அமைச்சரவைத் தூதுக்குழு தனது மே 10ஆம் தேதிய அறிக்கையில் இந்தியாவின் அரசியல் நெருக்கடித் தீர்ப்பதற்கான இடைக்கால மற்றும் நீண்டகால யோசனைகள் முன்வைத்தது. அவர்களுடைய யோசனைகளில் மிகுந்த அதிர்ச்சியும் எரிச்சலும் அளிக்கக் கூடிய ஓர் அம்சமும் இடம்பெற்றிருந்தது.

ambedkar 408தீண்டப்படாதவர்களை கூடிய ஓர் அம்சமும் இடம்பெற்றிருந்தது. தீண்டப்படாதவர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் ஒரு தனியான, குறிப்பிடத்தகுந்த அங்கமாக ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்ததுதான் அந்த அம்சம். குழு தனது நீண்ட அறிக்கையில் ஒருமுறை கூட தீண்டப்படாதவர் பற்றி குறிப்பிடவில்லை.

அந்த அளவுக்கு அவர்களை அது முற்றிலும் புறக்கணித்து விட்டது. தாழ்த்தப்பட்டவர்களை எந்த அளவுக்கு தூதுக்குழு ஒதுக்கியது என்பதைக் கீழ்க்கண்டவற்றின் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்:

i) சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ளதுபோல் மத்திய நிர்வாக சபையில் தீண்டப்படாதவர்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை.

தற்பொழுதுள்ள இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்ட வகுப்பு பிரதிநிதிகள் இருவர் இருக்கின்றனர்.

இவர்களில் எவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் விசுவாசம் கொண்டவர்களோ அல்லது அவர்களுக்கு எவ்வகையிலும் கடமைப்பட்டவர்களோ அல்ல. இவர்களில் ஒருவர் காங்கிரசால் நியமிக்கப்பட்டவர். மற்றொருவர் முஸ்லீம்லீக்கால் நியமிக்கப்பட்டவர்.

ii) இடைக்கால அரசில் முஸ்லீம்கள் விஷயத்தில் செய்திருப்பதுபோல் தீண்டப்படாதவர்களுக்கு குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்து பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பதினான்கு பேர் கொண்ட அமைச்சரவையில் தீண்டப்படாதவர்கள் இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று 1945ல் நடந்த சிம்லா மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டது. 1945க்கும் 1946க்கும் இடையே இவ்வாறு களம் மானியத்திற்கான காரணம் தரப்படவில்லை.

iii)  அரசியல் நிர்ணய சபையில் தனிப் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

II

அமைச்சரவைத் தூதுக்குழுவின் முடிவு மன்னர்பிரான் அரசின் நிலைநாட்டப்பட்ட கொள்கையிலிருந்து எவ்வாறு ஒரு பிறழ்வாக அமைந்துள்ளது.

2. இந்தியாவின் அரசியல் சம்பந்தமாகவும், தீண்டப்படாதவர்களின் நிலை சம்பந்தமாகவும் மன்னர்பிரான் அரசுக்கு அதன் கொள்கையில் வழிகாட்டி வந்த கோட்பாடுகளிலிருந்து அது பெருமளவுக்கு விலகிச் சென்றுவிட்டதையே அமைச்சரவைத் தூதுக் குழுவின் முடிவு காட்டுகிறது.

i) 1920-க்கு முன், இந்திய அரசின் அரசியல் சட்டத் திருத்தங்கள் பிரிட்டிஷ் அரசின் சொந்த விருப்பத்தின் படியும், அவர்களுடைய சொந்த அதிகாரத்தின்படியும் செய்யப்பட்டு வந்தன. முதன்முதலாக 1920-ல் பிரிட்டிஷ் அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்க முடிவு செய்தது. அதற்கேற்ப, இந்தியர்கள் அழைக்கப்பட்டு ஒரு வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது.

அம்மாநாட்டில் பங்குகொண்ட இந்தியர்களுள், காங்கிரசுடனோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியுடனோ சம்பந்தப்படாமல் சுயேச்சையாகவும் தனிப்பட்ட முறையிலும் அழைக்கப்பட்ட தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகள் இருந்தனர்.

ii) இந்திய தேசிய வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு தனி அங்கமாக குறிப்பிடுவதை எதிர்த்தும், அவர்கள் இந்துக்களில் ஒரு பகுதியினரே என்றும், ஆகவே தனிப் பிரதிநிதித்துவத்திற்கு அவர்கள் உரியவர்களல்லர் என்றும் காங்கிரஸ் பிரதிநிதியான திரு.காந்தி வாதிட்டார். பிரிட்டிஷ் அரசு திரு.காந்தியின் இந்த வாதத்தை நிராகரித்தது. தாழ்த்தப்பட்டவர்கள் இந்திய தேசிய வாழ்வில் ஒரு தனியான, குறிப்பிடத்தக்க அங்கம் என்றும் எனவே, அவர்கள் முஸ்லீம்கள், இந்திய கிறித்தவர்கள் போன்ற இதர சிறுபான்மையினர்களுக்குள் அதே பாதுகாப்புகள் பெற உரிமை உடையவர்கள் என்றும் வகுப்புவாரித் தீர்ப்பின் மூலம் பிரகடனம் செய்தது.

iii) பிரிட்டிஷ் அரசு இதே கொள்கையை 1945 ஜூனில் நடைபெற்ற சிம்லா மாநாட்டிலும் பின்பற்றியது. அந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட இந்தியர்களில் காங்கிரஸ் அல்லது வேறு எந்த அரசியல் கட்சியையும் சாராத தீண்டப்படாதவர்கள் பிரதிநிதி ஒருவர் மீண்டும் அழைக்கப்பட்டார்.

iv) 1942ல் கிரிப்ஸ் முன்வைத்த யோசனைகளில் ஒரு பகுதியாக இருந்த அரசியல் நிர்ணய சபையில் தீண்டப்படாதவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் அளிக்க வகை செய்யப்படவில்லை, எனவே அமைச்சரவைத் தூதுக்குழுவின் தற்போதைய யோசனைகள் முந்திய நிலையிலிருந்து விலகிச் செல்லுவதைக் குறிப்பதாகக் கூறமுடியாது என்று வாதிக்கலாம். ஆனால் உண்மையில் இந்த யோசனைகள் முந்திய நிலையிலிருந்து விலகிச் செல்லுகின்றன என்பதே பதிலாகும். 1942 ஆம் வருட கிரிப்ஸ் யோசனைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பதல்ல.

