ambedkar 336     தீண்டாமையின் தொழில்ரீதியிலான மரபுமூலத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். தீண்டாமையின் மூலகாரணங்களில் ஒன்று தீண்டப்படாதவர்கள் செய்யும் துப்புரவற்ற, அருவருப்பான தொழில்கள் என்று திரு.ரைஸ் கூறுகிறார். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இந்த வாதம் பெரிதும் சரியானதாகவே தோன்றக்கூடும். ஆனால் தீண்டாமையின் மூலகாரணத்துக்கு இதனை ஓர் உண்மையான விளக்கமாக ஏற்றுக் கொள்வதில் சில குறிப்பிட்ட சிரமங்கள் இருக்கின்றன. தீண்டப்படாதோர் புரியும் அருவருப்பான, அசுத்தமான பணிகள் எல்லா மனித சமுதாயங்களுக்கும் பொதுவானவையே ஆகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திலும் இத்தகைய தொழில்களைச் செய்பவர்கள் இருந்துவரவே செய்கின்றனர். அப்படியிருக்கும்போது இத்தகைய மக்கள் உலகின் இதர பகுதிகளில் தீண்டப்படாதவர்களாக ஏன் கருதப்படுவதில்லை? இவ்வகையில் இரண்டாவது கேள்வி ஒன்றும் இருக்கிறது. அது இதுதான்: இத்தகைய தொழில்கள் மீதும் அவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் மீதும் திராவிடர்கள் அருவருப்பு கொண்டிருந்தார்களா? திராவிடர்கள் இவ்விதம் அருவருப்பு கொண்டிருந்ததாக சான்று ஏதும் இல்லை. ஆனால் அதேசமயம் ஆரியர்கள் விஷயத்தில் நம்மிடம் சான்று இருக்கிறது. இது விஷயத்தில் ஆரியர்களும் ஏனைய மக்களைப் போன்றே இருந்தனர் என்றும், சுத்தம், அசுத்தம் குறித்த அவர்களது கருத்துகள் பண்டைய மக்கள் கொண்டிருந்த கருத்துகளிலிருந்து அடிப்படையில் எவ்வகையிலும் மாறுபட்டிருக்கவில்லை என்றும் இந்த சான்றுகூறுகிறது. அருவருப்பான தொழில்களில் ஈடுபடுவது பற்றி ஆரியர்கள் அணுவளவும் கவலைப்படவில்லை என்பதை நாரத ஸ்மிருதியின் பின்கண்ட சுலோகங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பணி ஒப்பந்தம் மீறப்படுவது குறித்து V-ஆவது அத்தியாயத்தில் நாரதர் விவாதிக்கிறார். இந்த அத்தியாயத்தில் பின்கண்ட சுலோகங்கள் காணப்படுகின்றன.

