(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, நவம்பர் 1, 1944, பக்கங்கள் 89-91.

2.பத்திகளுக்குத் தரப்பட்டுள்ள தலைப்புகள் இந்தியத் தகவல் ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டவை, நவம்பர் 15, 1944, பக்கங்கள் 600-01)

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்(தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):ஐயா, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்:

           ambedkar 292 “1934 ஆம் வருட தொழிற்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்தும் (இரண்டாவது திருத்தம்) இந்த மசோதா பின்வருவோர் அடங்கிய பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படுகிறது: நவாப் சித்திக்கு அலிகான், கான் பகதூர் ஷேக் பஸில்-இ-ஹக் பிராசா, திரு.ஆர்.ஆர்.குப்தா, திரு.ஏ.சி.இன்ஸ்கிப், சர் வித்தல் என்.சந்தவர்கர், ராவ் பகதூர் என்.சிவராஜ், திரு.என்.எம்.ஜோஷி, திரு.டி.எஸ்.ஜோஷி மற்றும் இம்மசோதாவை முன்மொழிபவர். குழுவின் எந்த ஒரு கூட்டமும் சட்டபூர்வமானதாகக் கருதப்படுவதற்கு அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருப்பது அவசியம்.”

            இந்த மசோதாவின் ஷரத்துகள் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு மசோதாவின் ஷரத்துகளை இரு பகுதிகளாகப் பிரித்து சபைக்கு விளக்கினால் உசிதமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

            மசோதாவின் முதல் பகுதி கட்டாய விடுமுறைகளுக்குப் பதிலாக இழப்பீட்டு விடுமுறைகளை அளிப்பது சம்பந்தப்பட்டதாகும். தொழிற்சாலைகள் சட்டம் 35ஆவது பிரிவின்படி தொழிற்சாலையிலுள்ள ஒவ்வொரு வயது வந்த தொழிலாளிக்கும் ஒரு கட்டாய விடுமுறை அளிக்க தொழிற்சாலையின் உரிமையாளர் அல்லது நிர்வாகி கடமைப்பட்டுள்ளார் என்பது உறுப்பினர்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரியும். 35ஆவது பிரிவில் அடங்கியுள்ள இந்த விதி 43, 44 ஆவது பிரிவுகளில் அடங்கியுள்ள விதிகளுக்கு உட்பட்டதாகும். 35ஆவது பிரிவு விதித்துள்ள கடமைப் பொறுப்புகளிலிருந்து தொழிற்சாலையின் உரிமையாளர் அல்லது நிர்வாகிக்கு தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளர் விதிவிலக்கு அளிக்க 43, 44 ஆவது பிரிவுகள் வழிவகை செய்கின்றன. ஆனால் இத்தகைய விதிவிலக்குகள் அளிக்கப்படும்போது, அதே எண்ணிக்கையுள்ள இழப்பீட்டு விடுமுறைகளைக் கொண்டு அவை சமன் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. மேலும், தொழிலாளியின் ஆரோக்கியத்தையும் வேலை செய்யும் ஆற்றலையும் பராமரிப்பதற்கு சட்டம் நிர்ணயித்துத் தந்துள்ள விடுமுறை நாட்களை அவன் பெறுவது அவசியம். இப்போதைய சட்டம் இழிப்பீட்டு விடுமுறைகளுக்கு வழிவகை ஏதும் செய்யவில்லை. எனவே, இந்தக் குறைபாட்டை அகற்றும் பொருட்டு மசோதாவில் 2ஆவது ஷரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 35ஆவது பிரிவின் கீழ் விதிவிலக்குகள் அளிக்கப்படும்போதெல்லாம் தொழிலாளர்களுக்கு அவற்றுக்கு இணையான எண்ணிக்கையில் இழப்பீட்டு விடுமுறைகள் வழங்க மாகாண அரசாங்கங்கள் விதிமுறைகளை வகுத்தளிக்க வேண்டும். இதுதான் மசோதாவிலுள்ள ஷரத்துக்களின் முதல் பகுதியின் சாராம்சமாகும்.

