தூய்மைக்கேடு விஷயத்தில் இந்துக்களுக்கும் பூர்வீக மக்களுக்கும் அல்லது பண்டைக்கால மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏதும் இல்லை. தூய்மைக்கேடு குறித்த கருத்தை இந்துக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனுஸ்மிருதியிலிருந்து தெள்ளத்தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். உடலளவிலான தூய்மைக் கேடும், கருத்தளவிலான தூய்மைக்கேடும் இருப்பதை மனு ஒப்புக் கொள்கிறார்.
பிறப்பு (அத்தியாயம் V, 58, 61-63, 71, 77, 79), இறப்பு மற்றும் மாதவிடாய் (அத்தியாயம் III, 45-46; IV 40-41, 57, 208; V 66, 85, 108) ஆகியவற்றைத் தீட்டுக்கான மூல காரணங்களாக மனு கருதினார். மரணத்தைப் பொறுத்தவரையில் தீட்டு மிக விரிந்த அளவிலானது, குருதி உறவுமுறையை அது பின்பற்றுகிறது. மரணமானது இறந்தவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தீட்டை உண்டாக்குகிறது; அவர்கள் சபிந்தாக்கள் மற்றும் சமனோதாக்கள் (அத்தியாயம் V, 58, 60, 75-77, 83-94) என்று அழைக்கப்படுகின்றனர். தாய்மாமன் (அத்தியாயம் V, 81) போன்ற தாய்வழி உறவினர்கள் மட்டுமன்றி, தூரத்து உறவினர்களும் (அத்தியாயம் V, 78) இதிலடங்குவர். பட்டியல் மேலும் விரிவடைந்து, உறவினர்களல்லாத பின்கண்டோரும் இடம் பெறுகின்றனர்; (1) ஆசிரியர் (அத்தியாயம் V, 65, 80, 82), (2) ஆசிரியருடைய புதல்வர் (அத்தியாயம் V, 80), (3) ஆசிரியருடைய மனைவி (அத்தியாயம் V, 80) (4) மாணவர் (அத்தியாயம் V, 81), (5) சகமாணவர் (அத்தியாயம் V, 71), (6) ஷிரோத்ரியா (அத்தியாயம் V, 81), (7) மன்னர் (அத்தியாயம் V, 82), (8) நண்பர் (அத்தியாயம் V, 82), (9) குடும்ப உறுப்பினர்கள் (அத்தியாயம் V, 81), (10) பிணத்தைத் தூக்கிச் சென்றவர்கள் (அத்தியாயம் V, 64-65, 85), (11) பிணத்தைத் தொட்டவர்கள் (அத்தியாயம் V, 64, 85).
இவ்விதம் தீட்டுக்கு ஆளானவர்கள் எவரும் அதிலிருந்து தப்பமுடியாது. வெகு சிலருக்கு மட்டும்தான் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. கீழ்க்கண்ட சுலோகங்களில் அவர்கள் யார் என்பதை மனு குறிப்பிட்டு அவர்களுக்கு விதிவிலக்கு அளித்திருப்பதற்கான காரணங்களையும் விவரிக்கிறார்.
V.93. தூய்மைக்கேடு மன்னர்களையும் அறநெறி மற்றும் சாஸ்திரத்தை நிலைநாட்டுபவர்களையும் கறைப்படுத்தாது; ஏனென்றால் முதலில் குறிப்பிடப்பட்டவர்கள் இந்தியாவில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றனர், இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர்கள் புனிதர்களான பிராமணர்களைப் போன்றவர்கள்.
94. பெருமிதத்துக்குரிய அரசுக்கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசருக்கு உடனடியாக தூய்மைச் சடங்கு நடத்தப்படுகிறது. (அங்கு) அவர் (தம்முடைய) பிரஜைகளைப் பாதுகாப்பதற்காக வீற்றிருப்பதே இதற்குக் காரணம்.
