு

          சென்ற முறை 1943 அக்டோபர் 25 ஆம் தேதி கொள்கைக் குழு கூடிற்று. அதற்குப் பிறகு யுத்தப் பிற்கால மின்விசைத் துறை வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதை உங்களில் அநேகர் அறியாதிருக்கக் கூடும். எனவே, இதுகுறித்து சில விவரங்களைத் தெரிவிப்பதுடன் கூட்டத் தலைவர் என்ற முறையில் எனது உரையைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கொள்கைக் குழுவின் சென்ற கூட்டத் தொடர் முடிவடைந்ததும் இந்திய அரசாங்கத்தின் மின்விசைத்துறை ஆணையரான திரு.மாத்யூஸ் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று நாட்டிலுள்ள பிரபல மின்விசைப் பொறியாளர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார்; யுத்தப் பிற்கால மின்விசைத்துறை வளர்ச்சி குறித்துப் பரிசீலிப்பதே அரசு சார்புடைய மற்றும் அரசு சார்பில்லாத பொறியாளர்கள் பங்கு கொண்ட இம்மாநாட்டின் நோக்கமாகும். யுத்தம் முடிவுற்ற உடனேயே மின்விசை உற்பத்தியைப் பெருக்குவதற்கு இந்தியாவுக்குத் தேவையான கனரக மின்விசை எந்திரங்களைப் பெறுவதற்கான ஒரு கால அட்டவணையைத் தயாரிப்பதே மாநாடு மேற்கொண்ட முதல் பணியாக இருந்தது. இதுவன்றி, இதுவிஷயம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள், விவாதங்களின் அடிப்படையில் அமைந்த ஒருமித்த முடிவைப் பிரதிபலிக்கும் வகையில் மாநாடு சில தீர்மானங்களை நிறைவேற்றிற்று. இந்தத் தீர்மானங்கள் நான்கு பகுதிகளின் கீழ் வருகின்றன:

  • மாகாணங்களும் சமஸ்தானங்களும் தமது அதிகார எல்லைகளுக்குள் மின்விசை உற்பத்தியைப் பெருக்குவது சம்பந்தமாக எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்த பொதுவான பரிந்துரைகளும், சில குறிப்பிட்ட பரிந்துரைகளும் முதல் பகுதியில் அடங்கியுள்ளன.
  • மின்விசை வாரிய நியமனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இரண்டாவது பகுதியில் காணப்படுகின்றன.
  • மாநாடு பரிசீலித்துக் காலதாமதமின்றி உடனடியாக ஆராய வேண்டிய சில மின்விசை வளர்ச்சி அம்சங்கள் மூன்றாவது பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.
  • ரயில் போக்குவரத்தை மின்மயமாக்குதல், செயற்கை உரங்கள் உற்பத்தி, கிராமப்புற மின்மயமாக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நான்காவது பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

மாநாட்டு உறுப்பினர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளுடன் அனுப்பியிருந்த கடிதத்தில் பின்கண்டவாறு குறிப்பிட்டிருந்தனர்: “மின்விசை வளர்ச்சித் திட்டம் முற்றிலும் ஒருங்கிணைந்த முறையில் பரிசீலிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்; இந்தியா முழுவதிலும் பல்வேறு நிலைமைகளில் அனுபவம் பெற்ற பொறியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பது பிராந்தியத் தேவைகளை ஒருமுகப்படுத்துவதில் பெரிதும் மதிப்புமிக்க அம்சமாக அமைந்துள்ளது.” 

கனரக மின்விசை எந்திர சாதனங்கள்

          யுத்தம் முடிவடைந்த உடனேயே இந்தியா முழுவதிலும் மின்விசை உற்பத்திப் பெருக்கத்துக்கு மகத்தான வாய்ப்பு இருப்பதாக தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியமைக்காக மாநாட்டுக்கு நாம் மிகுந்த நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தான் செய்துள்ள பல பரிந்துரைகள் சம்பந்தமாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை மாநாடு கேட்டுக்கொண்டது. மாநாட்டின் இரு பரிந்துரைகள் எந்திர சாதனங்கள் வாங்குவது, தொழில் நுட்ப மின்விசை வாரியம் அமைப்பது சம்பந்தப்பட்டவை இந்த இரு பரிந்துரைகளும்.

            யுத்தம் முடிவடைந்ததும் கூடிய விரைவில் இந்தியாவுக்குத் தேவையான கனரக மின்விசை எந்திர சாதனங்களைப் பெறுவதற்கான ஒரு கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது; அதேபோன்று, அவசியமான மின்விசை உற்பத்தி ஆற்றலை இந்தியா ஈட்டுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்த உற்பத்தி ஆற்றல் 850 மெகாவாட்டாக இருக்கும்; இதற்கு ஏறத்தாழ 50 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மொத்த புதிய ஆற்றல் திறன் தற்போதுள்ள ஆற்றல் திறனில் கிட்டத்தட்ட 65 சதவீதமாக இருக்கும். எந்திர சாதனங்கள் விஷயத்தில் நமது தேவை நாம் பதிவு செய்திருப்பதைவிட அதிகமாக இருக்கும் என்பதை மேலும் விரிவான ஆய்வு புலப்படுத்தக்கூடும். ஆனால் இனியும் தாமதிப்பது இந்தியாவின் நலனுக்கு ஊறுவிளைவிக்குமாதலால், நமக்குள்ள குறுகிய காலத்திற்குள் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

தொழில்நுட்ப மின்விசை வாரியம்

            ஒரு தொழில் நுட்ப மின்விசை வாரியத்தை இந்திய அரசாங்கம் அமைத்திருக்கிறது என்பதை 1944 நவம்பர் 8 ஆம் தேதியிடப்பட்ட பத்திரிக்கை குறிப்பிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். தலைவரைத் தவிர இரண்டு முழுநேர உறுப்பினர்களையும் மூன்று பகுதிநேர உறுப்பினர்களையும் ஆரம்பத்தில் வாரியம் பெற்றிருக்கும். இந்திய மின்விசைத் துறை ஆணையரான திரு.மாத்யூசை தலைவராக இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது; அதோடு, அமெரிக்காவைச் சேர்ந்த திரு.டபிள்யூ.எல்.ஊர்தினது சேவையைப் பெற்று அவரை வாரியத்தின் மற்றொரு உறுப்பினராக நியமித்திருக்கிறது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் டென்னஸ்ஸி நதிப் பள்ளத்தாக்குத் திட்ட நிர்வாகத்தில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றியவர் இவர். பயனோக்கு உறுப்பினர் எனப்படும் மூன்றாவது உறுப்பினர் ஒருவரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. பயனோக்குப் பணியில் அனுபவமுள்ள தகுதிவாய்ந்த ஒரு பொறியாளரைத் தெரிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாகாண அரசாங்கங்களையும் சமஸ்தான அரசாங்கங்களையும் கலந்தாலோசித்து மின்விசை உற்பத்திப் பெருக்கத்துக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கக் கூடிய, ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய, திட்டங்களைத் தயாரிக்கக்கூடிய ஒரு வலுவான தொழில்நுட்ப அமைப்பாக இந்த வாரியத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் எவ்விதம் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கிறது என்பதை இந்த உயர்மட்ட நிபுணர்களின் நியமனம் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துவதை நீங்கள் காணலாம். கொள்கைக் குழுவின் கூட்டங்கள் நடைபெறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் என்ன நடைபெற்றிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் மெய்யார்வத்தோடு, துரிதமாகவும் நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதை உங்களுக்கு புலப்படுத்துவதற்காகவுமே இவற்றையெல்லாம் இங்கு கூறினேன். 

மூன்று அம்சத் திட்டம்

            மின்விசைக் கொள்கையில் மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது; அதனை உங்கள் அனைவரின் கவனத்துக்கும் இங்கு கொண்டுவர விரும்புகிறேன். கொள்கைக் குழுவின் கடந்த கூட்டத்தில் பம்பாய் அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட திரு.காலின்ஸ் பம்பாய் ராஜதானியில் ‘கிரிட்’ முறையை நடைமுறைக்குக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஸ்தல அளவில் மின்விசை உற்பத்திப் பெருக்கத்திற்குப் பதிலாக பிராந்திய அளவிலான மின்விசைப் பெருக்க விஷயத்தில் இந்திய அரசாங்கத்திலுள்ள நாங்கள் சென்ற ஆண்டு மிகுந்த அக்கறை காட்டினோம். மின்விசை அளிக்கும் வசதிகளை உற்பத்தியாளர்களுக்கு மட்டுமன்றி நுகர்வோருக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்ய வேண்டுமானால், பிரிட்டனில் மத்திய மின்விசை வாரியம் ஆரம்பம் முதலே பின்பற்றிவரும் மூன்று அம்சத் திட்டத்தை நாம் முன்னெச்சரிக்கையோடும், படிப்படியாகவும் பின்பற்ற வேண்டும் என்பதை நாங்கள் மேன்மேலும் உணர்ந்தோம். அந்த மூன்று அம்சத் திட்டம் வருமாறு:

            (அ) பொது வழங்கீடு அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் பிரதான தொழில் கேந்திரப் பகுதிகளில் பெரிய அளவிலான மின் நிலையங்களை அமைத்தல்.

            (ஆ) பெரிய மின் நிலையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையில் மின்விசை செல்லும் பிரதான அமைப்பை நிர்மாணித்தல்; பிராந்தியம் முழுவதும் வளர்ச்சியுறும் விதத்திலும், வேளாண் பிரதேசங்களும் தொலைதூர பிரதேசங்களும் பயனடையும் முறையிலும் இப்பணியைச் செய்தல்;

            (இ) மின்விசை அமைப்பு மூலம் அபிவிருத்தி செய்ய வேண்டிய பிராந்தியத்தில் மின்விசை வழங்கீட்டை முறைப்படுத்துதல்.

            இந்த மூன்று அம்சத் திட்டம்தான் ‘கிரிட்’ முறையின் அடித்தளமாக அமைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிராந்திய வளர்ச்சிக்கான இத்தகையதோர் திட்டம் இந்த நாட்டில் பின்பற்றப்படுமானால், குறைந்த கட்டணத்தில் மின்விசை என்னும் மாபெரும் வரப்பிரசாதத்தை ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்குமே கூடிய விரைவில் வழங்க முடியும் என்று நம்புகிறேன்.

            ‘கிரிட்’ முறையைக் கடைப்பிடிக்க பிரிட்டனில் முதலில் உத்தேசிக்கப்பட்டபோது, 1940-41க்குள்ளாக நாட்டில் மின்விசை உற்பத்தி 2500 கோடி யூனிட்டுகள் என்னும் பிரம்மாண்டமான அளவை எட்டும் என்றும், ஒரு யூனிட் மின்விசை உற்பத்திக்கான செலவு 1925-26ல் 9.4 பென்னியாக இருந்தது 4பென்னிக்கும் குறைவாக ஆகுமென்றும், பெரிய தொழில்துறைப் பயனீட்டாளர்களுக்கு ஒரு யூனிட் மின்விசை 1/2 பென்னிக்குக் கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இது உங்களுக்கு சுவையான தகவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள்

          இன்றைய நமது கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலைப் பற்றி இனி பார்ப்போம். நிகழ்ச்சி நிரலில் மொத்தம் நான்கு இனங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் முதல் இனம் உங்கள் பரிசீலனைக்கு இரண்டு திட்டங்களை முன்வைக்கிறது; ஒன்று தொழில்நுட்ப மின்விசை வாரியத்தை அமைப்பது; மற்றொன்று மின்விசைத் துறையில் பயிற்சி பெறுவதற்காக இந்தியர்களை அயல் நாடுகளுக்கு அனுப்புவது. இவற்றில் எந்தத் திட்டமும் சர்ச்சைக்குரியதன்று. எனவே, இவற்றைப் பற்றி இங்கு விரிவாக எடுத்துரைத்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

            நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ள இரண்டாவது இனம் நான்காவது இனத்தைப் போன்று துரதிர்ஷ்டவசமாக அத்தனை சர்ச்சைக்கு இடமற்றது அன்று. மின்விசை நிலையங்களில் வருவாய், செலவு, ஆதாயம் முதலியவை குறித்த சில கணக்குவைப்புக் கோட்பாடுகள் சம்பந்தப்பட்டது இந்த இரண்டாவது இனம். இந்த இனம் எடுத்த எடுப்பில் தோன்றுவதுபோல் அவ்வளவு சர்ச்சைக்குரியது அல்ல. இந்த இனம் இரண்டு பிரச்சினைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. ஒரு பிரச்சினையை அல்ல. இவ்விரு பிரச்சினைகளையும் தனித்தனியாக ஆராய்ந்தால் சர்ச்சை பெருமளவுக்குக் குறையும்.

            மின்விசை வழங்கும் ஒரு நிறுவனத்தின் ஆதாயப்பங்கு மின்விசைப் பயனீட்டுக்கான கட்டணத்துடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமா என்பது முதல் பிரச்சினை. இரண்டாவது பிரச்சினை நியாயமான ஆதாயப்பங்கை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதாகும். முதல் பிரச்சினையைப் பொறுத்தவரையில், அதில் சர்ச்சைக்கு அதிக இடமில்லை. மின்விசை என்பது உற்பத்தி அளவிலும் பயனீட்டு அளவிலும் மக்களுக்கு ஜீவாதாரமானது. மக்களுக்கு இவ்விதம் அத்தியாவசியமாகத் தேவைப்படும் மின்விசையின் விலையை உற்பத்தியாளர் தமது விருப்பப்படி நிர்ணயிக்க அனுமதிக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு. மின்விசை மலிவான கட்டணத்தில் அதிக அளவில் கிடைப்பதற்கு இந்தியா வழிவகை செய்யவில்லை என்றால் இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியின் எதிர்காலம் முழுவதுமே மிகுந்த அபாயத்துக்கு உள்ளாகும். ஆதலால் ஆதாயப் பங்குகளை மின்விசைக் கட்டணத்தோடு சம்பந்தப்படுத்துவது மிகவும் முக்கியம். இந்தக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் கணக்குவைக்கும் விதிகளைச் செயல்படுத்துவது இன்றியமையாதது; மின்விசை உற்பத்தியாளர்களுக்கு நியாயமான லாபம் சிடைக்க இது வகை செய்யும்; அதோடு, திருட்டுத்தனமாக லாபங்கள் ஈட்டுவதற்கு வகை செய்யும் ஓட்டைகளையும் அடைத்துவிடும்.

கணக்கு வைக்கும் கோட்பாடுகள்

          அப்போது பிரச்சினை இரண்டாந்தரமானதாகிவிடும். கணக்கு வைப்புக் கோட்பாடுகள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலம் புரட்சிகரமான புதிய கருத்து எதையும் நாம் கூறிவிடவில்லை. 1925 ஆம் வருட லண்டன் மின்விசை சட்டத்திலும், 1926 ஆம் வருட மின்விசை வழங்கீடு சட்டத்திலும் மின்விசை சம்பந்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் விதிமுறைகளைத்தான் நாம் பின்பற்றுகிறோம். இந்திய அரசாங்கத்தின் மின்விசைத்துறை ஆணையர் தயாரித்துள்ள பொதுநிலை அறிக்கையில், மின்விசை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய இத்தகைய கணக்கு வைப்புக் கோட்பாடுகளை வகுத்துத் தந்திருக்கிறார். அவரது அறிக்கை மாகாண அரசாங்கங்களுக்கும், மின்விசை உற்பத்தி நிறுவனங்களுக்கும் அவற்றின் கருதறிய சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது. இது விஷயத்தில் துரதிர்ஷ்டவசமாக சில மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்தக் கருத்து வேறுபாடுகளை களையும் பொருட்டு ஓர் ஆலோசனைக் குழுமத்தை அமைக்க இந்திய அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது; எத்தகைய நியாயமான, உசிதமான கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தக் குழுமம் ஆலோசனை கூறும். இது ஒரு சரியான, திருப்திகரமான தீர்வு என நீங்கள் கருதுவீர்கள் என நம்புகிறேன்.