பொது இணக்க ஒப்பந்தம்

          மசோதாவின் இரண்டாவது பகுதியை எடுத்துக் கொண்டால், அது சம்பளத்துடன் விடுமுறைகள் அளிக்கும் பிரச்சினையைக் கையாள்கிறது. மசோதாவின் இந்தப் பகுதியினது தோற்றுவாயைப் பற்றி இங்கு முதலில் கூறுவது உசிதமானதாக இருக்கும். சம்பளத்துடன் விடுமுறைகள் அளிப்பது சம்பந்தமான ஒரு பொது இணக்க ஒப்பந்தம் பற்றிய தீர்மானத்தை 1936ல் சர்வதேச தொழிலாளர் மாநாடு இயற்றியது இந்த அவையைச் சேர்ந்த பல உறுப்பினர்களுக்கு நினைவிருக்கும். அந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கு கொண்ட இந்திய அரசாங்கம் இந்தப்பொது இணக்க ஒப்பந்தத்தை ஏற்பதற்கும் அதனை உறுதிசெய்வதற்கும் தயாராக இல்லை. இந்தப் பொது இணக்க ஒப்பந்தத்தை ஏற்கக்கூடாது என்ற கூறும் ஒரு தீர்மானத்தை 1937 ஜூலை 26ஆம் தேதி சட்டமன்றத்தில் அரசாங்கம் கொண்டு வந்தது. தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஊர்ஜிதம் செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லாத போதிலும், தீர்மானத்தைக் கொண்டு வந்த உறுப்பினர் ஒரு விஷயத்தைக் கூறினார்; அதாவது, இந்த ஒப்பந்த விஷயத்தில் எந்த அளவுக்கு பொதுவான உடன்பாடு நிலவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு மாகாண அரசாங்கங்களையும், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, இந்த ஒப்பந்தத்தை முழுமையாக அல்லாவிட்டாலும் அதன் ஒரு பகுதியையாவது செயல்படுத்தும் சாத்தியக்கூறுகள் பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் தெரிவித்தார். இத்தகைய பரிசீலனையின் விளைவாகவும், இது சம்பந்தமாக பல ஆண்டுகாலம் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் விளைவாகவுமே சம்பளத்துடன் விடுமுறைகள் அளிப்பதற்கு வகை செய்யும் ஷரத்துகள் அடங்கிய இந்த இரண்டாவது பகுதி உருவாயிற்று எனலாம்.

 

ஆண்டு முழுவதும் பணி தொடரும் தொழிற்சாலைகள்

            இனி மசோதா முழுவதையும் எடுத்துக் கொண்டால், அது தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டது என்பது தெரியவரும்; ஆனால் இம்மசோதா எல்லாத் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும். 1936ல் சர்வதேச மாநாட்டில் ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்துகளுடன் ஒப்பிடும்போது இந்த மசோதாவின் குறியிலக்கு ஒரு வரையறைக்குட்பட்டதே ஆகும். ஏனைய ஷரத்துகளைப் பொறுத்தவரையில், நான் சொல்ல வேண்டியதை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கூறுவதே உசிதமாக இருக்கும் என்று கருதுகிறேன்; அப்போதுதான் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் சம்பந்தமான சட்டங்கள் குறித்த பின்கண்ட நான்கு விஷயங்களைத் தனித்தனியாகக் கையாள்வது சாத்தியமாகும்.

            1.விடுமுறையின் கால அளவு. (2) விடுமுறை பெறுவதற்கான தகுதிகள். (3) வரையறுக்கும் நிபந்தனைகள். (4) விடுமுறைகாலச் சம்பளம் முதல் விஷயத்தை அதாவது விடுமுறையின் கால அளவைப் பொறுத்தவரையில் 49-பி என்னும் புதிய பிரிவில் இது கையாளப்பட்டிருக்கிறது; தொழிற்சாலைகள் சட்டத்தில் இந்தப் புதிய பிரிவை சேர்க்க வேண்டும் என்று இந்த மசோதா பிரரேபித்துள்ளது. இந்தப் பிரிவின்படி, தொடர்ந்து ஓராண்டுக் காலம் பணிபுரியும் ஒரு தொழிலாளிக்கு மொத்தம் தொடர்ச்சியாக ஏழு நாள் விடுமுறை கிடைக்கும். நாம் ஏன் ஏழு நாட்கள் என்று நிர்ணயித்திருக்கிறோம், அதற்கு அதிகமாக ஏன் நிர்ணயிக்கக் கூடாது என்று கேட்கக்கூடும். 1936 ஆம் வருட ஜெனீவா ஒப்பந்தம் விடுமுறை நாட்களில் எண்ணிக்கையை ஆறு என்று நிர்ணயித்திருக்கிறது; இந்த ஒப்பந்தத்தைப் பின்பற்றியே நாம் ஏழு நாட்கள் என்று நிர்ணயித்திருக்கிறோம். ஜெனீவா ஒப்பந்தம் கூறும் ஆறு நாட்களுடன் தொழிற்சாலைகள் சட்டத்தின் 35ஆவது பிரிவின்படி வழங்கப்படும் கட்டாய வார ஓய்வு நாளையும் சேர்த்து ஏழு நாட்கள் என்று நாம் நிர்ணயித்திருக்கிறோம்.