உண்மையில், அரசியல் நிர்ணய சபையில் எந்தச் சிறுபான்மை வகுப்பினருக்குமே தனிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் அமைச்சரவைத் தூதுக்குழு முன்மொழிந்துள்ள அரசியல் நிர்ணய சபைக்கான அரசியல் சட்டத்தில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தனிப் பிரதிநிதித்துவம் தீண்டப்படாதவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாரபட்சப் போக்கைப் பற்றித்தான் தீண்டப்படாதவர்கள் புகார்கள் எழுப்பியுள்ளனர்.

3. அமைச்சரவைத் தூதுக்குழுவின் யோசனைகள் நியாயமற்றவை; இந்திய தேசிய நீரோட்டத்தில் தீண்டத்தகாதவர்களை ஒரு தனி அங்கமாக ஏற்கும் கொள்கையிலிருந்து விலகிச் சென்றிருப்பதிலும் இஸ்லாமியர்களையும் சீக்கியர்களையும் போல் அவர்களை ஒரு தனி அங்கமாக ஏற்காததிலும், அவர்கள்பால் பாரபட்சம் காட்டுவதிலும்தான் இந்த அநீதி புதைந்து கிடக்கிறது.

தீண்டப்படாதவர்களுக்கு மன்னர்பிரான் அரசு அளித்த வாக்குறுதிகளை அமைச்சரவைத் தூதுக்குழுவின் முடிவு எவ்வாறு மீறுகிறது?

4. தீண்டப்படாதவர்களை ஒரு தனி அங்கமாக அமைச்சரவைத் தூதுக்குழு மறுப்பது பிரிட்டிஷ் அரசினால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறானது. கீழ்க்கண்ட சில வாக்குறுதிகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை:

(i) “இந்திய ஒற்றுமையின் நலனைக் கருதி எந்த அரசியலமைப்புத் திட்டங்களிலும் இந்திய சமஸ்தானங்களை இணைக்க வேண்டும் எனும் முக்கியத் தேவையை நாம் மறந்துவிடக் கூடாது.

சிறுபான்மையினரின் விடாப்பிடியான கோரிக்கைகள் உள்ளன. இவற்றில் இரண்டை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பெரும் இஸ்லாமியச் சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருமே அவர்கள். சிறுபான்மையினருக்குக் கடந்த காலத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில் அவர்கள் நிலை பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்.

1940-ம் ஆண்டு ஜனவரி 10-ஆம் நாள், பம்பாய் பம்பாய் ஓரியண்ட் கிளப்பில் லின்லித்கோ பிரபு ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.

(ii) “இவைதாம் இப்போது எடுத்துள்ள இரண்டு முக்கியப் பிரச்சினைகள். இந்த இரண்டு பிரச்சினை குறித்த மன்னர் பிரான் அரசு தனது நிலைகளைத் தெளிவுபடக் கூறும்படி என்னைப் பணித்துள்ளது. முதலாவது, எந்த எதிர்கால அரசியலமைப்புத் திட்டத்திலும் சிறுபான்மையினரின் நிலை சம்பந்தப்பட்டது.

இந்தியாவின் தேசிய வாழ்வில் வலிமை மிக்க சக்திகளால் மறுக்கப்படும் எவ்வகையான ஓர் அரசாங்க அமைப்பிடமும் இந்தியாவின் அமைதியையும் நலன்களையும் காப்பதற்குத் தற்போது தங்களுக்குள்ள பொறுப்புகளை மாற்றிக் கொடுக்கும் எண்ணம் எதுவும் மன்னர்பிரான் அரசுக்கு இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய சக்திகளை இப்படிப்பட்ட ஓர் அரசிற்குப் பணிந்து போகும்படி வல்லந்தப்படுத்துவதற்கு அவர்கள் துணை போகவும் முடியாது.”

-    1940, ஆகஸ்டு 8-ஆம் நாள் லின்லித்கோ பிரபு அளித்த உரையிலிருந்து  ஒரு பகுதி

“காங்கிரஸ் தலைவர்கள் ஒரு போற்றற்குரிய ஸ்தாபனத்தைக் கட்டி வளர்த்துள்ளனர்; அது இந்தியாவின் திறமை வாய்ந்த அரசியல் இயந்திரமாகும்… இந்தியாவின் அரசியல் வாழ்வின் (முக்கிய) பிரதான பகுதியினர் எல்லோருக்குமாக தான் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் உண்மையில் அது பேசுவதில் வெற்றி பெற்றிருக்குமானால் – வெற்றி பெற்றிருக்கக் கூடுமானால் – அவர்களின் கோரிக்கை எவ்வளவு தீவிரமுடையதாக இருந்தாலும், பல அம்சங்களில் நம் பிரச்சினை இன்று இருப்பதை விட மிக அதிகம் இலகுவானதாக இருந்திருக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் அவர்கள் மிகப் பெரிய தனிக் கட்சியாவர். அதன் காரணமாக இந்தியாவிற்காக பேசுவதாகச் சொல்வதை இந்தியாவின் சிக்கலான தேசிய வாழ்வில் உள்ள பல மிக முக்கியமான பகுதியினர் மறுக்கின்றனர்.

