(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி II, 1943 மார்ச் 16, பக்கம் 1130-34)

      மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, தொழிலாளர் நலத்துறை அக்கறை கொள்ளக்கூடிய சில விஷயங்கள் பற்றி, குறைபாடுகளை அல்லது விடுபட்டுப்போன செயல்கள் பற்றி விவாதத்தின்போது மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அளித்த விமர்சனத்திற்குப் பதிலளிக்க நான் எழுந்துள்ளேன். சர் பிரடெரிக் ஜேம்ஸ் எழுப்பிய விஷயங்களிலிருந்து நான் துவங்குகிறேன். தொழிலாளர் நலத்துறை சம்பந்தப்பட்ட வரை அவர் விசேஷ கவனம் செலுத்தியது இரு விஷயங்கள் என்பதை அவை அறியும். முதல் விஷயம் காகிதம் பற்றியது. காகிதத்தை உபயோகிப்பதில் சர்க்கார் ஊதாரிதனமாக இருந்தது என்று அவர் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு வழியிலும் அவர் குறிப்பிட்ட வீணடிப்புக்குச் சர்க்கார்தான் பொறுப்பு என்றும் சர் பிரடெரிக் ஜேம்ஸ் கூறினார். ஐயா! இந்தக் கூட்டத் தொடரிலேயே, ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது காகிதம் பற்றிய விஷயம் முன்பு விவாதிக்கப்பட்டது என்பதை அவை ஞாபகத்தில் கொண்டிருக்கும். அப்போது சர்க்கார் சார்பில் நான் பதில் அளித்தேன். சர்க்கார் அளித்த பதிலில் மதிப்பிற்குரிய நண்பர் சர்.பிரடெரிக் ஜேம்ஸ் திருப்தியடையவில்லை என்பதும், அதே விஷயத்தை அவர் மீண்டும் எழுப்பியிருக்கிறார் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர் இதை மீண்டும் எழுப்பியிருப்பதை நான் குறை கூறப் போவதில்லை; காகிதத்தைச் சேமித்து வைப்பதில் சர்க்கார் என்ன செய்து வருகிறது என்பதை விளக்கிக்கூற அது எனக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை அளித்திருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். விவாதத்திற்குள்ள விஷயத்தை எடுத்துக் கொள்வதற்கு முன் ஒன்றைக் கூற விரும்புகிறேன்; அதாவது காகிதப் பற்றாக்குறை பற்றி அளவுக்கு அதிகமான கவலையை அவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது; இந்த விஷயத்தில், அதிக கவலை கொள்வது தேவை என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பிரிட்டனிலும் இந்தியாவிலும் வெளியிடப்பட்ட பிரசுரங்கள் பற்றிய சில புள்ளி விவரங்களை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் முன்வைக்க விரும்புகிறேன். ஐயா, 1939ல் பிரிட்டனில் பதினைந்தாயிரம் நூல்கள் வெளியிடப்பட்டன; 1940ல் பதினோராயிரம் வெளிவந்தது. 1941ல் பதினாலாயிரம் வெளிவந்தது. காகிதப் பற்றாக்குறை என்ற விஷயம் பற்றி நாம் கவலைப்படாமலில்லை. ஏற்கெனவே நான் கூறியதுபோல், பற்றாக்குறை இருக்கிறது, ஆனால் நான் வலியுறுத்திக் கூற விரும்புவது, மிக நெருக்கடியான நிலை என்று கூறக்கூடியதாக அது இல்லை என்பதேயாகும்.    