  • ஏவல்புரிவோரை சாஸ்திரங்களின்படி ஐந்து வகையினராக ஞானிகள் பிரித்திருக்கின்றனர். இவர்களில் நான்கு வகையினர் தொழிலாளர்கள். ஐந்தாவது வகையினர் அடிமைகள். இவர்களில் 15 பிரிவுகள் உண்டு.
  • மாணாக்கர், பணிபயில்பவர், கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர், நான்காமவர் அதிகாரி.
  • இவர்களது சார்புநிலை எல்லோருக்குமே பொதுவானது, ஆனால் அவரவர்களது அந்தஸ்தும் வருமானமும் அவர்களது சாதியையும் தொழிலையும் பொருத்துள்ளன என்று ஞானிகள் கூறியிருக்கின்றனர்.
  • இரண்டு வகையான தொழில்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒன்று சுத்தமான தொழில், மற்றொன்று அசுத்தமான தொழில்; அசுத்தமான தொழில் அடிமைகளால் செய்யப்படுகிறது. சுத்தமான தொழிலை தொழிலாளர்கள் செய்கின்றனர்.
  • வாசல், கழிப்பிடம், சாலை, குப்பைகூளங்கள் முதலியவற்றைத் தூர்த்துப் பெருக்குதல், உடம்பின் மறைவிடங்களைச் சுத்தம் செய்தல்; உணவின் மிச்சமீதங்களையும் சிந்தல் சிதறல்களையும் மலஜலங்களையும் சேகரித்து அப்புறப்படுத்தல்.
  • முடிவாக, எசமானன் விரும்பினால் அவனது கைகால்களைப் பிசைந்துவிடுதல், தேய்த்துவிடுதல்; மேலே கூறியவையாவும் தூய்மையற்ற பணிகளாகக் கருதப்பட வேண்டும்; இவை தவிர ஏனைய பணிகள் தூய்மையானவையாகும்.
  • இவ்வாறு தூய்மையான பணிகளைச் செய்யும் நான்கு வகை ஊழியர்கள் கணிக்கப்பட்டுள்ளனர். அசுத்தமான பணிகளைச் செய்யும் இதர எல்லோரும் அடிமைகள். இந்த அடிமைகளில் பதினைந்து வகையினர் இருக்கின்றனர்.
  • (1. நாரத ஸ்மிருதியில் விவரிக்கப்பட்டிருக்கும் பதினைந்து அடிமைகள் வருமாறு:
  • V.26. எசமான் வீட்டில் பிறந்தவன்; விலை கொடுத்து வாங்கப்பட்டவன்; பரிசாகக் கிடைத்தவன்; வாரிசுரிமையாகப் பெறப்பட்டவன்; பஞ்சத்தின்போது பராமரிக்கப்பட்டவன்; சட்டப்படி உரிமையாளனால் பிணையம் வைக்கப்பட்டவன்.
  • V.27 பெரும் கடனிலிருந்து விடுவிக்கப்பட்டவன்; போரில் சிறை பிடிக்கப்பட்டவன்; பந்தயத்தின் மூலம் பெறப்பட்டவன்; ‘நான் உங்களுடையவன்என்று கூறி துறவு வாழ்க்கையைத் துறந்தவன்; ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அடிமையாக இருப்பவன்.
  • V.28 பிழைப்புக்காக அடிமையானவன்; ஒரு பெண் அடிமையுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்காக அடிமையானவன்; தன்னைத்தானே விற்றுக்கொண்டவன். இந்த 15 வகையினர் தான் சாஸ்திரங்களால் அடிமைகள் எனப் பிரகடனம் செய்யப்பட்டவர்கள்.)

தூய்மையற்ற பணி அடிமைகளால் செய்யப்பட்டது என்பதும், தெருப் பெருக்குதல் போன்றவையும் இப்பணியில் அடங்கும் என்பதும் தெளிவு. இது ஒரு புறமிருக்க, இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்த அடிமைகள் யார்? அவர்கள் ஆரியர்களா அல்லது ஆரியரல்லாதவர்களா? ஆரியர்களிடையே அடிமைத்தனம் நிலவியது என்பதில் ஐயமில்லை. ஓர் ஆரியன் இன்னொரு ஆரியனின் அடிமையாக இருக்கலாம். ஓர் ஆரியன் எந்த வருணத்தைச் சேர்ந்தவனாயினும் அடிமையாக இருக்கலாம். ஒரு சத்திரியன் அடிமையாக இருக்கக்கூடும். அதேபோன்று ஒரு வைசியனும் அடிமையாக இருக்கக்கூடும். ஒரு பார்ப்பனனுக்குக்கூட இதிலிருந்து விதிவிலக்கு இல்லை. சதுர் வருண அமைப்புமுறை நாட்டின் சட்டமாக அங்கீகரிக்கப்பட்ட போதுதான் அடிமைத்தனமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றம் என்ன என்பதை நாரதஸ்மிருதியின் பின்கண்ட சுலோகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்:

39. “ஒருவன் தனது சாதிக்குரிய கடமைகளைச் செய்யத் தவறினாலொழிய, அடிமைத்தனம் கீழிலிருந்து மேல்வரிசையில் கடைப்பிடிக்கப்படமாட்டாது. இவ்வகையில் அடிமைத்தனம் என்பது ஒரு மனைவியின் நிலைமைக்கு ஒத்தது.”

யாக்ஞவல்கியரும் பின்வருமாறு கூறுகிறார்:

183(2) “அடிமைத்தனம் வருணங்கள் வரிசையில் மேலிருந்து கீழ் நோக்கி செயல்படுத்துமே அன்றி, கீழிலிருந்து மேல்நோக்கிப் பின்பற்றப்பட மாட்டாது.