இந்த மற்றவர்கள் எண்ணிக்கையில் தங்களைச் சிறுபான்மையினராக மட்டுமன்றி எதிர்கால இந்திய அரசியல் வாழ்வில் தனிமையான அங்கங்களாகவும் தாங்கள் கருதப்பட வேண்டும் என்று உரிமை கோருகின்றனர். இவர்களில் மிக முதன்மையானவர்கள் (பெரும் எண்ணிக்கையில் உள்ள) மகத்தான முஸ்லீம் சமூகத்தினர். பூகோள அடிப்படையில் அமைந்துள்ள வாக்காளர் தொகுதிகளில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை வகுக்கும் அரசியல் சட்டத்தோடு அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக செயல்படுவோருக்கு எதிராக அரசியல் அமைப்பு சம்பந்தமான எந்த விவாதத்திலும் பங்கு பெறும் அங்கமாக தாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் உரிமை கோருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட (தீண்டப்படாத) ஜாதியினர் என்று அறியப்படும் மகத்தான முக்கிய பகுதியினருக்கும் இது பொருந்தும். அவர்கள் சார்பில் திரு.காந்தி எடுத்துக் கொண்ட அக்கறையுடன் கூடிய முயற்சிகள் இருந்தபோதிலும், ஒரு சமுதாயம் என்ற முறையில் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான இந்து சமூகத்திற்கு வெளியில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

-    காமன்ஸ் சபையில் 1940 ஆகஸ்டு 14ல் இந்தியா மந்திரி மேதகு திரு.எல்.எஸ்.அமெரி ஆற்றிய உரையிலிருந்து

(iv) இந்தக் காரணங்களை எல்லாம் விவரமாகத் திரும்பிக் கூறிக் கொண்டிராமல், அச்சமயம் மன்னர்பிரான் அரசாங்கம் தெளிவாகக் கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்:-

(அ) போர் முடிந்த பிறகு இந்திய தேசிய வாழ்வின் பிரதான சக்திகள் கலந்தாலோசித்து ஓர் உடன்பாடான அரசியலமைப்பை வகுக்க வேண்டும், தேவையான ஓப்பந்த ஏற்பாடுகளை மன்னர் பிரான் அரசுடன் செய்து கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.

(ஆ) நீங்கள் தெரிவித்திருப்பதுபோல் மத்திய சட்டமன்றத்திற்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ள ஒரு “தேசிய அரசாங்கத்தை” அமைக்க வேண்டுமானால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்தத் திருத்தத்தைச் செய்வது சாத்தியமல்ல. இன, சமய சிறுபான்மையினரதும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரதும் நலன்களைப் பாதுகாக்கும் தங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்வதும், அதேபோன்று இந்திய சமஸ்தானங்களுடன் தங்களுக்குள்ள ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதுமே இந்த நிபந்தனைகளின் நோக்கமாகும்.

- 1944 ஆகஸ்டு 15ஆம் தேதியிட்டு திரு.காந்திக்கு வைசிராய் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.

5. தீண்டப்படாதவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை என்ற அமைச்சரவைத் தூதுக்குழுவின் முடிவு இது சம்பந்தமான உண்மைகளை நேர்மையாக ஆராய்ந்து எடுத்த முடிவல்ல. மாறாக, தூதுக்குழு செய்ததென்னவென்றால் திரு.காந்தியின் தப்பெண்ணங்களைத் தட்டிக் கொடுத்ததுதான். தீண்டப்படாதவர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் ஒரு தனி அங்கமாக ஏற்பதை திரு.காந்தி மூர்க்கமாக எதிர்த்தார். வட்டமேசை மாநாட்டிலும் அவர்களை சிறுபான்மையினராக ஏற்க மறுத்தார்.

அவருடைய எதிர்ப்பிற்கு மாறாக திரு.ராம்சே மெக்டொனால்டின் வகுப்புவாரித் தீர்ப்பில் அவர்கள் தனி அங்கமாக ஏற்கப்பட்டதை அறிந்ததும், தீண்டப்படாதவர்கள் தனி அங்கமாக ஏற்கப்பட்டதை அறிந்ததும், தீண்டப்படாதவர்கள் தனி இனம் எனக் குறிப்பிட்டதை திரும்பப் பெறவில்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் மிரட்டினார். மீண்டும் 1945-ல் முதல் சிம்லா மாநாட்டில் மன்னர் பிரான் அரசு தீண்டப்படாதவர்களுக்குத் தனி அந்தஸ்து அளிக்கப்பட்டதை அறிந்ததும் திரு.காந்தி அதனை எதிர்த்தார். அமைச்சரவைத் தூதுக்குழுவினர் தங்களுடைய யோசனைகள் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். திரு.காந்தியின் இசைவைப் பெற்றாலொழிய இது சாத்தியமில்லாமல் இருந்தது.

திரு.காந்தி கேட்ட விலையை தூதுக்குழு கொடுத்தது. தீண்டப்படாதவர்களுக்கான தனி அரசியல் அங்கீகாரத்தைப் பலியிடுவதுதான் அந்த விலை. இன்னும் சொல்லப்போனால் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அமைச்சரவைத் தூதுக்குழுவின் பிரேரணைகள் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் திரு.காந்தி முன்வைத்த திட்டத்தின் மறுபதிப்புத் தானே தவிர வேறல்ல. அரசியல் ரீதியாக மூன்று இனங்களைத்தான் தாம் ஏற்றுக் கொள்ளப்போவதாகத் திரு.காந்தி கூறினார். அவர்கள் 1) இந்துக்கள் 2) முஸ்லீம்கள் 3) சீக்கியர்கள். தூதுக்குழுவின் திட்டம் திரு.காந்தியின் திட்டத்தின் அசல்தான். வேறு விளக்கம் அதற்கு ஒன்றுமில்லை.

