(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுப்பு I, 1943)

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா! திரு.மேத்தா கொண்டுவந்த தீர்மானம் இரண்டு விஷயங்களை எழுப்புகிறது. ஒரு விஷயம் என்னவெனில், சென்ற தடவை கிராக்கிப்படி மிகக் குறைவானதாகவும் போதுமானதற்றதாகவும் உள்ளது என்பது. இந்தத் தீர்மானம் தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுவதற்காக வருந்துகிறேன்.

    ambedkar 237 ஐயா! இந்திய சர்க்கார் அறிவித்த கிராக்கிப்படிகள் மிகக் குறைவாகவும் போதுமானதாக இல்லாமலும் இருக்கிறதென்பது திரு.மேத்தா எழுப்பியுள்ள முதல்பிரச்சினை. இருப்பதைப் பொறுத்த வரை, இது சம்பந்தமாக சர்க்கார் இறுதியான எந்த முடிவிற்கும் வரவில்லை என்பதை அவை கருத்தில் கொள்ள வேண்டும். பிப்ரவரி 23ம் தேதிய அறிவிப்பு மூலம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மாற்ற முடியாதவையோ அல்லது அதிகரிக்கப்பட முடியாதவையோ அல்ல.

     பண்டிட் லட்சுமிகாந்த மைத்ரா (ராஜதானிப் பிரிவு: முகமதியரல்லாத புறநகர்): இது தற்காலிகமானதா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இருக்கலாம். இந்த புள்ளிவிவரங்களின்படி போதுமான கிராக்கிப்படி அளிக்கப்படவில்லை என்று வாதாட முடியும். ஆனால் நான் ஏற்கெனவே கூறியது போல் இது இறுதியானது ஒன்றும் அல்ல. நிலைமை இன்னமும் நிலையற்றதாக உள்ளது; இப்பொழுது சர்க்கார் பரிசீலிக்க வேண்டிய விஷயம், கிராக்கிப்படி எந்த உருவை எடுக்கும் என்பதாகும்; அதாவது பணமாகவா அல்லது உணவுப் பொருள்கள் வழங்குவதன் மூலமாகவா? கிராக்கிப்படியை நிர்ணயிக்கும் முன்பு இந்த விஷயத்தை சர்க்கார் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயம் பற்றி நான் தாழ்மையாகக் கூறிக்கொள்வது யாதெனில், சீர்செய்ய முடியாத, மாற்ற முடியாத, திருத்த முடியாத எந்த முடிவையும் சர்க்கார் எடுக்க வில்லை என்பதாகும்.

     பண்டிட் லட்சுமி காந்த மைத்ரா: நன்னடத்தைக்கு சலுகைப்படி இருக்கிறதா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தபால் இலாகாவில் இத்தகைய சலுகை கொடுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கிராக்கிப்படி குறைவானது, போதுமானதாக இல்லை என்பதைப் பொறுத்தவரை அதற்கு இன்னமும் வழி இருக்கிறது. சரியான சமயத்தில் அது பரிசீலிக்கப்படலாம்.

     இரண்டாவது குற்றச்சாட்டை, அதாவது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்கவில்லை என்பதை எடுத்துக் கொண்டால், முதலாவதாக தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் சில கஷ்டங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். கஷ்டம் இதுதான். மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜம்னாதாஸ் மேத்தா அறிந்துள்ளதுபோல், ரயில்வேக்கள் சம்பந்தப்பட்டவரை, பல சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சம்மேளனத்தை அமைந்துள்ளன. இதனால் ரயில்வேயில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, கலந்தாலோசிக்கும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம், அவர்களின் கருத்தை அறியவும் கலந்து கலந்தோலோசிக்கவும் சர்க்காருக்கு எளிதாகுகிறது. சர்க்கார் இதைச் செய்துகொண்டிருக்கிறது என்று திரு.ஜாம்னதாஸ் மேத்தா ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன். உண்மையில் இது சம்பந்தமாக ஒருநடைமுறை ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்த நடைமுறை ஒழுக்காகப் பின்பற்றப்பட்டு வருகிறது; ரயில்வே வாரியமும் ரயில்வே ஊழியர்களின் சம்மேளனமும் பொதுவான அக்கறை உள்ள விஷயங்களை விவாதிக்க வருடத்திற்கு இரு தடவை சந்திக்கின்றன. ஐயா! அடுத்து, மத்திய சர்க்காரின்கீழ், தபால், தந்தி, இலாகா ஊழியர்கள் இருக்கிறார்கள். மத்திய சர்க்காரின் தபால், தந்தித் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் பன்னிரண்டு உள்ளன என்று அறிகிறேன். அவற்றில் நான்கு உயர் அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன; எட்டு சங்கங்கள் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. துரதிருஷ்டவசமாக , ஒரே அமைப்பு, பல்வேறு தபால் தந்தித் தொழிலாளர்கள் சங்கங்கள் இணைந்த சம்மேளனம் எதுவும் இல்லை; இதனால் ரயில்வே வாரியம். ரயில்வே சிப்பந்திகள் கூட்டமைப்போடு ஒருவகையான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சாத்தியப்படுவதுபோல், இவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமில்லாது போகிறது. ஆனால் ஒரு உண்மையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்; கஷ்டங்கள் இருந்த போதிலும், எந்த நடவடிக்கை எடுக்குமுன் தபால்-தந்தித் தொழிலாளர்களுடன் அரசாங்கம் தொடர்பு கொண்டு வருகிறது. டெலி கிராப் ரெவ்யூஎன்ற சஞ்சிகையின் 1943 ஜனவரி இதழிலிருந்து ஒரு சிறிய பத்தியை சபைக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன்; தபால்-தந்தித் தொழிலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள தபால்-தந்தி இலாகா மேற்கொண்ட முயற்சிகளை அது குறிப்பிடுகிறது. ரெவ்யூ கூறுவது இதுதான்:

           “தபால், தந்தித் துறையின் தலைமை இயக்குநர் தமது அண்மைய கல்கத்தாவின் வருகையின்போது பல்வேறு அங்கீகரிக்கப் பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளை 1942 டிசம்பர் 10ம் தேதி கிராக்கிப்படி பிரேரணையை விவாதிக்க ஒரு கூட்டு மாநாட்டிற்கு அழைத்திருந்தார். மாநாட்டில் பிரதிநிதிகள் இந்த பிரச்சினையில் ஒரு ஒன்றுபட்ட நிலையை முன்வைக்க முடியவில்லை. அடுத்து, கல்கத்தா தபால் கிளப்பின் தாராபாட் ஹாலில் 1942 டிசம்பர் 12ம் தேதி ஒன்றாகச் சந்தித்து, கிராக்கிப்படிக்கான பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் புதிய திட்டத்தை வகுத்தனர். இந்த இதழில் பிரிதோர் இடத்தில் அது பிரசுரிக்கப்படுகிறது.”

     திரு.ஜம்னாதாஸ் மேத்தா: அந்தத்திட்டத்தில் அவர்கள் என்ன கோரினார்கள்?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தலைமை இயக்குனரை அவர்கள் மறுபடியும் சந்தித்தனர். 1942 டிசம்பர் 18ம் தேதி மீண்டும் மாநாட்டில் பிரதிநிதிகள் தலைமை இயக்குனரைச் சந்தித்து தங்களின் திட்டத்தை அவரிடம் சமர்ப்பித்தனர்.

     திரு.ஜம்னதாஸ் மேத்தா: அவர்கள் கோரியது என்ன?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அது ஒரு நீண்ட விஷயம், அது முழுவதையும் படிக்க எனக்கு நேரம் இல்லை என்பதற்காக வருந்துகிறேன். மதிப்பிற்குரிய எனது நண்பர் விரும்பினால், அவரது பார்வைக்காக நான் அதை அவருக்கு அனுப்பி வைக்க முடியும். நான் சொல்ல விரும்பும் விஷயம் இதுதான்: தபால்-தந்தி இலாகாத் தொழிலாளர் சம்பந்தப்பட்டவரை, அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு, சர்க்காருக்கும் அவர்களுக்குமிடையே எந்த கலந்தாலோசனையும் நடைபெறவில்லை என்ற கூற முடியாது.

     ஐயா! அடுத்து இருப்பது மத்திய சர்க்காரின் எழுத்தர்கள் என்று அழைக்கப்படுவோரைப் பற்றியது. இந்த ஊழியர்களைப் பொறுத்தவரை, சங்கம் எதுவும் இல்லை. சங்கம் எதுவும் இல்லாததால், அவர்களது கூட்டமைப்பும் எதுவும் இல்லை. இருப்பது ஏதோ சில ஸ்தாபனங்கள். முதலாவதாக, இம்பீரியல் தலைமைச் செயலக ஊழியர் கழகம்; இரண்டாவதாக, டப்தாரி மற்றும் ஆவணம் வகைப்படுத்துவர் கழகம்; மூன்றாவதாக, பொதுத்தலைமையக ஊழியர் கழகம். இவற்றுடன் அரசு அவ்வப்போது கலந்தாலோசனை நடத்துகிறது என்பதை அறிய அவை மகிழ்ச்சியடையும் என்று நம்புகிறேன். இந்த அமைப்புகள் தங்களின் பிரதிநிதிகளை மத்திய சர்க்காரிடம் அனுப்பி வைத்தன. மாண்புமிகு உள்துறை உறுப்பினரும் நிதி உறுப்பினரும் அறிவிப்பு வெளியிடப்படும்முன்பு அவர்களுக்கு பேட்டி அளித்தனர். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று அதாவது எந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திரு.ஜம்னாதாஸ் மேத்தா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தாரோ அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என்று நான் கூறியது முற்றிலும் நியாயமே என்று கருதுகிறேன். எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பும் கூடியமட்டும் தொழிலாளர்களைக் கலந்தாலோசிக்கும் போக்கை அரசு எப்போதுமே கடைப்பிடித்து வருகிறது என்பதை அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It