            நிகழ்ச்சி நிரலில் நாம் இன்னும் பரிசீலிக்க வேண்டியிருப்பவை 1 ஆவது இனமும் 3ஆவது இனமுமாகும். நமது நிகழ்ச்சி நிரலில் உண்மையில் இவை மிக முக்கியமானவை; இவற்றை விளக்கிக் கூறுவதற்கு உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வதை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

            முதல் இனத்தைப் பொறுத்தவரையில், கொள்கைக் குழுவின் கடந்த கூட்டத்தில் நிலைமை எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்கு நன்கு நினைவிருக்கும். நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் குறித்த விவாதம் முடிவுற்றபோது அக்கூட்டத்தில் ஏற்பட்ட உடன்பாடு அடங்கிய ஒரு தீர்மானத்தைத் தொழிலாளர் நலத்துறை தயாரித்து கொள்கைக் குழுவின் அடுத்த கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்க வேண்டும் என்று கொள்கைக் குழு விருப்பம் தெரிவித்தது. அவ்வாறே ஒரு நகல் தீர்மானம் தயாரிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

            “இந்தியாவில் மின்விசை வழங்கீட்டை மேலும் அபிவிருத்தி செய்வதை ஓர் அரசு முயற்சியாகவோ அல்லது ஓரளவு அரசு முயற்சியாகவோ தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென்றும், மாகாண அரசாங்கங்களுக்கோ, சமஸ்தான அரசாங்கங்களுக்கோ அல்லது ஸ்தல ஸ்தாபன அமைப்புகளுக்கோ சொந்தமான மின் நிலையங்களிலும், அதேபோன்று வர்த்தக ரீதியாக தனியார் நடத்தும் மின் நிலையங்களிலும் மின்விசை உற்பத்தி ஆரோக்கியமான முறையில் வளர்வதற்கு இடையூறுகளாக இருக்கும் காரணங்களைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் பரிந்துரைக்கிறது.”

            இந்தத் தீர்மானம் அத்தனை தெள்ளத் தெளிவாக இல்லை என்பது உணரப்பட்டது. புதிதாக உருவாகப் போகும் மின் நிலையம் பற்றித் தீர்மானம் கூறியுள்ளது ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் மின் நிலையங்களைப் பற்றி அது எதுவும் தெரிவிக்கவில்லை. மின்விசை உற்பத்தி ஆரோக்கியமான முறையில் வளர்வதற்கு இடயூறாக இருக்கும் காரணக் கூறுகளைக் கட்டுப்படுத்தும் அவசியம் பற்றிக் கூறும் தீர்மானம் அந்தக் காரணக் கூறுகள் எவை என்பதை திட்டவட்டமான முறையில் எடுத்துரைக்கத் தவறிவிட்டது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள ஐயங்களை அகற்றுவதற்கு கொள்கைக் குழுவில் தீர்மானம் மீண்டும் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது விரும்பத்தக்கது என்று உணரப்பட்டது. இவ்வாறுதான் 1 ஆவது இனம் இப்போதைய நிலையை அடைந்தது.

அரசுக் கட்டுப்பாடும் உடைமையும்

          தற்போது மின் நிலையங்கள் இல்லாத இடங்களில் கட்டப்படும் மின் நிலையங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் அல்லது அவற்றின் மீது அரசாங்கக் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதையே சென்ற கொள்கைக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக இருந்தது; ஆனால் மின் நிலையங்கள் ஏற்கெனவே நிர்மானிக்கப்பட்டுச் செயல்பட்டுவரும் இடங்களில் அரசு எத்தகைய பங்காற்ற வேண்டும் என்பது குறித்து ஓரளவு ஐயப்பாடு நிலவியது. உதாரணமாக, இதுபற்றி சில கேள்விகள் எழுந்துள்ளன: அவசியம் ஏற்படும்போது ஒரு மின் நிலையத்தை அரசோ அல்லது அதன் அதிகாரம் பெற்ற வேறு எந்த ஓர் அமைப்போ தன் நிருவாகத்தின் கீழ் கொண்டு வருவதை ஒரு பொதுவான நியதியாக மேற்கொள்வது விரும்பத்தக்கதா? பிராந்திய வளர்ச்சியின் பொருட்டோ அல்லது மின் உற்பத்தியை ஒழுங்குப்படுத்தும் பொருட்டோ தனியார் மின் நிலையங்கள் மீது அரசு கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் செலுத்துவது உசிதமானதா? போதிய பிராந்திய வளர்ச்சியின் பொருட்டு வேறு சில மின் நிலையங்களிலிருந்து தற்போது இயங்கிவரும் சில மின் நிலையங்களுக்கு பெருமளவுக்கு மின்விசை வழங்க வேண்டியிருக்கும். இதன் மூலம் இப்போதுள்ள ஒரு மின்நிலையத்தை விரிவுபடுத்தி, அதனை பிராந்திய வளர்ச்சிக்கான பொதுத் திட்டங்களுக்கு இசைந்ததாக ஆக்க முடியும். ஆதலால், மின் நிலையங்களை எந்த அளவுக்கு அரசு உடைமையாக்க வேண்டும் என்பது பற்றி மட்டுமன்றி, உடனடியாக அரசுடைமையாக்குவது சாத்தியமில்லாத போது, சம்பந்தப்பட்ட மின்நிலையங்கள் மீது அரசு தனது கட்டுப்பாட்டைச் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் இந்த விவாதத்தில் நாம் ஒரு தெளிவான முடிவினை மேற்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

ஜெவோனது பொருளாதார சூத்திரம்

          அரசு நிறுவனமா, தனியார் நிறுவனமா என்பது எப்போதுமே ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் திட்டமிட்ட பொருளாதாரம் என்னும் கொள்கை வழியை நாம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டதால் இந்த சர்ச்சை இந்தியாவில் தற்போது முழு வேகத்துடன் எதிரொலித்து வருகிறது. அரசும் தொழில்துறையும் என்னும் தமது ஆய்வுக் கட்டுரையில் அரசு நிறுவனத்தையும் தனியார் நிறுவனத்தையும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு பொருளாதார சூத்திரத்தை வகுத்தளிக்க ஜெவோன்ஸ் முயன்றுள்ளார்; அரசு நிறுவன எதிர்ப்பாளர்களுக்கு இந்த சூத்திரமே வேதவாக்காக அமைந்துள்ளது. ஒரு தொழிலை அரசுடைமை ஆக்குவதற்கு ஜெவோன்ஸ் நான்கு அளவுகோல்களை நிர்ணயித்து தந்திருக்கிறார்: அவை வருமாறு: (1) சிறு மூலதனக் கணக்கு; (2) வழக்கமான வேலை நடைமுறைகள்; (3) அஞ்சல் துறை, தந்தி, தொலைபேசி போன்ற பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு; (4) தண்ணீர், எரிவாயு வழங்கீடு விஷயத்தில் போன்று அனைத்தையும் உள்ளடக்கிய போதிய அளவில் அமைந்த ஒரே தொழில் நிலையம்.

இந்த நாட்டிலுள்ள ஜெவோன்ஸ் ஆதரவாளர்கள் இந்த அளவுகோல்களுடன் வேறுசில அளவுகோல்களையும் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்; அரசுத் துறைத் தொழில் நிலையங்களை விஸ்தரிக்கக் கூடாது, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்; எனினும் இதற்கு ஒரு விதிவிலக்கு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்; தனியார் துறைக்கு இலாபகரமற்றவையாக உள்ள தொழில் நிலையங்களை அரசுத் துறைக்குத் தந்துவிடலாம் என்று கூறுகிறார்கள். தனியார் துறை ஓர் யதார்த்தமாயிருக்குமாயின் இந்தச் சர்ச்சைக்கு உறுதியான ஆதாரம் இருக்கிறது எனக் கருதலாம். ஆனால் இன்று தனியார் துறை ஓர் இடைப்பட்ட வளர்ச்சிக் கட்டத்திலேயே இருந்து வருகிறது. ஒரு தொழில் மாபெரும் பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனங்களால் நடத்தப்படும் ஒரு பொருளாதார அமைப்பில் தனியார் துறை என்று எதுவும் இருப்பதற்கில்லை. இதேபோன்று, துணிச்சலுக்குப் பதில் முன்னெச்சரிக்கைப் போக்கு தொழில் அல்லது வாணிபத்தின் ஆதார சுருதியாக அமைந்திருக்கும் ஒரு பொருளாதார அமைப்பில், இப்போதைய பொருளாதார நிலைமைகளில் ஒழுங்குமுறையிலமைந்த செயல்பாட்டைப் பராமரிப்பதன் மூலம் லாபங்களை ஸ்திரப்படுத்துவதையே பிரதான குறிக்கோளாகக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பில் தனியார் துறை என்று எதுவும் இருப்பதற்கில்லை. இந்தச் சர்ச்சையில் நான் ஈடுபடுவது அவசியமற்றதாகும். ஏனென்றால் அரசுத் துறையையும், அரசுக் கட்டுப்பாட்டையும் எதிர்ப்பவர்கள் மிகச் சிலரே உள்ளனர். மின்விசைத் துறையை அரசுடைமையாக்குவதை இவர்கள் எவ்வகையிலும் எதிர்க்கவில்லை.

            மின்விசை வழங்குவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மின்நிலையத்துக்கு அளிக்கப்பட்ட உரிமம் காலாவதியாகிவிடும் போது அது சம்பந்தமாக முடிவெடுக்கும் பிரச்சினையை 3ஆவது இனம் எழுப்புகிறது; அதாவது ஒரு மின்விசை நிலையத்தை வாங்குவது சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. இந்திய மின்விசை சட்டம் 7 ஆவது பிரிவில் கண்டுள்ள விதிகளின் படி இப்பிரச்சினைக்குத் தற்போது தீர்வு காணப்படுகிறது. இந்தப் பிரிவின்படி ஒரு மின் நிலையத்தை வாங்குவதா, இல்லையா என்பதை ஸ்தல நிர்வாகம் தன் உசிதம் போல் முடிவு செய்யலாம்; இவ்வாறு அது முடிவு செய்யவில்லை என்றால், மாகாண அரசாங்கம் தீர்மானிக்கலாம். இதே போன்று தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசாங்கத்துக்கு அளிப்பது விரும்பத்தக்கதல்லவா, அந்த அதிகாரம் எந்தக் கட்டத்தில், எத்தகைய நிலைமைகளில் வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் உள்ள இந்த 3ஆவது இனம் முன்வைக்கிறது. மின்நிலையத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் உரிமை மத்திய அரசாங்கத்துக்கும் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மின்விசை என்பது பொதுமக்களின் உபயோகத்துக்குரியது என்பதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இத்தகைய உரிமையை மத்திய அரசாங்கத்துக்கு வழங்குவதில் சிரமம் ஏதும் இருக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு.

மாகாணக் கட்டுப்பாடா அல்லது மத்திய கட்டுப்பாடா?

            துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கோட்பாட்டை ஏற்பதில் ஓரளவு தயக்கம் நிலவுவதாகத் தோன்றுகிறது. இந்தியாவில் திட்டமிடுதல் என்பது இரண்டு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது: அரசுத்துறை நிறுவனமா தனியார் துறை நிறுவனமா என்பது ஒரு பிரச்சினை; மாகாணக் கட்டுப்பாடா மத்தியக் கட்டுப்பாடா என்பது இன்னொரு பிரச்சினை. இந்த இரண்டு பிரச்சினைகளையும் நாம் நன்கு அறிவோம்; எனினும் 3ஆவது இனம் இரண்டாவது பிரச்சினையைத்தான் பிரதானமாக கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கிறது. அரசுத்துறை நிறுவனக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மாகாண கட்டுப்பாட்டில் இருந்தாலும் அல்லது மத்தியக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதனை ஒரு பிரச்சினையாக்க மாட்டார்கள்; இத்தகைய கட்டுப்பாட்டை மாகாண அரசு தன் பொறுப்பில் வைத்துக் கொள்ள விரும்பாதபோதோ அல்லது ஒரு மாகாணத்தின் எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய வளர்ச்சியின் நலன்களை முன்னிட்டோ அவசியமாகும்போது மத்திய அரசிடம் அந்தக் கட்டுப்பாட்டை விடுவதையும் அவர்கள் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீர்வழி விஷயத்தில் போன்று எந்தத் தகுந்த, உகந்த திட்டங்களையும் மாகாண எல்லைகளுக்குள்ளாகக் கட்டுப்படுத்திட இயலாது மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் இருக்க வேண்டும் என்றபோதிலும், பிராந்திய வளர்ச்சியின் பொருட்டு அரசுக் கட்டுப்பாடு அவசியமாகும் சந்தர்ப்பங்களிலும், குறிப்பிட்டதொரு தொழில் நிலையத்தை அரசுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர மாகாண அரசாங்கம் விரும்பாத சந்தர்ப்பங்களிலும் மத்திய அரசு இந்தப் பொறுப்பை ஏற்பது உசிதம் என்றே தோன்றுகிறது.

            நிகழ்ச்சி நிரல் காரணமாக எழக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே நான் கூறியதற்கும் அதிகமாக பயனுள்ள எதையும் என்னால் கூறமுடியும் என்று கருதவில்லை. எனினும் என் உரையை முடிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்; நீங்கள் எத்தகைய முடிவை மேற்கொண்டாலும் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து நாட்டில் நிலவும் பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு இசைந்ததாக அந்த முடிவு இருப்பது அவசியம் என்பதை நீங்கள் மனத்திற் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொதுஜன அபிப்பிராயம் ஏதுமில்லை என்று கருதுவது தவறு. பலர் நினைப்பதை விட அது அதிக இடதுசாரிப் போக்குடையது என்பது என் திடமான கருத்து; எனினும் அதற்கு வறட்டுத்தனமாக சித்தாந்த சகாயம் பூச நான் விரும்பவில்லை.

