விரிவடைந்த முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டின் ஆறாவது கூட்டம் அக்டோபர் 27ஆம் தேதி புதுடில்லியில் தொடங்கிற்று. இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இந்த மாநாடு செயல்பட்டு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் ஸ்தாபன அமைப்பில் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தன. எனவே, அந்த குறைபாடுகளை அகற்றும் பொருட்டு மாநாட்டின் சட்ட திட்டங்களில் சில மாற்றங்கள் செய்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.           

ambedkar 313மாநாட்டின் அதிகார வரம்பெல்லைக்குள் வரும் விஷயங்களை இரண்டு பட்டியல்களாகப் பிரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார்: வேலைவாய்ப்புக்கான விதிமுறைகள், நிபந்தனைகள், தொழிலாளர் சட்டங்கள், சமூகப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்ற எல்லாப் பொது விஷயங்களும் முதல் பட்டியலில் அடங்கும். தொழிலாளர் நலம் மற்றும் தொழிலாளர் சட்ட அமலாக்கம் சம்பந்தப்பட்ட அனைத்து ஸ்தூலமான பிரச்சினைகளும் இரண்டாவது பட்டியலில் இடம்பெறும்.

            இக்கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் நிகழ்த்திய உரையின் முழு வாசகம் வருமாறு:

            “இங்கு குழுமியிருக்கும் பிரதிநிதிகளை வரவேற்கும் வகையில் ஒரு வார்த்தையும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் ஒரு வார்த்தையும் கூறுவதைத் தவிர கூட்டத் தலைவர் தமது துவக்க உரையில் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று இருக்குமாயின் அதைப்போன்ற மிக எளிதான, மகிழ்வளிக்கும் பணி வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் கூட்டத் தலைவர் இதைவிடவும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்பது மரபு. நம்முடையது போன்ற தொழிலாளர் மாநாட்டின் தலைவர் தாம் பேச வேண்டிய பொருளைத் தேர்ந்தெடுப்பது எளிதான விஷயமல்ல. இது தத்துவஞானிகளின் மாநாடல்ல. எனவே கூட்டத்தலைவர் ஒரு பெரிய கற்றறிவாளராக செயல்பட முடியாது; என்னென்னவோ தத்துவங்களை எல்லாம் சரமாரியாகப் பொழிந்து, சமூக உள்ளடக்கம் இல்லாத வகையில் சொற்சிலம்பம் ஆடி, தம்மை எவ்வகையிலும் கட்டுப்படுத்திக் கொள்ளாதவராக நடந்து கொள்ள முடியாது. மேலும், இது சமூகத்தைப் புனரமைக்கும் மாநாடுமல்ல. எனவே, முதலாளித்துவத்தையும், சோஷலிசத்தையும், கம்யூனிசத்தையும் மற்றும் இதர தத்துவங்களையும் பற்றி இங்கு விரிவாக ஆய்வாராய்வு செய்து கொண்டிருக்கவும் முடியாது.

            “அதே போன்று இந்த மாநாடு ஓர் அறநெறிக் கழகத்தின் கூட்டமுமல்ல; ஆகவே, வாய்மையை, நேர்மையைப் பற்றி உணர்ச்சிகளைத் தூண்டிக் கிளறிவிடும் வகையில் கூட்டத்தலைவர் இங்கு ஆவேசமாக, உணர்ச்சிப் பிழம்பாகப் பேசவும் முடியாது. அதேசமயம், ஒரு தொழிலாளர் மாநாட்டுக்குத் தலைமை தாங்குபவன் எத்தகைய பாணியில் துவக்க உரையை நிகழ்த்த வேண்டும் என்பதையும் அறியாதவன் நான். ஆதலால் இந்த இடர்ப்பாட்டை, இக்கட்டைத் தவிர்க்கும் நோக்கத்தோடு உங்களுக்கு நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி இங்கு பேசலாம் என்று எண்ணுகிறேன். இவ்வாறு இங்கு பேசுவது பொருத்தமற்றது என்று நீங்கள் கருதமாட்டீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

            “இந்த மாநாட்டு உறுப்பினர்களின் ஆர்வத்துக்கும் அக்கறைக்குமுரிய இரண்டு முக்கியமான விஷயங்கள் பற்றி இங்கு பேசலாம் என்றிருக்கிறேன். முதலாவதாக, மாநாட்டாலும் தொழிலாளர் நிரந்தரக் கமிட்டியாலும் விவாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளின்பால் அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது குறித்த ஒரு பொதுவான படப்பிடிப்பினை உங்களுக்கு வழங்க எண்ணுகிறேன். இரண்டாவதாக, முத்தரப்பு அமைப்பின் சட்ட திட்டங்களிலும் நடைமுறையிலும் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

            “முதல் விஷயம் இந்தத் தொடக்க உரைக்குள் அடங்கக் கூடியதல்ல. உங்கள் நிகழ்ச்சி நிரலைக் கருத்திற்கொண்டு பார்க்கும் போது இது நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும். இதனை நீங்கள் சகித்துக் கொள்ள மாட்டீர்கள். எனவே, இந்த விஷயம் குறித்த ஒரு தனி அறிக்கையை வெளியிட விரும்பினேன். அந்த அறிக்கை ஏற்கெனவே உங்கள் கைகளில் இருக்கிறது. இதனை எனது துவக்க உரையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

முத்தரப்பு அமைப்பு

          “இனி நான் எடுத்துக் கொள்ள வேண்டிய அடுத்த விஷயம் இந்த மாநாட்டின் அமைப்பு மற்றும் அதன் நடைமுறைகள் சம்பந்தப்பட்டதாகும். இந்த மாநாடும் தொழிலாளர் நிரந்தரக் குழுவும் செயல்பட்டு வந்துள்ள இரண்டாண்டுக்கால அனுபவம் நம் முன்னே உள்ளது. இது நீண்ட அனுபவம் என்று கூறிவிட முடியாது. எனினும் இது குறுகிய கால அனுபவமே ஆயினும் ஸ்தாபனத்தில் காணப்படும் சில பலவீனங்களை, குறைபாடுகளை அது வெளிப்படுத்தியுள்ளது. பின்கண்ட குறைபாடுகள் கடுமையானவையாகத் தோன்றுகின்றன:-

