தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் ஆரம்பத்தில் சிதறுண்ட பிரிவினராக இருந்தவர்களா என்ற கேள்விக்கு என்னுடைய பதில் ‘ஆம்’ என்பதாகத்தான் இருக்கும். அப்படியானால் இதற்கு சான்று என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்து கிராமங்களில் தீண்டத்தக்கவர்கள், தீண்டத்தகாதவர்களின் குலமரபுச் சின்னங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இதற்கான நேரடிச்சான்று கிடைத்திருக்கக்கூடும். ஆனால் இந்துக்கள் மற்றும் தீண்டப்படாதவர்களின் குலமரபுச் சின்னங்கள் பற்றிய ஆய்வு துரதிருஷ்டவசமாக மனித இன ஆராய்ச்சியாளர்களால் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய தகவல்கள் கிடைத்திருக்குமானால் இந்த இயலில் எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சினை குறித்து ஒரு திட்டவட்டமான அபிப்பிராயத்தைக் கூறுவது சாத்தியமாகி இருக்கும். எனினும் இப்போதைக்கு, ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த தீண்டப்படாதவர்களின் குலமரபுச் சின்னங்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களின் குலமரபுச் சின்னங்களிலிருந்து வேறுபடுகின்றன என்பதை நான் மேற்கொண்ட விசாரணைகள் தெளிவுபடுத்தியுள்ளன என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும்.

            ambedkar 400 copyகுலமரபுச் சின்னங்களைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கிராம சமூகத்தில் உள்ளடங்கிய குலத்திலிருந்து மாறுபட்ட ஒரு குலத்தைச் சேர்ந்த சிதறுண்ட பிரிவினரே தீண்டப்படாதவர்கள் என்ற கருத்துக்கு மிகச் சிறந்த ஆதாரமாகக் கொள்ளலாம். எனினும் இப்பிரச்சினைகளுக்கு மிகுந்த முக்கியத்துவமுடைய இத்தகைய நேரடிச் சான்று இனிமேல்தான் பெறப்படவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் ஆதிகாலத்து சிதறுண்ட பிரிவினரே என்பதை மெய்ப்பிப்பதற்கு சில வாத ஆதாரத் தகவல்கள் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இவ்வகையில் இருவித ஆதாரத் தகவல்கள் இருக்கின்றன.

            முதலாவதாக, இந்து சாத்திரங்கள் சில சமூகத்தினருக்கு அளித்துள்ள அந்த்யாக்கள் அந்த்யஜாக்கள், அந்த்யவாசின்கள் போன்ற பெயர்களை எடுத்துக் கொள்வோம். மிகத் தொன்மைக் காலம் முதலே இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. மக்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரைக் குறிப்பதற்கு ஏன் இந்தப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன? இந்தப் பதங்களுக்குப் பின்னால் ஏதோ பொருள் இருப்பதாகத் தோன்றுகிறது. இவை ஒரு மரபு மூலத்திலிருந்து தோன்றிய சொற்கள் என்பதில் ஐயமில்லை. அந்தம் என்ற வேர்ச் சொல்லிருந்து இவை பிறந்தவை. அந்தம் என்னும் சொல்லின் பொருளென்ன? சாஸ்திரங்கள் கற்ற இந்துக்கள் பின்வருமாறு வாதிக்கின்றனர்: அந்தம் என்பது கடைசியாகப் பிறந்தவனைக் குறிக்கிறது; இந்துக்களின் தெய்வீகப் படைப்புச் சித்தாந்தப்படி தீண்டப்படாதவன் தான் கடைசியாகப் பிறந்தவன். எனவே அந்த்யன் என்னும் சொல் தீண்டப்படாதவனையே குறிக்கிறது. இந்த வாதம் அபத்தமானது, இந்துப் படைப்புச் சித்தாந்தத்துக்கு முரணானது. இந்துச் சித்தாந்தப்படி சூத்திரன்தான் கடைசியாகப் பிறந்தவன். சூத்திரன் சவர்ணன். தீண்டப்படாதவனோ அவர்ணன் அதாவது வருண அமைப்பு முறைக்கு அப்பாற்பட்டவன். இந்து படைப்புச் சித்தாந்தத்தை தீண்டப்படாதவனுக்குப் பயன்படுத்த முடியாது. எனது அபிப்பிராயத்தில் அந்த்யன் என்னும் சொல் படைப்பு வரிசையில் கடைசியாகப் பிறந்தவனை குறிக்கவில்லை; மாறாக கிராமத்தின் எல்லையையே அர்த்தப்படுத்துகிறது. கிராமத்தின் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட பெயர்தான் இது. எனவே, அந்த்யன் என்பது வாழ்விடத்துடன் தொடர்புடைய சொல். ஒரு காலத்தில் மக்களில் சிலர் கிராமத்திற்குள் வசித்து வந்தனர் என்பதையும், வேறுசிலர் கிராமத்திற்கு வெளியே அதாவது அந்த்யத்தில் வசித்து வந்தவர்கள் அந்த்யஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்தச் சொல்லிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