            நாடாளுமன்ற ஆட்சிமுறையைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் நாடு இந்தியா; இத்தகையதொரு நாட்டில் திட்டத்திற்கும் பொதுமக்கள் அபிப்பிராயத்துக்கும் இடையே உடன்பாடு இருக்க வேண்டிய அவசியத்தை மிகைப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். திட்டமிடும் முறை ரஷ்யாவில் வெற்றியடைந்து வருவதாகப் பலர் பேசுகிறார்கள். ரஷ்யா நாடாளுமன்ற அரசாங்க அமைப்பைப் பெற்றிராததே இதற்குப் பிரதான காரணம் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். நாடாளுமன்ற அமைப்பில் திட்டமிடுவதில் பல சிரமங்கள் இருக்கின்றன; திட்டமிடுபவர்கள் எந்த நேரம் தங்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுமோ என்ற அச்சத்தில் எப்போதும் இருந்துவருவார்கள்; மேலும், தங்கள் திட்டங்கள் நிறைவேற்றப்படும் காலம்வரை தாங்கள் பதவியில் இருக்க முடியுமா என்ற ஐயம் அவர்களை சதாவும் அலைக்கழித்துவரும். திட்டமிட்ட பொருளாதாரம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஒவ்வாததா, அவ்வாறானால் அவை இரண்டையும் எவ்வாறு இணக்கமுறச் செய்வது என்பது நீண்ட நெடிய பிரச்சினையாகும்; அது குறித்து விவாதிப்பதற்கு இது உரிய இடமல்ல. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எச்சரிக்க விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; அதாவது நமது திட்டங்கள் நமக்குப் பிறகு வருபவர்களால் ரத்து செய்யப்படாதிருக்க வேண்டுமானால் மிக அதிகமான மக்களுக்கு மிக அதிகமான நன்மை என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை வைத்திருக்கும் மிகப் பெரும்பாலான மக்களுக்கு உடன்பாடானதாக அவை இருக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழுவின் பரிந்துரைகள்

            தற்போது உரிமம் பெற்ற பிரதேசங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு மின்விசை வழங்கும் பணியை அரசுத்துறை நிறுவனத்தின் மூலமோ அல்லது ஓரளவு அரசுத்துறை சார்ந்த நிறுவனத்தின் மூலமோ தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று “பொதுப்பணித்துறை மற்றும் மின்விசைத் துறைக்கான கொள்கைக்குழு” பரிந்துரைத்துள்ளது. ஏதேனும் காரணங்களுக்காக இத்தகைய பணியை எந்த ஒரு பகுதியிலும் உரிய காலத்திற்குள் மேற்கொள்ள அரசு தயாராக இல்லை என்றால், அப்பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம். திறமையான முறையிலும், குறைந்த கட்டணத்திலும் பொதுமக்களுக்கு மின்விசை வழங்கீட்டை உத்தரவாதம் செய்யக்கூடியதும், இப்போதைய உரிமத்தின் கீழ் செயல்படக் கூடியதுமான ஒரு நிறுவனத்தை வாங்கலாம். ஆனால் அதேசமயம் மாகாண அரசுக்கோ, மத்திய அரசுக்கோ, ஸ்தல அமைப்புக்கோ சொந்தமான அல்லது வர்த்தக ரீதியிலான மின்விசை நிலையங்கள் பிராந்திய அளவில் ஆரோக்கியமான முறையிலும் சிக்கனமான முறையிலும் வளர்ச்சியுறுவதற்குத் தடையாக இருக்கக்கூடிய காரணக் கூறுகளைக் களைவதற்கு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

            மின்விசைத் துறையின் பயனோக்கையும் பொதுமக்களின் பயனோக்கையும் கருதி மின்விசை உற்பத்தியையும் வழங்கீட்டையும் கண்காணிப்பதற்கு சில நிதிக் கோட்பாடுகள் வகுத்தளிக்கப்பட வேண்டிய அவசியத்தை குழுவின் மற்றொரு பரிந்துரை ஏற்றுக் கொள்கிறது. இத்தகைய கோட்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும், அவற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும், இது சம்பந்தமாக எத்தகைய முறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பவை குறித்து அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற மின்விசைச் சட்டத்தின் 35ஆவது பிரிவின்படி ஓர் ஆலோசனைக் குழுமம் அமைக்கப்படுவது அவசியம். மத்திய அரசாங்கத்தின் இரு பிரதிநிதிகள், மாகாண அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்து நியமிக்கப்படும் இரு பிரதிநிதிகள், மின்விசை நிறுவனங்களது சம்மேளனத்தின் ஒரு பிரதிநிதி ஆகியோர் இந்தக் குழுமத்தில் இடம் பெற்றிருப்பர். தேவையான எண்ணிக்கையில் மதிப்பீட்டாளர்களை குழுமம் நியமித்துக் கொள்ளலாம்.

            மின்விசை அதிகரிப்புக்குத் திட்டமிடுவதற்காக ஒரு திட்டமிட்ட, ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்கும் பொருட்டு 1910 ஆம் வருட இந்திய மின்விசைச் சட்டத்தின் 7ஆவது பிரிவைத் திருத்தும் யோசனை குறித்து விவாதம் நடைபெற்றது; இந்த விவாதம் மத்திய அரசாங்கத்தின் பரிசீலனைக்குப் பல விஷயங்களை முன் வைத்துள்ளது. ஒரு மின் நிலையத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்கு மாகாண அரசாங்கத்துக்கு முதல் உரிமை அளிக்கும் விதத்தில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை குழு ஏற்றுக்கொண்டது. மாகாணங்களின் பரஸ்பர வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு இருப்பது அவசியம் என்று கருதப்படும்போது, அத்தகைய மின் நிலையங்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்தும் பிரச்சினையும் விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சினையின் சில அம்சங்கள் குறித்து கருத்து வேறுபாடு நிலவிற்று; எனவே, மாகாணங்களுடன் கலந்தாலோசித்து இந்தப் பிரச்சினையை மேற்கொண்டு பரிசீலிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் பயிற்சித் திட்டங்கள்

          மத்திய மின்விசைத் தொழில்நுட்ப வாரியம் அமைக்கப்படுவதையும், மின்விசைத் தொழிலின் வாணிக நிர்வாகத் துறைகளில் அயல்நாடுகளில் பயிற்சி பெறுவதற்கு பத்து இந்தியப் பொறியாளர்களை அனுப்பும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தையும் கொள்கை குழு வரவேற்றது. இவர்களில் நான்கு பேர் பிரிட்டனிலும், நான்கு பேர் அமெரிக்காவிலும் டென்னஸ்ஸிப் பள்ளத்தாக்கு ஆணையத்திலும், இருவர் கனடாவிலும் பயிற்சி பெறுவர். இந்த அதிகாரிகளில் இருவர் மத்திய அரசாங்கத்தையும், நான்கு பேர் மாகாண அரசாங்கங்களையும், இருவர் சமஸ்தான அரசாங்கங்களையும், இருவர் பொது மின்விசை நிலையங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பர். இரண்டு மத்திய அரசாங்க அதிகாரிகள் பயிற்சி பெறுவதற்கு ஆகும் செலவு முழுவதையும் இந்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். இந்தத் திட்டத்தின்படி, மின்விசைத் தொழிலின் வாணிக, நிர்வாகத் துறைகளில் இந்தியப் பொறியாளர்கள் பயிற்சி பெறும் அதேசமயம் தொழில்நுட்பத் துறைகளில் பயிற்சி பெறுவதற்கு இரண்டு கோஷ்டிகளை அனுப்புவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் திட்ட, அபிவிருத்தித் துறை உறுப்பினர் மாண்புமிகு சர் அர்தேஷிர் தலால், வங்க மாகாண வாணிக, தொழிலாளர் நல மற்றும் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கே.ஷாபுதீன், சிந்து மாகாண பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு ராய் பகதூர் கோகுல்தாஸ், சர் மிர்ஸா இஸ்மாயில், ராஜா தரம்கரம் பகதூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களையன்றி மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், மின்விசை நிலையங்கள் சம்மேளனம், இந்தியப் பொறியாளர் சங்கம் போன்றவற்றைச் சேர்ந்த அதிகார சார்பற்ற பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): திரு.துணைத் தலைவர் அவர்களே, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்:

“1936 ஆம் வருட ஊதிய வழங்கீடு சட்டத்தை மேலும் திருத்தும் இந்த மசோதா பின்வருவோர் அடங்கிய தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படுகிறது: சேத் யூசுப் அப்துல்லா ஹரூன், திரு.முகமது ஹூசேன் சௌதுரி, திரு.லால்சந்த் நாவல்ராய், திரு.ஏ.சி.இன்ஸ்கிப், சர் வித்தல் என்.சந்தவர்கர், திரு.என்.எம்.ஜோஷி, டாக்டர் சர் ரத்தன்ஜி தின்ஷா தலால், திரு.டி.எஸ்.ஜோஷி மற்றும் இம்மசோதாவை முன்மொழிபவர். குழுவின் எந்த ஒரு கூட்டமும் சட்டபூர்வமானதாகக் கருதப்படுவதற்கு அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருப்பது அவசியம்.

ambedkar in meeting

            ஐயா, 1936ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஊதிய வழங்கீடு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதே இம்மசோவின் நோக்கம். இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோது இது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையாகவே கருதப்பட்டது; ஏனென்றால் இந்தச் சட்டத்திற்கான மசோதாவை நாங்கள் தயாரித்தபோது இது சம்பந்தமாக நாங்கள் பின்பற்றுதற்குரிய சட்டம் ஏதும் நடைமுறையில் இருக்கவில்லை. ஆனால் இந்தச் சட்டம் குறித்த ஏழு ஆண்டு அனுபவம் இப்போது எங்களுக்கு இருக்கிறது. இச்சட்டம் செயல்பட்டு வந்த இந்த ஏழு ஆண்டுகளில், அதில் பல குறைபாடுகள் இருப்பது எங்களுக்குத் தெரியவந்திருக்கிறது. ஊதிய வழங்கிடுச் சட்டத்தை மேம்படுத்த வேண்டுமானால், 30 அல்லது 40 திருத்தங்கள் செய்வது அவசியம் என்று எங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. பல்வேறு தரப்பினரும் பரிந்துரைத்துள்ள எல்லாத் திருத்தங்களையும் பரிசீலிக்க தற்போது அவகாசமில்லை என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்திருக்கிறது; எனவே, உறுப்பினர்கள் எடுத்துக்காட்டியுள்ள அனைத்து குறைபாடுகளையும் களைந்து சட்டத்தை மேம்படுத்துவதில் ஈடுபடும் எண்ணம் ஏதும் இப்போது அரசாங்கத்துக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனினும் சட்டத்திலுள்ள குறைபாடுகளில் சிலவற்றை அகற்றுவது நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசாங்கம் கருதுகிறது; இந்தக் குறைபாடுகளைக் களையாவிட்டால் சட்டத்தை சரிவர செயல்படுத்துவதும், எந்த நோக்கத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதும் சாத்தியமில்லாமல் போகும்; அத்தகைய முக்கிய குறைபாடுகளை அகற்றுவதற்காகவே இந்தத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.

            ஐயா, மசோதாவை இனி ஷரத்துவாரியாகப் பார்ப்போம். “ஊதியங்கள்” என்னும் சொல்லின் பொருள் வரையறையில் சில திருத்தங்கள் செய்வது மசோதாவின் 2 ஆவது ஷரத்தின் நோக்கமாகும். “ஊதியங்கள்” என்னும் சொல்லுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கூறி அவையினரை அலுப்படையச் செய்ய நான் விரும்பவில்லை. எனினும் சில முக்கியமான குறைபாடுகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுவது உசிதமாக இருக்கும். ஒரு தொழிலாளி தான் சம்பாதிக்கும் ஊதியத்தை மட்டுமன்றி, உண்மையில் தனது உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தையும் குறிக்கும் வகையில் “ஊதியங்கள்” என்பதற்கான இப்போதைய விளக்கம் அமைந்திருக்கிறது எனப் பம்பாய் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் முந்திய சட்டத்தின் நோக்கம் இதுவல்ல. இந்த விளக்கம் சம்பந்தமாக இன்னொரு குறைபாடும் கூறப்பட்டது: அதாவது உற்பத்தி அடிப்படையில் வேலைக்கமர்த்தப்படும் ஒரு தொழிலாளி அவனது உற்பத்திக்குச் சம்பந்தமில்லாமல் ஊதியம் கோர இந்த விளக்கம் அவனை அனுமதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. வேலை நேர அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளியையும் உற்பத்தி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளியையும் வேறுபடுத்திக் காட்டத் தவறுவதால் இந்த விளக்கத்தில் பெரும் குழுப்பம் நிலவுகிறது என்று குறிப்பிடப்பட்டது. விளக்கத்தில் தற்போது இடம் பெற்றிருக்கும் சில சொற்கள் மிகையானவையாக உள்ளன; அங்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை; இதனால் குழப்பம்தான் மிஞ்சுகிறது என்று சில வட்டாரங்களில் வாதிக்கப்படுகின்றன. “வழங்கப்படக்கூடிய மேலே கூறிய இயல்புடைய போனஸ்கள் அல்லது கூடுதல் ஊதியம் முதலியவை இதில் அடங்கும் என்னும் சொற்களை இவ்வகையில் இங்கு குறிப்பிடலாம். இந்த விளக்கத்தின் முந்திய பகுதியில் ஏற்கெனவே இடம் பெற்றிருப்பதைவிட அதிகமான அர்த்தத்தை இந்தச் சொற்கள் தந்துவிடவில்லை என்று கூறப்படுகிறது. யுத்தத்தின் காரணமாக அகவிலைப்படி தோன்றுவதற்கு முன்னர் வேண்டுமானால் “ஊதியங்கள்” என்பதற்கு அளிக்கப்பட்ட விளக்கம் சரியானதாகவும், போதுமானதாகவும் இருக்கலாம், ஆனால் இன்று இந்த விளக்கம் போதுமானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அகவிலைப்படி என்பது ஊதியத்தின் ஒரு பகுதி அல்ல என்று ஒரு தொழிலதிபர் குதர்க்க வாதம் செய்வதற்கு இது வழிவகை செய்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

            இப்போது, திருத்தப்பட்ட மசோதாவில் நாங்கள் தந்திருக்கும் விளக்கம் இந்த அனைத்துச் சிக்கல்களையும் அகற்றுகிறது. இந்த விளக்கம் எளிதாக, புரியக்கூடியதாக இருப்பதாகவும் தோன்றுகிறது திருத்தப்பட்ட மசோதாவின் நகல் இந்த மூல சட்டத்துக்கு அடிப்படையாக உள்ள நம்பிக்கை வைக்கவில்லை என்பதை அவைக்கு கூறியாக வேண்டும் நாங்கள் முன்வைத்துள்ள விளக்கம் முற்ற முடிவான தென்றோ, மாற்ற முடியாததென்றோ நாங்கள் கருதவில்லை. தெரிவுக் குழு உறுப்பினர்கள் இதைவிடச் சிறந்ததொரு விளக்கத்தைப் பரிந்துரைப்பார்களேயானால், திருத்த மசோதாவில் தற்போது இடம்பெற்றுள்ள விளக்கத்தை மேற்கொண்டும் திருத்துவதற்கு என் தரப்பிலிருந்து நிச்சயமாக எந்த ஆட்சேபமும் வராது.