  • மாநாட்டுக்கும் தொழிலாளர் நிரந்தரக் குழுவுக்கும் இடையே அவற்றின் பணிகள் தெள்ளத்தெளிவான முறையில், துல்லியமான விதத்தில் பிரிக்கப்படவில்லை. இவற்றில் ஒன்று கலந்தாலோசனை அமைப்பாகவும் மற்றொன்று நிர்வாக அமைப்பாகவும் இல்லை. இரண்டுமே கலந்தாலோசனை அமைப்புகளாகவே உள்ளன.
  • இரண்டு அமைப்புகளும் செய்யும் பணி ஒரே தன்மையினதாக இருந்து வருகிறது. இரண்டு அமைப்புகளில் விவாதிக்கப்படும் விஷயங்களும் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன.
  • பொதுவானப் பிரச்சினைகளுக்கும் குறிப்பிட்ட வகைப்பட்ட பிரச்சினைகளுக்கும் இடையே தெள்ளத்தெளிவான வேறுபாடு இல்லாததால் மாநாட்டிலும் குழுவிலும் நடைபெறும் விவாதங்கள் பொதுப்படையானவையாக அமைந்து விடுகின்றன. இதனால் உரிய பலன் கிட்டாமல் போய்விடுகிறது. குறிப்பிட்ட திட்டவட்டமான பிரச்சினைகள் கூடப் பொதுப்படையான பிரச்சினைகளாகப் பாவிக்கப்படுகின்றன.
  • விசேடப் பிரச்சினைகளைப் பரிசீலிப்பதற்கும் அவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. இது ஒரு முக்கியமான பணி; இத்தகைய பணியை மேற்கொள்வதற்குப் பொறுப்பேற்கக்கூடிய ஒரு சிறந்த ஏற்பாட்டினைச் செய்வது அவசியம்.
  • தொழில் வாரியாக தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து உரிய ஆலோசனை கூறுவதற்குத் தகுந்த ஏதும் இல்லை.

தனித் தலைமைச் செயலகம்

            “ஸ்தாபன அமைப்பில் காணப்படும் இரண்டாவது பலவீனத்தையும் மாநாட்டு உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டினர். தொழிலாளர் மாநாட்டுக்கு ஒரு தனித்தலைமைச் செயலகம் இல்லாதது தான் அந்தக் குறைபாடாகும். பின்கண்ட பணிகளை ஆற்றுவதற்கு ஒரு தனித் தலைமைச் செயலகம் இருப்பது அவசியம் என்று யோசனை கூறப்பட்டது:-

(அ) கூட்டங்களுக்குத் தயாரிப்புகள் செய்தல் (அதாவது அறிக்கைகளைச் சுற்றுக்கு விடுதல், கூட்டங்கள் நடைபெறும் தேதிகளையும், நிகழ்ச்சி நிரலையும் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தல் முதலியவை);

(ஆ) கூட்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகளைத் தயாரித்தல்;

(இ) பிரசுரங்களை வெளியிடுவதன் மூலமும் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதன் மூலமும் பிரசாரம் செய்தல்;

(ஈ) தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ஊதியம் அளித்தல், மாநாட்டில் பங்கு கொள்ளும் அரசு சார்பற்ற உறுப்பினர்களுக்குப் பிரயாணப்படி வழங்குதல் போன்ற நிதிநிர்வாகத்தை மேற்கொள்ளுதல்;

(உ) விவாதங்கள் செய்வதற்கும் பரிந்துரைகள் வழங்குவதற்கும் அடிப்படையாக அமையக்கூடிய தகவல்களைச் சேகரித்தல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்;

(ஊ) அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.

“புகாருக்கு இடமளிக்கக்கூடிய வேறு இரண்டு விஷயங்களும் உள்ளன. இவற்றில் ஒன்று தொழிலாளர் மாநாட்டுக்கும் தொழிலாளர் நிரந்தரக் குழுவுக்கும் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது சம்பந்தப்பட்டதாகும். நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்குத் தற்போது கடைப்பிடித்துவரும் நடைமுறை இரண்டு அம்சங்களில் குறைபாடுடையதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, மாநாட்டு உறுப்பினர்களும் சரி, குழு உறுப்பினர்களும் சரி தங்களுக்கு அக்கறையுள்ள விஷயங்களை நிகழ்ச்சி நிரலில் தங்கள் விருப்பம் போல் சேர்க்க உரிமை பெற்றிருக்கவில்லை. இரண்டாவது குறைபாடு நிகழ்ச்சி நிரலோடு அனுப்பப்படும் பொது நிலை அறிக்கை உறுப்பினர்களிடம் மிகவும் தாமதமாகச் சேர்ப்பிக்கப்படுவதாகும்; இதனால் அறிக்கையை ஆழமாக ஆராய்வதற்கும், இது சம்பந்தமான விவாதத்தில் பங்கு கொள்ளத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்கும் உறுப்பினர்களுக்குப் போதிய அவகாசம் கிடைப்பதில்லை.

“குறை கூறுவதற்கு இடம் தரும் மற்றொரு விஷயம் மாநாட்டிலும் தொழிலாளர் நிரந்தரக் குழுவிலும் பல்வேறு தரப்பினர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பது சம்பந்தப்பட்டதாகும். தொழிலதிபர்கள் சார்பில் மூன்று இடங்களுக்கு அரசாங்கமே தங்களுக்கு வேண்டியர்களை நியமிப்பது ஆட்சேபகரமானது என்று தொழிலதிபர்கள் கூறுகின்றனர். இந்தியத் தொழிலதிபர்கள் சம்மேளனமும், அகில இந்தியத் தொழிலதிபர்கள் அமைப்பும் இந்தியாவில் தொழிலதிபர்கள் வர்க்கத்தை முழு அளவுக்குப் பிரதிநிதித்துவப்படுத்துபவை. அப்படியிருக்கும்போது நியமனத்தின் மூலம் மேலும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகளை நியமிக்கும் நடைமுறை தேவையற்றது என்பது அவர்களது வாதம். தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையிலும் கோளாறு இருக்கிறது; தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரில் ஒருவர் கூட உண்மையில் உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவரல்ல.