95. ஒரு கலகத்திலோ அல்லது போரிலோ வீழ்ந்துபட்டவர்களுக்கும், மின்னலால் அல்லது அரசனால் கொல்லப்பட்டவர்களது உறவினர்களுக்கும், பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும், (தூய்மையற்றவர்களாக இருப்பினும்) தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று மன்னர் விரும்புபவர்களுக்கும் இதே விதிபொருந்தும்.
96. சந்திரன், அக்கினி, சூரியன், வாயு, இந்திரன், செல்வங்களின் அதிபதியான குபேரன், மழையின் அதிபதியான வருணன், எமன் ஆகிய உலகின் எட்டுக்காவல் தெய்வங்களின் திருவவதாரமாக இருக்கிறான் மன்னன்.
97. இந்தத் தெய்வங்கள் மன்னனுள் படர்ந்துபரவி வியாபித்திருப்பதால் அவனைத் தூய்மைக்கேட்டுக்கு உள்ளாக்க முடியாது; ஏனென்றால் தூய்மையும் தூய்மைக்கேடும் இந்தத் தெய்வங்களாலேயே உண்டாக்கப்பட்டு, அகற்றப்படுகின்றன.
ஆக, மன்னனும், மனுவரையறுத்துக் கூறியிருக்கும் நேரிய லட்சியத்துக்காக உயிர்தியாகம் செய்பவர்களும், அதேபோன்று மன்னனால் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பவர்களும் தூய்மைக்கேட்டின் பொதுமுறையான விதிகளால் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை இதிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். பிராமணன் ‘என்றும் புனிதமானவன்’ என்ற மனுவின் கூற்றை மற்றெல்லாவற்றையும்விட பிராமணனை உயர்வாக ஏற்றிப் போற்றும் அர்த்தத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும். பிராமணன் தூய்மைக் கேட்டிலிருந்து விடுபட்டவன் என்று இதனைப் புரிந்துகொள்ளக்கூடாது. ஏனென்றால் அவன் அவ்வாறு விடுபட்டவன் அல்ல. பிறப்பு, இறப்பு போன்றவற்றால் பிராமணன் தீட்டுக்கு ஆளாவதோடு, பிராமணரல்லாதவர்களைப் பாதிக்காத பல விஷயங்களிலும் அவன் தூய்மைக்கேட்டுக்கு உள்ளாகிறான். அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என்று பிராமணர்களுக்கு மனு ஏராளமான தடைகளை விதித்திருக்கிறார்; அவற்றை அவர்கள் கடைபிடிக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
தூய்மைக்கேடு பற்றிய மனுவின் கண்ணோட்டம் எதார்த்த ரீதியானது, வெறும் கருத்தளவிலானதல்ல, தூய்மையற்ற ஒருவன் அளிக்கும் உணவு ஏற்கத்தக்கதல்ல என்று கூறி மனு தமது கண்ணோட்டத்துக்கு எதார்த்த வடிவம் அளிக்கிறார்.
தீட்டுக்கு உள்ளாகும் காலத்தையும் மனு நிர்ணயித்துத் தந்திருக்கிறார். அது பல வகைகளில் வேறுபடுகிறது. ஒரு சபிந்தா மரணமடைந்தால் பத்துநாட்கள், குழந்தைகளுக்கு மூன்று நாட்கள், சகமாணவர்களுக்கு ஒரு நாள். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்த உடனேயே தீட்டு மறைந்துவிடுவதில்லை. மாறாக, நிர்ணயிக்கப்பட்ட காலத்தின் முடிவில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தூய்மைப்படுத்தும் சடங்கு ஒன்றைச் செய்ய வேண்டும்.