III

அமைச்சரவைத் தூதுக்குழு தனது முடிவுகளை நியாயப்படுத்த முன்வைத்த ஆதாரங்கள்

6. தீண்டப்படாதவர்களைத் தனி ஒரு அங்கமாக அங்கீகரிக்காததன் முடிவை நியாயப்படுத்த அமைச்சரவைத் தூதுக்குழு மாகாண சட்டசபைகளுக்கு 1948 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. 1946 ஜூலை 18-ஆம் நாள் அமைச்சரவைத் தூதுக்குழுவின் பிரேரணைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்பொழுது, தூதுக் குழு உறுப்பினர்கள் பின்கண்ட விஷயங்களை வலியுறுத்த முயற்சித்தனர்:

(i) அதாவது இந்தத் தேர்தலில், தீண்டப்படாதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட எல்லா தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது; ஆகவே காங்கிரஸ் தீண்டப்படாதவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்நிலைமையில், தீண்டப்படாதவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளிப்பது நியாயமல்ல.

(ii) அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்துக்கும் எனக்கும் பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களில் மட்டும் தான் ஆதரவு உள்ளது.

7. சோடையான ஆதாரங்கள்

இவை அதீதமான அசுரத்தனமான கருத்துகள்; ஆழமான, நேர்மையான நுண்ணாய்வின்முன் இவை எடுபட மாட்டா. காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மையை மதிப்பிட தேர்தல் முடிவுகளை அடிப்படையாக எடுத்துக் கொண்டதின் மூலம் அமைச்சரவைத் தூதுக்குழு துவக்கத்திலேயே ஒரு பெரும் தவறைச் செய்துவிட்டது. இதன் காரணமாக தூதுக்குழு கீழ்க்கண்ட சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது.

i) இந்து வாக்காளர்கள் போர்க்காலம் முழுவதும், தீவிர பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாகவே இருந்தார்கள். அவர்கள் போர்க்காலப் பணிகளைச் செய்தாலும் அவற்றை விரும்பிச் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் எதிர்ப்பாளராய் இருந்ததும், போர் முயற்சிகளில் ஒத்துழையாமல் இருந்ததும் இந்து வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்து அக்கட்சியின்பால் ஈர்த்தது. மற்றைய கட்சிகள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாய் இருந்தாலும் போர் முயற்சிகளில் ஒத்துழைத்ததாலும் தேர்தலில் மிகுந்த பாதிப்புக்குள்ளாயின.

ii) தேர்தல் நாள் குறிப்பிடப்பட்ட நாளுக்குச் சற்று முன்னர்தான், வைஸ்ராய் மற்றும் தலைமை தளபதி இந்திய தேசிய ராணுவத்தினர் மீது விசாரணையைத் துவக்கினர். காங்கிரஸ் உடனே இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆதரவாகக் கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பிற்று. இந்த விசாரணை தேர்தல் பிரச்சினையாகவும் ஆகிவிட்டது. சடசடவென்று சரிந்து கொண்டிருந்த காங்கிரசின் செல்வாக்கைத் தூக்கிப்பிடித்து நிற்கும் ஒரு முக்கிய ஆதாரக்கோலாக இந்த விசாரணை அமைந்துவிட்டது என்று கூறலாம்.

iii) “சுதந்திரம் வேண்டும்”, “வெள்ளையனே வெளியேறு” என்ற கோஷத்தின் அடிப்படையில்தான் தேர்தல் நடைபெற்றது; எதிர்கால இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது இத்தேர்தலில் ஒரு பிரச்சினையாக இடம்பெறவில்லை. அவ்வாறு இந்தப் பிரச்சினை இடம்பெற்றிருந்தால் காங்கிரஸ் தற்பொழுது பெற்ற பெரும்பான்மையைப் பெற்றிருக்கவே முடியாது.

iv) காங்கிரசை எதிர்த்து நின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வேட்பாளர்களிடம் தேர்தல் அதிகாரிகளும், தொகுதி பொறுப்பு அலுவலர்களும் காட்டிய பகைமை உணர்வை தூதுக்குழு கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. இந்த அதிகாரிகள் அனைவரும் சாதி இந்துக்களாக இருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாக்குச்சீட்டைத் தர மறுக்கும் அளவுக்கும் வேட்பு மனுக்களை ஏற்க மறுக்கும் அளவுக்கும் கூட அவர்கள் சென்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தீண்டப்படாத வாக்காளர்கள் தயாராக இல்லை என்ற காரணத்துக்காக சாதி இந்துக்கள் அவர்களை எத்தகைய கொடுமைக்கும் வன்முறைக்கும் பயமுறுத்தலுக்கும் உள்ளாக்கினார்கள் என்பதைத் தூதுக்குழு கணக்கில் எடுத்துக கொள்ளவில்லை.

ஆக்ரா நகரத்தில் தீண்டப்படாதவர்களின் 40 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பம்பாயில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மற்றும் நகர்ப்புறங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லவே அனுமதிக்கப்படவில்லை. நாக்பூரில், தாழ்த்தப்பட்ட வாக்காளர்களை பயமுறுத்தித் துரத்துவதற்காகவே குற்றவியல் நடுவரின் அனுமதியில்லாமலேயே காங்கிரஸ் அனுதாபமுள்ள ஒரு காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். இதைப்போன்று இந்தியாவில் அனைத்து இடங்களிலும் எண்ணிலடங்கா நிகழ்ச்சிகள் நடந்தன.

8. இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால், தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி முற்றிலும் அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைமைகளால்தான் என்பதைத் தூதுக்குழுவினர் உணர்ந்திருப்பார்கள். இந்தச் சூழ்நிலைமைகளில் நடந்த தேர்தல்களின் முடிவுகளை வைத்துக் கொண்டு சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளிக்க இயலாது என்று நியாயப்படுத்தக்கூடாது.

அமைச்சரவைத் தூதுக்குழு அதன் முடிவிற்கு எப்படி ஒரு தவறான அளவுகோலை எடுத்துக் கொண்டது

9. காங்கிரஸ் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியா, இல்லையா என்பதை முடிவு செய்யத் தூதுக்குழு எடுத்துக் கொண்ட அளவுகோல், தீண்டப்படாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இறுதித் தேர்தல்களில் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது என்பதாகும். இந்த அளவுகோல் ஒரு தவறான அளவுகோல். ஏனெனில் இறுதித் தேர்தல்களின் முடிவுகள் தீண்டப்படாதவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. புனா ஒப்பந்தத்தின்படி இறுதித் தேர்தல்கள் இந்து வாக்குகளால் முடிவு செய்யப்படுகின்றன.

அப்படியானால் தூதுக்குழு எடுத்துக் கொண்டிருக்க வேண்டிய உண்மையான அளவு கோல் எது? தீண்டப்படாதவர்கள் எவ்வாறு வாக்களித்தார்கள், காங்கிரசுக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை, எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை என்பதைக் கண்டறிவதுதான் உண்மையான அளவுகோலாகும்.

இது பூர்வாங்க தேர்தலின் முடிவுகள் மூலம்தான் கண்டறியப்படுமேயொழிய இறுதிச் சுற்றுத் தேர்தல் முடிவுகளின் மூலம் அல்ல. ஏனெனில் பூர்வாங்கத் தேர்தலில்தான் தீண்டப்படாதவர்கள் மட்டும் வாக்களிக்கின்றனர்.

பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டால் அமைச்சரவைத் தூதுக் குழுவின் முடிவுகள் உண்மைக்குப் புறம்பானவை, அபத்தமானவை என்பதை அறியலாம். ஏனெனில் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்களில் காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 28 சதவீதம் தான்; எதிர்த்து போடப்பட்ட வாக்குகளோ 72 சதவீதம்.

10. தாங்கள் காங்கிரசைச் சார்ந்தவர்கள் அல்ல என்று தீண்டப்படாதவர்கள் நினைத்திருந்தால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகள் ஒவ்வொன்றிலும் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தலைப் பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உண்மையில், இந்தியா முழுமைக்கும் 43 தொகுதிகளுக்கு மட்டும்தான் பூர்வாங்கத் தேர்தல்கள் இருந்தன. மீதம் 108 தொகுதிகளில் தீண்டப்படாதவர்கள் ஏன் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தலை நடத்தவில்லை? இந்த வாதம் கீழ்க்கண்ட காரணங்களினால் அர்த்தமற்றது:

i) பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல் கட்டாயமானவையல்ல. ஒரு தொகுதியில் நான்கு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால்தான் அது கட்டாயமாகிறது. பூர்வாங்கச் சுற்றுத் தேர்தலில் நிற்பவர் இறுதித் தேர்தலிலும் போட்டியிடும் தேவை ஏற்படுகிறது என்பது உணரப்படுவதில்லை. இரண்டு தேர்தல்களிலும் போட்டியிடுவதால் ஏற்படக்கூடிய செலவை தாங்கிக் கொள்ள தீண்டத்தகாதவர்களால் முடியாது என்பதால் பூர்வாங்கச் சுற்று தேர்தல்களில் அவர்களை நிற்கத் தூண்டுவது சிரமமான காரியமாக இருக்கிறது.

ஆகவே, 43 தொகுதிகளுக்குத்தான் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல் நடத்தப்பெற்றது என்பதை தீண்டப்படாதவர்கள் காங்கிரசிடம் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்ற கருத்தினுக்கு அடிப்படையாகக் கொள்ள முடியாது.

ii) பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று காங்கிரசைத்தான் கேட்க வேண்டும். ஏனெனில், தீண்டப்படாதவர்களின் பிரதிநிதி தாங்கள்தான் என்று காங்கிரஸ் கருதியிருந்தால் 151 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தி இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு எந்த ஒரு கட்சியும் வர முடியாமல் செய்திருக்கலாம்.

காங்கிரஸ் இதைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, 43 பூர்வாங்கத் தேர்தல்களில் கூட ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் ஒரு வேட்பாளரைத்தான் நிறுத்தியது. அதுவும் முதல் நான்கு பேர்களில் ஒருவராக வந்து இறுதிச் சுற்றில் இந்து வாக்குகளின் பலத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையால்தான் அவ்வாறு செய்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்குக் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை என்பதை அக்கட்சி தெரிந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

iii) தாழ்த்தப்பட்டவர்கள் 1937-ல் தான் முதல் முறையாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். 1937-க்குப் பிறகுதான் தீண்டப்படாதவர்கள் தேர்தல்களில் பங்கு கொள்வதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத் துவங்கினர். தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம் காங்கிரசால் தோற்கடிக்கப்பட்டது என்பதனால் தாழ்த்தப்பட்டவர்கள் காங்கிரசுடன் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவது தவறானது.