“இது சம்பந்தமாக எத்தகைய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று நீங்கள் என்னை இயல்பாகவே வினவலாம். தொழிலாளர் மாநாடு சிறந்த முறையில் செயல்படுவதற்கும், அதன் அமைப்பிலுள்ள எத்தகைய கடுமையான கோளாறு காரணமாகவும் அதன் செயல்பாட்டில் அது பின்தங்கியிராதிருப்பதற்கும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் சித்தமாக இருக்கிறேன். ஆனால் எந்த ஒரு திட்டவட்டமான முடிவுக்கும் வருவதற்கு முன்னர் இவை எல்லாம் நன்கு ஆழமாக ஆராயப்பட வேண்டிய விஷயங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். இந்தப் பலவீனங்களில், குறைபாடுகளில் சிலவற்றை அரசாங்கம் பரிசீலித்து சில முடிவுகளுக்கு வந்துள்ளது. இவற்றில் இன்னமும் ஆராயப்படாதவையும் சில உள்ளன. அரசாங்கம் பரிசீலித்து முடிவுக்கு வந்துள்ளவற்றை இங்கு முதலில் குறிப்பிட விரும்புகிறேன். தனித்தலைமைச் செயலகம், நிகழ்ச்சி நிரல் மற்றும் பிரதிநிதித்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் இவற்றில் அடங்கும். 

ஆலோசனை கூறும் குழு மட்டுமே

            “தொழிலாளர் மாநாட்டுக்கு ஒரு தனித் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐ.எல்.ஓ.வை மனத்திற்கொண்டு எழுப்பப்பட்டுள்ள கோரிக்கை என்றே கருதுகிறேன். ஆனால் ஐ.எல்.ஓ.வுக்கும் நம்முடைய முத்தரப்பு அமைப்புக்கும் இடையே அடிப்படையான வேறுபாடு உள்ளது என்று அரசாங்கம் அபிப்பிராயப்படுகிறது. ஐ.எல்ஓ. என்பது வெர்சேல்ஸ் சமாதான உடன்படிக்கையின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சுதந்திரமான அமைப்பு. அதன் நடைமுறை மரபுகளும் பரிந்துரைகளும் எல்லா உறுப்பு நாடுகள் மீதும் சில திட்டவட்டமான கடமைப் பொறுப்புகளைச் சுமத்துகின்றன; இந்தக் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறும் நாடுகள் சில குறிப்பிட்ட சர்வதேச விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக நேரிடும். அது தனது சொந்த சட்ட திட்டங்களால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறது; எந்த ஓர் வெளி அதிகாரத்துக்கும் அது ஆட்பட்டதல்ல. இதுவன்றி, அது தனது சொந்த நிதி வசதிகளைக் கொண்டிருக்கிறது; ஏதேனும் ஒரு புதிய பணியை மேற்கொள்ள முடிவுசெய்யும்போது, அது வேறு ஒரு நாட்டின் அல்லது இலாகாவின் பொருளுதவியைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

            “நமது முத்தரப்பு அமைப்பு ஐ.எல்.ஓ.வைப் போன்ற ஒரு சுதந்திர அமைப்பல்ல. அதற்கென சொந்த நிதிவசதிகள் ஏதுமில்லை, இருக்கவும் முடியாது. அது ஓர் ஆலோசனை அமைப்பு மட்டுமேயாகும்; அதன் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்படும் விஷயங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுவதற்காகவே அது அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அது தானாகவே எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவ்வாறு முடிவெடுக்க அதனை அனுமதிப்பது சட்டமன்ற அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொள்வதற்க அதனை அனுமதிப்பதற்கு ஒப்பாகும். இந்த வேறுபாடுகளை எல்லாம் கருத்திற் கொண்டு நோக்கும்போது, தொழிலாளர் மாநாட்டுக்கு ஒரு தனித்தலைமைச் செயலகத்தை உருவாக்குவது அரசாங்கத்துக்கும் மாநாட்டுக்கும் இடையே உரசலும் மோதலும் ஏற்படுவதற்கே இட்டுச் செல்லும் என்பது தெள்ளத் தெளிவு.

            “ ஐ.எல்.ஓ. தனது ஆற்றலையும் சிறப்பாகப் பணிபுரியும் திறனையும் பெரும்பாலும் தனது தலைமைச் செயலகத்திலிருந்து பெற்றது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் “ஆராய்ச்சி மற்றும் தகவல் பணியை”த் தவிர தலைமைச் செயலகம் செய்யக்கூடிய எல்லாப் பணிகளையும் இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறைத் தலைமைச் செயலகமே செய்ய முடியும் என்று இந்திய அரசாங்கம் கருதுகிறது. “ஆராய்ச்சி மற்றும் தகவல்” பணியைப் பொறுத்த வரையில், தொழிலாளர் நலத்துறை இப்பணியைச் சீரமைக்க சில நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறது; இதன்படி தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இதர பல பிரச்சினைகள் குறித்து ஆராயவும் தகவல் திரட்டவும் ஏற்பாடு செய்யப்படும். முத்தரப்பு அமைப்புக்கு ஒரு தனித் தலைமைச் செயலகத்தை உருவாக்கும் யோசனையை மேலே கூறிய காரணங்களுக்காக இந்திய அரசாங்கம் தற்போதைக்கு ஆதரிக்கவில்லை.

நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் உரிமை

            நிகழ்ச்சி நிரல் பிரச்சினையை அரசாங்கம் ஆராய்ந்தது மாநாட்டு நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் உரிமையை தங்களால் விட்டுக் கொடுக்க இயலாது என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மாநாடு ஒரு சட்டமன்றமல்ல. அது ஓர் ஆலோசனை அமைப்பு மட்டுமே ஆகும். எனவே, எத்தகைய விஷயங்களில் தங்களுக்கு ஆலோசனை தேவை என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்.