            இனி அடுத்த 3ஆவது ஷரத்துக்கு வருவோம். இப்போதைய பிரிவு 5இல் இந்த ஷரத்து இரண்டு திருத்தங்களைச் செய்கிறது. இந்தப் பிரிவு 5 ஊதியங்கள் அளிக்க வேண்டிய காலத்தை நிர்ணயிக்கும் பிரிவாகும்; ஊதியங்கள் வழங்கும் காலத்தை நிர்ணயிக்கும் பொருட்டு இப்பிரிவு தொழிற்சாலைகளை இரு வகைப் பிரிவுகளாகப் பிரிக்கிறது முதலாவது வகைப் பிரிவில் 1000க்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகள் அடங்கும். இரண்டாவது வகைப் பிரிவில் 1000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு வகைப்பிரிவு செய்யப்பட்ட பிறகு, முதலாவது வகைப்பிரிவைச் சேர்ந்த தொழிற்சாலைகளில் 7 நாட்களுக்குள்ளும் இரண்டாவது வகைப் பிரிவைச் சேர்ந்த தொழிற்சாலைகளில் 10 நாட்களுக்குள்ளும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தப் பிரிவு நிர்ணயிக்கிறது. நடைமுறையில் இந்தப் பிரிவின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது சிரமமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கடினமல்ல. தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தொழிற்சாலைகள் வகை பிரிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களின் எண்ணிக்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதையும், அது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது என்பதையும் இந்த அவை அறியும். உதாரணமாக, தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தாலே முதல் வகைப் பிரிவு இரண்டாவது வகைப் பிரிவாக தானாகவே மாறி விடுகிறது; அதே போன்று தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் இரண்டாவது வகைப் பிரிவு முதல் வகைப் பிரிவாகிவிடுகிறது. இவ்வாறு வேறுபடுத்தும் கோட்பாடு நியாயமானதோ, நிர்வாக சாத்தியமானதோ அல்ல என்று கருதப்படுகிறது. இது மிகவும் சரியான கருத்து என்றே நானும் நினைக்கிறேன். எனவே, இந்த வேறுபாட்டை அகற்றுவதே இந்தத் திருத்தத்தின் நோக்கம்; இதனால் தொழிற்சாலைகளை இருவகைப் பிரிவுகளாகப் பிரிக்கும் கோட்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; இதற்குப் பதிலாக எல்லாத் தொழிற்சாலைகளையும் ஒன்றாகப் பாவிக்கும் பொதுக் கோட்பாடு கடைப்பிடிக்கப்படும்; தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு இருப்பினும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் ஊதியம் பத்து தினங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற பொது விதி பின்பற்றப்படும். 3வது ஷரத்து முன்வைக்கும் இரண்டாவது திருத்தமும் மிகவும் அவசியமானது என்பதை அவை காண வேண்டும். பணியிலிருந்து நீக்கப்படும் தொழிலாளிக்கு ஊதியம் வழங்குவதற்கு பிரிவு 5 வகை செய்கிறது. இப்போதுள்ளபடி இந்தப் பிரிவு வேலையிலிருந்து நீக்கப்படும் தொழிலாளிக்கு இரண்டாவது வேலை நாளன்று ஊதியம் வழங்கப்படும் என்று கூறுகிறது. இப்போது, ஐயா, ஊதிய வழங்கீடுச் சட்டம் நாள் முழுவதும் இயங்கும் நிரந்தரத் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றால், இப்போதுள்ளபடி இந்தப் பிரிவினால் சிக்கல் ஏதும் ஏற்படாது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இயங்கும் தொழிற்சாலைகளில் எழக்கூடிய சிக்கல் முற்றிலும் எதார்த்தமானது; இது எப்படி என்று பார்ப்போம்; தொழிற்சாலையின் கடைசி வேலை நாளன்று ஒரு தொழிலாளி வேலையிலிருந்து நீக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்; அப்போது என்ன நிகழ்கிறது தெரியுமா? இந்தத் தொழிற்சாலை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இயங்கக்கூடியது ஆதலால், இதற்குப் பிறகு அது மூடப்பட்டு விடுகிறது; அப்போது நீண்டகால இடைவேளைக்குப் பிறகுதான் இரண்டாவது வேலைநாள் வரும்; இத்தகைய நிலைமையில் அந்தப் பரிதாபத்துக்குரிய தொழிலாளியின் கதியைப் பற்றிக் கற்பனை செய்துபார்ப்பது அப்படி ஒன்றும் கடினமல்ல. எனவே, இந்த மசோதாவில் தெரிவித்துள்ளபடி இந்தப் பிரிவில் மாற்றம் செய்யவில்லை என்றால், குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இயங்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி வேலை நீக்கம் செய்யப்படும்போது அவன் ஊதியம் பெறுவது காலவரையின்றித் தள்ளிப்போகும். ஆதலால் இந்தத் திருத்த மசோதா மூலம் நாங்கள் செய்திருப்பதெல்லாம், ‘வேலை’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ‘இரண்டாவது’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘மூன்றாவது’ என்ற சொல்லைச் சேர்த்திருப்பதுதான். இதன் மூலம், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இயங்கும் தொழிற்சாலையிலும் சரி, நிரந்தரமாக இயங்கிவரும் தொழிற்சாலையிலும் சரி வேலையிலிருந்து நீக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளியும் ஏழாவது நாளில் தனது ஊதியத்தைப் பெறுவான்; குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இயங்கும் தொழிற்சாலையில் இதுவரை நடைபெற்றுவந்தது போன்று தனது ஊதியத்தை பெறுவதற்கு அவன் காத்திருக்க வேண்டியதில்லை.

            இனி அடுத்து, மசோதாவின் 4ஆவது ஷரத்துக்கு வருகிறேன். இந்த சட்டத்தின் 7 ஆவது பிரிவில் சில திருத்தங்களைச் செய்வதே இந்த ஷரத்தின் நோக்கம் என்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் காண்பார்கள். பிரிவு 7 ஒரு தொழிலாளியின் ஊதியத்திலிருந்து எத்தகைய பிடித்தங்களைச் செய்யலாம் என்பதை வகுத்துக் கூறும் பிரிவாகும். இந்தப் பிரிவு இப்போதுள்ளபடி எல்லா நியாயமான பிடித்தங்கள் விஷயத்திலும் கையாளக்கூடியதாக இல்லை என்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தெரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, தனது வைப்பு நிதியுடனும் ஓய்வு உதவித் தொகையுடனும் பணியிலிருந்து விலகிச் செல்லுகின்ற, அதே சமயம், பணியில் நீடித்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய சலுகைகள் இழந்து விடுகின்ற ஒரு தொழிலாளியை இந்த சட்டம் அல்லது பிரிவு கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, உதாரணமாக மிக அவசர, அவசிய சில பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தனது வைப்பு நிதியையும் ஓய்வுதவித் தொகையையும் பெறும் பொருட்டு அவன் வேலையிலிருந்து தானாகவே விலகக்கூடும். பிறகு சிறிது காலம் கழித்து அதே வேலையில் அவன் மீண்டும் சேருகிறான் என்று வைத்துக்கொள்வோம்; அப்போது, தான் முன்னர் பணியிலிருந்து சமயத்தில் அனுபவித்து வந்த அதே சலுகைகளை மீண்டும் பெறுவதற்கு அவன் ஆவலாக இருப்பது இயல்பே; இவ்வாறு இந்த சலுகைகளை மீண்டும் பெறுவது அவன் வைப்பு நிதியையும் ஓய்வு உதவித் தொகையையும் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கிறானா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலைமையில், தொழிலாளி இத்தகைய பிடித்தங்களுக்குத் தயாராக இருந்தாலும் சட்டம் அதை அனுமதிக்கவில்லை. இத்தகைய பிடித்தம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து; ஏனென்றால் அது தொழிலாளியின் நலனுக்கே உகந்ததாக இருக்கும். ஆனால் நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இப்போதுள்ளபடி சட்டத்தில் இதற்கு வழிவகை செய்யப்படவில்லை. தவிரவும், தொழிலாளிக்கு நன்மை பயக்கக் கூடிய வேறு சில பிடித்தங்களும் இருக்கின்றன; இத்தகைய நன்மைகளைப் பெறும் பொருட்டு இப்படிப்பட்ட பிடித்தங்களை தொழிலாளி வரவேற்கவும் கூடும். ஆனால் இங்கும், சட்டம் குறுக்கிடுகிறது; தனக்கு நன்மை செய்யக்கூடியவை என்று கருதும் பிடித்தங்களுக்கு தொழிலாளி தானே முன்வந்து இணங்கினால்கூட சட்டத்தில் அதற்கு இடமில்லை. எனவே, தொழிலாளிக்கு இத்தகைய நன்மைகள் உண்மையிலேயே கிட்டும் வகையில் இப்போது இந்தச் சட்டம் திருத்தப்படுகிறது. பிரிவு 7 இல் இப்போதுள்ளபடி வேறு சில குறைபாடுகளும் உள்ளன. படிப்படியாக பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெறும் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவையாகும் இந்தக் குறைபாடுகள். இது மசோதாவிலுள்ள ஒரு புதிய விஷயமாகும். இது சம்பந்தமாக என்ன வழிவகை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும், இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு எங்களைத் தூண்டிய சூழ்நிலைகள் யாவை என்பதையும் அவைக்கு விளக்க விரும்புகிறேன். பிரிவு 4இன் துணைப் பிரிவு (3) மூன்று விஷயங்களைப் பற்றியதாகும். முதலாவதாக, பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெறும் அடிபடையில் பணிக்கு அமர்த்தப்படும் ஓர் ஊழியரின் ஊதிய உயர்வை நிறுத்த இது வகை செய்கிறது. இரண்டாவதாக ஓர் ஊழியரை உயர் பதவியிலிருந்து கீழ்ப்பதவிக்குத் தாழ்த்தவும், அதன் மூலம் சம்பளத்தைக் குறைக்கவும் இது அனுமதிக்கிறது. மூன்றாவதாக, ஓர் ஊழியருக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தராமல் இருப்பதற்கு, திறமையில்லை என்று கூறி அவரது ஊதியத்தைக் குறைப்பதற்கும் இது வழிவகுக்கிறது. சிந்து முறைமன்ற ஆணையர் அளித்த ஒரு தீர்ப்பின் காரணமாகவே பிரிவு 4இன் உப பிரிவில் (3) திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான விவரம் வருமாறு: அந்த ஊழியர் ஓர் இஞ்சின் ஓட்டுநர்; அவர் பதவி இறக்கம் செய்யப்படாமல் அதே பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டாலும், அவரது சம்பளம் குறைக்கப்பட்டது. இதன் பேரில், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடி நீதிமன்றம் சென்றார்; பழைய ‘கிரேடில்’ இருக்கும்போது தனது சம்பளத்தைக் குறைத்தது சட்டவிரோதமானது என்று அவர் வாதாடினார். நீதிபதி இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, அவரது சம்பளத்தைக் குறைத்தது முறைகேடானது என்று தீர்ப்பளித்தார். ஆனால் அதேசமயம் அவர் வேறொரு கருத்தையும் வெளியிட்டார்: அதாவது ஓர் ஊழியரின் திறமை அவர் வகிக்கும் பதவிக்கும் ‘கிரேடுக்கும்’ ஏற்றதாகவும், தனது கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு உகந்ததாகவும் இல்லை என்று கூறி அவருடன் ஒரு புதிய பணி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, அதனை அவர் ஏற்றிக் கொள்ளும் பட்சத்தில் அப்போது சம்பள வெட்டு நியாயமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நீதிபதி கூறிய இந்தப் பரிந்துரையைத்தான் இந்தத் திருத்தத்தின் மூலம் செயல்படுத்த முற்பட்டுள்ளேன்; அதாவது, ஓர் ஊழியர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற திராணியற்றவராக இருக்கும் பட்சத்தில், அவரிடம் “இது வரை அளிக்கப்பட்டு வந்த மாதிரி அதே சம்பளத்தை இனி உங்களுக்குத் தரமாட்டோம், உங்களுக்கு விருப்பமிருந்தால் புதிய அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றுங்கள், விருப்பமில்லையேல் வேலையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்” என்று இங்கிதமற்ற முறையில் கூற மாட்டோம்; அதற்கு மாறாக அவரை பழைய ‘கிரேடிலே’யே இருக்க அனுமதித்து, சம்பளத்தை மட்டும் குறைப்போம், அதற்கு முன்னதாக ஒரு மாதகால அவகாசம் தந்து ‘நோட்டீஸ்’ அனுப்புவோம். இவ்வாறு சம்பளக்குறைப்பு நடவடிக்கை ‘நோட்டீஸ்’ காலம் வரை தாமதிக்கப்படும்; ‘நோட்டீஸ்’ காலம் முடிவதற்கு முன்னர் புதிய ஏற்பாட்டுக்கு இணங்கத் தான் தயாராக இல்லை என்று தெரிவித்தால் வேலையிலிருந்து அவர் விலகிக் கொள்ளலாம். முறைமன்ற ஆணையரின் தீர்ப்பை பயனற்றதாக்குவதற்கே இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக சிலர் வாதிக்கக்கூடும் என்பதாலேயே இவற்றை எல்லாம் இங்கு கூறுகிறேன். இவ்வாறு வாதிப்பவர்கள் கூறுவது போல் நான் எதையும் செய்யவில்லை என்பதையும், முறைமன்ற ஆணையரின் தீர்ப்பை அனுசரித்தே திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த அவைக்குக் கூற விரும்புகிறேன்.

            உயர் கிரேடிலிருந்து கீழ் கிரேடுக்கு இறக்குதல், ஊதிய உயர்வை நிறுத்திவைத்தல் போன்றவற்றைப் பொறுத்தவரையில் அவை சர்ச்சைக்கு இடமற்ற விஷயங்கள். ஏனென்றால் கீழ் கிரேடிலுள்ள ஓர் ஊழியர் மேல் கிரேடுக்கு உயர்த்தப்பட்டால் அவர் தனது கடமைகளைச் செம்மையுறச் செய்வார் என்று தொழிலதிபர் திருப்தியடைந்தால்தான் அந்த ஊழியருக்குப் பதவி உயர்வு தருவார். இவ்வாறிருக்கும்போது அந்த ஊழியர் பதவி உயர்வு பெறவில்லை என்றால், அவர் ஏற்கெனவே பெற்றிருந்த எதையும் இழந்துவிடவில்லை என்பதால் இதில் மனக்குறைக்கு இடமேதும் இல்லை.

            இதே போன்றதுதான் மேல் கிரேடிலிருந்து கீழ் கிரேடுக்கு தாழ்த்தும் விஷயமும். இதிலும் நியாயமாகக் குறைபட்டுக் கொள்வதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஓர் ஊழியர் பெருமளவுக்குத் திறமை இழந்து விடும்போது, அவரை அதே கிரேடில் வைத்திருக்க தொழிற்சாலை உரிமையாளர் விரும்பமாட்டார். அந்நிலையில் அவர் பதவி இறக்கம் செய்யப்படுவது நியாயமே. பொறுப்பு குறையும்போது ஊதியமும் குறைவது இயல்பே. இதில் குறைகூறுவதற்கு எதுவுமில்லை.

            மசோதாவின் 5ஆவது ஷரத்தை எடுத்துக் கொள்வோம்; அது மிகவும் எளிமையானது. 8 ஆவது பிரிவின் 7ஆவது துணைப் பிரிவை அது திருத்துகிறது. தொழிற்சாலை உரிமையாளர் விதிக்கும் அபராதம் எப்போது வசூலிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியது இந்தப் பிரிவு. அபராதம் எப்போது முதல் செலுத்த வேண்டும் என்னும் பிரச்சினை இங்கு எழுகிறது. குற்றம் இழைக்கப்பட்ட நாளிலிருந்தா அல்லது தவறு நேர்ந்த விஷயம் தொழிற்சாலை உரிமையாளருக்குத் தெரியவந்த நாளிலிருந்தா? தவறு நேர்ந்த மறுகணமே அது தொழிற்சாலை உரிமையாளருக்குத் தெரிந்துவிடும் என்று எப்போதுமே எதிர்பார்க்க முடியாது. ஒரு தவறு நேர்ந்ததற்கு நீண்ட காலத்திற்குப் பிறகே அது தொழிற்சாலை உரிமையாளருக்குத் தெரிய வருவதுதான் அடிக்கடி நிகழ்கிறது. எனவே, அபராதம் நடைமுறைக்கு வரும் காலத்தை தவறு இழைக்கப்பட்ட நாளிலிருந்து அல்லாமல் அது தெரியவந்த நாளிலிருந்து நிர்ணயிப்பது அவசியமாகிறது; இந்த ஷரத்தைத் திருத்துவதில் நாங்கள் புதியதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்பதை அவைக்குச் சொல்ல விரும்புகிறேன். கால நிர்ணய விஷயத்தில் சட்டத்தில் பல விதிகள் இருப்பதையும் சில சந்தர்ப்பங்களில் செயல் புரியப்பட்ட நாளிலிருந்தும் வேறு சில சந்தர்ப்பங்களில் அந்த செயல் பற்றித் தெரியவந்த நாளிலிருந்தும் அது நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் அவையிலுள்ள வழக்கறிஞர் உறுப்பினர்கள் அறிவார்கள்.

