பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதவர்களும் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தியதும், அதேசமயம் சிதறுண்ட பிரிவினர் தொடர்ந்து இந்தப் பழக்கத்தை விடாது மேற்கொண்டு வந்ததும் இந்த நிலைமையிலிருந்து வேறுபட்டதொரு நிலைமையைத் தோற்றுவித்தது. அந்த வேறுபாடு என்ன? பழைய நிலைமையில் எல்லோருமே மாட்டிறைச்சி உண்டுவந்தனர். ஆனால் புதிய நிலைமையிலோ ஒரு பகுதியினர் மாட்டிறைச்சி உண்ணவில்லை; இன்னொரு பகுதியினரோ தொடர்ந்து உண்டு வந்தனர். இது வெளிப்படையான, முனைப்பான வேறுபாடு. இதனை எவருமே காணமுடியும். முன் என்றும் நடைபெற்றிராத விதத்தில் இது சமுதாயத்தைப் பிளவுப்படுத்திற்று. இது எப்படியிருப்பினும், தீண்டாமை தோன்றும் அளவுக்கு இந்தவேறுபாடு சமுதாயத்தை இவ்வளவு தீவிரமாகப் பிளவுபடுத்தியிருக்க வேண்டியதில்லை. இது ஒரு சமூக வேறுபாடாக மட்டுமே இருந்திருக்க முடியும். சமுதாயத்தின் பல்வேறு பகுதியினர் தமது உணவுப் பழக்கவழக்கங்களில் வேறுபட்டிருக்கும் உதாரணங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காது. எனினும் இந்த வேறுபாடு அவர்களிடையே எத்தகைய தடையையும் ஏற்படுத்தவில்லை.
இவ்வாறு இருக்கும்போது, இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் விஷயத்தில் குடியமர்ந்த வகுப்பினருக்கும் சிதறுண்ட வகுப்பினருக்கும் இடையேயான வேறுபாடு அவர்களிடையே ஏன் பிளவைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்கு ஏதேனும் விசேடக் காரணம் இருக்கவேண்டும். அந்தக் காரணம் என்னவாக இருக்கும்? இதற்கான பதில் வருமாறு: மாட்டிறைச்சி உண்பது என்பது சமய சார்பற்றதாக – தனி நபரது உணவுச் சுவை சம்பந்தப்பட்டதாக மட்டும் இருந்திருக்குமானால் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கும் அவ்வாறு உண்ணாதவர்களுக்கும் இடையே இத்தகைய ஒரு பிளவு தோன்றியிருக்காது. துரதிருஷ்டவசமாக, மாட்டிறைச்சி உண்பதை முற்றிலும் சமய சார்பற்ற ஒரு விஷயமாகப் பாவிப்பதற்குப் பதிலாக மதம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. பார்ப்பனர்கள் பசுவை ஒரு புனிதமான பிராணியாகக் கருதியதே இதற்குக் காரணம். மாட்டிறைச்சி உண்பதை புனிதத் தன்மையை மதியாது செய்யப்படும் ஓர் அவச்செயலாக இது ஆக்கிவிட்டது. எனவே, தொடர்ந்து மாட்டிறைச்சி உண்டுவந்த சிதறுண்ட பகுதியினர் பாவச்செயல் புரிந்த, சமய நிந்தனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாயினர்; இதனால் அவர்கள் சமுதாயத்தின் கட்டுக்கோப்புக்கு அப்பாற்பட்டவர்களாயினர்.
சமுதாய வாழ்வில் மதத்துக்குள்ள பங்கையும் பணியையும் பற்றிய ஒரு சரியான கண்ணோட்டம் இல்லாதவர்களுக்கு இந்தப் பதில் அத்தனை தெளிவானதாக இல்லாதிருக்கலாம். அவர்கள் இவ்வாறு கேட்கலாம்: மதம் ஏன் இத்தகைய பாரபட்சம் காட்டவேண்டும்? மதத்தின் பணியையும் பங்கையும் பற்றிய பின்கண்ட விவரங்களைக் கருத்திற் கொண்டால் இந்த விஷயம் தெளிவாகப் புரியும்.