            “நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் உரிமையை மாநாட்டுக்கு அரசாங்கம் ஏன் விட்டுக் கொடுக்க இயலாது என்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. மாநாட்டு உறுப்பினர்கள் எத்தகைய விஷயங்கள் குறித்து விவாதம் நடத்துகிறார்களோ அத்தகைய விஷயங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களை மாநாட்டுக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்; மேலும் அவர்கள் இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்குப் போதிய அவகாசம் அளிக்க வேண்டும்; இவ்வாறு செய்யாத வரை நிகழ்ச்சி நிரலில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இடம் பெறச் செய்வது அரசாங்கத்துக்குச் சாத்தியமல்ல. ஆனால் அதேசமயம் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்குத் தங்களுக்குள்ள உரிமைக்கு உட்பட்டு நடைமுறை ஒழுங்கை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.

            “தற்போதுள்ள நடைமுறை ஒழுங்கின்படி, ஒரு கூட்டம் முடிவடைந்த பிறகு, தத்தமது யோசனைகளைத் தெரிவிக்குமாறு அரசாங்கங்களையும், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களின் அமைப்புகளையும் தொழிலாளர் நலத்துறை கேட்டுக் கொள்கிறது; இந்த யோசனைகளின் அடிப்படையில் அடுத்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய விஷயங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுவதற்கான விஷயங்களைத் தெரிந்தெடுப்பது குறித்து அரசாங்கம் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கத்துக்கும் மாநாட்டுக்கும் அல்லது ஆலோசனைக் குழுவுக்கும் இடையே கலந்தாலோசனை எதுவும் நடைபெறுவதில்லை. ஆனால் திருத்தப்பட்ட நடைமுறை ஒழுங்கின்படி, அரசாங்கமும் தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளும் நிகழ்ச்சி நிரல் சம்பந்தமாக ஏதேனும் யோசனைகள் தெரிவிக்க விரும்பும்போதெல்லாம் அவற்றைப் பெறுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கும். இவ்வாறு இந்த அமைப்புகள் யோசனைகள் ஏதும் தெரிவிக்கத் தவறினால் ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதிநிதிகளிடமிருந்து யோசனைகளை அரசாங்கம் வரவேற்கும்.

“அரசாங்கம் மற்றொரு மாற்றத்தைச் செய்யவும் தயாராக இருக்கிறது: அதாவது நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் விஷயத்தில் அரசாங்கம்தான் இறுதி முடிவை எடுக்கும் என்ற போதிலும் இது சம்பந்தமாகத் தெரிவிக்கப்படும் எல்லா யோசனைகளையும் ஒவ்வொரு கூட்டத்திலும் விவாதிப்பதற்கு அது முன்வைக்கும். உறுப்பினர்களின் விருப்பங்களை அரசாங்கம் அறிந்து கொள்ள இது வாய்ப்பளிக்கும்; அதேபோல் உறுப்பினர்களும் தங்கள் விருப்பங்களை வெளியிடும் வாய்ப்பினை பெறுவர். இப்போதுள்ள நிலைமையில் இது பெரும் மேம்பாட்டை உண்டுபண்ணும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

“மாநாட்டின் இயைபு பிரச்சினையைப் பொறுத்தவரையில் இது சம்பந்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகளில் மிகுந்த வலிமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இரண்டு தொழிலதிபர் அமைப்புகளும் அவை உரிமை கொண்டாடுவது போன்று முழுப் பிரதிநிதித்துவம் வாய்ந்தவையாக உண்மையிலேயே இருக்குமாயின், தொழிலதிபர்களின் பிரதிநிதிகளை அரசாங்கம் நியமிப்பது நியாயமில்லை என்பது தெளிவு. இதேபோன்று உழைக்கும் வர்க்கங்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளையும் சேம நலப் பிரச்சினைகளையும் பரிசீலிப்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் தங்கள் காரியங்களைத் தாங்களே செய்து கொள்ளும்படி அவர்களைப் பயிற்றுவிப்பதும் அவசியம். எல்லாத் தொழிலாளர் மாநாடுகளிலும் உழைக்கும் ஆண்களையும் உழைக்கும் பெண்களையும் பங்குகொள்ளச் செய்வதன் மூலம் இதனைச் சாதிக்கலாம். நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் சேமநலக் குழு அண்மையில் அமைக்கப்பட்டபோது அக்குழுவில் தொழிலாளர் வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நிலக்கரிச் சுரங்கத்தைச் சேர்ந்த ஓர் ஆண் தொழிலாளியையும் ஒரு பெண் தொழிலாளியையும் நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

சட்ட திட்டங்கள்: சில யோசனைகள்

          “எனவே, மாநாட்டின் இயைபில் தகுந்த மாற்றங்கள் செய்ய அரசாங்கம் எத்தகைய தயக்கமும் காட்டவில்லை. ஆனால் அதே சமயம் மாநாட்டின் இயைபில் மாற்றங்கள் செய்வது சம்பந்தப்பட்ட விஷயம் அத்தனை மிகவும் அவசரமானதல்ல, இது குறித்த பரிசீலனையை சிறிது காலம் ஒத்திவைக்கலாம் என்று அரசாங்கம் கருதுகிறது. செடி வேர் விட்டுவிட்டதா என்பதைப் பார்ப்பதற்கு அதனை அடிக்கடி மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டிருக்கக்கூடாது, அவ்வாறு செய்தால் அதுவே அந்தச் செடி வாடி, பட்டுப்போவதற்குக் காரணமாக இருக்கும் என்று முதலாவது முத்தரப்பு மாநாட்டில் நான் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும்.