            ஏழு நாட்கள் விடுமுறை கோருவதற்கு ஒரு தொழிலாளி எப்போது தகுதி பெறுவார் என்ற விஷயம் சம்பந்தமாக மசோதாவில் பின்கண்ட ஷரத்துகள் அடங்கியுள்ளன. உண்மையில் அதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் விதிக்கப்பட்டுள்ளது; அதாவது ஒரு தொழிலாளி தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதைத்தவிர இது விஷயத்தில் வேறு நிபந்தனை ஏதும் இல்லை. தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் பணியாற்ற வேண்டும் என்றால் என்ன என்பதைப் பொறுத்தவரையில், சில இடையீடுகளை மசோதா அனுமதிப்பதோடு, இந்த இடையீடுகளைக் காரணம் காட்டி சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளைப் பெறும் உரிமையை மறுக்கலாகாது என்றும் கூறுகிறது நோய்வாய்ப்படுதல், விபத்துக்குள்ளாதல், அங்கீகரிக்கப்பட்ட விடுப்பு, கதவடைப்புக் காலம், சட்டரீதியான வேலை நிறுத்தக் காலம் முதலியவற்றை இடையீடுகள் பட்டியலில் மசோதா சேர்த்துள்ளது.

வேலையின்றி இருத்தல்

          இதே விஷயம் குறித்த மசோதாவில் மற்றொரு ஷரத்தும் இருக்கிறது தொழிற்சாலை உரிமையாளரின் விருப்பம் காரணமாக தொழிற்சாலை மூடப்படும்போது தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கும் பிரச்சினையே அது. இவ்வாறு தொழிற்சாலை மூடப்பட்டிருக்கும் காலத்தை 30 நாட்கள் என்று நிர்ணயித்திருக்கிறோம். தொழிற்சாலை நிர்வாகியின் நடவடிக்கை காரணமாக தொழிலாளர்கள் வேலையில்லாதிருக்கும் காலம் 30 நாட்களுக்கு மேல் செல்லவில்லை என்றால், தொழிலாளர்கள் சம்பளத்துடன் விடுமுறை பெறும் உரிமை பாதிக்கப்படாது. 30 நாட்கள் மட்டும் என்று நிர்ணயித்திருப்பது ஏன் என்று கூறுவது அவசியம். இதற்கான விளக்கம் இதுதான். சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்னும்போது அவ்வாறு சம்பளம் கொடுக்கும் ஆற்றல் தொழிற்சாலையின் நிர்வாகிக்கு அல்லது உரிமையாளருக்கு இருக்கிறதா என்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியமாகிறது. தொழிற்சாலையின் நிர்வாகி அல்லது உரிமையாளர் தனது ஆலையை 30 நாட்களுக்கும் அதிகமாக மூட வேண்டியிருந்தால், அப்போது அவர் நிலைமை உண்மையில் செழிப்புமிக்கதாக இருக்காததால் அவரால் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளுக்கு ஆகும் செலவை ஏற்கும் நிலையில் இருக்கமாட்டார் என்ற நியாயமான ஊகத்தை மசோதா கருத்திற் கொள்கிறது. ஆனால் தொழிற்சாலை மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை செய்ய இயலாதிருக்கும் நாட்கள் 30க்கும் அதிகமாக இல்லை என்றால், அப்போது தொழிற்சாலையின் நிர்வாகி அல்லது உரிமையாளர் சம்பளத்துடன் விடுமுறை அளிப்பதற்கு ஆகும் செலவை ஏற்கக்கூடிய நிலையில் இருப்பார் என்று கருதப்படுகிறது. இதனால் அவர் அந்த செலவை ஏற்பதும் நியாயம் என்றாகிறது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை சம்பந்தமாக மசோதா ஒரு நிபந்தனையையும் விதிக்கிறது; இந்த விடுமுறைகளை ஒரு தொழிலாளி எத்தனை நாள் சேர்த்து வைக்கலாம் என்பது குறித்ததே இந்த நிபந்தனை. சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் பெறுவதற்குத் தகுதி பெற்ற ஒரு தொழிலாளி இரண்டு வருட காலத்துக்கு அந்த விடுமுறைகளைச் சேர்த்து வைக்கலாம் அதாவது மொத்தம் 14 நாட்கள் சேர்த்து வைக்கலாம்.

