தமிழ்நாட்டின் மிகப் பழமையான ஆறுகளில் ஒன்றான பாலாறு கருநாடக மாநிலம் சிக்பெல்லாப்பூர் மாவட்டம், நந்திமலைப் பகுதியில் தொடங்குகின்றது. இவ்வாறு கருநாடகத்தில் 93 கி.மீ.உம் ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ.உம் தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வழியாக 222 கி.மீ. சென்று கல்பாக்கம் அருகில் வயலூரையடுத்த உய்யாலிக் குப்பத்தில் வங்கக் கடலில் கலக்கின்றது.

பெத்தமங்கல நீர்த்தேக்கம், இராம்சாகர் நீர்த்தேக்கம் என இரண்டு பெரிய நீர்த்தேக்கங்களில் பாலாற்றில் வரும் நீரை கருநாடகம் தேக்கிக் கொள்கிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 33 கி.மீ. தொலைவுக்குள் பாலாற்றில் பெரியதும் சிறியதுமாக 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. தற்போது 26.02.2024 அன்று குப்பம் தொகுதி, ரெட்டிக் குப்பம் பகுதியில் 23ஆவதாக ஒரு தடுப்பணைக் கட்டிட ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டியுள்ளார். அதற்காக ரூ.215 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.paalaruஆந்திர அரசு குப்பம் தொகுதி கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிட அப்போதைய ஆந்திர முதலமைச்சரும் குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரபாபு நாயுடு பணிகளைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் பாலாற்றின் கரைகளில் வாழும் உழவர்களும் பொது மக்களும் கொதித்தெழுந்து தங்கள் எதிர்ப்பினை பல வகைகளில் வெளிப்படுத்தினர்.

1892இல் மைசூர் மன்னர் அரசும் சென்னை மாகாண அரசும் இரு பகுதிகளிலும் பாயும் ஆற்றுநீரைப் பகிர்ந்து கொள்வது பற்றி ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டன. 1924இலும் மற்றுமொரு ஒப்பந்தம் மேற்கொண்டன. இரு பகுதிகளில் யார் அணைகள் கட்டுவதாயினும் மற்றொரு தரப்பினர் ஒப்புதலுடனே மேற்கொண்டிட வேண்டும் என ஒப்பந்தத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் ஒப்பந்தத்தைப் புறந்தள்ளி, கணேசபுரத்தில் ஆந்திர அரசு தடுப்பணைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என தமிழ்நாட்டரசு உச்சநீதி மன்றத்தில் 2006 இல் வழக்குத் (ஓ.எஸ்.எண். 02/2006) தொடுத்தது.

பாலாற்றில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த பெருபள்ளம், கங்கனஹள்ளி, சீத்தாவூர், கங்குத்தி முதலான தடுப்பணைகள் பல 5 அடி உயரம் முதல் 12 அடி உயரம் வரை உயர்த்திக் கட்டும் பணியை ஆந்திர அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடுமாறு கோரி, தமிழ் நாட்டு அரசு உச்ச நீதிமன்றத்தில் 2016இல் 2ஆவது வழக்கு (ஓ.எஸ்.எண். 03/2016) ஒன்றினைத் தொடுத்தது.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதி மன்றம் 16.02.2018 அன்று அளித்தத் தீர்ப்பில் ஆந்திர அரசு தடுப்பணைகள் உயரத்தினை அதிகரித்திட தடை விதித்தது. 1892ஆம் ஆண்டு ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. சித்தூர் மாவட்டம், நயனூர் அருகில் காப்புக்காடு உள்ள கங்குந்தி என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த 6 அடி உயரம் 45 அடி நீளத் தடுப்பணை இடிக்கப்பட்டது.

முன்பு பாலாற்றில் 4368 டி.எம்.சி. அளவு நீர் வந்தது. திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட முந்திய வேலூர் மாவட்டத்தில் 502 ஏரிகள் இருந்தன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 620 ஏரிகள் பாலாற்று நீரை நம்பி இருந்தன. இந்த ஏரிகளுள் பல காணாமல் போயுள்ளன. மிகப் பல ஏரிகள் காய்ந்து கிடக்கிறன. பழைய வேலூர் மாவட்டத்தில் 4710 சதுர கி.மீ. பரப்பு நிலமும், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 2187 சதுர கி.மீ. பரப்பு நிலமும் பாலாற்று நீரை நம்பி இருந்தன. முன்பு பாலாற்றுப் படுகை பகுதியில் 10 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் இப்போது மிகவும் மோசமான நிலையை அடைந்து விட்டது. கிணற்று நீர்ப்பாசனப் பரப்பும் வெகுவாகக் குறைந்துவிட்டதால் உழவை நம்பியிருந்த மக்கள் வேலையற்றவர்களாக பெருநகரங்களில் அன்றாடக் கூலியாட்களாக அல்ல லுறுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள பாலாறு வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையிலான ஆற்றுநீர் பங்கீட்டுச் சிக்கல் சட்டப்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி, தீர்ப்பாயம் அமைத்து நியாயமான தீர்வு கண்டிட முன்வர வேண்டும் என பாலாறு பாசனப் பகுதி மக்கள் தமிழ்நாட்டு அரசினை வலியுறுத்த வேண்டும்.

- நா.மதனகவி

Pin It