தேர்தல்களின் முடிவுகளைக் கொண்டு சம்மேளனத்திற்குப் பாதகமான முடிவுகளை எடுப்பதற்கு முன் அமைச்சரவைத் தூதுக்குழு காங்கிரசுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்திற்கும் இடையே உள்ள சமமில்லாத பலத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தங்களுடைய முடிவுகளை நியாயப்படுத்த தூதுக்குழு முன்வைத்த ஏனைய ஆதாரங்களின் பயனற்றத் தன்மை

11. டாக்டர் அம்பேத்கரைப் பின்பற்றுவோர் பம்பாய் ராஜதானி மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே என்று அமைச்சரவைத் தூதுக்குழு உறுப்பினர்கள் வாதிட்டனர். இந்தக் கூற்றுக்கு அடிப்படையே இல்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்மேளனம் மற்ற மாகாணங்களிலும் இயங்கி வருவது மட்டுமன்றி, பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களைப் போல் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் தேர்தல் வெற்றிகளை அந்த இடங்களில் அது பெற்றிருக்கிறது.

தூதுக்குழு இந்த அறிக்கையை வெளியிடுமுன் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் பெற்ற தனிப்பெரும் வெற்றியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது. அவர் வங்க மாகாண சட்டசபையிலிருந்து வேட்பாளராகப் போட்டியிட்டார். பொதுத் தொகுதியினைப் பொறுத்தவரை அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.சரத் சந்திரபோசைக் கூடத் தோற்கடித்து வாக்களிப்பில் முன்னணியில் இருந்தார்.

டாக்டர் அம்பேத்கருக்கு பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு வெளியே செல்வாக்கு இல்லையெனில் அவர் எப்படி வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்? வங்க மாகாண சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 30 இடங்கள் உள்ளன என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். மொத்தம் 80 பேரில் காங்கிரஸ் வேட்பாளர்களாக 28பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர் கட்சியைச் சேர்ந்த இருவரில் தேர்தல் நாளன்று ஒருவருக்கு உடல்நலமில்லை. இதையும் மீறி டாக்டர் அம்பேத்கர் வாக்குபதிவில் முதன்மையில் இருந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் அவருக்காக வாக்களித்திருந்தாலொழிய இது நடந்திருக்க முடியாது வங்காளத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர் டாக்டர் அம்பேத்கரின் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். காங்கிரசைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் அவருடைய இனத்தைச் சாராதிருந்தும் அவரைத்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவராகக் கருதுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இது தூதுக் குழு உறுப்பினர்களின் அறிக்கையை முழுவதுமாக நிராகரிக்கிறது.

12. அரசியல் நிர்ணய சபையை அமைப்பதில் ஒரு சீரான முறையை நடைமுறைப்படுத்த, மற்ற வகுப்பினரின் விஷயத்தில் நடந்ததைப் போலவே தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்திலும், இறுதிச் சுற்றுத் தேர்தல் முடிவுகளே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சரவைத் தூதுக்குழு உறுப்பினர்கள் வாதிட்டனர். இது ஏதோ சாக்குப்போக்காக விளக்கங் கூறுவதாக இருக்கிறதே தவிர வலுவானதாகவே இல்லை; முஸ்லீம்கள், இந்தியக் கிறித்தவர்கள் மற்று சீக்கியர்கள் ஆகியோரது இறுதிச் சுற்றுத் தேர்தல்கள் தனி வாக்காளர் தொகுதிகளைக் கொண்டது என்பது தூதுக்குழுவுக்குத் தெரியும். ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இறுதித் தேர்தல் தனி வாக்காளர் தொகுதிகளைக் கொண்டது அல்ல.

இதன் காரணமாக ஒரே சீரான முறையைக் கடைபிடிக்க அரசியல் நிர்ணய சபையில் தீண்டப்படாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு பூர்வாங்கத் தேர்தல் முடிவுகளை தூதுக்குழு கணக்கிலெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். தூதுக்குழு இதைச் செய்யக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் தீண்டப்படாதவர்களுக்கான தேர்தல் முறை பற்றி புனா ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானது அல்ல என்று விவாதத்தின் பொழுது சர் ஸ்டாபோர்ட் கிரிப்சால் ஒப்புக் கொள்ளப்பட்டது. பின் ஏன் தூதுக்குழு அப்போது இதை தனது முடிவுக்கு அடிப்படையாக ஏற்றுக் கொண்டது?

 IV

எதிர்நோக்கும் அபாயத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?

13. சாதி இந்துக்கள் அறுதிப் பெரும்பான்மையினராக உள்ள அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்டவர்களை முற்றிலும் அவர்களது தயவில் இருக்கும் படி தூதுக்குழு விட்டுவிட்டது. மன்னர்பிரான் அரசின் வகுப்புவாரித் தீர்ப்பில் தங்களுக்கு வழங்கப்பட்டதான வாக்காளர் தொகுதிகளை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்றும், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து திரு.காந்தியினால் தங்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட புனா ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்றும் தீண்டப்படாதவர்கள் விரும்புகின்றனர்.

இதை, இந்துக்கள் எதிர்க்கக் கூடும். இந்துப் பெரும்பான்மையினரின் தயவில் தாங்கள் விடப்பட்டு விட்டதாக தாழ்த்தப்பட்டவர்கள் முறையீட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஓர் ஆலோசனைக்குழு அமைக்கலாம் என்ற யோசனையைத் தூதுக்குழு பிரபலப்படுத்தி வருகிறது. இந்த உத்தேச ஆலோசனைக் குழுவின் அதிகாரங்களையும் அமைப்பையும் ஆராயும் எவரும் அது மோசமானதிலும் மோசமானது என்ற முடிவுக்கே வருவார்கள்.

i) அதன் அமைப்பில் அது அரசியல் நிர்ணய சபையின் ஒரு வெளிறிய பிரதிபிம்பமாகவே இருக்கும். அரசியல் நிர்ணய சபையைப் போலவே இதிலும் இந்துக்கள்தான் ஆதிக்கம் வகிப்பார்கள்.