முதலில் மதம் என்றால் என்னவென்று பார்ப்போம். அனைத்து மதங்களுக்கும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. சமயம் என்பது பல்வேறு நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் அடங்கிய ஓர் அமைப்பு என்பதில்தான் இந்த அம்சம் பொதிந்துள்ளது. 1. இவை யாவும் புனித விஷயங்கள் சம்பந்தப்பட்டவை; 2. அவற்றைக் கடைப்பிடிக்கும் அனைவரையும் அவை ஒரே சமூகமாகப் பிணைக்கின்றன. இதையே சிறிது வேறுபட்ட முறையில் கூறினால், ஒவ்வொரு மதத்திலும் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. புனிதமான விஷயங்களிலிருந்து சமயம் பிரிக்க முடியாதது என்பது ஒரு அம்சம். சமயமானது சமுதாயத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு கூட்டமைப்பு என்பது இரண்டாவது அம்சம்.
மதத்தின் இந்த இரண்டு அம்சங்களில் முதல் அம்சம் மனித சிந்தனையின் கருப்பொருளாக உள்ள யதார்த்தமானவையும், கற்பனையானவையுமான எல்லா விஷயங்களையும் நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது; பொதுவாக இவ்விரு பிரிவுகளில் ஒன்று புனிதமானவை என்ற பதத்தாலும், மற்றொன்று ஆசாரக்கேடானவை அதாவது சமயத்துக்குப் புறம்பானவை என்ற பதத்தாலும் குறிப்பிடப்படுகின்றன.
இது மதத்தின் நோக்கத்தை வரையறுத்துக் கூறுகிறது. அடுத்து மதத்தின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு புனிதமான விஷயங்கள் சம்பந்தப்பட்ட பின்வரும் கருத்துகளை மனத்திற் கொள்ளவேண்டும்: (மதம் குறித்த இந்த நிர்ணயிப்பு பேராசிரியர் என்விலே துர்கியத்துடையதாகும். ‘சமய வாழ்கையின் அடிப்படை வடிவங்கள்’ என்னும் அவரது நூலைப் பார்க்கவும். பக்கம். 47. எனது வாதத்துக்கு அவரது நூலையே ஆதாரமாகக் கொண்டுள்ளேன்.)
நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய முதல் விஷயம் புனிதமானவை ஆசாரக்கேடானவற்றை விட அதாவது புனிதமற்றவற்றை விட மதிப்பிலும் அந்தஸ்திலும் மேலானவை, உயர்ந்தவை என்பது மட்டுமல்ல, அவை முற்றிலும் வேறுபட்டவையுமாகும். புனிதமானவையும் புனிதமற்றவையும் ஒரே பிரிவைச் சேர்ந்தவை அல்ல. இவை இரண்டுக்குமிடையே முழு அளவுக்கு வேறுபாடு இருக்கிறது. இதுப்பற்றி பேராசிரியர் துர்கியம் பின்வருமாறு கூறுகிறார்: (பேராசிரியர் துர்கியத்தின் நூல் “சமய வாழ்கையின் அடிப்படை வடிவங்கள்”, பக். 38)
“நல்லதையும் கெட்டதையும் பரஸ்பரம் ஒப்பிடுவது நீண்ட நெடுங்காலப் பழக்கம், இது இயல்பானது; ஏனென்றால் நல்லதும் கெட்டதும் ஒரே பிரிவைச் சேர்ந்த எதிர்மறையான நிலைகள். உதாரணமாக சுகவீனமும் ஆரோக்கியமும் ஒரே பிரிவைச் சேர்ந்த இரு நேர்மாறான நிலைகள். ஆனால் புனிதமானவையும் புனிதமற்றவையும் அப்படியல்ல; இவற்றை இரண்டு வேறுபட்ட பிரிவுகளாகவே, பொது அம்சம் ஏதுமில்லாத இரண்டு வேறுபட்ட உலகங்களாகவே எங்கும் எப்போதும் மனித மனம் கருதி வந்திருக்கிறது.”
