I

ambedkhar 350 சிதறுண்ட பகுதியினர் கிராமத்துக்கு வெளியே வசிப்பதைப் போன்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் வேறு எங்கேயேனும் காணப்படுகின்றனவா? இக்கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளிப்பது சாத்தியமே. இந்தியாவில் நடைபெற்றது போன்ற நிகழ்ச்சிகள் வேறு இரண்டு இடங்களில் நடைபெற்றிருப்பது நம் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் உண்மையில் நடைபெற்ற இடங்கள் அயர்லாந்தும் வேல்சும் எனக் கூறப்படுகிறது.

     பூர்வீக காலத்தில் ஐரிஷ் கிராம அமைப்புமுறை எவ்வாறு இருந்தது என்பதை பிரஹோன் சட்டங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இது குறித்து சர் ஹென்றி மைனே கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு: (பழக்க வழக்க மரபுகளின் ஆரம்பக்கால வரலாறு, விரிவுரை iii, பக்கங்கள் 92-93)

“குலமரபுக்குழு குலத்துக்குச் சொந்தமான பிரதேசத்தில் நீண்டகாலத்துக்கு முன்பே குடியமர்ந்துவிட்டதை பிரஹோன் சட்டம் வெளிப்படுத்துகிறது. அது போதிய பரப்பு கொண்டதாகவும், ஓர் அரசியல் தொகுதியாக இருக்குமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது. அதன் ஏராளமான குடித்தலைவர்களில் ஒருவன் உச்சிபீடத்தில் இருக்கிறான்; ஐரிஷ் ஆவணங்கள் அவனை அரசன் என்று கூறுகின்றன. அந்தப் பிரதேசம் முழுவதும் முழுக் குலத்துக்கும் சொந்தம் என்பதே ஆரம்பகால அனுமானமாக உள்ளது. ஆனால் உண்மையில் அதன் பெரும் பகுதிகள் சிறுசிறு குலமரபுக் குழுவினருக்குச் சொந்தமாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒரு பகுதி குலத்தலைவனுக்கு அவன் வகிக்கும் பொறுப்பை முன்னிட்டு விசேடமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது; குழுத்தலைவன் பின் குழுத்தலைவனாக அதனை அனுபவிக்கலாம். ஏனைய பகுதிகள் குலத்தின் பல்வேறு பிரிவினர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. சில பகுதிகள் சிறுதிறத்தினரான குலத் தலைவர்களின் கீழ் இருக்கின்றன. மற்ற பகுதிகள் ஒரு குலத் தலைவனால் ஆளப்படுகின்றன என்று நிச்சயமான முறையில் கூற முடியாவிட்டாலும்

உயர்குடியைச் சேர்ந்த யாரேனும் அவர்களது பிரதிநிதிகளாக இருந்து செயல்படுகின்றனர்; இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படாத நிலம் அனைத்தும் குலம் முழுவதன் உடைமையாக அமைகிறது. அதில் எந்த ஒரு பகுதியையும் தற்காலிகமாகத்தான் உடைமையாக்கிக் கொள்ள முடியும். எனினும் இவ்விதம் தற்காலிகமாக உடைமையாக்கிக் கொள்வது அடிக்கடி நிகழ்கிறது; இந்த அடிப்படையில் குலத்தின் நிலத்தை உடைமையாக்கிக் கொண்டிருப்போரிடையே தங்களைக் குலமரபுக் குழுவினர் என்று கூறிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் உண்மையில் பிரதானமாக கால்நடை மேய்ச்சலுக்காக ஒப்பந்த அடிப்படையில் தோன்றியுள்ள குழுவினர்களே இவர்கள். குலத்திற்குச் சொந்தமான பொது நிலத்தில் பெரும்பகுதி எவரது உடைமையின் கீழும் இல்லை; அது குலத்தின் ‘தரிசு’ நிலமாகவே கருதப்படுகிறது. எனினும் இந்தத் தரிசு நிலமும் அடிக்கடி உழுது பயிரிடப்படுகிறது அல்லது குலமரபுக் குழுவினரின் குடியேற்றங்களுக்கு நிரந்தர மேய்ச்சல் நிலமாகப் பயன்படுகிறது. இதன் பேரில், சாகுபடியாளர்கள் குறிப்பாக எல்லையை ஒட்டி தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது குலத்தலைவன் தனது அதிகாரத்தை மேன்மேலும் அதிகரித்துச் செல்லும் பிரதேசத்தின் ஒருபகுதி; இங்குதான் அவன் தனது ‘புய்திர்களை’ அல்லது அந்நிய குத்தகைதாரர்களைக் குடியேற்றுகிறான்; இவர்கள் ஒரு முக்கியமான வகுப்பினர்; இதர குலங்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள், ‘சிதறுண்டவர்கள்; அவனுடைய பாதுகாப்பை நாடி அவனிடம் வந்திருப்பவர்கள்; புதிய குலத்தின் தலைவனைச் சார்ந்திருப்பதன் மூலமும், அவன் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலமும் மட்டுமே அக்குலத்துடன் அவர்கள் பிணைப்பு கொண்டிருக்கின்றனர்.”