ambedkar 460 ஐயா! மேலும், இந்திய சர்க்காருக்கு எதிராக ஊதாரித்தனம் என்ற குற்றச்சாட்டை ஆதாரப்படுத்த சர் பிரடெரிக் ஜேம்ஸ் இரண்டு உதாரணங்கள் கூறுவது அவை ஞாபகத்தில் கொண்டிருக்கும். வெஸ்ட் டர்ன் கோர்ட் கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாடகை ரசீதை சென்ற தடவை இந்த விஷயம் விவாதிக்கப்பட்டபோது சர் பிரடெரிக் ஜேம்ஸ் காட்டினார். அவர் வாதம், வாடகைதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வாடகை ரசீது மிகப் பெரிய அளவில் இருந்தது; அதில் கொடுக்கப்பட்டிருந்த விவரங்கள் தேவையில்லாதவை; எப்படியும் யுத்த காலத்தில் அவற்றை குறைத்திருக்கலாம். இப்பொழுது கல்கத்தா கெஜட்டின் மயங்கிப்போன பழைய பிரதியை கொண்டுவந்து காண்பித்து, யுத்த காலத் தின்போது தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய சில தகவல்கள் அதில் பிரசுரமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

     சர் எப்.இ.ஜேம்ஸ் (சென்னை: ஐரோப்பியர்): இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நிமிடத்திற்கு நான் குறுக்கீடு செய்யலாமா? நான் காண்பித்த கல்கத்தா கெஜட்டின் பிரதி கல்கத்தாவிலிருந்து இப்பொழுதுதான் பெற்றுவந்ததாகும்; அது இந்த ஆண்டு பிப்ரவரி இதழ் என்று நினைகிறேன்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய எனது நண்பருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவது இதுதான்;

     சர் பிரடெரிக் ஜேம்ஸ் ஒரு வழக்கறிஞராக இருந்திருப்பாரேயானால், அவர் முன்வைத்த விஷயங்களுக்கு சாட்சியங்களாக இந்த விஷயங்களையும் கொண்டு வந்திருக்க மாட்டார். வாடகை ரசீது சம்பந்தப்பட்டவரை, அது எந்தத் தேதியில் அச்சிடப்பட்டது என்பது தெளிவு. இந்த ரசீது 1938ல் அச்சிடப்பட்டது; அதைத் தூக்கி எறியாமல், அந்த ரசீதை உபயோகப்படுத்துவதற்காக சர்க்காரை கண்டிக்காமல் பாராட்டியிருக்க வேண்டும். அந்த ரசீதுப் புத்தகங்களின் இருப்பு இந்திய சர்க்காரிடம் உள்ளது; அந்த ரசீதை மாற்றியமைக்கும் தேவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, காகிதத்தைச் சேமித்து வைப்பதற்காக பழைய கையிருப்பை இந்திய அரசாங்கம் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கிறோம்.

     சர் எப்.இ.ஜேம்ஸ்: அவற்றைக் குப்பையில் போடவில்லை என்று சொல்ல வருகிறீர்கள், அப்படித்தானே.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! இனி கெஜட் பிரச்சினையைப் பொறுத்தவரை, சர்.பிரடெரிக் ஜேம்ஸ் ஒரு தவறு செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்; காரணம், கெஜட்டின் முக்கியத்துவத்தை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. கெஜட் பயனுள்ள தகவல்களை, அதிலும் குறிப்பாக சர்க்காருக்கு பயனளிக்கும் தகவல்களை தாங்கி வருவது. பல வழக்குகளில் ருசுவாக கொடுக்கக்கூடியது கெஜட்தான்; சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் கெஜட் முக்கிய சான்றாக முன் வைக்கப்படுகிறது. எதிரி நிறுவனங்களின் பட்டியல், உரிமைப் பத்திரங்கள் முதலியவற்றை இவ்வகையில் குறிப்பிடலாம். முதலியவை கெஜட்டில்தான் வெளியிடப்படுகின்றன. அத்தாட்சிச் சட்டத்தின்படி சில விஷயங்களை நிரூபிப்பதற்கு முதன்மையான ஒரே ஆதாரம் கெஜட்தான். சர்க்கார் காகிதத்தில் சிக்கனத்தைப் பொறுத்தவரை, வேறு ஏதாவது செய்யலாம் என்றால் இது விஷயத்தில் நாம் தொடக்கூடிய கடைசி விஷயம் கெஜட்தான்; இது பற்றி என்னுடன் உடன்பட மாட்டாரா என்று சர் பிரடெரிக் ஜேம்ஸை கேட்கிறேன்.