இந்த உலகம் புனிதமானவற்றுக்கும் புனிதமற்றவற்றுக்கும் இடையேயான இந்த வேறுபாட்டைக் காணும்படி மனிதர்களை எது தூண்டியது என்று சிலர் வினவலாம். ஆனால் நம் மனதிலுள்ள உடனடியான நோக்கத்துக்கு இது சம்பந்தமில்லாதது என்பதால் இது பற்றிய விவாதத்தில் இங்கு நாம் இறங்கபோவதில்லை. (இதுபற்றி அறிய விரும்புபவர்கள் மேற்கண்ட நூலில் 317 ஆம் பக்கம் பார்க்க.)
சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன் மட்டும் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு பார்க்கும்போது நாம் கவனிக்க வேண்டிய அடுத்த விஷயம் புனிதமானவை என்பவற்றை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடக்கிவிடமுடியாது என்பதாகும். இந்த வட்டம் மதத்துக்கு மதம் எல்லையற்று விரிந்து கொண்டு செல்லுகிறது, வேறுபட்டுச் செல்லுகிறது. தெய்வங்களும் ஆவிகளும் மட்டும் தான் புனிதமானவை என்பதல்ல. கற்பாறை, ஒரு மரம், விலங்கு, நீரூற்று, கூழாங்கல், மரக்கட்டை, வீடு சுருக்கமாகச் சொன்னால் எந்த ஒரு பொருளும் புனிதமானதாக இருக்க முடியும்.
புனிதமானவை எப்போதும் சில விலக்காணைகளுடன் அதாவது தடைக்கட்டுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பேராசிரியர் துர்கியம் கூறுவதை இங்கு மீண்டும் பார்ப்போம்:
“புனிதமானவை என்பவை தடைக்கட்டுகளால் பாதுகாக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் இருப்பவையாகும்; புனிதமற்றவைகளுக்கும் இந்தத் தடைக்கட்டுகள் பொருந்தும்; அவை முதலில் குறிப்பிடப்பட்டவையிடமிருந்து தூரத்தில் விலகி இருக்க வேண்டும்.”
சமயக் கட்டுப்பாடுகள் பல்வேறு வடிவங்களை மேற்கொள்கின்றன. இவற்றில் மிக முக்கியமானது தொடர்பு சம்பந்தப்பட்ட தடையாகும். தொடர்பு குறித்த தடை புனிதமற்றவர்கள் புனிதமானவர்களை ஒருபோதும் தொடக்கூடாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. தொடுவதைத் தவிர இதர பல்வேறு வழிகளிலும் தொடர்பு கொள்ள முடியும். பார்ப்பது தொடர்புக்கான ஒரு சாதனமாகும். இதனால்தான் புனிதமற்றவர்கள் புனிதமான பொருள்களைப் பார்ப்பது சில சந்தர்ப்பங்களில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. புனிதமானவையாகக் கருதப்படும் சில பொருள்களைப் பெண்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படாததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். (பேசும்போது மனிதனது மூச்சுக்காற்று வெளியே பரவுவதால்) பேச்சும் ஒருவகையான தொடர்பு சாதனமாகும். இதனால் தான் புனிதமற்றவர்கள் புனிதமான விஷயங்களைப் பேசுவதோ, ஓதுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக வேதங்களைப் பார்ப்பனர்கள்தான் ஓதவேண்டும், சூத்திரர்கள் ஓதக்கூடாது. (உணவு உட்கொள்வதன் மூலம் மிக நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது.) எனவேதான் புனிதமான விலங்குகளையோ, காய்கறிகளையோ உண்ணக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
புனிதமானவை சம்பந்தப்பட்ட தடைகள் விவாதத்திற்குரியவை அல்ல. அவை விவாதத்திற்கு அப்பாற்ப்பட்டவை. எத்தகைய மறுப்பும் கூறாமல் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். புனிதமானது விவாதத்தின் எல்லைக்கு அப்பாற்ப்பட்டது என்ற பொருளில் அது எவ்வகையிலும் ‘கைவைக்கப்படக்கூடாதது’. அனைவரும் செய்யக் கூடியது அதனை மதித்து அதற்குக் கீழ்ப்படிவதுதான்.