     இந்தப் புய்திர்கள் யார்? இவர்களைப் பற்றி ஹென்றி மெய்னே பின்வருமாறு கூறுகிறார்:

“இவர்கள் அந்நியர்கள் அல்லது இதர பிரதேசங்களிலிருந்து வந்த அகதிகள்; உண்மையில் இவர்கள் சமூகத்தில் தங்களுக்கு ஓர் அந்தஸ்தை அளித்த பழைய குலமரபுப் பிணைப்பை உடைத்தெறிந்தவர்கள்; புதிய இடத்தில் ஒரு புதிய குலத்தின் ஆதரவை நாட வேண்டிய நிலைமைக்கு ஆளானவர்கள். சமுதாயம் மிகுந்த கொந்தளிப்புக்கும் குழப்பத்துக்கும் உள்ளாயிற்று. இதன் விளைவாக, ‘சிதறுண்ட பிரிவினர்’ நாட்டை நிரப்பினர். புய்திர் குத்தகைக்காரர்கள் ஆனால்தான் தங்குவதற்கு இடமும் பாதுகாப்பும் கிடைக்கும் என்ற நிலை இவர்களுக்கு ஏற்பட்டது.

“புய்திர் குலமரபுக் குழுவைச் சேர்ந்தவனல்ல, அவன் ஓர் அந்நியன். குருதி உறவுமூலம் பிணைக்கப்பட்டுள்ள எல்லாச் சமுதாயங்களிலும் கூட்டிணைப்பிலிருந்து விலகியவன் அல்லது அதன் பிணைப்பை முறித்தவனது நிலைமை எப்போதுமே துயர் மிகுந்ததாக, இரங்கத்தக்கதாகவே இருக்கும். அவன் தனது பிறப்பிடத்தை இழப்பதோடு, வேறு எங்கும் அவனுக்குப் புகலிடமும் கிடைப்பதில்லை.”

II

            இனி அடுத்து வேல்சுக்கு வருவோம். பண்டைக்காலத்தில் வேல்ஸ் கிராம அமைப்பு எப்படியிருந்தது என்பதைத் திரு.சீபோம் விவரித்திருக்கிறார். (வேல்சில் பழங்குடியினர் முறைமை, .9) வேல்சில் ஒரு கிராமம் என்பது பல பண்ணை வீடுகளின் ஒரு தொகுப்பாக இருந்தது. இந்தப் பண்ணை வீடுகள் இனப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு பிரிவு கட்டுப்பாடுகளற்ற சுதந்தரமான குத்தகைத்தாரர்களின் பண்ணைவீடுகளைக் கொண்டது; இன்னொரு பிரிவு கட்டுப்பாடுகள் கொண்ட குத்தகைத்தாரர்களின் பண்ணைவீடுகள் நிறைந்திருந்தது. இந்த உறைவிடப் பிரிவினை வேல்சில் பூர்வீக கிராமத்தின் ஒரு பொது அம்சமாக இருந்தது என்று சீபோம் கூறுகிறார். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட, சுதந்திரமற்ற இந்தக் குத்தகைத்தாரர்கள் தனியான ஒதுக்குப்புறமான இடத்தில் வசிக்குமாறு ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்? இத்தகைய பிரிவினைக்கான காரணத்தைத் திரு. சீபோம் பின்வருமாறு விவரிக்கிறார்: (அதே நூல், பக். 54-59)