            மக்களில் ஒரு பகுதியினர் கிராமத்தின் எல்லையில் ஏன் வாழ்ந்துவந்தனர்? அவர்கள் அந்நியர்களாக சிதறுண்ட பகுதியினர், கிராமத்திற்குள் வசித்துவந்த குலத்தினரிடமிருந்து வேறுபட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க முடியுமா? வேறு எந்தக் காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவர்களைக் குறிப்பதற்கு சில குறிப்பிட்ட சொற்கள் பயன்படுத்தப்படுவதிலிருந்து இதுதான் உண்மையான காரணமாக இருக்கும் என்பது நிச்சயமாகிறது. அந்த்யர்கள், அந்த்யாக்கள், அந்த்யவாசின்கள்  என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு இரட்டை முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக, தனி குடியிருப்பு வட்டாரங்களில் வசிப்பது ஒரு நூதனமான நிகழ்வுப்போக்காக இருந்ததால் அதற்கு சொல்வடிவம் கொடுப்பதற்கு புதிய துறைச்சொற்களை உருவாக்க வேண்டியிருந்தது என்பதை இது காட்டுகிறது. இரண்டாவதாக, அவ்வாறு உருவாக்கப்பட்ட சொற்கள் அவை யாரைக் குறித்தனவோ அந்த அன்னியர்களது நிலைமைகளைத் துல்லியமாக எடுத்துக்காட்டுபவையாக உள்ளன.

            அடுத்து, இரண்டாவது ஆதாரத் தகவல்களைப் பார்ப்போம். சிதறுண்ட பகுதியினரான தீண்டப்படாதவர்கள் மகர்கள் எனப்படும் சமூகத்தினரை ஒத்தவர்களாக இருந்தனர் என்பதை இந்தத் தகவல்கள் புலப்படுத்துகின்றன. மகர் சமூகத்தினர் மகாராஷ்டித்திலுள்ள பிரதான தீண்டப்படாத சமூகத்தினராவர், இதுதான் மகாராஷ்டிரத்திலுள்ள மிகப் பெரிய தீண்டப்படாத சமூகமாகும். மகர்களுக்கும் தீண்டத்தக்க இந்துக்களுக்குமிடையேயான தொடர்புகள் குறித்த பின்கண்ட தகவல்கள் நமது கவனத்திற்குரியவையாகும். 1.மகர்களை ஒவ்வொரு கிராமத்திலும் காணலாம்; 2.மகாராஷ்டிரத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சுவர் இருக்கிறது, மகர்களின் குடியிருப்புகள் இந்தச் சுவருக்கு வெளியே இருக்கின்றன; 3.மகர்கள் தங்களுக்குள் முறைவைத்துக்கொண்டு கிராமத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றனர். 4.இந்துக்களிடமிருந்து மகர்கள் 52 உரிமைகளைப் பெற்றிருக்கின்றனர். இந்த 52 உரிமைகளில் மிக முக்கியமானவை வருமாறு:

  • கிராமவாசிகளிடமிருந்து உணவு பெறும் உரிமை;
  • அறுவடைக் காலத்தில் ஒவ்வொரு கிராமவாசியிடமிருந்தும் தானியமணிகள் பெறும் உரிமை;
  • கிராமவாசிகளுக்குச் சொந்தமான செத்த விலங்குகளைத் தங்களுடையதாக்கிக் கொள்ளும் உரிமை.

மகர்களின் நிலையிலிருந்து நாம் பெறும் சான்று மகாராஷ்டிரத்துடன் மட்டுமே சம்பந்தப்பட்டதாகும். இந்தியாவின் இதர பகுதிகளிலும் இத்தகைய நிலை இருக்கிறதா என்பது இனிமேல்தான் ஆராயப்படவேண்டும். மகர்கள் விஷயத்தை இந்தியா முழுவதிலுமுள்ள தீண்டப்படாத மக்களுக்கு மாதிரி எடுத்துக்காட்டாகக் கொள்வோமானால் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்வதாகிறது; அதாவது இந்திய வரலாற்றின் ஒரு கட்டத்தில் ஏனைய குலங்களைச் சேர்ந்த சிதறுண்ட பிரிவினர் குடியமர்ந்த குலங்களிடம் வந்து ஒரு பேரம் செய்து கொண்டனர். அதன்படி அவர்கள் கிராமத்தின் எல்லையில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர், சில பணிகளைச் செய்யவும் ஒப்புக்கொண்டனர். இதற்குப்பிரதியாக அவர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டன என்பதை நாம் ஒப்புக்கொண்டவர்களாகிறோம். கிராமவாசிகளிடமிருந்து மகர்கள் பெற்ற 52 உரிமைகள் பேடாரின் முஸ்லீம் மன்னர்கள் அவர்களுக்கு வழங்கியவையாகும். இந்த உரிமைகள் மிகத் தொன்மையானவை என்பதையும், பேடார் மன்னர்கள் அவற்றை உறுதி மட்டுமே செய்தார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

இவை போதிய தகவல்கள் அல்லாவிட்டாலும் தீண்டப்படாதவர்கள் ஆரம்பம் முதலே கிராமத்துக்கு வெளியே வசித்து வந்தனர் என்ற கருத்துக்கு ஆதரவாக இவை சில சான்றுகளை அளித்துள்ளன. அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற காரணத்திற்காக கிராமத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; கிராமத்துக்கு வெளியேதான் வசிக்க வேண்டுமென்று அவர்கள் எவ்வகையிலும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. தொடக்க காலம் முதலே அவர்கள் கிராமத்திற்கு வெளியே வசித்து வந்தார்கள் என்றால், குடிபெயர்ந்த குலத்திடமிருந்து வேறுபட்டதொரு குலத்தைச் சேர்ந்த சிதறுண்டவர்களாக அவர்கள் இருந்ததே இதற்குக் காரணம்.

தீண்டப்படாதவர்கள் எப்போதுமே தீண்டப்படாதவர்களாக இருந்தனர் என்ற கருத்தை இந்த விளக்கம் பெருமளவுக்கு அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதனை ஏற்பதில் சிரமமிருக்கிறது. இன்றைய தீண்டப்படாதவர்களின் மூதாதையர்கள் தீண்டப்படாதவர்களாக இல்லாத ஒரு காலம் இருந்தது என்பதையும், அவர்கள் சிதறுண்ட பிரிவினராக மட்டுமே இருந்தனர் என்பதையும் அவர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே நிலவிய ஒரே வேறுபாடு அவர்கள் வெவ்வேறு குலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதையும் நினைவிற்கொண்டால் இந்த சிரமமும் மறைந்துவிடும்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 4)

Pin It