     சர் எப்.இ.ஜேம்ஸ்: என்னுடையவாதம் என்னவெனில் மத்திய கெஜட்டில் பிரசுரிக்கப்படும் முக்கியமற்ற விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்பதைப் பரிசீலிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

      மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்திய சர்க்கார் சட்டம், வகுத்துள்ளபடி ஒவ்வொரு மாகாண சர்க்காரும் அதனுடைய மாகாண கெஜட்டை அவசியம் பிரசுரிக்க வேண்டும். ஐயா, மதிப்பிற்குரிய அங்கத்தினரின் வாதத்தை எதிர்கொள்ள சொற்சிலம்பம் எதையும் நான் செய்யப் போவதில்லை. காகிதத்தைச் சிக்கனப்படுத்த இந்திய சர்க்கார் எடுத்துள்ள நடைமுறைக்கு சாத்தியமான நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக கெஜட் விஷயத்தை எடுத்துக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய எனது நண்பர் சர்.பிரடெரிக் ஜேம்ஸையும் இந்த விஷயத்தில் அக்கறை கொண்டுள்ள மற்ற ஏனைய மதிப்பிற்குரிய உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்வது இதுதான் ஆகஸ்டு 29ம் தேதிய இந்திய சர்க்காரின் கெஜட் பாகம் II, பகுதி 1 ஐயும் ஒப்பு நோக்குங்கள். கெஜட்டின் இந்த இரு இதழ்களையும் அவையும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களும் ஒப்புநோக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்வார்களேயாயின், கெஜட்டில் முன்பு 11/2 பத்திக்குள் எடுத்துக் கொண்ட விஷயம் இப்பொழுது அரைபத்திக்குள் குறுக்கப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்; அவ்வளவு இடம் சிக்கனப்படுத்தப்பட்டுள்ளது. பக்க ஓர இடமும் குறைக்கப்பட்டுள்ளது.

     டாக்டர் பி.என்.பானர்ஜி (கல்கத்தா புறநகர்ப் பகுதி முகமதியரல்லாத நகர்ப்புறம்): கண்பார்வை குறைபாடுள்ளவர்கள் விஷயத்தில் என்ன செய்வது?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எல்லோரையும் நான் திருப்திபடுத்த முடியாது. சர்.பிரடெரிக் ஜேம்ஸ் இப்பொழுது எழுப்பியுள்ள விஷயத்தை பொறுத்தவரை, இந்திய கெஜட்டில் இந்திய சர்க்கார் வெளியிட்ட அறிவிப்புகளைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதும் சாத்தியமானதுமில்லையா என்றும், தங்கள் சொந்த கெஜட்களில் அவற்றை தங்கள் உபயோகத்துக்கு மீண்டும் வெளியிடாமல் இருக்கலாமல்லவா என்றும் மாகாண சர்க்காருக்கு மத்திய சர்க்கார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     அடுத்து, ஐயா, இந்திய தகவல் ஏட்டைப் பொறுத்தவரை, அதன் அளவை பாதியாகக் குறைக்க வேண்டுமென்று ஆணைகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளோம்.

     படிவங்கள் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், யுத்தகாலத்தில் 149 படிவங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டோம்; 190 படிவங்களை முற்றிலுமாக ரத்து செய்து விட்டோம், இரண்டாவதாக, 1941லிருந்து படிவங்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது; 1942 ஜூலைக்குபின் அச்சிடப்பட்ட படிவங்களில் தேவையற்ற எந்த இடமும் அனுமதிக்கப்படவில்லை. இந்திய சர்க்காருக்கு அளிப்பதற்கு மதிப்பிற்குரிய உறுப்பினர்களிடம் ஏதேனும் யோசனைகள் இருந்தால், அவற்றைச் சமர்ப்பித்தால் அவற்றுக்கு முக்கிய கவனம் அளிப்பேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