            அடுத்து, 6ஆவது ஷரத்தைப் பொறுத்தவரையில் அது இந்தச் சட்டத்தின் 9 ஆவது பிரிவுக்குத் திருத்தம் கொண்டு வருகிறது. வேலைக்கு வராமலிருப்பவர்கள் விஷயத்தில் சம்பளப்பிடித்தங்கள் செய்வதற்கு பிரிவு 7(2)(பி) அனுமதிக்கிறது. ஆனால் ‘வேலைக்கு வராதிருத்தல்’ என்பதற்கான விளக்கம் துரதிர்ஷ்டவசமாக இந்தச் சட்டத்திலேயே இல்லை. இந்த ஷரத்து இக்குறைபாட்டை அகற்றுகிறது; ‘வேலைக்கு வராது இருத்தல்’ என்பதற்கு விளக்கம் தரப்படாத பிரிவு 9க்கு இது இரண்டாவது விளக்கம் ஒன்றைத் தருகிறது. ஷரத்து 7 பிரிவு 13ஐ திருத்துகிறது; அதுவும் பெயரளவிலேயே இருக்கிறது; அது அடிப்படையான ஷரத்து ஒன்றுமல்ல. மசோதாவின் 4 ஆவது ஷரத்தில் அடங்கியுள்ள புதிய பிடித்தங்களில் இரண்டு பிடித்தங்கள் விஷயத்தில் பிரிவு 13ஐ பயன்படுத்த இது வகை செய்கிறது. மாகாண அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு இணங்க பிடித்தங்கள் செய்வதை பிரிவு 13 அனுமதிக்கிறது என்பது மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்குத் தெரியும். புதிய திருத்தம் அனுமதிக்கும் புதிய பிடித்தங்களையும் இதே நிபந்தனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

            கடைசி ஷரத்து மேல்முறையீடு செய்யும் உரிமையை ஒழுங்குபடுத்தும் 17ஆவது பிரிவில் திருத்தம் செய்கிறது. இப்போதுள்ளபடி இந்தப் பிரிவு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு ஊழியருக்கு மேல்முறையீடு செய்யும் உரிமையை வழங்குகிறது; இந்தக் குறிப்பிட்ட சட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பிலுள்ள நிர்வாக அதிகாரியான கண்காணிப்பாளருக்கு இந்த உரிமையை அது அளிக்கவில்லை. அனைவரது நலன்களுக்காவும், குறிப்பாக ஊழியர்களின் நலன்களுக்காகவும் கண்காணிப்பாளருக்கும் மேல் முறையீடு செய்யும் உரிமை வழங்கப்படுவது அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது.

            ஐயா, இவைதாம் மசோதாவின் ஷரத்துகள். இவை சர்ச்சைக்கு இடமற்றவை என்று கருதுகிறேன். எனவே என் தீர்மானத்தை அவை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

            ஐயா, தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): தீர்மானம் முன்மொழியப்படுகிறது:

            “1936 ஆம் வருட ஊதிய வழங்கீடு சட்டத்தை மேலும் திருத்தும் இந்த மசோதா பின்வருவோர் அடங்கிய தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படுகிறது; சேத் யூசுப் அப்துல்லா ஹரூன், திரு.முகமது ஹூசேன் சௌதுரி, திரு.லால்சந்த் நாவல்ராய், திரு.ஏ.சி. இன்ஸ்கிப், சர் வித்தல் என்.சந்தவர்கர், திரு.என்.எம்.ஜோஷி, டாக்டர் சர் ரத்தன்ஜி தின்ஷா தலால், திரு.டி.எஸ்.ஜோஷி மற்றும் இம்மசோதாவை முன்மொழிபவர். குழுவின் எந்த ஒரு கூட்டமும் சட்டபூர்வமானதாகக் கருதப்படுவதற்கு அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாக இருப்பது அவசியம்.

*           *           *

            திரு.என்.எம்.ஜோஷி: ………………..ஐயா, மாண்புமிகு உறுப்பினர் வேறு சில திருத்தங்களையும் பிரரேபித்திருக்கிறார்; அவற்றில் ஒன்று வேலைக்கு வராமல் இருந்தால் சில பிடித்தங்களைப் பிடிப்பது சம்பந்தப்பட்டது.

            1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வேலைக்கு வராமலிருத்தல் என்பதற்கான விளக்கத்தை மட்டுமே நான் தந்துள்ளேன். பிடித்தங்கள் எதையும் நான் அனுமதிக்கவில்லை: அவை ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகின்றன.

(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, 16, நவம்பர் 1944, பக்கங்கள் 896.)

            திரு.என்.எம்.ஜோஷி: அதை நான் அறிவேன். மாண்புமிகு உறுப்பினர் மிகவும் சாமர்த்தியசாலி. வேலைக்கு வராமலிருத்தல் என்பதன் விளக்கத்தை அவர் மாற்றி விட்டார். இதன் விளைவாக சில பிடித்தங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பழைய சட்டம் வேலைக்கு வராமலிருப்பது சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பிடித்தங்களை அனுமதிக்கிறது. எவ்வளவு நேரம் இழக்கப்பட்டதோ அல்லது எவ்வளவு வேலை செய்யப்படவில்லையோ அந்த அளவுக்குத்தான் பிடித்தங்கள் இருந்தன. ஆனால் இப்போது கொண்டுவரப் பட்டிருக்கும் திருத்தம் ஏற்கப்படுமானால் தொழிற்சாலை உரிமையாளர் தொழிலாளர் மீது இரட்டை அபராதம் விதிப்பது சாத்தியமாகக் கூடும் என்று அஞ்சுகிறேன்.

            1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நீங்கள் கூறுவது சரியல்ல.

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, 16, நவம்பர் 1944, பக்கங்கள் 896.)

            திரு.என்.எம்.ஜோஷி: நல்லது. இது குறித்து உரிய சமயத்தில் விவாதிப்போம். இப்போது பின்வருமாறுதான் நடைபெறும்: ஓர் ஊழியர் ஒரு மணிநேரம் வேலைக்கு வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அந்த ஒரு மணிநேரம் அவன் வேலை செய்யவில்லை. எனவே, அவன் செய்த வேலைக்கு ஏற்ப கூலி தரப்படும்போது அவனது ஊதியம் நேரக்கணக்கில் அல்லாமல் வேலையின் அளவுக்குத்தான் தரப்படும். இவ்வாறு அவன் குறைந்த ஊதியம் பெறுவது மட்டுமல்ல, இந்தத் திருத்தம் செய்யப்படும்போது அவனது ஊதியங்கள் மேலும் குறையும்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இல்லை, இல்லை.

*           *           *

            2மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: திரு.துணைத் தலைவர் அவர்களே, விவாதத்தை மேலும் நீடிக்க விடாமல் குறுக்க உதவுமானால் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

*           *           *

(3.மேற்படி பக்கம் 902)

            3மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, ஏற்கெனவே நான் குறிப்பிட்டது போல், என் நண்பர் திரு.ஜோஷி முன்மொழிந்த திருத்தத்தை ஏற்கத் தயாராக இருக்கிறேன். இத்தகைய நிலைமையில் நான் எத்தகைய உரையும் நிகழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் மசோதாவை சுற்றுக்கு விடுவதற்கு வலுவான அடிப்படை இருப்பதாக நான் கருதவில்லை என்பதுதான். நான் சற்று முன்னர் கூறியது போன்று நான் முன்வைத்துள்ள திருத்தங்கள் யாவும் நிர்வாகம் சம்பந்தப்பட்டவை; அதாவது சட்டத்தைச் செயல்படுத்துவதில் எதிர்ப்படும் குறைபாடுகளை, சிக்கல்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டவை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தெரிவுக்குழுவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் புரிவுணர்வுக்கு அப்பாற்பட்ட எதையும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்களில் நான் காணவில்லை. மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் திரு.ஜோஷி தம்முடைய திறமையில் போதிய நம்பிக்கை வைக்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது. மசோதாவைச் சுற்றுக்கு விடும்படி என்னிடம் கூறுகிறார்கள்; சரி, அப்படியே மசோதாவை நான் சுற்றுக்கு விட்டால், தங்கள் தரப்பில் வாதாடுவதற்கு திரு.ஜோஷியையும் மதிப்பிற்குரிய என் நண்பர் திரு.லால்சந்த் நாவல்ராயையும் தவிர தொழிலாளர் வர்க்கத்தினர் வேறு எவர் உதவியை நாடுவார்கள். இவர்கள் இருவரது பிரதிநிதித்துவத் தன்மையைக் கருதியும், இவர்களது ஆழ்ந்த அனுபவத்தையும் அறிவாற்றலையும் மனத்திற் கொண்டும் அவர்களைத் தெரிவுக் குழுவில் சேர்ப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனினும் சர்ச்சைக்கு இடமற்றவை என்று நான் கருதும் விஷயங்களைக் கையாள்வதில் தங்களுக்குள்ள திறமையில் அவர்களுக்கு நம்பிக்கை உணர்வு இல்லை என்றால், இந்தத் திருத்தத்தைச் சுற்றுக்குவிட நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): ஆக இப்போது:

            “1945 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள்ளாக பொதுமக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்காக மசோதா சுற்றுக்குவிடப்படுகிறது”.

            தீர்மானம் ஏற்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109)

         ambedhkar 400 “நாட்டின் நீர்வள ஆதாரங்கள் விஷயத்தில் தற்போது நிலவும் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பிரதிகூலங்களையும் இந்திய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. இந்த வள ஆதாரங்களை அனைவரது நலன்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கொள்கையை, இந்த வளங்களை ஏனைய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறேன் என்னும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கையை உருவாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அது விரும்புகிறது.” தாமோதரப் பள்ளத்தாக்கை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராயும் பொருட்டு ஜனவரி 3ஆம் தேதி கல்கத்தாவில் வங்காள மாகாண தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினரான மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தையும் மற்றும் வங்காள, பீகார் அரசாங்கங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கு கொண்டனர்.

            டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரையின் முழுவிவரம் வருமாறு:

            இவ்வாறு குறுகிய காலத்தில், எத்தனையோ சிரமங்களுக்கு இடையே இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு இணங்கியமைக்காக மத்திய அரசாங்கத்தின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 1944ஆம் ஆண்டில் வங்க அரசாங்கம் நியமித்த தாமோதர் நதி வெள்ளப்பெருக்கு விசாரணைக் குழு தெரிவித்துள்ள யோசனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கான விதிமுறைகளைப் பரிசீலிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். மேற்கொண்டு பேசுவதற்கு முன்னதாக, இந்தக் குழுவை நியமித்தமைக்காக வங்க அரசாங்கத்தைப் பாராட்டுவதே முறையாகும். இவ்வாறே, தாமோதர் நதியின் வெள்ளப் பெருக்குப் பிரச்சினை குறித்தும், பொதுவாக நாட்டின் நீர்வள ஆதாரங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது குறித்தும் மிக ஆழமான, ஆக்கபூர்வமான கருத்துகளைத் தெரிவித்துள்ளமைக்காக இந்தக் குழுவை பாராட்டுவதும் என் கடமையாகும்.

குழுவின் பரிந்துரைகள்

          குழு தெரிவித்த பரிந்துரைகளில் இரண்டை இங்கு முக்கியமாகக் குறிப்பிட விரும்புகிறேன்: VIII மற்றும் XIII ஆவது பரிந்துரைகள்தாம் அவை. XIII ஆவது பரிந்துரையில் குழு பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறது:

            “இந்தியாவின் வனங்களும் நதிகளும் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பின்கீழ் கொண்டுவரப்பட்டால், வெள்ளக்கட்டுப்பாடு, மண் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனுகூலமாக இருக்கும் என்று விவாதங்களின் போது குழு உணர்ந்தது.”

            தாமோதர் நதி அணைக்கட்டுத் திட்டத்தின் நோக்கம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதாக மட்டுமன்றி, மின்விசை உற்பத்திக்கும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்குவதற்கும் வகைசெய்வதாகவும் இருக்க வேண்டுமென்று குழு தனது VIII ஆவது பரிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்துகளைப் பயன்படுத்திக் கொள்வதில் பின்பற்றப்பட்டு வரும் இப்போதைய கொள்கையை அறிந்தவர்கள் இந்தப் பரிந்துரைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். நீர் வழிப்போக்குவரத்துகளைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் ஓர் ஆக்கபூர்வமான கொள்கை இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். இரண்டாவதாக, நீர் வழிப் போக்குவரத்து சம்பந்தமான நமது கொள்கை பன்னோக்குக் கொண்டதாக இருக்க வேண்டும். பாசன வசதி, மின்விசை உற்பத்தி, போக்குவரத்து முதலியவற்றுக்கும் அதில் வழிவகை செய்ய வேண்டும் என்ற உணர்வு போதிய அளவில் இல்லை.

ரயில்வேயும் நீர்வழிப் போக்குவரத்தும்

            நீர்வளம் சம்பந்தப்பட்ட நமது கொள்கை பாசன வசதி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருந்து வருகிறது. தவிரவும், ரயில் போக்குவரத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கும் இடையே வேறுபாடு எதுவும் இல்லை என்ற உண்மையை நாம் தகுந்த முறையில் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிட்டோம். ரயில்வேக்களுக்கு மாகாண எல்லைகள் ஏதும் இல்லையென்கிற போது ஆறுகளுக்கும் அதேபோல் மாகாண எல்லைகள் எவையும் இருப்பதற்கில்லை; ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு பாய்ந்து செல்லும் ஆறுகளுக்கு முக்கியமாக இது பொருந்தும். இதற்கு மாறாக, ரயில்வேக்களுக்கும் நீர்வழிப் போக்குவரத்துகளுக்கும் இடையே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வேறுபாடு இடம் பெற அனுமதித்து விட்டோம்; இதன் விளைவாக ரயில்வேக்கள் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டவையாகவும், ஆறுகள் மாகாண அரசாங்கங்களின் அதிகாரவரம்புக்கு உட்பட்டவையாகவும் ஆக்கப்பட்டுவிட்டன.

            இந்தத் தவறால் ஏற்பட்ட பிரதிகூலங்கள், பாதகங்கள் அநேகம்; அவை கண்கூடானவை. இதற்கு இங்கு ஓர் உதாரணம் கூறுவோம்: ஒரு குறிப்பிட்ட மாகாணத்துக்கு மின்விசை தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்; அப்போது இதன் பொருட்டு அந்த மாகாணம் தனது நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது; ஆனால் இதனை அது செய்ய முடியாது; ஏனென்றால் மின்விசை உற்பத்தி செய்வதற்கு அணைகட்ட வேண்டிய இடம் மற்றொரு மாகாணத்தில் அமைந்திருக்கிறது; அந்த மாகாணமோ வேளாண்மையைப் பெரிதும் சார்ந்திருக்கும் மாகாணம்; அதற்கு மின்விசை தேவையில்லை; அதில் அதற்கு அக்கறையும் ஆர்வமும் இல்லை; மேலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதனிடம் போதிய பண வசதியும் இல்லை; எனவே, அணை கட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ள மாகாணத்தை அவ்வாறு செய்ய அது அனுமதிக்காது. இது குறித்து நாம் என்ன புகார் செய்தாலும் சம்பந்தப்பட்ட அந்த மாகாணம் அதைப் பொருட்படுத்தாது; மாகாண சுயாட்சி என்ற பெயரால் இத்தகைய நேசமற்ற போக்கை அது நியாயப்படுத்தவும் கூடும்.

நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

          இரண்டு நோக்கங்களை மனத்திற் வைத்தே இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறேன். முதலாவதாக, நான் தெரிவித்த விவரங்களின் பகைப்புலனில், வங்க அரசாங்கம் நியமித்த தாமோதர் நதி வெள்ளப் பெருக்கு விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நீங்கள் நன்கு மதிப்பிட முடியும்; இந்தப் பரிந்துரைகள் பற்றி நான் முக்கியமாகக் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இரண்டாவதாக, இப்போதைய சூழ்நிலைகளால் தோன்றியுள்ள பிரதிகூலங்களை மத்திய அரசாங்கம் பெரிதும் உணர்ந்துள்ளது என்பதையும் நாட்டின் நீர்வளங்களை அனைவருக்கும் மிகவும் நலமளிக்கும் முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கொள்கையை, மற்ற நாடுகளில் நீர்வளங்கள் எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனவோ அதே நோக்கங்களுக்காக நாமும் நமது நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கொள்கையை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் விரும்புகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

            ரயில்வேக்கள் விஷயத்தில் நாம் எத்தகைய நடைமுறையைக் கைக்கொள்கிறோமோ அதே நடைமுறையை நீர்வழிப் போக்குவரத்து விஷயத்திலும் பின்பற்றக்கூடிய விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒரு மாற்றமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் இத்தகைய அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய அரசாங்கம் கருதுகிறது. அதேபோல், நீர்வளங்களைப் பயன்படுத்தும் ஒரு கூட்டுத் திட்டத்தில் ஒத்துழைக்க மாகாணங்கள் ஆர்வம் காட்டுமேயானால், அரசியலமைப்புச் சட்டம் இது விஷயத்தில் எவ்வகையிலும் குறுக்கிடாது என்றும் அரசாங்கம் நினைக்கிறது.

            அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்டுவரும் டென்னஸ்ஸி பள்ளத்தாக்குத் திட்டத்தை இந்திய அரசாங்கம் பெரிதும் மனத்திற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை அது நன்கு ஆராய்ந்து வருகிறது; இது விஷயத்தில் ஒத்துழைக்க மாகாணங்கள் முன்வருமானால், அவற்றின் முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும் செழுமைக்கும் குறுக்கே நிற்கும் மாகாணத் தடைகளை அகற்ற அவை இணங்குமானால், டென்னஸ்ஸி திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிலும் ஏதேனும் செய்ய முடியும் என்று அது நம்புகிறது. நாட்டின் நீர்வளங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் திசைவழியில் ஒரு பூர்வாங்க நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் ஒரு மத்திய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது – மத்திய தொழில்நுட்ப மின்விசை வாரியம் என்பது இந்த அமைப்பின் பெயர். இதே போன்று, மத்திய நீர்வழிப் போக்குவரத்து மற்றும் பாசன வசதி ஆணையம் என்ற மற்றொரு மத்திய அமைப்பை உருவாக்கவும் நாங்கள் யோசித்து வருகிறோம்.

            நீர்வளங்களை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும், பாசன வசதி தவிர இதர பல காரியங்களுக்கும் ஒரு திட்டத்தை எவ்விதம் செயல்படுத்த முடியும் என்பது குறித்து மாகாணங்களுக்கு ஆலோசனை கூறுவதே இந்த இரண்டு அமைப்புகளையும் தோற்றுவித்ததன் நோக்கமாகும். மத்திய பயனோக்கு வாரியம் அல்லது விசேட விசாரணை ஆணையங்கள் போன்ற இதர பல அமைப்புகளை உருவாக்குவதும் அவசியமாகலாம். மத்திய மின்விசை வாரியம், மத்திய நீர்வழிப் போக்குவரத்து மற்றும் பாசன வசதி ஆணையம் ஆகியவற்றின் நியமனம் இத்தகைய அமைப்புகளை உருவாக்குவதை அவசியமற்றதாக்கி விடவில்லை.

            தாமோதர நதித் திட்டம் இந்தத் திசைவழியில் மேற்கொள்ளப்பட்ட முதல் திட்டமாகும். இது பல-நோக்குத் திட்டமாக இருக்கும். தாமோதர நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி பெரும் சேதம் விளைவிப்பதைத் தடுப்பது மட்டுமே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்காது; பாசன வசதி, நீர்வழிப் போக்குவரத்து, மின்விசை உற்பத்தி ஆகியவையும் இதன் குறிக்கோளாக இருக்கும்.

            இத்திட்டத்தைச் செயல்படுத்தி நிர்வகிக்கும் அமைப்பு ஏறத்தாழ டென்னஸ்ஸிப் பள்ளத்தாக்குத் திட்ட நிர்வாக அமைப்பை ஒத்ததாக இருக்கும். இது ஒரு கூட்டுறவு அமைப்பாக இருக்கும். மத்திய அரசாங்கமும் பீகார், வங்க மாகாண அரசாங்கங்களும் இதில் பங்குதாரர்களாக இருந்துவரும். இத்திட்டத்துக்கு வடிவமும் கட்டமைப்பும் உயிர்த்துடிப்பும் அளிக்க இந்திய அரசாங்கம் மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறது; இவ்வாறு செய்வதில் எத்தகைய தாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் உறுதி கொண்டிருக்கிறது.

புதிய நீர்வளக் கொள்கை

            சில பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலொழிய இது விஷயத்தில் மேற்கொண்டு முன்னேற முடியாது என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்துள்ளது. இத்தகைய பூர்வாங்க நடவடிக்கைகளில் ஒன்று அணை கட்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதாகும். வங்காளத்தின் விருப்பப்படி இதனைச் செய்ய முடியாது என்பது தெளிவு. அதேபோல், பீகாரின் விருப்பத்தை வைத்து மட்டும் இதனைத் தீர்மானிக்க இயலாது. ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இவ்விரு மாகாணங்களுமே உடன்பாடு கண்டால் கூட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல் இதனை முடிவு செய்ய முடியாது. இது விஷயத்தில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டிய வேறு பல அம்சங்களும் இருக்கின்றன. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் தாமோதர் நதித் திட்டம் ஒரு பல-நோக்குத் திட்டமாக இருப்பது அவசியம். வெள்ளப் பெருக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவது மட்டுமே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது. பாசன வசதி, மின்விசை உற்பத்தி, நீர்வழிப்போக்குவரத்து போன்றவற்றையும் உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைந்திருக்க வேண்டும். அணை கட்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சினையுடன் கூட இவற்றையும் பரிசீலிப்பது முக்கியம்.

            இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். எல்லாத் தன்னலக் கருத்துகளையும் மூட்டைக்கட்டி ஒதுக்கிவைத்துவிட்டு, சரியான, நேர்மையான, நியாயமான உணர்வால் நாம் வழி நடத்தப்பட வேண்டும்; ஒன்றுபட்டு சிறந்த தீர்வு காணுவோம் என்ற உறுதிப்பாட்டோடு, தீர்மானத்தோடு முன்னேற வேண்டும்; நமது நீர் வளங்கள் சம்பந்தமாக ஒரு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும்; கொத்தியெடுக்கும் கொடிய வறுமையில் வாடும் இந்த நாட்டின் கோடானுகோடி மக்கள் வாழ்வும் வளமும் பெறும் ஒரு சுபிட்ச சூழ்நிலையைத் தோற்றுவிக்க நாம் உறுதி பூண வேண்டும். இதுவே எனது ஆசையாகும்.

மாநாட்டு விவாதங்கள்

          தாமோதர நதியைப் பாசனத்துக்கும், மின்விசைமயமாக்கத்துக்கும், நீர்வழிப்போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் குறிக்கோள் கொண்ட பல – நோக்குத் திட்டமான தாமோதர நதிப் பள்ளத்தாக்குத் திட்டம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமை வகித்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

            இத்திட்டம் குறித்து அவசியமான தகவல் சேகரிக்கும் நடைமுறை சம்பந்தமாக மத்திய அரசாங்கம் சுற்றுக்கு விட்ட ஒரு குறிப்பு இந்த விவாதத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

            மூன்று அரசாங்கங்களும் தத்தமக்குக் கிடைத்த தகவல்களும் புள்ளிவிவரங்களும் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கத்தின் நிபுணர்களைக் கலந்தாலோசித்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இந்தப் பட்டியலில் தேவையான விவரங்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்றால், மேற்கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதன் பேரில் மத்திய அரசாங்கத்தின் தொழில் நுட்ப நிபுணர்கள் ஒரு பூர்வாங்க அறிக்கையைத் தயாரிப்பாளர்கள்; தாமோதர நதிப் பள்ளத்தாக்கை பல வழிகளிலும் அபிவிருத்தி செய்யும், மேம்படுத்தும் ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு வசதிகளை அதில் அவர்கள் கோடிட்டுக் காட்டுவார்கள். பின்னர் இத்தகைய திட்டத்தைத் தயாரிக்கும்படி மத்திய அரசாங்கத்தையும் மாகாண அரசாங்கங்களையும் சேர்ந்த நிபுணர்களை மூன்று அரசாங்கங்களும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

பொது உடன்பாடு

            தாமோதர நதிப் பள்ளத்தாக்குத் திட்டத்தை ஒரு பல-நோக்குத் திட்டமாகத் தயாரிக்கும் விஷயத்தில் பொது உடன்பாடு நிலவிய போதிலும், தாமோதர நதி வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் பிரச்சினையில் பிரதான கவனம் செலுத்த வேண்டும் என்று வங்காளப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மத்திய அரசாங்கம் செய்துள்ள பரிந்துரைகள் வலியுறுத்தினர். மத்திய அரசாங்கம் செய்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், வங்க அரசாங்கத்தின் பாசனத்துறை பொறியாளரான திரு.மான் சிங் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிது விவாதத்திற்குப் பிறகு ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் திரு.மான் சிங்குக்கு உதவ மத்திய அரசாங்கமும் பீகார் அரசாங்கமும் அதிகாரிகளை அனுப்பி உதவ வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பீகார் பாசனத்துறை துணைப் பிரதம பொறியாளரான திரு.ஏ.கரீம் மான்சிங்குடன் அடிக்கடி தொடர்பு கொள்வார்.

            இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் திரு.எச்.சி.பிரியோர் கூட்ட ஆரம்பத்தில் பேசும்போது, நீர்வளப் பிரச்சினைகளின் நிர்வாக அம்சம் பற்றிக் குறிப்பிட்டார்; மத்திய அரசாங்கம் தனது பங்குக்கு ஆற்றக் கூடிய பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

*           *           *

            மாநாட்டின் பங்கு கொண்டவர்களில் பின்வருபவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்: வங்க அரசாங்கத்தின் தகவல் போக்குவரத்து மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. பி.பி.பெய்னே, இதே துறையின் செயலாளர் திரு.பி.சர்க்கார் ஐ.சி.எஸ்., திரு.பி.எல்.சபர்வால், வங்கத்தின் பிரதம பொறியாளர், திரு.ஜே.எஃப்.ரஸ்ஸல், விசேட பொறியாளர் (பாசனத்துறை) திரு.மான் சிங்., நதிகள் ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் திரு.என்.கே.போஸ், யுத்தப் பிற்காலப் புனரமைப்புக் குழுவின் செயலாளர் திரு.என்.தார், வளர்ச்சித் துறை ஆணையர் திரு.எச்.எம்.இஷாக், பாசனத்துறை துணைப் பொறியாளர் திரு.ஏ.கரீம், மத்திய தொழில்நுட்ப மின்விசை வாரியத்தின் தலைவர் திரு.எச்.எம்.மாத்யூஸ், இவ்வாரியத்தின் நீர்மின் விசைத்துறை உறுப்பினரான திரு.டபிள்யூ.எல்.ஊர்தின், மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான திரு.டி.எல்.மஜூம்தார்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, நவம்பர் 1, 1944, பக்கங்கள் 89-91.

2.பத்திகளுக்குத் தரப்பட்டுள்ள தலைப்புகள் இந்தியத் தகவல் ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டவை, நவம்பர் 15, 1944, பக்கங்கள் 600-01)

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்(தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):ஐயா, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்:

           ambedkar 292 “1934 ஆம் வருட தொழிற்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்தும் (இரண்டாவது திருத்தம்) இந்த மசோதா பின்வருவோர் அடங்கிய பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படுகிறது: நவாப் சித்திக்கு அலிகான், கான் பகதூர் ஷேக் பஸில்-இ-ஹக் பிராசா, திரு.ஆர்.ஆர்.குப்தா, திரு.ஏ.சி.இன்ஸ்கிப், சர் வித்தல் என்.சந்தவர்கர், ராவ் பகதூர் என்.சிவராஜ், திரு.என்.எம்.ஜோஷி, திரு.டி.எஸ்.ஜோஷி மற்றும் இம்மசோதாவை முன்மொழிபவர். குழுவின் எந்த ஒரு கூட்டமும் சட்டபூர்வமானதாகக் கருதப்படுவதற்கு அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருப்பது அவசியம்.”

            இந்த மசோதாவின் ஷரத்துகள் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு மசோதாவின் ஷரத்துகளை இரு பகுதிகளாகப் பிரித்து சபைக்கு விளக்கினால் உசிதமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

            மசோதாவின் முதல் பகுதி கட்டாய விடுமுறைகளுக்குப் பதிலாக இழப்பீட்டு விடுமுறைகளை அளிப்பது சம்பந்தப்பட்டதாகும். தொழிற்சாலைகள் சட்டம் 35ஆவது பிரிவின்படி தொழிற்சாலையிலுள்ள ஒவ்வொரு வயது வந்த தொழிலாளிக்கும் ஒரு கட்டாய விடுமுறை அளிக்க தொழிற்சாலையின் உரிமையாளர் அல்லது நிர்வாகி கடமைப்பட்டுள்ளார் என்பது உறுப்பினர்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரியும். 35ஆவது பிரிவில் அடங்கியுள்ள இந்த விதி 43, 44 ஆவது பிரிவுகளில் அடங்கியுள்ள விதிகளுக்கு உட்பட்டதாகும். 35ஆவது பிரிவு விதித்துள்ள கடமைப் பொறுப்புகளிலிருந்து தொழிற்சாலையின் உரிமையாளர் அல்லது நிர்வாகிக்கு தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளர் விதிவிலக்கு அளிக்க 43, 44 ஆவது பிரிவுகள் வழிவகை செய்கின்றன. ஆனால் இத்தகைய விதிவிலக்குகள் அளிக்கப்படும்போது, அதே எண்ணிக்கையுள்ள இழப்பீட்டு விடுமுறைகளைக் கொண்டு அவை சமன் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. மேலும், தொழிலாளியின் ஆரோக்கியத்தையும் வேலை செய்யும் ஆற்றலையும் பராமரிப்பதற்கு சட்டம் நிர்ணயித்துத் தந்துள்ள விடுமுறை நாட்களை அவன் பெறுவது அவசியம். இப்போதைய சட்டம் இழிப்பீட்டு விடுமுறைகளுக்கு வழிவகை ஏதும் செய்யவில்லை. எனவே, இந்தக் குறைபாட்டை அகற்றும் பொருட்டு மசோதாவில் 2ஆவது ஷரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 35ஆவது பிரிவின் கீழ் விதிவிலக்குகள் அளிக்கப்படும்போதெல்லாம் தொழிலாளர்களுக்கு அவற்றுக்கு இணையான எண்ணிக்கையில் இழப்பீட்டு விடுமுறைகள் வழங்க மாகாண அரசாங்கங்கள் விதிமுறைகளை வகுத்தளிக்க வேண்டும். இதுதான் மசோதாவிலுள்ள ஷரத்துக்களின் முதல் பகுதியின் சாராம்சமாகும்.

பொது இணக்க ஒப்பந்தம்

          மசோதாவின் இரண்டாவது பகுதியை எடுத்துக் கொண்டால், அது சம்பளத்துடன் விடுமுறைகள் அளிக்கும் பிரச்சினையைக் கையாள்கிறது. மசோதாவின் இந்தப் பகுதியினது தோற்றுவாயைப் பற்றி இங்கு முதலில் கூறுவது உசிதமானதாக இருக்கும். சம்பளத்துடன் விடுமுறைகள் அளிப்பது சம்பந்தமான ஒரு பொது இணக்க ஒப்பந்தம் பற்றிய தீர்மானத்தை 1936ல் சர்வதேச தொழிலாளர் மாநாடு இயற்றியது இந்த அவையைச் சேர்ந்த பல உறுப்பினர்களுக்கு நினைவிருக்கும். அந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கு கொண்ட இந்திய அரசாங்கம் இந்தப்பொது இணக்க ஒப்பந்தத்தை ஏற்பதற்கும் அதனை உறுதிசெய்வதற்கும் தயாராக இல்லை. இந்தப் பொது இணக்க ஒப்பந்தத்தை ஏற்கக்கூடாது என்ற கூறும் ஒரு தீர்மானத்தை 1937 ஜூலை 26ஆம் தேதி சட்டமன்றத்தில் அரசாங்கம் கொண்டு வந்தது. தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஊர்ஜிதம் செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லாத போதிலும், தீர்மானத்தைக் கொண்டு வந்த உறுப்பினர் ஒரு விஷயத்தைக் கூறினார்; அதாவது, இந்த ஒப்பந்த விஷயத்தில் எந்த அளவுக்கு பொதுவான உடன்பாடு நிலவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு மாகாண அரசாங்கங்களையும், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, இந்த ஒப்பந்தத்தை முழுமையாக அல்லாவிட்டாலும் அதன் ஒரு பகுதியையாவது செயல்படுத்தும் சாத்தியக்கூறுகள் பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் தெரிவித்தார். இத்தகைய பரிசீலனையின் விளைவாகவும், இது சம்பந்தமாக பல ஆண்டுகாலம் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் விளைவாகவுமே சம்பளத்துடன் விடுமுறைகள் அளிப்பதற்கு வகை செய்யும் ஷரத்துகள் அடங்கிய இந்த இரண்டாவது பகுதி உருவாயிற்று எனலாம்.