விடுமுறை காலத்துக்கு ஊதியம்

          விடுமுறை காலத்துக்கு ஊதியம் அளிக்கும் விஷயத்தைப் பொறுத்தவரையில் இது சம்பந்தமாக பல விஷயங்களை அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். முதலாவதாக, மொத்த விடுமுறைக்காலம் ஏழு என்றாலும் ஆறு நாட்களே சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, 35ஆவது பிரிவின்படி ஏழாவது நாள் உண்மையில் வார ஓய்வு நாளாகும். இந்த ஏழாவது நாளைப் பொறுத்தவரையில் இதற்கு தொழிற்சாலை உரிமையாளர் சம்ளம் அளிக்க வேண்டும் என்று மசோதா கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அதே சமயம் இவ்வாறு சம்பளம் கோருவதற்குத் தொழிலாளிக்குள்ள உரிமையை மசோதா மறுக்கவில்லை; எனினும் தொழிற்சாலை உரிமையாளருடன் தொழிலாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஏழாவது ஓய்வு நாளுக்கும் சம்பளம் தர இரு தரப்பாரும் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்; இதற்கு இது ஒரு முக்கிய நிபந்தனை. இவ்விதம் இந்த விஷயம் பணி ஒப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

            இந்த ஆறு விடுமுறை நாட்களுக்கும் ஊதியம் அளிப்பது குறித்த மூன்றாவதொரு விஷயமும் இருக்கிறது. இது சம்பந்தமாக ஏற்கத்தக்க, நியாயமான ஒரு விதியை மசோதாவில் சேர்த்திருக்கிறோம். அந்த விதி இதுதான்; முந்திய மூன்று மாதங்களில் மிகை நேர ஊதியம் தவிர்த்து, ஒரு தொழிலாளி சராசரியாக பெற்ற ஊதியத்துக்கு இணையான தொகையை அவனுக்கு வழங்க வேண்டும். இது நேர்மையான கோட்பாடு என்றே கருதுகிறேன். ஒரு தொழிலாளி விடுமுறையில் செல்லும்போது அவனுக்கு ஓரளவு பண வசதி செய்து தரும் பொருட்டு, அவனுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தில் பாதியை விடுமுறை தொடங்கும்போதே வழங்குவதற்கு மசோதா ஏற்பாடு செய்கிறது.

            இது சம்பந்தப்பட்ட மற்றொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த மசோதா அதன் செயற்பாட்டிலிருந்து சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு விதிவிலக்கு அளிக்க உத்தேசித்திருக்கிறது; மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதற்குப் பெருமளவுக்கு ஒத்துள்ள விதத்தில் சம்பளத்துடன் விடுமுறைகள் அளிப்பவையும், அவற்றின் நடத்தை பற்றி மாகாண அரசாங்கங்களின் நற்சான்றைப் பெற்றிருப்பவையுமான தொழிற்சாலைகளை இவ்வகையில் குறிப்பிடலாம். சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதே சலுகைகள் வழங்கப்படுவதற்கு தொழிலதிபர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே அவர்களது விருப்பார்வ அடிப்படையில் ஒரு சுமுகமான ஏற்பாடு செய்துகொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்திய சட்டம் தலையிட வேண்டியதில்லை என்பதே இந்த ஷரத்தில் பொதிந்திருக்கும் அடிப்படைக் கருத்தாகும்.

            ஐயா, இவைதாம் இந்த மசோதாவின் பிரதான ஷரத்துகளாகும். என் உரையை முடித்து அமர்வதற்கு முன்னர் வேறு இரண்டு விஷயங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முதல் விஷயம் ஒரு தொழிலாளி தனது விடுமுறை ஊதியத்தைப் பெறாதபடி தடுப்பதற்கு அவனை தொழில் நிலைய உரிமையாளர் வேலையிலிருந்து நீக்குவது சம்பந்தப்பட்ட விஷயமாகும். இரண்டாவது விஷயம் ஒரு தொழிலாளி சம்பளத்துடன் கூடிய தனது விடுமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளாதபடி தொழிற்சாலை உரிமையாளர் அவனைத் தூண்டி இணக்குவிக்கச் செய்வதாகும். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் மசோதாவில் பரிகாரம் ஏதும் காணப்படவில்லை என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்கிறேன். இத்தகைய பிரச்சினைகள் எழக்கூடும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கவில்லை என்று இதற்குப் பொருள் அல்ல; மாறாக, குறைந்தபட்சம் இப்போதைய கட்டத்தில் இத்தகைய நிலைமைகள் எழக்கூடும் என்று கருதுவதற்கு இடமில்லை என்பதே அரசாங்கத்தின் கருத்தாகும். இப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதை அனுபவம் காட்டுமானால் அவை நிகழாதபடி தடுப்பதற்கு சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் தயங்காது. ஆலைத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம்; இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஷரத்துகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன என்றே கருதுகிறேன்.

            ஆகவே, ஐயா, இந்த மசோதாவை முன்மொழிகிறேன்.

*           *           *

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த மசோதா சம்பந்தமாக நான் கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்குப் பொதுவாக ஆதரவு இருப்பது என் பணியைப் பெரிய அளவுக்கு எளிதாக்கிவிட்டது; ஆதலால் இதன் பேரில் நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலளித்து நான் இப்போது ஆற்றப்போகும் உரை மிக சுருக்கமாகவே இருக்கும் என்பது தெளிவு.