            “மாநாட்டின் சட்ட திட்டங்களில் காணப்படும் குறைபாடுகளைப்பற்றி இப்போது பார்ப்போம். இந்தப் பலவீனங்கள், குறைபாடுகள் மிகவும் கடுமையானவை, அவற்றை அகற்றுவது அவசியம் என்பதை அரசாங்கம் உணர்கிறது. ஆனால் இது விஷயத்தில் அரசாங்கம் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. இது சம்பந்தமாக நீங்கள் முன்வைக்க விரும்பும் எந்த யோசனைகளையும் அரசாங்கம் வரவேற்கும். இதற்கிடையே இந்த விஷயம் குறித்து என் கருத்துகளைத் தெரிவிக்கலாமா? மாநாட்டின் சட்ட திட்டங்களில் பின்கண்ட மாற்றங்களைச் செய்யலாம் என்பது என் கருத்து:

(1) மாநாட்டின் அதிகார வரம்பிற்குள் வரும் விஷயங்களை இரண்டு பட்டியல்களாகப் பிரிக்கலாம். (அ) வேலை வாய்ப்புக்கான விதிமுறைகள், நிபந்தனைகள் முதலிய எல்லாப் பொது விஷயங்கள்; (ஆ) தொழிலாளர் சம்பந்தப்பட்ட சட்டங்கள்; (இ) சமூகப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் – ஆகிய இவை யாவும் முதல் பட்டியலில் அடங்கும். (அ) தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும், (ஆ) தொழிலாளர்கள் குறித்த சட்டங்களை அமல்படுத்துவது சம்பந்தப்பட்ட விஷயங்களும் இரண்டாவது பட்டியலில் இடம் பெறும். முதல் பட்டியலில் அடங்கியுள்ள விஷயங்கள் விரிவடைந்த மாநாட்டின் பரிசீலனைக்கு விடப்படும். விரிவடைந்த முத்தரப்பு தொழிலாளர் மாநாடு என்னும் பெயர் மிக நீளமாக இருப்பதால் “விரிவடைந்த முத்தரப்பு” என்னும் சொற்களை விட்டு விட்டு தொழிலாளர் மாநாடு என்று மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

(2) தொழிலாளர் சேமநலக் குழு என்னும் ஒரு புதிய அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் அதன் பொறுப்பில் விடப்படும்.

(3) இந்தத் தொழிலாளர் சேமநலக் குழுவின் இயைபு பின்கண்டவாறு அமைந்திருக்கும்: (அ) தொழிலாளர் நிரந்தரக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்; (ஆ) தொழிலதிபர்களின் பிரதிநிதி ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களையும் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திக் கொண்டுள்ள நகரசபை அமைப்புகளையும் ஏனைய அமைப்புகளையும் சேர்ந்த ஊழியர்களின் பிரதிநிதி ஒருவர்; (இ) அதிகார சார்பற்றவர்களிடமிருந்து அரசாங்கம் நியமிக்கும் நபர்கள்; (ஈ) இந்திய சமஸ்தானங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்; (2) மாகாண அரசாங்கங்களின் பிரதிநிதிகள்.

(4) தொழிலாளர் நிரந்தரக் குழுவின் இயைபைப் பொறுத்தவரையில் அதில் எத்தகைய மாற்றமும் இருக்காது. அதன் செயல்பாட்டில்தான் மாற்றம் இருக்கும். அது ஓர் ஆலோசனைக் குழுவாக இருக்காது. மாறாக அது அவ்வப்போது மாநாடு ஒதுக்கும் பணிகளை அதன் சார்பாகச் செய்துவரும்.

“ஆக இந்த ஏற்பாட்டின்படி மூன்று அமைப்புகள் இருந்து வரும்; மாநாடு, நிரந்தரக் குழு, சேம நலக்குழு.

“மாநாட்டின் பணிகளும் அதிகாரங்களும் பின்கண்டவாறு அமைந்திருக்கும்:

(1) வேலை வாய்ப்பு விதிகள் மற்றும் நிபந்தனைகள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்கள் பற்றியும், அதன் நிகழ்ச்சி நிரலில் சமூகப் பாதுகாப்பு சம்பந்தமாக இடம்பெறக்கூடிய அனைத்து விஷயங்கள் குறித்தும் பரிந்துரைகள் செய்தல்.

(2) சில நெறிமுறைகளைப் பின்பற்றும்படிக் கூறி குறிப்பிட்டதொரு விஷயத்தை தொழிலாளர் நிரந்தரக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புதல்; இது குறித்து மாநாட்டுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறுதல் அல்லது (ஆ) அரசாங்கத்துறையைச் செய்யும்படித் தெரிவித்தல்.

(3) நிகழ்ச்சி நிரலில் உள்ள எந்த ஒரு விஷயம் குறித்தும் பரிசீலித்து ஒரு பொறுப்பாளர் மூலம் (அ) மாநாட்டுக்கும் (ஆ) தொழிலாளர் நிரந்தரக் கமிட்டிக்கும் அறிக்கை தாக்கல் செய்தல்; அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்வதும் மாநாட்டுக்கு மேலும் தகவல் அளிப்பதுமே இதன் நோக்கம்.

தொழிலாளர் நிரந்தரக் கமிட்டியின் பணிகளையும் அதிகாரங்களையும் மாநாடு நிர்ணயிக்கும். அது மாநாட்டின் ஒரு பிரதிநிதி போல செயல்படும்; அது தனக்குள்ள அதிகாரத்தை மாநாட்டிடமிருந்து பெறும்; மாநாடு அதற்கு ஒதுக்கும் பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளையும் அது செய்யாது. பின்கண்டவை மட்டும் இதற்கு விதிவிலக்கு: எனினும் விரைவாக அபிப்பிராயம் தேவைப்படும் எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக தொழிலாளர் நிரந்தரக் குழுவுக்கு அரசாங்கம் அனுப்பலாம்; மாநாட்டுக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ இது சம்பந்தமாக அறிக்கை அனுப்பும்படிக் கோரலாம். எனினும் சாதாரணமாக தொழிலாளர் நிரந்தரக் குழுவின் எந்த அறிக்கையையும் அல்லது பரிந்துரையையும் மாநாட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும்.