“யாக்ஞவல்கிய ஸ்மிருதி பற்றி விக்னேஸ்வரர் தமது மிதக்ஷராவில் எழுதும்போது இது குறித்துப் பின்கண்ட விளக்கம் அளிக்கிறார்:

“பார்ப்பனர் மற்றும் இதர வருணங்களின் வரிசையில் அடிமைத்தனம் கீழ்நோக்கிதான் (அனுலோமேய்ம்மை) கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த வரிசையில் பார்ப்பனர், சத்திரியர் மற்றவர்கள் என்ற ரீதியிலும், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற ரீதியிலும், வைசியர், சூத்திரர் என்ற ரீதியிலும் அடிமையாக இருக்க முடியும்; இந்த அடிமைநிலை கீழ்நோக்கிய அடிப்படையில்தான் கைக்கொள்ளப்பட வேண்டும்.”

இந்த மாற்றம் படிப்படியான ஏற்றத்தாழ்வு என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அடிமைத்தனத்தை மறுசீரமைப்பதையே குறித்தது; இதனை சதுர்வருண அமைப்பின் உயிர்நிலை, ஆன்மா எனக்கூறலாம். இரத்தினச் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு பார்ப்பனன் மற்றொரு பார்ப்பனனையோ, சத்திரியனையோ, வைசியனையோ, சூத்திரனையோ அடிமையாகக் கொண்டிருக்கலாம். ஒரு சத்திரியன் மற்றொரு சத்திரியனையோ, வைசியனையோ, சூத்திரனையோ அடிமையாக்கிக் கொள்ளலாம். இதேபோன்று, ஒரு வைசியன் இன்னொரு வைசியனையோ, சூத்திரனையோ அடிமையாக ஆக்கிக்கொள்ளலாம். ஆனால் அதே சமயம் ஒரு சூத்திரன் மற்றொரு சூத்திரனைத்தான் அடிமையாகக் கொண்டிருக்க முடியும். இவ்விதம்தான் அக்காலத்தில் அடிமைகள் குறித்த சட்டம் அமலில் இருந்துவந்தது; எல்லா ஆரியர்களும் அவர்கள் பார்ப்பனர்களானாலும் அடிமைகளாகும்போது இந்த விதிக்கு உட்பட்டவர்களே ஆவர்.

அடிமைகளுக்கு இன்ன பணிகள் என்று நிர்ணயிக்கபட்டுவிட்டபிறகு, அடிமைத்தனம் குறித்த சட்டத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. ஏனென்றால் ஒரு பார்ப்பனன் அவன் அடிமையாக இருந்தால், ஒரு சத்திரியன் அவன் அடிமையாக இருந்தால், ஒரு வைசியன் அவன் அடிமையாக இருந்தால், குப்பை கூளங்களை அகற்றி சுத்தம் செய்யும் தோட்டியின் பணியைச் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் ஒரு பார்ப்பனன் ஒரு சத்திரியன் வீட்டிலோ, வைசியன் வீட்டிலோ, சூத்திரன் வீட்டிலோ இப்பணியைச் செய்யமாட்டான். ஆனால் அவன் இன்னொரு பார்ப்பனன் வீட்டில் இப்பணியை செய்வான். இதே போன்று ஒரு சத்திரியன் ஒரு பார்ப்பனன் வீட்டிலோ அல்லது இன்னொரு சத்திரியன் வீட்டிலோ இப்பணியைச் செய்வான். அதே சமயம் ஒரு வைசியன் வீட்டிலோ அல்லது சூத்திரன் வீட்டிலோ இப்பணியைச் செய்யமாட்டான். ஒரு வைசியன் பார்ப்பனன் வீட்டிலோ, சத்திரியன் வீட்டிலோ அல்லது மற்றொரு வைசியன் வீட்டிலோ கூட்டிப்பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியைச் செய்வான். எனினும் இதேபணியை அவன் ஒரு சூத்திரன் வீட்டில் செய்யமாட்டான். எனவே ஆரியர்களான பார்ப்பனர்களும், சத்திரியர்களும், வைசியர்களும் அசுத்தமான பணிகளிலேயே மிக அசுத்தமான தோட்டிகளின் பணியைச் செய்துவந்தார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. தோட்டிவேலை செய்வது ஓர் ஆரியனுக்கு அருவருப்பு அளிக்கக்கூடிய பணி அல்லவென்றால் அசுத்தமான பணிகளைச் செய்வது தீண்டாமைக்கு எப்படிக் காரணமாக முடியும். ஆகவே, அருவருப்பான பணிகளில் ஈடுபடுவதுதான் தீண்டாமைக்குக் காரணம் என்ற வாதம் ஏற்கக் கூடியதல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 8)

Pin It