தூய்மைப்படுத்தும் நோக்கங்களுக்காக மனு தூய்மைக்கேடு விஷயங்களை மூன்று அம்சங்களில் பரிசீலிக்கிறார்: 1.உடல்ரீதியான தூய்மைக்கேடு, 2.கருத்தளவிலான தூய்மைக்கேடு, அல்லது மனரீதியான தூய்மைக்கேடு, 3.அறநெறி சார்ந்த தூய்மைக்கேடு. ஒருவன் தனது மனத்தில் தீய எண்ணங்களை வரித்துக்கொள்ளும் போது ஏற்படும் அறநெறித் தூய்மைக்கேட்டை அகற்றி தூய்மைபடுத்துவது சம்பந்தமான விதி (அத்தியாயம் V, 105-109; 127-128)யில் நயமான கண்டிப்புகளும் நன்னெறி போதனைகளுமே அதிகமாக இருக்கின்றன. ஆனால் கருத்து ரீதியிலான தூய்மைக்கேட்டையும், உடல்ரீதியான தூய்மைக் கேட்டையும் போக்குவதற்கான சடங்குகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. தண்ணீர் (அத்தியாயம் V, 127), மண் (அத்தியாயம் V, 134-136), பசுவின் மூத்திரம் (அத்தியாயம் V, 121, 124), தர்ப்பைப்புல் (அத்தியாயம் V, 115), சாம்பல் (அத்தியாயம் V, 111), முதலியவை உயிரற்ற பொருள்களைத் தொடுவதால் ஏற்படும் தீட்டைக் கழிக்கும் சாதனங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. தண்ணீர் கருத்தளவிலான தூய்மைக் கேட்டை அகற்றும் பிரதான சுத்திகரிப்புச் சாதனமாகக் கருதப்படுகிறது. அது பின்வரும் மூன்று வழிமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. 1.சிறுகச்சிறுக உறிஞ்சிக் குடித்தல், 2.குளித்தல், 3.மேனி கழுவுதல் (அத்தியாயம் V, 143), பின்னால் பஞ்சகவ்வியம் கருத்தளவிலான தீட்டைப்போக்கும் பிரதான சாதனமாயிற்று. பசுவிலிருந்து கிடைக்கும் பால், மூத்திரம், சாணம், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்து பொருள்களின் கலவைதான் பஞ்சகவ்வியம் என்பது. பசுவைத் தொடுவதன் மூலமோ அல்லது நீரை உறிஞ்சிவிட்டுச் சூரியனைப் பார்ப்பதன் மூலமோ தீட்டை ஒழித்துக் கட்டுவதற்கும் மனுதர்மத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. (அத்தியாயம் V, 87)
ரோமர்களிடம் ஆரம்ப காலத்தில் நிலவியது போன்றே ஒரு குறிப்பிட்ட பிரதேசம் முழுவதும் தீட்டுக்கு உள்ளாகி, அதற்குப் பரிகாரம் காணும் போக்கு இந்துக்களிடமும் நிலவுகிறது. இதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வருடாந்திர ஜாத்ரா நடைபெறும். அப்போது ஏதேனும் ஒரு விலங்கு, பொதுவாக ஓர் எருது கிராமத்தின் சார்பில் விலைக்கு வாங்கப்படும். பிறகு அந்த எருது கிராமத்தைச் சுற்றிலும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு பலியிடப்படும்; அதன் இரத்தம் கிராமத்தில் எல்லா இடங்களிலும் தெளிக்கப்படும்; முடிவில் அதன் கால்விரல் இறைச்சி கிராம மக்களிடையே விநியோகிக்கப்படும். ஒவ்வொரு இந்துவும், ஒவ்வொரு பிராமணனும் அவன் மாட்டிறைச்சி சாப்பிடாதவனாக இருந்தாலும் இறைச்சியில் தனக்குரிய பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது எந்த ஸ்மிருதிகளிலும் கூறப்படவில்லை. எனினும் நடைமுறைப் பழக்கவழக்கத்தின் ஆதரவு இதற்கு இருக்கிறது. இந்தப் பழக்கம் இந்துக்களிடையே பெரிதும் மேலோங்கி, விதிமுறைகளையும் மீறுவதாக உள்ளது.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 2)