            என் மதிப்பிற்குரிய நண்பர் டாக்டர் சர் ஜியாவுத்தீன் அகமது நிகழ்த்திய உரை சம்பந்தமாக உடனடியாக ஏதேனும் கூறுவது உசிதம் என்று நினைக்கிறேன். அவர் பேசியது குறித்து ஏதும் கூறும் உத்தேசம் எனக்கு இல்லை; அவரை அவமதிக்கும் எண்ணம் எதுவும் நமக்குக் கிடையாது; ஏனென்றால் அவர் பேசியதற்கும் விவாதத்திலுள்ள மசோதாவுக்கும் உண்மையில் சம்பந்தம் ஏதும் இல்லை. தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் ஒரு புதுமையான யோசனையைக் கூறினார்; கூட்டுப் பங்காண்மை என்பதே அந்த யோசனை. இந்தப் புதிய யோசனை குறித்து அவர் அளித்த விளக்கம் நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நமது ஸ்தாபனக் கட்டமைப்புப் பிரச்சினை நம் முன் விவாதத்துக்கு வரும் போது, அவர் தெரிவித்த கருத்து எனக்கு மட்டுமன்றி இப்பிரச்சினையில் ஈடுபடக்கூடிய அனைவருக்குமே பெரிதும் உபயோககரமாக இருக்கும் என்று அவருக்கு உறுதிகூற விரும்புகிறேன்.

            இனி அடுத்து மற்ற பேச்சாளர்கள் விஷயத்துக்கு வருகிறேன். என்னுடைய நண்பர் சர் வித்தல் சந்தவர்கர் ஆற்றிய உரையை முதலில் எடுத்துக் கொள்கிறேன். சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் சம்பந்தமாக சர் பிராங்க் நோய்ஸ் கொண்டுவந்த தீர்மானம் பற்றி அவர் குறிப்பிட்டார். இது விஷயத்தில் அவர் என்ன கருத்தை வெளியிட விரும்பினார் என்பதை என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தனது நிலையை மாற்றிக் கொண்டது என்ற கருத்தை அவர் வெளியிட விரும்பினார் என்று நினைக்கிறேன்.

            சர் வித்தல் என் சந்தவர்கர்: இல்லை, இல்லை.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: 1936ல் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் எதிர்த்தார்கள்; ஆனால் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கோட்பாட்டுக்கு இப்போது அங்கீகாரம் அளிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வகையில் இந்திய அரசாங்கத்தின் நிலையில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நான் கருதவில்லை. இந்த ஒப்பந்தம் பற்றி அச்சமயம் நடைபெற்ற விவாதத்தை நான் கவனமாகவும் உன்னிப்பாகவும் படித்தேன். ஓர் ஒப்பந்தத்தை ஏற்பதென்றால் முழுவதுமாக ஏற்க வேண்டும்; அவ்வாறின்றி அதன் ஒரு பகுதியை மட்டும் ஏற்க முடியாது; அதனால்தான் இந்தியா ஒப்பந்தத்தை கோட்பாட்டளவில் ஏற்க தயாராக இருந்தாலும், அதனை குறிப்பிட்டளவு செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய சித்தமாக இருந்தாலும் அன்றைய நிலைமையில் அந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லாது போயிற்று.

            அடுத்தபடியாக என்னுடைய நண்பர் திரு.ஜோஷி தம்முடைய உரையில் சில கருத்துகளை எடுத்துரைத்தார். அவர் தெரிவித்தவற்றில் இரண்டு கருத்துகள் பொருட் செறிந்தவையாக உள்ளன. அவற்றில் ஒன்று மசோதாவின் குறிக்கோளை தொழிற்சாலை அளவில் நிறுத்திக்கொள்ளாமல் அதனை குறைந்தபட்சம் ஒரு தொழில் முழுவதுக்கும் விஸ்தரித்திருக்க வேண்டும் என்பதாகும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இது ஒரு சிறந்த கருத்து என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதேசமயம் நாங்கள் இவ்வாறு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொழிலின் கீழுள்ள அனைத்துத் தொழில்நிலையங்களின் வள ஆதாரங்கள் மற்றும் இதர அவசியமான தகவல்களைத் திரட்டுவதற்கு ஒரு வழி வகுக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய நிலையில், திரு.ஜோஷி தெரிவித்த கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இருப்பினும் தற்போது எங்களுக்குப் போதிய முன் அனுபவம் இல்லாதிருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட தொழிலின் கீழுள்ள எல்லாத் தொழில் நிலையங்களும் தொழிலாளர்களுக்கு விடுபட்டுபோன விடுமுறைகளுக்கான ஊதியத்தை வழங்கும்படிச் செய்வதற்கு வழிவகை காணுவது இப்போதைக்கு சாத்தியமல்ல. எனவேதான் இந்த யோசனையை தொழில்துறை முழுவதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.