“தொழிலாளர் நிரந்தரக் குழுவின் அதிகாரங்கள் பின்கண்டவாறு அமைந்திருக்கும்:

  • மாநாடு அபிப்பிராயம் கோரும் விஷயங்கள் சம்பந்தமாக பரிந்துரைக்களை அல்லது அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்;
  • அரசாங்கத்துக்கு அறிக்கை அனுப்பும்படி தொழிலாளர் நிரந்தரக் குழுவை மாநாடு பணித்தால் அவ்வாறு பரிந்துரைகளை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தல்;
  • தொழிலாளர் நிரந்தரக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்னும் ஆணையோடு நிகழ்ச்சி நிரலில் உள்ள எந்த ஒரு விஷயத்தையும் பரிசீலிப்பதற்கு ஒரு தனிக் குழுவை நியமித்தல்.

தொழிலாளர் சேமநலக் குழு

          “தொழிலாளர் சேமநலக் குழுவின் பணிகள் தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்டவையாகவும், தொழிலாளர் சட்டங்களை செயல்படுத்துதல் சம்பந்தமாகவும் இருக்கும். தன் முன்வைக்கப்படும் இத்தகைய விஷயங்கள் அனைத்தையும் பரிசீலித்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைகள் செய்வது அதன் அதிகார எல்லைகளுக்கு உட்பட்டவையாகும்.

“இவைதாம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள ஸ்தாபன பலவீனங்களை அகற்றுவதற்கு நான் முன்வைக்கும் யோசனைகளாகும். இந்த மாநாட்டின் உறுப்பினர் என்ற முறையில் சொந்தப் பொறுப்பில் இந்த யோசனைகள் உங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றிற்கு அளவு மீறி முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. எனினும் இது சம்பந்தப்பட்ட அணுகுமுறை ஆழமானதாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எனவே இந்தப் பிரேரணைகளை எல்லாம் இந்திய அரசாங்கத்தில் இலாகா வாரியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கருதுகிறேன். இவை காரிய சாத்தியமானவை எனத் தெரியவந்தால் அரசாங்கத்தின் முடிவுகள் உங்களது அபிப்பிராயத்துக்காக முன்வைக்கப்படும். ஸ்தாபனத்தில் காணப்படும் இத்தகைய குறைபாடுகளைக் கடுமையானவையாகக் கருதுகிறேன்; இது அவசரமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

“மாநாட்டையும், அதன் பல்வேறு அமைப்புகளை மறுசீரமைப்பதையும், அதன் நடைமுறையை மாற்றியமைப்பதையும், அதன் ஊழியர்களைச் சீர்திருத்துவதையும் குறித்துக் கூற வேண்டியதை எல்லாம் கூறி விட்டேன். அதன் திறனை அதிகரிப்பதிலும், அதன் பயன்தன்மையை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் ஆர்வமாக இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தொழிலாளர் சட்டங்கள்

            “இங்கு நான் எடுத்துரைக்க வேண்டிய மேலும் இரண்டு விஷயங்கள் உள்ளன. நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொழிலாளர் நலத்துறை பின்கண்ட மூன்று மசோதாக்களைத் தாக்கல் செய்யும்: தொழிற்சாலைகள் திருத்த மசோதா, ஊதியத்துடன் விடுமுறைகள் அளிப்பதற்கான மசோதா என இது அறியப்படும்; தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதற்கு வகை செய்யக் கூடிய தொழிற்சங்கங்கள் திருத்த மசோதா; ஊதிய பட்டுவாடா திருத்த மசோதா. முதல் இரண்டு மசோதாக்கள் மாநாட்டால் பரிசீலிக்கப்பட்டு விட்டன. மூன்றாவது மசோதா ஒரு புதிய மசோதா, நமது நடைமுறை ஒழுங்கின்படி விவாதத்திற்காக அது இப்போது உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

            “சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டின் 26 ஆவது கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியாவில் நடைபெற்றதை நீங்கள் அறிவீர்கள். அந்தக் கூட்டத் தொடரில் ஓர் இந்தியப் பிரதிநிதிக் குழுவும் பங்கு கொண்டது. லண்டனிலுள்ள இந்திய ஹைகமிஷனர் சர் சாமுவல் ரங்கநாதன் அந்தக் குழுவின் தலைவராகச் சென்றிருந்தார். தொழிலாளர் நல இலாகாச் செயலாளர் திரு.எச்.சி.பிரியோர், சி.எஸ்.ஐ., சி.ஐ.இ., ஐ.சி.எஸ்., இந்திய அரசாங்கத்தின் சார்பிலும், திரு.டி.ஜி.முல்கெர்கர் தொழிலதிபர்கள் சார்பிலும், திருவாளர்கள் ஜம்னாதாஸ் மேதா, எம்.எல்.ஏ., அப்தாப் அலி, ஆர்.ஆர்.போலே ஆகியோர் தொழிலாளர்கள் சார்பிலும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் அவர்கள் ஆற்றிய சிறப்புமிக்க பங்கையும், அவர்கள் செய்த அரிய பணியையும் பெரிதும் பாராட்டுவதில் என்னுடன் சேர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தக் குழுவினரின் அறிக்கை உங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அது மிகுந்த ஆர்வமூட்டுவதாகவும் பெரிதும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது திண்ணம்.

            “இதற்குமேல் பயனுள்ள முறையில் அதிகம் பேசுவதற்கு எதுவுமில்லை. எனது உரையைப் பொறுமையோடு செவிமடுத்துக் கேட்டமைக்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு என் பேச்சை முடித்துக்கொள்கிறேன். நம்மை எதிர்நோக்கும் பணிகளை இனிச் செய்யத் தொடங்குவோம்.”

டாக்டர் அம்பேத்கரின் தனி அறிக்கை

            முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டிலும் அதன் தொழிலாளர் நிரந்தரக் குழுவிலும் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை தொழிலாளர் மாநாட்டில் தாம் சமர்ப்பித்த தனி அறிக்கையிலும் டாக்டர் அம்பேத்கர் எடுத்துரைத்துள்ளார். இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விஷயங்களில் பின்வருபவையும் அடங்கும்: தொழில் தகராறுகளுக்குத் தீர்வு காணுதல், தொழிலாளர் நலம், தொழில் துறைத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கீடு, அரசாங்க ஒப்பந்தங்களில் நியாய ஊதியங்களை நிர்ணயித்தல், தொழில் நிலையங்களில் தொழிலாளர் நல அதிகாரிகளை நியமித்தல், வேலை வாய்ப்பு அலுவலகங்கள், தொழில்துறைப் புள்ளிவிவரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர் பிரதிநிதித்துவம், சமூகப் பாதுகாப்பு, அகவிலைப்படி, தொழில் நிலையச் சிற்றுண்டிச் சாலைகள்.