இறுதியாக, புனிதமானவை சம்பந்தப்பட்ட தடைகள் எல்லோரையும் கட்டுப்படுத்தும். அவை மூதுரைகள் அல்ல. அவை தடை ஆணைகள். அவை கட்டுப்பாடுகள். ஆனால் அச்சொல்லின் சாதாரண அர்த்தத்தில் இதற்குப்பொருள் கொள்ளக்கூடாது. அவை ஆணித்தரமானவை, மறுப்புக்கிடமற்றவை. தவிர்க்க முடியாத தன்மை கொண்டவை. அவற்றை மீறுவது மிகக் கடுமையான குற்றம் புனிதத் தன்மையை மதிக்காத அடாச்செயல்.
மதத்தின் நோக்கத்தையும் வீச்சையும் செயல்பாட்டையும் புரிந்துகொள்வதற்கு மேலே சுருக்கமாகக்கூறிய விவரங்களே போதுமானவை என்று கருதுகிறோம். இந்த விஷயம் குறித்து இதற்கு மேலும் விவரிப்பது அவசியமற்றது. மாட்டிறைச்சி உண்பது சிதறுண்ட பிரிவினரை ஏன் தீண்டப்படாதவர்களாக்க வேண்டும் என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் மிகச் சரியானது என்பதை மதத்தின் ஆதார அடிப்படையாக உள்ள புனிதமானவை குறித்த விதிமுறைகளின் செயல்பாடுபற்றிய இந்தப் பகுத்தாய்விலிருந்து நீங்கள் புரிந்துகொண்டிருக்கலாம். நான் தெரிவித்த பதிலைப் பெறுவதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் பசுவைப் புனிதமான பிராணியாகக் கொண்டு ஏற்றப்பட்ட விதிமுறைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதை அலசி ஆராய்வதுதான். புனிதமான பிராணியாகப் போற்றப்பட்ட பசுவின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையானைகளை மீறியதன் விளைவாகவே தீண்டாமை தோன்றிற்று என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியும்.
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், பார்ப்பனர்கள் பசுவை ஒரு புனிதப்பிராணி ஆக்கினர். உயிரோடுள்ள பசுவையும் இறந்துபோன பசுவையும் அவர்கள் வேறுபடுத்திக் காணவில்லை. அவர்களது நோக்கில் பசு உயிரோடிருந்தாலும் இறந்து போனாலும் புனிதமானதுதான். மாட்டிறைச்சி உண்பது வெறும் குற்றம் மட்டுமல்ல, அது ஒரு குற்றமாக மட்டும் இருந்திருக்குமானால், ஏதேனும் தண்டனையோடு போயிருக்கும். ஆனால் மாட்டிறைச்சி உண்பது தெய்வ நிந்தனையாக்கப்பட்டது. பசுவை புனிதமற்றதாக நடத்தும் எவரும் பாவம் செய்தவர்களாக, தொடர்புகொள்வதற்கு அருகதையற்றவர்களாக ஆக்கப்பட்டனர். தொடர்ந்து மாட்டிறைச்சி உண்டுவந்த சிதறுண்ட பகுதியினர் தெய்வநிந்தனை குற்றத்திற்கு ஆளாயினர். (சமய வாழ்கையின் அடிப்படை வடிவங்கள், பக்கம் 41)
பசு எப்போது புனிதமான பிராணியாக ஆக்கப்பட்டதோ, சிதறுண்ட பிரிவினர் எப்போது தொடர்ந்து மாட்டிறைச்சி உண்ண ஆரம்பித்தார்களோ அப்போது அவர்களது கதிப்போக்கு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது; அவர்கள் சமூக உறவுக்கு அருகதையற்றவர்களாக, அதாவது தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர்.
இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னர் இக்கோட்பாடு குறித்து எழக்கூடிய கேள்விகளுக்குப் பதிலளிப்பது உகந்ததாக இருக்கும். இக்கோட்பாடு பற்றி இரண்டு கேள்விகள் எழுவது சாத்தியம்: இறந்தபசுவின் இறைச்சியை சிதறுண்ட பிரிவினர் உண்டனர் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது என்பது முதல் கேள்வி. பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதோரும் இந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்ட பிறகு இவர்கள் மட்டும் மாட்டிறைச்சி உண்பதை ஏன் நிறுத்தவில்லை என்பது இரண்டாவது கேள்வி. தீண்டாமையின் தோற்றம் குறித்து இந்த நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாட்டின்மீது இக்கேள்விகள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவற்றைப்பற்றி இங்கு பரிசீலிப்பது அவசியமாகிறது.
முதல் கேள்வி நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கும் பொருளுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருப்பது மட்டுமின்றி மிக முக்கியமானதும் கூட. சிதறுண்ட பிரிவினர் ஆரம்பத்திலிருந்தே மாட்டிறைச்சியை உண்டு வந்திருக்கின்றனர் என்றால் அப்போது இக்கோட்பாடு அடிப்பட்டுப் போகிறது. ஏனென்றால் ஆரம்பம் முதலே அவர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்திருந்தபோதிலும் அவர்கள் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படவில்லை என்கிறபோது சிதறுண்ட பிரிவினர் மாட்டிறைச்சி உண்டு வந்ததால் தான் அவர்கள் தீண்டப்படாதவர்களானார்கள் என்று கூறுவது அர்த்தமற்றதாக இல்லாவிட்டாலும் அறிவுப்பூர்வமற்றதாகும். இரண்டாவது கேள்வி முக்கியமானதல்லாவிட்டாலும் பொருத்தமானதாகும். மாட்டிறைச்சி உண்பதை பார்ப்பனர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்றால், பார்ப்பனரல்லாதோரும் அவர்களைப் பின்பற்றினார்கள் என்றால், சிதறுண்ட பிரிவினரும் அவ்வாறு ஏன் செய்யவில்லை? அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தி இருப்பார்களேயானால் தீண்டாமை தோன்றியிருக்காது.
முதலாவது கேள்விக்குப்பதில் இதுதான்: மாட்டிறைச்சி உண்பது குடியமர்ந்த குலமரபுக் குழுவினருக்கும் சிதறுண்ட பகுதியினருக்கும் பொதுவாக இருந்து வந்த காலத்தில், ஒரு புதியமுறை உருவாயிற்று. இதன்படி, குடியமர்ந்த சமூகத்தினர் புதிய மாட்டிறைச்சியையும் சிதறுண்ட வகுப்பினர் செத்த பசுவின் இறைச்சியையும் உண்ணத் தொடங்கினர். குடியமர்ந்த சமூகத்தினர் செத்த பசுவின் இறைச்சியை என்றுமே உண்டதில்லை என்பதற்கு ஐயத்துக்கிடமற்ற சான்று ஏதும் இல்லை. ஆனால் அதேசமயம் செத்த பசு சிதறுண்ட பிரிவினரின் பிரத்தியேக உரிமையானதற்கும், அவர்களுக்கு அது உபரி வருமானமானதற்கும் சான்று இருக்கிறது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மகர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். நாம் முன்னரே குறிப்பிட்டிருப்பதுபோல், மகாராஷ்டிர மகர்கள் செத்த விலங்கு தங்களுக்கே தரப்படவேண்டும் என்று உரிமை கொண்டாடுகின்றனர். கிராமத்திலுள்ள ஒவ்வொரு இந்துவிடமும் அவர்கள் இந்த உரிமையைக் கோருகின்றனர். எந்த ஒரு இந்துவும் தன் சொந்த விலங்கு இறந்தால் அதை உண்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அவன் அதை ஒரு மகருக்குத் தந்துவிடவேண்டும். அதாவது மாட்டிறைச்சி உண்பது பொதுவான பழக்கமாக இருந்தாலும் மகர்கள் செத்துப்போன பசுவின் இறைச்சியையும், இந்துக்கள் புதிய மாட்டிறைச்சியையும் உண்டார்கள் என்பன வேறு விதமாகக் கூறுவதைத் தான் இது குறிக்கும். இங்கு சில கேள்விகள் எழுகின்றன: இப்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறை பண்டைக்காலத்திலும் இருந்து வந்ததா? இந்த மகாராஷ்டிர உதாரணத்தை குடியமர்ந்த குலமரபினருக்கும் சிதறுண்ட பகுதியினருக்கும் இடையே இத்தகையதோர் ஏற்பாடு இந்தியா முழுவதும் இருந்துவந்ததற்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியுமா?