 

ஆண்டு முழுவதும் பணி தொடரும் தொழிற்சாலைகள்

            இனி மசோதா முழுவதையும் எடுத்துக் கொண்டால், அது தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டது என்பது தெரியவரும்; ஆனால் இம்மசோதா எல்லாத் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும். 1936ல் சர்வதேச மாநாட்டில் ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்துகளுடன் ஒப்பிடும்போது இந்த மசோதாவின் குறியிலக்கு ஒரு வரையறைக்குட்பட்டதே ஆகும். ஏனைய ஷரத்துகளைப் பொறுத்தவரையில், நான் சொல்ல வேண்டியதை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கூறுவதே உசிதமாக இருக்கும் என்று கருதுகிறேன்; அப்போதுதான் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் சம்பந்தமான சட்டங்கள் குறித்த பின்கண்ட நான்கு விஷயங்களைத் தனித்தனியாகக் கையாள்வது சாத்தியமாகும்.

            1.விடுமுறையின் கால அளவு. (2) விடுமுறை பெறுவதற்கான தகுதிகள். (3) வரையறுக்கும் நிபந்தனைகள். (4) விடுமுறைகாலச் சம்பளம் முதல் விஷயத்தை அதாவது விடுமுறையின் கால அளவைப் பொறுத்தவரையில் 49-பி என்னும் புதிய பிரிவில் இது கையாளப்பட்டிருக்கிறது; தொழிற்சாலைகள் சட்டத்தில் இந்தப் புதிய பிரிவை சேர்க்க வேண்டும் என்று இந்த மசோதா பிரரேபித்துள்ளது. இந்தப் பிரிவின்படி, தொடர்ந்து ஓராண்டுக் காலம் பணிபுரியும் ஒரு தொழிலாளிக்கு மொத்தம் தொடர்ச்சியாக ஏழு நாள் விடுமுறை கிடைக்கும். நாம் ஏன் ஏழு நாட்கள் என்று நிர்ணயித்திருக்கிறோம், அதற்கு அதிகமாக ஏன் நிர்ணயிக்கக் கூடாது என்று கேட்கக்கூடும். 1936 ஆம் வருட ஜெனீவா ஒப்பந்தம் விடுமுறை நாட்களில் எண்ணிக்கையை ஆறு என்று நிர்ணயித்திருக்கிறது; இந்த ஒப்பந்தத்தைப் பின்பற்றியே நாம் ஏழு நாட்கள் என்று நிர்ணயித்திருக்கிறோம். ஜெனீவா ஒப்பந்தம் கூறும் ஆறு நாட்களுடன் தொழிற்சாலைகள் சட்டத்தின் 35ஆவது பிரிவின்படி வழங்கப்படும் கட்டாய வார ஓய்வு நாளையும் சேர்த்து ஏழு நாட்கள் என்று நாம் நிர்ணயித்திருக்கிறோம்.

            ஏழு நாட்கள் விடுமுறை கோருவதற்கு ஒரு தொழிலாளி எப்போது தகுதி பெறுவார் என்ற விஷயம் சம்பந்தமாக மசோதாவில் பின்கண்ட ஷரத்துகள் அடங்கியுள்ளன. உண்மையில் அதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் விதிக்கப்பட்டுள்ளது; அதாவது ஒரு தொழிலாளி தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதைத்தவிர இது விஷயத்தில் வேறு நிபந்தனை ஏதும் இல்லை. தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் பணியாற்ற வேண்டும் என்றால் என்ன என்பதைப் பொறுத்தவரையில், சில இடையீடுகளை மசோதா அனுமதிப்பதோடு, இந்த இடையீடுகளைக் காரணம் காட்டி சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளைப் பெறும் உரிமையை மறுக்கலாகாது என்றும் கூறுகிறது நோய்வாய்ப்படுதல், விபத்துக்குள்ளாதல், அங்கீகரிக்கப்பட்ட விடுப்பு, கதவடைப்புக் காலம், சட்டரீதியான வேலை நிறுத்தக் காலம் முதலியவற்றை இடையீடுகள் பட்டியலில் மசோதா சேர்த்துள்ளது.

வேலையின்றி இருத்தல்

          இதே விஷயம் குறித்த மசோதாவில் மற்றொரு ஷரத்தும் இருக்கிறது தொழிற்சாலை உரிமையாளரின் விருப்பம் காரணமாக தொழிற்சாலை மூடப்படும்போது தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கும் பிரச்சினையே அது. இவ்வாறு தொழிற்சாலை மூடப்பட்டிருக்கும் காலத்தை 30 நாட்கள் என்று நிர்ணயித்திருக்கிறோம். தொழிற்சாலை நிர்வாகியின் நடவடிக்கை காரணமாக தொழிலாளர்கள் வேலையில்லாதிருக்கும் காலம் 30 நாட்களுக்கு மேல் செல்லவில்லை என்றால், தொழிலாளர்கள் சம்பளத்துடன் விடுமுறை பெறும் உரிமை பாதிக்கப்படாது. 30 நாட்கள் மட்டும் என்று நிர்ணயித்திருப்பது ஏன் என்று கூறுவது அவசியம். இதற்கான விளக்கம் இதுதான். சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்னும்போது அவ்வாறு சம்பளம் கொடுக்கும் ஆற்றல் தொழிற்சாலையின் நிர்வாகிக்கு அல்லது உரிமையாளருக்கு இருக்கிறதா என்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியமாகிறது. தொழிற்சாலையின் நிர்வாகி அல்லது உரிமையாளர் தனது ஆலையை 30 நாட்களுக்கும் அதிகமாக மூட வேண்டியிருந்தால், அப்போது அவர் நிலைமை உண்மையில் செழிப்புமிக்கதாக இருக்காததால் அவரால் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளுக்கு ஆகும் செலவை ஏற்கும் நிலையில் இருக்கமாட்டார் என்ற நியாயமான ஊகத்தை மசோதா கருத்திற் கொள்கிறது. ஆனால் தொழிற்சாலை மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை செய்ய இயலாதிருக்கும் நாட்கள் 30க்கும் அதிகமாக இல்லை என்றால், அப்போது தொழிற்சாலையின் நிர்வாகி அல்லது உரிமையாளர் சம்பளத்துடன் விடுமுறை அளிப்பதற்கு ஆகும் செலவை ஏற்கக்கூடிய நிலையில் இருப்பார் என்று கருதப்படுகிறது. இதனால் அவர் அந்த செலவை ஏற்பதும் நியாயம் என்றாகிறது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை சம்பந்தமாக மசோதா ஒரு நிபந்தனையையும் விதிக்கிறது; இந்த விடுமுறைகளை ஒரு தொழிலாளி எத்தனை நாள் சேர்த்து வைக்கலாம் என்பது குறித்ததே இந்த நிபந்தனை. சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் பெறுவதற்குத் தகுதி பெற்ற ஒரு தொழிலாளி இரண்டு வருட காலத்துக்கு அந்த விடுமுறைகளைச் சேர்த்து வைக்கலாம் அதாவது மொத்தம் 14 நாட்கள் சேர்த்து வைக்கலாம்.

விடுமுறை காலத்துக்கு ஊதியம்

          விடுமுறை காலத்துக்கு ஊதியம் அளிக்கும் விஷயத்தைப் பொறுத்தவரையில் இது சம்பந்தமாக பல விஷயங்களை அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். முதலாவதாக, மொத்த விடுமுறைக்காலம் ஏழு என்றாலும் ஆறு நாட்களே சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, 35ஆவது பிரிவின்படி ஏழாவது நாள் உண்மையில் வார ஓய்வு நாளாகும். இந்த ஏழாவது நாளைப் பொறுத்தவரையில் இதற்கு தொழிற்சாலை உரிமையாளர் சம்ளம் அளிக்க வேண்டும் என்று மசோதா கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அதே சமயம் இவ்வாறு சம்பளம் கோருவதற்குத் தொழிலாளிக்குள்ள உரிமையை மசோதா மறுக்கவில்லை; எனினும் தொழிற்சாலை உரிமையாளருடன் தொழிலாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஏழாவது ஓய்வு நாளுக்கும் சம்பளம் தர இரு தரப்பாரும் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்; இதற்கு இது ஒரு முக்கிய நிபந்தனை. இவ்விதம் இந்த விஷயம் பணி ஒப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

            இந்த ஆறு விடுமுறை நாட்களுக்கும் ஊதியம் அளிப்பது குறித்த மூன்றாவதொரு விஷயமும் இருக்கிறது. இது சம்பந்தமாக ஏற்கத்தக்க, நியாயமான ஒரு விதியை மசோதாவில் சேர்த்திருக்கிறோம். அந்த விதி இதுதான்; முந்திய மூன்று மாதங்களில் மிகை நேர ஊதியம் தவிர்த்து, ஒரு தொழிலாளி சராசரியாக பெற்ற ஊதியத்துக்கு இணையான தொகையை அவனுக்கு வழங்க வேண்டும். இது நேர்மையான கோட்பாடு என்றே கருதுகிறேன். ஒரு தொழிலாளி விடுமுறையில் செல்லும்போது அவனுக்கு ஓரளவு பண வசதி செய்து தரும் பொருட்டு, அவனுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தில் பாதியை விடுமுறை தொடங்கும்போதே வழங்குவதற்கு மசோதா ஏற்பாடு செய்கிறது.

            இது சம்பந்தப்பட்ட மற்றொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த மசோதா அதன் செயற்பாட்டிலிருந்து சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு விதிவிலக்கு அளிக்க உத்தேசித்திருக்கிறது; மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதற்குப் பெருமளவுக்கு ஒத்துள்ள விதத்தில் சம்பளத்துடன் விடுமுறைகள் அளிப்பவையும், அவற்றின் நடத்தை பற்றி மாகாண அரசாங்கங்களின் நற்சான்றைப் பெற்றிருப்பவையுமான தொழிற்சாலைகளை இவ்வகையில் குறிப்பிடலாம். சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே சலுகைகள் வழங்கப்படுவதற்கு தொழிலதிபர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே அவர்களது விருப்பார்வ அடிப்படையில் ஒரு சுமுகமான ஏற்பாடு செய்துகொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்திய சட்டம் தலையிட வேண்டியதில்லை என்பதே இந்த ஷரத்தில் பொதிந்திருக்கும் அடிப்படைக் கருத்தாகும்.

            ஐயா, இவைதாம் இந்த மசோதாவின் பிரதான ஷரத்துகளாகும். என் உரையை முடித்து அமர்வதற்கு முன்னர் வேறு இரண்டு விஷயங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முதல் விஷயம் ஒரு தொழிலாளி தனது விடுமுறை ஊதியத்தைப் பெறாதபடி தடுப்பதற்கு அவனை தொழில் நிலைய உரிமையாளர் வேலையிலிருந்து நீக்குவது சம்பந்தப்பட்ட விஷயமாகும். இரண்டாவது விஷயம் ஒரு தொழிலாளி சம்பளத்துடன் கூடிய தனது விடுமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளாதபடி தொழிற்சாலை உரிமையாளர் அவனைத் தூண்டி இணக்குவிக்கச் செய்வதாகும். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் மசோதாவில் பரிகாரம் ஏதும் காணப்படவில்லை என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்கிறேன். இத்தகைய பிரச்சினைகள் எழக்கூடும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கவில்லை என்று இதற்குப் பொருள் அல்ல; மாறாக, குறைந்தபட்சம் இப்போதைய கட்டத்தில் இத்தகைய நிலைமைகள் எழக்கூடும் என்று கருதுவதற்கு இடமில்லை என்பதே அரசாங்கத்தின் கருத்தாகும். இப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதை அனுபவம் காட்டுமானால் அவை நிகழாதபடி தடுப்பதற்கு சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் தயங்காது. ஆலைத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம்; இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஷரத்துகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன என்றே கருதுகிறேன்.

            ஆகவே, ஐயா, இந்த மசோதாவை முன்மொழிகிறேன்.

*           *           *

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த மசோதா சம்பந்தமாக நான் கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்குப் பொதுவாக ஆதரவு இருப்பது என் பணியைப் பெரிய அளவுக்கு எளிதாக்கிவிட்டது; ஆதலால் இதன் பேரில் நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலளித்து நான் இப்போது ஆற்றப்போகும் உரை மிக சுருக்கமாகவே இருக்கும் என்பது தெளிவு.

            என் மதிப்பிற்குரிய நண்பர் டாக்டர் சர் ஜியாவுத்தீன் அகமது நிகழ்த்திய உரை சம்பந்தமாக உடனடியாக ஏதேனும் கூறுவது உசிதம் என்று நினைக்கிறேன். அவர் பேசியது குறித்து ஏதும் கூறும் உத்தேசம் எனக்கு இல்லை; அவரை அவமதிக்கும் எண்ணம் எதுவும் நமக்குக் கிடையாது; ஏனென்றால் அவர் பேசியதற்கும் விவாதத்திலுள்ள மசோதாவுக்கும் உண்மையில் சம்பந்தம் ஏதும் இல்லை. தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் ஒரு புதுமையான யோசனையைக் கூறினார்; கூட்டுப் பங்காண்மை என்பதே அந்த யோசனை. இந்தப் புதிய யோசனை குறித்து அவர் அளித்த விளக்கம் நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நமது ஸ்தாபனக் கட்டமைப்புப் பிரச்சினை நம் முன் விவாதத்துக்கு வரும் போது, அவர் தெரிவித்த கருத்து எனக்கு மட்டுமன்றி இப்பிரச்சினையில் ஈடுபடக்கூடிய அனைவருக்குமே பெரிதும் உபயோககரமாக இருக்கும் என்று அவருக்கு உறுதிகூற விரும்புகிறேன்.

            இனி அடுத்து மற்ற பேச்சாளர்கள் விஷயத்துக்கு வருகிறேன். என்னுடைய நண்பர் சர் வித்தல் சந்தவர்கர் ஆற்றிய உரையை முதலில் எடுத்துக் கொள்கிறேன். சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் சம்பந்தமாக சர் பிராங்க் நோய்ஸ் கொண்டுவந்த தீர்மானம் பற்றி அவர் குறிப்பிட்டார். இது விஷயத்தில் அவர் என்ன கருத்தை வெளியிட விரும்பினார் என்பதை என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தனது நிலையை மாற்றிக் கொண்டது என்ற கருத்தை அவர் வெளியிட விரும்பினார் என்று நினைக்கிறேன்.

            சர் வித்தல் என் சந்தவர்கர்: இல்லை, இல்லை.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: 1936ல் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் எதிர்த்தார்கள்; ஆனால் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கோட்பாட்டுக்கு இப்போது அங்கீகாரம் அளிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வகையில் இந்திய அரசாங்கத்தின் நிலையில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நான் கருதவில்லை. இந்த ஒப்பந்தம் பற்றி அச்சமயம் நடைபெற்ற விவாதத்தை நான் கவனமாகவும் உன்னிப்பாகவும் படித்தேன். ஓர் ஒப்பந்தத்தை ஏற்பதென்றால் முழுவதுமாக ஏற்க வேண்டும்; அவ்வாறின்றி அதன் ஒரு பகுதியை மட்டும் ஏற்க முடியாது; அதனால்தான் இந்தியா ஒப்பந்தத்தை கோட்பாட்டளவில் ஏற்க தயாராக இருந்தாலும், அதனை குறிப்பிட்டளவு செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய சித்தமாக இருந்தாலும் அன்றைய நிலைமையில் அந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லாது போயிற்று.