            இந்திய அரசாங்கம் வேலைவாய்ப்பு நிலையங்களை அமைக்கத் தொடங்க வேண்டும் என்று 1943 மே மாதம் நடைபெற்ற தொழிலாளர் நிரந்தரக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் ஒருமித்த கருத்து நிலவியது. தொழில்நுட்ப ஊழியர்கள் தேவை என்று விளம்பரம் செய்வதைத் தடைசெய்ய வேண்டும் என்று மத்திய அரசு முன்வைத்த பிரேரணை பொதுவாக ஏற்கப்பட்டது. இந்த இரண்டு பிரேரணைகளும் செயல்படுத்தப்பட்டன. தொழில் நுட்ப ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக பல மையங்களில் வேலைவாய்ப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டன. (1) தொழில் தகராறுகள் துரிதமாகத் தீர்த்து வைக்கப்பட வேண்டும், (2) தற்போது நடைமுறையிலுள்ள 1929 ஆம் வருட தொழில் தகராறுகள் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும், நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சமரச உணர்வை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் அமைந்திருக்க வேண்டும் என்று கூட்டத்தில் பொதுவான கருத்து நிலவியது. புதிய தொழில் தகராறுகள் சட்டத்தை இயற்றும் யோசனை மத்திய அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது; அதேசமயம், தொழில் தகராறுகளைத் தாமதமின்றித் தீர்த்துவைக்கும் படி மாகாண அரசாங்கங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

பெனின் பயிற்சித் திட்டம்

            இந்தக் கூட்டத்தின் மற்றொரு விஷயமும் எழுப்பப்பட்டது. பெவின் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தொழிற்சங்க அமைப்புகள் தேசிய சேவை தொழிலாளர் முறை மன்றங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் இந்த முறை மன்றங்கள் அந்தப் பிரதேசத்திலுள்ள பிரதான தொழிற்சங்கங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இத்தகைய முறையைக் கடைப்பிடிக்கும் விஷயம் பரிசீலனையில் உள்ளது. தொழிலாளர்களின் நலன்கள் துறையில், சேமநல நிதியானது குடியிருப்பு வசதி செய்துதருதல், கல்வி முதலியவற்றுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற குழுவின் யோசனை அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது. ஆனால் இது சம்பந்தமாக நடைமுறை சாத்தியமான திட்டம் எதையும் வகுப்பதில் பெரும் சிரமங்களும் சிக்கல்களும் உள்ளன என்று டாக்டர் அம்பேத்கரின் அறிக்கை கூறுகிறது.

            தொழில் நிலையங்களின் நிர்வாகம், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களின் இதர பிரதிநிதித்துவ அமைப்புகள் போன்றவை நடத்தும் தானியக் கடைகள் மூலம் தொழில்துறைத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தொழில்துறை தொழிலாளர்களுக்கு கூட்டுறவு தானியக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்து 1943 ஜனவரியில் நடைபெற்ற தொழிலாளர் நிரந்தரக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. ஆனால் பெரிய நகரங்களிலும் அவற்றையடுத்துப் படிப்படியாக சிறிய நகரங்களிலும் உணவுப் பொருள்கள் பங்கீட்டு முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரைகள் காலத்துக்கு ஒவ்வாதவையாகி விட்டன. எனினும் பங்கீட்டுத் துறை அதிகாரிகள் தொழிற்சாலைகளின் நிர்வாகங்கள் நடத்தும் உணவு தானியக்கடைகளைக் கூடிய மட்டும் பயன்படுத்தி வருகின்றன.

நியாய ஊதிய நிதி

          1943 மே மாதம் நடைபெற்ற தொழிலாளர் நிரந்தரக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் அரசாங்க ஒப்பந்தங்களில் நியாய ஊதியத்தை உத்தரவாதம் செய்யும் ஓர் விதியைச் சேர்ப்பது குறித்து ஒரு நியாயமான உடன்பாடு ஏற்பட்டது பற்றி அம்பேத்கரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்தியப் பொதுப் பணித்துறை ஒப்பந்தங்களில் மத்திய அரசாங்கம் “நியாய ஊதியம்” குறித்த விதியை சேர்த்திருப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடப்பட்டது.

            அனைத்துப் பெரிய தொழில் நிலையங்களிலும் கூடிய மட்டும் தொழிலாளர் நல அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசாங்கம் தனக்குச் சொந்தமான தொழில் நிலையங்களில் செயல்படுத்தி வருகிறது. மாகாண அரசாங்கங்களும், சமஸ்தான அரசாங்கங்களும், தனியார் தொழில் நிலையங்களும் இவ்வாறே செய்யும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஊழியர் நலத்துறை அதிகாரிகளைத் தாங்கள் நியமித்திருப்பதாக இந்திய சுரங்க உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

            தொழில் தகராறுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை மத்தியஸ்துக்கான உத்தரவில் குறிப்பிட வேண்டும் என்ற குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டு, அதற்கிணங்க இந்தியப் பாதுகாப்பு விதி 8 (அ) மாற்றப்பட்டிருக்கிறது. விசாரணையில் உள்ள அல்லது தகராறில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை தகராறில் சம்பந்தமில்லாத அவர்களது தவறான நடத்தைக்காகவோ, மத்தியஸ்தரின் அல்லது இது சம்பந்தமாக நியமிக்கப்படும் வேறு எந்த அதிகாரியின் அனுமதியின்றியோ தொழிலதிபர்கள் வேலையிலிருந்து நீக்கக்கூடாது என்னும் ஒரு விதியை மத்தியஸ்த உத்தரவில் சேர்ப்பது உசிதமானது என்று மாகாண அரசாங்கங்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட முக்கிய தொழில்களில் நிலவும் ஊதிய விகிதங்கள், வருவாய்கள், வேலை நேரம் முதலியவை சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களை அகில இந்திய அளவில் சேகரிக்கும் விஷயம் தீவிர பரிசீலனையில் உள்ளது.