இது சம்பந்தமாக, மகர்களிடையே தற்போது நிலவிவரும் ஒரு பரம்பரைப் பழக்கத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம். இதன்படி கிராமங்களில் இந்துக்களுக்கு எதிராக பீடார் மன்னர் தங்களுக்கு 52 உரிமைகள் அளித்தாக அவர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். இவ்வாறு பீடார் மன்னர் உரிமைகள் அளித்ததாகக் கூறப்படுவதை ஒப்புக்கொண்டாலும், மன்னர் இந்த உரிமைகளை முதல் தடவையாக உருவாக்கி இருக்கமாட்டார் என்பது தெளிவு. தொன்னெடுங்காலமாகவே இந்த உரிமைகள் நடைமுறையில் இருந்து வந்திருக்கவேண்டும். மன்னர் செய்ததெல்லாம் அவற்றை உறுதி செய்ததுதான். சிதறுண்ட பிரிவினர் செத்துப்போன பசுவின் இறைச்சியையும் குடியமர்ந்த சமூகத்தினர் புத்தம்புது மாட்டிறைச்சியையும் உண்ணும் வழக்கம் பண்டைக்காலம் முதலே உருவாகி வந்திருக்கவேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இத்தகைய ஓர் ஏற்பாடு வளர்ந்து வந்திருப்பது முற்றிலும் இயல்பே. குடியமர்ந்த சமூகத்தினர் செல்வவளம் படைத்தவர்களாக இருந்தனர்; வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் அவர்களது வாழ்க்கைத் தொழிலாக இருந்து வந்தன. ஆனால் சிதறுண்ட பிரிவினரோ ஓட்டாண்டி சமூகத்தினராக இருந்தனர்; சொந்த வாழ்க்கைத் தொழில் ஏதுமில்லாமல் குடியமர்ந்த சமூகத்தினரையே முற்றிலும் சார்ந்திருந்தனர். இரு சாராருக்கும் மாட்டிறைச்சியே பிரதான உணவு. குடியமர்ந்த சமூகத்தினர் உணவுக்காக எப்போது வேண்டுமானாலும் ஒரு விலங்கைக் கொல்லமுடியும்; ஏனென்றால் அவர்களிடம் கால்நடைச் செல்வம் ஏராளமாக இருந்தது. சிதறுண்ட சமூகத்தினர் இவ்வாறு செய்யமுடியாது; காரணம் அவர்களுக்குச் சொந்தமாக கால்நடைகள் ஏதுமில்லை. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில், குடியமர்ந்த சமூகத்தினர் தங்களுடைய செத்த பிராணிகளை, சிதறுண்ட சமூகத்தினர் அங்கு அவர்களது காவல் பணிக்கு ஊதியமாக அளிக்க ஒப்புக்கொண்டது எவ்வகையில் இயல்புக்கு புறம்பானதாக இருக்க முடியும்? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. எனவே சிதறுண்ட சமூகத்தினரும் குடியமர்ந்த சமூகத்தினரும் மாட்டிறைச்சி உண்டு வந்த பண்டைக்காலத்தில், முந்தியவர்கள் செத்துப்போன மாட்டிறைச்சியையும் பிந்தியவர்கள் புதிய மாட்டிறைச்சியையும் சாப்பிட்டு வந்தனர் என்பதும், இந்த நடைமுறை மகாராஷ்டிரத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பது தெள்ளத்தெளிவு.