            அடுத்தபடியாக என்னுடைய நண்பர் திரு.ஜோஷி தம்முடைய உரையில் சில கருத்துகளை எடுத்துரைத்தார். அவர் தெரிவித்தவற்றில் இரண்டு கருத்துகள் பொருட் செறிந்தவையாக உள்ளன. அவற்றில் ஒன்று மசோதாவின் குறிக்கோளை தொழிற்சாலை அளவில் நிறுத்திக்கொள்ளாமல் அதனை குறைந்தபட்சம் ஒரு தொழில் முழுவதுக்கும் விஸ்தரித்திருக்க வேண்டும் என்பதாகும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இது ஒரு சிறந்த கருத்து என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதேசமயம் நாங்கள் இவ்வாறு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொழிலின் கீழுள்ள அனைத்துத் தொழில்நிலையங்களின் வள ஆதாரங்கள் மற்றும் இதர அவசியமான தகவல்களைத் திரட்டுவதற்கு ஒரு வழி வகுக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய நிலையில், திரு.ஜோஷி தெரிவித்த கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இருப்பினும் தற்போது எங்களுக்குப் போதிய முன் அனுபவம் இல்லாதிருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட தொழிலின் கீழுள்ள எல்லாத் தொழில் நிலையங்களும் தொழிலாளர்களுக்கு விடுபட்டுபோன விடுமுறைகளுக்கான ஊதியத்தை வழங்கும்படிச் செய்வதற்கு வழிவகை காணுவது இப்போதைக்கு சாத்தியமல்ல. எனவேதான் இந்த யோசனையை தொழில்துறை முழுவதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.

            இரண்டாவதாக, சட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று திரு.ஜோஷி குறை கூறினார். இந்தப் புகாரிலும் அர்த்தம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். 7 நாட்கள் என்பது மிகவும் குறைவுதான். ஆனால் இங்கும் ஒரு சிக்கல் எழுகிறது. இப்படிப்பட்ட ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை திரு.ஜோஷியும் திரு.வித்தல் சந்தவர்கரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். நமது தொழிலாளர்களின் முறையற்ற போக்கிலிருந்தே இந்தச் சிக்கல் எழுகிறது. நமது தொழிலாளர்கள் ஏதோதோ காரணங்கள் கூறி நீண்ட விடுமுறைகள் எடுக்கிறார்கள் என்பதும், இந்தப் பழக்கத்தின் காரணமாக வேலைக்கு வராமலிருக்கும் போக்கு நிலவுகிறது என்பதும், இது உண்மையிலேயே நிலைமையைப் பெரிதும் சிக்கலாக்குகிறது என்பதும் திரு.ஜோஷி, திரு.வித்தல் சந்தவர்கர் ஆகிய இருவருக்குமே நன்கு தெரியும். நமது தொழிலாளர்கள் இப்போதை விட தொடர்ந்து ஏராளமான நாட்கள் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும்படித் தூண்டி ஊக்குவிக்கப்படுவார்களேயானால் அல்லது பயிற்றுவிக்கப்படுவார்களேயானால், இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விட விடுமுறை காலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் தார்மிக பலம் பெரிதும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை; இதனை நான் ஒப்புக் கொள்ளவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன். ஆனால் இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்: தற்போது நாங்கள் ஏழுநாள் விடுமுறையை அனுமதித்திருக்கிறோம், இது இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கங்களிடம் ஒரு மறைமுகமான பிரதிபலிப்பை ஏற்படுத்தும், இப்போதை விடத் தாங்கள் தொடர்ந்து அதிக நாட்கள் பணியாற்றினால் விடுமுறைக் காலத்தை 7 நாட்களுக்கும் கூடுதலாக அதிகப்படுத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையின் நியாயம் மிகவும் வலுப்பெறும் என்பதை அவர்கள் உணர்வார்கள். ஆனால் இப்போதைய நிலைமையில், நிர்ணயிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குக் கூடுதலாக விடுமுறை அளிப்பது நியாயமாகாது; ஏனென்றால் சர்வதேச ஒப்பந்தமே கூட ஏழுநாள் விடுமுறையையே நிர்ணயித்துக் கூறியிருக்கிறது.

            அடுத்து, ஐயா, இதே விஷயம் குறித்து மற்றொரு கருத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது; குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும் பணி நிகழும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்னும் கோரிக்கை சம்பந்தப்பட்டது இது; இந்தக் கருத்தை மதிப்புமிக்க என்னுடைய நண்பர் பேராசிரியர் ரங்கா வெளியிட்டிருக்கிறார். இதற்கும் முன்னர் கூறியதுதான் எனது பதிலாகும்; அதாவது போதுமான அளவு நீண்டகாலம் ஓய்வு பெற இயலாத தொழிலாளர்களுக்குத்தான் ஏழு நாள் விடுமுறை என்னும் இந்த ஏற்பாடு பொருந்தும். பருவகாலத் தொழிற்சாலை என்பது அவ்வப்போது மூடப்பட்டு நடைபெற்றுவரும் தொழிற்சாலையாகும். இத்தகைய தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நீண்ட ஓய்வு கிடைக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமை என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை நான் அணுகவில்லை. ஓய்வுக் கண்ணோட்டத்திலிருந்துதான் இதனை நாங்கள் பார்க்கிறோம். பருவகாலத் தொழில் நிலையங்களைப் பொறுத்தவரையில், அவற்றின் தொழிலாளர்களுக்குப் போதிய அளவு நீண்டகால ஓய்வு கிடைக்கிறது. எனவே, ஆண்டு முழுதும் பணிதொடரும் தொழில்களைப் போன்று இவர்கள் விஷயத்தில் சம்பளத்துடன் 7 நாள் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை.

            திருத்தப்படும் ஷரத்துகள் ஒன்றில் “குறைந்தபட்சம்” என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து சர் வித்தல் சந்தவர்கர் ஒரு பிரச்சினையை எழுப்பினார். திருத்த ஷரத்துகளில் ‘குறைந்தபட்சம்’ என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுவதைக் கொண்டு, 7 நாட்களுக்கும் அதிகமாக விடுமுறை அளிக்கும்படி தொழிலதிபர்களை மாகாகண அரசாங்கங்கள் வற்புறுத்துவதற்கு சாத்தியமிருக்கிறது என்ற தமது அச்சத்தை அவர் வெளியிட்டார். என்னுடைய சட்ட ஆலோசகர்கள் எனக்கு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் ஒன்றைக் கூற விரும்புகிறேன்: அதாவது 7 நாட்களுக்கும் அதிகமாக விடுமுறைகள் தரும்படி தொழிலதிபர்களை மாகாண அரசாங்கங்கள் நிர்ப்பந்திப்பது சாத்தியமல்ல என்று உறுதி கூறுகிறேன். இது அவசரப்பட்ட நடவடிக்கை என்றும், அரசாங்கம் உத்தேசித்து வரும் நோய் காப்பீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு கடைசியாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்றும் மற்றொரு கருத்தை சர் வித்தல் சந்தர்வர்கர் கூறினார். நான் தனிப்பட்ட முறையில் இந்தக் கருத்திலிருந்து வேறுபடுகிறேன்; எனக்கு மட்டும் அவகாசம் இருந்திருந்தால் என் வாதத்துக்கு ஆதரவாக சில ஆதாரங்களை முன்வைத்திருப்பேன். தொழில்துறைத் தொழிலாளர்களுக்கான ஆரோக்கிய காப்பீடு சம்பந்தமான தமது அறிக்கையில் பேராசிரியர் அதர்கர் தெரிவித்துள்ள கருத்துகளைப் படிக்குமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்; இந்த அறிக்கை 112ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்பது நோய்க் காப்பீட்டுடன் பிரிக்க முடியாதபடிப் பின்னிப் பிணைந்துள்ளது, இதில் முன்னுரிமை ஏதேனும் கொடுக்க வேண்டியிருந்தால் சமூகக் காப்பீட்டைவிட சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் நடவடிக்கைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே அவர் சில வலுவான ஆதாரச்சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளார். நான் ஏற்கெனவே கூறியது போன்று அவரது அறிக்கையை இப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பெறலாம். எனவே, இது விஷயம் பற்றி பேராசிரியர் அதர்கர் கூறியதை மீண்டும் திருப்பிக் கூறி அவையின் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

            அடுத்தப்படியாக ஐயா, மற்றொரு பிரச்சினையும் இங்கு எழுப்பப்படுகிறது; இது போன்ற ஒரு நடவடிக்கை தன் விருப்பமானதா அல்லது கட்டாயமானதா என்று கேட்கப்படுகிறது. இந்த மசோதாவைப் பொறுத்தவரையில், அது இவ்விரு அம்சங்களையும் தன்னுள் கொண்டது; நீண்டகாலம் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறைகள் அளிப்பதை அது ஒருபுறம் சட்டரீதியாகக் கட்டாயமாக்குகிறது; இன்னொரு புறம் இது விஷயமாக தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் பரஸ்பரம் இணங்கி உடன்பாட்டுக்கு வரவும் வகைசெய்கிறது. இந்த மசோதாவின் ஷரத்துகளில் கண்டுள்ளபடி ஒத்த ஏற்பாட்டை ஆலை நிர்வாகமே நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்து அது குறித்து அரசாங்கம் திருப்தியடையுமானால் இந்த சட்டத்திலிருந்து அத்தகைய தொழில் நிலையத்துக்கு விதிவிலக்கு அளிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு வழங்கப்படுகிறது. இது விஷயத்தில் பிரிட்டனிலும் இதே போன்ற நிலைமை நிலவுவதாக அறிகிறேன். பிரிட்டனில் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் அளிக்கும் சட்டம் ஒன்று 1938ல் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்துவருகிறது; 23 லட்சம் பேர் இந்த சட்டத்தால் பயனடைகின்றனர். எஞ்சியவர்களில் 50 லட்சம் பேர் இந்த சட்டத்தின் வாயிலாக அல்லாமல் பரஸ்பரம் சுய விருப்ப அடிப்படையில் செய்துகொள்ளப்படும் உடன்பாட்டின்படி பயனடைகின்றனர்; 40 லட்சத்து 700 பேர் நீண்ட நெடுங்காலமாக பழக்கத்திலுள்ள ஏற்பாட்டின்படி பயனடைகின்றனர்.

            சர் கவாஸ்ஜி ஜஹாங்கீர்: விடுமுறை அளிப்பதை ஒரு தொழிலதிபர் ஒத்திப்போடுவதற்கு வகை செய்யும் ஷரத்து எங்கே இருக்கிறது?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த விஷயத்துக்கு வருகிறேன்.

            ஐயா, நான் கையாள விரும்பிய மற்றொரு விஷயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது சம்பந்தமான இந்தக் கட்டாய அம்சமும் பரஸ்பர உடன்பாட்டு அம்சமுமாகும்.

            என்னுடைய நண்பர் பேராசிரியர் ரங்காவும் திரு.செட்டியாரும் வேறொரு பிரச்சினையை எழுப்பினர். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் விஷயத்தில் ஒரு தொழிற்சாலையின் உரிமையாளர் நேர்மையற்ற முறையில் நடந்து கொள்ளக்கூடும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறுவதைத் தடுப்பதற்கு தொழிலாளியை அவர் வேலையிலிருந்து விலக்கவும் கூடும்; இத்தகைய நெறியற்ற செயல்களைத் தடுப்பதற்கு மசோதாவில் எந்த ஷரத்தும் இல்லாததை அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த மசோதாவை முன்மொழிந்து நான் ஆற்றிய தொடக்க உரையிலேயே இந்த விஷயம் பற்றிக் குறிப்பிட்டேன். இத்தகைய ஒரு நிலைமை உருவாகும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருந்தாலும், இது விஷயத்தில் உடனடியாக அது நடவடிக்கை ஏதும் எடுக்காது. இரு தரப்புகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று வெற்றி கொள்ள எத்தகைய உத்தி முறையைக் கையாள்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவே அரசாங்கம் விரும்புகிறது. எனினும் தொழிற்சாலை உரிமையாளர்களின் நெறிமுறையற்ற செயல்களைத் தடுப்பதற்குச் சட்டத்தில் உபரியாக ஒரு ஷரத்தைச் சேர்ப்பது அவசியம் என்று தொழிலாளர் பிரதிநிதிகள் கருதினால், தெரிவுக் குழுவினரை அணுகி இது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை இணங்க வைத்து, தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. தெரிவுக்குழுவில் இத்தகைய நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வகையிலும் குறுக்கே நிற்காது.

            மற்றொரு பிரச்சினையும் இங்கு எழுப்பப்பட்டிருக்கிறது: சம்பளத்துடன் விடுமுறை பெறுவது முற்றிலும் தொழிலாளியின் விருப்பத்துக்கு விட்டுவிட வேண்டுமா அதாவது எந்த நாளிலிருந்து, எந்த நேரத்திலிருந்து விடுமுறை எடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட வேண்டுமா என்பதே அந்தப் பிரச்சினை. இது சம்பந்தமான ஷரத்தை வேண்டுமென்றேதான் மசோதாவில் சேர்க்கவில்லை, இது சம்பந்தமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை வகுக்கும் பொறுப்பை மாகாண அரசாங்கங்களுக்கு விட்டுவிட்டோம். இது போன்ற ஒரு பரிசோதனையில் அனைத்தையுமே சட்டத்துடன் பிணைக்காமல் இருப்பது உசிதமானது என்பது என் கருத்து. மாகாண அரசாங்கங்களே தகுந்த விதிமுறைகளை வகுத்து, இத்தகைய விஷயங்களை ஒழுங்குபடுத்துவதே நல்லது; இதற்கான அதிகாரத்தை மாகாண அரசாங்கங்களுக்கு இம்மசோதா வழங்குகிறது; ஏனென்றால் ஒரு சட்டத்தை மாற்றுவதைவிட ஒரு விதிமுறையை மாற்றுவது மிகவும் எளிது என்பதை அவை நன்கு அறியும். ஆனால் அதேசமயம் இம்மசோதாவில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இவ்விஷயத்தை சட்டம் இயற்றுவதற்குரிய ஒன்றாகக் கருதும் பட்சத்தில், தெரிவுக் குழு அதனைப் பரிசீலித்து ஒரு முடிவுக்கு வரலாம்.

            மதிப்பிற்குரிய எந்த ஓர் உறுப்பினராலும் எழுப்பப்பட்டு நான் கையாளாத வேறு பிரச்சினை எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்; எனவே, நான் முன்மொழிந்திருக்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக மேற்கொண்டு எதுவும் நான் கூறப்போவதில்லை.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): ஆக, தீர்மானம் இதுதான்:

            “1934 ஆம் வருட தொழிற்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்தும் (இரண்டாவது திருத்தம்) இந்த மசோதா பின்வருவோர் அடங்கிய பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படுகிறது: நவாப் சித்திக்கு அலிகான், கான் பகதூர் ஷேக் பஸில்-இ-ஹக் பிராசா, திரு.ஆர்.ஆர்.குப்தா, திரு.ஏ.சி. இன்ஸ்கிப், சர் வித்தல் என்.சந்தவர்கர், ராவ் பகதூர் என்.சிவராஜ், திரு.என்.எம்.ஜோஷி, திரு.டி.எஸ்.ஜோஷி மற்றும் இம்மசோதாவை முன்மொழிபவர். குழுவின் எந்த ஒரு கூட்டமும் சட்டப்பூர்வமாகக் கருதப்படுவதற்கு அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருப்பது அவசியம்.”

            மசோதா ஏற்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It