பழங்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழே வழக்காடு மொழியாக இருந்ததற்கான சான்றாக சிலப்பதிகாரத்தின் வழக்காடு காதை திகழ்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பிறகு பல மொழி பேசும், பல்வேறு நாடுகளாக இருந்த நிலப்பரப்பை ஒன்றிணைத்து மையப்படுத்தப்பட்ட ஆட்சியைக் கட்டமைத்தனர்.

விரிந்த நிலப்பரப்பாக இருந்த காரணத்தினால் தங்களின் நிர்வாக வசதிகளுக்காக மாகாணங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கினர். மக்களுக்கு நீதி வழங்குவதற்காக கொல்கத்தா, மும்பை, சென்னை மாகாணங் களில் 1862இல் மூன்று உயர்நீதிமன்றங்களைத் தோற்றுவித்தனர். நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தையே வழக்காடு மொழியாகவும், தீர்ப்புரை மொழியாகவும் நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.madras high courtஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 சனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. அந்தச் சட்டம் தான் இன்றும் நடைமுறையில் உள்ளது. அந்தச் சட்டத்தில் இந்திய அரசின் ஆட்சி மொழி, உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டிய மொழிகள் பற்றிய விளக்கங்கள அளிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் மொழிகள் பயன்பாடு பற்றிய பிரிவு 348(1)(3) உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்றும் வரையில் ஆங்கிலத் திலேயே நடைபெற வேண்டும் என்று கூறுகிறது.

பிரிவு 348(2) மாநில ஆளுநர் குடிஅரசுத் தலைவரின் இசைவைப் பெற்று அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக அனுமதி அளிக்க லாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தீர்ப்புகள் வழங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956இல் இயற்றப்பட்டது.

31.8.1956 அன்று சட்டக் கல்லூரியில் தமிழ் இலக்கியச் சங்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் காமராசர் “தமிழ்நாட்டில் இனிமேல் நீதிமன்றங்கள் தமிழிலேயே நடைபெறப் போகிறது. மாணவர்கள் அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அதை வரவேற்று 1.9.1956இல் விடுதலை ஏட்டில் தலையங்கம் எழுதினார் குத்தூசி குருசாமி. சட்டப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வல்லுநர் குழுக்களை அமைத்து மொழியாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று எழுதினார். “தன்னைப் பற்றி நீதிமன்றத்தில் என்ன பேசப்படுகிறது என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஆம்! உண்மைதான்; அதுதான் உண்மையான சனநாயகம் ஆகும் என்று விடுதலை ஏட்டின் தலையங்கத்தில் எழுதினார் குத்தூசி குருசாமி. 1957இல் கீழ்நிலை நீதிமன்றங்களில் தமிழ்மொழி பயன்படுத்தப்படும் என்று அரசு அறிவித்த போதிலும் போதுமான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் அப்போது அது நடைமுறைக்கு வராமல் போனது.

1967இல் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1976இல் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியானது.

அரசியல் அமைப்புச் சட்டம் 348(2)இன்படி வழங்கப் பட்டுள்ள உயர்நீதிமன்றத்தில் இந்தி (அ) அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழியாகப் பயன்படுத்தலாம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி 1950இல் இராசஸ்தான், 1969இல் உத்தரப்பிரதேசம், 1971இல் மத்தியப்பிரதேசம், 1972இல் பீகாரிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தி மொழி வழக்காடு மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1965இல் இந்திய அரசின் அமைச்சரவை உயர்நீதிமன்றங் களில் மாநில மொழிகளின் வழக்காடும் உரிமையை வழங்கும் அதிகாரத்தை இந்திய உச்சநீதிமன்றத்திற்கு வழங்கி விட்டது. இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 348(2)க்கு எதிரானது ஆகும்.

2006இல் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. இதேபோல, மேற்கு வங்காளத்தில் 1997இலும், குசராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது 2012இலும், கர்நாடகாவில் 2014இலும் தங்கள் மாநில மொழிகளை உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானங்களை ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்த போதிலும், உச்சநீதிமன்றம் இந்தி மொழி மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் அம்மாநில மொழியை வழக்காடு மொழியாக அனுமதிக்க மறுத்து வருகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 348(2)க்கு எதிரானது ஆகும். மக்களின் உரிமையான மாநில மொழியை ஏற்க மறுப்பது சனநாயக விரோதமாகும்.

இந்தி அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றுபட்டு போராடித்தான் நாம் நம்முடைய உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். மாநிலக் கட்சிகள் இக்கோரிக்கை வெற்றி பெற நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற்று மக்கள் மன்றத்திற்கே அளிக்க வேண்டும். உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளையே வழக்காடு மொழிகளாக இடம்பெறச் செய்ய வேண்டும்.

- வாலாசா வல்லவன்

Pin It