     அடுத்து, ஐயா! பிரசுரங்களைப் பொறுத்த வரை, மிகவும் அத்தியாவசியம் என்று கருதப்படுவதைத் தவிர வேறு எதுவும் பிரசுரிக்கப்படுவதில்லை என்று அவைக்கு உறுதியளிக்கிறேன். எந்த ஒரு பிரசுரத்தையும் வெளியிடுவது அவசியமா என்பதை நிர்ணயிக்க, வெளியீடுகள் பற்றி இந்திய சர்க்கார் மூன்று வேறுபட்ட கட்டுப்பாடுளை பின்பற்றி வந்துள்ளது. முதலாவதாக, அரசு எழுதுபொருள் கட்டுப்பாடு அதிகாரியின் பரிசீலனையைக் குறிப்பிட வேண்டும். அச்சடிப்பதற்காக அவர் முன்வைக்கப்படும் ஆணைகளை அப்படியே யந்திரமாக அவர் நிறைவேற்றக் கூடியவரல்ல. அவர் முன்வைக்கப்படும் எந்த வெளியீட்டையும் பரிசீலித்து அதன் அத்தியாவசியத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அவருக்கு இப்பொழுது நாங்கள் வழங்கியுள்ளோம். அவர் ஒப்புக்கொள்ள மறுத்து ஆட்சேபித்தால், விஷயம் தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு அனுப்பப்படுகிறது. தொழிலாளர் நலத்துறையும் அச்சுக் கட்டுப்பாடு அதிகாரியும் அந்த வெளியீடு அத்தியாவசியமான வெளியீடல்ல என்று கருதினால், விஷயம் ஒரு குழுவுக்கு அனுப்பப்படுகிறது; அதன்முடிவு இறுதியானதாகக் கருதப்படும். ஐயா, இடம் விடுவதிலும், ஓரம் விடுவதிலும் இதர விஷயங்களிலும் காகிதத்தை உபயோகிப்பதில் அதிகமாக சிக்கனத்தை கையாள வேண்டுமென்று அச்சகத்தார்களுக்கும் நாங்கள் உத்திரவிட்டிருக்கிறோம். இந்திய சர்க்கார் எடுத்துள்ள நடவடிக்கைகளின் பட்டியல் மனதில் பதியும் அளவுக்கு பெரியதாக இல்லாமலிருந்தபோதிலும், சிக்கனத்தை ஏற்படுத்த ஒரு முக்கிய முயற்சி இது என்று உறுதியாகக் கூறுகிறேன் பழமொழி கூறுவதுபோல், ஹன்னிபாலின் யானைவாதத்தின் நடையை கற்றுக்கொள்ளும் என்று ஒருவரும் எதிர்பார்ப்பதில்லை. இந்திய சர்க்காராயினும் அல்லது வேறு எந்த சர்க்காராயினும் அது ஒரு மிகப் பெரிய மிருகம். நகருவதில் மெதுவாக உள்ளது; நடையின் பாணியிலும் அது மெதுவாக உள்ளது; வாதத்தின் நடையை அது கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது; இருந்தபோதிலும் இந்திய சர்க்கார் வாதத்தின் நடையை கற்றுக்கொண்டுள்ளது. அப்படியே கற்றுக்கொள்ளவில்லை என்றால் கற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது என்பதை அவை ஒப்புக்கொள்ளும் எனக் கருதுகிறேன்.