இது முதல் ஆட்சேபத்தை செல்லுபடியற்றதாக்குகிறது. அடுத்து இனி இரண்டாவது ஆட்சேபத்துக்கு வருவோம். குப்த பேரரசர்கள் இயற்றிய சட்டம் பசுக்களைக் கொல்பவர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டமே ஆகும். அச்சட்டத்திற்கும் சிதறுண்ட சமூகத்தினருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏனென்றால் அவர்கள் பசுவதையை செய்யவில்லை; செத்துப்போன பசுவைத்தான் உண்டார்கள். அவர்களது செயல்பாடு பசுவதைத் தடைச்சட்டத்தை எவ்வகையிலும் மீறவில்லை. எனவே, செத்துப்போன பசுவின் இறைச்சியை தொடர்ந்து உண்ணும்பழக்கம் அனுமதிக்கப்பட்டது. தவிரவும், பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதோரும் மாட்டிறைச்சியைக் கைவிட்டதுடன் எவ்வகையிலும் சம்பந்தப்படாத அகிம்சை சித்தாந்தத்தையும் சிதறுண்ட சமூகத்தினர் எவ்வகையிலும் மீறவில்லை. பசுவைக் கொல்வது இம்சை. அனால் செத்த பசுவை உண்பது இம்சை அல்ல. ஆகவே, செத்தபசுவின் இறைச்சியை தொடர்ந்து உண்பது குறித்து, சிதறுண்ட சமூகத்தினர் மனசாட்சியின் உறுத்தலுக்கு உள்ளாவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. சட்டமும் சரி, இம்சை சித்தாந்தமும் சரி அவர்கள் செய்வதைத் தடைசெய்ய முடியாது. ஏனென்றால் அவர்களது செய்கை சட்டத்திற்கோ சித்தாந்தத்திற்கோ எவ்வகையிலும் முரண்பாடானதல்ல.
பார்ப்பனர்களையும் பார்ப்பனரல்லாதோரையும் அவர்கள் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கான பதில் இரு வகையானது. முதலாவதாக, இவ்வாறு பின்பற்றுவதற்கு அவர்கள் தரவேண்டிய விலை அதிகம். அதற்கான வசதி அவர்களுக்கு இல்லை. இறந்த பசுவின் இறைச்சிதான் அவர்களுக்குப் பிரதான உணவு. அது இல்லையென்றால் அவர்கள் பட்டினிதான் கிடக்கவேண்டியிருக்கும். இரண்டாவதாக, செத்த பசுவை அப்புறப்படுத்துவது ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒரு தனிச்சலுகையாக இருந்தது, பின்னர் அதுவே ஒரு கடமைப் பொறுப்பாகிவிட்டது (மக்களிடையே உருவாகி வளர்ந்துவரும் சீர்திருத்த இயக்கத்தின் காரணமாக இப்போது நிலைமை நேர்மாறானதாகிவிட்டது. செத்த பிராணியை எடுத்துச் செல்ல மகர்கள் மறுக்கிறார்கள்; இந்து கிராமவாசிகளே அதை எடுத்துச் செல்லும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.). செத்த பசுவை அப்புறப்படுத்தும் பணியிலிருந்து தப்பமுடியாத நிலைமையில் முன்னர் போலவே அதன் இறைச்சியை உணவாகப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்று அவர்கள் தீர்மானித்தனர்.
இவ்வாறு, இத்தகைய ஆட்சேபங்கள் எல்லாம் எவ்வகையிலும் இந்தக் கோட்பாட்டை செல்லுபடியற்றதாக ஆக்கி விடவில்லை என்பது தெளிவு.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 14)