வேலை இழத்தல்

          நிலக்கரி, கச்சாப் பொருள்கள் முதலியவற்றின் பற்றாக்குறை காரணமாக வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஒரு வகையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று 1943 செப்டம்பரில் கூடிய ஐந்தாவது தொழிலாளர் மாநாட்டின் கூட்டத்தொடரில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இத்தகைய நிவாரணம் அளிப்பது சம்பந்தமான கோட்பாடுகளைக் கடைபிடித்தொழுகும்படி வலியுறுத்தி மாகாண அரசாங்கங்களுக்கு மத்திய அரசாங்கம் ஒரு சுற்றுக் கடிதத்தை அனுப்பியுள்ளது; சம்பந்தப்பட்ட சமஸ்தானங்களின் கவனத்துக்கும் இந்தக் கடிதம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. சட்டமன்றங்கள், ஸ்தல ஸ்தாபன அமைப்புகள், சட்டக் குழுக்கள் பேன்றவற்றில் தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டத் தொடரில் தொழிலாளர் பிரதிநிதிகள் பெரிதும் வலியுறுத்தினர். இந்த விஷயம் பரிசீலனையில் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் டாக்டர் அம்பேத்கரின் அறிக்கை கொள்கைப் புனரமைப்புக் குழுக்கள், மத்திய சுகாதார ஆய்வுக் குழு, அபிவிருத்திக் குழு, மத்திய உணவு ஆலோசனைக் குழு போன்ற பல “மத்திய” அரசாங்கக் குழுக்களில் தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஊதியங்களும் வருமானங்களும்

            தொழிலாளர்களின் ஊதியங்கள், வருமானங்கள், வேலை வாய்ப்பு, குடியிருப்பு வசதிகள், சமூக நிலைமைகள் முதலியவற்றை விசாரித்தறிவதற்கு ஓர் அமைப்பு ஏற்படுத்துவது சம்பந்தமான தீர்மானம் ஒன்றை கூட்டத்தொடர் ஏற்றது; தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு கொள்கையைத் திட்டமிட்டு உருவாக்குவதற்கு அவசியமான தகவல்களைச் சேகரிப்பதே இதன் நோக்கமாகும். இத்தீர்மானத்துக்கு இணங்க தொழிலாளர் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது; அதன் அறிக்கை 1945ஆம் ஆண்டு மத்தி வாக்கில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

            250 அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டிருக்கும் தொழில் நிலையங்களில் நிலையாணைகள் முறையை நடைமுறைக்குக் கொண்டுவரும் விஷயத்தில் மாகாண அரசாங்கங்களும், சமஸ்தானங்களும், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களின் அமைப்புகளும் கலந்தாலோசிக்கப்பட்டன என்று டாக்டர் அம்பேத்கரின் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த விஷயம் குறித்து கூடிய விரைவில் ஒரு நிரந்தர சட்டம் இயற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இயற்றும் பணி பூர்த்தியடைவதற்குக் காத்துக் கொண்டிராமல் உடனடியாக நிலையாணைகளைத் தயாரிக்கும்படி இரண்டு அகில இந்திய தொழிலதிபர்களின் அமைப்புகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நிலையாணைகளைத் தயாரிப்பதற்குத் தொழிலதிபர்களுக்கு உதவும் நோக்கத்தோடு ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

            சட்டப்படியாக ஊதியங்களை ஒழுங்குபடுத்துவது சம்பந்தமாக நான்காவது தொழிலாளர் நிரந்தரக் குழுவில் நடைபெற்ற விவாதத்தின் பயனாக இது விஷயமாக ஓர் அமைப்பை நிறுவியது குறித்து ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்தச் சட்டத்தை எந்தெந்தத் தொழில்களுக்குப் பயன்படுத்துவது என்னும் பிரச்சினை தொழிலாளர் மாநாட்டின் இப்போதைய கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருக்கிறது. 

தொழில் நிலையச் சிற்றுண்டிச்சாலைகள்

            தொழில்கள் என்பதற்கு ஒரேமாதிரியான பொருள் வரையறை செய்வது சம்பந்தமாக ஆராய பம்பாய், ஐக்கிய மாகாணங்கள், வங்காளம், பீகார் ஆகிய நான்கு மாகாணங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன; இந்தக் குழுக்களின் பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனையின்படி, வேலைவாய்ப்பு நிலையங்களை நிர்வகிப்பது சம்பந்தமாக தேசிய சேவை தொழிலாளர் முறை மன்றங்களுக்கு ஆலோசனைகள் கூறி உதவும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கும் வேலை வாய்ப்புக் குழுக்கள் மூலம் தொழிலாளர் பிரதிநிதிகள் மத்திய வேலைவாய்ப்பு அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

            தொழில் நிலையங்களில் தொழிலாளர்களின் சிற்றுண்டிச் சாலைகளை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை டாக்டர் அம்பேத்கர் அறிக்கை குறிப்பிடுகிறது. அரசாங்கமோ, தொழிலாளர்களோ நடத்தும் சிற்றுண்டிச் சாலைகளுக்கும் அல்லது இவ்விரு தரப்பினருமே சேர்ந்து நடத்தும் சிற்றுண்டிச்சாலைகளுக்கும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்பந்தக்காரர்கள் நடத்தும் சிற்றுண்டிச்சாலைகளுக்கும் கூட வாடகை இல்லாமல் இடமும், இலவசமாக தட்டு முட்டுப் பொருள்களும், சமையல் பாத்திரங்களும் பிறவும் வழங்கப்படுகின்றன. இதல்லாமல் ரேஷன் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ரேஷன் உணவுப்பொருள்களும் இச்சிற்றுண்டிச் சாலைகளுக்கு தரப்படுகின்றன.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It