     சர் எப்.இ.ஜேம்ஸ்: இன்னமும் பாலிய பருவத்தில் தான் உள்ளது.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, இப்பொழுது மதிப்பிற்குரிய எனது நண்பர் சர்.பிரடெரிக் ஜேம்ஸ் காகிதத்தில் சிக்கனம் கொண்டுவரும் விஷயம் பற்றி வழங்கிய திட்டவட்டமான யோசனையை எடுத்துக் கொள்கிறேன். இது சம்பந்தமாக இங்கிலாந்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அதிகாரம் பெற்ற ஒரு கணக்காளர், பதிப்பகத்தின் பிரதிநிதி ஒருவர், அச்சகத் துறையின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். ஐயா! இங்கிலாந்தில் இந்தக் குழு இயங்கும் பாங்கு, தன்மை பற்றி எந்த விவரங்களையும் அவர் நமக்கு கொடுக்கவில்லை; சிக்கனத்தை கொண்டுவர இந்தக் குழு கையாண்ட எந்தக் கோட்பாடுகளையும் அவர் குறிப்பிடவில்லை. எனவே இந்தக் கட்டத்தில், அவர் முன்வைத்த யோசனையை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கூறுவது எனக்கு சாத்தியமல்ல; எனினும் நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் அவர் ஆலோசனை கூறிய வழிமுறைகளில் அநேகமாக அமைந்துள்ளன என்பதை அவர் நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன். நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை அச்சகக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு ஆலோசனை கூற வணிக அச்சகத்துறை நிபுணர் என்ற ஓர் அதிகாரியை நியமிப்பதாகும். இந்த விஷயத்தில் நிதி இலாகாவின் அங்கீகாரத்தை அண்மையில் நாங்கள் பெற்று விட்டோம்; விரைவில் அந்த அதிகாரி நியமிக்கப்படுவார். இங்கிலாந்திலுள்ள குழு செய்து வருவதாகக் கூறப்படும் பணியை இந்த அதிகாரியால் செய்ய முடியும் என நம்புகிறேன்.

     டாக்டர் பி.என்.பானர்ஜி: அவர் ஒரு இந்தியரா அல்லது ஐரோப்பியரா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இப்பொழுது தான் நிதி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம்.

     திரு.ஜம்னாதாஸ் எம்.மேத்தா: அவர் பொருட்டு ஏற்படும் செலவை விட அதிகமாக அவர் மீதப்படுத்துவாரா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இவ்வாறு நடைபெறும் என நாம் நம்புவோம். ஊகிப்பதிலோ, நம்புவதிலோ தீங்கு எதுவும் இல்லை. காகிதம் சம்பந்தமாக நான் சொல்ல வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்.

     சர் பிரடெரிக் ஜேம்ஸ் எடுத்துக்கொண்ட இரண்டாவது விஷயம் சிம்லாவில் அதிகாரிகள் குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து தருவது பற்றியதாகும். குடியிருப்பு சம்பந்தப்பட்ட வரை, இது இந்திய சர்க்காரை எதிர்நோக்கும் மிகச் சிக்கலான விஷயம். ஒருவேளை அதனிடம் இருந்த குடியிருப்பு வசதிகள், தனது ராணுவ தேவைக்காக கோரிப் பெறப்பட்டு கட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்ளக்கூடிய குடியிருப்பு வசதிகள் ஆகியவற்றை யுத்த முயற்சியின் விளைவாக இந்திய சர்க்கார் நியமிக்க வேண்டி வந்த அதிகாரிகளோடு ஒப்பிட்டால் சிறிதும் போதாது. யுத்த முயற்சிகளை முழுவதுமாக நடத்த வேண்டுமென்றால் வீட்டு வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக்கொள்வார். முன்னுரிமையைப் பொறுத்தவரை, அதிகாரிகளுக்கு என்பதோடு ஒப்பிட்டால், குடும்பங்கள் இரண்டாவது இடத்தைத்தான் எடுத்தாக வேண்டும். கணவனையும் மனைவியையும், தந்தைகளை பிள்ளைகளையும் பிரிப்பது எவ்வாறு மனோநிலையை பாதிக்கக்கூடும் என்பதையும் யுத்த முயற்சிக்காகத் தேவைப்படும் அதிகாரிகளின் மனநிலையை இலகுவாக்க வேண்டியது பற்றியும் இந்திய சர்க்கார் அறிந்திருக்கிறது. இத்தகைய ஏற்பாடு எத்தகைய துயரத்தையும் போக்குவதற்காக, தங்களின் பணியிடங்களை விட்டு போகமுடியாத அதிகாரிகளின் மனைவிமார்களுக்கு குடியிருக்க வசதி செய்வதற்காக, சிம்லாவில் மூன்று குடியிருப்பு வீடுகளைத் திறக்க இந்திய சர்க்கார் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மிகக் கடுமையான பிரச்சினை விஷயத்தில் இந்திய சர்க்காரின் நல்லெண்ணத்திற்கு இதை எடுத்துக்காட்டாக சர் பிரடெரிக் ஜேம்ஸ் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.