ii) சிறுபான்மையினரின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனைக் குழுவின் முடிவுகள் சாதாரணப் பெரும்பான்மையைக் கொண்டே மேற்கொள்ளப்படும். இதன் பொருள் என்னவென்றால் அந்த முடிவுகள் சாதி இந்துக்களால் எடுக்கப்பட்டு, சிறுபான்மையினர் மீது திணிக்கப்படும் என்பதுதான்.

iii) சிறுபான்மையினரின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனைக் குழுவின் முடிவுகள் சாதாரணப் பெரும்பான்மையைக் கொண்டே மேற்கொள்ளப்படும். இதன் பொருள் என்னவென்றால் அந்த முடிவுகள் சாதி இந்துக்களால் எடுக்கப்பட்டு, சிறுபான்மையினர் மீது திணிக்கப்படும் என்பதுதான்.

iv) ஆலோசனைக் குழுவின் முடிவுகள் சாதகமாயிருந்தாலும் அவை வெறும் பரிந்துரைகளாகவே இருக்கும்; அவை அரசியல் நிர்ணய சபையை எந்த வகையிலும் கட்டுப்படுத்த மாட்டா.

14. ஆலோசனைக் குழுவை அமைக்கும் திட்டம் ஒரு மோசடி அல்லாவிட்டாலும் அது ஒரு கேலிக்கூத்து என்பதில் ஐயமில்லை. அது சிறுபான்மையினரின் நலனுக்கு இந்துப் பெரும்பான்மையினர் இழைக்கும் தீங்கிற்கு எதிராக செயல்படும் என்று நம்ப முடியாது. இந்துப் பெரும்பான்மையினர் தங்களுடைய நெடுநோக்கான திட்டங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களை இலக்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றே கூற வேண்டும்.

ஒரு பெரும்பான்மையினர் அளிக்கக் கடமைப்பட்டுள்ள அரசியல் பாதுகாப்பினை அவர்களிடமிருந்து கோரும் உரிமையை தீண்டப்படாதவர்களுக்கு மறுக்க அவர்கள் முடிவு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சி 1946 ஜூன் அன்று (இனம் 21, 6861) எழுதிய கடிதத்தில் இருந்து இது தெள்ளத் தெளிவாகிறது. அக்கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்ற ஒரு நிலையை காங்கிரஸ் எடுத்துள்ளது. இது ஓர் அதிர்ச்சியூட்டும் அறிக்கையாகும்.

ஏனெனில் 1939, அக்டோபர் 21 ஆம் தேதிய ‘ஹரிஜன்’ என்ற தமது வார இதழில் தாழ்த்தப்பட்டவர்கள்தான் இந்தியாவின் ஒரே உண்மையான சிறுபான்மையினர் என்று திரு.காந்தியே ஒப்புக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் இவ்வாறு ஒரு முழுக் குட்டிக்கரணம் அடித்துள்ளது. காங்கிரஸ் தற்பொழுது எடுத்துள்ள நிலையானது, தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினர் என்று குறிப்பிடும் இந்திய அரசின் 1935 ஆம் வருடச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு முரணானது. இந்தத் தலைகீழ் மாற்றத்தின் மூலம் என்ன தீங்கு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது சாத்தியமல்ல.

தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினராகக் காங்கிரஸ் கருதவில்லை என்றால் அரசியல் நிர்ணய சபை மற்ற சிறுபான்மையினருக்கு அளிக்க ஒப்புக்கொண்டுள்ள அதே பாதுகாப்பினை இவர்களுக்கு அளிக்க மறுக்கக்கூடும். ஆகவே ஆலோசனைக் குழுவால் இந்த ஆபத்திலிருந்து தீண்டப்படாதவர்களைக் காப்பாற்ற முடியாது.

15. ஆகவே, தீண்டப்படாதவர்களின் நிலை ஆபத்துக்குள்ளாக்கப்படாமலிருப்பதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும். அது அளித்த வாக்குறுதிகளுக்காக மட்டுமன்றி அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் நடைமுறைப்படுத்தப்படக் கூடியவை அல்ல என்பதற்காகவும் இதைச் செய்ய வேண்டும்.

16. நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும்? தற்காலிக அரசைப் பொறுத்தவரை தீண்டப்படாதவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் களையப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்களுக்கான ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவாவுகின்றனர். நிர்வாக சபைக்கு தங்கள் பிரதிநிதியை நியமனம் செய்யும் உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று விழைகின்றனர்.

இவை புதிய கோரிக்கைகள் ஒன்றும் அல்ல. 1945 ஆம் வருட சிம்லா மாநாடு முதற்கொண்டே அவை தாழ்த்தப்பட்டவர்களின் தனிபெரும் உரிமைகள் என்று குறிப்பிடப்பட்டு வந்துள்ளன. இந்த தீங்கு இப்போது களையப்படுவது கடினம் என்று அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் சூழ்நிலைகள் மாறி, அரசு திருத்தியமைக்கப்பட்டால் இந்தத் தீங்கைச் சரிசெய்யும்படி நாடாளுமன்றம் மன்னர்பிரான் அரசை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

17. தங்களுடைய அரசியல் பாதுகாப்பினைப் பறிக்க முடிவுசெய்துள்ள சாதி இந்துக்கள் நிறைந்துள்ள அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பாற்ற தற்பொழுது எவ்வளவோ செய்ய முடியும். இந்த ஆபத்தினைத் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்:

I. தாழ்த்தப்பட்டவர்களை தாங்கள் சிறுபான்மையினராகக் கருதுவதாக பிரகடனம் செய்யும்படி மன்னர்பிரான் அரசை வலியுறுத்தலாம்.

1946 ஜூன் 25-ஆம் நாளைய கடிதத்தில் (இனம் 21/6861) காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டின்படி இது மிக முக்கியமானது. காங்கிரசுக்கு வைஸ்ராய் எழுதிய 1946 ஜூன் 27-ஆம் தேதிய (இனம் 38/6861) கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்ற காங்கிரசின் நிலைப்பாட்டைக் குறித்த ஒரு மறுப்பைத் தவிர்த்திருப்பதால் இது மிகமிக அவசியமாகிறது. தற்பொழுது அரசு ஓர் உறுதிமொழி அளிக்க வற்புறுத்தப்படவில்லையென்றால் தாழ்த்தப்பட்டவர் இரு வழிகளில் பாதிக்கப்படுவர்:

அ) இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் நிர்ணய சபை சிறுபான்மையினருக்கான உரிமையை அவர்களுக்கு அளிக்க மறுக்கும்.

ஆ) தாழ்த்தப்பட்டவர்களை ஒரு சிறுபான்மையினர் எனப்பாவிக்கத் தாங்கள் கட்டுப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தை வைத்து மன்னர்பிரான் அரசு அவர்களின் உதவிக்கு வர இயலாது போகும்.

II. சிறுபான்மையினருக்கு அரசியல் நிர்ணய சபை வகுத்துத் தந்திருக்கும் பாதுகாப்புகள் போதுமானவையா, உண்மையானவையா என்று ஆராய ஒரு அமைப்பை மன்னர்பிரான் அரசு நிறுவுமா, அப்படியெனில் எவ்வகையில் நிறுவும் என்பதை அறிவிக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

அ) அமைச்சரவைத் தூதுக்குழுவினர் தங்களுடைய 1946, மே 25-ஆம் நாள் (6835) கூடுதல் அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:

“அரசியல் நிர்ணய சபை தனது பணிகளை முடித்துக் கொண்டவுடன், இறையாண்மையை இந்திய மக்களுக்கு மாற்றித் தருவதற்குத் தேவையான செயல்பாடுகளை நாடாளுமன்றத்திற்கு மன்னர்பிரான் அரசு பரிந்துரைக்கும்; சர்ச்சைக் கிடமற்ற முறையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு விஷயங்களை மட்டுமே இதற்கு முன்நிபந்தனையாக விதிக்கும் அவையான: ஒன்று சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு (அறிக்கையின் 20வது பத்தி) போதுமானபடி வழி வகை செய்ய வேண்டும். இரண்டு அதிகார மாற்றம் (அறிக்கையின் 22-வது பத்தி) சம்பந்தமாக எழும் விஷயங்களைப் பற்றி மன்னர்பிரான் அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள இணங்க வேண்டும்.”

இந்தப் பத்தியின் பொருள் சரியாக விளக்கப்படவில்லை. எனவே, தங்களுடைய எண்ணத்தை தெள்ளத் தெளிவாக்கும்படி மன்னர்பிரான் அரசு வலியுறுத்தப்பட வேண்டியது அவசியம்.

ஆ) “மட்டுமே” என்ற சொற்கள், அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்படும் சிறுபான்மையினர் பாதுகாப்பு போதுமானவையா, அவை உண்மையானவையா என்பதை அறியும் உரிமையை மன்னர்பிரான் அரசே வைத்துக் கொள்ளும் என்ற பொருளைக் கொண்டதெனில், அந்த ஆய்வுக்கு எந்த வகையான அமைப்பை நிறுவப்போகிறார்கள் என்று அறிவிக்கும்படி மன்னர்பிரான் அரசை வலியுறுத்துவது அவசியம்.

சிறுபான்மை வகுப்பினரில் இருந்து சாட்சிகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைப்பது மிகப் பொருத்தமானதாக இருக்கும். இதற்கு ஒரு முன்னுதாரணம் உள்ளது. 1935 ஆம் வருட இந்திய அரசுச் சட்டம் வகுக்கப்பட்டு வந்த வேளையில் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் அறிக்கை சம்பந்தமாக இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றுவதில் தவறு ஒன்றும் இல்லை.

III. சாதாரண பெரும்பான்மையினர் மூலம் சிறுபான்மையினரின் பாதுகாப்பினை நீக்குவதற்கு எதிர்கால இந்திய சட்டமன்றங்களுக்குள்ள அதிகாரத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு விதி அரசியல் நிர்ணய சபை உருவாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டத்தை மாற்றுவதற்கும் சிறுபான்மையினருக்குள்ள பாதுகாப்புகளை நீக்குவதற்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

இந்திய சட்டமன்றங்களால் இந்தப் பாதுகாப்புகள் நீக்கப்படக்கூடுமானால் நாடாளுமன்றத்தில் இப்பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பயனே இல்லை. இச்செயல்களுக்கெதிரான ஒரே பாதுகாப்பு என்னவெனில் இந்திய சட்டமன்றங்களின் அரசியல் சட்ட அதிகாரங்களுக்கு ஒரு எல்லை நிர்ணயிப்பதும், சிறுபான்மையினரின் பாதுகாப்புகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும்தான். இவை போன்ற சில வழிவகை ஏற்பாடுகள் அமெரிக்க அரசியல் சட்டத்திலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ளன.

அ) இவ்விஷயம் சிறுபான்மையினருக்கு மிக முக்கியமானது எனினும் அமைச்சரவைத் தூதுக்குழு இதைச் சிந்திக்கவே இல்லை. இதுபற்றி தனது கருத்தைத் தெரிவிக்கும்படி மன்னர்பிரான் அரசை வலியுறுத்துவது அவசியமாகும்.

 (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும், எழுத்தும் - தொகுப்பு 19)