            இரண்டாவதாக, சட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று திரு.ஜோஷி குறை கூறினார். இந்தப் புகாரிலும் அர்த்தம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். 7 நாட்கள் என்பது மிகவும் குறைவுதான். ஆனால் இங்கும் ஒரு சிக்கல் எழுகிறது. இப்படிப்பட்ட ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை திரு.ஜோஷியும் திரு.வித்தல் சந்தவர்கரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். நமது தொழிலாளர்களின் முறையற்ற போக்கிலிருந்தே இந்தச் சிக்கல் எழுகிறது. நமது தொழிலாளர்கள் ஏதோதோ காரணங்கள் கூறி நீண்ட விடுமுறைகள் எடுக்கிறார்கள் என்பதும், இந்தப் பழக்கத்தின் காரணமாக வேலைக்கு வராமலிருக்கும் போக்கு நிலவுகிறது என்பதும், இது உண்மையிலேயே நிலைமையைப் பெரிதும் சிக்கலாக்குகிறது என்பதும் திரு.ஜோஷி, திரு.வித்தல் சந்தவர்கர் ஆகிய இருவருக்குமே நன்கு தெரியும். நமது தொழிலாளர்கள் இப்போதை விட தொடர்ந்து ஏராளமான நாட்கள் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும்படித் தூண்டி ஊக்குவிக்கப்படுவார்களேயானால் அல்லது பயிற்றுவிக்கப்படுவார்களேயானால், இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விட விடுமுறை காலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் தார்மிக பலம் பெரிதும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை; இதனை நான் ஒப்புக் கொள்ளவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன். ஆனால் இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்: தற்போது நாங்கள் ஏழுநாள் விடுமுறையை அனுமதித்திருக்கிறோம், இது இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கங்களிடம் ஒரு மறைமுகமான பிரதிபலிப்பை ஏற்படுத்தும், இப்போதை விடத் தாங்கள் தொடர்ந்து அதிக நாட்கள் பணியாற்றினால் விடுமுறைக் காலத்தை 7 நாட்களுக்கும் கூடுதலாக அதிகப்படுத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையின் நியாயம் மிகவும் வலுப்பெறும் என்பதை அவர்கள் உணர்வார்கள். ஆனால் இப்போதைய நிலைமையில், நிர்ணயிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குக் கூடுதலாக விடுமுறை அளிப்பது நியாயமாகாது; ஏனென்றால் சர்வதேச ஒப்பந்தமே கூட ஏழுநாள் விடுமுறையையே நிர்ணயித்துக் கூறியிருக்கிறது.

            அடுத்து, ஐயா, இதே விஷயம் குறித்து மற்றொரு கருத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது; குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும் பணி நிகழும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்னும் கோரிக்கை சம்பந்தப்பட்டது இது; இந்தக் கருத்தை மதிப்புமிக்க என்னுடைய நண்பர் பேராசிரியர் ரங்கா வெளியிட்டிருக்கிறார். இதற்கும் முன்னர் கூறியதுதான் எனது பதிலாகும்; அதாவது போதுமான அளவு நீண்டகாலம் ஓய்வு பெற இயலாத தொழிலாளர்களுக்குத்தான் ஏழு நாள் விடுமுறை என்னும் இந்த ஏற்பாடு பொருந்தும். பருவகாலத் தொழிற்சாலை என்பது அவ்வப்போது மூடப்பட்டு நடைபெற்றுவரும் தொழிற்சாலையாகும். இத்தகைய தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நீண்ட ஓய்வு கிடைக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமை என்ற கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை நான் அணுகவில்லை. ஓய்வுக் கண்ணோட்டத்திலிருந்துதான் இதனை நாங்கள் பார்க்கிறோம். பருவகாலத் தொழில் நிலையங்களைப் பொறுத்தவரையில், அவற்றின் தொழிலாளர்களுக்குப் போதிய அளவு நீண்டகால ஓய்வு கிடைக்கிறது. எனவே, ஆண்டு முழுதும் பணிதொடரும் தொழில்களைப் போன்று இவர்கள் விஷயத்தில் சம்பளத்துடன் 7 நாள் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை.