     அடுத்து ஐயா, மதிப்பிற்குரிய எனது நண்பர் சர் ஜம்னாதாஸ் மேத்தா எழுப்பிய மூன்றாவது விஷயத்திற்கு வருகிறேன்.

     திரு.ஜம்னாதாஸ் எம்.மேத்தா: தயவு செய்து மன்னிக்கவும்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தாங்கள் வீரப்பெருந்தகை பட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பீர்களென நம்புகிறேன். நான் கூறியதைத் திரும்பப் பெறப்போவதில்லை; மன்னிப்பு கோரப்போவதும் இல்லை. இது எதிர்ப்பார்க்கக்கூடியது என்று மட்டும் நான் சொல்ல முடியும்.

     மௌலானா ஜாபர் அலிகான் (கிழக்கு மத்திய பஞ்சாப்): வரவிருக்கும் நிகழ்ச்சிகள் அவற்றின் நிழல்களை முன்கூட்டியே காட்டுகிறேன்

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: விவாதத்தின் போது திரு.ஜம்னாதாஸ் மேத்தா இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அல்லது உடன் நடைபெறவிருக்கிற குடியேற்ற நாட்டுத் தொழிற்சங்கக் காங்கிரசின் மாநாடு பற்றிக் குறிப்பிட்டு அந்த மாநாட்டில் இந்தியத் தொழிலாளர் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வில்லை என்று குறை கூறினார். ஐயா, இந்த முக்கியத் தொழிலாளர் மாநாட்டில் இந்தியத் தொழிலாளர்கள் பிரதிநிதித்துவம் பெறவில்லையென திரு.ஜம்னாதாஸூக்கு இருக்கும் வருத்தத்தையும் கவலையையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் தொழிலாளர் நலத்துறை எந்த விதத்திலும் இந்த துரதிருஷ்டவசமான நிலைக்குப் பொறுப்பில்லை என்று திரு.ஜம்னாதாஸ் மேத்தாவுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மாநாட்டைக் கூட்டியவர்கள் தொழிலாளர் நலத்துறையைக் கலந்தாலோசிக்கவில்லை என்று அவருக்கு கூறவும் நான் விரும்புகிறேன். எங்களைக் கலந்தாலோசிக்காததால், இந்த விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதைத் திரு.ஜம்னாதாஸ்மேத்தா ஒத்துக்கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். கலந்தாலோசிப்பதில் அவர்கள் ஏன் எங்களை விட்டுவிட்டார்கள் என்றும், இந்த மாநாட்டிற்காகப் பணியாற்றி வருபவர்கள் நன்கு அறிந்துள்ள இந்த நாட்டின் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர்களை ஏன் நேரடியாக கலந்தாலோசிக்கவில்லை என்பதையும் நான் புரிந்து கொள்ள முடியும்.

     எந்தத் துறையையும் போலவே, தொழிலாளர் நலத்துறையும் தனது நலனையும் தொழிலாளர் நலனையும் பாதுகாக்கும் விஷயத்தில் உஷாராக இருக்கிறது என்பதை திரு.மேத்தா ஒப்புக் கொள்வார் என்று நினைக்கிறேன். ஐயா, இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It