பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவும் மற்ற அய்வரும் மும்பை நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையால் சிறைத் தண்ட னையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். சாய்பாபா 90 விழுக்காடு உடல் செயலிழப்பு உடையவர். 5 அகவையில் போலியோ நோய் தாக்கியது. 1967இல் பிறந்த சாய்பாபா தற்போது 57 அகவையினர். தாயின் பெருந்துணையுடன் ஆங்கில இலக்கியத்தில் முதுலைப் பட்டமும் பின்னர் முனைவர் பட்டமும் பெற்றவர். 2003 முதல் தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். தன் சிறு வயது தோழியை மணந்தார்.

2014இல் சாய்பாபா கைது செய்யப்பட்டார். மற்ற அய்வரும் 2013இல் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாவோவிய அறிக்கைகளையும் நூல்களையும் வைத்திருந்தனர். மாவோவிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுக்க சதித் திட்டம் கொண்டிருந்தனர் என்பன இவர்கள் மீதான குற்றச்சாட்டு.

2017இல் கச்சிரோலி விசாரணை நீதிமன்றம் சாய்பாபா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் தண்டனையும் மற்ற ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 2022 அக்டோபர் 14 அன்று இவர்கள் குற்றவாளிகள் என்பதற்கான சான்றுகள் இல்லை; இவர்களை உபா சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டியதும் தவறு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மகாராட்டிர அரசு அன்று (வெள்ளிக்கிழமை) மாலையே இத்தீர்ப்புக்குத் தடைவிதிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.prof saibaba 363உச்சநீதிமன்றத்தில் வழக்கத்திற்கு முரணாக 2022 அக்டோபர் 15 சனிக்கிழமை விடுமுறை நாளில் காலை 9.30 மணிக்கு நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு, இவர்கள் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான குற்றவாளிகள் என்று கூறி மும்பை உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்தது. சாய்பாபா 2023 இல் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மீண்டும் மும்பை உயர்நீதிமன்றமே வேறு அமர்வில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இதன்மீது நடந்த விசாரணையின் முடிவில் உயர்நீதி மன்றம் 5.3.2024 அன்று தீர்ப்பளித்தது. சாய்பாபா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்குத் தக்க ஆதாரங்களைக் காவல்துறையும் அரசும் நிரூபிக்கவில்லை என்று கூறி இவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தது. ஆயினும் மகாராட்டிர அரசு 6.3.2024 அன்று உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இதை ஏற்க மறுத்தது. இறுதியில் 7.3.2024 அன்று சாய்பாபாவும் மற்றவர்களும் பத்து ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

சாய்பாபா இளமைக் காலம் முதலே சமூகநீதிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக பழங்குடியினரின் வாழ்வுரிமைக்கான அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இதனாலேயே சாய்பாபா ஒரு தீவிர மாவோயிஸ்ட் என்று கருதபபட்டு உபா சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் தன் உடல் இயலாமையால் பல துன்பங்களை ஏற்றார்.

உபா, என்.ஐ.ஏ. போன்ற சட்டங்கள் அய்யத்திற்கிடமான அல்லது சாதாரணமான சிறிய ஆதாரங்கள் அடிப்படையில் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவர முடியாமல் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படும் கொடுமை நடக்கிறது. பீமா கோரேகான் வழக்கு இதை நன்கு உணர்த்துகிறது. 2008இல் உபா சட்டத்தில் சேர்க்கப்பட்ட விதியின்படி, ஒருவர் தீவிரவாதம் பற்றிய வெளியீடுகளை வைத்திருப்பதாலேயே அவர் தீவிர வாதி என்று கருதி உபா சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடாது. ஆனால் நடைமுறையில் இதற்கு எதிராகவே காவல் துறையும் அரசுகளும் நடந்துகொள்கின்றன என்பதற்கு சாய்பாபா வழக்கு ஒன்றே போதிய சான்றாகும்.

சாய்பாபா கடுமையான இயலாமையில் உள்ள மாற்றுத் திறனாளி என்பதால் அய்க்கிய நாடுகளின் மனித உரிமை வல்லுநர்கள் சாய்பாபாவை விடுதலை செய்யுமாறு கோரினர். ஆனால் தன் உயர்வுக்கும் வாழ்வுக்கும் பெருந்துணையாக விளங்கிய தன் தாய் மரணப்படுக்கையில் இருந்த போதும், இறந்த பின்பும் பிணை வழங்க அரசு மறுத்து விட்டது. நடைமுறையில் இந்திய சனநாயக அரசு மனித உரிமைகளை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

- க.முகிலன்

Pin It