            திருத்தப்படும் ஷரத்துகள் ஒன்றில் “குறைந்தபட்சம்” என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து சர் வித்தல் சந்தவர்கர் ஒரு பிரச்சினையை எழுப்பினார். திருத்த ஷரத்துகளில் ‘குறைந்தபட்சம்’ என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுவதைக் கொண்டு, 7 நாட்களுக்கும் அதிகமாக விடுமுறை அளிக்கும்படி தொழிலதிபர்களை மாகாகண அரசாங்கங்கள் வற்புறுத்துவதற்கு சாத்தியமிருக்கிறது என்ற தமது அச்சத்தை அவர் வெளியிட்டார். என்னுடைய சட்ட ஆலோசகர்கள் எனக்கு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் ஒன்றைக் கூற விரும்புகிறேன்: அதாவது 7 நாட்களுக்கும் அதிகமாக விடுமுறைகள் தரும்படி தொழிலதிபர்களை மாகாண அரசாங்கங்கள் நிர்ப்பந்திப்பது சாத்தியமல்ல என்று உறுதி கூறுகிறேன். இது அவசரப்பட்ட நடவடிக்கை என்றும், அரசாங்கம் உத்தேசித்து வரும் நோய் காப்பீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு கடைசியாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்றும் மற்றொரு கருத்தை சர் வித்தல் சந்தர்வர்கர் கூறினார். நான் தனிப்பட்ட முறையில் இந்தக் கருத்திலிருந்து வேறுபடுகிறேன்; எனக்கு மட்டும் அவகாசம் இருந்திருந்தால் என் வாதத்துக்கு ஆதரவாக சில ஆதாரங்களை முன்வைத்திருப்பேன். தொழில்துறைத் தொழிலாளர்களுக்கான ஆரோக்கிய காப்பீடு சம்பந்தமான தமது அறிக்கையில் பேராசிரியர் அதர்கர் தெரிவித்துள்ள கருத்துகளைப் படிக்குமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்; இந்த அறிக்கை 112ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்பது நோய்க் காப்பீட்டுடன் பிரிக்க முடியாதபடிப் பின்னிப் பிணைந்துள்ளது, இதில் முன்னுரிமை ஏதேனும் கொடுக்க வேண்டியிருந்தால் சமூகக் காப்பீட்டைவிட சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் நடவடிக்கைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே அவர் சில வலுவான ஆதாரச்சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளார். நான் ஏற்கெனவே கூறியது போன்று அவரது அறிக்கையை இப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பெறலாம். எனவே, இது விஷயம் பற்றி பேராசிரியர் அதர்கர் கூறியதை மீண்டும் திருப்பிக் கூறி அவையின் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

            அடுத்தப்படியாக ஐயா, மற்றொரு பிரச்சினையும் இங்கு எழுப்பப்படுகிறது; இது போன்ற ஒரு நடவடிக்கை தன் விருப்பமானதா அல்லது கட்டாயமானதா என்று கேட்கப்படுகிறது. இந்த மசோதாவைப் பொறுத்தவரையில், அது இவ்விரு அம்சங்களையும் தன்னுள் கொண்டது; நீண்டகாலம் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறைகள் அளிப்பதை அது ஒருபுறம் சட்டரீதியாகக் கட்டாயமாக்குகிறது; இன்னொரு புறம் இது விஷயமாக தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் பரஸ்பரம் இணங்கி உடன்பாட்டுக்கு வரவும் வகைசெய்கிறது. இந்த மசோதாவின் ஷரத்துகளில் கண்டுள்ளபடி ஒத்த ஏற்பாட்டை ஆலை நிர்வாகமே நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்து அது குறித்து அரசாங்கம் திருப்தியடையுமானால் இந்த சட்டத்திலிருந்து அத்தகைய தொழில் நிலையத்துக்கு விதிவிலக்கு அளிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு வழங்கப்படுகிறது. இது விஷயத்தில் பிரிட்டனிலும் இதே போன்ற நிலைமை நிலவுவதாக அறிகிறேன். பிரிட்டனில் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் அளிக்கும் சட்டம் ஒன்று 1938ல் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்துவருகிறது; 23 லட்சம் பேர் இந்த சட்டத்தால் பயனடைகின்றனர். எஞ்சியவர்களில் 50 லட்சம் பேர் இந்த சட்டத்தின் வாயிலாக அல்லாமல் பரஸ்பரம் சுய விருப்ப அடிப்படையில் செய்துகொள்ளப்படும் உடன்பாட்டின்படி பயனடைகின்றனர்; 40 லட்சத்து 700 பேர் நீண்ட நெடுங்காலமாக பழக்கத்திலுள்ள ஏற்பாட்டின்படி பயனடைகின்றனர்.

            சர் கவாஸ்ஜி ஜஹாங்கீர்: விடுமுறை அளிப்பதை ஒரு தொழிலதிபர் ஒத்திப்போடுவதற்கு வகை செய்யும் ஷரத்து எங்கே இருக்கிறது?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த விஷயத்துக்கு வருகிறேன்.

            ஐயா, நான் கையாள விரும்பிய மற்றொரு விஷயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது சம்பந்தமான இந்தக் கட்டாய அம்சமும் பரஸ்பர உடன்பாட்டு அம்சமுமாகும்.

