(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஜூலை 29, பக்கம் 180)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா! நான் பின்கண்டவாறு பிரேரேபிக்கிறேன்:         

ambedkar 583 “சுரங்க மகப்பேறு நல உதவிச் சட்டம், 1941ஐ திருத்துவதற்கான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விழைகிறேன்.”

            இந்தத் திருத்தம் ஏன் அவசியமாகியுள்ளது என்பதை அவைக்கு நான் விளக்கிக் கூறினால் அது விரும்பத்தக்கதாக இருக்கும். சுரங்க மகப்பேறு நல உதவி சட்டத்தின் கீழ், சுரங்கத்தில் வேலை செய்யும் ஒரு பெண் 8 வார காலத்திற்கு நாள் ஒன்றுக்கு 8 அணா வீதம் மகப்பேறு நல உதவிபெற தகுதிபெறுகிறார். இந்த 8 வாரக் கால அளவு, ஒவ்வொன்றும் 4 வாரங்கள் கொண்ட இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பகுதி மகப்பேறுக்கு முந்தியும், மற்ற பகுதி மகப்பேறுக்கு பின்பும் மற்றபகுதி மகப்பேறுக்கு முந்திய 4 வாரங்கள் விருப்பப்படியான ஓய்வுக்கான கால அளவாகும். அந்தக் காலத்தில் ஒரு பெண் வேலை செய்து முழுச்சம்பளத்தையும் பெறலாம்; அல்லது வேலைக்கு வராமல் இருந்து பேறுகால நல உதவியைப் பெறலாம். மகப்பேற்றைத் தொடர்ந்துள்ள நான்கு வாரங்களைப் பொறுத்தவரை, அது கட்டாயமாக ஓய்வு எடுக்கும் ஒரு கால அளவாகும்; அந்த சமயத்தில் ஒரு பெண் கட்டாயம் வேலை செய்வது சட்டத்தை மீறுவதாகும், குற்றமுமாகும்; பேறுகால நலனைப் பெறுவதோடு மட்டும் திருப்தியடைய வேண்டும், மகப்பேறு நல உதவி சட்டம் 5வது பிரிவு பேறுகால நல ஊதியம் கொடுக்கப்படுவதற்கு வகை செய்கிறது; அந்தப் பிரிவின் 9 வது வரியில் இப்பொழுதுள்ள சொற்களை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் கவனிப்பார்களாயின், ‘வேலைக்கு வராமல் இருந்தால்” என்று இருப்பதைக் காண்பார்கள். இந்தச் சொற்கள் குறிப்பாக ‘வேலைக்கு வராமல் இருப்பது” என்னும் சொற்கள் தெளிவற்றவையாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. ‘வேலைக்கு வருவதிலிருந்து’ என்ற சொற்கள் ஒரு ஐயப்பாட்டை ஏன் கொண்டு வருகிறது என்று கூறப்பட்டது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறேன்.

            சுரங்க உரிமையாளரால் சுரங்கம் ஒரு குறிப்பிட்ட நாளில் மூடப்பட்டிருந்தது என வைத்துக்கொள்வோம். அப்போது மகப்பேறு நல உதவி பெற அந்தப் பெண் உரிமை பெறுகிறாளா? ‘வேலைக்கு வராமல் இருப்பது’ என்ற சொற்களின் பொருள், வேலை நடைபெறுகிறது என்று பொருள்படுகிறது; ஆனால் சுரங்கம் மூடப்படும்போது, அந்த வேலை நடைபெறவில்லை; எனவே ‘வேலைக்கு வருவதிலிருந்து’ என்ற சொற்கள் தெளிவற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளன. பல்வேறு மாகாணங்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு பேறுகால நலஉதவிச் சட்டங்களோடு, 5வது பிரிவை ஒப்பிட்டுப் பார்த்தேன்; அவற்றில் ’வேலைக்கு வருவதிலிருந்து’ என்ற சொற்கள் இடம்பெறவில்லை. இந்தச் சொற்களை எடுத்துவிடுவதன் மூலம் இந்த தெளிவற்ற நிலையை போக்கவேண்டியது அவசியமாகிறது. இந்தத் திருத்தத்தை இரு வேறுபட்ட திருத்தங்கள் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கப்படுகிறது. ஒன்று, எந்த சொற்கள் ஐயப்பாட்டினை ஏற்படுத்தினவோ அவற்றைப் பிரிவு 5இலிருந்து அகற்றி விடுவது! மகப்பேற்றிற்கு முந்தின நான்கு வாரக் காலத்தில், ஒவ்வொரு நாளும் மகப்பேறு நல உதவி பெற பெண் உரிமைபெற்றுள்ளார்’ என்ற வாசகத்துடன் அந்தப் பிரிவைப் படிக்க வேண்டும். இரண்டாவதாக, பேறுகாலத்திற்கு முந்தின நான்கு வார காலம் விருப்பப்படி ஓய்வு எடுத்துக்கொள்ளும் காலம், அந்த சமயம் அவர் வேலைக்குச் சென்று முழுச் சம்பளத்தையும் பெறுவதையும் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது வீட்டில் இருந்து கொண்டே பேறுகால நலனைப் பெறுவதோடு திருப்தியடையலாம் என்று ஏற்கெனவே கூறினேன். ஆனால் இந்த நான்கு வார காலத்தில் அவர் வேலைக்குச் சென்றால் அப்பொழுது, எந்தப் பேறுகால உதவி பெறவும் அவர் உரிமை பெற மாட்டார் என்ற உப-பிரிவைச் சேர்த்துள்ளோம். இந்த வார்த்தைகளோடு, நான் பிரேரபிக்கிறேன்:

            திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்):

            ‘சுரங்க மகப்பேறு நல உதவிச் சட்டம், 1941 ஐ திருத்துவதற்கான மசோதாவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென விழைகிறேன்.”

            தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

            பிரிவு 2 மசோதாவுடன் சேர்க்கப்பட்டது.

            பிரிவு 1 மசோதாவுடன் சேர்க்கப்பட்டது.

            தலைப்பும் பீடிகையும் மசோதாவுடன் சேர்க்கப்பட்டன.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென பிரேரேபிக்கிறேன்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் பிரேரேபிக்கப்படுகிறது.

            ‘மசோதா நிறைவேறட்டும்.”

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It