“பண்டைய குலமரபு குழுவினரை உச்சலோர் பிரைரே என்றும், குலமரபு குழுவினரல்லாதோரைத் தலோகோ அய்ல்ட்டே, ஆல்டுட் என்றும் பண்டைய வேல்ஸ் சட்டங்களில் குறிப்பிட்டிருப்பதைப் படிக்கும்போது முதலில் மிகுந்த குழப்பம்தான் ஏற்படுகிறது. ஆனால் குலமரபு சமுதாயத்தில் கட்டமைப்புக்கு அடிப்படையாக அமைந்துள்ள கோட்பாட்டைக் கிரகித்துக்கொள்ளும்போது இந்தக் குழப்பம் மறைந்துவிடுகிறது. நிலத்தைக் கைப்பற்றுதல், அதில் நிரந்தரமாகக் குடியேறுதல் சம்பந்தப்பட்ட அந்நியச் சட்டம், பழக்க வழக்கங்கள், பெயர்ச்சிக்கல் போன்றவற்றலிருந்து விடுபடக் கூடுமானால் இந்தக் கோட்பாடு மிக எளிதானதாக இருக்கும் என்பது தெள்ளத்தெளிவு. சுதந்திரமான குல மரபினரிடையே நிலவும் குருதி உறவு குலமரபு சமுதாயக் கட்டமைப்பின் ஆதார அடிப்படையாக அமைந்துள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமிருக்கமுடியாது. குருதி உறவுகொண்ட உறவினர் கூட்டத்தைச் சேராத எங்கும் அந்தக் குலமரபுக் குழுவின் உறுப்பினராக இருக்க முடியாது. உண்மையில் இந்தக் குல மரபுக்குழு என்பது வேல்ஸ் குருதியுடையோரின் ஒரு தொகுதிதான். பொதுவாக அச்சமயம் வேல்ஸ் குலமரபு அமைப்பில் இரண்டு பிரிவுகள் இருந்தன. வேல்ஸ் குருதியைக் கொண்டது ஒரு பிரிவு. அந்நியக் குருதியைக் கொண்டது மற்றொரு பிரிவு. நிலம் அல்லது வெற்றி சம்பந்தப்பட்ட பிரச்சினையில் உள்ள வேறுபாடு ஒருபுறமிருக்க, இந்த இரு பிரிவினரிடையேயும் ஓர் ஆழமான வேற்றுமை இருந்தது. இது குருதி சம்பந்தப்பட்ட வேற்றுமை. இந்த வேற்றுமை மிகப் பிடிவாதமாக முன் கொண்டு சொல்லப்பட்டு, நிலைநாட்டப்பட்டபோது அது மரபுக்குழு அமைப்புமுறையின் மிகவும் முனைப்பான சின்னங்களில் ஒன்றாகவும், அதன் வலிமையின் பிரதான இரகசியங்களில் ஒன்றாகவும் ஆயிற்று.”

III

            பண்டைக்காலத்து ஐரிஷ், வேல்ஸ் கிராமங்களின் அமைப்புமுறை குறித்த இந்த வருணனையைக் கொண்டுபார்க்கும்போது, கிராமத்துக்கு வெளியே வசிக்கும் மக்கள் இந்தியாவைச் சேர்ந்த தீண்டப்படாதவர்கள் மட்டுமே அல்ல என்பது தெளிவாகிறது. அது உலகளாவிய ஒரு நிகழ்வுப்போக்காக இருந்தது மட்டுமன்றி பின்கண்ட அம்சங்களையும் கொண்டிருந்தது:

  • பண்டை நாட்களில் கிராமக் குடியேற்றம் இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. ஒரு பகுதியில் குறிப்பிட்டதொரு குலமரபுக்குழுவைச் சேர்ந்த சமூகத்தினரும் இன்னொரு பகுதியில் பல்வேறு குலமரபுக்குழுக்களைச் சேர்ந்த சிதறுண்ட பகுதியினரும் வசித்து வந்தனர்.
  • குலமரபு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்த பகுதிதான் உண்மையான கிராமமாகக் கருதப்பட்டது. சிதருண்ட பிரிவினர் கிராமத்திற்குப் புறத்தே வசித்து வந்தனர்.
  • சிதறுண்ட பிரிவினர் கிராமத்திற்கு வெளியே வசித்ததற்குக் காரணம் அவர்கள் அந்நியர்களாக இருந்ததும், குலமரபு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாதிருந்ததுமே ஆகும்.

இந்தியாவின் தீண்டப்படாத மக்களுக்கும் அயர்லாந்தைச் சேர்ந்த புய்திர்களுக்கும், வேல்ஸைச் சேர்ந்த ஆல்டூடெஸ்களுக்கும் இடையேயான ஒற்றுமை இத்துடன் பூர்த்தியடைகிறது. அயர்லாந்திலும் வேல்சிலும் புய்திர்களும் ஆல்டூடெஸ்களும் என்ன காரணத்திற்காக கிராமத்திற்கு வெளியே வசித்தார்களோ அதே காரணத்திற்காகவே இந்தியாவின் தீண்டப்படாத மக்களும் கிராமத்துக்கு வெளியே வசித்து வந்தார்கள். எனவே கிராமத்திற்கு வெளியே வசிக்கும் பிரச்சினையில் தீண்டப்படாதவர்களைப் போலவே வேறு பல இன மக்களும் இருந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 5)

Pin It