            என்னுடைய நண்பர் பேராசிரியர் ரங்காவும் திரு.செட்டியாரும் வேறொரு பிரச்சினையை எழுப்பினர். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் விஷயத்தில் ஒரு தொழிற்சாலையின் உரிமையாளர் நேர்மையற்ற முறையில் நடந்து கொள்ளக்கூடும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறுவதைத் தடுப்பதற்கு தொழிலாளியை அவர் வேலையிலிருந்து விலக்கவும் கூடும்; இத்தகைய நெறியற்ற செயல்களைத் தடுப்பதற்கு மசோதாவில் எந்த ஷரத்தும் இல்லாததை அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த மசோதாவை முன்மொழிந்து நான் ஆற்றிய தொடக்க உரையிலேயே இந்த விஷயம் பற்றிக் குறிப்பிட்டேன். இத்தகைய ஒரு நிலைமை உருவாகும் என்பதை அரசாங்கம் உணர்ந்திருந்தாலும், இது விஷயத்தில் உடனடியாக அது நடவடிக்கை ஏதும் எடுக்காது. இரு தரப்புகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று வெற்றி கொள்ள எத்தகைய உத்தி முறையைக் கையாள்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவே அரசாங்கம் விரும்புகிறது. எனினும் தொழிற்சாலை உரிமையாளர்களின் நெறிமுறையற்ற செயல்களைத் தடுப்பதற்குச் சட்டத்தில் உபரியாக ஒரு ஷரத்தைச் சேர்ப்பது அவசியம் என்று தொழிலாளர் பிரதிநிதிகள் கருதினால், தெரிவுக் குழுவினரை அணுகி இது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை இணங்க வைத்து, தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. தெரிவுக்குழுவில் இத்தகைய நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வகையிலும் குறுக்கே நிற்காது.

            மற்றொரு பிரச்சினையும் இங்கு எழுப்பப்பட்டிருக்கிறது: சம்பளத்துடன் விடுமுறை பெறுவது முற்றிலும் தொழிலாளியின் விருப்பத்துக்கு விட்டுவிட வேண்டுமா அதாவது எந்த நாளிலிருந்து, எந்த நேரத்திலிருந்து விடுமுறை எடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட வேண்டுமா என்பதே அந்தப் பிரச்சினை. இது சம்பந்தமான ஷரத்தை வேண்டுமென்றேதான் மசோதாவில் சேர்க்கவில்லை, இது சம்பந்தமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை வகுக்கும் பொறுப்பை மாகாண அரசாங்கங்களுக்கு விட்டுவிட்டோம். இது போன்ற ஒரு பரிசோதனையில் அனைத்தையுமே சட்டத்துடன் பிணைக்காமல் இருப்பது உசிதமானது என்பது என் கருத்து. மாகாண அரசாங்கங்களே தகுந்த விதிமுறைகளை வகுத்து, இத்தகைய விஷயங்களை ஒழுங்குபடுத்துவதே நல்லது; இதற்கான அதிகாரத்தை மாகாண அரசாங்கங்களுக்கு இம்மசோதா வழங்குகிறது; ஏனென்றால் ஒரு சட்டத்தை மாற்றுவதைவிட ஒரு விதிமுறையை மாற்றுவது மிகவும் எளிது என்பதை அவை நன்கு அறியும். ஆனால் அதேசமயம் இம்மசோதாவில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இவ்விஷயத்தை சட்டம் இயற்றுவதற்குரிய ஒன்றாகக் கருதும் பட்சத்தில், தெரிவுக் குழு அதனைப் பரிசீலித்து ஒரு முடிவுக்கு வரலாம்.

            மதிப்பிற்குரிய எந்த ஓர் உறுப்பினராலும் எழுப்பப்பட்டு நான் கையாளாத வேறு பிரச்சினை எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்; எனவே, நான் முன்மொழிந்திருக்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக மேற்கொண்டு எதுவும் நான் கூறப்போவதில்லை.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): ஆக, தீர்மானம் இதுதான்:

            “1934 ஆம் வருட தொழிற்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்தும் (இரண்டாவது திருத்தம்) இந்த மசோதா பின்வருவோர் அடங்கிய பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படுகிறது: நவாப் சித்திக்கு அலிகான், கான் பகதூர் ஷேக் பஸில்-இ-ஹக் பிராசா, திரு.ஆர்.ஆர்.குப்தா, திரு.ஏ.சி. இன்ஸ்கிப், சர் வித்தல் என்.சந்தவர்கர், ராவ் பகதூர் என்.சிவராஜ், திரு.என்.எம்.ஜோஷி, திரு.டி.எஸ்.ஜோஷி மற்றும் இம்மசோதாவை முன்மொழிபவர். குழுவின் எந்த ஒரு கூட்டமும் சட்டப்பூர்வமாகக் கருதப்படுவதற்கு அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருப்பது அவசியம்.”

            மசோதா ஏற்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It